
உயிர் – 17
அனுராதாவிற்கு பெரிதாக மேக்கப் எல்லாம் எதுவும் செய்யவில்லை. மருதாணி போடவே அத்தனை கேள்வி கேட்டவள். நிச்சயம் மறுத்து விடுவாள் என்பது ருக்மணிக்கும் தெரியும். எனவே, அதைப் பற்றி எதுவும் கூறவில்லை.
தன் திருமணத்தில் நீ இந்த உடையை தான் போட வேண்டும் என முன்னமே அவளுக்கு வாங்கிக் கொடுத்து விட்டிருந்தாள்.
ருக்குமணி கொடுத்திருந்த அந்த தங்க நிற பட்டுப்புடவையில் மின்னிக் கொண்டு இருந்தாள் அனுராதா.
தன்னை கண்ணாடியில் பார்த்தவள், “அக்கா எனக்கு என்னமோ இந்த சாரி ரொம்ப ஓவரா இருக்க மாதிரி தெரியுது”.
“என்னடி ஓவரா இருக்கு.. எல்லாம் நல்லா தான் இருக்கு” என்று தன் புடவையை சரி பார்த்துக் கொண்டே ருக்மணி கூறவும்.
“இல்லக்கா உன் புடவை கலரை விட என் புடவை கலர் ரொம்ப பிரைட்டாவும், எடுப்பாவும் இருக்க போல தெரியுது. நான் வேற சாரி மாத்திக்கவா.. யாருக்கு தெரியும் கீதா அத்தை அவங்க பையனை மயக்க தான் நான் இப்படி எல்லாம் டிரஸ் பண்ணி இருக்கேன்னு சொன்னாலும் சொல்லுவாங்க” என்றாள் முகத்தை உர்ரென்று வைத்துக்கொண்டு.
“யார் என்ன சொன்னாலும் சரி, நீ இந்த சாரி தான் கட்டுற. இதெல்லாம் நான் ஏற்கனவே முடிவு பண்ணது தான். அப்புறம் இன்னொரு விஷயம் அனு.. ஸ்டேஜ்ல நீ என்னோடவே தான் இருக்கணும். எனக்கு மணப்பெண் தோழியா என் பக்கத்திலேயே நீ தான் நிக்கணும்” என்று அவளின் கையை பற்றி அதில் அழுத்தத்தை கொடுக்கவும்.
“என்னக்கா பயர் இன்ஜினை நினைச்சா ஹார்ட் பீட் டபக்கு டபக்குனு வேகமா துடிக்குதா.. நான் உன் பக்கத்துல இருக்கும் பொழுது அவரால உன்னை என்ன பண்ண முடியும். அதெல்லாம் நான் எங்கேயும் போக மாட்டேன். உன்னோடவே தான் இருப்பேன் போதுமா” என்று அவளை கட்டிக் கொண்டு கூறவும் தான் ருக்மணிக்குமே நிம்மதியாக இருந்தது.
சற்று நேரத்தில் உறவினர்கள் படை மண்டபத்தை சூழ்ந்து இருக்க. மணப்பெண்ணையும், மணமகனையும் நிச்சயத்திற்காக மணமேடைக்கு அழைத்திருந்தார் ஐயர்.
அதன்படி ஆதவ் அவன் அருகில் அகிலனும், ருக்மணி அவள் அருகில் அனுராதாவும், மேலும் குடும்ப உறுப்பினர்களும் மணமேடையை ஆக்கிரமித்து இருந்தனர்.
ருக்மணி, எங்கே அனுவின் கையை விட்டால் அவள் ஏதாவது சாக்கு சொல்லி கீழே இறங்கி விடுவாளோ என்று அவளின் கையை விடவே இல்லை. தன் கையோடு சேர்த்து இறுக்கி பிடித்துக் கொண்டே இருந்தாள்.
அனுவும், அவள் திருமணத்தை எண்ணிய படபடப்பில் இப்படி செய்கிறாள் என்று எண்ணியவள், பெரிதாக எடுத்துக் கொள்ளாமல் தன் அக்கா உடனே இன்முகமாக நின்று இருந்தாள்.
மேடைக்கு வரும்பொழுதே ஆதவ்வின் விழிகள் அனுராதாவில் தான் படிந்தது. எந்த ஒரு ஒப்பனையும் பெரிதாக செய்யாமலே அத்தனை அழகாக அன்றலர்ந்த ரோஜா மலர் போல் மலர்ந்து கொண்டிருந்தாள்.
அதிலும், அவன் தேர்வு செய்து கொடுத்திருந்த அந்த தங்க நிற புடவையில் அவள் ஜொலித்துக் கொண்டிருந்தாள் என்று கூறினால் அது மிகையாகாது.
ஆம், இது அவன் தேர்வு செய்தது தான். தங்களுக்கு நிச்சயம் என்று அவளுக்கு தெரியா விட்டாலும், அவனுக்கு தெரியும் அல்லவா..
அதனாலேயே அவளுக்காக நிச்சயத்திற்கு என பார்த்து பார்த்து தேர்வு செய்து அதை ருக்மணியிடம் கொடுத்து அவளிடம் கொடுக்குமாறு கூறி இருந்தான்.
“சரி நிச்சய தாம்பூலம் வாசிச்சிடலாமா” என்று ஐயர் வினவவும்.
“இல்ல, முதல்ல மோதிரம் மாத்திடறோம். அப்புறமா நீங்க நிச்சய தாம்பூலம் வாசிச்சா போதும்” என்றான் ஆதவ்.
அனைவரும் அவனின் விருப்பப்படியே செய்யலாம் என்று கூறி விட.
ஆதவ்வின் அருகில் நின்றிருந்த அகில் மோதிரம் அடங்கிய பெட்டியை ஆதவ்விடம் நீட்டி இருந்தான். அதை வாங்கிய ஆதவ் ருக்மணியை பார்த்து விட்டு அனுராதாவை பார்க்கவும்.
ருக்மணியும் அனுராதாவை தான் திரும்பிப் பார்த்தாள்.
அவள் அப்பொழுது தான் மேடையில் நின்ற வாக்கிலேயே தன் அன்னையிடம் ஏதோ சைகையில் சொல்லிக் கொண்டிருந்தாள். எனவே, இவர்கள் இருவரும் அவளை பார்ப்பது அவளுக்கு அந்நொடி தெரியவில்லை.
ஆதவ் கிருஷ்ணா யாரும் எதிர்பாராத வண்ணம் அனுராதாவிற்கு மாலையை அணிவிக்கவும் தான், திடுக்கிட்டு திரும்பிய அனுராதாவிற்கு இங்கே நடப்பதே விளங்கியது.
ருக்மணி தன் கையோடு சேர்த்து இறுக்கமாக பிடித்திருந்த அனுவின் வலது கையின் மணிக்கட்டை பிடித்து ஆதவ்விற்கு நேராக நீட்டி விடவும்.
நொடி நேரத்தில் அவளின் மோதிர விரலில் நிச்சய மோதிரத்தை அணிவித்திருந்தான் ஆதவ் கிருஷ்ணா.
சற்று நேரத்தில் சுதாரிப்பதற்குள்ளாகவே நடந்தேறிய சம்பவத்தில் அனைவருமே ஸ்தம்பித்து போய்விட்டனர்.
யாராலும் இதை சற்றும் ஏற்றுக்கொள்ளவே முடியவில்லை. அவ்வளவு ஏன் கீதா கூட அதிர்ச்சியாக தான் பார்த்துக் கொண்டு நின்றிருந்தார்.
முதலில் சுதாரித்த உமா, “ஆதவ் என்ன பண்ற நீ?” என்றார் அதட்டலாக.
அனுவிற்கு தன் முழு உடலுமே கிடுகிடுவென நடுக்கம் எடுக்க தொடங்கிவிட்டது.
அதிர்ந்த பார்வையோடு அவள் திரும்பி ருக்மணியை பார்க்கவும். அவளின் முகத்திலோ கவலைக்கான சுவடே தென்படவில்லை.
தன் முத்து பற்கள் தெரிய அழகாய் சிரித்தவள், தன் விழிகளை மூடி திறக்கவும். இங்கே என்ன நடக்கிறது என்று அனுவிற்கு தான் தலையும் புரியவில்லை வாலும் புரியவில்லை.
அதிலும், ஆதவ் தனக்கு மோதிரத்தை அணிவித்து இருக்கிறான் என்பதை அவளால் சற்றும் நம்பவும் முடியவில்லை, ஏற்றுக்கொள்ளவும் முடியவில்லை.
இதெல்லாம் எப்படி சாத்தியம், எப்படி நடந்தேறியது என்று பல குழப்பங்களும், கேள்விகளும் அவளின் மனதை ஆக்கிரமித்து கொண்டது இந்நொடி.
“என்ன ஆதவ் இதெல்லாம்.. இங்க என்ன நடக்குது?” என்றார் சத்யராஜ்.
“அப்பா எனக்கு அனுவை தான் பிடிச்சிருக்கு”.
“ஆதவ் இதை நீ இங்க வச்சு தான் சொல்லுவியா.. வீட்டிலேயே சொல்லி இருந்தா ருக்மணியை உனக்கு பேசாம, அனுவுக்கும் உனக்கும் பேசி இருக்கலாம்ல” என்று அவர் இலகுவாக கூறவும்.
