
தேடல் 21:
தனது வாகனத்தை லாவகமாக நிறுத்தியவள், அழுத்த எட்டுக்களுடன் அந்த காவல் நிலையத்தினுள் நுழைந்திருந்தாள். மெல்ல தன் பார்வையால் அந்த இடத்தை எடைபோட்டவள், நேராக சென்று எழுத்தர் இருக்கைக்கு முன்பு இருந்த ஒரு நாற்காலியில் அமர்ந்தாள். ஏதோ வேலையாக இருந்தவர், நிமிர்ந்து அவளை பார்த்துவிட்டு, “சொல்லும்மா… என்ன கம்பிளைண்ட்…” என்று வினவியவரே, மீண்டும் தன் வேலையை கவனிக்கத் தொடங்கினார்.
“இன்ஸ்பெக்டரா பாக்கனும்… எங்க போய் இருக்காங்க… எப்போ வாருவாங்க…”
“இன்ஸ்பெக்டர் ஒரு கேஸ் விஷயமா வெளிய போயிருக்காரும்மா… வர லேட் ஆகும்… ஏட்டம்மா இருக்காங்க… அவங்கள வேணா பாக்கறீயாம்மா…”
“இல்லையே நான் இன்ஸ்பெக்டர தானே பாக்கனும்…”
“அதான் சொல்லறேனே… அவர் வெளிய போய் இருக்காருனு… நீ அவர தான் பாக்கனுமுனா, போய்ட்டு நாளைக்கு வாம்மா…”
“இல்ல… நீங்க போன் பண்ணி நான் வந்திருக்கேனு சொல்லுங்க… அவர் உடனே வந்துடுவாரு…”
அவள் அப்படி சொன்னதும் அவளை ஏற இறங்க பார்த்தார். “யாரு, என்னனு சொன்னா தானேம்மா, அவர வர சொல்லி கூப்பிட முடியும்…” கொஞ்சமே கொஞ்சம் அவரின் குரலில் எரிச்சல் எட்டிப் பார்த்தது.
“அத முன்னாடியே கேக்க வேண்டியது தானே அங்கிள்…”
“அத தானேம்மா இவ்வளவு நேரம் கேக்கறேன்… சொல்லும்மா சீக்கரம்… எனக்கு ஆயிரத்தெட்டு வேலையிருக்கு…”
“அது… அவரு லவ்வர் வந்திருக்கேனு சொல்லுங்க… எங்க வீட்டுல எங்க லவ் மேட்டர் தெரிஞ்சு பெரிய பிரச்சனை ஆகிட்டு… அதான் வீட்டவிட்டு ஓடி வந்துட்டேன்…” அவள் பிசிறில்லாமல் சொல்லி முடிக்கவும், ‘ஆ’வென்று அவளைதான் பார்த்திருந்தார் அவர்.
“ஹலோ… அங்கிள்… உங்க பொண்ணா ஓடிப்போச்சு… இப்படி வாய பொளக்கறீங்க… சீக்கரம் மித்துக்கு போன் பண்ணி நான் வந்து வெயிட் பண்ணுறேனு சொல்லுங்க…” அவள் அவரை உலுக்க,
“உன் லவ்வர் தானேம்மா… நீயே போன் பண்ணி கூப்பிட வேண்டியது தானே…”
“ஏன் ஆங்கிள் அவரு வேலையா இருக்கும் போது பர்ஸ்னல் கால் பேச மாட்டாருனு தெரியாதா உங்களுக்கு… அதான் ஸ்டெஷன்ல இருந்து கூப்பிட சொல்லறேன்… விசாரணை முடிஞ்சுதா… இல்ல லாக்கப்ல வச்சு லேடி காண்ஸ்டேபிள விட்டு இன்னும் ஏதாவது விசாரிக்கனுமா…”
“அப்படியெல்லாம் இல்லம்மா… நீ இரு… நான் கூப்பிடறேன்…” என்றவர் அக்னிக்கும் அழைத்துவிட்டார்.
“ஹலோ… சார்… நான் ரைட்டர் பேசறேன்…”
“சொல்லுங்க மணி அண்ணா… ஏதாவது பிரச்சனையா…”
“ஆமான் சார் ஒரு பொண்ணு வந்திருக்கு… உங்கள பாக்கனுமாம்…”
“என்னனு கேட்டு அனுப்புங்க மணி அண்ணா… நான் வர லேட்டாகும்…”
“நானும் அதான் சார் சொன்னேன்… உங்கள தான் பாக்கனுமுனு அடமா உக்காந்து இருக்கு…”
“அப்போ போய்ட்டு நாளைக்கு வர சொல்லுங்க…”
“அது முடியாதே சார்…”
“அண்ணா… சும்மா டென்ஷன் பண்ணாதீங்க… நான் ஸ்பாட்ல இருக்கேன்… என்ன பிரச்சனைனு இரண்டே வார்த்தையில முடிங்க…”
“அந்த பொண்ணு உங்க லவ்வருனு சொல்லுது சார்… வீட்டுல பிரச்சனையாம்… வீட்டவிட்டு வந்துட்டாம்… உடனே உங்கள பாக்கனுமுனு சொல்லுது சார்…”
“யார் என்ன சொன்னாலும் நம்புவீங்களா… அனுப்பி விடுங்க அந்த பொண்ண… ஏதாவது மெட்டல் ஹாஸ்பிட்டல இருந்து தப்பிச்சு வந்திருக்க போகுது…”
“பாத்தா அப்படியெல்லாம் தெரியல சார்… உண்மை சொல்லற மாதிரி தான் இருக்கு…” என அவர் பேசிக் கொண்டிருக்கும் போதே,
“சரி… சரி… நாங்க அக்யூஸ்ட நெருங்கிட்டோம்… நீங்க வைங்க… எப்படியும் இன்னும் ஒரு மணி நேரத்தில் வந்திடுவோம்…” என்றவன் வைத்துவிட, அவரும் மிளிரை அங்கிருந்த ஒரு பலகையில் அமர வைத்தார்.
அடுத்த இரண்டு மணி நேரம் கழித்தே அக்னி காவல் நிலையத்திற்கு வந்தான். கையோடு ஒரு பதின்ம வயது சிறுவனையும் இழுத்து வந்திருவன், அவனை லாக்கப்பில் தள்ளி, பூட்டினான்.
அவன் வந்ததையும் கவனிக்காமல், மிளிர் தீவிரமாக தனது போனில் ஏதோ செய்துக் கொண்டிருந்தாள். சட்டென்று அவளை கடந்து சென்று விட்டவனுக்கும் அடையாளம் தெரியாமல் போனது தான் பரிதாபம்.
அடுத்து நேராக அவன் தனது அறைக்கு சென்றுவிட, மணி என்பவர்தான் அவனின் அனுமதி பெற்று பின்னோடு சென்றார்.
“சொல்லுங்க அண்ணா… என்ன விசயம்…”
“அதான் சொன்னேனே சார்… ஒரு பொண்ணு உங்க லவ்வருனு சொல்லிட்டு வந்து ரொம்ப நேரமா வெயிட் பண்ணுது…”
“ஹான்… சொன்னீங்க இல்ல… மறந்துட்டேன்… வர சொல்லுங்க…” என்றவன் தன் வேலையில் ஆழ்ந்துப் போனான்.
நேராக உள்ளே வந்தவள், அவனின் அனுமதியின்றி நாற்காலியில் அமர்ந்து, அக்னியையே பார்த்துக் கொண்டிருந்தாள்.
“ஹலோ… என்னைய பாத்துட்டு இருந்தா பிரச்சனை தீராது… என்னனு சொல்லுங்க முதல…” நிமிராமல் தான் சொன்னான் அவன்.
“நீங்கதான் வேலையா இருக்கீங்களே… முடிச்சுட்டு நிமிந்து பாருங்க… அப்புறமா சொல்லறேன்…” கைகளை மார்பின் குறுக்கே கட்டிக் கொண்டு, ஆழ்ந்து அவனைப் பார்த்தபடியே சொன்னாள் அவள்.
கேட்ட அந்த குரலில், அவன் உலகையே மறந்தான் என்றாலும் அது குறைவே. தாளம் தப்பி துடித்த இதயத்தை அடக்கியபடி நிமிர்ந்து பார்க்க, இன்னும் அவனைதான் ஊடுறுவிப் பார்த்துக் கொண்டிருந்தாள் அவள்.
“மிளிர்… மிளிர்… நீதானா… இது நிஜந்தானா… இங்க ஏன் வந்த நீ… எனக்கு ஒரு போன் பண்ணி இருக்கலாம் இல்ல…” கண்களில் அவளின் உருவத்தை நிரப்பியபடி, படபடக்க தொடங்கி இருந்தான் அவன். பின்னே அவளைப் பார்த்தே எத்தனை நாட்கள் ஆயிற்று. தினமும் அவள் செல்லும் வழியில் நின்றோ, கடையின் அருகில் நின்றோ ஒரு முறையாவது பார்த்து விடுபவனுக்கு, இந்த பதினைந்து நாட்களாக அவளைப் பார்க்காமல் எதுவும் ஓடவில்லை.
“ஷாக்க குறைங்க இன்ஸ்பெக்டர் சார்… நான் உங்ககிட்ட ஒரு முக்கியமான விசயம் பேசனும்… அதான் உங்களுக்காக வெயிட்டிங்…”
“என்ன மிளிரும்மா… இப்படி இளைச்சு போய்ட்ட…”
“ஹலோ சார்… ரொம்ப உருகாதீங்க… கரைஞ்சுட போறீங்க… என்ன விசயம்னு இப்போ கேட்க போறீங்களா… இல்ல நான் கிளம்பி போகட்டுமா…”
“ஓ.கே… ஓ.கே… கூல்… தெரிஞ்சவங்களாச்சேனு ஒரு அக்கறையில கேட்டது தப்பா… சரி சொல்லுங்க… என்ன விசயம்…”
“மகியோட இறப்பு ஆக்ஸிடன்ட் இல்ல… கொலை… அது எனக்கு நல்லா தெரியும்… ஆனா அதை நிரூபிக்க என்கிட்ட எந்த ஆதரமும் இல்லை… சோ நீங்க அந்த கொலைய நிரூபிக்க எனக்கு ஹெல்ப் பண்ணனும்…” என்றவள், தனக்கு தெரிந்த அத்தனையும் சொல்லி முடித்தாள், ஆன்மாவாய் மகியின் கொலையை நேரில் கண்டதை தவிர்த்து. பின்னே, அதை கேட்டு அவன் இவளை பைத்தியம் என்றே முடிவுக் கட்டிவிட்டால் என் செய்வது.
“சரி… ஒரு கம்பிளைண்ட் குடுத்துட்டு போங்க… இல்ல திரும்ப கேஸ எடுக்க சொல்லி கோர்ட்ல அப்பீல் பண்ணுங்க…”
“என்ன விளையாடுறீங்களா… ஒரு கொலைய விபத்துனு கேஸ முடிச்சுட்டு, இப்ப வந்து கோர்ட்டுக்கு போ… சி.பி.ஐ.க்கு போனு சொல்லிட்டு இருக்கீங்க… எனக்கு நீங்க தான் ஹெல்ப் பண்ணனும்… ஏன்னா இந்த கேஸ தீர விசாரிக்கம தப்பா க்ளோஸ் பண்ணது நீங்க தான்…”
“எனக்கு என்ன தகவல் கிடைச்சுதோ அதை வச்சு நான் கேஸ முடிச்சேன்… இதுல என்மேல தப்பு எதுவும் இல்ல… உங்க ப்ரண்ட் மகிழினிக்கு வேகமா கீழே விழுந்ததுல ஹார்ட் டேமேஜ் ஆகிட்டு… அதனால தொடர்ந்து பங்க்ஷன் ஆக முடியாம நின்னுட்டு… இப்படிதான் ரிப்போர்ட் சொல்லுது… திரும்ப போஸ்மார்டம் பண்ணி விசாரணைய ஆரம்பிக்கனுமுனா நீங்க முறைபடி கோர்ட்ல தான் அப்ளை பண்ணனும்…”
“ஐய்யையோ மித்து, நான் சொல்லறத கொஞ்சம் புரிஞ்சுக்கோங்க… இந்த கேஸ்ல நாம அபிஸியலா மூவ் பண்ண முடியாது… ஜெஸ்ட் நான் திரும்ப அந்த போஸ்மார்டம் ரிப்போர்ட் கேட்டு போனப்ப என்ன ஆச்சுனு பாத்தீங்க தானே… அதையும் மீறி நாம அபிஸியலா போனா… என் மார்டர் கேஸையும் சேத்து நீங்க விசாரிக்கற மாதிரி இருக்கும்…” அவள் படபடவென்று பொறிய, அவனின் இதழ்களோ கள்ள புன்னகை சிந்தியது. அவள் மித்து என்று அழைத்ததிலேயே நின்று உழன்றுக் கொண்டிருந்தது அவனின் மனம்.
“ஹலோ… என்ன சார் நான் பாட்டுக்கு பேசிட்டு இருக்கேன்… நீங்க என்னடானா ‘ஆ’னு வாய பாத்துட்டு இருக்கீங்க…”
“சரி என்ன பண்ணலாம்… நீங்களே சொல்லுங்க…”
“ம்ம்ம்… மொதல அந்த ஹாஸ்பிட்டல கண்காணிக்கனும்…”
“யூ மீன்… வேவு பாக்கனும்…”
“ஆமான் அதேதான்…”
“அப்போ என்ன கேப்மாரி தனம் பண்ண சொல்லறீங்க…” என அவன் கேட்கவும், அவள் முறைக்க, “ஓ.கே… ஓ.கே…கூல்… அதுக்கு ஆல்ரெடி எனக்கு தெரிஞ்ச இரண்டு பேர போட்டாச்சு… அப்புறம்…” என்றான் அவன் புன்னகையை தவழ விட்டபடி.
“மகிய ட்ரீட் பண்ண டாக்டர்ஸ விசாரிக்கனும்…”
“விசாரிச்சாச்சு… அவங்க யாருமே இப்ப இந்தியாவுல இல்ல… வேற வேற கண்ட்ரீல இருக்காங்க… காண்டேக்ட் பண்ண முடியல… ஆனா அதுக்கு தான் ட்ரை பண்ணிட்டு இருக்கேன்…”
“எல்லாமே பண்ணிட்டு தான் இந்த வெட்டி வியாக்கியானமா…”
“ஆமான்… நீ எந்த அளவுக்கு யோசிக்கறனு தெரிஞ்சுக்க வேண்டாமா… அதுக்கு தான்… அடுத்து சொல்லு…”
“இப்போ நான் மகியோட அபிஷியல் அண்ட் பர்ஸ்னல் இ-மெயில் ஐடிய ஓப்பன் பண்ணதான் ட்ரை பண்ணிட்டு இருந்தேன்… பட் அந்த அட்ரஸ்ல ஒரு ஐடியே இல்லைனு காட்டுது… சோ நாம ஒரு ஹேக்கர் வச்சு அத ஓப்பன் பண்ண ட்ரை பண்ணனும்… ஏன்னா, எப்பவும் அவளோட ஹெட் தவசீலனுக்கு ரிப்போர்ட் பண்ணுவ… இறக்கறதுக்கு முதல் நாளும் பண்ணி இருப்பா… அதுல இருந்து நமக்கு ஏதாவது க்ளு கிடைக்கும்…”
“ஆஹான்… அப்புறம்…”
“நான் என்ன காமெடியா பண்ணிட்டு இருக்கேன்… அப்புறம்… காஞ்சிபுரம்னுட்டு…”
“அப்படி தானோனு நினைச்சேன்… நீ சொல்லற தவசீலனுக்கும் மகிழினிக்கும் தானே ஒரு மாசத்துல கல்யாணம் நடக்கறதா இருந்துச்சு…”
“ஒரு மாசமில்ல… ஒரு வாரம்….இன்பேக்ட் நாங்க கல்யாணத்துக்காக தான் இங்கயே வந்தோம்…”
“அப்போ நாம அவரையும் விசாரிக்க வேண்டி இருக்கும்… ஆனா அபிஸியலா இல்ல… நாம இரண்டு பேர் மட்டும் தான் போற மாதிரி இருக்கும்… அதையும் பாத்துக்கோ… அப்புறம் ஆச்சா பூச்சானு கத்த கூடாது சொல்லிட்டேன்…”
“என்ன பாத்தா என்ன எப்பவும் கத்தி சண்டை போடறவ மாதிரி இருக்கா…”
“இப்போ எதுக்கு கத்தற… வெளிய இருக்கவங்க எல்லாம் உள்ள வந்துட போறாங்க…”
“நான் கிளம்பறேன்… சீக்கரம் ஹேக்கர ரெடி பண்ணுங்க…”
“ரெடி பண்ணிட்டு… எப்படி உன்ன காண்டெக்ட் பண்ணறதாம்…”
அவனை முறைத்து பார்த்தவள் அங்கிருந்த ஒரு பேப்பரில் தனது நம்பரை எழுதிக் கொடுத்துவிட்டு, அவனை திரும்பியும் பாராமல் செல்ல முயல, “உன் நம்பர் குடுத்துட்ட சரி… போன் பண்ணா நான்தானு எப்படி கண்டு பிடிப்ப…” என்றான் மாறா அதே புன்முறுவலோடு.
“என்கிட்ட ஆல்ரெடி உங்க நம்பர் இருக்கு…” என்று பதிலளித்தபடியே திரும்பி பார்க்காமல் அவள் செல்ல, அறையின் வெளியே வந்தவன் செல்லும் அவளை தான் பார்த்துக் கொண்டிருந்தான்.
“சார்…”
“சொல்லுங்க… மணி அண்ணா…”
“அந்த பொண்ணு சொன்னது உண்மையா சார்…”
“என்ன சொல்லுச்சு அந்த பொண்ணு…” புன்னகையுடனே அவன் வினவ,
“அதான்… உங்கள லவ் பண்ணறேன்… வீட்ட விட்டு ஓடி வந்துட்டேனு…” கேட்கலாமா வேண்டாமா என்ற தயக்கம் இருந்தது அவரிடம்.
“அவசியம் தெரிஞ்சுக்கனுமோ…”
இயல்பாக கேட்கிறானா அல்லது கோபமாக கேட்கிறானா ஒன்றும் விளங்கவில்லை அவருக்கு.
“ஐய்யையோ! அப்படியெல்லாம் இல்ல சார்… உங்களுக்கு பிடிக்கலைனா சொல்ல வேண்டாம்…”
“இப்போ ஏன் பதறீங்க அண்ணா… இரண்டு பேரும் லவ் பண்ணறோம்… சீக்கரமே கல்யாணம் பண்ணிக்க போறோம்… ஒரு சின்ன சண்டை… அதான் மேடம் இங்கையே வந்து உக்காந்துட்டாங்க…”
“நல்ல புள்ளை போங்க சார்… உங்கள பாத்துட்டு தான் போவேனு அப்படி ஒரு அடம்… இடையில நான்கூட கிளம்ப சொன்னேன்… ம்ம்கூம்… இஞ்ச் கூட நகரலையே…”
“ம்ம்ம்… அவளுக்கு கொஞ்சம் பிடிவாதம் அதிகம்தான்…” என்று அவருக்கு சொல்வதை போல தனக்கும் சொல்லிக் கொண்டவன் இதழ்கள் அனிச்சை செயலாய் மலர்ந்தன. உண்மையில் அவளின் பிடிவாதத்தின் எல்லை தெரிய வரும் போது அவன் தான் தலையை பிய்த்துக் கொள்ள போகிறான்.
அவனை கண்டுப் பேசிய பிறகு, அவளின் மனம் இன்னும் சமன் பட்டிருந்தது. இல்லை, அவன் பார்வையாலும் பேச்சாலும், புன்னகையாலும் சமன்படுத்தி இருந்தான் என்பதே உண்மை. மனமெங்கும் அவனின் குறும்பு புன்னகை தவழ்ந்த முகத்தை நிரப்பிக் கொண்டவள், அழகு நிலையத்தை நோக்கி தனது வாகனத்தை செலுத்தினாள்.
– தேடல் தொடரும்…
