
கதை நாளை நிறைவுறும். பாகம் 2 பற்றி நிறைய பேர் கேட்டு இருந்தீங்க, மகிழ்ச்சி. நிச்சயம் எழுதீடுவேன். நம்பிக்கை, அதானே எல்லாம்!
போன அத்தியாயத்துடன் கதை நிறைந்திருக்கும். அமேசான் வாசகர்களும் அதுவரை தான் படிச்சிருப்பாங்க. பட், இங்க 40 அத்தியாயங்கள் தான போட்டி விதிமுறை, அதான் இரண்டு போனஸ் அத்தியாயங்கள் எழுதியிருக்கேன். இது முழுக்க அடுத்த பகுதிக்கான லீட், ஷிவ் ஷக்தியோட இன்னும் கொஞ்சம் முழுமையை காட்டும் 😍
நீங்களும் விரும்புவீர்கள் என்ற நம்பிக்கையில், நான்!
வாசிங்க, ரசிங்க, மறக்காம உங்கள் மேலான கருத்துக்களை பகிருங்கள் ✨
♥️♥️♥️♥️
அப்படியொரு அழுகையை மேகாவிடமிருந்து யாரும் எதிர்பார்த்திருக்கவில்லை.
மூச்சு நிற்கும் அளவிற்கு, நெஞ்சம் துடித்தெழ அவள் தாயுள்ளம் பதறிக் கதறி அழுதது அவள் பெற்ற மகனைக் கண்ட நொடி.
அதற்கு மருந்தாய் வந்து விழுந்தது ஷ்ரவனின் அம்மா என்ற அழைப்பு.
குழந்தை முகம் மாறாது, குண்டு கன்னங்கள் கரையாது, குட்டி தொப்பை லேசாய் விழுந்த வயிற்றோடு உதடு பிதுங்கி எட்ட நின்றிருந்தவன் கண்ணில் தான் அணையுடைப்பு.
மீண்டும் அவன், “ம்மா” என்று அழுகையை ஆரம்பிக்கவும், ஜான்வி வந்து தூக்கிக்கொண்டாள்.
ஜான்வியின் முகம் பார்த்து, “த்த” என்றவனை நெஞ்சோடு அணைத்து பிடித்துக்கொண்டவளுக்கும் அழுகை வந்துவிட்டது.
“ஷ்ரவன் குட்டி, சாப்டாங்களா” என்று அவன் கண்ணை துடைத்துக்கொண்டு மேகாவிடம் செல்ல,
“ம்ம்..” என்று மண்டையை ஆட்டியவன், “ம்மா” என்று விரலை நீட்ட, அதுவரை தள்ளியிருந்த மேகாவின் தட்டழிவு அறுந்தது!
அத்தனை வேகமாக பிள்ளையை தூக்கியவள், அவன் முகமெங்கும் முத்தமிட, மகனோ ஓயாது அம்மா நாமத்தை ஜபித்தான்.
ப்ரத்வி, “அம்மா, சிண்ட்டு பேசறான்” என்று அதிசயிக்க, அதை கேட்ட அனைவரும் உள்ளூர ஒரு நிறைவு.
மேகா, “தம்பி என்னை அம்மா கூப்டறீங்களா? அம்மா சொன்னீங்களா.. இன்னொருக்கா கூப்டு தங்கம்” மீண்டும் மீண்டும் அழுகை குரலோடு அவள் கேட்க,
“ஷ்ரவன்” என்று கடினக் குரலில் அழைத்திருந்தான், ஆராவமுதன்.
ஷக்தி சப்தம் கேட்டு வந்திருக்க, “ஈசா” என்று அண்ணனிடம் விரைய, இதழொரம் வந்த இரத்ததைத் துடைத்த அமுதனின் மனதும் கண்களும் கலங்கியது.
“நல்லாயிருக்க தான ஆரா” என்று கேட்டவன் கன்னத்தில் இருந்த அடித்தத் தடத்தைப் பார்த்துவிட்டாள்.
அதை தொட்டபடி, “என்ன ஈசா” என்று கலங்கியவள் மனதில் கோபமேறியது.
அதே தாக்கத்துடன், “ஈசாவ எதுக்கு அடிச்ச ஷிவ்” என்று கத்தினாள்.
ஷ்ரவன் மேகாவின் பிடியில் இருக்க, மகனை ஒரு பார்வை பார்த்த அமுதன் மறந்தும் மனைவியை பார்க்கவில்லை.
இறுக்கமாய் நின்றிருந்த சிவாவின் முகக் கடுமையும் ஷக்தியின் கத்தலும் ப்ரமோத்தின் மூளையை விழிப்படைய வைத்திருந்தது.
சூழலின் அடர்த்தி பிள்ளைகளைத் தாக்காது இருக்க எண்ணி, “ஷக்தி அமைதியா பேசமாட்டீயா. எத்தன தடவை நாங்க சொல்லுறது, அமைதி இரு, அமைதியா பேசுனு” என்று கடிந்தவனிடம்,
“அமைதியா இருந்து என்ன ஆகுது பாருங்க’ண்ணா. இன்னும் எத்தனய தான் பாக்க? கேக்க ஆளில்லேனா ஏ அண்ணன அடிப்பானா இவன்” என்க,
“ஆரா” என்று அவளை அடக்கினான் அமுதன்.
“உன் புருஷன் தான அடிச்சான். இன்னிக்கு நேத்தா அடி வாங்கறேன். எதுக்கு இத்தன ப்ரஷர் ஏத்திக்கற நீ” என்றபடி அவளை தோளோடு மேலும் அணைத்துப் பிடித்துக்கொண்டான்.
கோபத் சீற்றத்தை அடக்கியவள் முகம் சிவந்திருக்க, மூச்சு வாங்க நின்றிருந்தவள் தோற்றம் பயத்தை கொடுத்தது.
நன்மதியும் ஈஷாவும் ஷக்தியின் கத்தலில் உண்மைக்கும் பயந்து நின்றுவிட்டனர்.
அமுதன் மேகாவின் விலகல் செய்தி கிட்டத்தட்ட பூதாகாரமாகி குடும்பத்தாரிடமிருந்து விலகி நின்றுவிட்டான், ஆராவமுதன்.
அவனுக்கும் மேல் மேகாவின் பிடிவாதம் இருக்க, மொத்தமாய் முறித்துக்கொள்ளவும் முடியாது பிள்ளைகளுக்காக என்று பெரியவர்கள் சொன்ன சமாதானங்கள் வந்து நின்ற இடம், ஆளுக்கொரு பிள்ளையோடு தனித்து வசிப்பது!
மேகாவின் தலை நிமிரவில்லை. ஷ்ரவனை அணைத்துக்கொண்டு அமர்ந்திருந்தவளை பார்க்க பார்க்க ஷக்திக்கு ஆற்றாமை பொங்கியது. அவள் அண்ணனுக்காக மனது நியாயத்தைக் கேட்க முனைந்தது. இருந்தும்?
துருவ் அவன் ஆண்டாளின் கையை பிடித்துக்கொண்டு மேகாவிடம் செல்ல, அவர்கள் வாலைப் பிடித்துக்கொண்டு ஈஷாவும் நடந்தாள்.
பிள்ளைகள் ஷ்ரவனிடம் செல்லவும், அதுவரை இருந்த அமைதியைக் கீறிக்கொண்டு, “இப்போ இங்க எதுக்கு வந்திருக்க?” என்றான் சிவனேஷ் அமுதனிடம் கறாராய்.
ப்ரமோத் கையைக் கட்டிக்கொண்டு தங்கை கணவனை அழுத்தமாய் பார்த்திருந்தான்.
ஒரு எல்லைக்கு மீறி வார்த்தைகளை வெளியிட அவன் தயாராக இல்லை. அடித்துத் திருத்தும் குழந்தைகள் அல்லவே அவன் தங்கையும் மாப்பிள்ளையும்!
அவன் நண்பனை நேர்கொண்டு பார்த்த அமுதன், “என் தங்கச்சிக்கு வளைகாப்பு போடனும். ட்யூ டேட் முன்ன நல்ல நாள் பாத்து செய்யலாம்னு தான் வந்தேன்” என்றான் ஷக்தியை கை வளைவில் வைத்துக்கொண்டு அழுத்தமாய்.
அதில், அவன் ஷக்திக்காக மட்டும் தான் வந்திருக்கிறேன் என்று செய்தியைப் பிரஸ்தாபித்திருந்தான்.
அதில் சுற்றென்று ஏறிவிட்டது ப்ரமோத்திற்கு. “மேகா, ஷ்ரவன தூக்கிட்டு உள்ள போ” என்றவன்,
“பெரியவங்க யாரையும் கலந்துக்காம, எங்க யார்கிட்டையும் கேக்காம ஸார் நீங்களே ஆராவுக்கு வளைகாப்பு பண்ண ரெடியாகி வந்துருக்கீங்க, குட். யார் உங்கள கைட் பண்ணாலும் அதுக்கு மொத சிவா வீட்டுல பர்மிஷன் வேணும், வாங்கனும். அத மொத பண்ணிட்டு வந்து பேசுங்க” என்றவன் சிவாவைப் பார்க்க, அவன் முகம் ஏகத்திற்கு சூடாகியிருந்தது.
அமுதன், “அவங்க கிட்ட கேக்க என்ன இருக்கு? இது அவ அண்ணனா நா பண்ணுறாது” என்க,
ஜான்வி, “என்ன அமுதா ஆச்சு உனக்கு? என்ன பேசிட்டு இருக்க? மேகா வேண்டாம்.. நாங்க வேண்டாம்’ன்ன. இப்போ வளகாப்பு ஷக்தி வீட்டுல கேட்டு செய்ய சொன்னா, அவங்களும் வேண்டாம்னு சொல்லுவ போல. யோசிச்சுதான் பேசுறீயா நீ” என்று பொறுக்க மாட்டாது கேட்டேவிட்டாள்.
சிவாவின், “கண்ட போதை அதிகமாகிடுச்சு, அதான்” என்றவனை ஏகத்திற்கு முறைத்து பார்த்தான், அமுதன்.
அமுதனுக்கு முன், “ஷிவ்” என்று அவனை ஷக்தி அதட்ட,
“உனக்கு கேக்க ரைட்ஸ் இருந்தாலும் பதில் சொல்ல எனக்கு அவசியம் இல்ல. உன்ன மட்டும் இல்ல, அவனையும் நா அடிப்பேன், உதப்பேன். தேவப்பட்ட..” என்றவன் நிறுத்தி அமுதனை ஒரு பார்வைப் பார்த்தான்.
அதில் அத்தனை ஆக்ரோஷம். விட்டால் நிச்சயம் அமுதனை புரட்டி எடுக்கும் கோபம் மேம்பியிருக்க, அதை அடக்கிக்கொண்டு அவனின் தனிப்பட்ட அறைக்குள் சென்றுவிட்டான், சிவனேஷ்.
ஷக்தி, “ப்ரமோத்’ண்ணா” என்று ஆரம்பிக்க,
“க்வையட் ஆரா. ஜானு, அவள பாரு மொத. ஏகத்துக்கு பிபீ ஏறியிருக்கும் போல” என்றவன் ஷக்தியை உள்ளே அனுப்பி தங்கை குடும்பதிற்கு தனிமை கொடுக்க நினைக்க, அதை உடைத்து இருந்தான் அமுதன்.
மேகாவை சூழ்ந்துக்கொண்டு, ஷ்ரவனைப் பிடித்தபடி துருவ், ப்ரத்வி, விக்ருதி, நன்மதி, ஈஷா என்று நின்றிருக்க, அவர்கள் மொத்த பார்வையும் ஆராவமுதனிடம் தான்.
அதை தாங்காதவனாய், “ஷ்ரவன் வா, கிளம்பலாம்” என்க, ஈட்டியின் வேகத்தில் வந்தது ப்ரமோத்தின் பதில்.
“போறதா இருந்தா நீங்க போங்க. பசங்க வரமாட்டாங்க” என்றான் கடினமாய்.
நிச்சயம் அவன் மேகாவிற்காக பேசவில்லை. மாறாக, அவன் பிள்ளைகளுக்காக பார்த்தான்; அவன் மருமகன்களின் வாழ்க்கைக்காக பேசினான்.
உறவு சிக்கலை அவ்வளவு எளிதில் எடுத்துவிட முடியாது. அதுவும், கணவன் மனைவி சண்டையென்று வரும் போது அது அவர்களுக்கு மட்டுமேயானது.
அண்ணனே ஆனாலும் அதில் மூன்றாம் நபராய் அவன் தலையிட விரும்பவில்லை. காரணங்கள் ஓராயிரம் இருக்கலாம். இருந்தும் பிள்ளைகளை பிரித்துக்கொண்டு வாழ்வதென்பது எல்லாம் அவனைப் பொறுத்தவரை கொஞ்சமும் சகிக்க முடியாத ஒரு பாதகச் செயல்.
ஷக்திக்கு ப்ரசர் சற்று ஏற்றத்தாழ்வாக இருக்க, அவளை கண்டித்து உறங்க வைத்துவிட்டாள், ஜான்வி.
இரவு பிள்ளைகளும் ஷக்தியும் உணவுண்ட பின், வீடே அடங்கி அமைதியாகியிருந்தது.
சிவாவிற்கு மிக முக்கிய பொறுப்பொன்று தலையாய கடமையாய் காத்திருக்க, அதற்கான அஸ்திவார நங்கூரத்தை மிக ஆழமாய் போட்டிக்கொண்டிருந்தான்.
சிவாவின் மீதான கோபம் இருந்தாலும், அது அப்போதைக்கு ஒத்திப்போட்டிருந்தது ஷக்தியின் மனது.
அதை உண்மைக்கும் சற்று ஒத்திப் போட்டவள், அவன் தனியறைக்குள் சென்றாள்.
ஷக்தியின், “சாப்ட கூட வராம அப்டி என்னத்த வெட்டி வீசுற?” என்ற கேள்வி வேலையின் தீவிரத்தில் இருந்தவனை சூடேற்றிவிட்டது போல.
“அறிவில்ல? கதவ நாக் பண்ணீட்டு வரமாட்டீயா” என்று முகத்தைக் காட்டினான்.
முகம் மொத்தமும் விழுந்துவிட்டது அவளுக்கு. இரவு உணவைக் கூட உண்ண வராதனுக்கு கரிசனம் பார்த்து குழம்பியை எடுத்து வந்தவளுக்கு இந்த பேச்சு தேவையா?
அதை அவளும் நினைத்திருப்பால் போல, “நாப்பது வயசானா நாய் குணம் வரும்னு சும்மாவா சொன்னாங்க. என்னை இப்போல்லாம் கத்திகிட்டே இருக்கடா நீ” என்றாள் ஆதங்கமாய்.
அதில் சலித்தவன், “ம்ப்ச், வெளிய போ நீ” என்றான் அவளை திரும்பியும் பார்க்காது.
“ரொம்ப அரகெண்ட் ஆகிட்ட ஷிவ் நீ” என்றவள் காஃபி மக்’யை எடுத்துக்கொண்டு வெளியேற, “அத வெச்சுட்டு போ” என்றான்.
“ஒடச்சிட்டு வேணா போவேன், இஸ் தட் ஓகே?” என்க,
வெளியே, “மம்மா” என்று ஈஷா அழைக்கும் சப்தம் கேட்டது.
மக்’கை டொம்மென்று மேசையில் வைத்தவள் நகர, ஒரு ஆயாச பெருமூச்சு சிவாவிடம்.
இப்போதெல்லாம் அவன் ஆரூவை அவனால் சமாளிக்க முடிவதில்லை. எத்தனைக்கு எத்தனை அவனை அனுசரித்து வளைந்துக்கொடுத்தாலோ இப்போதெல்லாம் அந்த அனுசரணை காத தூரம் அகன்றிருக்கிறது.
அவளிடம் புரிந்துணர்வு இருந்தாலும் அவள் பிள்ளையுண்ட பின்பான ஹார்மோன்கள் அதை பிரித்து மெய்ந்து விடுகின்றது.
ஈஷா, “ஆரூம்மா, பேபிக்கு டுமாரோ ஸ்கூல் லீவாம். மை மேம் கால்ட் மீ நௌ” என்றாள் கண்ணு முழித்துக்கொண்டு.
அதிலேயே ஷக்திக்கு வில்லங்கம் புரிந்திருந்தது.
இருந்தும், “ம்ம், உன்ன கூப்டு சொன்னாங்களா?” என்றவள் கேட்க, நன்மதி வாயை பொற்றி சிரிப்பது தெரிந்தது.
சிறுசு அதற்கு தலையை ஆட்ட, ஷக்தி முறைத்தாள்.
அதற்கு, “தோ.. தோ.. பாரும்மா, மேம் கால் பண்ணாங்க” என்று ஷக்தியின் போனைத் தூக்கி காட்ட, அதில் அழைப்பு வந்ததற்கான அறிகுறி இருந்தது.
நன்மதியிடம், “மேம் கால் பண்ணாங்கலா பூக்குட்டி” என்க, “எஸ் அம்மா” என்பதோடு நிறுத்திக்கொண்டாள்.
மீறினால், மீண்டும் கடியை வாங்கும் நிலை வரலாம். அவள் முடி வெட்டப்படும் அபாயம் மூலலாம். எதற்கு வம்பு?
ஷக்தி நேரத்தைப் பார்த்து திரும்ப அழைக்க, அவரோ, “மேம், ஆர் யூ ஆல்ரைட்? உங்களுக்கு பேபி பெயின் வந்துடுச்சு, ஒன் வீக் ஸ்கூலுக்கு வரமாட்டேன்னு ஈஷா சொன்னா?” என்க, ஷக்திக்கு கண்ணைக் கட்டியது.
வந்த கோபத்தோடு மகளை முறைத்தவள், “ஈஷா நாளைக்கு வருவா மேம், ஷி வில் கம்” என்று அமைதியாய் பேசி முடிப்பதற்குள் ஈஷாவிடம் அத்தனை சலசலப்பு.
“ஈஷா, க்வையட்” என்று அதட்ட ஆரம்பிக்கும் போதே, “அத்த” என்று வெளியே ஆதரவுக்காக ஓடியிருந்தது சிறுசு.
“சனிக்கிழம ஸ்கூல் வெச்சா போதும். இல்லாத ஆட்டம் ஆடி போகாம இருக்க எத்தன ட்ரிக்ஸ் வேல பாக்குது இது. குட்டி சாத்தான்” என்றவள் இடுப்பைப் பிடித்துக்கொண்டு அமர்ந்துவிட்டாள்.
பெட்டில் அமைதியாய் கலரிங் புக்கோடு இருந்த நன்மதி அவள் அருகில் வந்து இடுப்பை தன் குட்டி கையால் பிடித்துவிட, “பூக்குட்டி” என்று நெகிழ்ந்து பெரிய மகளை அணைத்து பிடித்துக்கொண்டாள், ஷக்தி.
“அம்மா நோ, வலிக்கும்” என்க, “இல்ல பேபி, அம்மா ஓகே தான்” என்றவள் மகளை மடியில் வைத்துக்கொண்டு முத்தமிட்டபடி, “உன்ன மாதிரி ஈஷா இருந்திருக்க கூடாதா? என்னைய மாதிரியே பெத்து வெச்சிருக்கேன் பாரு. ஓ காட்” என்க, கிளுங்கிச் சிரித்தாள் பிள்ளை.
இரவு நேரஞ்சென்று சிவா அறைக்குள் வர, மகள்கள் அல்லாது ஷக்தி மட்டும் ஆழ்ந்த உறக்கத்தில் இருந்தால்.
அவள் முகத்தில் ஒரு அசௌகரியம் அப்பட்டமாய் தெரிந்தது. புருவங்கள் சுழித்தபடி, ஒருக்களித்து படித்திருந்தவள் கால்கள் நீர் கோர்த்து லேசாய் வீங்கி இருந்தன.
பார்த்தவுடன் வேகமாய் அவளருகில் சென்றவன், ஷக்தியின் தூக்கம் கலையாது அவள் பாதங்களை மடியில் வைத்து மெல்ல அமர்த்தி எடுத்தான்.
‘இவ கேட்டான்னு மண்டையை ஆட்டுனது தப்போ’ என்று அவன் மனதிற்குள் அவனையே நிந்திக்கொண்டான்.
பிள்ளையின் வரவு அவனுக்கு இனிப்பு தான். இருந்தும், அவன் ஆரூம்மாவின் வலியையும் அவஸ்தையும் அவன் பார்க்க சகியாத ஒன்று.
நன்மதியின் பிறப்பின் போதும் ஷக்தி இதைவிட அனுபவித்திருந்தாள். ஆனால், சிவனேஷிற்கு அது தெரிந்திருக்கவில்லை.
ஈஷாவை அவள் கருவுற்றிருந்த போது, நிச்சயம் தெய்வக் குழந்தைதான் என்று சொல்லும்படி இருந்தது. அம்மாவை ஒரு பொட்டு பாடுபடுத்தாது, அப்பாவின் பாராட்டை பெற்று சத்தமே இல்லாது வெளிவந்துவிட்டது.
ஆனால், இந்த சின்னது!
தலையை உலுக்கியவன்,
“இப்போவே கண்ணக் கட்டுதே” என்று நினைத்த மாத்திரம் வாய்விட்டே சொல்லிவிட்டான்.
“ரிலீஸ் ஆகறதுக்கு முன்னவே இப்டி சொன்னா எப்டி எஸ்.பி ஸார்? இனி தானே மெயின் பிக்சரே இருக்கு” என்று சொன்னவள் முகத்தில் ஏகத்திற்கு நக்கல் பொங்கி வழிந்தது.
அவள் பேச்சில் மீண்டும் விறைப்பாகிவிட்டான் சிவா.
“அத நீ முன்னவே யோசிச்சிருக்கனும்” என்றவன் எழுந்துக்கொண்டு தூங்குவதற்கு தயாராக,
“எதுக்கு இத்தன நாடகம்?”
“என்ன?”
“ஏன் இப்படி நடிக்கறேன்னு கேக்கறேன்”
“ம்ப்ச், தூங்கு நீ”
“பதில் சொல்லு ஷிவ். எதுக்கு என் மேல கோபம் இருக்க மாதிரி நடிக்கற? தூங்கின பின்ன வந்து உன் காதோல பொழியற” என்க, அவன் முறைப்பு வலுத்தது.
“என்ன லுக்? உண்மை அதுதான. இல்ல..” என்றவள் நிறுத்தி அவன் கண்களைப் பார்த்து,
“உனக்கு இந்த பேபி பிடிக்கலையா” என்க, “ஷக்தி” என்று கத்தியவன் அவள் தாடையை அழுத்தமாய் பிடித்திருந்தான்.
அத்தனை கோபம் அவன் கண்ணில். அவன் பிடியின் இறுக்கம் அவளை இலகுவாக்கியது.
இத்தனை மாதம் அவள் மனதை நமைத்த அரிப்பிற்கு ஒரு விடுதலை.
“அப்புறம் என்ன” என்றவள் கேள்விக்கான பதில் அவனிடம் இருந்தது.
ஆயின், வாய் மொழியாகத் தான் சொல்ல வேண்டுமா என்ன?
“இந்த கேள்வி இனி உன்கிட்ட இருந்து வரக்கூடாது, ஆரா” என்றவன் ஒரு அழுத்தம் கொடுத்து அவள் தாடையை விட, “ஏன்?” என்ற கேள்வியின் கொக்கி அந்த அந்தகார அந்தரத்தில் நின்றுவிட்டது.
💌
இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
2
+1
12
+1
+1
2
உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள்
You must be logged in to post a comment.

நல்லா இருந்த குடும்பத்துல யார் கண் பட்டுச்சோ ஆளுக்கு ஒரு பக்கம் முறுக்கி கிட்டு இருக்காங்க…ஏன்னு புரியல… சீக்கிரம் சரி ஆகனும்…❤️❤️
அறுசுவையையும் கலந்து கொடுத்தால் தான் விருந்து நன்றாக இருக்கும்.
நீங்கள் முன்னர் கூறியதைப் போலவே சக்தி சிவாவின் மகிழ்வான வாழ்வை பற்றி மட்டும் கூறி இருந்தால் கூட இத்தனை சுவைத்திருக்காது போல, அமுது மேகாவின் பிரிவில் அல்லல்படும் குடும்பத்தினரது உணர்வுகளோடு சேர்த்து அவர்களை காட்டுவது உண்மையிலேயே அதிகம் சுவைக்கின்றது.
எதார்த்தமான அணுகுமுறை 👏🏼