“வீட்டிலேயே நான் சொல்லி இருந்தா அம்மா எங்க கல்யாணத்துக்கு ஒத்துக்கிட்டு இருந்திருப்பாங்களா?” என்றவனின் வார்த்தையில் திடுக்கிட்டு விழித்த உமா, “அதுக்காக இப்படித்தான் எங்க எல்லாரையும் நம்ப வச்சு ஏமாத்துவியா.. உன் மேல நான் ரொம்பவே நம்பிக்கை வச்சிருந்தேன். நீ என் நம்பிக்கை மொத்தத்தையும் உடைச்சிட்ட.. என்னால இதை கொஞ்சம் கூட ஏத்துக்கவே முடியல. நிஜமாகவே நீ என் மகன் தானான்னு எனக்கு சந்தேகமா இருக்கு” என்று தன் ஆசை நிராசையான ஏமாற்றத்தில் ஏதேதோ பேசவும்.
“அம்மா ப்ளீஸ், எதுவா இருந்தாலும் அப்புறமா பேசிக்கலாம். முதல்ல என்கேஜ்மென்ட் பங்க்ஷனை முடிச்சிடுவோம்”.
“என்னடா பேசுற நீ.. ருக்மணி பத்தி கொஞ்சமாவது யோசிச்சு பார்த்தியா? உனக்காக தயாராகி வந்து நிக்கிறா.. அவ என்ன நினைப்பா? அவளோட வாழ்க்கை என்ன ஆகிறது?” என்று எகிறி கொண்டு வந்தார் உமா.
“அம்மா அதை பத்தி எல்லாம் நான் ஒன்னும் யோசிக்காம இல்ல. உங்களை விட அதிகமாவே ருக்மணி மேல எனக்கு அக்கறை இருக்கு. நீங்க கொஞ்சம் அமைதியா இருந்தீங்கன்னா முழு விழாவையும் சிறப்பாக முடிக்கலாம். நல்ல நேரம் முடிஞ்சிடும்” என்று தன் தாய்க்கு பதில் அளித்தவன்.
அதிர்ந்து செய்வதறியாது சிலையென நின்றிருக்கும் அனுராதாவின் முன்பு தன் வலது கையை தூக்கி நீட்டினான்.
அவளுக்கோ ஒன்றுமே புரியவில்லை.
அதிலும், அவன் தான் அனுவை விரும்புகிறேன் என்று கூறியது அவளின் மூளைக்குள் வண்டாய் குடைந்து கொண்டிருந்தது.
தன் எதிரே கையை நீட்டியவனை பார்த்தாளே தவிர்த்து, எதுவும் செய்ய தோன்றவில்லை.
அவளின் மூளை அதன் சிந்திக்கும் திறனையே நிறுத்தி சில நிமிடங்கள் ஆகியிருந்தது.
அனுவிடம் அவளின் கையில் ஒரு மோதிரத்தை திணித்த ருக்மணி, “ஆதவ்க்கு போட்டு விடு” என்றாள் கிசுகிசுப்பாக.
அதில் பதறி தன் கையை மோதிரத்தோடு சேர்த்து இறுக்கி மூடி கொண்டவள், “ஐயோ! அக்கா.. நானா..?” என்றாள் வார்த்தைகள் தந்தியடிக்க.
“சீக்கிரம் போட்டு விடுமா. இன்னொரு ஜோடிக்கு வேற நிச்சயம் முடிக்க வேண்டியது இருக்கு. நல்ல நேரம் முடிய போகுது சீக்கிரம்” என்று ஐயர் வேறு அவசரப்படுத்த.
அழுத்தமாக தன் கையை மூடி இருந்தவளுக்கு ஆதவ்விடம் அந்த மோதிரத்தை கொண்டு சேர்க்கவே சற்றும் திறன் இன்றி நின்றிருந்தாள்.
“சீக்கிரம் அனு உங்க நிச்சயம் முடிஞ்சா தான் அடுத்து எனக்கு நடக்கும். நல்ல நேரம் முடிஞ்சிட போகுது” என்று வேறு ருக்மணி கூறவும்.
அனுவிற்கோ தலையே வெடித்து விடும் உணர்வு. அப்படி என்றால் ருக்மணிக்கு யாருடன் நிச்சயம் என்ற கேள்வியும் இப்பொழுது சேர்ந்து கொள்ள. செய்வதறியாது வெடவெடத்து போய் நின்றிருந்தாள்.
ஆதவ் எதுவுமே கூறவில்லை.
அவளை கட்டாயப்படுத்தவில்லை..
அவசரப்படுத்த வில்லை..
அமைதியாக அவள் போடும் வரை அவளின் முன்னே தன் கையை நீட்டியவாறு அவளின் முகத்தையே பார்த்துக் கொண்டு நின்று இருந்தான்.
