
உயிர் – 18
அகிலனுக்கு மோதிரத்தை அணிவித்துவிட்ட ருக்மணி தன் தாயை தான் திரும்பி பார்த்தாள். அவரின் முகத்தில் எந்த ஒரு ஏமாற்றமும், அதிர்ச்சியும் தென்படவில்லை.
அதை வைத்தே இந்த விஷயம் அவருக்கு முன்னதாகவே சென்று சேர்ந்து விட்டது என்பதை புரிந்து கொண்டவளின் முகத்திலும் ஒரு வித நிம்மதி படர்ந்தது.
புண்ணியகோடி தன் மூத்த மனைவியிடம் கோபித்துக் கொண்டு நிச்சயத்திற்கே வராமல் போனமையால் அவருக்கு இங்கே நடந்த குளறுபடிகள் எதுவும் தெரியவில்லை.
அவருக்கு விசித்ரா இந்த திருமண விஷயத்தில் அவரை சற்றும் சட்டை செய்யாமல் அனைத்தையும் அவரின் விருப்பப்படியே செய்துவிட்டார் என்ற கோபம்.
இன்று நிச்சயதார்த்தத்திற்கு வரவில்லை என்றால், எப்படியும் விசித்ரா இறங்கி வந்து திருமணத்திற்காவது வருமாறு தன்னை அழைப்பார் என்ற கனவோடு வெளியே சுற்றிக் கொண்டிருக்கிறார்.
ஆனால், அவரின் வரவையே விசித்ரா சற்றும் சட்டை செய்யவில்லை என்பது இப்பொழுது அவருக்கு விளங்கவில்லை.
ருக்மணியை பொருத்த மட்டும் ஆதவ்வினால் முழுக்க முழுக்க நிச்சயிக்கப்பட்ட திருமணம் தான் இது.
அகிலனிற்கும் இதற்கும் எந்த சம்பந்தமும் இல்லை என்று நினைத்துக் கொண்டு இருக்கிறாள்.
ஆனால், அவனின் மனதிற்குள் தன் மீதான காதல் இருப்பதை உணரும் பொழுது அவளின் மனநிலை என்னவாக இருக்குமோ..
நிச்சய பத்திரிக்கையும் நல்ல முறையில் வாசிக்கப்பட்டது. அதில் தெளிவாக ஆதவ் கிருஷ்ணனுக்கும், அனுராதாவிற்கும் தான் திருமணம் என்றும், அடுத்ததாக அகிலன் கிருஷ்ணனுக்கும், ருக்மணிக்கும் திருமணம் என்றும் விவரித்து எழுதி இருக்கவும்.
இது அனைத்தும் முன்னதாகவே முடிவு செய்யப்பட்டு இருப்பதை பற்றி அப்பொழுது தான் அனுராதா அறிந்து கொண்டாள்.
அறிந்த நொடி அவளுக்குள் அப்படி ஒரு கோபம், ஆற்றாமை என்று என்னென்னவோ உணர்வுகள்.
சபை நடுவே எதையும் காட்ட முடியாமல் அமைதியாக பல்லை கடித்துக் கொண்டு அங்கே நின்று இருந்தாள்.
ஆதவ்வின் பார்வை அவளின் மனநிலையை உணர வேண்டி அவளையே தீண்டி தீண்டி செல்ல.
அவள் அதை உணர்ந்தாலும், அவனின் முகத்தை காண சற்றும் விருப்பமில்லை. எப்பொழுது இதெல்லாம் முடியும் என்ற நிலையில் தான் தவித்துக் கொண்டு நின்று இருந்தாள்.
அனைத்தையும் முன்னதாகவே தயார் செய்துவிட்டு தன்னிடம் எதையும் கூறாமல் மறைத்து விட்டார்களே என்று எண்ணும் பொழுதே அத்தனை கோபம் பெருக்கெடுத்தது.
அதிலும், தன் அக்காவின் பங்கும் இதில் இருக்கிறது என்பதை எண்ணும்பொழுது யாரின் மீது தன் கோபத்தை காட்டுவது என்றே தெரியாமல் அவளுக்குள் அத்தனை ஆற்றாமை.
ஒரு வழியாக நிச்சயம் முடியவும், முதல் ஆளாக அங்கிருந்து விறுவிறுவென மணமகள் அறைக்குள் நுழைந்து கொண்டாள் அனுராதா.
அவளைத் தொடர்ந்து ருக்மணியும் அறைக்குள் நுழைய.
“என்னக்கா நடக்குது இங்க? இதெல்லாம் உங்களுக்கு முன்னமே தெரியும் தானே.. என்கிட்ட இதைப்பத்தி ஒரு வார்த்தை கூட நீங்க சொல்லல” என்று ஆதங்கமாக கண்கள் கரித்துக் கொண்டு வர, தொண்டையை அடைக்க வினவி இருந்தாள் அனுராதா.
“அனு.. ப்ளீஸ் அனு.. நான் சொல்றத கொஞ்சம் கேளு.. இதை பத்தி முன்னாடியே சொல்லி இருந்தா நிச்சயமா நீ ஒத்துக்கிட்டு இருந்திருக்க மாட்ட. அதனால தான் சொல்லல”.
“அப்போ என் லைஃப்ல எந்த டிசிஷனுமே நான் எடுக்க கூடாதா.. கடைசி வரைக்கும் மத்தவங்க எடுக்குற முடிவுக்கு தான் நான் தலையாட்டனுமா.. இது என் வாழ்க்கை சம்பந்தப்பட்டதுக்கா.. என்னை கேக்காம நீங்களா எப்படி முடிவு பண்ணலாம்? அதுவும் அவரோட.. ம்ம்ச்ச்… என்னால கற்பனை கூட பண்ணி பாக்க முடியல. மொத்தமா என்னையும், எங்க அம்மாவையும் வெறுக்குற மனுஷனோட எனக்கு கல்யாணம்.. எனக்கு இப்போ எப்படி இருக்குன்னு தெரியுமா.. ஏன்க்கா.. என்கிட்ட முன்னாடியே சொல்லி இருக்கலாம்ல” என்றவளுக்கு அழுகை வேறு பெரிதாக கிளம்பியது.
கோமதியும், விசித்ராவும், கற்பகமும் அறைக்குள் நுழைந்தவர்கள். இருவருக்கும் இடையே நடக்கும் பேச்சுவார்த்தையை கவனித்தவாறு உள்ளே நுழைந்தனர்.
“இப்போ என்ன அனு.. உனக்காக தானே உன் அக்கா உன்கிட்ட சொல்லாம மறைச்சிருக்கா. இந்த விஷயம் எல்லாம் முன்னாடியே தெரிஞ்சிருந்தா நிச்சயமா இந்த கல்யாணத்துக்கு நீ ஒத்துக்க மாட்டனு அவளுக்கு தெரியும். அதனால தான் சொல்லாம மறைச்சிருக்கா.. எல்லாம் உன் நல்லதுக்காக தானே” என்றார் விசித்ரா.
“உங்களுக்கும் இது பத்தி எல்லாம் முன்னாடியே தெரியும் தான பெரியம்மா.. நீங்க கூட என்கிட்ட ஒரு வார்த்தை சொல்லல”.
“சொல்லி இருந்தா என்ன பண்ணி இருப்ப?”.
“எனக்கு பிடிக்கல வேண்டாம்னு நான் முன்னாடியே கத்தி சொல்லி இருப்பேன்” என்று கத்தி இருந்தாள் அனுராதா.
“என்ன பேசுற அனு நீ.. பெரியவங்க கிட்ட இப்படி தான் மரியாதை இல்லாம பேசுறதா” என்று அவளை சமாதானம் செய்ய முற்பட்டார் கோமதி.
தோய்ந்து போய் கட்டிலில் அமர்ந்தவள், “போதும்மா.. என்னால இதுக்கு மேல முடியாது. மூச்சு முட்டுற மாதிரி இருக்கு. எனக்கு இந்த ஃபேமிலியே பிடிக்கல. நம்மள எவ்வளவு கீழ தள்ளி மிதிக்க முடியுமோ மிதிக்கிறாங்க. எப்போடா இங்க இருந்து வெளியில போய் நிம்மதியா மூச்சு விடுவோம்னு இருக்கு. ஆனா, என்னை திரும்பவும் இங்கவே வச்சு திணிக்க பாக்குறீங்க.. என்னால முடியாதுமா.. ப்ளீஸ், என்னை விட்டுடுங்க”.
அனைவருக்கும் அவளின் நிலை புரியாமல் இல்லை.
அவள் அருகில் அமர்ந்த கற்பகம் அவளின் தாடையை பற்றி தன்னை பார்க்கச் செய்தவாறு, “இங்க பாருடா, பாட்டி சொல்றத கொஞ்சம் கேளு. ஆதவ் ரொம்ப நல்ல பையன். உன்ன நிஜமா நல்லா பாத்துப்பான். இத்தனை நாள் உன் வாழ்க்கை எப்படி இருந்திருந்தாலும் சரி, இனி உன் வாழ்க்கை சந்தோஷமா அமையும்” என்று அவர் கூறவுமே, அவளின் விழிகள் ருக்மணியில் தான் நிலைத்தது.
“பாட்டி நான் பாத்துக்குறேன். நீங்க எல்லாரும் கொஞ்சம் வெளியில வெயிட் பண்ணுங்க. நான் அவகிட்ட பேசுறேன்” என்று ருக்மணி அவர்கள் அனைவரையும் அறையை விட்டு வெளியே அனுப்பியவள். அவள் அருகில் அமரவும். அவளை இறுக்கமாக அணைத்துக் கொண்டாள் அனுராதா.
“உங்களுக்கு எல்லாம் தெரியும் இல்லக்கா.. சின்ன வயசுல இருந்தே நான்னா அவருக்கு சுத்தமா பிடிக்காது. அதோட நான் அவர்கிட்ட பேசுறதையே விட்டுட்டேன். உங்களுக்கும், அவருக்கும் கல்யாணம்னு சொன்ன பிறகு தான் கொஞ்சம் பேச ஆரம்பிச்சேன். இப்போ அவரோட எனக்கு கல்யாணம்னா.. என்னால அதை ஏத்துக்க முடியலக்கா. எனக்கு வேலை கிடைச்சிடுச்சு, உங்க கல்யாணம் முடிஞ்சதும் அம்மாவை கூட்டிட்டு சென்னைக்கு போகணும்னு நினைச்சேன். அங்கேயே வேலை பார்த்துட்டு அம்மாவோட அங்கேயே இருக்கலாம்னு நினைச்சேன். இப்போ எல்லாமே குழம்பி போய் நிக்குது. எனக்கு என்ன பண்றதுன்னு தெரியல. ஏன்க்கா இப்படி பண்றீங்க?” என்று விம்மலோடு கேட்டு முடித்தாள்.
அவளின் முதுகை தேய்த்து விட்ட ருக்மணி, “என் மேல உனக்கு நம்பிக்கை இருக்குல, நான் எது செஞ்சாலும் உன் நல்லதுக்காக தான் இருக்கும்னு நம்புறல. நீ சொல்றது உண்மை தான். ஆதவ்க்கு ஆரம்பத்துல உன்ன பிடிக்காது தான். ஆனா, இப்போ உன்ன ரொம்ப பிடிக்கும்” என்றதும் அவளிலிருந்து பிரிந்தவள், ருக்மணியை நம்பாத பார்வை பார்த்தாள்.
“என்ன நான் சொல்றத உன்னால நம்ப முடியலையா? ஆதவ் என்கிட்ட சொல்லும் பொழுது என்னாலுமே நம்ப முடியல” என்றவள் அன்று காபி ஷாப்பில் ஆதவ்வுடன் தான் பேசிய மொத்த கதையையும் ஒரே மூச்சில் கூறி முடித்தாள்.
அதை கேட்ட அனுராதா விக்கித்து போய் அமர்ந்திருக்க.
“எனக்கு கல்யாணத்துல விருப்பம் இல்ல. ஆதவ்க்கு உன் மேல விருப்பம்.. உங்களுடைய மரியாதையையும், கௌரவத்தையும் தொலைஞ்ச இடத்திலிருந்து மீட்டெடுக்க வேண்டாமா?”.
“எனக்கு ஒன்னும் வேண்டாம்! எனக்கு இங்கிருந்து போனாலே போதும்”.
“இவங்களுக்கு பயந்து இங்கிருந்து ஓடனும்னு பாக்குறியா அனு.. கொஞ்சம் யோசிச்சு பாரு, உன் அம்மா உனக்கு நல்ல வாழ்க்கை அமையனும்னு எத்தனை விரதம் வச்சுக்கிட்டு கோவில் கோவிலா அலையுறாங்கன்னு தெரியுமா.. இப்ப மட்டும் நீ ஆதவ்வை கல்யாணம் பண்ணிக்கிட்டா, உன் அம்மாவை அந்த வீட்ல இருந்து வெளியில கூட்டிட்டு வந்து என் அம்மாவோட தங்க வைக்க வேண்டியது என்னுடைய பொறுப்பு. உனக்கும் அவங்க அங்க இருக்க வேண்டாம் அதான வேணும். அதை நான் பாத்துக்குறேன்” என்று அவளுக்கு நம்பிக்கை அளித்தாள்.
“இல்லக்கா, நீங்க என்ன சொன்னாலும் அம்மா வர மாட்டாங்க”.
“அதான் நான் வர வைக்கிறேன்னு சொல்றேன்ல. இனி உன் அம்மா அங்க இருந்து கஷ்டப்பட மாட்டாங்க. என் அம்மாவும், உன் அம்மாவும் ஒன்னா ஒரே வீட்ல இருப்பாங்க. ஒருத்தருக்கு ஒருத்தர் துணையா.. நீ ஆதவ்வை கல்யாணம் பண்ணிக்கோ. ஆதவ் உன்ன லவ் பண்றாரு டி”.
அனுவின் விழிகள் இன்னும் நம்பிக்கையற்ற பார்வையை தான் பரிமாறிக் கொண்டிருந்தது.
அவளுக்கு இன்னமுமே ருக்மணியின் வார்த்தையில் துளியும் நம்பிக்கை எழவில்லை. ஆனாலும், தன் தலையெழுத்து இது தான் என ஏற்றுக்கொள்ள முடிவு செய்துவிட்டாள்.
ஆனாலும், கோபம்.. ஏன் என்றே தெரியாமல் ஆதவ்வின் மேல் அத்தனை கோபம்.
ஒருவேளை, அவன் தன்னை விரும்பியதாக இருந்தால் கூட, அதை தன்னிடம் தானே அவன் உரைத்திருக்க வேண்டும்.
இப்படி பக்காவாக பிளான் செய்து அனைத்தையும் அவனுக்கு தகுந்தார் போல் கச்சிதமாக நிறைவேற்றி இருக்கிறானே என்ற கோபம் அவன் மேல் மலையளவு இருந்தது.
‘அப்படி கேட்டிருந்தால் சரி என்று ஒப்புக்கொண்டு இருப்பாயா?’ என்று அவள் மனம் எழுப்பிய கேள்விக்கு ‘நிச்சயம் இல்லை’ என்று தான் அவளின் மனசாட்சிக்கு பதில் கொடுத்தாள்.
‘இப்பொழுது தெரிகிறதா ஏன் அவன் உன்னிடம் கூறவில்லை என்று’ என்ற அவளின் மனசாட்சியின் எள்ளி நகையாடலுக்கு இப்பொழுது அவளிடம் விடை இல்லை.
ஆனாலும், அவன் செய்தது தவறு.. முற்றிலும் தவறு..
மறுநாள் விடியல் பல கனவுகளோடும், எதிர்பார்ப்புகளோடு, ஆசைகளோடும் விடிந்தது.
மணமக்களையும் மீறிய சந்தோஷம் கீதாவிற்கு தான்.
உமாவினால் இதை சற்றும் ஏற்றுக்கொள்ளவே முடியவில்லை.
ருக்மணி தான் தன் வீட்டிற்கு மருமகளாக வரவேண்டும் என்று எப்படி எல்லாம் யோசித்து, முதல் ஆளாக முந்திக்கொண்டு விசித்ராவிடம் பெண் கேட்டு, அனைத்தையும் சரியாக செய்திருந்தார்.
ஆனால், இப்படி அவரின் ஆசையில் எல்லாம் மொத்தமாக அவரின் மகன் மண் அள்ளி போட்டு விட்டானே..
உறவினர்கள் படை சூழ அனைவரின் முன்னிலையிலும் நிச்சயித்த பிறகு, எப்படி இந்த திருமணத்தை தடுத்து நிறுத்த முடியும்.
ஆதவ் அத்தனை உறுதியாக இருக்கும் பொழுது அவனின் மனதை மாற்ற முடியுமா என்ன..
அனைத்தையும் ருக்மணிக்கு என பார்த்து பார்த்து வாங்கி இருந்தார். இப்பொழுது அது அனைத்தையும் அனுவிற்கு தர வேண்டும் என்னும்பொழுதே அவருக்கு மனம் உவக்கவில்லை.
*****
சென்ற பதிவிற்கு தங்கள் கருத்துக்களையும், ரேட்டிங்கையும் பகிர்ந்து கொண்ட அனைவருக்கும் மிக்க நன்றி 🙏.
கதையை படித்து உங்கள் கருத்தையும் மறக்காமல் பகிர்ந்து கொள்ளுங்கள் 😊.
இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
5
+1
9
+1
1
+1
உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள்
You must be logged in to post a comment.


ம்ம்.. அனுவின் கோபத்தை பார்த்தால் fire engine நிலைமை கொஞ்சம் கஷ்டம் தான் 😆😆.. ருக்மணியும் அகில் லவ் பத்தி தெரியாம தான் இருக்கா… ரெண்டு ஆண்களும் தன் காதலை பெண்களிடம் சொல்லாமல் அவர்களுக்குள் மட்டும் பேசி நிச்சயத்தை முடித்து விட்டனர்..இனி தான் கச்சேரி இருக்கு…❤️
கஷ்டமா இஷ்டமானு இனி தான் தெரியும் 😂