Loading

அத்தியாயம் 9

ஒரு வருடத்திற்கு பிறகு…

“இன்னைக்கு தங்கம் வந்ததும் பேசுங்க. ரொம்ப நாளாவே ரொம்ப அமைதியா இருக்கான். நம்மகிட்ட சகஜமா இருக்கான். ஆனால் அவனுக்குள்ள எதோ இருக்கு. சொல்லாம மறைக்கிறான் தோணுது” என்ற அமிர்தவள்ளி,

“அப்போ கேட்டப்போ கொஞ்சநாள் போகட்டும் சொன்னான். ஒரு வருசம் ஆச்சே! பேசுங்க. என்ன சொல்றான் பார்ப்போம்” என்றார்.

“என்ன பேசணும்?” இருவருக்கும் இடையில் இடித்துக்கொண்டு அமர்ந்தான் ஆகாஷ்.

“உன் அண்ணனுக்கு கல்யாணம் பண்ணனுமாம்!” என்றார் திரு.

“வாவ்… சூப்பர்ப்பா” என்ற ஆகாஷ், “பொண்ணு பார்த்தாச்சா இல்லை இனி தான் பார்க்கணுமா?” எனக் கேட்டான்.

“இப்போ நீயேன் இவ்வளவு ஆர்வமாகுற மை லிட்டில் சன்?” என சந்தேகமாக வினவினார் திரு.

“அண்ணாக்கு மேரேஜ் பண்ணாதானே என் ரூட் கிளியர் ஆகும்” என்று ஆகாஷ் சொல்லிக் கொண்டிருக்கும் போதே வேலை முடித்து வீட்டிற்குள் நுழைந்த புவி,

“எப்போடான்னு இருக்க நீ?” என்றான்.

“அப்கோர்ஸ் மை பிரதர்” என்ற ஆகாஷ், “ஆபிஸில் அந்த சஞ்சனா தொல்லை தாங்கல. அவளுக்காகவே சீக்கிரம் நான் சம்சாரி ஆகணும். இல்லை என்னை கடத்திட்டுப் போயிடுவாள் போல” என்றான்.

“அந்தப்பொண்ணும் தான் நீ வேலையில் சேர்ந்தது முதல் உன்னை ஒரு வருசமா லவ் பண்ணுது உனக்கு விருப்பம் இல்லைன்னா முடியாதுன்னு அழுத்தமா சொல்ல வேண்டியது தானே?” என்ற புவி, “காதலால் மட்டும் யாருக்கும் வலி கொடுத்திடாத” என்றான்.

அந்த வரியில் புவியின் குரல் கமறியதோ?

அமிர்தம் திருவை அர்த்தமாக ஏறிட்டு பார்த்தார்.

“நான் முடியாது, லவ்லாம் இன்ட்ரஸ்ட் இல்லை. செட் ஆகாது சொல்லிட்டேன் அண்ணா. டார்ச்சர் பன்றாள்” என்றான் ஆயாசமாக.

“அப்போ உனக்கு நாங்க தான் பொண்ணு பார்க்கணுமா?” திரு கவலைப்போல் கேட்டார்.

“அப்புறம்… அது உங்க பொறுப்பு. அந்த தலைவலியெல்லாம் எனக்கு வேணாம். நீங்க பார்த்து அண்ணா ஓகே சொன்னா போதும்” என்ற ஆகாஷ் தன்னுடைய அலைபேசி சத்தமிட சட்டை பையிலிருந்து எடுத்துப் பார்த்தான்.

“டார்லிங் தான். பேசிட்டு வரேன்” என்று ஆகாஷ் நகர, செல்லும் தம்பியின் முதுகில் அழுத்தமாக படிந்தது புவியின் விழிகள்.

திரு தன் பெரிய மகனை கவனித்தவராக…

‘இன்னும் எத்தனை நாளுக்கோ!’ என வருத்தம் கொண்டார்.

அமிர்தம் கணவருக்கு கண் காட்ட,

“நானே சொல்றேன் ம்மா. சீக்கிரமே பண்ணிடலாம்” என்ற புவி, “டிரான்ஸ்ஃபர் கிடைச்சிருக்கு வித் புரொமோஷன்” என்று எழுந்து சென்றான்.

“அந்த சீக்கிரம் எப்போன்னு சொல்லிட்டுப் போ தங்கம்?”

மகன் திருமணம் செய்துகொள்ள மறைமுகமாக சம்மதம் சொல்லியதும் அனைத்து பெற்றோரைப் போன்று அமிர்தத்துக்கும் ஆர்வம் வந்துவிட்டிருந்தது.

“ரொம்ப ரொம்ப… சீக்கிரமா” என்று திரும்பி நின்று சொல்லிய புவி, திருவின் கூர்மையான பார்வையில் மென்னகையை படரவிட்டான் இதழில்.

தன்னுடைய அறைக்குள் வந்த புவி நேராக சென்று நின்றது வார்ட்ரோப் முன்பு தான்.

உள்ளிருந்து கண்ணாடி குடுவையை எடுத்தான்.

கிட்டத்தட்ட மூன்று வருடங்களாக அவனுக்குள் வேரூன்றி இருப்பவளின் நினைவுகள் யாவும் அவளின் எழுத்துக்களாய்.

இறுதியாக அவள் வைத்துச் சென்ற காகிதத்தை எடுத்துப் பிரித்தான்.

வெற்று காகிதம். ஒன்றும் எழுதவில்லை. அவள் எழுத வேண்டுமென நினைத்த அவளது உள்ளத்து வார்த்தைகள் யாவும் கண்ணீர் கரையாய்!

சொல்ல வேண்டுமென்றில்லை… நெஞ்சம் சுமக்கும் நேசம் போதும். வார்த்தையின்றிய மௌனத்தின் வலியை உணர்த்திட.

அவள் ஏதும் எழுதியிருந்தால் கூட இத்தனை உணர்வுப்பூர்வமாக இருந்திருக்காதோ?

அவள் சொல்லாத யாவும் அவளின் விழி நீர் சிந்திய காகிதம் காட்டிக் கொடுத்தது.

காகிதத்தை உள்ளங்கையோடு சேர்த்து நெஞ்சில் வைத்து அழுத்தியவன், தரையில் காலூன்றி மெத்தையில் மல்லாக்க சரிந்து கண்களை மூடிக் கொண்டான்.

“தங்கம்.”

திருவின் அழைப்பில் மெல்ல எழுந்தான்.

“ட்ரெஸ் மாத்தலையா?” எனக் கேட்டு புவியின் அருகில் அமர்ந்த திரு, அவனின் முன்னுச்சி கேசம் ஒதுக்கினார். ஆதுரமாய்.

“முடிவு பண்ணிட்டியா?”, திரு.

“இதுக்கு மேல… இன்னும் எவ்ளோ பொறுமையா இருக்கிறதுப்பா? நான் எப்படியிருக்கன்னு அவள் தினமும் தெரிஞ்சிகிட்டா மட்டும் போதுமா? என் நினைப்போடு மட்டுமே அவள் வேணும்ன்னா இருக்கலாம். ஆனால் எனக்கு, அவள் என்னோட இருக்கணுமே! எனக்கான கேள்விகள் எதுக்கும் எனக்கு பதில் தெரிய வேண்டாமா?” என்ற புவி, “நானே முன்னால் போய் நிக்கிறேன்… என்னப்பா பண்ணுவாள்?” என்றான்.

“அந்தப்பொண்ணு பக்கம் என்ன இருக்கு தெரியலையே தங்கம்!”

“தெரியணும் தானே? தெரிஞ்சிக்கிறேன். எதுவா இருந்தாலும் நான் சரி பண்ணிடுறேன் ப்பா” என்ற புவி, “அவள் என்கிட்ட வரணும்ன்னா என்ன பண்ணனும் ப்பா? எல்லாம் பண்றேன்” என்றான்.

“இந்த ஒரு வருடம் அவளா என்கிட்ட வந்திட மாட்டாளான்னு, அவளுக்கு நான் கொடுத்த ஸ்பேஸ் இது. அவளுக்கு என்கிட்டேர்ந்து தள்ளி இருக்கணுமா? இருக்கட்டும் ப்பா… என்னோட இருந்துட்டு தள்ளி இருக்கட்டுமே!” என்றான்.

மகனின் ஒரு வருட வேதனை எல்லாம் இன்று மொத்தமாக வெளிவருகிறது என்று திரு அவனது பேச்சில் குறுக்கீடு செய்யாது மௌனமாகக் கேட்டுக்கொண்டு இருந்தார்.

புவி எல்லாம் கொட்டி முடித்தவனாக திருவின் தோள் சாய,

“நாளைக்கே போய் பேசுவோமா தங்கம்?” எனக் கேட்டார் திரு.

“இல்லைப்பா… அவள் முன்னால் போய் நிக்கணும் தான் நினைக்கிறேன். ஆனால் அவளை எனக்கும் தெரியும்ன்னு இல்லை. எப்போ இருந்தாலும் அவளா என்னைத் தேடனும் ப்பா. கண்ணு முன்னாடி நான் இருக்கும் போது, என்னை விட்டுடுவாளா?” என்றான்.

“இரண்டரை வருஷம் அவள் கண்ணு முன்னாடி தான் தங்கம் நீயிருந்த!”

“இப்போ நடுவில் ஒரு வருட பிரிவிருக்கேப்பா. எனக்கு இருக்கும் வலி அவளுக்கும் இருக்கும்ல? அது என் முன்னாடி வந்து அவளை நிற்க வைக்காதா?” எனக் கேட்டான்.

“ம்ம்…” மேலும் கீழும் தலை ஆட்டினார் திரு. காதலுக்கான வலிமையை அவரைவிட வேறு யாருக்கு அதிகம் தெரிந்திருக்க முடியும்.

தந்தையே உலகம், அவரின் சொல்லே வேதமென இருந்தவருக்கு, அந்த தந்தையையே துறக்க வைத்ததல்லவா இந்த காதல்.

“சீக்கிரமே எல்லாம் சரியாகும்” என்று மகனின் தோளில் தட்டிக் கொடுத்த திரு, “டிரான்ஸ்ஃபர் நீயே கேட்டியா?” எனக் கேட்டார்.

“புரொமோஷன் வித் டிரான்ஸ்ஃபர் அவங்களே டிசைட் பண்ணது. ஊர் மட்டும் நானே கேட்டு வாங்கினேன்” என்றான்.

“ஆல் தி பெஸ்ட்” என்ற திரு, “எப்போ கிளம்பணும்?” என, புவி செல்லவிருப்பதைக் குறித்துக் கேட்டார்.

“நாளைக்கு. அடுத்தநாள் சார்ஜ் எடுத்திருக்கணும்” என்றான்.
_________________________

தேனியிலிருந்து நான்கு கிலோ மீட்டர் தொலைவில் உள்ளது வீரபாண்டி கிராமம்.

அழகிய கிராமத்து வீடு. ஊரின் நடுநாயகமாக கம்பீரமாக வீற்றிருக்கும் பெரிய வீடு அது. அவ்வீட்டின் மூத்த உறுப்பினரான வீரமுத்து தான் அவ்வூரின் தலைவர்(நாட்டாமை) என்று சொல்லலாம். அவரின் பேச்சுக்கு அவ்வூரில் உள்ள அத்தனை மக்களிடமும் பெரும் மதிப்பு.

வீரபாண்டியில் எது நடக்க வேண்டுமானாலும் வீரமுத்துவின் அனுமதி கிடைக்க வேண்டும்.

அவர் ஒன்று சொன்னால் அது சரியாக இருக்குமென்று நம்பிக்கை. கண்ணை மூடிக்கொண்டு அவர் சொல்வதை செய்யும் மக்கள் அவர்கள்.

மிகவும் கட்டுப்பாடான மனிதர். எண்பது வயதை தொட்டுவிட்டார் என்று யாராலும் சொல்லிட முடியாது. இளம் தலைமுறைக்கு சவால் விடும் அளவிற்கு அத்தனை கட்டுக்கோப்பாக திடகாத்திரமாக உடலை வைத்திருக்கிறார். அவரின் தோற்றம் முன் நிற்பவரை எட்ட நிறுத்திவிடும்.

பண்ணையில் வேலை முடித்து வீட்டிற்குள் வந்த வீரமுத்து, முற்றத்தில் வைக்கப்பட்டிருந்த பொவுணி தண்ணீரில் காலை கழுவிக் கொண்டு, முற்றம் வழி வீட்டிற்குள் எட்டிப் பார்க்கும் சூரியனை தலை உயர்த்தி பார்த்தார்.

“வர்ணம்.” மனைவியை அழைத்தபடி முற்றதிற்கு பக்கவாட்டில் இருக்கும் கூடத்தில் கிடந்த தன்னுடைய சாய்வு நாற்காலியில் சென்று அமர்ந்தார்.

இந்த வயதிலும் கணவனின் கூப்பிட்டக் குரலுக்கு ஓடிவந்தார் வர்ணம்.

“அறுப்பு முடிஞ்சுதுங்களா? இம்புட்டு சுருக்க வந்துட்டீங்க?” என்று கேட்டபடி வீரமுத்துவின் காலுக்கு கீழ் தூணில் சாய்ந்து அமர்ந்தார்.

“குமுதா எங்க?”

குமுதா அவர்களின் மகள். அவரின் கணவன் பதினாறு வருடங்களுக்கு முன் வேறொரு பெண்ணை இரண்டாம் தாரமாக மணந்து வந்து நிற்க, காரணம் கேட்டவர்களிடம் “அவளுக்கு முதல் குழந்தையோடு வலு செத்துப்போச்சு. எனக்கு ஆண் வாரிசு வேணும். இவள் ஒரு ஓரமா இருந்துக்கட்டும்” என்று சொல்ல, வீரமுத்து தன் மகளை கையோடு கூட்டிக்கொண்டு வந்துவிட்டார்.

“இங்கதேன் இருந்தா” என்று வர்ணம் சொல்லும்போதே, கையில் மோர் குவளையோடு வீரமுத்துவிடம் வந்தார் குமுதா.

“ஐயா மோர் குடிங்க” என்ற குமுதா, “வனத்துக்கு வயசு ஆவுதுங்களே! ஒன்னுவிட்ட அண்ணே மயிலு அவங்க மவனுக்கு கேட்டாங்கன்னு அம்மா சொன்னாங்க. இங்கவே கொடுத்தாக்கா, புள்ள நம்ம கண்ணு முன்னாடியே இருக்குமே! நீங்க என்னங்க ஐயா சொல்றீங்க?” எனக் கேட்டார்.

“புள்ளை எங்க?”, வீரமுத்து.

“வேலைக்கு போயிருக்குங்க ஐயா.”

“சனியில என்ன வேலை?”

“எதோ சொல்லிட்டுப் போனாள். அதெல்லாம் நமக்கு என்னத்த வெளங்குது. உச்சிக்கு வந்துடுவேன் சொல்லிட்டுதேன் போனா(ள்)” என்றார் வர்ணம்.

“ம்ம்… புள்ளை வரட்டும். கல்யாணத்துக்கு சரியான்னு ஒரு வார்த்தைக் கேட்போம்” என்ற வீரமுத்து, “நீங்களுவ சொல்லும் பய வேணாம். அவென் போக்கு சரி கிடையாது. நானே ரெண்டு தரம் சாராயக் கடை பக்கம் பார்த்திருக்கேன்” என்று சொல்லிவிட்டு துண்டை உதறி தோளில் போட்டுக் கொண்டு சென்றுவிட்டார்.

“சாயங்காலம் கோயிலுக்கு போவணும்த்தா…” என்ற வர்ணம், வீரமுத்து சென்றுவிட்டாரா என உறுதி செய்துகொண்டு, “ரெண்டு நாளுல மூர்த்தி பொறந்த நா வருதே. அபிசேகத்தை சொல்லிட்டு வருவோம்” என்று மெல்ல கிசுகிசுத்தார்.

“சரிம்மா” என்ற குமுதா, “இந்த அண்ணேவாவது நம்மளை தேடி வரலாம். எம்புட்டு வருசமாச்சு” என்றார் ஏக்கமாக.

“வந்தான்னு வைய்யீ உன் அப்பன் சும்மா இருப்பாரா? அவென் எங்கட்டுக்குள்ள இருந்தாலும் நல்லாயிருந்தா சரிதேன். என் வூட்டு வாரிசு எத்தனை மக்கன்னு தெரியல” என்றார் வருத்தமாக.

“உன் தம்பி வூட்டுக்கு வரதுக்குள்ள கோயிலுக்கு போயி வருவோம்” என்ற வர்ணம், “சுசிலாவையும் கூட்டிக்க” என்றார்.

குமுதா சரியென எழுந்து சென்றார்.

குமுதாவின் தம்பி திருவாசகம். வீரபாண்டி பேரூராட்சி அலுவலகத்தில் மேலாளராக பணி புரிகிறார். அவரின் மனைவி சுசிலா. இவர்களுக்கு ஒரு மகள் மதுரா. அவளுக்கு இளையவன் மாதேஷ்.

மதுரா கல்லூரி படிப்பில் இறுதியிலும், மாதேஷ் பள்ளிப் படிப்பின் இறுதியிலும் இருக்கின்றனர்.

சுசிலாவும், குமுதாவும் அத்தனை ஒற்றுமை. நாத்தனார் அண்ணி என்ற வேறுபாடு இன்றி நெருக்கமாக இருந்தனர்.

அதில் வர்ணத்துக்கு அதிக பெருமை.

வீட்டிற்கு வாழ வந்த பிள்ளை, வீட்டுப்பெண்ணை சகோதரியாக அரவணைத்து செல்வதில் தானே குடும்பத்து ஒற்றுமை இருக்கிறது.

இருவரின் ஒற்றுமையை பார்க்கும்போது, வர்ணத்திற்கு தன்னைப்போல் தன்னுடைய மூத்த மகனின் மனைவியின் எண்ணம் எழும்.

‘அவளும் இப்படித்தான். நல்ல பாந்தமான பதுவிசானப் பொண்ணு. இந்த வூட்டுல ஒண்ணா வாழ கொடுத்து வைக்கலயே!’ என நினைவு வரும் நேரமெல்லாம் புலம்புவார்.

“இந்த மனுசன் வீம்புல எம் மவனை பிரிஞ்சி இருக்கனே. என் கட்டை சாயுறதுக்குள்ள எம் மவனை ஒரு தரம் கண்ணுல காட்டிப்போடு. வேற ஒன்னும் உம்மகிட்ட நான் கேட்கல” என்று அம்மன் முன் நின்று இரு கரம் ஏந்தி வேண்டிய வர்ணம், பூசாரி கொடுத்த குங்குமத்தை வாங்கிக்கொண்டு தன்னுடைய மகள் மற்றும் சின்ன மருமகளுடன் கோவில் மண்டபத்தில் வந்து அமர்ந்தார்.

“பூசாரி ஆர வந்து அமரட்டும். சொல்லிட்டு கெளம்புவோம்” என்ற வர்ணம், தற்போது தங்களுடன் இல்லாத பெரிய மகனைப் பற்றி ஏதேதோ பேசிக் கொண்டிருந்தார்.

வழக்கம்போல் வீரமுத்துக்கு தெரிய வேண்டாமென்று அபிஷேகத்திற்கு சொல்லிவிட்டு மூவரும் வர, கூடத்தில் மாதேஷுடன் அமர்ந்து அவனுக்கு பாடத்தில் சந்தேகம் சொல்லிக் கொடுத்துக் கொண்டிருந்தாள் வனமுல்லை.

ஆம்… இதுதான் வனத்தின் குடும்பம். அமைதியான மனிதர்கள் தான். ஆனாலும் பிள்ளைகளிடம் பாசத்திற்கு நிகர் கண்டிப்பும்.

அதுவும் வீரமுத்து என்றால் பிள்ளைகள் மூவருக்கும் அத்தனை பயம். அவர் முன் நிற்பதற்கே நடுங்குவர்.

இருவருக்கும் பிரசாதம் வைத்துவிட்ட குமுதா, “மது எங்கட்டி?” என்றார்.

“அவள் தூங்கிட்டு இருக்காள் அத்தை” என்ற மாதேஷ், “ஐயா திட்டிட்டாரு” என்றான். சத்தமின்றி.

“இவ என்ன தப்பு பண்ணா?”

சுசீலா கேட்டிடா…

“காலேஜில் அவள் கிளாஸ் பையன் கிட்ட நோட்ஸ் எழுத நோட்புக் வாங்கிட்டு வந்திருப்பா போல. ஐயா பேரை பார்த்துப்போட்டு வஞ்சிட்டாரு. பயலுவக்கூட பேச்சு காலேஜோடு, படிப்போடு நிறுத்திக்கணும் அப்படின்னு” என்று முல்லை விளக்கமாக சொல்லிக் கொண்டிருக்க,

அப்போதுதான் வீட்டிற்குள் வந்த திருவாசகம் அனைத்தையும் கேட்டுவிட்டு,

“ஐயா சொன்னா நம்ம நல்லதுக்குதேன். புரிஞ்சு நடந்துக்கங்க” என்றார்.

“ஃபிரெண்டா பேசி பழகுறதுல என்னயிருக்கு மாமா?” கேட்ட முல்லையை இன்னதென்று விவரிக்க முடியாத பாவனையில் நோக்கிய திருவாசகம், “பேசி, பழகுறது பிரச்சினை இல்லை வனம். பொண்ணுங்க பாதுகாப்பா இருக்கணுங்திறதுதேன் இங்க முக்கியம்” என்று நகர்ந்தார்.

மூத்த பெண்களும் அங்கிருந்து சென்றிட…

“ஷப்ப்பா… முடியலக்கா” என்றான் மாதேஷ்.

“என்னடா?”

“இதுக்கே இம்புட்டு பண்ணுறாங்களே!” என்று வீட்டைச் சுற்றி பார்வையை ஓட்டியவன், “உன் போலீஸ் மேட்டர் தெரிஞ்சுது அம்புட்டுதேன்” என்றான். மெல்லிய ஓசையில்.

இவனுக்கு எப்படித் தெரியுமென்று முல்லை அதிர்ச்சியில் மார்பில் கை வைத்து விழி விரித்திருந்தாள்.
___________________________

புவி தன்னுடைய மாற்றலுக்கான ஊருக்கு அன்று மாலை போல் வந்து சேர்ந்தான். உடன் ஆகாஷ்.

“நீயெதுக்குடா? குவார்ட்டர்ஸ் செட் பண்ணிட்டு சொல்றேன் அப்போ வரலாம்” என்று புவி சொல்லியதற்கு,

“வன் இயர் ஆச்சு புவிண்ணா. டார்லிங்கை பாக்கணும். தீப்ஸ் கிட்ட பேசிட்டேன். அவளும் வரேன்னு சொல்லிட்டாள். அவளுக்கு(தீபிகா) டூ ஹவர்ஸ் டிராவல் தானே. எப்படியும் டார்லிங் வீட்டுக்கு போக முடியாது. அவள் ஆபிஸில் மீட் பண்ணிட்டு வந்துடுறேன்” என்றான்.

“இதை உன் டார்லிங் கிட்ட சொல்லிட்டியா?” கேட்ட புவியின் பார்வையில் விவரிக்க முடியா ஒன்று.

“சொன்னா அவ்ளோ தான். என்னவோ அவ தாத்தா அவளோடவே ஆபிஸில் வந்து உட்கார்ந்திருக்க மாதிரி வேணாம் சொல்லுவா” என்ற ஆகாஷ், “அவள் இங்க படிக்க வந்ததே கொஞ்ச நாள் ஃபிரியா இருக்கலாம் அப்படின்னு தான். ரொம்பவே போராடி தான் வந்திருந்தாள்” என்றான்.

கேட்டுக்கொண்ட புவிக்கு, முல்லையின் நிலை ஓரளவுக்கு விளங்கிற்று.

“எல்லாம் இப்போவே செட் பண்ணிடலாம் புவிண்ணா?”

“கொஞ்ச நேரம் உட்காருடா. அதிக தின்க்ஸ் இல்லையே! நானே பார்த்துக்கிறேன்” என்றான் புவி.

“நீங்களே குக் பண்ணப் போறீங்களா?”

“அதுதான் பெஸ்ட்” என்ற புவி, “நாளைக்கு எப்போ மீட்டப்?” எனக் கேட்டான்.

“அந்தப் பக்கி எப்போ வரான்னு தெரியல. தேனி பஸ் ஸ்டாப் போய் அவளை பிக் பண்ணிட்டு, வனம் ஆபீஸ் போகணும்” என்றான்.

“ம்ம்” என்ற புவி, “என் பேச்சு எதுவும் இருக்கக் கூடாது” என்றான்.

“அண்ணா!” புவி தன்னை கண்டு கொண்டான் எனும் ஆச்சரியம் ஆகாஷிடம்.

“எனக்கு எல்லாம் தெரியும்” என்ற புவி, “நீ உன் ஃபிரண்டுக்கு உண்மையா இரு போதும்” என்றான்.

“புவிண்ணா பிளீஸ்… எனக்கே இப்போ ரீசண்டா தான் தெரியும். அதுவும் தீபி சொல்லி, வனம் சொல்லக் கூடாதுன்னு சொல்லிட்டாள். நான் யாருன்னு தெரியாதது தெரியாமலே இருக்கட்டும். தெரிஞ்சா ரொம்பவே கஷ்டம்னு அவள் சொல்லும் போது எனக்கும் எப்படி உங்ககிட்ட சொல்றது தெரியல. அதுவும் அவள் யாருன்னு தெரியாத போது உங்களுக்கு எந்தவொரு இன்ட்ரஸ்ட்டும் அவள் மேல இருக்காது நினைச்சேன்” என்ற ஆகாஷ், “சாரி புவிண்ணா” என்றான்.

“சில் டா. விடு” என்ற புவி, “எனக்குத் தெரியும்ன்னு அவளுக்குத் தெரிய வேண்டாம்” என்றான். அழுத்தத்திலும் அடர்த்தியாய்.

“அப்போ நீங்களும் அவளை?” என்று ஆகாஷ் கேள்வியாக இழுக்க…

“எஸ்… ஐ லவ் ஹெர்” என்ற புவியை தாவி அணைத்திருந்தான் ஆகாஷ்.

Click on a star to rate it!

Rating 4.8 / 5. Vote count: 30

No votes so far! Be the first to rate this post.

இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
2
+1
33
+1
0
+1
0

உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள் 

3 Comments

  1. ஹப்பா.. புவி கண்டு பிடிச்சுட்டான்…ஆனா எப்படி? காதலியை தேடி அவள் ஊருக்கே வந்துட்டான்..கதை சூடு பிடிக்குது… தாத்தாவை நினைச்சா பயமா இருக்கு.. என்ன ஆட்டம் ஆட போறாரோ??

  2. சும்மா சொல்ல கூடாது , நல்ல அண்ணன் – தம்பிங்கடா நீங்க ரெண்டு பேரும்…

  3. அப்பாடா 🤗🤗🤗🤗
    இப்ப தான் நிம்மதியா இருக்கு 🤗🤗🤗🥰🥰🥰🥰
    ஆனால் எப்படி தெரியும் 🤔🤔🤔🤔