
உயிர் – 21
அவளின் கோபம் அதிகரிக்கவும் வார்த்தைகளும் சரளமாக வந்து கொட்டின.
முன்பெல்லாம் அவனிடம் பேசவே அத்தனை தயக்கமாக இருக்கும். எண்ணி எண்ணி ஒன்று இரண்டு வார்த்தைகளாக கோர்த்து பேசுபவளிடத்திலோ இப்பொழுது வார்த்தைகள் மண்டி கிடந்தது.
அவளுக்குள் அத்தனை கேள்விகளும், சந்தேகங்களும் அவனிடம் கேட்க வேண்டிய தேவை வேறு இருக்க.
மற்றது எதைப் பற்றியும் சிந்திக்காமல் அவனிடம் சரளமாக பேச தொடங்கி விட்டாள்.
அதற்கு மற்றொரு காரணம் ஆதவ்வின் எளிமையான அணுகுமுறையாகவும் கூட இருக்கலாம்.
ஒருவேளை, அவனும் கோபமாக முன்பு போல் இருந்திருந்தால் இத்தனை தூரம் அவனிடம் பேசி இருக்க மாட்டாளோ என்னவோ..
அவனின் முன்பு தன் மார்புக்கு குறுக்கே கைகளை கட்டியவாறு அவனை நேர் பார்வை பார்த்தவள், “சரி, எனக்கு உங்க கிட்ட கொஞ்சம் பேசணும்” என்றாள் நேரடியாக.
எப்படியும் அவள் தன்னிடம் சண்டையிடுவாள் என்று எதிர்பார்த்தான் தான். ஆனால், இவளோ இத்தனை தெளிவாக பேச வேண்டும் என்று கூறுகிறாளே என்று எண்ணியவன்.
அவளைப் போன்றே தன் கைகளை மார்புக்கு குறுக்கே கட்டியவாறு அவளை நேர் பார்வை பார்த்துக் கொண்டு நின்றவன், “பேசலாமே..” என்றான் தன் ஒற்றைக் கண்ணை சிமிட்டி சீண்டலாய்.
“இப்போ எதுக்காக இந்த கல்யாணம்?”.
“திரும்பத் திரும்ப எத்தனை தடவை தான் நீ இதையே கேட்ப.. எனக்கு உன்ன பிடிச்சிருக்கு” என்றவன் முடிப்பதற்குள்ளாக முந்தி கொண்டவள், “உங்களுக்கு மட்டும் பிடிச்சா போதுமா.. எனக்கு பிடிக்க வேண்டாமா?” என்றாள் வெடுக்கென்று.
“ம்ம்.. பிடிக்கணும் தான். கண்டிப்பா பிடிக்கணும்.. போகப்போக பிடிக்கும்” என்றான் ஒரு மாதிரியான குரலில்.
“ம்ம்ச்ச்.. இங்க பாருங்க எனக்கு இப்போ இந்த கல்யாணத்துல எல்லாம் கொஞ்சம் கூட இன்ட்ரஸ்ட் இல்ல. அதுலயும் உங்க மேல.. கொஞ்சம் கூட இன்ட்ரஸ்ட் இல்ல. எனக்கு இங்க எதுவும் பிடிக்கல. எனக்கு.. எனக்கு இந்த சொந்தமே வேண்டாம்னு நினைச்சேன். நான் கேம்பஸ்ல செலக்ட் ஆகி இருக்கேன். எனக்கு சென்னைல வேலை கிடைச்சிருக்கு. அம்மாவோட அங்க போகணும்னு நினைச்சேன். என்னை இப்படி கொண்டு வந்து மாட்டி விட்டு இருக்கீங்களே.. இப்போ.. இப்போ நான் என்ன பண்றது?”.
“வாவ்! சூப்பர்! கங்கிராஜுலேஷன்ஸ்.. வேலை கிடைச்சிடுச்சா” என்று அனைத்தையும் தெரிந்து கொண்டே ஒன்றும் அறியாதவன் போல் அவளின் கையை வம்படியாக பிடித்து கை குலுக்கி அவளுக்கு வாழ்த்து சொல்லவும்.
இவன் உண்மையிலேயே தெரியாமல் தான் கூறுகிறானோ என்று நினைத்துக் கொண்டாள்.
“ஆமா, வேலை கிடைச்சிருக்கு. இனி இங்கிருந்து போயிடலாம்னு நினைச்சேன். ஆனா, திரும்பவும் என்னை நீங்க எதுக்கு இங்கேயே திணிக்கிறீங்க?”.
“இப்ப மட்டும் என்ன குறைஞ்சுது. யார் உன்னை இங்கிருந்து போக கூடாதுன்னு சொன்னது?” என்றதும்.
அவனை புரியாமல் பார்த்தவள், “என்ன சொல்றீங்க?”.
“நீ சென்னைக்கு போய் உன் வேலையை பாரு”.
“ஆங்!” என்று மீண்டும் அவனை நம்பாத பார்வை பார்த்தாள்.
இவன் உண்மையிலேயே தான் கூறுகிறானா என்ற சந்தேகம் இருந்தாலும், கொஞ்சமே கொஞ்சம் மனதிற்குள் இது உண்மையாக இருக்குமோ என்ற ஆசையும் துளிர்விட்டது.
“என்ன அப்படி பாக்குற? நான் நெஜமா தான் சொல்றேன். நீ சென்னைக்கு போய் உன் வேலையை பாரு. நானும் அப்படியே உன்னோடவே வந்துடறேன்” என்றதுமே அவன் வேண்டுமென்று தான் கூறுகிறான் என்பது இப்பொழுது அவளுக்கு விளங்கி விட்டது.
“என்ன விளையாடுறீங்களா?”.
“நான் என்ன விளையாடுறேன். ஏன் புருஷன் சம்பாதிச்சு பொண்டாட்டி தான் வீட்டை பாக்கணுமா? பொண்டாட்டி சம்பாதிச்சா புருஷனால வீட்டை பார்த்துக்க முடியாதா என்ன.. நீ வேலைக்கு போய் சம்பாதிச்சிட்டு வா. நான் நம்ம குழந்தைகளை பார்த்துக்கிட்டு வீட்டிலேயே இருக்கேன். எப்படியும் நாலைஞ்சு குழந்தைகளாவது பெத்துப்போம். அவங்களையும் பார்த்துக்க ஆள் வேணும்ல. நான் வீட்டை பார்த்துக்கிறேன்” என்றவனின் கூற்றில் அவனை அதிர்ந்து பார்ப்பது இப்பொழுது அனுவின் முறையாகிற்று.
“என்ன?” என்று அவள் வாயை பிளக்கவும்.
“உனக்கு இப்போ என்ன தான் டி பிரச்சனை. அதான் வேலைக்கு போனு சொல்லிட்டேன்ல. ஓ! ஒருவேளை நான் பார்க்க ராஜகுமாரன் மாதிரி இல்லையோ?” என்று தன் கைகள் இரண்டையும் விரித்தவாறு தன்னைத்தானே மேலிருந்து கீழ் ஒரு முறை சுய அலசல் செய்தான்.
அதில், அவனை அவள் புரியாமல் பார்க்கவும்.
“என்ன ராஜகுமாரன் மாதிரி இருக்கேன் தானே?”.
“ஆங்!” என்று திடுக்கிட்டு விழித்தாள்.
சட்டென்று அவளுக்கு மூளையில் எங்கோ பொறி தட்டுவது போல் இருந்தது.
தன் கீழ் அதரத்தை பற்கள் கொண்டு கடித்தவாறு அவளை பார்த்தவன், “உன் அம்மா சொல்லுவாங்கல்ல.. உன்ன கட்டிக்க அந்த ராஜகுமாரனே வருவான்னு. ஒருவேளை, என்னை பார்த்தா உனக்கு ராஜகுமாரன் மாதிரி தெரியலையோ.. அதனால ரிஜெக்ட் பண்றியா?” என்றவாரே அருகில் இருந்த ஆளுயர கண்ணாடியில் அவளின் கையை பிடித்து தன்னோடு அழைத்து சென்று நின்றவன்.
இருவரின் பிம்பத்தையும் கண்ணாடியில் பார்த்தவாறு, “பாரு, நல்லா ஹைட் அண்ட் வெயிட்டா ராஜகுமாரன் போல தானே இருக்கேன்” என்றான் தன் சிகையை கோதியவாறு.
அவளோ ‘ஆ’வென வாயை பிளந்து கொண்டு அவனை தான் பார்த்துக் கொண்டு நின்று இருந்தாள்.
இதெல்லாம் எப்படி இவனுக்கு தெரிந்தது என்று குழப்பம் வேறு.
“அழகியே உனைப்போலவே அதிசயம் இல்லையே..
ராதை உன் பேரைச்சொன்னேன் அவிழ்ந்தது முல்லையே..
கார்த்திகை மாதம் போனால் கடும்மழை இல்லையே..
கண்மணி நீயில்லையேல் கவிதைகள் இல்லையே..
நீயென்ன நிலவோடு பிறந்தவளா….
பூவுக்குள் கருவாகி வளர்ந்தவளா….” என்று கண்ணாடியினோடு அவளைப் பார்த்துக் கொண்டே பாடியவன், அவளை தன் கை வளைவுக்குள் அவள் அறியாமலேயே கொண்டு வந்திருந்தான்.
அவளுக்கு தான் இருக்கும் நிலை விளங்கவில்லை. அவனின் குரல் மொத்தமாக அவளை மயக்கி இருந்தது.
அவன் பாடி முடியும் வரையிலும் அனைத்தையும் மறந்து அவனையே பார்த்துக் கொண்டு நின்றிருந்தாள்.
சட்டென்று அவன் பாடுவதை நிறுத்தவும் தான் சுயம் பெற்றவளிற்கு மண்டையில் பல்ப் எரிய.
“அப்போ.. அப்போ.. அன்னைக்கு மால்ல நீங்க பாடுனது.. எனக்கு..” என்றவள் அதற்கு மேல் எப்படி கேட்பது என்று தெரியாமல் விழிக்கவும்.
அவள் தொடங்கிய கேள்வியை, “உனக்காக தான்!” என்று முடித்திருந்தான் ஆதவ் கிருஷ்ணா.
“அப்போ அக்காவுக்காக இல்லையா?”.
“உன் அக்காவுக்காக தான் நான் பாடுனேன்னு உன்கிட்ட எப்போவாவது சொன்னேனா?”.
“இல்ல.. ஆனா, அப்போ அக்காவுக்கும் உங்களுக்கும் கல்யாணம்னு பேசிக்கிட்டதால நீங்க அக்காவுக்காக தான் பாடுறீங்களோனு நினைச்சேன். அப்போ நீங்க என்னை தான் பாத்தீங்களா?”.
“ஏன்.. உனக்கு நான் வேற யாரையோ பார்க்கிற மாதிரி தெரிஞ்சுதா?” என்றான் தன் ஒற்றை புருவத்தை ஏற்றி கேள்வியாக.
“இல்ல.. என்னை பாக்குற போல தான் ஃபீல் ஆச்சு. ஒருவேளை, அக்காவை பார்க்கிறது என்னை பார்க்கிற போல தோணுதோன்னு..”.
“எல்லாத்தையும் தப்பு தப்பாவே நீ புரிஞ்சுகிட்டா நான் என்ன பண்ண முடியும்?” என்று அவன் தன் மற்றைய கையால் தலையை கோதவும்.
அப்போது தான் தான் இருக்கும் நிலையை உணர்ந்தவள், அவனின் கையை பட்டென்று தட்டி விட்டு விலகி நின்றாள்.
அவளின் செயலில் இவனுக்குள் குறுகுறுப்பு தோன்ற. தன் கையை அவளின் கழுத்தை சுற்றி மாலையாக கோர்த்தவன்.
அவளின் விழிகளை பார்த்துக் கொண்டே, “இங்க பாரு, சின்ன வயசுல இருந்து உன்ன நிறைய அவமானப்படுத்தி இருக்காங்க. அசிங்கப்படுத்தி இருக்காங்க. அதுக்காக இப்ப நான் உன்னை கல்யாணம் பண்ணி உன்னுடைய அவமானத்தை எல்லாம் துடச்சி எடுக்க போறேன், உன்னுடைய கௌரவத்தை மீட்டு கொடுக்க போறேன்னு டயலாக் எல்லாம் பேச மாட்டேன்.
அப்படி எந்த ஒரு எண்ணமும் என் மனசுல இல்லாம தான் உன் மேல எனக்கு காதல் வந்துச்சு. அது தான் உண்மையான காதல்.. அப்படி தான் எல்லாருக்குமே வரும். எனக்கும் அப்படித்தான் வந்துச்சு. எங்க.. எப்போ.. எப்படி எல்லாம் தெரியாது.
நீ என்னை பார்த்து விலகி ஒதுங்கி போனதால கூட உன் மேல ஒரு வித ஆர்வம் வந்துச்சோ என்னவோ..
உன்ன ரொம்ப பிடிக்க ஆரம்பிச்சிடுச்சு. உன்னை காதலிக்கவும் ஆரம்பிச்சிட்டேன். இதோ.. இப்போ கல்யாணமும் பண்ணிக்கிட்டேன். நான் உன்னை காதலிச்சது உனக்காக மட்டும் தான். உன்னை பிடிச்சு மட்டும் தான்!” என்று அவளின் மனதில் நன்கு பதிய வைக்க வேண்டி அழுத்தமாக கூறினான்.
“ஒரு கேக் கட்டிங்ல கூட என்னை சேர்த்துக்க முடியாதுன்னு வெளியில துரத்துனவர் தான நீங்க.. இப்போ மட்டும் உங்க மாமாவுடைய ரெண்டாம் தாரத்து பொண்ண உங்களுக்கு பிடிச்சிருச்சா?” என்னும்பொழுதே அவளின் கண்கள் கலங்கி இருந்தது.
“தப்பு தான். அப்போ எது சரி, எது தப்புன்னு சரியா யோசிக்கிற அளவுக்கு மெச்சூரிட்டி இல்ல. அதே சமயம் அப்போவே உன் மேல இப்படி காதல் வரும்னு தெரிஞ்சிருந்தா உன்ன போக விடாம என்னோடவே வச்சிருந்திருப்பேனோ என்னவோ.. நான் பண்ணது சரின்னு சொல்ல வரல. அதுக்காக அதையே யோசிச்சுகிட்டே இருக்கணும்னு இல்லை இல்ல”.
“உங்களால ஈஸியா மறக்க முடியுது. ஆனா, என்னால அப்படி ஈஸியா மறக்க முடியாது” என்றவாறு அவள் கோபமாக தன் முகத்தை திருப்பிக் கொள்ளவும்.
எங்கிருந்து தப்பித்து ஓட வேண்டும் என்று நினைத்தாளோ, அவளை அதற்குள்ளேயே நன்கு சிக்க வைத்து விட்டானே என்ற ஆதங்கம் அவன் மேல் நிறையவே இருக்கிறது.
ஆனால், இப்படி பேசவிடாமல் வாய் அடைப்பவனிடம் என்ன சண்டையிட்டு விட முடியும். பதிலுக்கு சண்டையிட்டாலாவது சண்டையிடலாம். இங்கே தான் அதற்கும் அவன் வாய்ப்பு இல்லாமல் செய்கிறானே..
அவளின் முகத்தை பற்றி தன்னை பார்க்கச் செய்தவன், “உன்னை யாரும் மறக்க சொல்லலையே.. ஆனா, மன்னிக்கலாம் இல்ல” என்றவன் சற்று இடைவெளி விட்டு தன் குரலை செறுமியவாறு, “சரி, கொஞ்ச நேரம் படுக்கலாமா.. ரொம்ப டயர்டா இருக்கு” என்றவாறு நேராக சென்று காட்டிலில் படுக்கவும்.
அவளோ அப்படியே அந்த அறையை சுற்றி பார்த்துக்கொண்டு நின்றிருந்தாள்.
“என்ன என்னோட ஒரே கட்டில்ல படுக்க முடியாதுன்னு அடுத்த சீனை ஆரம்பிச்சிடாத. நான் உன்ன கல்யாணம் பண்ணி கூட்டிட்டு வந்தது என்னுடைய மனைவியா வாழுறதுக்காக தான். வேலைக்காரியா இந்த வீட்ல ஒரு மூலையில் இருக்கிறதுக்காக கிடையாது. எனக்கு இந்த வீட்ல இருக்க எல்லா உரிமையும் உனக்கும் இருக்கு! எனக்கு இந்த ரூம்ல இருக்க எல்லா உரிமையும் உனக்கும் இருக்கு! உரிமையானவங்க அந்த உரிமையை எடுத்து பழகுனா தான் அதோட மதிப்பும், மரியாதையும் அவங்களுக்கு கிடைக்கும். ஒதுங்கி போறன்னு நீயே உங்க அம்மா மாதிரி ஆகிடாத”.
“எனக்கு இந்த டிரஸ், நகை எல்லாம் கசகசன்னு இருக்கு சேஞ்ச் பண்ணனும்”.
“அப்போ கழட்டிடலாமா?” என்றவாறு ஒற்றை கையை தலைக்கு முட்டுக் கொடுத்தவாறு அவளைப் பார்த்துக் கொண்டே பக்கவாட்டாக திரும்பிப் படுத்தவன், தன் ஒற்றை கண்ணை சிமிட்டி கூறவும்.
அவளுக்கோ நெஞ்சம் படபடவென அடித்துக் கொண்டது.
இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
2
+1
7
+1
1
+1

