
காலம் தாண்டிய பயணம் 16
இப்படியே இரண்டு நாட்கள் கடந்து மித்ரன் யாழினி இருவரும் எதிர்பார்த்த அந்த ஞாயிரும் வர, அடுத்த நாள் அவளது பிறந்தநாள் என்கிற நிலை…
இன்று கிடைக்கின்றதோ இல்லையோ? நாளை இங்கிருந்து செல்வது என்று அவர்கள் உறுதியாக முடிவெடுத்திருந்தனர்.
இதோ இன்று கோயிலின் பின் கிணற்றுக்கு அருகில் தேவ், யாழினியின் வருகையை எதிர் பார்த்துக் காத்திருந்தான்.
அடுத்த சில வினாடிகளில் அவளும் வந்து விட, “சாவி எடுத்தியா யாழ்?” என்று கேட்டவன் கையை உயர்த்த, அமோதிப்பாய் தலை அசைத்தவளோ அவன் நீட்டிய கரத்தில் சாவியை வைத்திருந்தாள்.
அந்தக் கிணறு பல வருடம் பாவனையில் இல்லை என்பதால் மூடித்தான் வைக்கப்படிருந்தது.
மித்ரன் பலம் கொண்டு முயற்சித்தே அதனைத் திறக்க முடிந்தது, அதற்கே கலைத்துவிட்டான் அவன்.
அவனைப் பார்த்து நமட்டு சிரிப்புடன் “வயசாகிடுச்சுன்னு சொன்னா யாரு கேக்குறா? இப்போ பாருங்க இந்தச் சின்ன வேலைக்கே மூச்சு வாங்குது” என்றவள் வசதியாய் எட்ட நின்று கொண்டாள்.
அவனோ “உனக்கு, வாயில வாஸ்து சரி இல்லைடி, நாளைக்கு என்கூட ஊருக்கு வருவல்ல அப்போ வெச்சிக்கிறேன் உன்ன” என்றவன் உள்ளே இறங்க அவனுடன் அவளும் இறங்கினாள்.
இங்கே இப்படி இருக்க, அங்கே காசிநாதன் வீட்டிலோ வள்ளி வசை பாடிக்கொண்டிருந்தார்.
இரவு ஆரம்பித்தது இன்னும் விடவில்லை…
தினமும் இதனை பேசவிட்டால் அவரால் நிம்மதியாகத் தூங்கவே முடியாது.
“ஊருல இல்லாத பெரிய இவளத் தான் உங்க அப்பா வளர்த்து விட்டிருக்காரு. பொண்ணுனா எப்படி பேசணும்னு கொஞ்சம் கூட ஒரு இது இல்லை, போலீஸுக்கு போவாளாமே! நேத்தும் எங்கிட்ட சொல்லுறா, கால ஒடச்சு அடுப்புல வெச்சிருக்கணும் சிறுக்கிக்கு எவ்வளவு நெஞ்சழுத்தம்” என்று எகிறிக்கொண்டே பேச, காசிநாதனோ அமைதியாகவே இருந்தார்.
நேற்றிரவு யாழினி போலீஸ் அது இதுவென பயம் காட்டி சற்று அதிகமாக பேசியதன் விளைவு தான் இப்போது வரை வள்ளி கொதிப்பது.
வள்ளியை இப்படி காய்ச்சி எடுப்பது யாழினிக்கு பிடித்தமான வேலையும் கூட, எட்டிக்குப் போட்டியாய் பேசி அவர் வாயடைக்க வைத்தால் தான் அன்று அவளது நாளே தொடங்கும்.
திருமண விடயம் தெரியாமலேயே நேற்று அவள் சீண்டி இருக்க, இவருக்கோ பக்கென்றிருந்தது.
தெரிந்து கொண்டாளோ என்னவோ? என பயந்து தான் போனார்.
வள்ளிக்கு எப்படியாவது அவளை தம்பிக்கு கட்டிவைத்து அவள் கொட்டத்தை அடக்க வேண்டுமென்ற எண்ணம்.
ஆனால் காசிநாதனுக்கோ இப்போது அவசரமாய் அதுவும் அவளுக்கே தெரியாமல் நடத்தவிருக்கும் இந்தத் திருமண ஏற்பாட்டில் சிறிதும் விருப்பம் இல்லை. மனைவியின் இத்தனை நாள் புலம்பல் தாங்காமல் தான் சம்மதித்திருந்தார்.
அது தங்கை மேலுள்ள பாசம் என்று நினைத்தால் அது தான் தவறு.
எங்கே திருமண ஏற்பாடு செய்து, அதனை வேண்டாமெனச் சபை நடுவே சொல்லித் தனது மானத்தை வாங்கி விடுவாளோ என்ற பயம் அவருக்கு…
கணவர் தன் பேச்சில் இணையாமல் அமைதியாகவே இருப்பதை உணர்ந்த வள்ளியோ “என்னங்க யோசனை, கல்யாணத்த பண்ணி வெச்சா காளை அவளை வழிக்குக் கொண்டு வந்துடுவான். நீங்க யோசிக்காம இருங்க, மிரட்டியாச்சும் பண்ணி வெச்சிடுவோம்” என்றவருக்கு எப்படியாவது திருமணத்தை முடித்து விடும் முனைப்பு தான்.
காசிநாதனோ தோளில் இருந்த துண்டை உதறியவரோ “எல்லாம் சரியா நடக்கணும். நீ என்ன செய்வியோ தெரியாது என் மரியாதை எனக்கு முக்கியம். காளைக்கு யாழினிய கட்டித் தர்றதா வாக்குக் கொடுத்திருக்கேன். நாளைக்கு எல்லார் முன்னுக்கும் என்னால தலகுனிஞ்சி நிற்க முடியாது பார்த்துக்கோ. நீயா தான் இப்போன்னு அடம்பிச்சு என்னையும் சம்மதிக்க வெச்சிருக்க, அந்த அடங்காப்பிடாரி ஏதாச்சும் சபை நடுவுல இழுத்து வெச்சா அப்பறம் இருக்கு” என்றார் கோபத்தோடு…
“அதெல்லாம் நான் பார்த்துக்கிறேன் நீங்க கவலைய விடுங்க, அவளை நாளைக்கு காலைல தயார் படுத்துறது என் வேலை. பிரம்ம முக்கூர்த்தம்ல, எல்லாம் ஏற்பாட்டையும் இரவே முடிச்சிடுவோம், சரியா முகூர்த்த நேரத்துக்கு நான் அவளைக் கூட்டிட்டு வறேன்” என்றார்.
“ம்ம்ம், சின்னது எதையும் இன்னைக்கு அவகிட்ட உளறி வைக்கப் போகுது பார்த்துக்க” என்று அவர் சொல்ல,
வள்ளியோ “அவ கெட்டது பத்தாதுனு சின்னதையும் சேர்த்து கெடுத்து வெச்சிருக்கா. இந்த வயசுலேயே அவளைப் போலவே பேசுது. அத்தைக்கு கல்யாணமா நான் கேக்குறேன்னு நிக்கிது. நேத்து நான் சொல்லுறேன் அத்தைகிட்ட சொல்லவே கூடாதுனு சொல்லுவேன்னு அடம்பிடிக்கிறா சின்னக்கழுத! அதான் கைல சூடு போட்டுப் படுக்க வெச்சிருக்கேன். வலில எதையும் சொல்ல மாட்டா, கூடவே இனிமேல் ஒரு பயம் இருக்கும்ல அந்தச் சிறுக்கி மாதிரி இவளும் பேசமாட்டால்ல” என்றார் பெரிய நல்ல காரியம் செய்து பதக்கம் வாங்கிய நிமிர்வுடன்…
ஐந்து வயதுக் குழந்தைக்குச் சூடு வைத்ததை பெருமையாகப் பேசும் இரக்கமற்ற தாய் அவர், அவரிடம் வேறு என்ன நல்ல குணத்தை கண்டிட முடியும்?
________
இங்கே இப்படி இருக்க, அங்கே நீரினுள் இறங்கிய மித்ரன் இன்னும் மேலே வந்திருக்கவில்லை…
உள்ளே இறுதிப் படியில் அமர்ந்து நீரினுள் காலை விட்டபடி உள்ளே பார்த்திருந்த யாழினியோ “தேவ் சீக்கிரம் வாங்க, யாராச்சும் வந்துடப் போறாங்க” என்கவும் சரியாக அவன் மேலே வரவும் சரியாக இருந்தது.
அவனை ஆர்வமாகப் பார்த்தவளோ “கிடைச்சுதாங்க” என்று கேட்க, அவனோ இடம் வலமாய் தலையசைத்தவன் அங்கே அவளுக்கு அருகே படியிலேயே அமர்ந்தான்.
“சரி விடுங்க, வேற என்ன பன்றதுனு யோசிப்போம்” என்றவள் அவள் புடவை முந்தானை கொண்டு அவன் தலையைத் துவட்ட, அவனும் அவளுக்கு வாகாய் கொடுத்து அமர்ந்திருந்தான்.
மனம் முழுவதும் தேடல் தானே! அப்படி ஒன்று இல்லை என்று ஒரு மனம் சொல்லி அவனைத் தேற்றினாலும், இன்னொரு மனம் இருந்தால் என்று கேள்வியை எடுத்துக்கொடுக்க, ஒரு பெருமூச்சு அவனிடம்…
“யாழ், நாம இங்க இருந்து போகலாம்டி, விழுந்துடாம பார்த்து எழுந்துக்கோ” என்றவன் எழுந்து அவள் எழுவதற்காகக் கரத்தை நீட்டினான்.
அவளோ அவன் கரத்தைப் பார்த்து முறைத்தவள் “நான் இங்கயே பொறந்து வழந்தவளாக்கும் அப்படி ஒன்னும் விழமாட்டேன்” என்று முகத்தைத் திருப்பியபடி எழுந்து இரண்டு எட்டு மேலே வைத்திருக்க, காலில் இருந்த ஈரமும், பாசி படிந்திருந்த படியும் அவளைப் பழிவாங்க, சட்டெனக் கால்கள் சறுக்கிவிட்டது அவளுக்கு…
பிடிப்பதற்கு பிடிமானம் தேடியவள் அருகில் இருந்த சுவற்றை பற்ற, அவள் போதாத நேரத்துக்கு அதுவும் வழுக்க, அவள் இப்படி விழுவாள் என்று தெரியாமல் முதல் படியில் நின்றிருந்த தேவ் மித்ரனின் மீது அவள் விழ, இருவருமாய் நீருக்குள் விழுந்தனர்.
என்ன நடந்ததென்று உணரும் முன்னரே இருவரும் நீருக்குள்… வெளியே வரவே சில வினாடிகள் பிடித்தது.
இருவரும் ஒரு சேர வெளியே வர, அவளைக் கண்டவன் சிரித்துவிட்டான்.
அவளோ “தேவ்” என்று சிணுங்க, மீண்டும் அவனிடம் சிரிப்பு…
“போங்க தேவ் நான் போறேன்” என்றவள் படியை நோக்கிச் செல்லப்பார்க்க, “மறுபடியும் விழப்போறியா என்ன? இரு போவோம்” என்று அவளை எட்டிப் பிடித்து நீருக்குள் சற்று ஆழத்துக்கு அதுவும் அவனது கழுத்து வரை நீர் இருக்கும் இடத்துக்கு அழைத்துச் சென்றவன், அவளைத் தூக்கி அவன் முகத்துக்கு நேரே கொண்டு வந்திருந்தான்.
அவளோ “என்ன?” என்று இதழ்கள் நடுங்க கேட்க, அவள் கன்னத்தைப் பற்றியவன் “ரொம்ப டென்ஷனா இருக்கு கொஞ்சம் ரிலாக்ஸ் பண்ணிக்கட்டுமா?” என்றான் அவள் இதழில் வழியும் நீர் துளிகளைப் பார்த்தபடியே!
அவளுக்கும் அந்த நேரம் வெட்கம் வந்து ஒட்டிக்கொள்ள, பதில் பேச முடியாமல் போனது.
அவனோ மனைவியின் நாணத்தை சம்மதம் என்று கருதியவன், தாகம் எடுக்கும் தன் இதழ்களுக்கு ஈரமாய் அவள் இதழ்களை அருந்தினான்.
இருவரும் அப்படியே கண்மூடி முத்தத்தில் திலைத்திருக்க, தேவ் மித்ரனோ ஏதோ மாற்றத்தை உணர்ந்தவன் மனைவியை விட்டு விலக, அங்கே கிணற்றினுள் இருந்த நீர் மட்டம் குறைந்து அவர்கள் இடைவரை ஆகியிருந்தது.
அவனோ கேள்வியுடன் சுற்றி முற்றி பார்க்க, அந்தக் குகை அவன் கண்ணில் பட்டது.
உண்மையில் அதிர்ச்சி தான் அவனுக்கு, சற்று முன் அவன் நீருக்கடியில் தேடி இருந்தபோது இப்படியொரு குகை அவன் கண்ணில் படவே இல்லையே!
எப்படி என்று யோசித்தவனுக்கு தெரியவில்லை, சற்று முன் தன் மனைவி பிடிமானதுக்கான சுவற்றைப் பற்றிய நேரம் தான் ரகசிய குகைக்கான வாயில் திறக்கப்பட்டது என்பதை…
யாழினியையும் அழைத்துக்கொண்டு அதனுள் நுழைய, அங்கே ஒரு கதவு அதுவும் அதில் சாவியுடன் இருக்க, திறக்க முயற்சித்தான் மித்ரன்.
அன்று இளவேந்தன் சாவியுடன் கதைவை விட்டுச் சென்றது இதற்குத் தானோ? ஒன்றுடன் ஒன்று தொடர்புப்பட்ட நம்பமுடியாத பல நிகழ்வுகள் நிகழ்ந்தவையாக, அதுவும் நிகழ்த்தப் பட்டவையாக…
எவ்வளவு முயற்சித்தும் மித்ரனால் கதவை திறக்க முடியவில்லை…
பல நூற்றாண்டுகள் அப்படியே இருப்பதால் பூட்டு இறுகிப் போயிருந்ததோ என்னவோ??
இன்னும் பலம் கொண்டு முயற்சிக்க அடுத்த முயற்சியில் கதவு திறந்து கொள்ள, உள்ளே நுழைந்தவர்களது கண்ணில் மித்ரன் தேடி வந்த பொக்கிஷம் விருந்தானது.
“தேவ்” என்று யாழினி அழைக்க, அவனோ பதில் எதுவும் சொல்லாம அங்கிருந்த பெட்டியைத் திறக்கவும், ஓலைச்சுவடியில் குறிப்பிட்டிருந்தது போல் அங்கே அந்தக்கல்லும் அதனுடன் ஒரு முத்து மாலையும் இருந்தது.
கண்களில் மின்னலுடன் மனைவியைப் பார்த்தவன், அதனைக் கையில் எடுத்துக்கொண்டான்.
அடுத்த சில வினாடிகளில் இருவரும் வெளியேறி இருந்தனர்.
மித்ரனோ “யாழ் இன்னைக்கு நைட் நாம இங்க இருந்து போய்டலாம், சரியா இரவு ஒரு மணிக்கு, மெய்ன் ரோட் பக்கம் வந்துடு நான் அங்க தான் நிற்பேன். அப்பறம் அங்க இருந்து ரெண்டு பெரும் சென்னை போய்டலாம்” என்றான் அவளிடம் தெளிவாக, அவளும் சம்மதமாய் தலையசைத்திருக்க, இருவரும் தத்தமது வீடு நோக்கிச் சென்றிருந்தனர்.
இப்படியே நேரம் கடக்க, இரவு பன்னிரெண்டு மணி ஆகி இருந்தது.
வீட்டில் பெரிதாக அலங்காரம் இல்லை என்பதால் அவளுக்கு விடயம் இப்போதும் தெரிந்திருக்கவில்லை…
அங்கே பின் பக்கத் தோட்டத்தில் தான் திருமண ஏற்பாடுகள் நடக்கிறது.
வீட்டுக்கு வந்தது முதல் இனியாவுடனே இருந்ததில் இதனை எல்லாம் கவனிக்க முடியாமல் போனது அவளால்…
குழந்தையும் தூங்கும் வரை “வலிக்கு அத்த” என்று அவளைக் காயத்தில் ஊதி விடச் சொல்லி அத்தையிடம் அனுசரணையாகச் சாய்ந்து கொள்ள, யாழினிக்கு தான் மனது வலித்தது.
குழந்தை இனியாவுடனே இருந்தவள் நள்ளிரவாகியும் தூங்க கூட இல்லை…
சரியாகச் செல்ல வேண்டிய நேரம் நெருங்கியதும், தூங்கும் இனியாவின் கன்னத்தில் இதழ் பதித்தவள் “அத்தை சீக்கிரமே இனிக்குட்டி கிட்ட வந்துடுவேன் எதுக்கும் பயப்படாம இருக்கணும் சரியா பட்டுக் குட்டி” என்று மீண்டும் மறு கன்னத்தில் முத்தம் பதித்தவள், மெல்ல வீட்டை விட்டு வெளியேறி இருந்தாள்.
அவளுக்குக் காவலுக்கென்று வைக்கப்பட்டிருந்தவனும் தூங்கி இருக்க, பின்னே தோட்டத்தில் இருந்ததால் வள்ளிக்கு இது தெரியாமல் போனது.
நெடுநேரமாகக் காத்திருந்தும் யாழினி வாராமல் போக, தேவ் மித்ரன் அங்கே ஊரின் வெளியே பிரதான வீதியில் இவளுக்கான காத்திருந்தான்.
அன்று அவனைத் தேடி ஊர் எல்லையைத் தாண்டிச் சென்ற யாழினியைத்தான் மார்த்தாண்டன் கவர்ந்து சென்றிருந்தான்.
அந்த நேரம் மார்த்தண்டனின் மீது பாய்ந்த நாய், அந்த மண்டைடோட்டு மாலையிலிருந்த ஒரு மண்டையோட்டை கவ்வி இழுந்திருக்க, இதை அறியாமல் யாழினியுடன் கடந்த காலத்துக்கே சென்றிருந்தான் மார்த்தாண்டன்.
நாயோ அந்த மண்டையோட்டை மித்ரனை தேடிக் கொண்டு போய்ச் சேர்க்க, அதனை அவன் பார்த்துக்கொண்டிருந்த வேளையில் தான் மகிழின் குடும்ப வாகனம் அங்கே மரத்தில் மோதி இருந்தது.
அதன் பின்னர் தான் மகிழின் குடும்பத்துடன் மித்ரன் மருத்துவமனை விரைந்தது.
இது எதுவுமே அறியாத வள்ளியோ காலை முகூர்த்த நேரத்துக்கு முன்பே எழுந்தவர் எல்லாம் தயாராக இருக்கிறதா என்று கவனித்தபடி வெளியே மூடி இருந்த யாழினியின் அறையைப் பார்த்து நிம்மதி அடைந்தார்.
அவர் அறியாத ஒன்று இவளை வைத்து அவர் கதவை வெளியே தாழிடும் முன்னரே அவள் இனியாவின் அறைக்குச் சென்றிருந்தாள் என்பதை…
எல்லா வேலையும் முடிய, முகூர்த்ததுக்கு சரியாக அரைமணி நேரம் இருக்கையில் அவளைத் தயார் படுத்தவென்று உள்ளே நுழைந்த வள்ளிக்கோ அங்கே அவள் இல்லை என்றதும் பதற்றம் தொற்றிக் கொள்ள, சட்டெனக் கணவனிடம் விடயத்தைச் சொல்லி இருந்தார்.
அவ்வளவு தான் அங்கே கூட்டம் கூடி விட்டது.
கிராமங்களில் ரகசியம் பரவுவதை விட வேகமாக எதுவும் இருக்கக்கூடுமா என்ன??
இதோ எது நடக்கக் கூடாது என்று காசிநாதன் எண்ணினாரோ அதுவே நடந்து விட்டது.
ஊர் மக்களின் முன்னும், முரட்டுக் காளையின் முன்னும் தலை குனிந்து நின்றிருந்தார் அவர்…
மனம் முழுக்க, செய்து கொடுத்த சத்தியம், அவரது மரியாதையென இவையே ஓட, அங்கிருப்பவர்கள் எல்லாம் அவரைக் கீழிறக்கி பார்ப்பது போலவே தோன்றியது.
கூட்டத்தின் இடையே அத்தனை சலசப்பு…
அவருக்கோ அங்கே நிற்கவே முடியவில்லை…
முரட்டுக் காளையின் தாயான காசிநாதனின் அத்தை விடாமல் அத்தனை பேசினார்.
அவரது மகனை ஏமாற்றி விட்டதாக விடாமல் ஒரே ஆர்ப்பாட்டம்.
காசிநாதனோ அவமானத்தில் மண்ணில் புதைந்து விடும் அளவுக்குக் குனிந்தபடி நின்றிருக்க, அவர் கண்களில் விழுந்தது என்னவோ அவரின் முழங்கால் உயரமிருந்த இனியாள் தான்…
தன் மூத்த அண்ணனின் கால்களைக் கட்டிக்கொண்டு நடப்பதை பயத்துடன் வேடிக்கை பார்த்துக்கொண்டிருந்தாள் அவள்.
அவர் மனதிலோ எந்தத் தந்தையாகப்பட்டவருக்கும் தோன்றாத எண்ணங்கள் அணிவகுக்க, சட்டென்று அவர் மனதில் ஒரு ஸ்திரம், எதிலிருந்தோ தப்பித்து விட்டதை போல் ஒரு பெருமூச்சு, நன்றாக நிமிர்ந்து முரட்டுக் காளையையும் தன் அத்தையையும் பார்த்தவரோ அவர் மனதில் தோன்றிய வார்த்தைக்கு உயிர் கொடுத்திருந்தார்.
அங்கே உள்ளவர்கள் முகத்தில் அதிர்ச்சி, இத்தனை நேரம் பேசிக்கொண்டிருந்தவர்களின் பேச்சுக்கள் சட்டெனத் தடைப்பட்டது.
சிலர் “அதான நம்ம காசி மானஸ்தன் ஆச்சே சொன்ன சொல்லுக்குப் பரிகாரம் பண்ணாம இருப்பானா?” என்று அவருக்கு இன்னும் தூபம் ஏற்றினர்.
சிலருக்கு என்ன பேசவேன்றே தெரியவில்லை…
இன்னும் சிலரோ, நடப்பது எதுவும் தெரியாமல் அனைவரையும் பார்த்துக் குண்டுக் கண்கள் திருதிருக்க, விழித்தபடி நின்ற இனியாளை கவலையுடன் பார்த்தனர்.
வள்ளி கூட அதற்கு எதிர்ப்பு சொல்லவில்லை, சொல்லிவிட்டால் தானே அதிசயம்.
என்னவென்றே தெரியாத, பருவம் கூட அடைந்திராத ஐந்து வயது பிஞ்சு குழதைக்கும் முப்பது வயது எருமை முரட்டு காளைக்கும் திருமணம் உறுதி செய்யப்பட்டது.
அவர்களின் கொள்கை இப்படி கீழ்த்தரமாக நடக்க வைத்ததை எண்ணி சிறிதும் கவலை இல்லை அந்த ஜென்மங்களிடம்…
எதுவும் தெரியாமல் பலியாக்கப்பட்டது என்னவோ இனியாள் தான்…
வள்ளியோ யாழினி மீதிருந்த கோபம் அத்தனையும் இனியாவிடமே காட்டினார்.
பெண் குழந்தைகளையே விரும்பாத அவருக்குப் பெண்ணாய் வந்து பிறந்தது என்ன அவள் குற்றமா?
இப்படி பதிமூன்று வருடங்களுக்கு முன் நடந்த ஒவ்வொன்றும் ஒன்றோடு ஒன்று பின்னப்பட்ட சிலந்திவலை தான்.
காதலைத் தேடும்…
ஆஷா சாரா


