
நேசம்-5
“அதைப் பொறுமையாய் சொல்லிருக்கலாம்ல அதி? நீ படக்குன்னு எழுந்து நிக்கவும் புள்ளை விக்கி விறைச்சு நிற்கிறா பாரு? முதலில் ஜூஸை குடி!” மகனை அமைதியாய் அமர வைத்தார் மாதவி.
“பொண்ணுக்கிட்டே பேசணும்ன்னு ஆசைப்படுறான். பேசட்டுமே! வாழப் போறவுங்க அவங்க தானே?” எனச் சொல்விட்டு பெண்ணின் பெற்றோரைப் பார்த்தார் மாதவி. அவர்கள் மறுக்காதவாறு நாசூக்காகக் கேட்டதில், புன்னகையுடன் மனைவியைப் பார்த்தார் இந்திரன்.
“பேசட்டும்! ஒண்ணும் பிரச்சனை இல்லை!”
“அழகி! அவரைப் புறத்தே கூட்டிட்டுப் போம்மா!” என வீட்டின் பின்புறத்தைக் கை காட்டினார் செல்வி.
இதயம் தடதடக்க, அவனைப் பார்த்து வரச் சொல்லி தலையசைத்தபடியே முன்னால் நடந்தாள் அழகுநிலா.
வரவேற்பறையையும், இரண்டு அறைகளையும் கடந்து, பின்புறக் கதவைத் திறந்து வெளியே அழைத்துப் போனாள்.
முன் பக்கம் போலவே பின்னாலும் நடுவில் இடம் விட்டு, சுற்றிலும் பூச்செடிகளை நட்டிருந்தார்கள். இடதுபுற பக்கவாட்டில் துணி துவைக்கும் மேடை அமைத்திருந்தார்கள். செம்பருத்தி, நந்தியாவட்டை, பன்னீர் ரோஜா, எனப் பூச்செடிகள், வரிசையாய் நடப்பட்டிருந்தது. அதோடு மொட்டவிழத் துவங்கியிருந்த பவளமல்லியின் வாசம் காற்றில் மிதந்து வந்து ஏகாந்தமான சூழலை உருவாக்கிக் கொண்டிருந்தது.
அவனை அழைத்து வந்து, பின்னால் போடப்பட்டிருந்த நாற்காலியை பார்வையால் சுட்டினாள். அவனோ, அமராது நின்று கொண்டே இருக்க, பதற்றமும் பயமுமாய் இமை தாழ்த்தி அமைதியாய் நின்றாள் அழகுநிலா.
நொடிகள் நிமிடங்களாக மாறி, கடந்து போனதே ஒழிய, அவன் ஒற்றை வார்த்தை பேசவே இல்லை. அவனின் பார்வை அவளில் மட்டுமே நிலைத்திருந்தது. அவனின் பார்வை தன்னைத் துளைப்பதை உணர்ந்தவளோ, தலையை நிமிர்த்தாமல், தவிப்புடன் நின்றிருந்தாள்.
கைவிரல் நகங்களைக் கவனமாக ஆராய்வதும், முன்நெற்றி விழுந்த கருஞ்சிகையைக் காதுக்குப் பின்னே ஒதுக்குவதும், அவனை ஓரக்கண்ணால் பார்ப்பதுமாய் நின்றிருந்தவளை, மார்பின் குறுக்கே கைக்கட்டியபடி அமைதியாய் வேடிக்கை மட்டும் பார்த்தான் அதிவீரன்.
“போகலாமா?” கிசுகிசுப்பான அவன் குரலில் அவனை நிமிர்ந்து நோக்கினாள் அழகுநிலா.
“நீ.. நீங்க.. எதுவும் பேசவே இல்லையே?” எனத் தயக்கமாய் அவனைப் பார்த்தாள்.
“நான் மட்டும் தான் பேசணுமா? ஏன் நீ பேசமாட்டியா?” அவளின் விழிகளைப் பார்த்து அவன் கேட்க, பதில் சொல்ல தெரியாமல் தடுமாறினாள் அழகுநிலா.
“என்கிட்டே கேட்க பேச, எதுவுமே இல்லையா உனக்கு?” அவன் இரண்டாம் முறை அழைத்த பின்னே, அவன் ஒருமையில் அழைத்ததே அவளுக்கு உரைத்தது.