அவளின் முகத்தில் எத்தனை எத்தனை உணர்ச்சிகள்.. உணர்ச்சி குவியலாய் தன் முன்னே நின்று இருந்தவளை இப்பொழுதே அள்ளிக் கொள்ள அவன் கைகள் பரபரத்தாலும், மோதிரத்தை வாங்காமல் பின்வாங்க முடியாது என்று நின்றிருந்தான்.
இங்கு நடப்பது எதுவும் கோமதிக்கு புரியாவிட்டாலும், தன் மகளுக்கு ஏதோ நல்லது நடக்க போகிறது என்பதை மட்டும் அவரின் உள்ளுணர்வு அவருக்கு உணர்த்தியது.
அதற்குள் மணமேடை ஏறிய கோமதி, “போடுமா.. அதான் தம்பி கையை நீட்டிக்கிட்டு காத்துகிட்டு இருக்குல” என்று அவளிடம் கூறவும்.
அவளுக்கு மற்றொரு புறம் வந்து நின்ற கற்பகம் பாட்டி, “போடு அனு.. அதான் இத்தனை பேர் சொல்றோம்ல.. சொல்ற பேச்சை கேட்க மாட்டியா?” என்றார் அதட்டலாக.
தன் பேரன் எது செய்தாலும் அதில் நிச்சயம் ஏதாவது காரணம் இருக்கும் என்ற நம்பிக்கை அவருக்கு பெரிதாகவே இருந்தது. அதனாலேயே இத்தனை திடமாக பேசினார்.
அதிலும், அனுவிற்கு ஆதவ் உடனான வாழ்க்கை அவருக்கு கசக்குமா என்ன..
அனைவரும் வற்புறுத்தவும் சபையில் வேறு வழியின்றி தன் நடுங்கும் கரம் கொண்டு ஆதவ் கிருஷ்ணனின் கையில் அந்த மோதிரத்தை அணிவித்து விட்டிருந்தாள் அனுராதா.
கோமதியிடமும், ருக்மணியிடமும் நிம்மதி பெருமூச்சு வெளியேறியது.
“பேஷ்.. பேஷ்.. அடுத்த ஜோடி மோதிரத்தை மாத்திக்கோங்க” என்று ஐயர் கூறவும் தான் ருக்மணிக்கு உணர்வே திரும்பியது.
இப்பொழுது தான் மோதிரம் அணிவிக்க வேண்டுமே.. இதுவரை மணமகன் யார் என்று கூட அவள் கேட்கவில்லை.
அவளின் பார்வை ஆதவ்வில் படிய.. தன் அருகே நின்ற அகிலனின் கழுத்தில் மற்றொரு மாலையை அணிவித்தவன். அவனிடம் ஒரு மோதிரத்தை கொடுக்கவும் தான், தனக்கும், அகிலனுக்கும் திருமணம் என்ற நிதர்சனமே அவளின் நெற்றி பொட்டில் அறைந்தது.
அவளிடம் எந்த ஒரு எதிர்பார்ப்பும் இல்லை. அதே சமயம் எதிர்ப்பும் இல்லை.
ஒரே ஒரு நொடி அவளின் விழிகள் விரிந்து சுருங்கியது அவ்வளவே..
அவன் அணிவித்த மோதிரத்தை அமைதியாக தன் விரல் நீட்டி வாங்கிக் கொண்டாள்.
அதேபோல் தானும் அவனுக்கு மோதிரத்தை அணிவித்துவிட்டு இருந்தாள்.
ஆனால், இது எதுவுமே அனுராதாவின் மூளையில் தான் பதியவில்லை. இங்கே நடக்கும் ஒவ்வொன்றும் அவளுக்கு பேரதிர்ச்சியாய் இருந்தது.
ஆனால், இந்த மணமகள் மாற்றத்தில் மகிழ்ந்தது ஒரே ஒருவர் தான். அது வேறு யாருமல்ல கீதா..
அவர் எண்ணியது போலவே அவர் மகனுக்கு ருக்மணியே மணமகளாக வந்து விட்டாளே.. அந்த மகிழ்ச்சி அவரின் முகத்தில் அப்படி பிரகாசித்தது.
****
கதையை பற்றிய உங்கள் கருத்தை தவறாமல் பகிர்ந்து கொள்ளுங்கள் 😊
இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
2
+1
9
+1
3
+1
உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள்
You must be logged in to post a comment.


Shabaaaaa … ஒரு வழியா நல்ல படியா நிச்சயம் முடிஞ்சுடுச்சு..அனு, ருக்மணி reactions க்கு waiting.. அதிலும் fire engine அனு romance kku ரொம்ப waiting 😆😆😆😆😆❤️
😂😂 ரொமான்ஸ் தான.. அதெல்லாம் நிறைய வரும்.. ஆனா வராது…. 🤣🤣