
அத்தியாயம் 22
அபியின் அழுத்தமான பார்வை தன்னை துளியும் பாதிக்கவில்லை என்பதைப் போல காற்றில் மிதந்த கேசத்தை செவியோரம் ஒதுக்கியபடி சுற்றிலும் ஒரு பார்வை பார்த்தவள் பிள்ளைகளிடம் குனிந்து “நம்ம பஸ்ல போகலாமா?…” எனக் கேட்டாள்.
இதுநாள் வரை பேருந்தில் சென்றதில்லை என்பதாலா? இல்லை தந்தை ஓட்டி வந்த காரின் அதீத வேகத்தாலா? ஏதோ ஒன்று அவர்களைப் பேருந்தில் செல்ல துண்டியது. ஆனந்தி கேட்டதும் சரியென்று தலையை ஆட்டினார்கள்.
இருவரும் சரியென்றதும் அதற்கு மேல் அவ்விடத்தில் நிற்கவில்லை அவள். மெல்லிய புன்னகையுடன் இருவரின் கையை பிடித்தவள் காரை விட்டு விலகி நடக்க அவளுக்குப் பின்னால் “ஆனந்தி…” என்ற சீதாவின் குரல் காற்றில் தான் கலந்தது.
அவளின் கோபம் புரியத் தான் செய்தது சீதாவிற்கு. ஆனால் இப்படிப் பாதி வழியிலேயே பிள்ளைகளோடு இறங்கிச் சென்றால் இதையும் எவராவது காணொளி எடுத்து இல்லாத கதைகளைப் பரப்பி விடுவார்களோ என்ற பயம் அவரை சூழ்ந்தது. மனதில் எழுந்த கலக்கம் அவரது வதனத்திலும் பிரதிபலிக்கப் பக்கவாட்டில் அமர்ந்திருந்த அபியை பார்த்தார். அவனோ முகம் இறுக அமர்ந்திருந்தான்.
தாயின் பார்வை தன் மீது படிவது உணர்ந்தாலும் அவரை திரும்பிக் கூட பார்க்கவில்லை அவன். அபிக்கு தாயின் மீதும், திட்டமிட்டு தன்னை திருமணம் செய்து கொண்ட ஆனந்தியின் மீதும் அத்தனைக் கோபம் வந்தது. அதற்கு மேல் பாதி வழியிலேயே பிள்ளைகளுடன் இறங்கிச் சென்றது இன்னும் கோபத்தையும், வெறுப்பையும் கொடுத்தது.
கீழ் இதழ்களைக் கடித்து கேசத்தை அழுத்திக் கோதிக் கொண்டவன் மனமோ ‘பிள்ளைகளிடம் செல்’ எனக் கட்டளையிட்டது. மனதின் கட்டளையை துளியும் காதில் வாங்கிக்கொள்ளாமல் வாகனத்தை உயிர்ப்பித்தான். முன்பிருந்த வேகத்தை விட அதீத வேகத்தில் வாகனத்தைச் செலுத்தினான். அதனைப் போலவே அவனது நினைவுகளும் பின்னோக்கி நகர்ந்தது…
இங்குப் பிள்ளைகளை அழைத்து வந்தவளின் மனம் நெருப்பாய் கொதித்தது. ‘கொஞ்சம் கூடவா குழந்தைகளின் பயம் அவன் கண்களுக்குத் தெரியவில்லை?..’
குழந்தைகள் பயந்து தன் மடியில் படுத்ததும் வாகனத்தின் வேகத்தை நிச்சியம் குறைப்பான் என்று நினைத்தாள். ஆனால் வாகனத்தின் வேகம் கூடியதோ தவிரக் குறையவில்லை… இந்நேரம் தான் மட்டும் பிள்ளைகளைப் பிடிக்காமல் விட்டிருந்தால்? அப்படி நினைக்கவே பயமாக இருந்தது ஆனந்திக்கு.
கண்முன்னே அவன் வாகனம் ஓட்டி வந்த விதம் நினைவு வர, கோபம் கோபமாக வந்தது. பற்களைக் கடித்து தன் கோபத்தை அடக்கியவள் நேராக பேருந்து நிறுத்துமிடத்திற்கு வந்தாள்.
மூவரும் வந்து நின்ற சில நிமிடங்களில் இவர்கள் செல்லும் பேருந்து வந்து விட பிள்ளைகள் இருவரையும் பேருந்தில் ஏற்றி விட்டு தானும் ஏறிக் கொண்டாள்.
சிறு வயதிலிருந்தே ஆனந்திக்குப் பேருந்தில் பயணம் செய்வது சர்வ சாதாரணம் என்பதால் தற்போது பிள்ளைகளை அழைத்து செல்ல பெரியதாக எவ்வித சிரமும் இல்லை.
சோழாவை மடியில் அமர்த்தி குந்தவியை தன் அருகில் அமர வைத்துக் கொண்டவள் இருவரிடமும் பொதுவாக எப்படி பயணச்சீட்டு வாங்குவது? யாரிடம் கேட்க வேண்டும்? என்னவென்று கேட்க வேண்டும்? என்று சில தேவையானதை அவர்களுக்குப் புரியும் படி சொல்லிக் கொடுக்க ஆரம்பித்தாள்.
அவள் பேச பேச முன்பிருந்த பயம், சோர்வு அனைத்தும் நீங்கி சிறியவர்கள் உற்சாகமாகிவிட பிள்ளைகளுக்கே உரித்தான கேள்விகளைக் கேட்டபடி அவளுடன் பயணிக்க ஆரம்பித்தனர். ஒருபுறம் பிள்ளைகளின் கேள்விக்குப் பதில் கூறிக் கொண்டே வந்தாலும் மற்றொரு புறம் அவளின் நினைவுகள் அனைத்தும் நேற்றிரவை நோக்கிப் பயணித்தது.
*****
“சார் ஸ்டேஷன் வந்து ஒரு கம்ப்ளைன்ட் எழுதி குடுங்க, அடுத்து நடக்க வேண்டியதை நாங்க பாத்துக்கிறோம்…”எதிரில் நின்ற ராமனிடம் கூறினார் காவலர்.
“அண்ணா கம்ப்ளைன்ட் எல்லாம் வேண்டாம்…” என மெல்லிய குரலில் ராமிடம் கூறினாள் ஆனந்தி.
சட்டெனப் பக்கவாட்டில் குனிந்து நின்ற தங்கையைப் பார்த்தான் ராமன். நிமிர்ந்து தன் அண்ணனைப் பார்த்து வேண்டாம் என்பதைப் போல் தலையாட்டினாள். அவள் எதற்காக வேண்டாமென கூறுகிறாள் என ராமனுக்கு புரிந்தது…
எதிரில் நின்ற காவலரை பார்த்து
“இல்லை சார் சின்ன பசங்க எல்லோரும் படிச்சிட்டு இருக்காங்க. இப்ப கம்ப்லைண்ட் கொடுத்தா அவங்க லைஃப் ஸ்பாயிலாயிடும். அது மட்டுமல்ல எல்லாரும் சொந்தக்கார பசங்க கம்ப்லைண்ட் கொடுத்தா நாளா பின்ன ஒருத்தருக்கு ஒருத்தர் பாத்துக்க வேண்டியதிருக்கும் சார். சோ கேஸ் எல்லாம் வேண்டாம்…” என்றான் மெல்லிய குரலில்.
அண்ணண், தங்கை இருவரையும் அழுத்தமாகப் பார்த்த காவலர் “சின்ன பசங்க செய்யற காரியமா சார் இது? நீங்க பெருமையா கம்ப்லைண்ட் வேண்டான்னு சொல்றீங்க… இதுவே இந்த பொண்ணுக்கு ஏதாவதாயிருந்தா இப்படி கம்ப்லைண்ட் வேண்டாண்ணு சொல்லிருப்பீங்களா?…” எனப் பல்லைக் கடித்தபடி கேட்டார். அவரின் கேள்விக்குப் பதில் கூறாமல் அமைதியாக நின்றான் ராமன்.
அவனை ஒரு பார்வை பார்த்துவிட்டு நால்வரிடமும் திரும்பி “ஸ்டேசனுக்கு வந்து எழுதி குடுத்துட்டு போங்க டா…” என்றவர் கூனிக்குறுகி நின்றிருந்த நால்வரின் பெற்றவர்களிடம்
“புள்ளைங்க மேல நம்பிக்கை இருக்கலாம் தப்பில்லை ஆனால் கண்மூடித்தனமா அடுத்தவன் வீட்டுப் பிள்ளை மேல தப்பு சொல்ற அளவுக்கு இருக்க கூடாது…” என்று கடினமாகவே கூறிவிட்டு இளைஞர்கள் நால்வரையும் அழைத்துச் சென்றார். செல்லும் காவலரைக் கூட சிலர் வழிமறித்து தங்களின் கேள்விகளை அடுக்க அதற்கு சுருக்கமாகப் பதில் கூறியபடி அவர்களைக் கடந்து விட்டிருந்தனர் காவலர்கள்.
காவலர் வாகனம் புறப்பட மெல்ல மெல்லக் கூட்டம் களையாரம்பித்தது. அதே சமயம் “ஆனந்தியை என் பையனுக்கு எப்பவோ பேசி முடிச்சுட்டோம்.நாள் குறிக்கத் தான் இங்க வந்தோம்…” அங்கிருந்த அதீத சத்தத்தையும் மீறி ஒலித்தது சீதாவின் குரல்.
தன் அண்ணனின் பின் நின்று கொண்டிருந்த ஆனந்தியின் காதிலும் சீதாவின் பேச்சு கேட்கத் தூக்கி வாரிப் போட்டது. அனைத்தும் முடிந்து விட்டது என நினைக்கும் நேரம் ‘இது முடிவல்ல’ எனச் சொல்லாமல் சொல்லியது போலிருந்தது சீதாவின் செயல்…
ஆனந்தியின் பார்வையை உணர்ந்தாலும் அப்போதைக்கு அவளின் வாழ்க்கை மட்டுமே சீதாவின் கண்களுக்குத் தெரிந்தது…
மாயோளின் வாழ்க்கை அந்தரத்தில் தொங்கிக் கொண்டிருப்பது போல் தோன்றியது சீதாவுக்கு… என்ன தான் வாலிபர்கள் நால்வரும் உண்மையை ஒப்புக் கொண்டாலும் சில மணி நேரங்கள் குடோனில் இருவரும் தனித்திருந்தனர் என்பது பேச்சு பொருளாகியிருப்பது புரிந்தது. அதை மனதில் வைத்துத் தான் ஆரம்பித்திலேயே அவளின் சம்மதத்தைக் கேட்டு நின்றார். அவளின் மறுப்பில் மனம் சிறிதளவு ஏமாற்றமாக உணர்ந்தாலும் இது அவளின் விருப்பம் என்று விட்டுவிட்டார்.
ஆனால் தற்போது காவல்துறை, பத்திரிக்கையாளர்கள், யூடூப்பர்ஸ் என்று அனைவருக்கும் விசயம் சென்றடைந்து விட்டது. தன் மகன் பெயர் மட்டுமல்லாமல் ஆனந்தியின் பெயரும் அடிப்படுவது அவரால் பொறுக்க முடியவில்லை…
அர்ஜுனனுக்குக் கிளியின் கண்கள் மட்டுமே இலக்காகத் தெரிந்தது போலச் சீதாவிற்கு மகன் மற்றும் ஆனந்தியின் வாழ்க்கை மட்டுமே கண்களுக்குத் தெரிந்தது.
அதே நேரம் ‘இனி இந்த பெண்ணை யார் திருமணம் செய்து கொள்ள ஒப்புக் கொள்வார்கள்? அப்படியே அனைத்தும் அறிந்து திருமணத்தை ஏற்றுக் கொண்டாலும் என்றாவது ஒருநாள் அவளைச் சந்தேகப்பட்டால் அதைப் பேதை நெஞ்சம் தாங்குமா? என்ற கேள்வி கண்முன்னே மின்னி மறைந்தது. ஒரு பெண்ணாய் மட்டுமல்லாமல் ஆனந்தியின் தாயாய் நின்று யோசித்தார் சீதா.