“உ.. உங்க பேர் என்ன?” முதன்முறையாய் வாயைத் திறந்து அவள் கேட்க,
“பேர் கூடத் தெரியாமல் தான் கல்யாணத்திற்குச் சம்மதிச்சியா?” எனப் பதில் கேள்வி கேட்டான் அவன்.
‘இவுக வாயில் பதிலே வராது போல, கேள்வி மட்டும்தேன் கேட்குறாக!’ என மனதில் புலம்பியவள்,
“கல்யாணமா? பொண்ணுதேன் பார்க்க வாரதா சொன்னாங்க? நெசமாவே நான் உங்களைத்தேன் கட்டிக்கணுமா.? பேர் மட்டுமில்லை, நீங்க எப்படி இருப்பீகன்னு கூட எனக்குத் தெரியாது!” அவன் கேட்காததற்கும் சேர்த்து அவள் பதில் சொல்ல, சுவாரஸ்யமாய் அவளைப் பார்த்தான் அவன்.
“பொண்ணு பார்க்கத்தான் வந்தோம்! பிடிச்சிருந்தால் அடுத்துக் கல்யாணம் தானே?” என அவன் கேட்க, பதில் சொல்லாது, அமைதியாய் இமை தாழ்த்தி நின்றவள், அனிச்சை செயலாய், முன்நெற்றி கேசத்தைக் காதோரரம் ஒதுக்கமுயல, அவளின் வளைகரம் அந்தரத்தில் அப்படியே அசையாமல் நின்றது.
“இதையே எத்தனை முறை செய்வே?” என அவளின் முன்நெற்றி கூந்தலை காதோரமாய் ஒதுக்கியவன்,
“பிடிச்சிருந்தால் கல்யாணம் தானே? உனக்குப் பிடிச்சிருக்கா? ” என அவன் கேட்க, அவனின் ஒற்றைத் தீண்டலில் காதுமடல் சிவந்து, உடல் சிலிர்த்து நின்றவளிடம், மீண்டும் ஸ்தம்பித்த நிலை.
“பிடிச்சுருக்கா இல்லையா தெரியலை! எனக்கு உங்களைப் பார்த்துக் கொஞ்சம் பயமா இருக்கு.!” தடுமாற்றத்துடன் சொன்னவளின் பதிலில், மீசையின் ஓரம் சிரிப்பில் துடித்தது அவனுக்கு.
“ஏன்?”
“கேள்வி மட்டுந்தேன் கேட்கத் தெரியுமோ? பதிலே சொல்ல மாட்டாகளோ? கேள்விக்குப் பொறந்தவரா இருப்பாரு போல? பேர் என்னன்னு கேட்டதுக்கே இன்னும் பதில் சொல்லலை!” என அவள் புலம்பியது, அவனின் கூர் செவிகளில் தெளிவாகவே விழுந்தது.
“என் பேர் அதிவீரன்! என்னைப் பார்த்தால் அவ்வளவு கொடுரமாவா இருக்கு?” என அவன் கேட்க,
“ஆத்தி! அழகாத்தேன் இருக்கீக! நீங்க போலீசுன்னு சொல்றாகளே.. அதுதான் கொஞ்சம் பயமா இருக்கு.!”
“ஏன்?” மறுபடியும் அவனிடமிருந்து கேள்வி தான் வெளிப்பட்டது. அவள் பதில் சொல்லாமல் அமைதியாய் நிற்க,
“எனக்கும் தான் டீச்சரம்மா அடிச்சுருவீங்களோன்னு பயமா இருக்கு!” அவன் சொல்ல மென்மையாய் புன்னகைத்தாள் அழகுநிலா.
“நீங்க ஒண்ணும் ஸ்டூடண்ட் இல்லையே? என் பிள்ளைகளையே நான் அடிக்கமாட்டேன்.. உங்களை என்னத்துக்கு நான் அடிக்கப் போறேன்.?”
“என்னைப் பார்த்து பயப்பட நீயும் அக்யூஸ்ட் ஒண்ணும் இல்லையே?” என அவன் சொல்ல, கண்கள் சுருங்க, இதழ்விரித்துச் சிரித்தவளைப் பார்க்கையில், அவனுக்குள் ஏதேதோ மாற்றங்கள். அவளின் மந்திரப் புன்னகை அவனுக்குள் மாயம் செய்தது.
“இந்தச் சிரிப்பை நான் என்னன்னு எடுத்துக்கிறது? சம்மதம்ன்னு எடுத்துக்கலாமா?”
“உங்களைப் பற்றி ஒண்ணுமே எனக்குத் தெரியாதே?”
“பொறுமையாய் தெரிஞ்சுப்போம் இப்போ என்ன? என்கிட்டேயே நேரடியாய் கேட்கலாம்.. என்ன தெரியணும் உனக்கு?” சட்டென அவன் கேட்டதில், வார்த்தைகள் தொண்டைக்குள் சிக்கியது அவளுக்கு.
“நல்லா பேசுறீங்க நீங்க!” இன்னும் சிரிப்பு மாறவில்லை அவளிடம்.
“உன்கிட்டே நல்லா பேச வருது.. ஏன்னு எனக்கும் தெரியலை.!”
“மத்தவங்ககிட்டே எப்படிப் பேசுவீங்க?”
“கொஞ்சம் இல்லை, நிறையவே கம்மியாகத் தான் பேசுவேன்.!”
“என்கிட்டே சாதாரணமாகத் தான் பேசுறீக?”
“உன்னைப் ஃபோட்டோவில் பார்த்தே பிடிச்சுருச்சு எனக்கு! பார்த்ததும் மனசுக்கு நெருக்கமா தோணிச்சு.. அதனால் கூட இயல்பாகப் பேச வருதோ என்னவோ?. உன் கூட இந்த வாழ்க்கை நல்லா இருக்கும்ன்னு தோணுது நிலா! உன் முடிவு என்னன்னு நீ தான் சொல்லணும்.!” எல்லாருக்கும் அழகியானவள், அவனுக்கு ஆகாய நிலவாகினாள்.
“அது எப்படிப் பார்த்ததும் தோணும்? எனக்குக் குழப்பமா இருக்கே?!”
“பொறுமையாய் யோசிச்சு சொல்லு! ஒண்ணும் அவசரமில்லை. பிடிக்கலைன்னா கூடச் சொல்லலாம்.!” எனச் சொல்லிவிட்டு முன்னால் நகர,
“எல்லாரும் கேட்டால் என்ன சொல்லட்டும்?” எனப் புரியாமல் அவனிடமே கேட்டாள் அழகுநிலா.
“உன் மனசு என்ன சொல்லுதோ அதைச் சொல்லு!” எனச் சொல்லிவிட்டு அவளைத் தாண்டி உள்ளே சென்றுவிட்டான். அவனின் புறமுதுகை வெறித்துக் கொண்டிருந்தவளுக்கோ, என்ன சொல்வதெனக் குழப்பமாக இருந்தது. அவனைப் போல் சட்டென அவளால் முடிவெடுக்க முடியவில்லை. அதோடு அவனைப் பிடிக்கவில்லை எனச் சொல்லவும் மனம் வரவில்லை. யோசனையோடே அவள் நின்றிருக்க,
“அக்கா! உன்னைய அம்மா கூப்பிட்டுச்சு!” என்ற கவினின் குரலில் சிந்தை கலைந்து உள்ளே நுழைந்தாள்.
“என்னம்மா பேசிட்டீகளா?”
“அழகிம்மா! உன் விருப்பந்தேன் எதுவா இருந்தாலும்!”
“அதி! உனக்கு ஓகே வா?” என்ற கேள்விகளின் நடுவே,
“அஞ்சு நிமிஷம் பேசினதை வச்சிகிட்டு எப்படி இதேன் முடிவுன்னு பட்டுன்னு சொல்ல முடியும்? கொஞ்சம் பொறுமையாய் சொல்லட்டும். இரண்டு நாள் யோசிச்சுக்கூடச் சொல்லுங்க! பிள்ளைக விருப்பந்தேன் முக்கியம்!” எனச் சொன்னார் புவியரசன்.
ஏற்கனவே, கதிரவனால் நடந்த பிரச்சனைகளின் நடுவே மகள் யோசிக்கத் திணறுகிறாள் என்பது அவருக்குப் புரிந்தது.
ஆனால், அதிவீரனுக்கு அப்படியெல்லாம் எந்தத் தயக்கமும் இல்லை போல, சட்டென எழுந்து நின்றவன்,
“எனக்கு நிலாவை ரொம்பப் பிடிச்சிருக்கு! என்னடா இவன் இப்படிப் பட்டுன்னு பேசுறானேன்னு உங்களுக்குத் தோணலாம். வேணும்னா என்னைப் பற்றி நல்லா விசாரிச்சுட்டு உங்க முடிவை சொல்லுங்க!” என அவன் பொதுவாய் சொன்னாலும், அவன் பார்வை முழுதும் அழகுநிலாவிடம் மட்டுமே இருந்தது. அவளோ இமை சிமிட்டாது அவனையே பார்த்திருந்தாள். அதிவீரன் துளித்துளியாய் அவளுக்குள் மாற்றங்களை நிகழ்த்திக் கொண்டிருந்தான்.
“நீ என்னம்மா சொல்ற?” என்ற தந்தையின் கேள்வியிலௌ தயக்கமாய்த் தந்தையைப் பார்த்தாள்.
“பொண்ணு கொஞ்சம் சங்கடப்படுறா! கொஞ்சம் பொறுமையாய் யோசிச்சு சொல்லட்டும்! தப்பா எடுத்துக்கிடாதீங்க! என்ன முடிவாக இருந்தாலும், நானே ஃபோன் போட்டு சொல்லுறேன்.!” எனப் புவியரசன் சொல்ல, புன்னகையுடனே கிளம்பினர் மணமகன் வீட்டினர்.
வீட்டிலிருந்து கிளம்பும் கடைசி நொடி வரையிலுமே அதிவீரனின் பார்வை அவளிடம் மட்டுமே நிலைத்திருந்தது. அவனின் அசையாத பார்வையில், அவள்தான் அதிகமாய்த் தவித்துப் போனாள்.
*******
“அக்கா! மாமா அழகா இருக்காரு! அவரு ஆர்ம்ஸ் பார்த்தியா? நானும் பெருசாகி மாமா மாதிரி போலீசாகணும்.!” என்ற கவினின் வார்த்தைகளில், தனக்குள் இரகசியமாய்ச் சிரித்தபடி, தன் ஒப்பனைகளைக் கலைத்துக் கொண்டிருந்தாள் அழகுநிலா.
“வாயை மூடு கவினு! இன்னும் எதுவுமே முடிவாகலை! மாமா நோமான்னுட்டு! வயசுக்கு ஏத்த மாதிரி பேசிப் பழகு!” சின்ன மகனைக் கடிந்தார் செல்வி.
“ஏங்க! இந்த இனியனுக்குக் கொஞ்சம் ஃபோன் போடுங்க! எதுக்கும் வரவும் மாட்டேங்குறான்! என்ன ஏதுன்னு கேட்கவும் மாட்டேங்குறான்.!” எனச் செல்வி கேட்க, அலைபேசியில் தன் மூத்த மகனுக்கு அழைத்து மனைவியிடம் நீட்டினார் புவியரசன்.
“நீங்க ரெண்டு வார்த்தை பேச வேண்டியது தானே?”
“உன் மயன்ட்ட நீயே பேசு! நாம இருக்கோமா, செத்தோமான்னு எந்ந நெனைப்பும் இல்லதவேன்கிட்டே என்னத்தைப் பேசுறது?” என அவர் சொல்லிக் கொண்டிருக்கும் போதே, அழைப்பை ஏற்றிருந்தான் இனியன்.
“இனியா! எப்படி இருக்க ராசா? மருமவ நல்லா இருக்காளா? ஒரு ஃபோன் போட்டு கூட என்னன்னு கேட்க மாட்டேங்கிறியே டா?”
“நீ தினமும் ஃபோன் பண்ணுறியேம்மா? நான் தனியா வேற பண்ணணுமா? இப்போ எதுக்கு ஃபோன் பண்ணின? என்னன்னு சொல்லு.. எனக்கு வேலைக்கு நேரமாச்சு!”
“நான்தேன் நேத்தே சொன்னேனே டா, அழகியைப் பொண்ணு பார்க்க வாராய்ங்கன்னு சொன்னேன் தானே?”
“அதுக்கு இப்போ என்ன செய்யணும்?”
“வந்துட்டு போய்ட்டாக டா!”
“என்ன சொன்னாங்க?”
“மாப்பிள்ளை பையன் போலீசா இருக்காகளாம்! உன் தங்கச்சியைப் பார்த்ததும் பிடிச்சுருக்குன்னு சொல்லிட்டு போய்ட்டாக! நாங்கதேன் கலந்து ஆலோசிச்சு சொல்றோம்ன்னு சொல்லிருக்கோம்!”
“சரி.. இப்போ புருஷனும் பொண்டாட்டியும் என்ன முடிவு பண்ணிருக்கீங்க?”
“என்னடா இப்படிக் கேட்கிற? என்ன செய்றதுன்னு தெரியாமத்தேன் உனக்கு ஃபோன் போட்டிருக்கிறேன்.!”
“கதிரு மாமாவுக்குத்தான் அவளைக் கட்டி வைக்கப் போறேன்னு சொன்னீங்க? இப்போ வெளியில் மாப்பிள்ளை பார்க்குறீங்க? ஒவ்வொரு நாளும், ஒண்ணொண்ணு சொல்லுவீங்களா?” எரிச்சாலாய்க் கேட்டான் இனியன்.
“உன் தொங்கச்சிதேன், கதிரைக் கட்ட மாட்டேன்னு நிக்கிறாளே? பத்தாக்குறைக்கு, கதிரும் வீட்டுக்கு வந்து ஏழரையைக் கூட்டிப்புட்டான். என் முன்னவே உன் தங்கச்சியை இழுத்துட்டுப் போய்த் தாலி கட்டுவேன்னு சொல்றான். பொறுமையாய் இருடா! பேசுவோம்ன்னு சொன்னால் கேட்டால் தானே? என்னத்துக்கு இப்படி ஏடாகூடமாய்ச் செஞ்சுக்கிட்டு திரியறான்னு தெரியலை டா!”
“மாமாவுக்குக் கொடுக்குறேன்னு சொல்லிட்டு, நீங்க உங்க இஷ்டத்துக்குப் பண்ணினால், அப்படித்தான் பேச முடியும். மாமாவுக்கு அழகியைக் கட்ட உரிமை இருக்கு தானே? இந்தப் போலீஸ் மாப்பிள்ளையெல்லாம் வேணாம். சும்மா மாட்டினாலே லஞ்சம் வாங்குறவிங்க! இந்நேரத்துக்கு மொத்தமா நகை பணம்ன்னு புடுங்குறதுக்கு ப்ளான் போட்டுருப்பானுங்க! உனக்கு உன் பொண்ணு மட்டும் இல்லைம்மா! ரெண்டு பசங்களும் இருக்கோம்.. மனசில் வச்சிக்கோ! இருக்கிற நகையைப் போட்டு கதிரு மாமாவுக்கே கட்டி வச்சிரலாம். அதுதான் எல்லாருக்கும் நல்லது. உன்னைக் கட்டினவருகிட்டே சொல்லு!” என நீளமாய்ப் பேசினான் இனியன்.
“என்னடா இப்படிச் சொல்ற? அவர் இல்லாமத்தேன் நீ வந்தியாக்கும்? வார்த்தையைப் பார்த்து பேசுடா மகனே! பிடிக்கலைன்னு சொல்றவளுக்கு வலுக்கட்டாயமாய்க் கட்டி வைக்கச் சொல்றியா?”
“நம்ம வசதி தான் இங்க முக்கியம். உன் பொண்ணுக்கு பிடிச்சிருக்கா? இல்லையா? இதெல்லாம் ரெண்டாம் பட்சம் தான். இருக்கிற கடையையும் வீட்டையும் தூக்கிக் கொடுத்துட்டு, புருஷனும், பொண்டாட்டியுமா தெருவில் நிற்கப் போறீங்களா?”
“நீ மெட்ராஸுக்கு வேலைக்குப் போன இடத்தில் விரும்பின பொண்ணு தானே ஷாலினி? நீ மட்டும் பிடிச்சவளைக் கட்டலாம்.. உனக்ககொரு நியாயம்? உன் தங்கச்சிக்கொரு நியாயமா? அழகுநிலா உன் தங்கச்சி தானேடா? தனக்குப் பிடிச்சவனைக் கல்யாணம் பண்ண அவளுக்கு உரிமையில்லையா?”
