
அத்தியாயம் 29
சீதா பிள்ளைகளை அழைத்துக் கொண்டு அறைக்குள் நுழைந்து விட, அபியும் ஆனந்தியும் மட்டுமே தனிமையில். ஒரு பார்வை இல்லை சிறு பார்வை கூட இல்லை அவர்களிடத்தில்.
கவனமாக இருவரும் ஒருவருக்கு ஒருவர் பார்ப்பதை தவிர்த்தனர். அபி கை நகங்களை ஆராய்ச்சி செய்து கொண்டிருக்க… ஆனந்தியோ தனக்கு வைத்திருந்த தோசையில் கவனமாக இருந்தாள்.
அதற்குள் பிள்ளைகள் இருவரையும் உறங்க வைத்துவிட்டு வெளியில் வந்தவர் “இன்னும் ஒரு தோசை வைக்கவா? மா…” எனக் கேட்டார்.
அதற்கு மடவோள் பதில் கூறும் முன்பே சோழா அழும் சத்தம் கேட்டது. “இவனுக்கு என்ன ஆச்சுன்னு தெரில, இன்னைக்கு எல்லாமே விசித்திரமா பண்றான்…” என சலித்துக் கொண்டவரிடம்
“நீங்க போயி பாருங்க மேம். நான் சாப்பிட்டு வந்து அவங்களைப் பார்த்துகிக்கிறேன்…” அவசரமாக தோசையைப் பிய்த்து வாயில் வைத்தபடி கூறினாள்.
“எதுக்கு இவ்வளவு வேகமாக சாப்பிடற? பொறுமையா சாப்பிட்டு வா. நான் பிள்ளைகளை பார்த்துக்கிறேன்…” என்றவர் அபி உண்ணாமல் அமர்ந்திருப்பதை கூட கவனிக்காது தனது பேரனை கவனிக்க சென்றுவிட்டார். கடந்த இரண்டு நாட்களாக அபியே தான் உண்டு கொண்டிருந்தான் அதன் நினைவில் சீதா சென்றுவிட்டார்.
செல்லும் தாயை ஒரு பார்வை பார்த்தவனுக்கு அவரின் நிலை புரிந்தது. அதனாலேயே அவரை அழைக்காமல் வீங்கிய கையோடு தட்டிலிருந்த தோசையோடு போராட ஆரம்பித்தான். தோசையை பிய்த்து சாப்பிட முடியவில்லை அவனால் ஐந்து வீரல்களும் விண் விண்ணென்று வலித்தது.
“ப்ச்..” என்றபடி கையை உதறியவன் நீரை பருகிவிட்டு படுக்கைக்கு செல்ல நினைத்தான். இடது கையில் நீரை எடுக்க முயன்றான். அதுவும் முடியாமல் போனது. ‘ஒரு சொம்பு தண்ணியைக் கூட கையிலெடுக்க முடியல…’ என நினைத்தவனுக்கு ஏனோ கோபம் கோபமாக வந்தது.
அதே கணம் இங்கு ஆனந்தியோ இவனது செய்கையை கண்டும் காணாமல் அவசரமாக உண்டு விட்டு சீதாவின் அறையை நோக்கி நடந்தாள்.
அவரோ சோழாவை அணைத்தபடி உறக்கத்தில் இருந்தார். ‘அதுக்குள்ள தூங்கிட்டாங்களா?..’ என நினைத்தவள் “மேம்..” என்றழைத்தாள். அவர் எழவில்லை மீண்டுமொருமுறை அழைத்து பார்த்தவள் மேலும் எழுப்ப மனம் இல்லாமல் அறையிலிருந்து வெளியில் வந்தாள்.
அந்நேரம் அவளது கண்கள் தன்னாலேயே டைனிங் டேபிளில் அமர்ந்திருந்தவனின் மீது பதிந்தது.
தோசையோடு போராடி போராடி தோல்வியடைந்தவன் தற்பொழுது தண்ணீர் குவளையோடு போராடிக் கொண்டிருந்தான்.
எப்பொழுதும் ருத்ர மூர்த்தியாக வலம் வருபவன் இன்று ஒரு சொம்பை பிடிக்க முடியாமல் தள்ளாடிக் கொண்டிருப்பதைப் பார்த்து மெல்லிய சிரிப்பு கூட வந்தது பெண்ணிற்கு… கிட்டத்தட்ட ஒரு வாரத்திற்கு பிறகு அவளது இதழ்கள் புன்னகையில் விரிந்தது…
அதுகூட மங்கையின் மனதிற்கு பொறுக்கவில்லை போல ‘நல்லா சிரி. அவன் இப்ப சாப்பிட முடியாம இருக்கிறதுக்கு முக்கிய காரணமே நீ தான். உன்னோட அவசரப் புத்தி தான் காரணம். கொஞ்சம் யோசிச்சிருந்தா இன்னைக்கு அவனுக்கு இந்த நிலைமை வந்திருக்காது…
அந்த குடோன்ல நீயும் அவனும் தனியா இருக்கும் போது தப்பா நடந்துகாதவன் தான் எல்லாரும் இருக்கும் போது தப்பா நடந்துப்பானா? நீ கொஞ்சமாச்சும் யோசிச்சு இருக்கணும். யோசிக்காம ரொம்ப தப்பு பண்ணிட்ட…’ வெகுவாக குற்றம் சுமத்திய மனதிற்கு பதில் சொல்லாமல் ஆடவனைப் பார்த்தாள். இன்னும் தண்ணீர் குவளையோடு தான் போராடிக் கொண்டிருந்தான்.
அக்கணம் அவளையும் அறியாமல் மனதின் ஓரத்தில் மனிதாபிமானம் எட்டிப் பார்த்தது. பாவையின் கால்கள் ஆடவனை நோக்கி மெல்ல நகர ‘வேண்டாம் போகாத, இதுக்கும் ஏதாவது பேர் வைப்பான்…’ மதி குரல் கொடுக்க கொடுக்கவே மறவோனை நோக்கி நடந்தாள்.
‘எத்தனை பட்டாலும் நீ திருந்த மாட்ட…வாங்கி கட்டிட்டு வா…’ எனக் கத்திவிட்டு மங்கையின் மதி அங்கிருந்து நகர்ந்தது…
அதற்குள் இங்கு அபியோ கை வலியையும் பொருட்படுத்தாமல் சொம்பை கையில் எடுத்திருந்தான். தீயில் நிற்பது போல கைகள் இரண்டும் எரிந்தன… அதில் நீரைக் கூட குடிக்கப் பிடிக்கவில்லை அவனுக்கு…
“ப்ச்..” என்றபடி சொம்பை டேபிளில் வைத்தவன் எழ முயன்ற நேரம் அவனின் முன் தோசையை நீட்டியப்படி நின்றிருந்தாள் ஆனந்தி.
முகம் முழுக்க சிவக்க தையலை ஒரு பார்வைப் பார்த்தவன் எழ முயன்றான். அந்த பார்வையிலும், செயலிலும் இவளுக்கு கோபம் கூட வந்தது… அதனை வெளிக்காட்டி கொள்ளாமல் மறவோனை எழ விடாமல் தடுத்து நின்றபடி
“இதோ பாருங்க சார், உங்களுக்கு சேகவம் பண்ணனும்ன்னு எனக்கும் ஆசையில்லை… ஆனா கண்ணு முன்னாடி ஒருத்தர் சாப்பிட முடியாம இருக்கிறதை பார்த்தும் பார்க்காம போக முடியல. ஜஸ்ட் ஒரு நர்ஸ் ஹெல்ப் பண்றது போல நினைச்சுக்கோங்க…” என்றபடி தோசையை அபியின் வாயிற்கு அருகில் நீட்ட அதனை வாங்காமல் பாவையை அழுத்தமாகப் பார்த்தான்.
‘ நான் இப்படி சாப்பிடாம இருக்க காரணமே நீ தான். ஒழுங்கா இங்கிருந்து போ, உன்னைப் பார்த்தாலே பத்திக்கிட்டு வருது. இதுல உன் கையால சாப்பிட வேற வேணுமா…’எனக் கத்த துடித்த மனதை வெகுவாக அடக்கியது மற்றொரு மனம்.
‘அவக்கிட்ட நீ சண்டைப் போட்டாலும், அவ உன்கிட்ட சண்டைப் போட்டாலும் சேதாரம் என்னவோ உனக்கு தான் வருது… பேசாம அவ சொல்றது போல யாரோ ஒரு நர்ஸ் ஹெல்ப் பண்றதா நினைச்சுக்கிட்டு சாப்டு…’ என்றது அது மட்டுமல்லாமல் மாலையில் நடந்த நிகழ்வுகளை நினைவுப் படுத்தியது.
கண்களை இறுக மூடித் திறந்தவன்
நீண்ட நெடிய பெருமூச்சுடன் தையலையும், அவளது கையையும் மாறி மாறி பார்த்தப்படி ஆவென்று வாய் திறந்தான்.
கையில் வைத்திருந்த தோசையை ஊட்டிவிட்டவள் அவன் சாப்பிட்டு முடிக்கும் முன் அடுத்ததைப் பிய்த்து நீட்ட, தோசையை மென்று கொண்டே ஆனந்தியை முறைத்தான். அவனது முறைப்பில் ஓங்கி தலையில் தட்ட வேண்டும் போலிருந்தது பெண்ணிற்கு…
பல்லைக் கடித்தபடி தன் மனதினை அடக்கியவள் தோசையை தட்டில் வைத்துவிட்டு ஆடவனைப் பார்த்தாள். அவனோ நிதானமாக இருபத்தி இரண்டு முறை தோசையை நன்றாக மென்று முழுங்கி விட்டு ‘ஆ’ காட்ட கடுப்பாகித்தான் போனாள் ஆனந்தி.
அந்த கடுப்பில் முன்பை விட சற்றே அதிகமாக தோசையைப் பிய்த்து ஊட்டிட “ம்ம்…இ…ப்.டி தான்…ப…ச..” என்னவோ முறைத்துக் கொண்டே அபி கூறியது இவளுக்கு புரியாமல் போகவும் “என்ன?…” எனக் கேட்டாள்.
வாய் நிறைய இருந்த உணவை கொஞ்சமே மென்று விட்டு “இப்படி தான் பசங்களுக்கும் ஊட்டி விடறயா?…” முறைத்துக் கொண்டே கேட்டான்.
“அவங்களுக்கு நான் அதிகமா ஊட்டி விட மாட்டேன் அவங்களே கையில எடுத்து சப்பிட்டுப்பாங்க. அண்ட் அப்படியே ஊட்டிவிட்டாலும் அவங்க உங்களை மாதிரி எண்ணிக்கிட்டே சாப்பாட்டை மெல்ல மாட்டாங்க. ஊட்டி விட்டதும் சட்டுன்னு மென்னு முழுங்கிடுவாங்க…” எனக் கூறவும்
தோசையை மென்று கொண்டே பாவையைப் பார்த்தவன்
“உன்னை மாதிரி சாப்பாட்டை மெல்லாம அப்டியே முழுங்க என்னால முடியாது…” அவள் அசவரமாக சாப்பிட்டுவிட்டு எழுந்ததை மனதில் வைத்துக் கூறினான். அதற்கு பதில் கூறாமல் அடுத்தடுத்து தோசையை பிய்த்து ஊட்ட.. அவனோ ஒவ்வொரு வாய் உணவையும் பொறுமையாக மென்று முழுங்கினான்.
‘ இவன் பொறுமையில தீயை வைக்க…’ என நினைத்துக் கொண்டே அனைத்தையும் ஊட்டி முடித்தவள் நீரை புகட்டிவிட்டு, தட்டை கழுவி வைத்துவிட்டு அவனைத் தாண்டி முன்னால் நடந்தாள்.
அக்கணம் “ஒரு நிமிசம்…” என்ற ஆடவனின் குரலில் நின்றவள் திரும்பி என்னவென்பது போல் பார்த்தான்.
“இங்க வா..” என்றழைக்க மெல்லிய பதட்டம் அவளையும் அறியாமல் தொற்றிக் கொண்டது. அதனை முகத்தில் காட்டிக் கொள்ளாமல் அவனிருகில் சென்றாள்.
இடது கையால் தன் பாக்கெட்டில் இருந்த பர்ஸை “ஸ்ஸ்ஸ்…” என்ற முனகலோடு டேபிளில் வைத்தவன் “எவ்வளவு வேணுமோ எடுத்துக்க…” என்றான்.
நிமிடம் அவன் கூறுவது புரியாமல் விழித்தவள் அது புரிந்ததும் ‘ஓ நர்ஸ் ஃபீஸ்…’ என நினைத்தபடி
“இதுல இருக்கிற அமௌன்ட் என்னோட நேரத்துக்கு ஈடுக் கொடுக்க முடியாது சார். சோ என்னோட நேரத்துக்கு ஈகுவலா நாளைக்கு காலையில நேரமா எழுந்து பசங்களை எழுப்பி விட்டு அவங்களுக்கு யோகா சொல்லிக் கொடுங்க…” எனக் கூறிவிட்டு நகர்ந்து விட்டாள். செல்லும் அவளையே முறைத்தப்படி நின்றான் அபிநயன்.
*********
இரவில் விழித்திருக்கும் இரவு விலங்களுக்கு துணையாக விழித்து கிடந்தான் அபி.புதியதாக கையில் ஏற்பட்ட காயம் அவனைத் தூங்க விடவில்லை…
கடந்த ஒரு வாரமாக மாத்திரையின் உபயோகத்தில் உறங்கி விட்டவனுக்கு இன்று மருந்து, மாத்திரை எடுத்தும் உறக்கம் வரவில்லை. பாதி இரவிலேயே விழிப்பு வந்துவிட்டது. வலது கையில் ஆயிரம் ஊசிகளை ஒன்றாக வைத்து குத்தினால் எப்படி வலிக்குமோ அப்படி வலித்துக் கொண்டிருந்தது. தற்பொழுது வரையிலும் கையில் வீக்கம் குறையவே இல்லை.
‘அந்த ஆளாக்கு பேசினதைப் பெருசா எடுத்துக்கிட்டு கோபப்பட்டதே ஓவர்… இதுல காயம்பட்ட கையின்னு கூட பார்க்காம கல்லு மேலயே ஓங்கி குத்தி எக்ஸ்ட்ரா வலியை வேற வாங்கிக்கிட்டு வந்திருக்க… உனக்கு இது தேவையா…’ என புலம்ப தான் முடிந்தது அபியால்..
புரண்டு புரண்டு படுத்தவன் அதற்கு மேல் முடியாது எழுந்து மாடியை நோக்கி நடந்தான். உள் பக்கம் தாழிடப்பட்டிருந்தது அந்த இரும்பு கேட்.
கேட்டை முறைப்போடு பார்த்தவன் பல்லைக் கடித்துக்கொண்டு இடதுகையால் கேட்டை திறக்க, கிரீச்சென்ற சத்தத்தில் திறந்து கொண்டது. இரவு நேர அமைதியில் இரும்பு கதவு திறக்கும் சத்தம் கீழ் தளம் வரைக்கும் கேட்டது.
அது தனது அறையில் உறங்கி கொண்டிருந்த ஆனந்திக்கும் கேட்டது. பட்டென கண்களை திறந்தாள்.
அன்றைய தினத்திற்கு பிறகு பெண்ணின் ஆழ் மனம் விழித்து கொண்டே தான் இருந்தது. அதுவும் சின்ன சத்தம் கேட்டாலே விழித்து எழுந்து கொள்பவளுக்கு இரும்பு கேட் திறக்கும் சத்தத்தில் எழ மாட்டாளா என்ன? பட்டென எழுந்து அமர்ந்தவள் அறைக் கதவைப் பார்த்தாள். லேசாக திறந்திருக்க திக்கென்றானது ஆனந்திக்கு…
‘ பசங்க வருவாங்கன்னு நீ தானே ஓபன் பண்ணி வைச்சு படுத்த…’ மனம் கூறிய பின்னே தான் அவளுக்கு நினைவே வந்தது.
ஆம் சீதாவின் அறையில் உறங்கி கொண்டிருக்கும் பிள்ளைகள் எப்பொழுது வேண்டுமானாலும் தனது அறைக்கு வருவார்கள் என்று நினைத்தவள் இன்று அறைக்கதவை லேசாக திறந்து வைத்து தான் உறங்கினாள்.
மானசீகமாக தலையில் தட்டிக் கொண்டவள் எழுந்து வெளியில் சென்றாள் “இந்த நேரத்தில யாரு மாடிக் கதவை திறந்தது…பசங்களா இருக்குமா?…” என நினைத்த கணம் அவளது கால்கள் சீதாவின் அறையை நோக்கி சென்றது…
சீதாவின் அறை எப்பொழுதும் லேசாக திறந்து தான் இருக்கும். கதவை திறந்து உள்ளே சென்றாள். மூவரும் ஆழ்ந்த உறக்கத்தில் இருந்தனர்.
“அப்ப மேல போனது யாரா இருக்கும்…” என நினைத்தவளின் மனமோ ‘ஒருவேளை திருடனா இருக்குமோ?…’ என்றது.
அடுத்த நிமிடம் எதைப் பற்றியும் யோசிக்காமல் பிரிக்கப்படாத காரப் பொடி பாக்கெட்டை கையில் எடுத்தபடி மாடியை நோக்கி நடந்தாள்.
அங்கு மாடியில்….
இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
1
+1
10
+1
4
+1
1

