Loading

அத்தியாயம் 6 :

துருவன் விநோதனுடன் இருந்துவிட்டு கல்லூரிக்கு வந்து பத்து நாட்களுக்கு மேலாகியிருந்தது.

நிரல்யா அவன் பின்னால் சுற்றியபோது, அவனைத் தேடித்தேடி வந்தபோது, அவள் மொத்தமாக சென்றபோது வராத அவளைப்பற்றிய நினைப்பெல்லாம் துருவனுக்கு இப்போது வந்தது.

அவன் படிக்க அமர்ந்தாலே… ‘ஒருத்தியின் படிப்பே உன்னால் சிதைந்துவிட்டது’ என்று அவன் மனசாட்சி குத்தி கிழித்தது.

கல்லூரியில் அவன் போகும் இடமெல்லாம் அவளும் உடன் வருவதைப்போல் பிம்பம். மொத்தமாக பார்க்கும் யாவும் அவனை வதைத்து.

இதுதான் காதலென்று ஏனோ அவனக்கு அப்போதும் விளங்கவில்லை.

விநோதனுடன் இருந்துவிட்டு வரும்வரை மறைந்திருந்த, இதில் என் தவறென்ன என்கிற எண்ணமெல்லாம் கல்லோரிக்கு வந்ததும் பின் சென்றிருந்தது.

‘நிரல்யாவின் படிப்பு தன்னால் தான் வீணாகிவிட்டது’ என்கிற குற்றவுணர்வு பேயாட்டம் போட்டது அவனுள்.

அதிலிருந்து அவன் வெளிவருவதற்குள் துருவனை வெகுவாக உடைய வைத்தது, இடியாய் தலையில் இறங்கியிருந்தது, விநோதனின் இறப்புச் செய்தி.

அன்னப்பூரணியும், துருவனும் நடைபிணமாகிப் போயினர். உயிரற்ற கூடாகத்தான் இருந்தனர். அவர்களின் மொத்த உலகமாயிற்றே அவன். உலகம் மட்டுமா, அவர்களின் உயிரோடு உறைந்து போனவன் விநோதன். அவர்களின் ஒட்டுமொத்த சந்தோஷம் அவன். அன்னைக்கே தந்தையாய் மாறி நின்று திடம் அளித்திட்டவன். அப்படிப்பட்ட ஒருவனின் இழப்பு அவர்களை உருக்குலைத்து உயிர் மருக வைத்தது.

விநோதனின் இறப்புச் செய்தி கேட்டு துருவன் கதறிய கதறலின் ஓலம் கொடைக்கானல் மலையெங்கும் இன்றும் எதிரொலிக்கும்.

படிப்பில் அத்தனை பிடித்தம் கொண்டிருந்தவன், கல்லூரியையே மறந்தவனாக வீட்டில் அடைந்து கிடந்தான்.

அவனுக்கு ஒரு ஆடை வாங்க வேண்டுமென்றாலும், அவனது அண்ணன் வேண்டுமே! இனி யாரை நாடுவான். அவனின் துக்கம் போக யார் மடியில் தலை சாய்ப்பான்.

கண்ணீரிலேயே கரைந்தான்.

இறந்த மகனுக்காக இருக்கும் மகனை இழந்து விடுவோமோ என்று பயந்த அன்னப்பூரணி ஒருவாராகத் தன்னை தேற்றி… இழப்பிலிருந்து தேறி வந்ததைப்போல் துருவனிடம் காட்டிக்கொண்டார்.

பகலில் துருவனுக்காக நடமாடினாலும், இரவில் விநோதனை நினைத்து கண்ணீரில் கரைந்து மருகுவார்.

இரவில் அன்னையின் அழுகையை கண்டுகொண்ட துருவன் துடித்துப்போனான். வெளிப்படையாக வருத்தத்தை காட்டிக்கொள்ள முடியாத வலி அனைத்திலும் பெரியதாயிற்றே! அதனை அன்னைக்கு கொடுக்க அவன் விரும்பவில்லை.

அன்னையின் துக்கத்தை போக்குவதற்காகவே துருவன் தன்னை மீட்டுக்கொண்டான். அன்னைக்காக நடிக்கத் தொடங்கினான் என்பதே உண்மை.

ஆக மொத்தத்தில் தாயும் பிள்ளையும் ஒருவருக்கொருவராகத் தாங்கி நிற்க தங்களின் துக்கத்தை மனதோடு சேர்த்து வைத்தனர்.

“நான் காலேஜ் போகலம்மா, லாட்ஜினை பார்த்துக்கிட்டு உங்கக்கூடவே இருந்துக்கிறேன்” என்ற துருவனை வற்புறுத்தி கல்லூரிக்கு அனுப்பி வைத்தார் அன்னப்பூரணி.

அவனின் துக்கத்தில் நிரல்யாவின் எண்ணமெல்லாம் காற்றில் அடித்துச்செல்லப்பட்ட காகிதமாக எங்கோ பறந்து சென்றிருந்தது.