“என்னம்மா.. நீ பார்த்தப் பொண்ணை நான் கட்டலைன்னு குத்திக் காட்டுறியா? நானும் உன் மகளும் ஒண்ணா? நான் ஆம்பிள்ளை மா! ஆம்பிள்ளை லவ் பண்ணி கல்யாணம் பண்ணுறதெல்லாம் சாதாரணம். ஆனால் இவளுக்கு அப்படி இல்லையே.. ஊரெல்லாம் கதிரு மாமாவுக்குப் பொண்ணு கொடுக்கப் போறோம்ன்னு சொல்லிப்புட்டு, இப்போ வெளியில் பொண்ணு கொடுத்தால் என்ன பேசுவாங்கன்னு யோசிச்சு பாரு.! சரி, நான் வைக்கிறேன். எனக்கு நேரமாகிருச்சு!”
“மருமகள் கிட்டே ஃபோனை கொடு டா! ரெண்டு வார்த்தை பேசிக்கிறேன்.”
“அவள் ஆஃபீஸ் போய்ட்டு வந்து தூங்குறா! நீ அப்பறமா பேசு!” எனச் சொல்லிவிட்டு பதிலை எதிர்பாராமல் இணைப்பைத் துண்டித்திருந்தான் இனியன்.
“என்னங்க இவன் இப்படிப் பேசுறான்?” எனக் கணவனிடம் குறைபடித்தார் செல்வி.
“என்ன பேசினான்?” நிதானமாய்க் கேட்டார் புவியரசன்.
“கண்டதையும் பேசுறான். கதிருக்கு பேசிப்புட்டு வெளியில் எப்படிப் பொண்ணு கொடுப்பீங்கன்னு கேட்கிறான். இருக்கிற கடையையும் வீட்டையும் கொடுத்துப்புட்டு நடுத்தெருவில் நில்லுங்கன்னு சொல்றான். நமக்கு அழகி மட்டுமில்லை, ரெண்டு பயலுக இருக்காங்கன்னு நெனைப்பில் வச்சிக்கணுமாம்!” எனச் செல்வி சொல்ல,
“உன் மயனுக்குச் சொத்துப் பத்தெல்லாம் கிடைக்காமல் போயிருமோன்னு பயம் வந்துருச்சு செல்வி!” மகனின் வார்த்தைகளுக்கான அர்த்தம் சொன்னார் அவர்.
“ஊரெல்லாம் கதிருக்குத்தேன் கொடுக்கப் போறோம்ன்னு சொல்லிப்புட்டு, இப்போ மாப்பிள்ளை பார்க்கிறோம்ன்னு தெரிஞ்சால், ஊரு என்ன பேசும்? அவஞ்சொல்றதும் நியாயம்தேன்!” மகனுக்குப் பரிந்து வந்தார் செல்வி.
“ஊரில் யாரும் பேசுறாகளோ, இல்லையோ.. உன் மூத்த மயனே முச்சூடும் சொல்லிக்காட்டுவான். உனக்கு ஊரு பேசுறது முக்கியமா? நம்ம பிள்ளை வாழ்க்கை முக்கியமா?” எனப் புவியரசன் கேட்க, பதில் இல்லை செல்வியிடம்.
“கதிரு எப்போ வந்து ஒரண்டை இழுத்துட்டுப் போனான்? நீ என்கிட்டே ஏன் சொல்லலவே இல்லை? உன் தொம்பியைக் காப்பாத்துறியாக்கும்? அவனுக்கு என்னதேன் உருத்து உரிமையெல்லாம் இருந்தாலும், பெத்தவிங்க சம்மதம் இல்லாமல், புள்ளையை இழுத்துட்டு போவானா? என் மவ விரல் நுனியைத் தொட்டால் கூட வெட்டிப் போட்டுடுவேன்னு சொல்லிப்புடு உன் தொம்பிக்கிட்டே!” அழுத்தமான முகத்துடன் சொன்ன புவியரசனைப் பார்க்க செல்விக்கு நிஜமாகவே பயமாக இருந்தது.
“அதெல்லாம் இருக்கட்டும்ங்க! மாப்பிள்ளை வீட்டுக்கு என்ன பதில் சொல்றது?” எனச் செல்வி பேச்சை மாற்றும் விதமாய்க் கேட்க,
“பொறுமையாய் யோசிச்சுட்டு சொல்லுவோம்!” என முடித்துக் கொண்டார் புவியரசன்.
பெற்றோரின் பேச்சைக் கேட்டுக்கொண்டே உள்ளறையில் அமர்ந்திருந்த அழகுநிலாவின் மனதில் ‘என்ன நடக்கப் போகிறதோ?’ என்ற பயமும் குழப்பமும் சூழ்ந்திருந்தது.
அவளுக்கு அதிவீரனைப் பிடித்திருக்கிறது தான்.. ஜன்னல் வழியாய் அவனைப் பார்த்த முதல் நொடியே அவளுக்கு அவனைப் பிடித்துவிட்டது.
ஏன் பிடித்தது? எனக் கேட்டால் பதில் அவளுக்கே தெரியாது தான். காதலுக்கே காரணங்கள் தேவைப்படாத போது, பிடித்தத்திற்குப் பெரிதாக என்ன காரணம் இருந்துவிடப் போகிறது? ஆனால், அதனை வெளிப்படையாய் சொல்ல அவளின் சூழ்நிலை அவளை அனுமதிக்கவில்லை. நாளையே அவளின் பெற்றோர் அதிவீரனை வேண்டாமென மறுக்கலாம். அவளின் தாய் மாமனான கதிரவன் மீண்டும் பிரச்சனையை இழுக்கலாம். என்ன நடக்கப் போகிறதென உறுதியாய் தெரியாத போது, பெற்றோரையும், குடும்பத்தையும் மீறி, தன் முடிவைச் சொல்ல முடியவில்லை என்பதே உண்மை.
********
“பட்டுன்னு பொண்ணைப் பிடிச்சுருக்குன்னு வெளிப்படையாய்ச் சொல்லியிருக்க வேணாம் அதி!” என்ற மாதவி எதிரே அமர்ந்திருந்த மகனின் முகத்தைப் பார்த்தார்.
“வேற என்ன சொல்லியிருக்கணும்?”
“பொறுமையாய் யோசிச்சுட்டு சொல்றோம்ன்னு சொல்லிருக்கலாம். நம்ம சொல்ல வேண்டியதை பொண்ணு வீட்டுக்காரங்க சொல்றாங்க!”
“பிடிருச்சுருந்தால், பிடிச்சுருக்குன்னு தானே சொல்ல முடியும்? ஒவ்வொரு பொண்ணா பார்த்து பிடிக்கலை.. பிடிக்கலைன்னு சொல்லிட்டு வரச் சொல்றீங்களா? எனக்கு அவளைத்தான் பிடிச்சுருக்கு.!” தீர்க்கமாய்ச் சொல்லும் மகனைப் பார்க்க மாதவிக்குக் கொஞ்சம் பயமாக இருந்தது.
“உனக்கு மட்டும் பிடிச்சால் போதுமா அதி? அந்தப் புள்ளைக்கு உன்னைப் பிடிக்கணுமே? என்ன நடக்கும், ஏது நடக்கும்ன்னு சொல்ல முடியாது அதி.. வீணாக ஆசையை வளர்த்துக்காதே!” என மாதவி தயங்கியபடியே சொல்ல,
“அவளுக்கும் என்னைப் பிடிச்சுருக்குன்னு எனக்குத் தெரியும்!” என அதிவீரன் சொல்லிக் கொண்டிருக்க அவன் அலைபேசி இடையூறாய் இசைந்தது.
மகனின் வார்த்தையில் இருந்த உறுதியில், மாதவியின் மனம் ஆட்டம் கண்டது.
‘ஒருவேளை இது தடைபட்டுப் போனால், மகனின் எதிர்வினை என்னவாக இருக்கும்?’ நினைத்தாலே நெஞ்சு வலிக்கும் போல் இருந்தது மாதவிக்கு.
தன் அன்னையின் மனநிலையை அறியாதவனோ, அழைப்பை ஏற்றுப் பேசத் துவங்கியிருந்தான்.
“வணக்கம் சார்! சொல்லுங்க எப்படி இருக்கீங்க?”
“நல்லா இருக்கிறதெல்லாம் இருக்கட்டும் அதிவீரன்.! கேஸ் என்னாச்சு? ஒரு தகவலும் இல்லையே?”
“அதெல்லாம் பிடிச்சுடலாம் சார்! மதுரையில் மட்டும் அனலைஸ் பண்ணி பார்த்ததில், நமக்குத் தெரிஞ்சு சின்னதும், பெருசுமா இருபத்தி இரண்டு கேங் இருக்கு. இதில் செய்ன் ஸ்னாட்சிங், பணத்தை அடிக்கிறது, பர்ஸை அடிக்கிறது, ஃபோனை ரோட்டில் போட்டுட்டு அதை எடுக்க வர்ரவங்கக் கிட்டே அடிச்சு புடுங்குறதுன்னு நிறைய வெரைட்டி இருக்கு.!”
“நம்ம கடையில் திருடுனவனைக் கண்டு பிடிச்சீங்களா? வெளியில் தெரியாமல் இரகசியமா விசாரிக்கத்தேன் உங்க இங்க வர வச்சேன். நீங்க ஒண்ணும் கண்டுபிடிச்ச மாதிரி தெரியலையே? அந்த மினிஸ்டர் பய உங்களைப் பத்தி ஆஹா ஓஹோன்னு சொன்னான்?”
” யாரோ சொல்றதை நம்பி, நீங்க என்கிட்டே கேஸை கொடுக்க வேண்டாம் சார்! என்னை நம்பினால் மட்டும் கொடுங்க! அதோட, நான் முழுசா சொல்லி முடிச்சுடுறேன் சார்!” எனச் சொன்னவன்,
“நான் சொன்ன இருபத்தி ரெண்டில் பெரிய கேங்க் ரெண்டு மட்டும் தான். நான் விசாரிச்ச வரை, உங்க நகைக்கடையில் திருடுனது வெளியாள் இல்லை. நீ அனுப்பின எந்த டிசைனும் வெளியே விற்கப் போன மாதிரி தெரியலை.!” என நிறுத்தினான்.
“அதெப்படி அவ்வளவு உறுதியாய் சொல்றீங்க?” என அந்தப் பக்கமிருந்து கரகரத்த குரலில் கேட்டார் ரதி தங்கமாளிகையின் உரிமையாளர் இராஜேந்திரன்.
“அவசரத்தில் திருட வர்ரவன், சரியாக முப்பது நிமிஷ சிசிடிவி புட்டேஜ் மட்டும் அழிக்கணும்ன்னு நினைக்க மாட்டான் சார். மொத்தமா ஹார்ட் டிஸ்க்கோட தூக்கிட்டு போயிருப்பான்.! உங்களுக்கு நெருக்கமா இருக்கிற யாரோ தான் இதைச் செஞ்சிருக்கணும். ஏன் நீங்களே கூடச் செஞ்சிருக்கலாம்!” என அவன் உறுதியாய் சொல்ல,
“பலே ஆளுதான்ய்யா நீ.. கடைசியில் என் தலையிலேயே கை வைக்கிற? இந்த நகைக்கடை விஷயத்தையெல்லாம் நான் பார்த்துக்கிறேன்! உனக்கு முக்கியமான வேலை ஒண்ணு இருக்கு! என்னை நேரில் வந்து பாரு!” எனச் சொல்லிவிட்டு அவர் அழைப்பை துண்டித்துவிட்டார்.
ஆனால் அதிவீரனோ, அவர் என்ன விஷயமெனச் சொல்லும் முன்பே அவர் எதற்காக அழைக்கிறார் என்பதை அறிந்து வைத்திருந்தான்.
இது அவனுக்கான பரிசோதனை என்பதை அறியாதவனா அவன்.? அவருடைய நகைக்கடையில் நகை காணாமல் போகவே இல்லை.. தன்னைப் பரிசோதிக்க அவர்கள் கட்டமைத்த காட்சி என்பது அவனுக்கு நன்றாகவே தெரியும். பதவி உயர்வோடு பணிமாற்றம் பெற்றிருக்க வேண்டியவனுக்கு, பணிமாற்றம் கிடைத்ததன் காரணமும் அவன் அறிந்ததே! இப்போது அவனுக்குக் கிடைப்பவை எல்லாம், நாகர்கோயில் அவன் செய்தவைக்கான மிச்ச சொச்சங்கள். இவை, தான் எங்கே சென்றாலும் தொடரும் என்பதையும் அவன் அறிந்தே இருந்தான்.
உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள்
You must be logged in to post a comment.


அதி வாவ். அழகு யோசிக்கிறது நிரம்ப சரி. இனி 😡😡.