
உயிர் உறை (பாகம் 1)
தலைப்பு : பிழைத்தாண்டி நான் உன்னை நேசிக்கவா?
நேசப்பிழை 1 :
மூன்று வருடங்களுக்கு பிறகு,
தூத்துக்குடி.
“ஹாய்…
ஹலோ…
அனைவருக்கும் இனிய காலை வணக்கம்.
நேரம் சரியாக ஆறு மணி.
நான் ஆர்.ஜே தர்ஷி.
இது உங்கள் பேவரெட் ஷோ புத்தம் புது காலை.
வாழ்க்கையின் பக்கங்கள் எல்லாம் ஒரே மாதிரி அமைவதில்லை. பக்கத்திற்கு பக்கம் மாறுபட்டு வேறுபட்டு இருந்தால் தான் ஒவ்வொரு நாளும் சுவாரஸ்யமாகக் கடந்திடும்.
அத்தகைய சுவாரஸ்யத்தோடு பல இனிய நிகழ்வுகளோடு இந்த நாள் அனைவருக்கும் இனிமையாய் அமையட்டும்.
இந்த அருமையான பொன்னான காலை வேளையை வரவேற்க, இதோ எனக்கும் உங்களுக்கும் மனதை இனிமையாக்கிடும் எவர்க்ரின் பாடல்கள் அடுத்தடுத்து… கேட்டுக்கொண்டு காபி குடிப்பவர்கள் குடிக்கலாம். பேப்பர் படிப்பவர்கள் படிக்கலாம். வாக்கிங் செல்பவர் செல்லாம். மனம் ததும்பும் ரசனையோடு.
கேளுங்க… கேளுங்க… கேட்டுக்கிட்டே இருங்க. இது உங்கள் ‘சாரல் FM 97.5’. நான் ஆர்.ஜே தர்ஷி.”
அலைப்பேசியில், அலைவரிசையில் ஒலித்துக்கொண்டிருந்த பெண்ணின் குரலில் லயித்து அமர்ந்திருந்தான் அவன்.
அவள் பேசி முடிக்க, பாடல்கள் ஒலிக்கத் துவங்கின.
“புத்தம் புது காலை..
பொன்னிற வேளை..
என் வாழ்விலே..
தினந்தோறும் தோன்றும்
சுகராகம் கேட்கும்..
எந்நாளும் ஆனந்தம்..
புத்தம் புது காலை..
பொன்னிற வேளை..”
*****
“மார்கழிப் பூவே மார்கழிப் பூவே
உன்மடி மேலே ஓரிடம் வேண்டும்
மார்கழிப் பூவே மார்கழிப் பூவே
உன்மடி மேலே ஓரிடம் வேண்டும்
மெத்தை மேல் கண்கள் மூடவும் இல்லை
உன் மடி சேர்ந்தால் கனவுகள் கொள்ளை
மெத்தை மேல் கண்கள் மூடவும் இல்லை
உன் மடி சேர்ந்தால் கனவுகள் கொள்ளை
மார்கழிப் பூவே மார்கழிப் பூவே
உன்மடி மேலே ஓரிடம் வேண்டும்”
****
“காலை தென்றல்
பாடி வரும் ராகம் ஒரு
ராகம் ராகம் ஒரு ராகம்
பறக்கவே தோன்றும்
சிறகுகள் வேண்டும்
சிறகுகள் வேண்டும்”
****
எப்போதும் போல் இப்போதும் அந்த பன்பலை அலைவரிசையில் ஒலிக்கும் பெண்ணின் குரலில் தன்னை தொலைத்தவனாக அமர்ந்திருந்தவனின் முகம் அடுத்தடுத்து அவளின் ரசனையில் ஒலித்த பாடல்களை படுக்கையிலிருந்து எழாது, கண்களை திறவாது, உதட்டில் உறைந்த மென் விரிப்போடு கனிந்த முகமாய் ரசித்திருந்தான்.
அவன் வசீகரன். இருபத்தியெட்டு வயது முடிவில் இருக்கின்றான்.
“வசீ… வசீ…” என இரண்டு குரல்கள் பல விதமாக அழைத்தும் அவனிடம் அசைவில்லை.
“தினமும் அந்த ஷோ முடியிற வரை அவன் உலகம் உறைஞ்சி போயிடும் தெரியும் தானே! அப்புறம் எதுக்குடா அவனை எழுப்பிட்டு இருக்கீங்க?” பாலா கேட்டிட, வசீயை எழுப்ப முயற்சித்த வாசுவும், குமாரும் அமைதியாகினர்.
ஏனென்று தெரியாது, யாரென்று அறியாது அப்பெண்ணின் குரலில் வசீகரனுக்கு அப்படியொரு மயக்கம். வசீகரனையே வசியம் செய்ததுபோல் தன்னுடைய குரலால் கட்டி வைத்திருக்கிறாள் அவள்.
எப்படியென்று நினைவில்லை. ஒருநாள் விடியலில் உரக்க ஒலித்த அவளின் குரலில் அவனது உறக்கம் பறிபோனது. அன்று முதல் அவனின் விடியல் தேன் சொட்டும் மதுரம் நிறைந்த அவளின் குரலில் தான்.
கிட்டத்தட்ட இரண்டு மணி நேரங்கள் சென்றதே தெரியாது, மனதிற்கும் செவிக்கும் இதமாக வருடிய அவளது குரலிலும், இனிமையாகத் தீண்டிய அவளின் பாடல் கலெக்ஷன்ஸிலும் தன்னை மூழ்க்கடித்திருந்தவன்…
“டாடா… பை… பை… இதுவரை நீங்கள் கேட்டது புத்தம் புது காலை. இதயம் தொட்ட இனிய பாடல்கள்.
கேளுங்க… கேளுங்க… கேட்டுக்கிட்டே இருங்க. இது உங்கள் ‘சாரல் FM 97.5’. மீண்டும் நாளை காலை இனிய பாடல்களுடன், நான் ஆர்.ஜே தர்ஷி” என்ற அவளின் இறுதி வார்த்தைகளில் தான் சுற்றம் உணர்ந்து, சுள்ளென்று முகத்தில் அறையும் சூரியனின் வெப்பத்தை உள்வாங்கினான்.
“இந்த வாய்ஸ் எனக்குள்ள ஏதோ மேஜிக் பண்ணுதுடா!” எழுந்து நின்றவன் இரண்டு கைகளையும் உயர்த்தி சோம்பல் முறித்தான்.
அப்படியே சுற்றி தூத்துக்குடியையே பார்வையால் வலம் வந்தான். அவர்கள் பணிரெண்டாவது மாடியின் உச்சியில் தண்ணீர் தொட்டியின் மீது படுத்திருந்தனர்.
“இருக்கும் இருக்கும். சூரியன் மண்டையில் கொட்டுறது கூட தெரியாத அளவுக்கு அந்த பெண்ணோட குரலில் மயங்கிக்கிடக்குற.” பாலா குறைப்பட்டான்.
“இந்த பாட்டெல்லாம் எங்கிருந்து புடிக்குறா(ள்)ன்னு தெரியல.” பாலா சொல்லியது காதிலே விழாததைப்போல் தான் படுத்திருந்த படுக்கை விரிப்பை சுருட்டி ஓரம் வைத்தான் வசீ.
“இந்த ரசனை, அழகு, மயக்கம் இதெல்லாம் நம் தொழிலுக்கு ஒத்துவராது வசீ.” இம்முறை பாலாவின் குரலில் அத்தனை அழுத்தம்.
“ஏண்டா வெறும் குரலை மட்டும் கேட்குறதுக்காடா இந்த மிரட்டு மிரட்டுற?” வசீ சாதரணாமாகத்தான் கேட்டான்.
“நம்ம தொழில் அப்படி” என்று பாலா வார்த்தைகளை பற்களால் கடித்தான்.
“அடிதடி, ரவுடிசம் பண்ணா எப்.எம், பாட்டெல்லாம் அதுவும் காதல் பாட்டெல்லாம் கேட்க கூடாது அப்படியா?” இம்முறை வேண்டுமென்றே வசீ தன்னை சீண்டுவதாகத் தோன்ற பாலா விடுவிடுவென ஏணி வழியாக கீழிறங்கி பதினோராவது தளத்தில் இருக்கும் தங்களது வீட்டை நோக்கிச் சென்றான்.
“இப்போ எதுக்குடா இவனுக்கு இம்புட்டு கோபம்.”
“அவன் சொல்வதிலும் ஒரு நியாயம் இருக்கே வசீ” என்ற குமார் அவனின் தோளை தட்டிச்சென்றான்.
வாசு மட்டும் எதுவும் சொல்லாது அவனையே பார்த்திருக்க…
“என்னல… உன் பங்குக்கு நீயும் என்னத்தையாவது சொல்லணுமாக்கும். சொல்லிட்டு கிளம்பு” என்று இடுப்பில் கைகுற்றி பார்த்தான் வசீ.
“அதெல்லாம் ஒண்ணுமில்லை” என்ற வாசு, “அந்த பொண்ண உனக்கு ரொம்ப பிடிச்சிருக்கே… ஒருவேளை அது ஆண்டியாவோ, பாட்டியாவோ இருந்தால் உன் நிலைமை என்னடா?” என்று சிரிக்காது கேட்டிட, வசீ பார்த்த பார்வையில் தப்பித்தோம் பிழைத்தோமென ஓடியிருந்தான் வாசு.
வாசுவை முறைத்து விரட்டியிருந்தாலும், அவனின் பேச்சு நியாயமாகப்பட்டது வசீக்கு.
