Loading

அத்தியாயம் 31

 

அறுவரையும் பிரிஸம் டவர்ஸிற்கு நொடிப்பொழுதில் அழைத்து வந்திருந்தான் இன்பசேகரன்.

 

“பரவாலையே இன்பா, இந்த டைம் சரியா இறக்கி விட்டுட்ட.” என்ற சுடரொளி திரும்பிப் பார்க்க, அங்கு அவர்களை நோக்கி ஆயுதங்களை ஏந்திய ஒரு படையே காத்திருந்தது.

 

அதைத் கண்டவளோ, “அடப்பாவி, இப்படி சிக்க வச்சுட்டியே!” என்று புலம்ப, “லாஸ்ட் டைமும் இப்படித்தான் ஆச்சு.” என்று உதட்டைப் பிதுக்கினாள் யாழ்மொழி.

 

“ப்ச், சும்மா அரட்டை அடிக்காம கவனமா இருங்க.” என்று இன்பசேகரன் கூற, பெண்கள் இருவரும் அவனை முறைத்தனர்.

 

இந்த இடைவேளையில், யுகேந்திரனும் மதுசூதனனும் பார்வையை பரிமாறிக் கொண்டு, அடுத்த நொடி எதிரிகளை நோக்கி அவர்களின் சக்தியைப் பிரயோகித்தனர்.

 

மதுசூதனன் சிலரின் ஆயுதங்களைத் தூக்கி எரிய, யுகேந்திரன் வேறு சிலரின் மூளையைக் கட்டுப்படுத்தி, அவர்களை அவர்களே தாக்கச் செய்தான்.

 

அவர்களைக் கண்ட இன்பசேகரனும், அவனின் சக்திகளைப் பிரயோகித்து, நொடியில் எதிரியின் முன்பு தோன்றி, ஒரே குத்தில் அவனை மண்ணைக் கவ்வச் செய்திருந்தான். இதையே மற்றவர்களிடமும் செய்து கொண்டிருந்தான்.

 

அதைக் கண்ட சுடரொளியோ, அவள் பங்கிற்கு மறைந்து நின்று மற்றவர்களைத் தாக்கத் துவங்கினாள்.

 

இப்படி நால்வரும் அந்தக் காவலாளிகளைச் சமாளிக்க, அதைத் தள்ளி நின்று பார்த்துக் கொண்டிருந்தனர் மொழி சகோதரிகள்.

 

அப்போது யாழ்மொழிக்கு ஏதோ சத்தம் கேட்க, உன்னிப்பாக அதைக் கவனித்தவளோ, “மொழி, அகரன் உள்ளதான் இருக்கான். அவன் ஆபத்துல இருக்கான்னு நினைக்கிறேன். அவன் கத்துற சத்தம் எனக்குக் கேட்குது.” என்று பதற்றத்துடன் கூற, மென்மொழியும் பரபரப்பானாள்.

 

“யாழ், உனக்கு அந்த சீக்ரெட் ரூமோட வழி தெரியும்ல? உள்ள நுழையுறதுக்கும் உன்னால ஹெல்ப் பண்ண முடியும்தான? வா, நாம போய் அகரனோட சேர்த்து அம்மாவையும் அண்ணியையும் காப்பாத்தலாம்.” என்று மென்மொழி கூற, அவளைச் சந்தேகமாகப் பார்த்தாள் யாழ்மொழி.

 

அவளின் பார்வையிலேயே கேள்வி புரிந்தவளாக, “இது சாத்தியமான்னு எனக்கும் தெரியல. ஆனா, நாம நேரம் கடத்த கடத்த, உள்ள அகரனோட நிலைமை இன்னும் மோசமாகலாம். நாம முதல்ல போவோம், மத்தவங்க இதை முடிச்சுட்டு நம்ம கூட ஜாயின் பண்ணிப்பாங்க.” என்று உடன் பிறந்தவளிடம் கூறிய மென்மொழி, அவளையும் அழைத்துக் கொண்டு முன்னேறினாள்.

 

செல்லும் வழியில் யுகேந்திரனை நோக்கியவள், அவளின் திட்டத்தை மனதில் நினைத்துக் கொண்டாள்.

 

அவனிற்குத்தான் அவளின் மனம் அத்துப்படி ஆகிற்றே!

 

“மொழி, எங்க போற? நில்லு…” என்று யுகேந்திரன் கத்த, அவனின் நொடி நேர தடுமாற்றத்தைப் பயன்படுத்திக் கொண்ட, அவனிடம் சிக்கியிருந்த காவலாளிகள், அவனைத் தாக்க முற்பட, இன்பசேகரன் இடையில் வந்து அவர்களின் தாக்குதலைத் தடுத்ததோடு, எதிர் தாக்குதலைப் புரிந்து அவர்களை வீழ்த்தியிருந்தான்.

 

மீண்டும் சிலர் ஆண்களைத் தாக்க வர, பெண்களை அவர்கள் கண்டு கொள்ளவில்லை.

 

அதன் காரணமாக, மென்மொழியும் யாழ்மொழியும் படிகளில் ஏறி, அந்தக் கட்டிடத்திற்குள் நுழையும் தருவாயில், திடீரென்று தூக்கியெறியப் பட்டனர்.

 

அவர்களின் நிலையைக் கண்ட மதுசூதனன் காற்றில் மிதந்தவர்களைக் காயம் எதுவும் ஏற்படாமல் கீழே இறக்க முயற்சிக்க, அத்தனை சக்தி அப்போது அவனிடம் இருக்கவில்லை.

 

எப்போதும் அதிகமான சக்தியை அவன் பயன்படுத்தும் போது, அவனது நரம்புகள் புடைத்து கருநிறமாக மாறுவதைப் போல, இப்போதும் நடக்க, அவன் சுருண்டு விழுந்து விட்டான்.

 

அந்தக் கட்டிடத்தை சுற்றி எழுப்பப்பட்டிருக்கும் சுவருக்கு மேல் இருக்கும் கம்பி வேலிகளில், சகோதரிகள் இருவரும் மோதவிருந்த இறுதித் தருணத்தில், இன்பசேகரன் இருவரையும் பிடித்துக் கொண்டு காற்றில் மறைந்து தரையில் விழுந்திருந்தான்.

 

மூவருக்கும் பெரிதாக அடிகள் இல்லை. சில ரத்தக்காயங்களுடன் தப்பித்திருந்தனர்.

 

அங்கு வந்த யுகேந்திரனும் சுடரொளியும் மூவரும் எழ உதவி செய்தபடி, அவர்களின் நலனை விசாரித்தனர்.

 

அப்போது மென்மொழியிடம், “யாரு உங்களை அட்டாக் பண்ணது?” என்று யுகேந்திரன் வினவ, அதற்குப் பதில் சொல்வதற்குள், யுகேந்திரனின் பின்புறம் பார்த்த மென்மொழியின் விழிகள் அதிர்ச்சியில் விரிய, அதற்கானக் காரணத்தை அவளின் விழி வழியே பார்த்த யுகேந்திரன், கடைசி நிமிடத்தில் அவளையும் இழுத்துக் கொண்டு குனிய, அவர்களைத் தாண்டி சென்று விழுந்தது நெருப்புப் பந்து ஒன்று.

 

அதைக் கண்ட ஐவரும் தாக்குதல் தோன்றிய இடத்தை நோக்க, அங்கு செந்நிறக் கல்லுடன் நின்றிருந்தாள் பெண்ணொருத்தி!

 

அவளுடன், கருநீலம், நீலம், பச்சை, சிவப்பு ஆகிய கற்களிற்குச் சொந்தக்காரர்களும் அவ்விடத்திற்கு வந்து சேர்ந்தனர்.

 

அவர்களில் கருநீலக் கல்லைக் கொண்டிருந்தவனைச் சுட்டிக்காட்டிய யாழ்மொழி, “அவன்தான் எங்களைத் தூக்கி எரிஞ்சது.” என்று கூற, அவனிற்குக் காற்றைக் கட்டுப்படுத்தும் சக்தி இருப்பதை உணர்ந்தனர் மற்றவர்கள்.

 

“இப்போ என்ன பண்றது? அவங்க அஞ்சு பேர், நாம அஞ்சு பேர்… ஆமா, மது எங்க?” என்று சுடரொளி வினவ, “மதுவோட பவர்ஸ் எல்லாம் டிரெயினாகிடுச்சு. எங்கயாவது சேஃபான இடத்துல இருப்பாருன்னு நம்புறேன்.” என்றான் யுகேந்திரன்.

 

“சரி, இப்போ நம்ம பிளான் என்ன? அவங்க கிட்ட இருக்குறது எல்லாமே அஃபென்ஸிவ் பவர்ஸ். நம்ம கிட்ட இருக்குறது டிஃபென்ஸிவ் பவர்ஸ். எப்படி இவங்களை எதிர்க்கப் போறோம்?” என்று மென்மொழி வினவ, “அவங்க அவங்களோட ஸ்திரேந்த்தை காட்டுனா, நாம நம்மளோடதைக் காட்டுவோம். ஒண்ணா இருக்குறதுதான் நம்ம பலம். எப்பவும் அவங்களைத் தனியா எதிர்க்காதீங்க.” என்றான் யுகேந்திரன்.

 

“இது எவ்ளோ தூரம் ஒர்க்கவுட்டாகும் போலீஸ்கார்?” என்று சுடரொளி கேட்டுக் கொண்டிருக்கும் போதே எதிரிலிருந்தவர்கள் அவர்களின் தாக்குதலைத் துவங்கி இருந்தனர்.

 

இம்முறை நீல நிறக் கல்லைக் கொண்டவள் வெளிச்சத்திலிருந்து கூர்மையான முனைகள் பலவற்றைக் கொண்ட பெரிய இரும்பு பந்து ஒன்றை உருவாக்கி அதை ஐவரையும் நோக்கிச் செலுத்த, இன்பசேகரன் சற்றுத் தள்ளி தரையோடு ஊன்றப்பட்டிருந்த இரும்பு மேஜையை அவனின் அசாத்திய பலத்தின் மூலம் தூக்கி எதிர்வரும் பந்தை நோக்கி வேகத்துடன் எரிய, அது அந்த பாறையுடன் மோதி அதனை வீழ்த்தியதோடு நிற்காமல், எதிரிகளின் மீது மோதப் போக, பச்சை நிறக்கல்லிற்குச் சொந்தக்காரன் அவனின் சக்தியைப் பயன்படுத்தி, அந்த மேஜையைத் தரையில் விழச் செய்திருந்தான்.

 

அவனின் சக்தி ஈர்ப்பு விசையைக் கட்டுப்படுத்துவது என்பதால், அந்த மேஜை வந்து கொண்டிருந்த இடத்திலிருந்த ஈர்ப்பு விசையை அவன் நிக்கியிருக்க, அந்த மேஜை செங்குத்தாக கீழே வந்து தரையில் மோதி நெளிந்திருந்தது.

 

அந்த மேஜையின் நிலையே, அவனின் சக்தியை எடுத்துக்காட்டப் போதுமானதாக இருக்க, சுடரொளியோ எச்சிலை விழுங்கியபடி, “இந்தச் சண்டை சாதாரணமா இருக்கப் போறதில்ல.” என்றாள்.

 

அப்போது யுகேந்திரன் இன்பசேகரனிற்குக் கண்ணைக் காட்ட, அவனும் மற்றொரு மேஜையை முதலில் எரிந்ததைப் போலவே எரிய, அவர்களை ஒரு கேலிச் சிரிப்புடன் பார்த்தபடி, முன்போலவே அந்த மேஜையைக் கீழே மோதச் செய்தான் அந்தப் பச்சைக் கல்லைப் பெற்றிருந்தவன்.

 

அந்த இடைவெளியை பயன்படுத்திக் கொண்ட ஐவரும், சுடரொளியின் உதவியுடன் அங்கிருந்து மறைந்து போயினர்.

 

அதே சமயம், சிவப்பு நிறக்கல்லிற்குச் சொந்தக்காரனோ, அவன் நின்றிருந்த இடத்திற்கு கீழே இருந்த நிலத்திற்குள் புகுந்து, ஐவர் நின்றிருந்த இடத்திற்கு வருவதற்கும், அவர்கள் மறைவதற்கும் சரியாக இருந்தது.

 

அதை எதிர்பார்க்காத எதிரிகள், நொடியில் ஏமாற்றி விட்டவர்களின் மீதான கோபத்துடன், ஐவரும் முன்பு நின்றிருந்த இடத்தை நோக்கி அவர்களின் சக்திகள் கொண்டு தாக்கினர்.

 

ஆனால், அவர்கள் எப்போதோ அந்த இடத்திலிருந்து வேறு இடத்திற்குச் சென்று விட்டனர் என்பதைத் தாமதமாகவே புரிந்து கொண்டனர்.

 

அங்கிருந்து மறைந்த ஐவரும், பிரிஸம் டவர்ஸை ஒட்டியிருந்த ஒரு மறைவிடத்தில் தோன்றினர்.

 

ஏற்படவிருந்த ஆபத்தைக் கடந்த சிறு நிம்மதியை பெருமூச்சை விட்டு வெளிக்காட்டினர் ஐவரும்.

 

அப்போது மென்மொழி, “இன்பா, நீ ஏற்கனவே அந்த சீக்ரெட் ரூமுக்கு டெலிபோர்ட்டாகி இருக்கேல… இப்போ எங்களைத் திரும்ப அங்க கூட்டிட்டுப் போ.” என்று கூற, “நான் அதுக்குத்தான் டிரை பண்ணேன் மொழி. ஆனா, என்னால முடியல. அங்க ஏதோ ஒண்ணு என்னோட பவரை எதிர்க்குற மாதிரி… என்னால சரியா சொல்ல முடியல. ஆனா, உள்ள வேற ஏதோ சக்தி இருக்கு.” என்றான் இன்பசேகரன்.

 

“அகரன்… அவன் உள்ளதான இருக்கான். அந்த பிளாக் கலர் சக்தியாலதான் உன்னால நுழைய முடியலையா இன்பா?” என்று யாழ்மொழி வினவ, “இல்ல… இது அந்தக் கருப்பு சக்தியால இல்ல. அது நம்மளை அதோட கட்டுப்பாட்டுக்கு கொண்டு வர முயற்சிக்கும். இது அது மாதிரி இல்ல. ஜஸ்ட் நம்ம பவரைத் தடுக்குது… லைக் ரிப்பல் பண்ற மாதிரி! இந்தப் புது பவரை இதுக்கு முன்னாடி நாம உணர்ந்தது இல்லன்னு நினைக்கிறேன்.” என்றான் இன்பசேகரன் குழப்பத்துடன்.

 

“இதென்ன புது பவர்? நம்ம சக்தியை ரெசிஸ்ட் பண்ற பவர்! முதல் செட் கற்களோட பவரை அந்த வீடியோ மூலமா நாம ஏற்கனவே பார்த்துட்டோமே.” என்று சுடரொளி கூற, “அந்த முதல் செட்ல இருந்து அஞ்சு கற்களைத்தான் இப்போ நாம எதிர்த்தது. எல்லோ கலர் கல்லு மிஸ்ஸிங்!” என்றான் யுகேந்திரன்.

 

“அப்படியே பார்த்தாலும், எல்லோ கலர் கல்லுக்கு டெலிகைனனிஸ் பவர்னுதான வீடியோல பார்த்தோம்.” என்று சுடரொளி கூற, “ஒருவேளை, நம்ம கிட்ட இருக்க மாதிரியே அந்தக் கல்லுக்கும் செகண்ட்ரி பவரா இது இருக்கலாம்.” என்றாள் மென்மொழி.

 

“சரி, இப்போ எப்படி அந்தக் கில்லர் கேங்கை மீறி நாம உள்ள போறது? சுடர் கிட்ட இருக்கப் பவரை வச்சு போலாமா?” என்று யாழ்மொழி வினவ, “மறைஞ்சு போறது எல்லாம், அந்த பில்டிங் கதவு வரைதான் பாசிபில். அதுக்கப்புறம், உள்ள இருக்க புது பவரால நாம மாட்டிக்க சான்ஸ் நிறைய இருக்கு.” என்றாள் சுடரொளி.

 

“பவர் ஒர்க்காகாம போறது நமக்கு மட்டுமா… அவங்களுக்கும்தான?” என்று வினவினான் இன்பசேகரன்.

 

“சோ, நம்ம ரெண்டு குரூப்புக்கும் பவர்ஸ் ஒர்க்காகாது. அதைப் பயன்படுத்தி அவங்களை டம்மியாக்கிட்டு நாம உள்ள போகலாம்னு சொல்றியா?” என்று சுடரொளி வினவ, “ஹ்ம்ம், அதோட நாம அந்த வீடியோல பார்த்தபடியே இப்பவும் நிலைமை இருந்தா, அவங்களால அந்தக் கற்களோட சக்தியை ரொம்ப நேரம் தாக்குப் பிடிக்க முடியாது. சோ, கண்டிப்பா அவங்க டையர்ட்டாதான் இருப்பாங்க.” என்றான் இன்பசேகரன்.

 

அதை மறுத்த யுகேந்திரனோ, “அப்படி நம்மளா அஸ்யூம் பண்ணி மூவ் பண்ணக் கூடாது இன்பா. எப்படியோ அவங்களை சமாளிச்சுட்டு உள்ள போனாலும், அங்க நிலைமை எப்படி இருக்கும்னு நமக்குத் தெரியாது. பவர்ஸ் இல்லாம நம்மளால அங்க சமாளிக்க முடியுமான்னும் நமக்குத் தெரியாது.” என்றான்.

 

“இன்னும் எவ்ளோ நேரம் இப்படியே பேசிட்டு இருக்கப் போறோம்? உள்ள அகரனுக்கு என்னாச்சுன்னு வேற தெரியல.” என்று சற்றுப் பதற்றத்துடன் கூறினாள் மென்மொழி.

 

அப்போது யாழ்மொழியும், உள்ளே என்ன நடக்கிறது என்பதைக் கேட்க முயன்று தோல்வியைத் தழுவியிருந்தாள்.

 

“ப்ச், இந்நேரம் மது இருந்துருந்தா பவர் சென்சிங் மூலமா உள்ள இருக்குறது என்ன பவருன்னாவது கண்டு பிடிச்சுருக்கலாம். பவர் சென்சிங் ஆளையே காணோம்னா, அவரை எங்கன்னு சென்ஸ் பண்ணி கண்டு பிடிக்குறது?” என்று சலித்துக் கொண்டாள் சுடரொளி.

 

அவளின் சலிப்பிற்குக் காரணமானவனோ, பிரிஸம் டவர்ஸின் அடித்தளத்தில், பிரேம் ரத்தோரின் முன்பு தோரணையாக நின்றிருந்தான்.

 

தொடரும்…

Click on a star to rate it!

Rating 4.5 / 5. Vote count: 11

No votes so far! Be the first to rate this post.

இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
2
+1
8
+1
2
+1
2

உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள் 

1 Comment

  1. Hi mam, did you completed this story or continuing in some other site. I can read only upto chapter 31. Please tell me where to find the remaining chapters