அதே சமயம் ஆனந்தியின் மேல் படிந்த கரையை மகனைத் தவிர வேறு யாரால் நீக்க முடியும் என்ற எண்ணம் தோன்றியது. கணம் எவரைப் பற்றியும் யோசிக்காமல், மகன் மற்றும் ஆனந்தியின் விருப்பத்தை பற்றி தெரிந்தும் “ஆனந்தியை என் பையனுக்கு எப்பவோ பேசி முடிச்சுட்டோம்.நாள் குறிக்கத் தான் இங்க வந்தோம்…” என்று விட்டார்.
அந்த நேரம் அபியின் உணர்வுகளை மட்டுமல்ல அவனுடன் இணைத்து வைக்க நினைக்கும் பெண்ணின் உணர்வுகளைப் பற்றியும் யோசிக்க தவறி விட்டார் என்பது கசப்பான உண்மை.
“கொஞ்ச நாள்ல புருஷன் பொண்டாட்டியா தெரிய வேண்டியவங்க இப்படியொரு பெயரை வாங்குவான்னு நினைக்கவே இல்லை… ஒரு நிமிசம் கூட இனி அந்த பேரோட எங்க பசங்க இருக்க வேண்டாம்… அதுக்காக தான் நாங்க ஒரு முடிவு எடுத்து இருக்கோம்…” என்றவர் ராமை பார்த்தார்.
அவர் பார்வைக்கு ஏற்ப அனைவரின் கேமராவும் திரும்பியது. சட்டென கேமராக்களின் கவனம் தன்னிடம் வருமென உணராத ராமனோ திகைத்து விழித்தான்.
ராமனைப் புன்சிரிப்புடன் பார்த்த சீதா மற்றவர்களைப் பார்த்து “இப்பவே எங்க பசங்க இரண்டு பேருக்கும் கல்யாணத்தைப் பண்ணி வைக்க முடிவு பண்ணியிருக்கோம்…” என்றார்.
சீதா இப்படி கூறுவார் என்று சம்பந்தப்பட்ட இருவருமே எதிர்பார்க்கவில்லை என்பது அவர்களின் திகைப்பிலேயே தெரிந்தது. நிமிடம் இருவரின் திகைப்பையும், அதிர்ச்சியையும் தனக்குச் சாதகமாகப் பயன்படுத்திக் கொண்டார் சீதா.
“ராம் இப்ப அம்மனுக்கு அலங்கார பூஜை தானே நடந்துட்டிருக்கும்…” என கேட்டார்.. அவரின் கேள்விக்கு தன்னாலேயே ஆமென தலையாட்டினான் ராமன்.
“என்னங்க அவங்க பாட்டுக்கு அது இதுன்னு பேசிட்டு இருக்காங்க… நீங்க என்னவோ தலையை தலையை ஆட்டிட்டு இருக்கீங்க? நம்ம புள்ளை வாழ்க்கை?…” என ஏதோ கூற வந்த செண்பகத்தின் பேச்சு ராமின் முறைப்பில் நின்றது.
கணவனின் செயலில் இத்தனை நேரம் பேச்சிழந்து நின்றவள் சீதாவின் கத்தலுக்குத் தான் நினைவு திரும்பினாள். உடனே மெல்லிய குரலில் தன் மறுப்பை ராமனிடம் சொல்லவும்,அது அவனின் முறைப்பில் நின்றது.
“ஆனா இதுல அந்த பொண்ணுக்கும், உங்க மகனுக்கும் விருப்பம் இல்லை போலயே…”இருவரின் திகைப்பையும் பார்த்தப்படி கேட்டான் ஒருவன்.
“என்னமா என் பையனைக் கல்யாணம் பண்ணிக்க உனக்கு விருப்பமில்லையா? நீ அப்படி ஏதாவது சொன்னாயா?..” என புருவத்தை உயர்த்தி கேள்வியாகக் கேட்டார் சீதா.
முன்பிருந்த திகைப்பும், அதிர்ச்சியும் முற்றும் முழுதாக விலகும் முன் சீதா ஏதோ கேட்க அதனை சரியாகப் புரிந்து கொள்ளாமல் இல்லையென்று தலையாட்டினாள். சீதாவிற்கு நன்றாகவே புரிந்தது ஆனந்தி தன் கேள்வியை முழுவதுமாக உள்வாங்கவில்லை என்று.
அதே சமயம் ஆனந்தியிடம் கேள்வி எழுப்பியவர் மகனைத் திரும்பிக் கூட பார்க்கவில்லை . சொல்லப்போனால் அவனுக்கு அந்த வாய்ப்பை கூட அளிக்கவில்லை என்பது தான் உண்மை…
“ராம்… அபியையும், ஆனந்தியும் கோவிலுக்கு அழைச்சுட்டு வா…”
என்றவர் பின் தங்களையே ஜூம் செய்த படியிருந்த கேமராக்களை பார்த்து “என் வீட்டு கல்யாணத்துக்கு நீங்க எல்லாரும் வரணும். அதே மாதிரி இங்க நடந்த விசயம் தப்பா வெளிய வராதுன்னு நம்புறேன்…” என்றவர் முன்னால் கோவிலை நோக்கி நடந்தார்.
காவலர்கள் வந்த பின்பே செய்தியாளர்களும், பத்திரிகையாளர்களும் வந்தமையால் அவர்களுக்கு செண்பகத்தின் பேச்சும், செயல்களும் தெரியவில்லை.
அதே நேரம் அவர்களுக்கு வாலிபர்கள் நால்வரின் செயலும், ஆனந்தியின் மறுப்பும் தெரிந்தாலும் தற்போதைய சீதாவின் பேச்சும், அபியின் திருமண செய்தியும் அவர்களின் கண்களை மறைத்து விட்டது…
****
ஏதோ பிரம்மை பிடித்தது போல நின்றிருந்தவனின் அருகில் சென்ற ராமோ “சார்…” என்று தயங்கி அழைத்தான்.
ராமின் குரலில் தன்னிலைக்கு வந்தவன் நிமிர்ந்து எதிரில் நின்றவனை முறைத்தான். தன் முதலாளியின் முறைப்பைக் கண்டுகொள்ளாமல் “போலாம் சார்…” என்றான் சின்ன குரலில்.
அவனை அழுத்தமாகப் பார்த்தவன் ஏதோ சொல்ல வர “அபி, ராம் கூட அப்பறம் பேசிக்கலாம் முதல்ல வா…” என்று அழைத்தார் சீதா. தற்போது தாயிடம் பேசியாக வேண்டுமென நினைத்தவன் ராமனை அழுத்தமாகப் பார்த்துவிட்டு சீதாவை நோக்கி நடந்தான்.
வேக நடையுடன் தாயிடம் சென்றவன்”என்னமா பண்ணிட்டு இருக்கீங்க…” என பல்லைக் கடித்தபடி அவரின் முன் நின்றான்.
அவரோ சாவகாசமாக அபியை பார்த்து “தயவு செஞ்சு ஆனந்தியை கல்யாணம் பண்ணிக்க அபி, இப்ப அவளோட வாழ்க்கை அந்திரத்தில நிக்குது. உன் கால்ல வேணா விழறேன்…” என்றது மட்டுமல்லாமல் சொன்னதை அப்படியே செய்ய “ம்மா…” என்று அதிர்ச்சியில் பின் நகர்ந்தான்.
ஏதாவது கூறி மிரட்டியிருந்தால் கூட அதை பெரியதாக எடுத்திருக்க மட்டானோ என்னவோ.ஆனால் இத்தனை பேருக்கு முன்னால் தாய் தன் காலில் விழுந்தது அத்தனை பாதித்தது…
உண்மையில் அபியின் பார்வைக்கு மட்டுமே சீதா அவனின் காலில் விழுந்தார். ஆனால் மற்றவர்களுக்கு அப்படி தெரிய வாய்ப்பேயில்லை.. ஆம் கீழே விழுந்த கைக்குட்டையையை எடுப்பது போல் தான் இருந்திருக்கும்… என்ன? அதனை உணர வேண்டியவன் தான் எதையும் உணராமல் மிரண்டு போய் நின்றிருந்தான்.
சட்டென கைக் குட்டையை கையில் எடுத்துக் கொண்டவர் அபியை நிமிர்ந்து கூட பார்க்காது
விடுவிடுவென அங்கிருந்து நடந்தார். செல்லும் தாயை ஆழ்ந்து பார்த்தவனுக்கு இனி தாயிடம் பேசி பயனில்லையென்று புரிந்தது.
இதை தடுக்க ஒரே வழி ஆனந்தி மட்டுமே என நினைத்தவன்
பின்னால் திரும்பி ஆனந்தியை பார்த்தான்.
ராம் ஏதோ சொல்ல அதற்கு தலையாட்டியபடி நின்றாள் பெண். புருவங்கள் சுருங்க இருவரையும் பார்த்தவன் அவர்களை நோக்கி நடக்க சீதாவின் “அபி…” என்ற அழைப்பும் அதன் பின்னாலயே “அப்பா…” என்ற அவனின் பிள்ளைகளின் அழைப்பும் கேட்டது… ராமனின் மூத்த புதல்வன் தான் இருவரையும் இங்கு அழைத்து வந்திருந்தான்.
தன்னை நோக்கி வரும் பிள்ளைகளை கைகளில் அள்ளிக் கொண்டவன் அவர்களின் கேள்விக்கு பதிலளித்தபடி மீண்டுமொருமுறை திரும்பி ஆனந்தியை பார்த்தான்.
ஏனோ அந்த நிமிடம் குனிந்து நின்றவள் நிமிர்ந்து அபியை பார்த்தாள். இருவரின் பார்வையும் ஒன்றை ஒன்று தழுவியதோ?…ஏதோ ஓர் உள்ளுணர்வு அவனை அழுத்த சட்டென பார்வையை திருப்பி கொண்டவன் அங்கிருந்து நகர்ந்தான்.
சீதாவை நோக்கி நடந்தாலும் அவன் எண்ணம் முழுவதும் ராம், ஆனந்தியின் பின்னாலயே சுற்றியது… ‘இது எல்லாமே ஏன் இவங்களோட நாடகமாக இருக்க கூடாது?…’ என மதி தன் கேள்வி எழுப்பியதும் சட்டென ஆனந்தியின் மறுப்பு நினைவு வந்தது…
தன்னை குழப்பும் மதியை தலையில் தட்டி அடக்கினான். ‘என்னையா அடிக்கிற இரு உன்னை வைச்சு செய்யறேன்…’ என சபதம் கொண்டதோ அவன் மதி…
மீண்டும் மீண்டும் நடந்த நிகழ்வுகளுடன் ஆனந்தியின் குடும்பம் நடந்த கொண்ட செயலையும், முறையையும் ஒன்றையொன்று
தொடர்புப் படுத்தி விளக்கி கொண்டே இருந்தது. அதன் விளைவு நடந்த அனைத்திற்கும் காரணம் ஆனந்தியின் தான் என்ற முடிவுக்கு வந்திருந்தான் அந்த இளம் தொழிலதிபன்.
*****
சில நிமிடங்களில் தன் அதிர்ச்சியையும், திகைப்பையும் ஒரு மூலையில் மூட்டைக் கட்டிவிட்டு வெளிவந்திருந்தாள் ஆனந்தி. சிலடி தூரத்தில் சென்றுக் கொண்டிருந்த சீதாவையும், அபியையும் நோக்கி நடக்க, அவளை எட்டிப் பிடித்தான் ராமன். தன் அண்ணனை நிமிர்ந்து “ஏன்” என்பதை போல் பார்த்தாள்.
“அண்ணன் எப்பாவது உனக்கு தப்பா ஏதாவது நடக்க விட்டு இருக்கேனா டா…” எனக் கேட்டதும் இப்போது இந்த கேள்வி எதற்கு? என கேட்க தோன்றினாலும் தன்னாலேயே இல்லையென தலையாட்டினாள்.
“என் மேல உனக்கு நம்பிக்கை இருந்தா?உனக்கு நான் நல்லது தான் பண்ணுவேன்னு நீ நினைச்சா? சாரை கல்யாணம் பண்ணிக்கோ ஆனந்தி…” என்றான் அடர்த்தியான குரலில்.
சட்டென நிமிர்ந்து ராமனை பார்த்தவள் திரும்பி அபி செல்லும் வழியை பார்த்தாள். அதே சமயம் பிள்ளைகள் இருவரையும் தூக்கியபடி இவளைத் தான் அவனும் பார்த்தான். நிமிடம் அவன் பார்வையை ஆழ்ந்து பார்த்தவள் என்ன உணர்ந்தாள் என்றே தெரியவில்லை அதை உணரும் முன் அபி பார்வையை திரும்பிக் கொண்டான்.
அதே சமயம் “என் மேல நம்பிக்கை இருந்தா? அபியை கல்யாணம் பண்ணிக்க மா…” மீண்டும் ராமன் கூற,அண்ணனை அடிபட்ட பார்வை பார்த்தாள். ‘உங்க மேல நம்பிக்கை இருக்கிறதுங்காக நீங்க சொல்ற எல்லாரையும் என்னால கல்யாணம் பண்ணிக்க முடியுமா?…’ எனக் கேட்க நாவு துடித்தது. ஆனால் ஒரு வார்த்தை ராமனிடம் கேட்கவில்லை அதற்கு காரணம் அவன் கண்களில் தெரிந்த பரிதவிப்பும், பயமும் தான்.
ஏனோ தங்கையின் வாழ்க்கையை நினைத்து அவனுக்கு பயமாக இருந்தது… காரணம் சமூக வலைதளங்களில் தீயாய் பரவிக் கொண்டிருந்த செய்தி.. என்னதான் நகரத்தில் வாழ்ந்தாலும் அவனும் கிராமத்தான் அல்லவா சமூக வலைதளங்களில் தங்கையின் பெயர் அடிப்பட்டதுமே அவளின் வாழ்க்கையை நினைத்து பயம் கொண்டான். அந்த பயத்தின் முன் ராமனின் படிப்பு கூட பின்னுக்கு சென்றிருந்தது என்பது தான் கவலைக்குரிய விடயம்…
அண்ணனின் கண்களில் தெரிந்த பயமும், படபடப்பும் ஆனந்தியை பேசா மடந்தியாய் மாற்றியது.
இவளின் செயல் நிச்சியம் பைத்தியக்கார தனமாக தான் தெரியும்… படித்த பெண் தானே நீயும்? எனக்கு இந்த திருமணம் வேண்டாமென்று தைரியமாக எதிர்த்து நிற்க வேண்டாம்!.. அண்ணனின் பேச்சைக் கேட்டு திருமணமா அதுவும் இரண்டாதாரமாக… பைத்தியம் பிடித்திருக்கிறாதா உனக்கு… பணம் இருந்தால் எவனுக்கு வேணும்னாலும் முந்தியை விரிப்பியா? என்ன பெண் நீ..?
இப்படியான கூசும் வார்த்தைகளை கேட்க கூடும் என தெரிந்தும் அண்ணனின் இழுப்புக்கு சென்றாள். யார் என்ன கேட்டார்கள், எதற்கு சரியென்றோம், எதற்கு தலையாட்டினோம் இப்படி எதுவும் நினைவில் இல்லை. அனைத்தும் சூனியமாக தான் தோன்றியது ஆனந்திக்கு…
உண்மையில் அபியுடனான திருமணத்தை அறவே வெறுத்தாள். இனி காலம் முழுக்க இவனோடு தான் தன் வாழ்க்கையா? என்ற கேள்வியே அவளின் மனதினை இறுக செய்தது. மனதின் இறுக்கம் தாளாமல் கண்களை கண்ணீர் சூழ்ந்து கொண்டது. உள்ளுக்குள் பெரும் கேவல் எழுவதைத் தடுக்க முடியாது இதழ்களை அழுத்தமாக கடித்து நின்றாள்.
அதே கணம் ஆடவனின் சூடான மூச்சு காற்று அவளின் செவியை வன்மையாக வருடியது “நீ பிளேன் போட்டது போல எல்லாம் நடந்திருச்சுன்னு சந்தோசப்படாத இதுக்கு மேல தான் இந்த அபியோட இன்னொரு முகத்தைப் பார்க்க போற…” என்ற அபியின் வார்த்தைகள் மங்கையின் செவியை தீண்டி சென்றது…
சட்டென நிமிர்ந்து அபியை பார்த்தாள் அவளின் பார்வையை பார்த்தபடி மங்கையின் கழுத்தில் மங்கல நாணை பூட்டினான் அபிநயன்.
இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
2
+1
9
+1
1
+1