‘ஒருவேளை அவன் சொல்றது உண்மையாக இருந்தால்?’
அடுத்த நொடியே, ‘ச்ச… ச்ச… இருக்காது!’ என்று சொல்லிக்கொண்டான்.
மீண்டும், ‘வயசானவங்க இன்னமும் பாடுறாங்களே! அவங்க குரலெல்லாம் இளமையாத்தானே இருக்கு. அப்படியும் இருக்குமோ?’ என குழம்பினான்.
‘இருந்துட்டு போகட்டுமே! எனக்கு அவங்க குரல் தான் பிடிச்சிருக்கு. வயசு என்னவாயிருந்தால் எனக்கென்ன?’ என நினைத்தவன் ‘வாய்ஸ் கேட்டால் அப்படித் தெரியல’ என்று தோள்களைக் குலுக்கிக்கொண்டவனாக கீழே சென்றான்.
“ஐயா வர சொன்னாருடா…” வசீயின் முன் எதிர்பட்ட பாலா அவனுக்கு தகவல் சொல்லியவனாக வேகமாக வெளியேறினான்.
பாலாவின் பின்னே குமாரும், வாசுவும் சென்றிட… உடலுக்கு நீரை காட்டிவிட்டு, முரட்டு ஜீன்ஸ் மற்றும் தடித்த வெளிறிய கருநிற சட்டையை அணிந்தவன், கைகளால் தலை முடியையும், அடர்ந்த தாடியையும் சரி செய்தவனாக வீட்டின் கதவை பூட்டி மின்தூக்கியின் அருகே சென்றான்.
இரண்டு மின்தூக்கிகளில் ஒன்று இப்போது தான் மேலே வர ஆரம்பித்திருக்க… இன்னொன்று கீழிறங்கிக்கொண்டிருந்தது.
அதனை பொருட்படுத்தாது, பொத்தான் அணிவிக்காது தொங்கிக்கொண்டிருந்த சட்டையின் கைகளை மடித்துவிட்டவனாக படிகளில் இறங்கத் தொடங்கிவிட்டான்.
அவனது காதில் முகம் தெரியாத ஆர்ஜேவின் குரல் சிதறிக்கொண்டிருக்க… காலையில் கேட்ட பாடல்களை ஹம் செய்தபடி தரைத்தளம் வந்தவன், தன்னுடைய இருசக்கர வாகனத்தில் அமர்ந்து காற்றாய் பறந்தான்.
பாலா ஐயா என்று சொல்லிச்சென்ற வீட்டின் மதில் கேட்டின் வழி இவன் வலது பக்கம் நுழைய, இடது பக்கம் மற்றொரு சக்கரம் உள் நுழைந்ததும்.
நுழைந்த வேகத்தில் இரண்டு சக்கரங்களும் மோதி இடித்துக்கொள்ள, வசீ தன் வண்டியில் திடமாக அமர்ந்திருந்தான்.
ஆனால் மற்றொரு வண்டியோ தடுமாறி கீழே விழுந்தது.
“அம்மா…” என்ற முனகலோடு வண்டியோடு சேர்ந்து கவிழ்ந்திருந்தாள் பெண் ஒருத்தி.
அதற்கெல்லாம் வசீ பதறிவிடவில்லை. அலட்சியமாக உள்ளே சென்றுவிட்டான்.
சத்தம் கேட்டு காவலாளி வந்து, அப்பெண் எழ உதவி செய்ததோடு வண்டியையும் தூக்கி நிறுத்தினான்.
எழுந்து நின்றவள் கால்களை உதறி ஆடையில் ஒட்டியிருந்த மணலை தட்டிவிட…
“ஒண்ணும் ஆகலையே பாப்பா?” என்று அவளை ஆராய்ந்தார் காவலாளி இளங்கோ.
“இல்லை அங்கிள். நான் ஓகே தான்” என்றவள் வண்டியை நகர்த்த முயல,
“நீ போ பாப்பா… நான் நிறுத்திடுறேன்” என்று இளங்கோ சொல்லிட, அவள் தலையாட்டிவிட்டு உள்ளே சென்றாள்.
வசீ கூடத்தில் நடுநாயகமாக அமர்ந்திருக்க, அவனை பார்த்தவளின் பார்வையில் எவ்வித உணர்வும் இல்லை.
அவனும் அவளை கண்டதும் பார்வையை திருப்பிக்கொண்டான்.
அவளை பார்த்ததும் பாலா புன்னகைக்க… அவளோ அதனையும் கண்டுகொள்ளவில்லை.
‘உனக்கு இந்த அவமானம் தேவையா?’ என்கிற ரீதியில் இதழ் சுளித்தான் வசீகரன். அதனை பாலா கண்டுகொண்டான் இல்லை.
இருவருக்கும் முன் அமர்ந்திருந்த முத்துச்சாமி… செல்லும் மகளை கனிவுடன் பார்த்தது எல்லாம் சில நொடிகள் தான்,
“எனக்கு இதுவொன்னும் சரியாப்படல… இருக்கும் சொத்து, ஆஸ்தியெல்லாம் உன் ஒருத்திக்குத்தான்! அதை உட்கார்ந்து செலவு செய்யாம இப்படி வேலைக்குன்னு காலையிலே எழுந்து ஓடணுமா?” என்று அதட்டினார்.
நீங்கள் என்ன வேண்டுமானாலும் பேசிக்கொள்ளுங்கள் என்று, அவர் சொல்வதை காதில் வாங்காதவளாய் சென்று கொண்டே இருந்தாள் ஆதர்ஷினி.
அப்பொழுது அங்கே வந்த மகாலட்சுமி பாலாவுக்கும், வசீக்கும் தேநீர் கொடுத்திட…
எப்போதும்போல் வசீ மறுத்துவிட்டான்.
பாலா எடுத்துக்கொள்ள, வசீ அதனை பொருட்படுத்தவில்லை.
“உன் பொண்ணுகிட்ட சொல்லுன்னு எத்தனை தரம் உனக்கு சொல்லுறது மகா. அவள் என் பொண்ணுன்னு வேலை பார்க்குமிடத்தில் தெரிந்தால், என்னை என்ன நினைப்பானுங்க?” என்றி பொரிந்தார்.
“வேலை பார்ப்பது கௌரவம் தானேங்க ஐயா! எதுக்கு பாப்பாவ திட்டிக்கிட்டு இருக்கீங்க?” பாலா ஆதர்ஷினியை குறை சொல்வது பொருக்கமாட்டாது கேட்டுவிட்டான்.
“நீ உன் வேலையை பாருடா” என்று காய்ந்தவர், “ஒத்த புள்ள, அப்பன் வேண்டாம் அவனோட சொத்து வேண்டான்னு விலக்கி வைக்குற வேதனை அனுபவிச்சா தான் தெரியும்” என்றவர், “உன் மகளிடம் சொல்லி வை” என்றார் மகாவிடம்.
அவருக்கு தலையசைப்பதைத் தவிர வேறு வழியிருக்கவில்லை.
மகாலட்சுமி நகர்ந்திட…
“குமாரும், வாசுவும் எங்கடா?” என்று முத்துச்சாமி பாலாவிடம் வினவ, “நான் தானுங்க ஒருவேலையா அனுப்பியிருக்கேன்” என்றவன் என்னவென்று சொல்லவில்லை.
அடுத்து முத்துச்சாமி வசீயை அர்த்தமாக ஏறிட…
“நைட்டே வேலையை முடிச்சிட்டேன், கத்துறதுக்குக்கூட தெம்பில்லாம சுருண்டு கிடக்கான்” என்று அவருக்கு வேண்டிய பதிலை கொடுத்தான்.
“ம்ம்ம்… தோட்டத்தில் இருங்க வந்திடுறேன்” என்றவர் எழுந்து உள்ளே செல்ல….
முத்துச்சாமி நகர்வதற்காகவே காத்திருந்ததைப்போல் வெளியில் வந்த ஆதர்ஷினி, பாலாவின் முன் சென்று நின்றாள்.
“பாப்பா…”
அவன் தலையில் நங்கென்று கொட்டினாள். நல்ல வலி. இருப்பினும் புன்னகைத்தான்.
“ஹேப்பி பர்த்டே” என்றவள் கவர் ஒன்றை அவனிடம் நீட்டினாள்.
“எதுக்கு பாப்பா?” என்று அவன் தயங்கிட,
“இது நான் என்னோட காசில் வாங்குனது. உங்க ஐயாவோட பாவப்பட்ட பணத்தில் இல்லை” என்று சொல்லி முடிக்குமுன் அதனை வாங்கிக்கொண்டான்.
அவள் விருந்தினர் அறையை கை காட்டிட, புரிந்தது எனும் விதமாக பாலா நகர்ந்தான்.
இப்போது அங்கு வசீயும், ஆதர்ஷினியும் மட்டுமே.
“இவ்வளவு காலையில் அப்படியென்ன வேலை?”
“அதை உன்கிட்ட சொல்லணும் அவசியமில்லை.”
ஆதர்ஷினி வெடுக்கென பதில் சொல்ல… வசீ விருட்டென வெளியேறியிருந்தான்.
*****************
வசீ முத்துச்சாமியிடம் வேலைக்கு சேர்ந்து இரண்டு வருடங்களுக்கு மேலாகிறது.
முத்துச்சாமி ஆசைக்காக அரசியலில் இறங்கியதால், போதுமென்று நினைத்து அரசியலிலிருந்து ஒதுங்கிய தருணம் அது. அவரை அழித்திட இதுதான் சரியென நினைத்து நள்ளிரவில் வீட்டிற்கு திரும்பிக்கொண்டிருந்த அவரின் காரை மறித்து ஒரு கும்பல் தாக்க முற்பட… அப்போது அவர்களிடமிருந்து முத்துச்சாமியை காப்பாற்றியவன் தான் வசீகரன்.