அந்த வருடத்திற்கான இறுதித் தேர்வையும் முடித்தவன், ஆரோனிடம் கூட சொல்லிக்கொள்ளாது கொடைக்கானலிற்கு வந்துவிட்டான்.

அண்ணன் என்கிற உறவு துருவனின் ஒவ்வொரு செல்லிலும் உறைந்து போயிருக்க… சோகத்தின் கனம் தாங்காது அன்னைக்கு முழுதாய் ஓய்வளித்தவன் தொழிலை தன் கையில் எடுத்துக்கொண்டான்.

அவனிற்கு கொடைக்கானலில் ரிஸார்ட் கட்ட வேண்டும் என்பது ஆசை. அதில் முழு மூச்சாய் இறங்கி விட்டான்.

சித்தம் முழுவதும் விநோதன் நிறைந்திருக்க… துருவன் தன் அண்ணன் தன்னோடு வாழ்கிறான் என்ற கற்பனையிலேயே நாட்களை நகர்த்த ஆரம்பித்தான்.

****

விநோதனை சந்தித்துவிட்டு திருவனந்தபுரத்திலிருந்து துருவன் கிளம்பிய நான்கு நாட்களுக்கு பின்னர்…

பிரபலமான வெதுப்பகம் ஒன்றில் விற்கப்பட்ட கேக்கினை சாப்பிட்டு சிறுவன் கடையிலேயே மயங்கி விழுந்த நொடி இறந்தும் போயிருக்க, அவ்விஷயம் சில நிமிடங்களில் காட்டுத்தீ போல் பரவியது.

அந்த சிறுவனின் தந்தை விநோதனைப் பற்றி அறிந்திருந்ததால், அவனை நேரடியாக அவனது குடியிருப்பில் வைத்தே இரண்டு நாட்களுக்கு பிறகு சந்தித்தார்.

“என் பையனோட இறப்பில் எனக்கு சந்தேகம் இருக்கு சார்” என ஆரம்பித்தவர் சொல்லியதைக் கேட்ட விநோதனுக்கு இதெப்படி சாத்தியம் என்று பேரதிர்ச்சியாக இருந்தது.

“இது என் பையனோட உண்மையான அட்டாப்ஸி ரிப்போர்ட். இது மருத்துவமனையில் கொடுத்த போலி ரிப்போர்ட்” என இரண்டையும் கொடுத்தவர், “என் பையன் சாப்பிட்ட கேக்கில் எதை மிக்ஸ் பண்ணியிருக்காங்கன்னு பார்த்தீங்களா சார்? பசங்களுக்கு வேறெதைத்தான் வாங்கிக்கொடுக்குறது? அவனுங்களுக்கு கலந்து விற்க சின்ன பசங்க விரும்பி சாப்பிடும் உணவுப்பொருள் தான் கிடைத்ததா?” எனக் கேட்டவர் உடல் குலுங்க கதறி அழுதார்.

“என் அண்ணன்னு தெரியாமலே, என் பிள்ளைக்கு செய்த அட்டாப்ஸி ரிப்போர்ட்டை மாற்றி எழுதச் சொல்லி அந்த எம்.எல்.ஏ குட்டப்பன் துப்பாக்கியை வைத்து மிரட்டியிருக்கான் சார். உயிரோட மதிப்பு தெரியாத அவனுக்கு உயிர் பயத்தை நீங்க காட்டணும்” எனக் கேட்டுக்கொண்டவர், “நாங்க இந்த ஊரைவிட்டே போறோம் சார். என் மனைவி மனசால ரொம்ப பாதிக்கப்பட்டுட்டாள். பையனோட இறப்பு அவளை கொன்னுடும் போலிருக்கு. இடமாற்றம் அவளோட மாறுதலுக்கு ஏற்றதுன்னு டாக்டர் சொன்னதால்… இங்கிருந்து போறோம் சார். இங்கிருந்து போனாலும் அந்த குட்டப்பனோட மரணச்செய்தியை எதிர்பார்த்து காத்திருப்பேன் சார்” என்றவர் விநோதனை பார்த்து இரண்டு கரம் கூப்பிச் சென்றார்.

விநோதன் யோசனையாக அமர்ந்துவிட்டான்.

இங்கு தவறென்று என்ன நடந்தாலும் அதனின் ஆரம்பப்புள்ளி சென்று முடிவது எம்.எல்.ஏ குட்டப்பனிடம் தான்.

எத்தனை தவறுகள்? ஒன்றா, இரண்டா? எந்தவொரு குற்றத்திலும் குற்றவாளியாகக் கண்டறியப்படுவது குட்டப்பன் தான். ஆனால், அடையாளம் காட்டப்படுவது குட்டப்பனின் அல்லக்கைகளில் ஒருவன்.

இன்றைய நிகழ்வு விநோதனுக்கு ஒன்றை தெளிவாகப் புலப்படுத்தியது.

குட்டப்பன் அரசியல்வாதி என்கிற பெயரில் பல குற்றங்களை நிகழ்த்துகிறான். அதிலிருந்து தப்பித்துக்கொள்வதற்கு அரசியலை கேடயமாக பயன்படுத்திக் கொள்கிறான்.

நீண்ட யோசனைக்குப் பின்னர் தெளிவான உறுதியான முடிவெடுத்தப் பின்னரே உறங்கச் சென்றான்.

காலையில் சீக்கிரம் எழுந்து காக்கி உடை தவிர்த்து அதிவிரைவாக கிளம்பியவன், குறிப்பிட்ட கேக் ஷாப்பிற்கு சென்றான்.

இதுவரை விநோதனின் பெயர் மட்டுமே தெரிந்து வைத்திருப்பவர்களுக்கு அவனை பார்த்ததில்லை என்பதால், அவனை யாருக்கும் அடையாளம் தெரிந்திருக்கவில்லை.

இதற்காகத்தானே தன்னை எப்போதும் ரகசியமாக அவன் வைத்துக்கொண்டது.

சாப்பிடுவதற்காக இரண்டு கேக் துண்டுகள் வாங்கியவன், அதிக விலை மற்றும் வேலைப்பாடுகள் கொண்ட கேக்கினை ஆர்டர் கொடுத்துவிட்டு எத்தனை நேரமானாலும் இருந்து வாங்கிச்செல்வதாகச் சொல்லி கடையின் உள்ளே ஒரு ஓரமாக சென்று அமர்ந்துவிட்டான்.

நிதானமாக கடையின் உள்ளே ஒவ்வொன்றையும் கவனித்தான்.

கைகள் அதுபாட்டிற்கு கேக்கினை வாய் நோக்கி கொண்டு செல்ல சுவைத்துக் கொண்டிருந்தான்.

பணம் செலுத்துமிடத்தில் இருப்பவனின் பார்வையில் திடீரென மாற்றத்தை அறிந்த விநோதன், வாயிலை நோக்கினான்.

அப்போது உள்ளே வந்த ஒருவன், பார்வையால் ஏதோ சமிக்ஞை செய்திட, சில நிமிடங்களில் அவன் சொல்லாமலேயே கேக் அடங்கிய பெட்டியை அவனிடம் கொடுத்து பணம் பெற்றுக்கொண்டான்.

கிட்டத்தட்ட மூன்று மணி நேர முடிவில் பல பேர் அப்படி என்ன வேண்டுமென்று சொல்லாமலே வாங்கிச்செல்வதை கவனித்த விநோதன் அது என்னவென்று நோட்டமிட… அவனது கேக் தயாராகிவிட்டதாக சொல்லிட, வாங்கிக்கொண்டு அங்கிருந்து சென்றவன் காவலர் குடியிருப்பு பகுதியிலிருக்கும் பூங்காவினுள் விளையாடிக்கொண்டிருந்த குழந்தைகளுக்கு பகிர்ந்து கொடுத்துவிட்டு, தான் எப்போதும் உணவு வாங்கும் மெஸ் சென்று அங்கு வேலை செய்யும் ஒருவரை தன்னுடன் அழைத்துக்கொண்டு மீண்டும் அந்த கேக் ஷாப்பிற்கு சென்றான்.

சற்று இடைவெளியில் நின்றுவிட்டவன், தன்னுடன் வந்த நபரிடம் எப்படி நடந்துகொள்ள வேண்டுமென்று விவரமாக சொல்லி அனுப்பினான்.

அவரும் கடைக்குள் நுழைந்ததும் பணம் செலுத்துமிடத்தில் இருக்கும் நபரை சில நொடிகள் அழுத்தமாகப் பார்த்துவிட்டு ஒரு இருக்கையில் சென்று அமர்ந்தார்.

சிறிது நேரத்தில் அவருடைய கைக்கு கவரில் வைக்கப்பட்ட சிறு பெட்டி வந்துசேர, பணத்தை வைத்துவிட்டு வேகமாக வெளியில் வந்து விநோதனிடம் கொடுத்தார்.

நன்றி தெரிவித்து அவரை ஆட்டோ பிடித்து அனுப்பி வைத்தவன்,

அந்த உணவினை எடுத்துக்கொண்டு சென்றது, உணவு பாதுகாப்புத்துறையின் ஆய்வகத்திற்கு.

அதில் சொல்லப்பட்ட விடயம் அவன் எதிர்பார்த்த ஒன்றாக இருப்பினும், ஏற்படும் அதிர்வை தடுக்கமுடியவில்லை.

அப்போதே உணவு பாதுகாப்புத்துறை அதிகாரியிடம் நடந்ததைக் கூறி, அந்த கடையை சோதனையிடுமாறுக் கேட்டுக்கொண்டான்.

அவரும் அவ்வாறே தன்னுடைய பணியாளர்களுடன் சென்று அக்கடையினை சோதனை செய்திட, அவர்கள் எதிர்பார்த்தது கிலோ கணக்கில் பிடிபட்டது.

இதற்காகத்தானே விநோதன் காத்திருந்தான்…

உணவின் தரத்தை பரிசோதனை செய்ய வந்தவர்களின் மூலம் பிடிப்பட்டதாக என்ன வேண்டுமென்று நினைத்த விநோதன், அதற்கேற்றவாறு காய்கள் நகர்த்திட… அங்கு பரிசோதனைக்கு சென்றவர்களும் வேண்டிய பொருள் கிடைத்ததும், விநோதனுக்கு அழைத்து விட்டனர்.

விநோதன் அங்கு வேலை செய்பவர்களை கைது செய்திட… உணவு பாதுகாப்புத்துறை அந்த கடையை சீல் வைத்து மூடியது.

விடயம் அறிந்த குட்டப்பன் தன் ஆட்களிடம் ஒரு ஆட்டம் ஆடித் தீர்த்துவிட்டார்.

“எப்படிடா? எப்படி?”

“எந்தவொரு அறிவிப்பும் இல்லாம வந்ததாலபதுக்க முடியாமப் போயிடுச்சு” என்றான் ஒருவன்.

“அந்த ஏசிபி அரேஸ்ட் பண்ணும் போது, அந்த அதிகாரிக்கு நன்றி சொல்லிட்டுப்போனான். இது அவனுடைய வேலையாத்தான் இருக்கும்.” மற்றொருவன் கூறினான்.

“அவன் வந்ததலிருந்து என்னையவே கொடைஞ்சிட்டு இருக்கான். ஊர் மாத்திவிடலாம் நினைச்சேன். அவன் என்னையே முடிக்க பார்க்கிறான். மாட்டியிருக்கவனுங்க வாய் திறந்தால் நான் மாட்டிப்பேன்.”

குட்டப்பன் தன்போக்கில் யோசித்தவாறு சொல்லிக்கொண்டிருக்க…

“அவன் பிடித்து வைத்திருக்கும் ஆட்களை உள்ள வச்சே முடிச்சிடலாண்ணா. அவன் இன்சார்ஜில் லாக்கப் டெத் ஆனால், அவனோட வேலையே காலி” என்றான் அடியாட்களில் ஒருவன்.

“எனக்கென்னவோ அவனை மொத்தமா முடிச்சிடணும் தோணுது” என்ற குட்டப்பன், விநோதனை பொறி வைத்து தாக்கிட திட்டம் வகுத்தான்.

அதே நேரம் அவசரக் கூட்டமாக ஆளுநர் மாளிகையில், ஆளுநர் தலைமையில் சட்டம் ஒழுங்கு மற்றும் காவல்துறை அமைச்சர் உட்பட பல முக்கிய அதிகாரிகள் அங்கு கூடியிருந்தனர்.

டிஜிபி. அவருடன் ஏசிபி விநோதன்.

டிஜிபி மரியன், விநோதன் கண்டறிந்தவைகளையும் இதில் குட்டப்பன் எந்தளவிற்கு உள்ளிறங்கி வேலை பார்க்கிறார் என்பதையும் விநோதனையே அமைச்சரின் முன் சொல்ல வைத்தார்.

“இது அனைத்தும் உண்மையா?”

சட்ட அமைச்சர் அவ்வாறு கேட்கவும். விநோதனிடம் வேடிக்கையான புன்னகை.

“உங்களுடைய கட்சி ஆள் என்பதால் இத்தனை தயக்கமா சார்?”

விநோதன் அமைச்சரிடமே அவ்வாறு பட்டென்று கேட்பானென்று டிஜிபி எதிர்பார்க்கவில்லை.

“மிஸ்டர். விநோதன்.” யாரை கேள்வி கேட்கிறாய் எனும் கண்டனப் பார்வையை விநோதனை நோக்கி வீசினார் மரியன்.

“லீவ் இட் மிஸ்டர். மரியன்” என்ற அமைச்சர், “எதிர்கட்சியாவே இருந்தாலும் நான் இதைக் கேட்டிருப்பேன் மிஸ்டர்.விநோதன். சாதாரண குடிமகனாக இருந்தாலும் இப்படித்தான். நீங்க ஆதாரங்களை சேகரித்து விட்டீர்கள் என்பதற்காக நான் குருட்டுத்தனமா நம்பிட முடியாதே” என்றவர்… “உங்களுடைய வேகம் எனக்கு புரியுது. ஐ அப்ரிசியேட் இட்” என்றார்.

“மன்னிப்பு கேளுயா?” என்று விநோதனின் காதில் மரியன் கிசுகிசுக்க.

“நான் கேட்டது எனக்கு தவறா படல. அவர் என்னை சந்தேகித்து கேள்வி கேட்டது எவ்வளவு சரியோ, அதேயளவிற்கு நான் அவரை சந்தேகித்து கேள்வி கேட்டதும் சரியே! அவர் அமைச்சர் என்பதற்காக நானும் குருட்டுத்தனமா நம்பிடக் கூடாதே” என்றவனின் பேச்சு அமைச்சருக்கு கேட்டிட, அவர் சத்தமாக சிரித்துவிட்டார்.

அதில் மரியன் தான் ஜர்க்காகினார்.

அவருக்கு கேட்க வேண்டுமென்று சற்று சத்தமாகவே சொல்லிய விநோதன் விஷமப் புன்னகையுடன் அமைச்சரைப் பார்த்திருந்தான்.

*************************

சட்டம் மற்றும் காவல்துறை அமைச்சர் என்றும் பாராது தன்னுடைய நிமிர்ந்த பார்வையில் பேசிய விநோதனை ஆளுநர் மெச்சுதலாக ஏறிட்டார்.

“உங்கப்பேச்சு… உங்களோட திமிர்… இதோ நான் அமைச்சர் என்று தெரிந்தும் எனக்கு முன்னால் அமர்ந்து என்னையே சந்தேகிக்கும் உங்களுடைய இந்த விஷமப் பார்வை… இதெல்லாம் வேலையில் நீங்க எத்தனை நேர்மையானவர்ன்னு சொல்லுது. அதோட நீங்க டீல் பண்ண கேஸஸ் எல்லாமே என் கண் பார்வைக்கு வந்தது” என்ற அமைச்சர், விநோதன் அளித்த அனைத்து ஆதாரங்களையும் ஆளுநருடன் கலந்து ஆராய்ந்துப் பார்த்தார்.

ஏற்கனவே, “குட்டப்பனின் நடவடிக்கைகள் எதுவும் சரியில்லை. அவன் போக்கால் கட்சியின் பெயர் கெட்டுவிடும்” என்ற வார்த்தைகள் சக அரசியல் ஆட்களிடம் பேச்சாகக் கிடப்பது முதல்வர் வரை அறிந்திருக்க… அமைச்சர் குட்டப்பனிடம் இத்தனை பாததூரமான செயலை எதிர்பார்க்கவில்லை.

“என்ன செய்யணும் முடிவு பண்ணிட்டிங்க தானே!”

அமைச்சர் அவ்வாறு கேட்கவும்,

“அவரை அரெஸ்ட் செய்ய நிறைய விதிமுறைகள் இருக்கே” என்றார் ஆளுநர்.

“நீங்களோ, நானோ தவறு செய்தாலும் தண்டனை விதிமுறைகள் அதன் வழிமுறைகள் என அனைத்தும் ஒன்றுதானே?” எனக் கேட்ட அமைச்சரை விநோதனுக்கு அத்தனை பிடித்தது. அமைச்சர் இளம் வயதவர் என்பதும் ஒரு காரணம். மற்றொரு காரணமும் உள்ளது. அது அவர்கள் இருவர் மட்டும் அறிந்தது.

அவர் எந்தளவிற்கு நேர்மையானவர் என்பது அவர் தன்னை ஆராய்ந்து பேசியதிலே விநோதன் கண்டுகொண்டான்.

அத்தோடு பல அரசியல்வாதிகள் மக்களுக்கு கொடுத்த தேர்தல் வாக்குறுதிகளையே நிறைவேற்றாது காலம் கடத்திட… இவரோ அனைத்தையும் வாய்ச்சொல்லில் காட்டாது செயலில் காட்டிக்கொண்டிருக்கிறார்.

தவறென்றால் யாராகா இருப்பினும் தண்டிப்பதற்கு அவர் தயங்குவதில்லை.

அதனாலேயே இதனை அவர்களது சட்டத்துறை அமைச்சரை வைத்து நடத்த வேண்டுமென தீர்மானித்துதான், மரியனை இங்கு அழைத்து வந்திருந்தான் விநோதன். அப்போதுதான் குற்றவாளி தப்பிட கட்சியின் மூலம் யாரும் உதவமாட்டார்கள் என எண்ணினான்.

விநோதன் அவரை சீண்டி பேசியதுக்கூட… அவர் அவனை சீண்டியதால் தான்.

“நீங்க பார்மாலிட்டிஸ் முடிச்சிட்டா நான் அரெஸ்ட் பண்ணிடுவேன்” என்ற விநோதனின் பார்வையில் வேறொரு பொருள்.

அதனை அமைச்சருக்கு மட்டுமே உணர்த்தினான். அமைச்சரும் புரிந்தது எனும் விதமாகக் குறிப்புக் காட்டினார்.

விநோதனும், அமைச்சரும் சமவயது உடையவர்கள் என்பதால் எளிதாக இருவரும் ஒருவரின் பார்வையின் மாற்றத்தையும், உடல்மொழியையும் எளிதாய் புரிந்துகொண்டனர். அவர்களுக்கு இடையே இருக்கும் நேர்மை எனும் பாலம் இருவரின் மன எண்ணத்தையும் இணைத்து வைத்தது. வேறொன்றும் அவர்களின் புரிதலுக்கு காரணம்.

