
உருகும் நேசம் உடையும் நெஞ்சம் 7
மிகுந்த ஆரவாரத்திற்கு நடுவில் கல்வி அமைச்சர் வந்திட, நிகழ்வு இனிதாய் தொடங்கியது.
கல்லூரி தொடங்கி நூறு ஆண்டுகள் நிறைவு செய்ததை கொண்டாடும் விதமாக அந்த நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டது.
அரங்கம் சுற்றி காக்கியாக நின்றிருந்தனர்.
அமைச்சர் முன் வரிசையில் நடுநாயகமாக அமர்ந்திருக்க… புவியும் மேடைக்கு கீழே அவரை பார்த்தவாறு காக்கிச்சட்டையில் காவலனாக நிமிர்ந்து நின்றிருந்தான்.
ஒவ்வொரு நிகழ்ச்சியாக மாணவர்கள் மேடையேறி அழகாய் நிகழ்த்தினர்
இறுதியாக ஆகாஷ், தீபிகா பங்கு கொள்ளும் நடனம் முடிய, மாணவர்களுக்கு பரிசு வழங்கும் தருணம் தொடங்கியது.
ஒவ்வொரு வகுப்பிலும் படிப்பு, விளையாட்டு, இன்னும் பிற திறமைகள் என பல்வேறு பிரிவில் தேர்ந்தெடுக்கப்பட்ட முதல் மூன்று மாணவர்களுக்கு அமைச்சர் பரிசுப்பொருட்கள், பதக்கம் மற்றும் சான்றிதழ் கொடுத்து சிறப்பித்தார்.
ஆகாஷின் துறையில் அவர்களது வகுப்பில் அதீத போட்டியே அவனுக்கும், முல்லைக்கும் தான்.
ஒவ்வொரு பிரிவிலும் இருவரும் தான் மாற்றி மாற்றி பரிசினை வாங்கினர். முல்லை முதல் பரிசு வாங்கினாள், ஆகாஷ் இரண்டாம் பரிசு வாங்கினான். ஆகாஷ் முதல் என்றால் முல்லை இரண்டு என தாங்களே அனைத்தும் வாங்கி குவித்தனர்.
ஒவ்வொரு முறையும் முல்லை புவியை தாண்டிச் சென்று மேடையேற, புவியின் விழிகள் மெச்சுதலாய் அவளை நோக்கின.
அடுத்த முறையும் முல்லை பெயர் ஒலிக்க மேடையேற தன்னை கடந்து செல்லயிருந்த நொடி…
“இங்கவே நில்லு. ஒவ்வொரு முறையும் அங்க போயிட்டு போயிட்டு வர… ஆகாஷ் ஸ்டேஜ்ஜிலே நின்னுட்டான் பாரு” என்றான் புவி.
அவனை மிக அருகில் பார்ப்பதற்காகவே ