
தேடல் 33:
“காற்றில் எந்தன் கீதம்…
காணாத ஒன்றை தேடுதே…
அலைபோல நினைவாக…
சில்லென்று வீசும் மாலை நேர
காற்றில் எந்தன் கீதம்
காணாத ஒன்றை தேடுதே…
எங்கெங்கும் இன்பம்
அது கோலம் போட…
என்னுள்ளே ஒரு
வீணை ராகம் தேட…
அன்புள்ள நெஞ்சை காணாதோ…
ஆனந்த ராகம் பாடதோ…
கண்கள் எங்கும்
நெஞ்சின் பாவம்…”
சொற்களை கேட்க முடியும்; ஆனால், உணர முடியுமா..? அவனால் முடிந்ததே! செவி வழிக் கேட்ட அந்த பாடல் வரி சிந்தையில் நிறைத்து உயிரோடே கலந்து விட்டிருந்தது அவனுக்கு. அந்த வார்த்தைகளில் லயித்து இசையில் மயங்கி குரலில் கலந்து கரைந்துப் போனவனை தட்டி எழுப்பியது ஒரு குரல்.
“சார்…” சற்றே உரத்து ஒலித்த குரலில் தயக்கமும் நடுக்கமும் சேர்ந்தே இருந்ததோ?
இமை திறவாமலே இன்னும் நன்றாய் சாய்ந்து அமர்ந்தான் அவன். இசை மட்டும் அதே இடத்தில் நின்றிருந்தது. அவன் அமர்ந்த விதம் சொல் என்னும் பொருள்படும் என்பதை இத்தனை நாள் உடனிருந்தவன் அறிய மாட்டானா என்ன?
“சார்… மிளிர் மேடம கண்டு பிடிக்க முடியல… எவ்வளவோ தேடிப் பாத்துட்டோம்… எங்க போய் இருப்பாங்கனு கெஸ் கூட பண்ண முடியல… அவங்க பேமிலி மெம்பர்ஸ கடத்தி விசாரிச்சு பாக்கலாமா சார்… மே பீ அந்த விசயம் தெரிஞ்சா அவங்களே கூட தன் குடும்பத்த காப்பாத்த திரும்பி வந்திடலாம் இல்ல…” பவ்யமாய் தேர்ந்தெடுத்த வார்த்தைகளை கோர்த்து உபயோகித்தான் அவன்.
“இல்ல மனோ… அவ வரமாட்ட…”
“ஏன் சார் அப்படி சொல்லறீங்க… மேடமுக்கு அவங்க குடும்பத்து மேல ரொம்ப பாசம்… கண்டிப்பா வந்துடுவாங்க…” என்றான் அவன் நம்பிக்கையாய்.
இதழ்கள் மட்டும் மில்லிமீட்டர் அளவு விரிந்ததோ? “அவ வர மாட்டா மனோ… ஏன்னா அவ புத்திசாலி… உங்க இத்தன பேர் கண்ணுல மண்ண தூவிட்டு ஒருத்தனோட போய் இருக்கானா இதெல்லாம் யோசிக்காமலா போவா…” என்றவனின் கண்களும் இப்போது மலர்ந்ததோ? யோசனையாய் தான் பார்த்துக் கொண்டிருந்தான் அந்த மனோ எனப்பட்டவன்.
மெல்ல அவன் விழி மலர, விரவிக் கிடந்த ரத்த நாளங்களின் மத்தியில் மாணிக்கமாய் மிளிர்ந்தது அந்த கருவிழிகள். இன்னும் குழப்பமாய் அவனையே பார்த்துக் கொண்டிருந்தவனை நோக்கி நிமிர்ந்தவன், “அவளுக்கு குடும்பத்து மேல பாசம் தான்… ஆனா வரமாட்டா… ஏன்னா அவங்க பாதுகாப்பா இருக்க தேவையான எல்லா ஏற்பாட்டையும் முன்னாடியே பண்ணி இருப்பா… அத மீறி அவங்கள நம்மால கடத்த முடியாது…” என்றான் தேவ்பிரசாத் தனக்கு தானே சொல்லிக் கொள்வதைப் போல.
“அப்படி என்ன சார் பெரிய ஏற்பாடு… எவ்வளவு பெரிய போலீஸ் போர்ஸையே போட்டாலும் அங்கிருந்து தூக்கிடலாம் சார்… அதெல்லாம் ஒன்னும் பிரச்சனையில்ல…”
“போலீஸ பாதுக்காப்பா போட்டா தூக்கிடலாம்… பாசத்த பாதுகாப்பா போட்டா..?” என்றவனை இம்முறையும் புரியாது பார்த்தான் மனோ.
“அவ கிளம்பும் போதே அவளோட குடும்பத்தையும் அந்த அக்னியோட குடும்பத்தையும் மொத்தமா அவங்க கிராமத்துக்கு அனுப்பி வச்சுட்டா…”
“கிராமத்துக்கு தானே சார்… அங்க போய் தூக்கறது இன்னும் ஈஸி தானே…” என்றவனை மாறாத முறுவலுடன் பார்த்துக் கொண்டிருந்தான் தேவ்பிரசாத்.
“என்ன நினைச்ச… பக்கத்து வீட்டுல இடியே விழுந்தாலும் எட்டி பாக்காத சிட்டினு நினைச்சீயா… சின்னதா குண்டூசி விழுந்தாலும் மொத்த ஊரே ஒன்னு சேந்துடும்… அதுவும் ஐம்பது பேருக்கு மேல ஒன்னா இருக்கவங்கள யாரனு போய் கடத்த போறீங்க…”
“அப்போ அந்த ப்யூட்டி பார்லர்ல வேல பாத்துச்சே ஒரு பொண்ணு, அத…” என்று மனோ முடிப்பதற்குள்ளாகவே, “அவ குடும்பத்தையும் சேத்து தான் அனுப்பி இருக்கா…” என்றான் அவன்.
“பச்… இப்போ என்ன தான் சார் பண்ணறது… எல்லா டிராவல் ஏஜன்சி, பிளைட் ட்ரைன் ரெக்கார்ட், பஸ் புக்கிங் எல்லாமே செக் பண்ணியாச்சு… எதுலையும் அவங்க டிராவல் பண்ணல… ஊருக்குள்ளயும் எங்க தேடியும் கிடைக்கல… அப்படி இருக்கும் போது இப்ப எங்கனு அவங்கள தேடறது…”
“இங்க இருக்கவள அங்க தேடுனா எப்படி கிடைப்பா மனோ…”
“சார்… நிஜமாவா… மேடம் இங்க தான் இருக்காங்களா… உங்களுக்கு எப்படி சார் தெரியும்…” என்றான் அவன் ஆச்சரியமாய்.
“கெஸ் தான் மனோ… இவ்வளவு ஏற்பாட்ட பண்ணிட்டு காணப் போய் இருக்கானா கண்டிப்பா என்னதான் தேடி வரனுமுனு ஒரு சின்ன கெஸ்ஸிங் தான்…”
“அப்போ ஏன் இன்னும் வரல சார்…”
“அவளோட திட்டம் பெருசா இருக்கலாம்… அத செயல்படுத்த நேரம் எடுக்கலாம்…”
“சார்…” என்றவன் சற்றே தயங்கி நிறுத்த, சொல் என்பதைப் போல் பார்த்தான் அவன்.
“இல்ல… அவங்க உங்களுக்கு எதிரா எல்லா டீட்டெல்ஸும் கலெக்ட் பண்ணிட்டு இருக்காங்கனு உங்களுக்கே தெரியும்… அப்படி இருக்கும் போது இன்னும் ஏன் சார் விட்டு வச்சு இருக்கீங்க… தேவையில்லாத பிரச்சனை தானே… வழக்கம் போல பைல க்ளோஸ் பண்ணிடலாம் இல்ல…” என தயங்கி தயங்கி மொழிந்தவனை புன்முறுவலோடு பார்த்துக் கொண்டிருந்தான் அவன்.
இதே கேள்வியை மனோ பலமுறை அவனிடம் கேட்டிருக்கிறான் தான். அத்தனை முறையும் இந்த புன்னகை ஒன்றே அவனுக்கு பதிலாய் வந்தது. “அவள முடிச்சுடலாம் சார்” என்று அவன் சொன்ன போது, “ஜெஸ்ட் கால் ஹர் மேடம்…” என அது தான் தனக்கு இப்போது அதி முக்கியம் என்பதைப் போல சொன்ன தேவ்பிரசாதை எந்த ரகத்தில் சேர்ப்பதென்று தான் அவனுக்கு தெரியவில்லை.
“ஏன் மனோ, அவ எல்லாத்தையும் மறந்து இருந்தப்பவே என்கூடவே தூக்கிட்டு வந்திருக்கனும் இல்ல… நம்ம இரண்டு பேரும் ஹஸ்பெண்ட் அண்ட் ஓய்ப்… காதலிச்சு கல்யாணம் பண்ணிக்கிட்டோம்… வீட்டுல ஏத்துக்கலனு சொன்ன நம்பி இருப்பா தானே… அவ பேரன்ட்ஸூம் கொஞ்ச நாள் தேடிட்டு விட்டு இருப்பாங்க… இல்லையா…” என்று சிறு சோகம் இழைந்தோட சொல்லியவனை அதிர்ந்து பார்த்துக் கொண்டிருந்தான் மனோ.
“பச்… எவ்வளவு சைல்டிஸா யோசிக்கறேன் இல்ல… பின்னாடி எல்லாம் நியாபகம் வந்தா எப்படி ரியாக்ட் பண்ணுவானே சொல்ல முடியாது… சூசைட் வரைக்கும் போனாலும் ஆச்சரியபட எதுவுமில்ல… அதுவும் அவ மகிய நான்தான் கொன்னேனு தெரிஞ்சுது கண்டிப்பா என்ன கொன்னுட்டு தான் அடுத்த வேலை பார்ப்பா… என்ன கொன்னுட்டா கூட பரவாயில்ல… பட் அவ ஏதாவது பண்ணிகிட்டா அதான் அந்த ஐடியாவ ட்ராப் பண்ணிட்டேன்…” என்றான் தேவ் மறுநொடியே ஆழ்ந்த பெருமூச்சுடன்.
கிட்டதட்ட பத்து வருடங்களாய் தேவுடன் இருப்பவன் மனோ. இத்தனை வருடங்களில் தேவ் ஒரு பிரச்சனையை இவ்வளவு தூரம் வளரவிட்டதாக அவனுக்கு நினைவே இல்லை. மகியை கொன்ற அன்றே மிளிரையும் கொன்று விடுவதாய் தான் திட்டமே. ஆனால் மிளிரைப் பார்த்த மறுநொடி அவளை ஒன்றும் செய்ய வேண்டாம் என்று விட்டான் தேவ். அன்றிலிருந்து இன்றுவரை அவளின் நிழல் போல் தொடரவே இரண்டு ஆட்களை நியமித்து இருக்கிறான். இதோ இந்த நிமிடமே அவன் நினைத்தால் அவள் குடும்பத்தையே ஒன்றுமில்லாமல் செய்துவிடலாம். அவன் பலம் அப்படி. ஆனால் இல்லாத காரணங்களை எல்லாம் தேடி கண்டுபிடித்து சொல்லிக் கொண்டிருப்பவனை அதிசயமாய் தான் பார்த்து நின்றான் அவன்.
அவனின் பார்வையை உணர்ந்தனோ, சட்டென்று நிமிர்ந்து அவனை ஊடுறுவி ஆழ்ந்து நோக்க, அவனோ இன்னும் பார்வையை மாற்றாமல் அவனை ஆழ்ந்து தான் பார்த்துக் கொண்டிருந்தான்.
“நீங்க அவங்கள லவ் பண்ணீங்களா ண்ணா..?” வியந்து கேட்டவனுக்கு பதிலளிக்காது மில்லிமீட்டர் அளவு புன்னகையை அவன் சிந்த, அந்த புன்னகையே அப்படி தான் என்றது.
“ஆனா இத்தன வருஷத்துல ஒரு தடவ கூட நீங்க அவங்கள பத்தி பேசனதே இல்லையேண்ணா..?” மிதமிஞ்சிய ஆச்சரியம் மட்டுமே அவன் கேள்வியில்.
“அப்போ அது லவ்வுனு எனக்கு தெரியலேயே…” என்றவன் குரலில் சின்னதாய் வருத்தம் ஒட்டி இருந்ததோ?
“எனக்கு ஒரு பத்து இல்ல பன்னெண்டு வயசிருக்கும் மனோ… அப்போ தான் அவள முதல் தடவையா அவள பாத்தேன்… ஆறோ ஏழோ அவளுக்கு அப்போ வயசிருக்குமுனு நினைக்கறேன்… ஆனா ரொம்ப குட்டியா தான் இருப்பா… எப்பவும் பாவட சட்டை தான் போட்டுப்பா… அந்த பூ போட்ட பாவடைய தூக்கி புடிச்சுட்டு தடுமாறி தடுமாறி அவ நடக்கற அழகே தனிதான்… அப்போ தான் புதுசா நான் எங்க அப்பா வழி தாத்தா வீட்டுக்கு போய் இருந்தேன்… எங்க அப்பாம்மா ரெண்டு பேருமே எய்ட்ஸால இறந்துட்ட டைம் அது… அதுனாலேயே யாரும் என்கூட பேச மாட்டாங்க… என்ன தொட மாட்டாங்க… அப்போ எனக்கு கிடைச்ச ஒரே ப்ரண்ட் அவ தான்… என்னோட நாள் தொடங்குறதும் அவளோட தான் முடியறதும் அவளோட தான்… கிட்டதட்ட இரண்டு மாசம் என் உயிரா உலகமா இருந்தவ அவ தான்… அதுக்கு அப்பறம் அப்பாவோட தம்பி ஒருத்தர் லண்டன்ல இருந்தாரு… என்னையும் அவரோடையே கூட்டிட்டுப் போய்ட்டாரு… அதுக்கு அப்பறம் நானுமே இதெல்லாம் பெருசா நியாபகம் வச்சுக்கல… திரும்ப ஹாஸ்பிட்டல வச்சு அந்த இன்ஸ்பெக்டர் அவ பேர சொல்லவும் தான் தெரிஞ்சுது அவ என்னோட மிளிர்னு… எப்பவோ நான் மறந்துட்டேனு நினைச்ச ஒருத்தியோட நினப்பு என் நெஞ்சுக்குழியோட பொதைஞ்சு கிடக்கறது அன்னைக்கு தான் புரிஞ்சுது… அவள பாத்த அந்த நிமிஷமே அவள என்கூட கூட்டிட்டு வந்திடனும், எப்பவும் என் பக்கத்துலையே வச்சுகனுமுனு தான் தோனுச்சு… ஆனா இன்னைய வரைக்கும் அவள தூரமா நின்னுதான் என்னால பாக்க முடியுது…” இறுதியாய் முடிக்கும் போது அவனின் குரலில் ஆழ்ந்த துக்கம் இருந்ததோ என்று தான் எண்ண தோன்றியது மனோவுக்கு. இத்தனை நாளில் ஒருமுறை கூட தனது கடந்த காலத்தைப் பற்றியோ, தாய்தந்தை பற்றியோ தேவ் யாரிடமும் பகிர்ந்ததில்லை. இன்று பகிர்கிறான் என்றால் அவனின் மனதில் அளவுக்கு அதிகமான பாரமேறிக் கிடக்கிறது என்று தானே அர்த்தம்.
என்ன பதில் உரைப்பது என்று தெரியாமல் நின்றிருந்தான் அவன். “ஏன் மனோ… நான் கூட அவளுக்கு புடிச்ச மாதிரி இருந்து இருக்கலாம் இல்ல…” என்றவனின் குரலில் மிதமிஞ்சிய வருத்தமும் ஏக்கமும் மட்டுமே.
“நீங்க அவங்ககிட்ட பேசிப் பாக்கலாமே அண்ணா… நிச்சயம் உங்கள அவங்களுக்கு புடிக்கும் ண்ணா…” உறுதியாய் சொன்னான் அவன்.
கசந்த ஒரு முறுவல் மட்டுமே பதிலாய் வந்தது அவனுடமிருந்து. விட்ட இடத்திலிருத்து மீண்டும் பாடலை ஒலிக்க விட்டவன் இமைகள் தன்னால் மூடிக் கொண்டது. மூடிய இமைகளின் உள்ளே விரிந்தது அவளின் சிறுவயது பிம்பம் மட்டுமே. என்றென்றும் அவளின் சிறுவயது செல்ல ‘குட்டா’வாய் மட்டுமே இருந்திருக்கலாமோ என்று அடித்துக் கொண்டது மனம். வழி மாறிய பறவை கூடு திரும்ப வழியேது? சென்ற வழி தவறாயினும் கொண்ட லட்சியம் சரிதானோ? தடம் மாறிய ஒவ்வொரு தவறுகளுக்கு பின்னாலும் ஆயிரம் காரணங்கள் வரிசைக் கட்டி காத்து நின்றாலும் தவறு சரியென்று ஆகிவிட போவதுமில்லை! தவறுக்கான தண்டனை தவறப் போவதுமில்லை!
– தேடல் தொடரும்…