விநோதன் அங்கு அந்த இடத்தில் தன் துறையைச் சார்ந்த டிஜிபி’யையும் நம்புவதாக இல்லை.

“ஓகே மிஸ்டர். விநோதன், இதனுடைய காப்பிஸ் உங்களிடம் இருக்குதானே?” எனக் கேட்ட அமைச்சரிடம் விநோதன் ஆமென்று கூறிட,

“அப்போ ஒரிஜினல்ஸ் என்னிடம் இருக்கட்டும்” என்றார்.

விநோதன் ஆட்சேபிக்கவில்லை.

இருக்கையிலிருந்து எழுந்தவன் வேகமாக சல்யூட் வைத்து விடைபெற்றான்.

“பய ஒரு மார்க்கமாத்தான் இருக்கான் போல…”

அதுவரை அங்கு நடைபெற்ற அனைத்தையும் அமைதியாக பார்த்துக்கொண்டிருந்த, கட்சியின் மூத்த தலைவர் மற்றும் பொதுச் செயலாளருமான ஜார்ஜ் கூறினார்.

அவரை சில நொடிகள் ஆழ்ந்து பார்த்திட்ட அமைச்சர்,

“உண்மை மறைக்கப்பட்டுவிடக் கூடாதே என்கிற எண்ணம் அவருக்கு” என்றார்.

அதில் ஜார்ஜின் முகம் விழுந்துவிட்டது.

“முதல்வரிடம் கேட்டு செய்யலாமே!” என்றார் ஜார்ஜ்.

“என் துறைச்சார்ந்த முடிவுகளை நான் மட்டுமே எடுக்க அதிகாரம் உண்டு தானே!” என்ற அமைச்சரின் குரலில் என்னயிருந்தது என்று ஜார்ஜிற்கு புரியவில்லை.

“முதலமைச்சர் என்கிற பதவி அவருக்கு நான் விட்டுக்கொடுத்தது. எப்போது நினைத்தாலும் அதனை என் கைக்கு மாற்றிக்கொள்வேன்.” அமைச்சரின் பேச்சில் ஜார்ஜ் வாயடைத்துப்போனார். ஆனால் மனதில் யோசனையோடு அமைச்சரிடமிருந்து விடைபெற்றார். (அமைச்சரின் இப்பேச்சிற்கான விளக்கம் கதையின் போக்கில் வரும்)

“சாரி சார்.”

ஆளுநரும் ஜார்ஜுடனே சென்றிருக்க… அமைச்சருடன் தனிமையை எதிர்பார்த்து காத்திருந்த மரியன் மன்னிப்பு வேண்டினார்.

அவர் விநோதனுக்காகக் கேட்கிறார் என்பது அமைச்சருக்கு புரிந்தது.

“மன்னிப்பு கேட்கும்படி விநோதன் ஒன்றும் தவறாக பேசவில்லையே மிஸ்டர்.மரியன். அப்படி தவறென்றால் நீங்கள் அவருக்காக மன்னிப்பு கேட்கும் நிலையை உருவாக்கியிருக்க மாட்டார்.” விநோதனை ஒரு சந்திப்பில் அத்தனை கணித்து வைத்திருக்கிறார் அமைச்சர் என மரியன் நினைத்தார். தவறு செய்தால், மன்னிப்பு கேட்கும் துணிச்சல் விநோதனிடம் உள்ளது என்பதையே மரியனிடம் அமைச்சர் சுட்டிக்காட்டினார்.

“ஒரே வயது என்பதால் உங்களுக்கிடையே ஒரு வேவ்லென்த் கனெக்ட் ஆகிடுச்சு போலிருக்கே சார்” என்றார் மரியன்.

“இருக்கலாம்!” என்ற அமைச்சர் எதையும் வெளிப்படையாகக் காட்டிக்கொள்ள விரும்பவில்லை.

மரியன் கிளம்பி சென்ற பின்னர் தன்னுடைய காரியதரிசி மற்றும் நண்பனுமான ஃபாசிலை அழைத்த அமைச்சர்… விநோதனின் அலைப்பேசி எண்ணை பெற்றுத்தருமாறு பணித்தார்.

அடுத்த இரண்டு நிமிடங்களில் அமைச்சரின் கைக்கு விநோதனின் எண் வந்துவிட்டது.

அமைச்சர் நினைத்திருந்தால், மரியனிடமே நேரடியாக வாங்கியிருக்கலாம். ஆனால் நடந்துகொண்டிருக்கும் செயலின் வீரியம் உணர்ந்தவரால் விநோதனைப்போல் எவரையும் நம்ப முடியவில்லை.

(அமைச்சர் இளவயதாக இருப்பினும் அவர் என்று குறிப்பிடுவது அவரது பதவிக்காக அத்தோடு உங்களுக்கு ஒரு சஸ்பென்ஸாக இருக்கட்டும் என்று தான். இனி ர், ங்க இல்லாமல் சொல்லிப்போம். அப்போது தான் விநோதன், அமைச்சர் உரையாடல் இயல்பாக இருக்கும். அப்புறம் அமைச்சர் பெயரை நம்ம விநோதனின் வாயால் தெரிந்துகொள்வோம்.)

இரவு கவிழத் தொடங்கியிருந்தது.

ஆளுநர் மாளிகையிலிருந்து விநோதன் புறப்பட்ட நேரத்தை வைத்து அவன் , காவல் நிலையமோ அல்லது அவனது குடியிருப்பிற்கோ செல்ல ஆகும் காலத்தை கணித்து அமைச்சர் காத்திருந்தார்.

விநோதன் டிரைவிங் முடித்திருப்பான் என நினைத்து அமைச்சர் அவனுக்கு அழைக்க அலைப்பேசியை கையிலெடுத்த சமயம், சற்று நேரத்திற்கு முன்பு அவர் சேமித்து வைத்த விநோதனின் எண் திரையில் மின்னி ஒலித்தது.

அட்டெண்ட் செய்தவன்…

“சொல்லுங்க மிஸ்டர்.விநோதன் ஏசிபி” என்றிட…

“என்னடா சொல்லணும்” என்று விநோதன் கேட்டதில் அமைச்சரின் இதழ் விரிந்தது.

“ஹப்பாடா… இப்போதாண்டா உயிர் வருது” என்ற அமைச்சர், “ரொம்ப மரியாதையா, என்னை பார்த்து முறைச்சிகிட்டே பேசுனியா… எங்கு என்னை மறந்துட்டியோன்னு நினைச்சேன்” என்றார்.

“சாரி… சாரி… இப்போ நீங்க என் பிரண்ட் யது இல்லல… சட்ட அமைச்சர் யதுநந்தன்.”

“ஹேய்… என்னடா?” யதுவிற்கு அவனின் கோபம் பிடிக்கவில்லை.

“பின்ன என்னடா அஞ்சு வருஷத்துக்கு முன்ன அப்பாவுக்கு உடம்பு சரியில்லன்னு சொல்லிட்டுப்போன. திரும்பி வரவேயில்லை. இங்கு வந்தா… மினிஸ்டர் சீட்டில் நீ. சந்தோஷம் தான். ஆனால் பார்த்ததும் உன்னை சப்புன்னு அறையனும் தோணுச்சு. கவர்னர், டிஜிபின்னு இருந்ததால தப்பிச்ச. தனியா மாட்டுடா, இருக்கு உனக்கு.”

எத்தனை வருடங்கள் ஆயிற்று. இருவரும் இப்படி உரிமையாக சண்டையிட்டு. அதுவும் இப்போது யதுவிற்கு இருக்கும் ஒரே உறவு அவனது நட்பு மட்டும் தான். அது மீண்டும் கிடைத்ததில் அத்தனை மகிழ்ச்சி அவனுக்கு.

விநோதனும், யது நந்தனும் கல்லூரி நண்பர்கள். இளங்கலை மற்றும் முதுகலை கிரிமினாலஜி என நான்கரை வருடம் ஒன்றாக துணைக்குத் துணையாய் இருந்தவர்கள். இவர்கள் நட்பு வட்டத்தில் இவர்கள் மட்டுமே. ஏன் எதற்கு என்று தெரியாமல் இறுதி வருட படிப்பை பாதியில் விட்டுவிட்டு யது சென்றிட, விநோதனுக்கு யாரையும் யதுவின் இடத்தில் நண்பர்களாக வைத்து பார்க்க பிடிக்கவில்லை. யது நந்தன் குடும்பத்தைப்பற்றி அவ்வளவாக சொல்லியதில்லை என்பதால், விநோதனுக்கு அவனை கண்டுபிடிக்கும் மார்க்கமும் இல்லாமல் போனது.

யது அவனது அடையாளம் மறைத்து இருந்ததற்கு காரணம் உள்ளது.

தன்னுடைய சந்தோஷத்திலும், துக்கத்திலும் நண்பனாக யதுவை வெகுவாய் தேடிய விநோதனுக்கு, அவன் உடனில்லா நாட்கள் நட்பின் பக்கத்தை வலிக்க வைத்தவை. அதனால் வந்த கோபமே விநோதனிடம்.

“அதனால் தான் என்னை சீண்டி பேசுனியா?”

“நீ மட்டும்.”

“டேய் போதும்டா…” என்ற யது நந்தன், “நீ டூயூட்டியில் ஜாயின் பண்ணதுமே உன்னை தெரிஞ்சிக்கிட்டேன். நான் ஒரு ஆளை அழைத்து பேசினால், அது இங்கு பல பேரால் கவனிக்கப்டும். என்னோட பதவி அப்படி. நீயா வருவன்னு தெரியும். ஆனால், இப்படியொரு கேஸ் மூலமா சந்திப்போம் நினைக்கல” என்றான் யது நந்தன்.

யது வழக்கைப்பற்றி சொல்லியதும் விநோதனிடம் அமைதி.

“ஆமாம் என் பெர்சனல் நெம்பர் உனக்கெப்படிடா?”

“உன் பிஏ எல்லாரையும் நம்பிடுவார் போலடா… நீதான் உன் நெம்பர் வாங்கிக்க சொன்னேன்னு கேட்டான். கொடுத்திட்டான்” என்றான் விநோதன்.

“ஃபாஸில் அப்படிக்கிடையாதே…” என்று இழுத்த யது…

“ஹோ… அவன் என் ரூமில் மாட்டியிருக்கும் போட்டோவில் உன்னை பார்த்திருப்பான். அதான் தைரியமாக் கொடுத்திருக்கான்” என்றான் யது.

“கூட இல்லாம ஃபோட்டோ மாட்டிவச்சா அப்படியே உன் நட்பில் நான் நெகிழ்ந்திடுவேனா? போடா!” விநோதன் விடுவதாக இல்லை.

“அதான் எங்கையும் போகவுடமாட்டேங்கிறாங்களே! மினிஸ்டர்ங்கிற பெயரில் எப்பவும் அரெஸ்ட் ஆன ஃபீல் தாண்டா… சுத்தி நாலு கருப்பு சட்டையில் எந்நேரமும் உடனிருக்க… எங்க போய் சுத்துறது. என் ரூமில் மட்டும் தான் நான் நானா இருக்கேன். அதனாலேயே பாசில் தவிர்த்து யாரையும் ரூமில் அலோவ் பண்ணுறது கிடையாது. பதவி, புகழ் எல்லாம் நம்ம சுதந்திரத்தையும் சேர்த்து பறிச்சிடுதுடா. உன்னோட ஹாஸ்டல் சுவர் தாண்டி குதித்து, நைட் சினிமா பீச்சுன்னு சுத்தினது தான் கடைசி.” வருத்தமாக சொல்லிக்கொண்டிருந்தவன் இறுதியில் மென்மையாக குரலை மாற்றியிருந்தான்.

“என்னடா மலரும் நினைவுகளா?” எனக்கேட்ட விநோதன், “வாய்ல நல்லா வருது. அம்மா கையால் எத்தனை நாள் சாப்பிட்டிருப்ப… அவங்ககிட்டவாவது பேசணும் தோணிருக்காடா உனக்கு? இப்போவரை யதுவ பற்றி எதாவது தெரிஞ்சுதான்னு கேட்டுக்கிட்டே இருக்காங்க!” என்றவன்,

“துருவ் இப்போ வந்துப்போனப்போ… யதுண்ணாவை பார்க்கவே முடியாதான்னு கேட்கிறான். நீ நினைச்சிருந்தா, என்னை எப்படியும் பார்த்திருக்கலாம். ஜாயின் பண்ணதும் நம்ம துறை அமைச்சராச்சே, அவரைப்பற்றி தெரிஞ்சிக்கலான்னு பெயர் கேட்டால் உன் பெயர். ஒரு நொடி யோசனையாச்சு தான். நீ உன் ஊர் கேரளான்னு சொல்லியிருக்கியே! உன் தாத்தாவும் அரசியலில் இருந்தாருன்னு சொன்ன நினைவு. இருந்தாலும் இந்த பெயரில் நீ மட்டும் தானா? அதனால நெட்டில் உன் முகத்தை சர்ச் பண்ணிப்பார்க்கணும் தோணல” என்று நீண்டு பேசினான்.

“நான் எதையும் சொல்ல முடியாத சூழலில் இருக்கேன் விநோ. இப்பவும் இவ்வளவு நேரம் உன்னோட பேசுறதையே யாராவது கவனிக்கலாம்” என்றான் யது.

அதன் பின்னரே அவனின் ‘பதவி’ விநோதனிற்கு நினைவு வந்தது.

“திரும்ப இதைப்பற்றி பேசமாட்டேன்” என்ற விநோதன்,

“பாசில் நம்பலாமா?” எனக் கேட்டான்.

“ஹேய் விநோ… அவன் என் ஃபிராண்டுடா!”

“அப்போ நான் யாருடா?”

விநோதன் பட்டென்று கேட்க, யது நெகிழ்ந்துவிட்டான்.

“என் விநோவோட இந்த உரிமை எப்பவும் மாறாது.” தனக்குள் சொல்லிக்கொண்டவனாக வெளியில் மலர்ந்து சிரித்தான் யதுநந்தன்.

Click on a star to rate it!

Rating 4.9 / 5. Vote count: 11

No votes so far! Be the first to rate this post.

இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
0
+1
11
+1
1
+1
0

உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள்