Loading

தழல் 37:

வீட்டின் பின்புறமிருந்த சிறு தோட்டத்தில் நின்றிருந்தாள் அவள். நேற்றைய மழையின் சுவடுகள் இன்னும் மிச்சமிருந்தது. இலைகளெல்லாம் புது பச்சை வர்ணம் பூசிக் கொண்டதைப் போல் பளீரென மின்னின. மண்ணில் கோர்த்து நின்ற ஈரம் வெற்றுப் பாதத்தின் வழி அங்கமெல்லாம் பரவி புது ரத்தம் பாய்ந்ததைப் போல தெம்பூட்டியது.

வரிசையாய் பல வண்ண ரோஜா செடிகள் கண்ணைப் பறித்தது. அத்தனையும் மொட்டும் பூவுமாய் பூரித்து நின்றது.  இலைகளையும் மொட்டுகளையும் வருடியவள் மனதிற்கு வெகு இதமான உணர்வு. நிரந்தரமான சிறுநகை ஒன்று அவளின் இதழ்களை அலங்கரித்தது. மெல்லிய கீரல்களை உண்டாக்கிய சிறு முட்கள் கூட ஏதோ ஒரு வகையில் மனதின் காயத்தை மயிலிறகால் வருடுவதைப் போல் இதமாய் இருந்தது.

மஞ்சள் ரோஜாக்களை மட்டும் சற்றே  நீளமான கம்புடன் இலைகளுடன் சேர்த்து வெட்டி கையிலிருந்த கூடையில் அடுக்கிக் கொண்டிருந்தாள் ஆரா.

“எவ்வளவு நேரமா பூ பறிப்ப… கொசு கடிக்கலையா உன்னை… பறிச்ச வரைக்கும் போதும் உள்ள வா ஆரும்மா…” உள்ளிருந்த படியே சத்தத்தை மட்டும் வெளியில் அனுப்பினார் பர்வதம்.

“இதோ ம்மா…” என்றபடியே மற்றவற்றை வேக வேகமாய் பறித்துக் கொண்டவள், கால்களை சுத்தபடுத்திக் கொண்டு உள்ளே நுழைந்தாள்.

அவள் கையிலிருந்த கூடையைப் பார்த்தவர், “இலையாவது செடியில இருக்கா..?” என்றார் கேலியாய்.

“அம்மா…” என்றாள் மகள் சிணுங்களாய்.

மலர்ந்திருந்த மகளின் முகத்தை நிறைவாய் பார்த்திருந்தார் அவர். என்னவோ மகளின் வாழ்வில் எல்லாமே சரியாகிவிட்ட உணர்வு. நேற்றைய இரவு அவருமே வேந்தனை தொடர்ந்து கொஞ்ச நேரத்தில் ஆராவை தேடிச் சென்றிருந்தார். இவரையும் இணைந்துக் கண்டவருக்கு அப்படியொரு நிம்மதி. சத்தமில்லாது திரும்பிவிட்டார். வேந்தனை தவிர யாருமே அவளுக்கு பொருத்தமில்லை என்பதில் அப்படியொரு திண்ணம். வள்ளியம்மை ஒருவர் போதாதா அந்த எண்ணத்திற்கு வலு சேர்க்க.  அவன் மட்டுமல்ல அந்த குடும்பமே அவளை என்னமாய் கொண்டாடும் என்று நித்தம் நித்தம் கண்கூடாய் பார்த்துக் கொண்டுதானே இருக்கிறார்.

பறித்து வந்திருந்த மலர்களை ஒன்றாய் சேர்த்து அழகிய மலர்செண்டாய் உருவாக்கினாள் அவள். மகளின் செய்கைகளில் கண்ணைப் பதித்தபடியே மருத்துவமனைக்கு செல்ல தேவையான பொருட்களை எடுத்து வைத்துக் கொண்டிருந்தார் பர்வதம்.

அந்த மலர்செண்டை கரங்களில் ஏந்தி தூர பிடித்துப் பார்த்தவளின் புன்னகை அந்த பூக்களைப் போலவே விரிந்து மலர்ந்தது.

“லேட்டாகுது ஆரா… சீக்கரம் குளிச்சுட்டு கிளம்பி வாம்மா…” என்றார் பர்வதம் அவளை களைத்து.

அதை அப்படியே வைத்துவிட்டு அவசர அவசரமாய் கிளம்பி வந்தவளின் முகத்தில் வாடாத புன்னகை. அடுத்த சில நிமிடங்களில் தாயும் மகளுமாய் தேவையான பொருட்களையும் எடுத்துக் கொண்டு மருத்துவமனைக்கு கிளம்பி இருந்தனர்.

அறக்கட்டளையை அடைந்த நொடி முதல் அவளின் பார்வை வேந்தனுக்காக தான் அலைப்பாய்ந்தது. அவனை காணவில்லை என்றதும் சட்டென்று ஒரு ஏமாற்றம் மனதில் பரவியது.

‘சே… மணி இன்னும் எட்டுக்கூட ஆகலை… அதுக்குள்ள எப்படி வருவார்… நீ ரொம்ப எதிர்பாக்கற ஆரா…’ என்று தன்னை தானே கடிந்துக் கொண்டபடியே, அமுதன் இருந்த அறையை நோக்கி விரைந்தாள் அவள். வேந்தன் சொன்னதுப் போல, அமுதனின் பாதுகாப்பிற்கென இரண்டு காவலர்கள் நின்றிருந்தனர். போதாதற்கு அறக்கட்டளையின் பாதுகாப்பையும் அதிகப்படுத்தி இருந்தான் அவன்.

அறைக்கு வெளியிலேயே சோகமாய் அமர்ந்திருந்தான் அறிவு. இரண்டு நாட்களாய் சரியான உறக்கம் உணவு இல்லாததால் அளவுக்கு அதிகமாகவே அவனிடம் சோர்வு தெரிந்தது. அவன் அப்படி சொல்லிவிட்டு வந்நபின் இவனும் திலகத்தை அழைத்துப் பேசவில்லை. அவரும் இவனுக்கு அழைத்துப் பேசியிருக்கவில்லை. குறைந்தபட்சமாய் பேரனை பற்றிக்கூட விசாரிக்கவில்லை என்பது அவனை வெகுவாய் தளர்த்தியிருந்தது.

இவர்களை கண்ட மாத்திரத்தில் சின்னதாய் ஒரு புன்னகை அரும்பியது. ஆறுதலான ஒரு பாவம் முகத்தில். இவர்கள் தான் இனி அவனின் குடும்பம் என்ற எண்ணம் இன்னுமே வலுப்பட்டது. அவனும் பர்வதமும் பேசியபடியே உள்ளே நுழைந்துவிட, தயங்கியபடி வாசலிலேயே நின்றுவிட்டாள் ஆரா.

ஒரு சில நிமிடங்கள் தயங்கி, ஆழ மூச்செடுத்து தன்னை நிலைப்படுத்திக் கொண்டு உள்ளே நுழைந்தாள் ஆரா. நிறம் மங்கிய ஓவியமாய், வாடிய சிறு மொட்டாய் படுக்கையில் கிடத்தபட்டிருந்தான் அமுதன். சட்டென்று விழிகளில் கண்ணீர் துளிர்க்கப் பார்த்தது அவளுக்கு.

எதிலும் திடமாய் நிமிர்ந்து நிற்பவள், அவள் நேசிப்பவர் என்று வரும் பட்சத்தில் மட்டும் அதிகம் உடைந்துப் போய் விடுகிறாள். இப்படியான பலகீனம் அவளுக்கு புதிது. தந்தையின் இறப்பிற்கு பிறகு இப்படியான ஒரு சூழலில் அவள் நின்றதேயில்லை. அதனாலேயே முதன்முறை அதை எதிர்கொள்ளும் போது அதிகம் உடைந்துப் போகிறாள் அவள்.

அவனின் அருகே கட்டிலில் அமர்ந்தவள், கேசம் ஒதுக்கி நெற்றியில் அழுந்த முத்தமிட்டாள். முதன் முறையாய் அவனைப் பரிசிக்கிறாள், அவனை முத்தமிடுகிறாள். தாய்மையில் கனிந்துப் போனது அவளுள்ளம். அவனின் தலைமுடியை கோதியபடியே அப்படியே அமர்ந்து விட்டவளின் புன்னகை நிலைத்துப் போயிருந்தது.

முகம் கழுவி துடைத்தபடியே வெளியே வந்த கனிக்கும் அந்த காட்சியை பார்த்து மனம் நிறைந்துப் போனது. அவள் வெளியே வருவதைக் கண்ட பர்வதம் தேனீரை குவளையில்  அமுதனுக்கு அருகிலிருந்த நாற்காலியில் அமர்ந்துக் கொண்டவள் மௌனமாய் தேனீரைப் பருகத் தொடங்கி இருந்தாள்.

‘என்னிடம் பேசு… பேசு…’ என அவளையே சுற்றி சுற்றி வந்தவள் அதரங்கள், இப்பொழுது ஒரு வார்த்தையைக் கூட உதிர்க்கவில்லை. இத்தனையும் உன்னால் தான் இப்படி என்ற குற்றசாட்டில்லை. இப்பொழுது எப்படி இருக்கிறாய் என்ற உருகலில்லை. ஏன் நேற்றே வரவில்லை என்ற கேள்வியில்லை.  எதுவுமேயில்லை. அமைதியாய் ஆராவின் முகத்தை மட்டுமே பார்த்தபடி இருந்தாள் அவள்.

அவள் ஏதாவது கேட்டால் கூட பரவாயில்லை என்றிருந்தது ஆராவுக்கு. சங்கடமாய் அடிக்கடி அவள் முகம் பார்த்தாள் எதாவது கேட்பாளா என்று. ம்ம்கூம்… அவள் வாயை திறக்கும் வழியையேக் காணும்.

எச்சிலை கூட்டி விழுங்கியபடியே, அமைதியாய் கட்டிலின் மீதிருந்த ரோஜா மலர்செண்டினை அவளின் பக்கம் நகர்த்தி வைந்தாள் ஆரா. கேள்வியாய் ஏறிக்கொண்டது கனியின் புருவங்கள். அதன் அர்த்தம் அறிந்தவளுக்கு சட்டென்று ஏற்றுக் கொள்ளதான் முடியவில்லை. அதை தொட்டுக்கூட பாராமல் கைகளைக் கட்டிக் கொண்டு உணர்வு துடைத்த முகத்துடன் இறுக்கமாய் அமர்ந்திருந்தாள் கனி.

மஞ்சள் ரோஜாக்கள் நேசத்திற்கு உரியவர்களை காயப்படுத்திவிடும் பட்சத்தில், உருக்கமான, உளமார்ந்த மன்னிப்பை யாசிக்கின்றன. மலர்களோடு சேர்த்து ஆராவின் விழிகளுமே அவளிடம் மன்னிப்பிற்காக இரஞ்சியது.

அப்பொழுதும் மனம் இறங்காதவளாய் துளைக்கும் பார்வையுடன் அவளைதான் பார்த்திருந்தாள் கனி. ஆரா எதற்காக அவளிடமிருந்து விலகி நின்றாள் என்ற காரணம் தெரிந்து விட்டது தான். அவள் பக்க நியாயமும் புரிகிறது தான். ஆனாலும் அதை ஏற்றுக் கொள்ளதான் முடியவில்லை. ‘யாரோ சொன்னால் என்னை ஒதுக்கி வைத்துவிடுவாயா..? அவ்வளவு தானா நானுக்கு..?’ என்ற கேள்விகள் வண்டாய் மூளையைக் குடைந்த அவளின் கோபத்தை இறுக்கிப் பிடித்து வைத்திருந்தது.

அவளின் அந்த எண்ணம் ஆராவிற்கும் புரியதான் செய்தது. இந்த விசயத்தில் அவ்வளவு சீக்கிரம் அவளின் கோபத்தை மலையேற்றிட முடியாது என்றும் சேர்த்தே தெரிந்திருந்தது அவளுக்கு. வேண்டுமென்றே இன்னும் பாவமாய் முகத்தை வைத்துக் கொண்டு, சோகம் வழியும் விழிகளோடு அவளை ஏறிட்டுப் பார்த்தாள் அவள். இதற்கெல்லாம் மயங்கும் ஆள் நானில்லை என்பதைப் போல கைகளை கட்டிக் கொண்டு அவளை முறைத்துக் கொண்டிருந்தாள் கனி.

“சாப்பிட வாங்க இரண்டு பேரும்…” என்ற பர்வதத்தின் வார்த்தைகள் இருவரின் நிலையையும் களைத்தது.

“இல்லம்மா… எனக்கும் யுவாக்கும் நீ பாக்ஸ்ல குடு… நான் அவனோட சாப்பிட்டுக்கறேன்…” என்றவளை இன்னும் அதிகமாய் முறைத்துப் பார்த்தாள் கனி.

அதை உணர்ந்தவள், “இல்ல… யுவா ரூம் விட்டு வெளிய வந்து இரண்டு நாள் ஆகுது… அதான்…” என்றாள்
இறங்கிவிட்ட குரலில், மன்னிப்பை யாசிப்பவள் போல்.

“இங்க நாலு இட்லி சாப்பிட்டு… அவனோட சேர்ந்து நாலு சாப்பிட்டா உன் பெரிய பொண்ணு ஒன்னும் நாலுகிலோ வெயிட் போட்டுட மாட்டானு சொல்லும்மா அவகிட்ட…” என இப்பொழுதும் அன்னையை துணைக்கு அழைத்தாள் அவள்.

“கொஞ்சமாய் சாப்பிடு ஆரா… கனி ஆசைப் படறா இல்லை…” என்றார் பர்வதம் சன்ன சிரிப்புடன். இப்போது திரும்பி தாயை முறைக்க தொடங்கி இருந்தாள் அவள்.

“இப்போ எதுக்கு என்ன முறைக்கற… ஆசை இல்லைனா இல்லைனு சொல்லு… அவப் போய் யுவாவோட சாப்பிடட்டும்…” என்றவரை பல்லை கடித்துக் கொண்டுப் பார்த்தாள் அவள்.

“பச்… அவங்க என்னவோ பண்ணட்டும்… நீங்க வாங்க தம்பி நாம சாப்பிடுவோம்…” என்றபடியே அறிவுடன் சாப்பிட அமர்ந்துவிட்டார் பர்வதம். ஆராவும் வேகமாய் அவர்களுடன் சென்று அமர்ந்துவிட, அவளை முறைத்துப் பார்த்தபடியே கனியும் அவர்களோடு இணைந்துக் கொண்டாள். அமைதியாகவே கழிந்தது சாப்பாட்டு நேரம்.

யுவாவிற்கான உணவினை எடுத்துக் கொண்டு, பர்வதத்திடமும் அறிவுடமும் சொல்லிக் கொண்டு கிளம்பிவள், ஒரு நொடி தயங்கி, “வரேன் கனிம்மா…” என்றாள் மிக மெல்லிய குரலில். அடுத்த நொடியே நிமிர்ந்துப் பார்க்காமல் அங்கிருந்து வேகமாய் வெளியேறியும் இருந்தாள். நீண்ட நாட்களுக்கு பிறகு, அவளின் பெயரை ஆரா உச்சரிக்க கேட்டு, கண்களிலிருந்து சட்டென்று கண்ணீர் துளிர்த்து கன்னத்தில் இறங்கியது. அவளின் உணர்வு கொந்தளிப்பை புரிந்துக் கொண்டவனாய், மனைவியை தோளோடு ஆதரவாய் அணைத்துக் கொண்டான் அறிவு.

சர்வ நிச்சயமாய் யுவாவின் அறைக்கதவு தாழ் போட்டிருக்கும் என்ற எண்ணத்துடன் அவள் கதவை தட்டுவதற்காக கொஞ்சம் அழுத்தம் கொடுத்து கரம் பதிக்க, வேகமாய் கதவு திறந்துக் கொண்டது. இதை எதிர்பாராதவள் ஒருநொடி தடுமாறி, வேகமாய் சுதாரித்து கதவையே இறுக்கமாய் பிடித்துக் கொண்டு நின்றுக் கொண்டாள்.

சுற்றிலும் கண்களை அலைபாயவிட எங்கும் யுவா இருப்பதற்கான அறிகுறியே இல்லை. ஒருவேளை குளியலறையில் இருப்பானோ என்ற சந்தேகத்தில், அதை தட்டிப் பார்த்தாள். எந்த பதிலும் இல்லை எனவும் மெல்ல குரல் கொடுத்தபடியே கதவை திறந்து உள்ளே எட்டிப் பார்த்தாள். அங்கேயும் அவனில்லை.

யோசனையாய் மீண்டும் அறைக்குள் பார்வையை அலைப் பாயவிட்டாள். அறை அன்றவள் பார்த்துப் போல கொஞ்சமும் மாற்றமின்றி யுவா வீசியெறிந்த பொருட்களோடு அப்படியே இருந்தது. அதைக் கண்டவள் யோசனை இன்னுமே வலுத்தது.

யுவாவின் கோபம் மட்டுப்பட்டு அவனாய் கதவை திறந்திருந்தால் நிச்சயம் அவனாவே இந்த பொருட்களை எல்லாம் சீராய் அடுக்கி வைத்திருப்பான். இந்த எண்ணம் வந்தவுடனே அவசர அவசரமாய் வாசல் கதவினை ஆராய்ந்தாள் அவள். இரண்டு கதவுகளின் தாழ்பாள் உடைந்திருந்தது. வெகு சாதாரண தாழ்பாள் தான் அது. நிலைமை தீவிரமாகும் பட்சத்தில் அவர்களே சுலபமாய் உடைத்து திறக்கும் வகையில் தான் செய்திருந்தனர்.

உள்ளம் திடுக்கிட்டு அங்கேயே நின்று முரண்டியது. குப்பென்று வியர்த்துப் போனது. நிச்சயமாய் எதுவோ சரியில்லை என்று தோன்றியது. கதவை உடைக்கும் அளவிற்கு ஏதாவது நடந்திருந்தால், நிச்சயம் இவளுக்கு தகவல் சொல்லி இருப்பார்கள். இங்கே இருப்பவர்கள் உடைத்திருந்தாள். அப்படியானால் உடைத்து வெளியாள் யாரோ தான் வந்திருக்க வேண்டும். ஒருவேளை வந்தது வெற்றியாய் இருந்தால், நினைத்த மாத்திரத்தில் மூச்சு விட கூட மறந்தவளாய் திகைத்து அதிர்ந்து அப்பட்டயே சமைந்துப் போனாள் அவள். மனம் மரத்துப்போன நிலை. இதயம் துடிப்பை நிறுத்திக் கொண்டதைப் போல பெரும் பராமாகிப் போனது.

எத்தனை பெரிய சுயநலவாதி அவள். வெற்றியால் ஆபத்து வரும் என்று தெரிந்த போதும் கூட தன்னுடைய ரத்த பந்தங்களை மட்டும் தானே பாதுகாக்க நினைத்தாள் அவள். அவர்களுக்காக தானே வருந்திக் கரைந்தாள். ஒருநொடி ஒருகணம் யுவாவுக்கு அவனால்  ஏதாவது ஆகுவிடுமோ என்ற மாதிரியான எண்ணமே வரவில்லையே? அவனின் அடுத்த இலக்கு யுவாவாய் இருப்பான் என கொஞ்சமும் யூகிக்கவில்லை. ஒருவேளை அந்த கோணத்தில் யோசித்திருந்தால் யுவாவையும் அல்லவா பாதுக்க முயன்றிருப்பாளே! அவள் அப்படி சிந்திக்க மாட்டாள் என்று தெரிந்தே தான் அவன் காய் நகர்ந்தி இருப்பானோ?

எது எப்படியோ இப்படி அவள் சாவதானமாய் நின்று யோசித்துக் கொண்டிருக்க அது காலமில்லையே. அவசர அவசரமாய் அந்த அறையெங்கும் தேட தொடங்கினாள். என்ன தேடுகிறோம் என்றே தெரியாத ஒரு தேடல். ஏதோ ஒரு விதத்தில் ஏதாவது ஒரு குறிப்பு வெற்றி அவளுக்காய் விட்டுச் சென்றிருப்பான் என்று தோன்றியது.

யுவாவின் அலமாரியை அலங்கரித்தபடி அன்று அவன் வரைந்திருந்த அந்த ஓவியம். வண்ணங்கள் அழிந்து, நிறங்கள் கரைந்து யுவாவின் கண்ணீர் தடத்தோடு. அதை அவன்  நெஞ்சோடு கட்டிக்கொண்டு வெகுநேரம் அழுதிருப்பான் என்று தோன்றியது. அதன் பக்கத்திலேயே அலங்காரமாய் வீற்றிந்தது அந்த பரிசுப் பொருள்.

அந்த சின்ன பரிசுப் பொருள் அவளின் கண்களுக்கு சிவப்பு நிற அசுரனாய் விஸ்வரூபமெடுத்து தெரிந்தது. அவசரமாய் அதை கைகளில் எடுத்துக் கொண்டவளுக்கு பிரிக்கும் திறனில்லை. கரங்கள் அளவுக்கு அதிகமாகவே நடுங்கி அதை தவறவிட்டது.

மனதை ஒருநிலைப் படுத்தி, திடத்தை திரட்டி, கீழிருந்து அதை எடுத்தவள் அவசர அவசரமாய் பிரிக்க துவங்கி இருந்தாள். பிரித்தவள் கரங்கள் உள்ளே இருந்த பொருளைப் பார்த்து மீண்டும் ஒரு முறை அதை தவறவிட்டது.

“எப்படி..? எப்படி..? எப்படி..?” என்ற கேள்வி மட்டும்தான் அவளின் சிந்தையில் விஸ்வரூபம் எடுத்து நின்றது.

கீழே விழுந்த வேகத்தில் அதிலிருந்த சாவி கொத்து விழுந்து நழுவி சென்றிருந்தது. தங்க சங்கிலியில் கோர்த்திருந்த இதய வடிவிலான கிளிஞ்சலின் உள்ளே ஒன்றையொன்று தழுவியபடி இரண்டு பூனைக்குட்டிகள் பாதி எரிந்த நிலையில். நொடியில் தெப்பலாய் நனைத்த விட்டது உடல். அதை குனிந்து எடுத்தவள் கரங்கள் நிலைக்கொள்ளாமல் நடுங்கிக் கொண்டிருந்தது.

முன்னும் பின்னும் திருப்பிப் பார்த்தாள். சந்தேகத்திற்கு இடமில்லாமல் இது ஒரு காலத்தில் அவள் பயன்படுத்திய ஸ்கூட்டின் சாவி தான். அடையாளத்திற்கு என்று அதன் மேற்பகுதியில் ஆரல் என்று அச்சடித்து வாங்கிக் கொடுத்திருந்தார் ராஜன். அது இன்னமுமே அப்படியே இருந்தது.

இதை நிச்சயமாய் அவள் அந்த வீட்டில் தான் தவற விட்டிருக்க வேண்டும். எப்படி தவறவிட்டோம் என்று அவளுக்கு சத்தியமாய் நினைவில்லை. ஏன் அங்கே நடந்ததுக்கூட மங்கலாய் தான் அவளின் நினைவடுக்குகளில் இருக்கிறது. எல்லாவற்றையும் நான் பார்த்துக் கொள்கிறேன் என வள்ளியம்மை சொல்லியது வெறும் பேச்சிற்கு அல்ல. இதுநாள் வரை அந்த நினைவுகளின் சுவடு கூட தெரியாமல் தான் அவளைப் பாதுகாத்தார் அவர். அப்படியிருக்க அவரையும் மீறி அவனுக்கு இதெப்படி கிடைத்திருக்கும்? யோசிக்க யோசிக்க தலையே வெடித்துவிடும் போல இருந்தது அவளுக்கு.

சில நிமிடங்கள் தலையை அழுந்த பற்றியபடியே அப்படியே நின்றுவிட்டாள் அவள். மூளை சிந்திப்பதையே நிறுத்தி இருந்தது. அதிர்ச்சியில் அழுகைக்கூட மறந்திருந்தது.

நினைவு வந்தவளாய் அவசர அவசரமாய் எப்பொழுதும் பரிசுப் பொருளுடன் அவன் அனுப்பும் வாழ்த்து அட்டையை தேடினாள். அவளின் காலடியில் தலைக்கீழே கிடந்தது அது.

“வெயிட்டிங் பார் யூ… பைனல் டைம்: 10.20 ஏ.எம். பி.எஸ்: ஐ’வில் கீப் அன் ஐ ஆன் யூ” (waiting for you… final time: 10.20 am. P.S: I’ll keep an eye on you) என்றிருந்தது அதில்.

கைக் கடிகாரத்தைப் பார்த்தாள். இப்பொழுதே நேரம் பத்தை தொட்டுக் கொண்டிருந்தது. எங்கேயென்று குறிப்பிடாத பட்சத்தில் எங்கு சென்று தேடுவது அவனை. எல்லாவற்றிற்கும் மேலாக நான் உன்னை கண்காணிக்கிறேன் என்ற கடைசி வார்த்தைகள் அவளை இன்னும் பயப்படுத்தி இருந்தது. நேரடியாக அவளுக்கு அவன் எந்த எச்சரிக்கையும் விடுக்கவில்லை. ஆனால் நீ என்ன செய்தாலும் எனக்கு தெரிந்துவிடும் என மறைமுகமாக அல்லவா மிரட்டுகிறான்.

எண்ணங்கள் அலைமோத அதற்கு மேல் நொடியும் தாமதிக்கவில்லை அவள். எங்கே செல்கிறோம் என்ற இலக்கே இல்லாமல் அங்கேயிங்கே அலைமோதி கடைசியாய் ஒரு உந்துதலில் அமுதன் காணமல் போன அதே பூங்காவின் வாசலில் வந்து நின்றிருந்தாள் அவள். ஒரு மக்கம் வேந்தனிடம் சொல்லிவிட சொல்லி மனது அரிக்கிறது தான். ஆனால் யுவாவை ஏதாவது செய்துவிட்டால் என்ற எண்ணம் அதற்கு மேல் எதைப் பற்றியுமே அவளை சிந்திக்க விடவில்லை.

அடுத்து எங்கே செல்வதென்ற தெளிவில்லை. ஒருவேளை நேற்றைப் போல் இன்றும் அவளுக்கு அவன் அழைத்தால், என்ற எண்ணத்தில் கைப்பையிலிருந்த போனை தேடி துழவி எடுத்துவிட்டு நிமிர்கையில் அவளை ஒட்டிக் கொண்டு நின்றது கருப்பு நிற கார் ஒன்று.

அவள் பக்கமிருந்த கதவை திறந்துவிட்டு, “கெட் இன்…” என்றான் இதழ்களை விரித்து இழுத்தபடி அவன். எதுவுமே சொல்லாமல் அமைதியாய் அதில் ஏறி அமர்ந்திருந்தாள் அவள்.

“போன் ப்ளீஸ்…” என்றான் கரங்கத்தை அவளின் புறம் நீட்டி சின்ன புன்னகையோடு.

எதுவுமே சொல்லாமல் அமைதியாய்  கைப்பேசியை எடுத்து அவனிடம் நீட்டினாள் அவள். உடைந்திருந்த கைப்பேசியை இன்னுமே சரி செய்திருக்கவில்லை அவள். நேற்று அதற்கு அவளுக்கு நேரமும் கிடைக்கவில்லை. இன்று கடைகள் திறந்தபின் அதை சரிசெய்ய கொடுக்கலாம் என்று நினைத்திருந்தாள் அவள்.

அதை வாங்கியவன் ஜன்னலை திறந்து தூர வீசி எறிந்திருந்தான். அந்த பூங்காவினுள் ஏதோ புதரினுள் சென்று விழுந்திருந்தது அது. அடுத்த நொடி அவனின் கரத்தில் சீறிப் பாய்ந்த கார் மின்னலென அங்கிருந்து மறைந்துப் போயிருந்தது.

                      பற்றி எரியும்…

Click on a star to rate it!

Rating 4.7 / 5. Vote count: 3

No votes so far! Be the first to rate this post.

இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
1
+1
4
+1
0
+1
0

உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள்