
உயிர் – 30
கண்கள் உறக்கத்திற்கு கெஞ்ச, அனுராதாவிற்கு சற்றும் நிற்க கூட தெம்பில்லாத மனநிலை. எப்பொழுது படுப்போம் என்பது போல் ஆகிவிட்டது.
ஆதவ், “என்னம்மா?” என்றான் சலிப்பாக.
“ஒரு நிமிஷம் ரெண்டு பேரும் இங்கேயே நில்லுங்க” என்று விட்டு வேகமாக அவர் வீட்டிற்குள் நுழையவும்.
“ஐயோ! என்னால முடியல.. தூக்கம் தூக்கமா வருது. இப்படி கொடுமைப் படுத்துறிங்களே” என்று உடல் அசதியில் அவள் உளற தொடங்கவும்.
அவளின் புறம் சரிந்தவன், “நான் வேணும்னா தூக்கிக்கவா?”.
அவனின் வார்த்தையில் சட்டென்று இரண்டு அடி நகர்ந்து நின்று விட்டாள் அனுராதா.
அவனுக்கு அவளின் செயலில் சிரிப்பு வெடித்து கிளம்ப, “என்னடி?” என்றான் சிரிப்பினோடு.
“உங்கள நம்ப முடியாது. நீங்க செஞ்சாலும் செய்யுற ஆளு தான்” என்றாள் அவனை மேலிருந்து கீழ் பார்த்துக் கொண்டு.
அதற்குள் உமா வந்து விட. அவர்களின் பேச்சு அத்தோடு தடைப்பட்டது.
கையில் ஆரத்தி தட்டுடன் வந்தவரை புரியாமல் பார்த்தனர் இருவரும்.
“ரெண்டு பேரும் சேர்ந்து நில்லுங்க”.
அவரின் சொல்படி இருவரும் சேர்ந்து நிற்க.
சத்யராஜும் வெளியே தான் நின்று இக்காட்சியை பார்த்துக் கொண்டிருந்தார்.
“என்னம்மா இதெல்லாம்?” என்று ஆதவ் ஆச்சரியமாக கேட்கவும்.
“ரெண்டு நாளா ரெண்டு பேரும் அத்தனை வேலையை பாத்துட்டு வந்திருக்கீங்கன்னு வீட்ல உங்க அப்பா வாய் ஓயாம பேசிக்கிட்டே இருக்காரு. அதுலயும், அவரோட மருமக புராணம் தான் நிக்காம ஓடிக்கிட்டு இருக்கு. அவர் கண்ணே உங்க ரெண்டு பேருக்கும் பட்டிருக்கும்” என்று அவர்களின் முகத்தையே பார்க்காமல் கூறியவர், இருவருக்கும் ஆரத்தி எடுத்துவிட்டு நகர்ந்து செல்லவும்.
அனுராதாவின் கண்கள் நொடியில் கலங்கி விட்டிருந்தது. அவள் உமாவிடமிருந்து இப்படி ஒரு செயலை சற்றும் எதிர்பார்க்கவே இல்லை.
அவளுக்கு இத்தனை நேரம் இருந்த உறக்கம், பசி, கலைப்பு என அனைத்தும் எங்கோ இருந்த இடம் தெரியாமல் பறந்து போய் விட்டிருந்தது.
“என்ன ரெண்டு பேரும் இங்கேயே நிக்கிறீங்க.. உள்ள வாங்க” என்று அவர்களை அழைத்து சென்றவர், நேராக அனுராதா அறைக்குள் செல்ல முற்படவும்.
“எங்க போற? வந்து ஒரு வாய் சாப்பிட்டு போய் படு” என்று அதிகாரமாய் அழைத்திருந்தார் உமா.
இத்தனை நாள் முறுக்கிக் கொண்டு இருந்துவிட்டு திடீரென இறங்கி போய் பேசவும் அவருக்கு வரவில்லை.
ஆனால், அவரின் இத்தகைய பேச்சே அவளை இன்ப கடலில் மூழ்கடித்திருந்தது.
மறு பேச்சின்றி முகத்தை மட்டும் கழுவி விட்டு வந்து அவள் சாப்பிட அமர்ந்து விடவும்.
அவரே இருவருக்கும் பரிமாறி இருந்தார்.
அனுராதாவின் முகமே அத்தனை சோர்வாய் காட்சியளித்தது.
அவளின் முகத்தை பார்த்த உமா, “ஏன்டா உனக்கு தான் அங்க வேலை அதிகமா இருக்கு. இவளையாவது ஆபீஸ்ல கொஞ்ச நேரம் தூங்க சொல்லி இருக்கலாம்ல. பாரு, முகமெல்லாம் எப்படி இருக்குன்னு”.
“அம்மா எனக்கு உதவி பண்ண தான் உங்க மருமகளே அங்க இருந்தா.. அவளை தூங்க வச்சு சீராட்டி பாராட்டவா நான் அங்க வச்சிருந்தேன்” என்றான் கிண்டலாக.
“சரி, சரி.. சாப்பிட்டு ரெண்டு பேரும் போய் நல்லா படுத்து ரெஸ்ட் எடுங்க. அடுத்த இரண்டு நாளைக்கு நீ அவளை அந்த பக்கமே அழைச்சிட்டு போக கூடாது. நல்லா ரெஸ்ட் எடுக்கட்டும்” என்று விட்டு அவர் சமையல் அறைக்குள் சென்று விடவும்.
அவர் இத்தனை பேசியதே அனைவருக்கும் ஆச்சரியமாக தான் இருந்தது.
“என்னப்பா அம்மா திடீர்னு அந்தர் பல்டி அடிச்சிட்டாங்க” என்று சிரித்துக் கொண்டே வினவினான் ஆதவ்.
“டேய், உன் அம்மாவும் நல்லவ தான் டா. அவ தங்கச்சியோட சேர்ந்துகிட்டு தேவையில்லாத வேலை எல்லாம் பாத்துட்டா. மத்தபடி, அவளும் நல்லவ தான்” என்று தன் மனைவிக்காக பரிந்துக் கொண்டு கொடி தூக்கினார்.
“அதானே.. உங்க பொண்டாட்டிய நீங்க விட்டுக் கொடுப்பீங்களா?” என்றிருந்தாள் தாரணி.
சற்று நேரம் அனைவரும் கலகலப்பாக பேசிக் கொண்டே இருக்க. உணவருந்தி முடித்துவிட்டு இருவரும் அறைக்கு சென்று விட்டனர்.
அறைக்குள் நுழைந்ததுமே அவளை இழுத்து அணைத்திருந்தவன், “இப்போ மேடம்க்கு இந்த கல்யாணம் ஒரிஜினல்னு நம்பிக்கை வருதா?” என்றான் அவளையே குறுகுறுவென பார்த்துக் கொண்டு.
அவன் என்ன கூற வருகிறான் என்பது புரியாமல் அவள் ‘என்ன’ என்பது போல் பார்க்கவும்.
“கல்யாணம் முடிஞ்சு வந்ததும் தாரணி நமக்கு ஆரத்தி எடுத்தாளே.. நீ கூட கோவிச்சுக்கிட்டியே.. எங்க அம்மா நமக்கு ஆரத்தி எடுக்கல.. பால், பழம் கொடுக்கல.. எதையுமே முன்னிருந்து செய்யலைன்னு.. நெனச்ச போலவே சாதிச்சிட்டியே.. இன்னைக்கு எங்க அம்மா கையாலேயே உனக்கு ஆரத்தி எடுத்து வீட்டுக்குள்ள அழைச்சிட்டு வந்துட்டாங்க. இப்ப உனக்கு இது ஒரிஜினல் மேரேஜ்னு புரியுதா?”.
“ம்ம்” என்றவளுக்கு எவ்வளவு கட்டுப்படுத்தியும் கண்ணீர் வழிந்து விட்டது.
அழுகையில் உதடு துடிக்க அவள் தன் உணர்வுகளை கட்டுப்படுத்த போராடுவது அவனுக்கும் நன்கு புரிந்தது.
அவளின் முகத்தை தன் கைகளில் தாங்கிக் கொண்டவன், “என்னடா?” என்றான் மெல்லிய குரலில்.
“ம்கூம்” என்று மறுப்பாக தலையசைத்தவளுக்கு பேசவே முடியாமல் தொண்டையை அடைத்தது.
அவளின் மனநிலையை மாற்றுவதற்காக அவளுக்கு பிடித்தது போல் பாட தொடங்கிவிட்டான்.
அவளையே மொத்தமாய் கரைத்து விடும் காந்த குரலில்..
அவன் நினைத்தது சரியாய் வேலையும் செய்திருந்தது.
ஆம், முழுவதுமாய் உருகி கரைந்து விட்டாள்.
“பூவைச் சூடி பொட்டும் வைக்க
மாமன் உண்டு மானே.. மானே..
உள்ளம் தன்னை கொள்ளை கொண்ட
கள்வன் இங்கு நானே.. நானே..
உன்னோடு தான் என் ஜீவன்..
ஒன்றாக்கினான் நம் தேவன்..
நீ தானம்மா என் தாரம்..
மாறாதம்மா என் நாளும்!” என்று அவன் முடிக்கவும்.
அவனையே இமை கொட்டாமல் பார்த்துக் கொண்டிருந்தவளின் மனதிற்குள்ளும் ஏதேதோ உணர்வுகள். அவனை அணைத்தவாறு அவனின் நெஞ்சோடு தலை சாய்த்துக் கொண்டாள் அனுராதா.
அவளாக அவனை அணைப்பது இதுவே முதல் முறை.
நெஞ்சம் முழுக்க திக்கு முக்காடிப் போகும் அளவிற்கு காதலை தேக்கி வைத்திருப்பவனுக்கு இந்த நொடி எப்படி இருக்கும்..
ஆனாலும், அவளை முழுவதுமாக எடுத்துக்கொள்ள துடிக்கும் தன் மனதிற்கு கடிவாளம் இட்டுக் கொண்டு இருந்தான்.
அதற்கு ஒரே காரணம், அவள் முழு மனதோடு தன்னை ஏற்றுக்கொள்ள வேண்டும் என்பது மட்டுமே!
ஒருவரை காதலிப்பது எத்தனை சுகம் என்றால், அதைவிட தான் காதலிப்பவரினால் தானும் காதலிக்கப்படுவது எத்தனை எத்தனை சுகம்..
அதை அனுபவிக்க தவம் கிடக்கிறான் இந்த கிருஷ்ணன்.. ஆதவ் கிருஷ்ணன்!
அவளின் மொத்த காதலையும் தனக்கே தனக்கென முற்றும் முழுவதுமாய் பட்டா போட்டு விட்டு தான், அவளை அவளே கொடுக்க.. இவன் எடுக்க என எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறான்.
இதையெல்லாம் நினைத்ததற்கே ஏக்கம் பொங்க பெருமூச்சு தான் வெளியேறி இருந்தது அவனிடத்தில்.
அது அவளின் தலையில் உஷ்ணமாய் பட்டு தெறிக்க.
அவள் அவனை அணைந்திருந்த வாக்கிலேயே நிமிர்ந்து ‘என்ன’ என்பது போல் அவன் முகம் பார்க்கவும்.
அவளின் பார்வையில் மொத்தமாய் சிதறி போனவன். தன் குரலை செறுமிக் கொண்டு, “நாலைஞ்சு புள்ள குட்டி பெக்குற பிராசஸை இப்போவே ஆரம்பிக்கணும் போலருக்கு” என்றான் குரலில் குறும்பு கூத்தாட.
அப்பொழுது தான் தான் இருக்கும் நிலையே அவளுக்கு உரைத்தது. சட்டென அவனிலிருந்து விலகி நின்றவளுக்கு அப்படி ஒரு கூச்சம், வெட்கம் என தன் கைகளை பிசைந்து கொண்டே அவனின் முகம் நிமிர்ந்து பார்க்கவும் கூட அத்தனை சங்கடமாக நின்றிருந்தாள்.
தன் கைகள் இரண்டையும் கோர்த்து தலைக்கு மேல் தூக்கி நெட்டி முறித்தவாறு, “எனக்கும் ஆசை தான். ஆனா, ரொம்ப டயர்டா இருக்கே” என்று வேறு அவன் கூறவும்.
இவளுக்கு எங்காவது ஓடிவிட்டால் போதும் என்று ஆகிவிட்டது.
‘உணர்ச்சிவசப்பட்டு இப்படி அவசரப்பட்டுட்டியே அனு. இதை வச்சே ஓட்டுவாரே’ என்று உள்ளுக்குள் நொந்து போனவள்.
வெளியே ‘ஈ’ என தன் மொத்த பற்களையும் காட்டி சமாளிக்க முயற்சித்தாள்.
“அது சும்மா..” என்று அவள் சமாளிப்பாக கூறவும்.
அவள் சுதாரிக்கும் முன்பு அவளை தன் இரு கரம் கொண்டு அப்படியே அள்ளிக் கொண்டான் ஆதவ் கிருஷ்ணா.
அவனின் செயலை சற்றும் எதிர்பாராதவள் திடுக்கிட்டு விழித்தவாறு, “என்ன பண்றீங்க?” என்றாள் திணறிப் போய்.
அவளுக்கு எந்த ஒரு பதிலும் அவன் அளிக்கவே இல்லை என்பதை விட, அளிக்கும் நிலையில் அவன் இல்லை என்று கூறினால் அது பொருத்தமாக இருக்கும்.
இன்று அவனின் ஆசை மனைவி, ஹாட் பொண்டாட்டி அவனை மிகவும் சோதித்து விட்டாள். அவளை அள்ளிச் சென்றவன் படுக்கையில் அவளோடு சரிந்து உறக்கத்தை தழுவ தொடங்கி விட்டான்.
இவளுக்கு தான் அவனின் அருகாமையில் பல்வேறு உணர்வுகள் ஒன்றோடு ஒன்று போட்டி போட்டுக் கொண்டிருந்தது.
உறக்கத்தில் அவனே அறியாமல் பல முறை அவள் மேல் கைகளை போட்டுக்கொண்டு படுத்திருக்கிறான் தான்.
ஆனால், இப்படி இத்தனை நெருக்கமாய் அணைத்துக் கொண்டு அவன் படுத்திருக்கவும், இவளுக்கு தான் மூச்சுக்காற்றுக்கு கூட திணறுவது போல் ஆகிவிட்டது.
அவனின் இதயத்துடிப்பு இவளுக்குள் ஊடுருவும் அளவிற்கு அத்தனை இறுக்கமாக அவளை தனக்குள் பொத்தி வைத்திருந்தான்.
அவனிடமிருந்து விலகவும் தோன்றாமல், அதே நிலையில் இருக்கவும் முடியாமல் அவஸ்தைக்குள்ளாகியது என்னவோ அனுராதா தான்.
அவனின் அருகாமை அருவருப்பை கொடுக்கவில்லை. ஆனால், நிறையவே வெட்கத்தையும், கூச்சத்தையும் வாரி இரைத்திருந்தது அவளுக்குள்.
‘தனக்கும் அவன் மேல் காதல் வந்து விட்டதா.. அவனின் அருகாமை எனக்கு இத்தனை பிடிக்கிறதே.. ஏனோ, விலகவும் மனம் இல்லை’ என்று எண்ணும் பொழுதே அவளின் கன்னங்கள் அந்தி வானமாய் சிவந்துவிட்டது.
இதழில் வெட்கப் புன்னகை பச்சை குத்தியது போல் ஒட்டிக்கொள்ள.
உடலிலோ தலை முதல் பாதம் வரை ஒருவித குறுகுறுப்பு, பரிதவிப்பு என தவிப்போடு அவனுடன் ஒட்டிக் கிடந்தாள்.
“ஏய், ஹாட் பொண்டாட்டி! சும்மா இருக்க மாட்டியா.. மனுஷனோட அவஸ்தை புரியாம.. இப்படி நெலிஞ்சுக்கிட்டே இருந்தினா எசக்க பசக்கா எங்கேயாவது கடிச்சு வச்சுருவேன். அப்புறம் அய்யோ அம்மானு கத்தி ஒன்றும் பண்ண முடியாது” என்று அவளின் செவி அருகே குனிந்து அவன் கிசுகிசுக்கவும்.
சட்டென்று தன் விழிகளை இறுக்கமாக மூடிக்கொண்டவளின் கைகள் அனிச்சையாக அவனின் சட்டையை அழுத்தமாக சுருட்டி பிடித்துக் கொண்டது.
“நான் தூங்கி ரொம்ப நேரமாகுது” என்றாள் அவனைப் போன்றே கிசுகிசுப்பாக.
அவளின் வார்த்தையில் இவனின் இதழ்களும் அவளுடன் சேர்ந்து புன்னகைக்க.
இருவரும் ஒருவித இதமான மனநிலையிலேயே உறக்கத்தை தழுவி இருந்தனர்.
******
கதையை பற்றிய உங்கள் கருத்தை பகிர்ந்து கொள்ளுங்கள் டியர்ஸ் 😊
இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
2
+1
4
+1
1
+1
உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள்
You must be logged in to post a comment.


Lovely update 🥰🥰🥰
Thank you so much sis 😍