வசீக்கு யாருமில்லையெனத் தெரிந்துகொண்ட முத்துச்சாமி, அவனின் விறைப்பானத் தோற்றத்தையும் தன்னை தாக்க வந்த எதிரிகளை அவன் வீழ்த்திய விதத்தையும் வைத்து தன்னிடமே வைத்துக்கொண்டார்.
பாலா முத்துச்சாமியிடம் டிரைவராக வேலை பார்த்தவரின் மகன். டிரைவர் மகாலட்சுமி, ஆதர்ஷினிக்கு ஏற்பட்ட விபத்தின் போது இறந்திருக்க, தாய் அற்ற பாலாவை தானே வளர்த்தார்.
தன் தந்தையால் தந்தையிழந்து நின்ற பாலாவின் மீது ஆதர்ஷினிக்கு முதலில் தோன்றிய பரிதாபம் பின்னர் பாசமாக மாறியது.
இரண்டும் கெட்டான் வயதில் அவனுக்கு ஆறுதலாக இருந்த ஆதர்ஷினியை தன் தங்கையாக பாலா பார்க்கத் தொடங்க… அவளும் அவனுடன் நெருங்கிப்போனாள்.
அவன் வளர வளர முத்துச்சாமி எது சொன்னாலும் செய்து முடிப்பவனாக இருக்க… ஆதர்ஷினி பாலாவையும் தள்ளி வைத்தாள்.
இந்த தொழில் வேண்டாமென்று ஆதர்ஷினி எவ்வளவோ சொல்லியும், உன் அப்பாவிற்கு நான் செய்யும் ஒருவித நன்றிக்கடன் இதுவென்று முடித்துக்கொண்டான்.
அன்று முதல் ஆதர்ஷினி பாலாவிடம் பேசுவதை நிறுத்தினாலும், அவளால் முழுதாக முடியவில்லை. அவள் தவிர்க்க தவிர்க்க இவன் பாப்பா பாப்பா என்று பின்னால் சுற்ற முறைப்போடு கடப்பவள், தேவைக்கு மட்டும் பேசுவாள்.
முதலில் தன் தந்தையை காப்பாற்றியவன் என்ற எண்ணம் வசீ மீது இருக்க அவனை நல்லவிதமாக நினைத்தவள், பின் அவனும் அவர்களில் ஒருவனாகிப் போனப்பின் ஏனென்று அறியாமலேயே வசீயின் மீது அளவில்லா கோபத்தை சுமந்து கொண்டிருக்கிறாள்.
வசீ வந்த பின்னர் முத்துச்சாமிக்கு பாலாவிற்கு அடுத்து அனைத்தும் அவனென்று ஆன நிலை… இப்போது எதுவென்றாலும் வசீயிடம் கேட்டு செய்யும் நிலை.
வசீகரன் ஒன்று செய்தாலும், சொன்னாலும் அது தனக்கு நன்மையே என்கிற எண்ணம் முத்துச்சாமிக்கே உண்டு. வசீகரனின் மீது அவருக்கு அத்தனை நம்பிக்கை.
இருப்பினும் வசீ தன்னுடைய எல்லையறிந்து நின்றுவிடுவான். எவ்வித சலுகையும் எதிர்பார்த்திடமாட்டான். பாலாவைப்போல் உரிமையாக இருந்திடமாட்டான்.
சொல்லப்போனால் அவனின் பேச்சு செயல் என எல்லாம் முத்துச்சாமியோடு நின்றுவிடும்.
ஆபத்திலிருந்து முத்துச்சாமியை காப்பாற்றிய அன்று, முத்துச்சாமியிடம் அவரின் நலனை அவரிடம் கேட்டறிந்திட விருப்பமின்றி ஆதர்ஷினி வசீயிடம் கேட்க… அன்று அவன் அவளிடம் பேசியது. அதன் பின்னர் அவள் எதிரே வந்தாலும் கல்லையும் மண்ணையும் பார்ப்பதைப்போல் கடந்திடுவான்.
பெண் என்பதால் அவள் பக்கமே அவனது பார்வை செல்லாது. வீட்டிற்கு தினம் வர, சாதரணமாக பார்த்து பேசினாலும் இட்டுக்கட்டி பேசும் வாய்ப்பு இருப்பதாக விலகியே நின்றுகொண்டான்.
அவன் அடிதடி செய்பவனாக இருந்தாலும் இந்த விடயத்தில் அவனது கண்ணியம் ஆதர்ஷினிக்கு பெரும் ஆச்சரியம்.
பாலா கூட பெண்களை சைட் அடிப்பதை பார்த்திருக்கிறாள். அச்சமயங்களில் வசீ பாலவுடன் இருந்தாலும் அவனின் பார்வை வேறெங்கோ இருந்திடும்.
அதனால் வசீயின் மீது ஓரளவிற்கு ஆதர்ஷினிக்கு நல்ல எண்ணம் இருப்பினும், அவனாக பேசிடாத போது இவளாக சென்று பேச விருப்பம் கொள்ளவில்லை.
வசீகரனுக்கு இன்றளவிலும் ஆதர்ஷினியின் பெயர் தெரியுமா என்பதே வினாதான்.
பாலாவும் பாப்பா என்றே சொல்லிட, குமார், வாசுவும் கூட ஐயா பொண்ணு என்றே குறிப்பிட, முத்துச்சாமி பசங்களிடம் தன்னுடைய மகளைப்பற்றி பேசமாட்டார் என்பதால் வசீகரனுக்கு அவளின் பெயரை தெரிந்துகொள்ள வேண்டுமென்ற எண்ணம் தோன்றியதே இல்லை. ஒருவேளை தெரிந்து வைத்திருப்பானோ? அவன் அறிந்த ரகசியம்.
வசீகரனுக்கு ஆதர்ஷினியிடம் பிடித்தது அவளின் சுயகௌரவம். தந்தை அத்தனை பெரிய செல்வந்தராக இருப்பினும்… அவரின் செயல் பிடிக்காது தனக்கானதை நேர்வழியில் பெற்றுக்கொள்ளும் அவளின் பாதை அவனுக்கு அவள்மீது நன்மதிப்பு வர காரணம். ஆனால் அதனை இதுவரை பாலாவிடம் கூட அவன் காட்டிக்கொண்டது இல்லை.
வசீ எப்போதும் தன் பார்வையை கூட அவள் பக்கம் திருப்பாது இருந்திட… இன்று என்னவென்றே தெரிந்திடாது ஒருவித உந்துதலில் அவளிடம் வேலையைப்பற்றிக் கேட்டுவிட்டான். அதற்கு அவள் பதிலளித்த விதம், அதிலிருந்த திமிர் அவனுக்கு பிடிக்கவே செய்தது.
இருந்தபோதும் அவள் வேண்டிய பதிலை சொல்லவில்லையே என்கிற கோபம். அதைவிட, இன்றென்ன புதிதாக அவளிடம் பேச்சு என்று தன்மீதே எழுந்த கோபம். அதனால் தான் விரைந்து வெளியில் வந்திருந்தான்.
தோட்டத்தில் யாருமில்லை.
முன்பெல்லாம் முத்துவின் ஆட்கள் அவரைக்கான வீட்டிற்குத்தான் வருவார்கள். பின்பக்கம் இருக்கும் விருந்தினர் பகுதியில் தான் நாள் முழுவதும் தங்கியிருப்பர். முத்து சொல்லும் அனைத்தையும் செய்து முடிப்பர்.
ஒருமுறை புதிதாக அவர்களின் கூட்டத்தில் சேர்ந்த ஒருவனின் பார்வை ஆதர்ஷினியின் மீது தவறாக படிய, வசீகரன் அதனை கண்டுகொண்டான்.
அன்றே அவனை வீட்டிற்கு பின்னால் மறைவாகக் கூட்டிச்சென்று அடி வெளித்துவிட்டான்.
இதனை அந்தப்பக்கம் செடிகளுக்கு குழாயின் மூலம் தண்ணீர் காட்டிக்கொண்டிருந்த ஆதர்ஷினி பார்த்துவிட்டாள்.
வசீ அவனை அடித்த அடியை கண்டு ‘காட்டுமிராண்டி’ என அவனுக்கு திட்டியவள், அடுத்து வசீ கூறிய வார்த்தைகளைக் கேட்டு ஸ்தம்பித்தாள்.
“பொம்பளை பிள்ளையை பார்த்ததே இல்லையா? ஐயாவோட பொண்ணை, அதுவும் என் முன்னாலே… பா(ர்)ப்பியா?” எனக் கேட்டே அவனின் சில்லு மூக்கினை சில்லு சில்லுயாய் நொறுக்கினான்.
அப்போதே அவனை தங்களுடைய கூட்டத்திலிருந்து நீக்கியவன், என்ன விஷயமென்று யாரிடமும் கூறவில்லை.
அன்றே முத்துவிடம் பாலாவை வைத்துக்கொண்டு, “வயதுப்பெண் இருக்குமிடம், முரட்டு பசங்க அடிக்கடி வீட்டுக்கு வந்து போறது சரியில்லை. நமக்குன்னு ஒரு இடம் தனியா வச்சிக்கிலாங்க. எதாவது அவசர தேவைக்கு நானும், பாலாவும் மட்டும் இங்கு இருக்கோம்” என்றான்.
ஏன் இவ்வாறு கூறுகிறான் என்று தெரியாத போதும், வசீ சொல்லியதை முத்துச்சாமி செய்தார்.
அதுமுதல் வீட்டிற்கு என்றால் பாலா, வசீயை தவிர்த்து யாரும் அத்தனை எளிதில் வந்திடமாட்டார்கள். வசீயும் அதற்கு அனுமதிப்பதில்லை.
இதனையெல்லாம் கவனித்த ஆதர்ஷினிக்கு வசீ தவறுதலாக இந்த கூட்டத்தில் மாட்டிக்கொண்டதாகவே எண்ணம். அன்று முதல் அவனை சரியான கண்ணோட்டத்தில் பார்க்கத் துவங்கியிருந்தாள்.
ஆதர்ஷினி கடந்த ஐந்து மாதங்களாக ஆர்ஜேவாக பணி புரிகிறாள். அவளுக்கு எதையும் புதுமையாக செய்திட விருப்பம். அதனால் இவ்வேலையை தேர்ந்தெடுத்தாள். அத்தோடு இது முழுநாள் அமர்ந்து செய்யும் வேலையில்லை என்பதால் விருப்பமாகவே சேர்ந்தாள். ஆரம்பத்தில் அவள் வேலைக்கு செல்லக்கூடாதென முத்து கண்டித்தும் அவள் கேட்பதாக இல்லை.
இரண்டரை வருடங்களாக எதையோ பறிகொடுத்தவள் போலிருந்த மகள், இந்த வேலைக்கு செல்லத் துவங்கியது முதல் தான் கொஞ்சமேனும் சிரிக்கிறாள் என்று முத்துவை மகாலட்சுமி தான் அடக்கி வைத்தார்.
இன்று திரும்பவும் அவர் வேலையைப்பற்றி பேசவும் ஆதர்ஷினிக்கு கோபம் வந்துவிட்டது.
‘தனக்கு பிடித்ததை செய்யக்கூட தடையா என்று.’
அந்த கடுப்பில் தான், வசீயும் வேலையைப்பற்றி கேட்க முறைத்துவிட்டாள்.
அவன் வேகமாக சென்ற பின்பே தன் தவறை உணர்ந்து நெற்றியில் தட்டிக்கொண்டவளாக அவனைத்தேடி தோட்டத்திற்கு செல்ல… அவனோ அவளுக்கு முதுகுக்காட்டி நின்றிருந்தான்.
அங்கிருந்த செயற்கை குளத்தில் நீந்தி விளையாடும் மீன்களில் ரசனையாய் அவனின் பார்வை மேய்ந்து கொண்டிருந்தது.
“சாரி…”
ஆதர்ஷினியின் குரல் கேட்டு திரும்பியவன் மீண்டும் மீன்களில் பதிந்துவிட்டான்.
“உங்ககிட்டதான் சொன்னேன்.” ஆதர்ஷினி இப்போது சற்று சத்தமாகக் கூறிட,
“ஹோ… என்னிடம் தானா?” எனக் கேட்டவன், “யுவர் அப்பாலஜிஸ் அக்செப்டட்” என சொல்லி அங்கிருந்து நகர்ந்துவிட்டான்.
அவனின் ஆங்கில உச்சரிப்பு அவளை ஆச்சரியப்படுத்தியது.
“ஸ்டைலா இங்கிலீஷ் பேசுறாங்க? படிச்ச ரவுடி போல” என தனக்குத்தானே சொல்லிக் கொண்டிருக்கையில், அவள் வாங்கிக்கொடுத்த உடையை அணிந்து அவளிடம் வந்தான் பாலா.
“நல்லாயிருக்கா பாப்பா?”
“நான் வாங்கிக்கொடுத்தா நல்லாத்தான் இருக்கும்” என்றவள், “இன்னைக்கும் அடிதடின்னு யாரையும் துரத்திக்கிட்டு ஓடாம இரு” என்று முறைத்துக்கொண்டே கூறினாள்.
“இன்னைக்கும் இப்படி முறைச்சிக்கிட்டுத்தான் பேசுவியா பாப்பா?” அவன் முகம் சுருங்கியிருந்தது.
“நீ பண்ற வேலை அப்படி” என்றவள் அவனைத் தாண்டி செல்ல…
“தண்ணிலாம் விட்டப்போல… அம்மா சொன்னாங்க” என்றாள்.
“வசீ இருக்கானே” என்று பெரு மூச்சு விட்ட பாலா, “அவன் எங்களை அதை தொடவிடுறதே இல்லை. நைட் கூட விஷ் பண்ணிட்டு கோக் தான் வாங்கிக்கொடுத்தான்” என்றான்.
“சொல்றவங்க சொன்னாத்தான் கேட்பீங்க போல” என்றவள், “அவங்கெப்படிடா உங்கக்கூட கூட்டு சேர்ந்தாங்கா?” என்று தன்னுடைய பல நாள் சந்தேகத்தைக் கேட்டாள்.
“அவனுக்குன்னு யாருமில்லை பாப்பா. வேலை எதுவும் கிடைக்கல அதான் ஐயா இருக்க சொல்லவும் எங்களோட இருந்துட்டான். ஆனால் அடிதடிக்கு முன்னால், அவனுக்குன்னு ஒரு நியாயம் இருக்கும். தப்புன்னு தெரிந்தால் தான் அடிக்கவே செய்வான். இல்லையா ஐயா சொன்னார் என்பதற்காக உரிய ஆளை கொண்டுவந்து ஒப்படைச்சிட்டு போயிட்டே இருப்பான். அதனாலே ஐயா கூட தப்பான வேலையையெல்லாம் அவனிடம் சொல்லமாட்டார்” என்று நீண்ட விளக்கமே கொடுத்திட்டான்.
ஆதர்ஷினியிடம் வசீயை நினைத்து மெச்சுதல்.
“நீயும் அவங்களை மாதிரி இருக்கலாமே!” என்றிட, “எனக்கு பழகிப்போச்சு பாப்பா” என்றான் சலிப்பாக.
“உனக்கு கல்யாணம் குடும்பம் அப்படின்னு இருக்க ஆசையில்லையா?” எனக் கேட்டிட, பாலாவுக்கு சிரிப்புத்தான் வந்தது.
“நானெல்லாம் அதை கனவில் கூட நினைத்துப் பார்க்க தகுதியற்றவன் பாப்பா” என்றவன், “முதலில் உனக்கு நடக்கட்டும். அப்புறம் என்னை யோசிக்கலாம்” என்று விரக்தியாகக் கூறினான்.
பாலா சொல்லியது ஆதர்ஷினியை வெகுவாய் தாக்கியது.
அவளின் திருமணம் என்று அவன் சொல்லியதும் அவளின் எண்ணம், நினைப்பு, சிந்தனை எல்லாம் விநோதனிடம் சென்று நின்றது.
சட்டென்று கண்கள் நிரம்பிவிட்டன.
அதனை பாலாவுக்கு தெரியாது மறைத்து அங்கிருந்து நகர்ந்துவிட்டாலும், சற்று தூரத்திலிருந்து இவர்களை தற்செயலாக பார்த்த வசீயின் கண்களுக்கு அவள் கண்ணீரை உள்ளிழுத்து விரல்களால் துடைத்தபடி செல்வது தப்பவில்லை.
‘என்னவா இருக்கும்?’ யோசனை அவளிடம் தாவிட தலையை உலுக்கி சமன் செய்தான்.
‘இத்தனை நாள் எப்படியிருந்தியோ, அப்படியே இரு வசீ!’ தனக்குள் சொல்லிக்கொண்டான்.
அறைக்குள் வந்த ஆதர்ஷினி, விநோதன் அவளுக்கு இறுதியாக எழுதிய கடிதத்தை எடுத்து நெஞ்சோடு அணைத்தவளாக அமர்ந்துவிட்டாள்.
ஆதர்ஷினி விநோதனை காதல் என்னும் வரையறைக்குள் கொண்டுவரவில்லை. ஆனால் அவளுக்கு அவன் உயிருக்கும் மேலானவன். அவனின் இறப்பைக்கேட்டு துவண்டு கிடந்தவள், இப்போது சில மாதங்களாகத்தான் இயல்பாக நடமாடுகின்றாள்.
அப்போதும் அடிக்கடி அவனின் நினைவுகளில் வாடிவிடுபவளுக்கு ஒரே ஆறுதல் அவனின் நான்கு வரி அடங்கிய கடிதங்கள் தான்.
விநோதனை மறக்கத்தான் நினைக்கிறாள். ஆனாலும், முடியாது தவிக்கின்றாள். இல்லையென்ற நிஜம் மூளையில் பதிய மறுக்கிறது.
ஒருவனின் வருகை நெஞ்சில் வடுவாய் தங்கிட… அங்கே மற்றொரு நேசத்திற்கு வழி பிறக்குமாயின் அவளின் ரணம் விடைபெறலாம்.
***********************
கதையின் பாதை இங்கிருந்து வேறாகிறது. இதற்கு முன்னரான ஏழு அத்தியாயங்களும் கதைக்கான முன்னுரை போன்றது. அந்த 7 அத்தியாயங்களின் நிகழ்வுகள் மற்றும் கதாபாத்திரங்களின் நடந்தவைகளுக்கான வாழ்வியல் இனி வரும் அத்தியாயங்கள்.
நான்கு காதல் நான்கு கதை நான்கு பகுதிகளாக.
முதல் பகுதி : பிழைத்தாண்டி நான் உன்னை நேசிக்கவா?
மீதி எல்லாம் கதையின் போக்கில்…
இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
2
+1
17
+1
+1
உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள்
You must be logged in to post a comment.


❤️❤️👍