
தேடல் 20:
வானமெங்கும் கார்மேங்கள் சூழந்து பார்க்கும் போது, பகலையே நள்ளிரவாக்கும் கடும் முயற்சியில் இறங்கி விட்டதோ என்று தான் எண்ணத் தோன்றுகிறது. மையிருட்டு என்னும் அளவிற்கு வெளியே இருள் சூழ்ந்திருந்தது. இடியோடு மின்னலும் இடைவெட்ட, அது அந்த சூழலை இன்னும் பயங்கரமாய் காட்டிக் கொண்டிருந்தது. எப்போதடா கொட்டி தீர்ப்போம் என்ற பேராவலோடு ஏங்கி நிற்கின்றது நீர் சுமந்த கார்மேகங்கள். அடுத்த சில நொடிகளிலேயே சடசடவென பெரும் துளிகளாய் இடி மின்னலோடு பலத்த மழை பொழிய தொடங்கியது.
கொண்டாட்டத்தை தருவதோ பயத்தை தருவதோ மழை அல்ல! மனித மனமே. இந்த நேரம் இதே மழையை சிலர் ரசிக்கவும் செய்கின்றனர் தானே. ஆனால், இன்னும் சிலருக்கோ இடியும் இடைவெட்டும் மின்னலும் கொட்டும் மழையும் சூழ்ந்த காரிருளும் பயத்தை அல்லவோ தருகிறது. அப்படியான மனநிலையில் தான் அந்த மழையை வெறித்துக் கொண்டிருந்தாள் மிளிர். அது மழையின் தவறா? நிச்சயமாக இல்லை. மனம் கொண்ட தவறன்றோ!
கொட்டி தீர்க்கும் மழைநீர் கூட குறைவோ என்று என்னும் விதமாக, அவள் கண்களில் இருந்து கண்ணீர் பெருகி கன்னம் தாண்டி தரை தொடுகிறது. இதே மழையில் எத்தனை முறை மகியோடு ஆடி மகிழ்ந்திருப்பாள். அன்று பொக்கிஷமாய் சேமித்த நினைவுகள் எல்லாம் இன்று முட்களாய் மனதை குத்தி கிழித்தது.
அவள் மழையை வெறித்தபடி நின்றிருக்க, மெல்ல அறையின் கதவை திறந்த இனியன் உணவு தட்டுடன் உள்ளே வந்தான். அவனை கண்ட நிமிடம் உள்ளத்தில் உதிரம் வடிந்தது என்றால் மிகையாகாது. இன்றோடு மிளிருக்கு பழைய விசயங்கள் எல்லாம் நினைவு வந்து பதினைந்து நாட்களுக்கும் மேலாகிறது. அன்றைய இரவு அந்த அறைக்குள் வந்து அடைந்தவள் தான். இன்னமுமே அதைவிட்டு வெளியே வரவில்லை. உண்கிறாளா உறங்குகிறாளா எதுவும் தெரியவில்லை. இனியன் அவளுடனை இருக்கலாமென்று எண்ணினாலும் அவளும் அனுமதிப்பதில்லை; இருக்கும் சூழலும் அனுமதிப்பதில்லை. மிளிர் கத்தி கதறி ஆர்பாட்டம் செய்யவில்லை தான். ஆனால், தன்னுள்ளையே பெரும்பாலும் ஒடுங்கிப் போயிருந்தாள். பதினைந்து நாட்களில் ஆளே அடையாளம் தெரியாத அளவிற்கு உரு மாறிப் போய் இருந்தாள். கண்கள் குழிவிழிந்து கருவளையங்கள் தோன்றியிருந்தது. கன்னங்கள் இடுக்கி ஒட்டிப் போயிருந்தது. உடல் மெலிந்து நலிந்திருந்தது. அவளை அந்த நிலையில் காண முடியாமல் அந்த அறைக்குள் வருவதையே தவிர்த்திருந்தனர் நாதரும் வசுவும். நாதர் பெரும்பாலும் வீட்டிலேயே முடங்கிப் போக, கடை பொறுப்பு முழுவதும் இனியன் என்றானது. நல்ல வேளையாக சூர்யா அழகுநிலையத்தை கவனித்துக் கொள்வதால் அந்த மட்டும் பிரச்சனை எதுவுமில்லை.
பெருமூச்சோடு கண்ணீரையும் வெளியேற்றியவன் அருகில் பார்க்க, காலையில் அவன் வைத்துச் சென்ற உணவு தட்டிலேயே காய்ந்துப் போயிருந்தது. அதை கண்டவன் உள்ளம் இன்னும் மருகியது.
கையில் கொண்டு வந்த தட்டை மெத்தை மீது வைத்துவிட்டு, திரைசீலையை பிடித்தபடி மழையை வெறித்துக் கொண்டிருந்த மிளிரிடம் சென்றான். அவளின் தோளைப் பற்றி தன் பக்கம் திருப்ப, கண்ணீர்த் தடங்களோடு நின்றவளை காண உள்ளம் உருகிதான் போனது.
மெல்ல அவளின் கண்ணீரை துடைத்தவன், “ஏன்க்கா இப்படி பண்ணற… நீ இப்படி பண்ணறதால மட்டும் மகிக்கா வந்துடுவாங்களா..?” பேசி முடிப்பதற்குள் கண்கள் கண்ணீரை உகுத்திருந்தது இனியனுக்கு.
“முடியலடா… எங்க பாத்தாலும் அவ நிக்கற மாதிரியே இருக்கு… அவ உயிரோட இல்லாம நான் இருக்கது என்னமோ பெரிய பாவம் பண்ணிட்ட மாதிரி தோணுது … என்னால… என்னால தான அவ இறந்துட்டா… நான் மட்டும் அவள கவனிச்சு பாத்து இருந்தா… இல்ல துளசிம்மா பேச்ச கேட்டு இங்கையே இருந்து இருந்தா என் மகிம்மா என்கூட இருந்து இருப்பா இல்ல…” கேவலாய் ஆரம்பித்து பெருங்குரலெத்து அழுதவளை தாவி அணைத்துக் கொண்டான் அவன். அவன் கண்களிலும் கண்ணீர் பெருக, மெல்ல அவளை ஆறுதல் படுத்த முயன்றுக் கொண்டிருந்தான்.
“நல்லா இருக்குடா நீ உங்க அக்காவ சமாதானப் படுத்தி சாப்பிட வைக்கற லட்சனம்… பேசாம ரெண்டு பேரும் சேந்துப் போய் ஏதாவது சீரியல் ஷீட்டிங்ல கட்டிபுடிச்சு கண்ணீரை புழிஞ்சா பணமாவது கிடைக்கும்…” கோபமும் கேலியும் போட்டிப் போட சொல்ல, இருவரும் அதிர்ந்து குரல் வந்த திசையை பார்த்தனர்.
அவரை கண்டதும் அத்தனை பரவசம் மிளிரினுள், “துளசிம்மா…” என்றவள் நா தழுதழுக்க, தாவி அவரை அணைத்திருந்தாள்.
“இப்போ… எதுக்கு எல்லாத்துக்கும் மூக்க சிந்தற… கண்ண தொட முதல…” அவரின் ஒற்றை அதட்டல் பலமாய் செயல்பட்டது மிளிரிடம். வேகமாக கண்களை அழுந்த துடைத்துக் கொண்டாள் அவள்.
“முதல முஞ்ச கழுவிட்டு வந்து சாப்பிடு…”
“துளசிம்மா…”
“உன் துளசிம்மா தான்… நான் என்ன ஓடியா போகப் போறேன்… சாப்பிட்டு பொறுமையா கூட என்ன கொஞ்சலாம்… முதல சாப்பிடுத்தா…” அதட்டல் குறைந்து அன்பொழிகியது அவரின் குரலில். அவரின் வார்த்தைக்கு மறுபேச்சின்றி குளியலறைக்குள் புகுந்து வேகமாக முகம் கழுவி வந்தவள் சாப்பாட்டு தட்டை எடுத்துக்கொண்டு அவரின் அருகிலேயே அமர்ந்துவிட்டாள்.
தட்டை கையிலெடுத்து விட்டாளே ஒழிய ஒரு வாய் கூட தொண்டை குழியைவிட்டு இறங்க மறுத்தது. இதை உணர்ந்த இனியன் அவளுக்கு ஊட்ட முயல, “ஏன் உன்ற இடுப்புல வேணா தூக்கி வச்சு மழைய வேடிக்கை காட்டி ஊட்டேன்… உன் அக்கா அப்படியே சின்ன பப்பா பாரு… போடா அங்குட்டு… அவளே உண்பா…” என துளசி ஒரு அதட்டல் போட, வேகமாக இனியன் நகர்ந்து அமர்ந்துக் கொண்டான்.
“இந்தா… உனக்கென்ன தனியா சொல்லுவாங்களா… சாப்பிடுங்கறேன்…” மிளிரை பார்த்து கூற, இப்போது வேகவேகமாக உண்ண தொடங்கி இருந்தாள் அவள்.
அவள் உண்டு முடித்ததும் தட்டை இனியனிடம் கொடுத்து அனுப்பியவர், “அதான் சாப்பிட்ட இல்ல… போ போய்… குளிச்சுட்டு வேற நல்ல சட்டைய போட்டுட்டு கிளம்பி வா…” என்றார் மீண்டும் அதட்டலாக.
“துளசிம்மா…”
“இப்ப துளசிம்மாவுக்கு என்ன வச்சுருக்கவ… சும்மா துளசிம்மா… துளசிம்மானு ஏலம் விட்டுட்டு… போய் குளிடிக்கறேன்… மசமசனு நின்னு நேரத்த கடத்திட்டு இருக்கா… ஒரு தடவ சொன்னா புத்தில ஏறாது உனக்கு…” அவளை பேசவிடாமல் துளசி அதட்டல் மொழிகளாகவே அனைத்தையும் சொல்ல, மறுக்க வழியின்றி அவர் சொன்னதை செய்ய சென்றாள் மிளிர்.
அடுத்த சில நிமிடங்களில் குளித்து வேறு உடை மாற்றி வந்தவளை இழுத்து அமர வைத்து தலையை துவட்ட தொடங்கியிருந்தார் அவர்… “உங்க அம்மா என்னதான் பொண்ணு வளத்து வச்சிருக்காளோ… தண்ணி சொட்ட சொட்ட வந்து நின்னுகிட்டு…” வசைபாடியபடியே அவர் தலையை அழுத்தி துவட்ட, ஏற்பட்ட வலி கூட ஒரு பொருட்டாக தெரியவில்லை மிளிருக்கு.
துவட்டி முடித்தவர் தளர பின்னி, நெற்றியின் மத்தியில் சின்னதாக ஒரு ஸ்டிக்கர் பொட்டை ஓட்டி, அவள் பேச்சை சிறிதும் சட்டை செய்யாது கைப்பற்றி கீழே இழுத்து வந்தார். மிளிர் நினைத்திருந்தால் தடுத்திருக்கலாம் தான். ஆனால், ஏனோ அவரை எதிர்க்கவோ தடுக்கவோ அவளுக்கு தோன்றவேயில்லை.
நேராக பூஜை அறைக்கு சென்று கடவுளை வணங்கியவர் அவளையும் வணங்க சொல்லி விபூதியை வைத்துவிட்டார். மீண்டும் அவள் கைப்பற்றி கூடத்திலிருந்த சோபாவில் அமர வைத்தவர், நாதரையும் வசுவையும் ஒரு பார்வை பார்க்க, சத்தமில்லாமல் அவர்களும் அவளுடன் வந்து அமர்ந்துக் கொண்டனர்.
“அவ தான் எல்லாத்துக்கு அடம்புடிச்சானா… நீங்களும் மூளையில உக்காந்து மூக்க சிந்தினீங்களாக்கும்… ஒரு அதட்டல போட்டு வழிக்கு கொண்டு வராம… குடும்பமே சேந்து கூட்டா ஓப்பாரி வச்சா ஆச்சா…” நாதரையும் வசுவையும் சேர்த்து துளசி வசைப்பாட,
“இல்ல துளசிம்மா… நான்தான்…” என இடைப் புகுந்தவளை முறைத்தார் அவர்.
“ஸ்ஸ்ஸ்… மூச்… வாய தொறக்க கூடாது.. அடுத்து நீதான்… அதுவரைக்கும் கம்முனு இருந்துக்கோனும்…” என்றவர் இன்னும் சிலபல வசைமாரிகளை நாதருக்கும் வசுவுக்கும் பொழிந்துவிட்டு, “இப்ப சொல்லு… நீ இப்படி இருக்கதால… உன்னையே கஷ்ட படுத்திக்கறதால மகி திரும்பி வந்துடுவாளா… வந்துடுவானா சொல்லு… உன்னோட சேந்து நாங்களும் சாப்பிடாம தூங்காம அந்த ரூம்லையே அடைஞ்சு கிடக்கோம்… இந்தா சொல்லுங்கறன… வாயில கொழுக்கட்டைய வச்சு அடைச்ச கணக்கா கம்முனு இருந்தா என்ன அர்த்தம்…” அளவுக்கதிகமான காட்டம் இருந்தது அவர் குரலில்.
“வர மாட்டா தான்… இனிமே எப்பவும் வர மாட்டா… என்ன பண்ணாலும் வர மாட்டா… ஆனா அவ சாவுக்கு நான் தானே காரணம்… நான் மட்டும் அவள கவனிச்சு பாத்திருந்தாலோ… இல்ல நீங்க சொன்னப்ப இங்கையே இருந்து இருந்தாலோ மகி இப்ப நம்ம கூட இருந்துருப்பா இல்ல…” குரல் கம்மி, எந்நேரம் அழுகை வெடிக்க தயாராக இருந்தது அவளிடம்.
“ஸ்ஸ்ஸ்… மூச்… அழுத… பிச்சுடுவேன் பிச்சு… யாரோட சாவுக்கும் யாரும் காரணமாக முடியாது மிளிர்ம்மா… அவ விதி அவ்வளவு தான்… ஆண்டவன் அவளுக்கு அவ்வளவு தான் ஆயுசுனு எழுதிட்டான்… அன்னைக்கு இல்லைனாலும் இன்னொரு நாள்… போற உசுர புடிச்சு வைக்க முடியுமாத்தா உன்னால… இல்லாதவங்களுக்காக இருக்கவங்களும் சாகவாத்தா முடியும்… நீ எங்களுக்கு வேணும்த்தா… உன் உருவத்துல நாங்க மகிய தான் பாக்கறோம்… அவளுக்கும் சேந்து நீ வாழனும்… அதான் எங்க எல்லாரு ஆசையும்…”
“இல்ல துளசிம்மா… என் மகிய என் கண்ணு முன்னாடியே கொன்னுட்டாங்களே… அங்கையே இருந்தும்… அவ துடிக்கறத பாத்தும் என்னால தடுக்க முடியலையே…” இதுவரை கட்டுபடுத்தி வைத்திருந்த அழுகை கேவலாக மாறி கண்ணீர் கோடுகளாக கன்னம் தொட்டிருந்தது.
“இங்க பாருத்தா… உன்னால அப்ப என்ன பண்ண முடியுமோ அத பண்ணிட்ட… இதுல உன்னோட தப்பு எதுவும் இல்ல… அவ விதி அவ்வளவு தான்… சில விசயங்கள் நம்ம மீறினது… அத நம்மாள கட்டுபடத்த முடியாதுத்தா… புரிஞ்சுக்கோ….”
“இல்ல… இல்ல… இல்ல… என் மகி ஆயுசு முடிஞ்சு தானா சாகல… அவங்க என் மகிய கொன்னுட்டாங்க… என் கண்ணு முன்னாடியே கொன்னுட்டாங்க… இல்லைனா இந்நேரம் என் மகி என்னோட இருந்து இருப்பா…”
“சரி… கொன்னுட்டாங்க… அதுக்குனு நீ இப்படியே அடைஞ்சு கிடந்த மகி வந்துடுவாளா… இல்ல அவள கொன்னவங்களுக்கு தான் தண்டனை கிடைச்சுடுமா… இங்க பாருத்தா… மகி உன்கிட்ட மறைச்சு இருக்கானா… விசயம் ஏதோ பெரிசா இருக்கும்னு தோணுது… அத கண்டுபிடி… அவ செய்ய நினைச்சத அவ இடத்துல இருந்து நீ செய்யு… அவள கொன்னவங்களுக்கு தண்டனை வாங்கிக் கொடு… அதெல்லாம் விட்டுட்டு…. போராடாமலேயே தோத்து போய்டேனு இப்படி மூளையில உக்காந்து அழுதா ஆச்சா… எதுவுமே பண்ண முடியலையா கடவுள் மேல பாரத்த போட்டுட்டு விதி விட்ட வழியினு உன் பாதையில போ… ஒரு விசயம் உன்ன தேடி வரனுமுனு இருந்தா கண்டிப்பா தானா உன்ன தேடி வரும்…” துளசி சொல்ல சொல்ல மிளிரின் மனதில் ஒரு தெளிவு பிறந்திருந்தது.
“என்னத்தா அமைதியாகிட்ட… நான் சொல்லறது புரியுதுதானே உனக்கு…” என்றதற்கு வேகமாக தலையாட்டினாள். அவள் முகம் தெளிந்திருப்பதைக் கண்ட மற்றவர்களின் முகத்திலும் நிம்மதி. அவள் அறைக்குள்ளையே அடந்து தன்னை தானே வருத்திக் கொள்வதைவிட மகியின் கொலைக்கான காரணத்தை தேடி சென்றால் தப்பில்லை என்றே தோன்றியது மற்றவர்களுக்கும். மிளிர் வந்து சொல்லும் வரை விபத்து என்றுதான் எண்ணியிருந்தனர் மகியின் சாவை. ஆனால், அவள் சொன்ன பின்பும் தன் இன்னொரு மகளின் சாவுக்கு காரணமானவனை அத்தனை எளிதாக விட்டுவிட மனமில்லை அவர்களுக்கும்.
“சிவாப்பா வரல…”
“அடி… ஆத்தாடி ஆத்தா… வந்து ஒரு மணி நேரத்துக்கு அப்புறம் தான் இந்த பொண்ணுக்கு அப்பன் நினைப்பு வருதாக்கும்…” நிலைமையை இலகுவாக்கி துளசிப் பேச, மெல்லிய முறுவல் அனைவரிடத்திலும்.
“துளசிம்மா…” குழந்தையின் சிணுங்களாய் மிளிரின் குரல் வெட்கம் கலந்து வர,
“இந்தா.. சின்ன புள்ள கணக்கா… இப்ப என்னத்துக்கு சிணுக்குனறவ… உன்ற ஆசை அப்பாருக்கு ஊருக்குள்ள நிறைய சோலி கிடக்குதாம்… அதனால் அப்புறமா வரேனு சொன்னாரு…”
“ஏன் துளசிம்மா… நீங்களும் சிவாப்பாவும் இங்கயே வந்து தங்கிடலாமுல…”
“அது முடியாதுத்தா… மகி நினைவா புத்தி ஸ்வாதினம் இல்லாத புள்ளைங்கள பாராமறிச்சுட்டு இருக்கோம்… அந்த புள்ளைங்கள எல்லாம் நட்டாத்துல விட்டுட்டு வர முடியுமா சொல்லு… உனக்கு எப்போ இந்த அம்மாவ பாக்கனுமுனாலும் ஓடி வந்துடு… சரிதான…” என்றதற்கு வேகமாக தலையாட்டினாள் மிளிர்.
“இந்தா நீ என்ன பேசறவங்க வாயையே பாத்துட்டு இருக்கவா… சூடா குடிக்க ஏதாவது எடுத்துட்டு வரலாமுல…” என வசுவையும் ஒரு அதட்டல் போட, “இதோ எடுத்துட்டு வரேன்க்கா…” என அவர் எழவும், இனியன் சுடசுட இஞ்சி ஏலக்காய் மணக்க டீயை எடுத்து வரவும் சரியாக இருந்தது.
டீயை பருகியபடியே சிறிது நேரம் அளவளாவி கொண்டிருந்தனர் அவர்கள். “இந்தா மிளிரு… இன்னும் எத்தனை நாளைக்கு தான் வீட்டோட கிடப்ப… அதுவும் கடைய வேற தொறந்து வச்சுப்போட்டு… உன்ன நம்புனவங்களையும் பாக்கனுமா இல்லையா… மொதல்ல கடைய பாருத்தா… மத்ததெல்லாம் அப்புறம் பாத்துக்கலாம்…” என அவள் மறுக்க மறுக்க வலுக்கட்டாயமாக அழகு நிலைத்திற்கு அனுப்பி வைத்தார் துளசி. தொழிலில் கவனம் சென்றுவிட்டால் ஒரளவுக்கு ஆறுதல் கிடைக்கும் என்பது அவர் எண்ணம்.
செல்லும் வழியெல்லாம் அவளின் மனதை உறுத்திய ஒரே விடயம், ‘அடுத்து என்ன செய்வதென்பது தான்…’ சந்தேகத்திற்கு இடமேயின்றி அந்த மருத்துவமனையில் தான் தவறிருக்கிறது என்று புலனாகிறது. அன்று அங்கு மகிக்கு சிகிக்சை அளிக்கும் போதுதான் கொல்லபட்டிருக்கிறாள். மிளிர் மீண்டும் அங்கு விசாரிக்க சென்றபோது கொலைமுயற்சி நடந்திருக்கிறது. அப்படியென்றால் அங்கு ஏதோ ஒரு மர்மம் மறைந்துக் கிடைக்கிறது. ஆனால், எந்த ஆதரமும் சாட்சியும் இன்றி அத்தனை பெரிய நிர்வாகத்தின் மீது சுலபமாக அவள் குற்றம் சாற்றி விட முடியாதே. அதுவும் இல்லாது குற்றவாளிகள் யாரையும் இவள் பார்த்ததில்லையே. மகி உயிர் துறக்கும் நேரத்தில் என் ஆன்மா அவளை கொல்வதை பார்த்தது என்றால் இவளைத்தான் பைத்தியக்காரிப் போல பார்ப்பார்கள். ஏன் பைத்தியம் என்று சொல்லி அதே மருத்துவ மனையில் அடைந்து வைத்தாலும் ஆச்சரியபடுவதற்கில்லை. இதற்கு என்ன செய்யலாம் என தீவிரமாக அவள் யோசிக்க அவள் மனகண்ணின் முன் நின்ற ஒரே உருவம். சந்தேகத்துக்கு இடமின்றி சாட்சாத் அது அக்னிமித்திரனே தான்.
– தேடல் தொடரும்…
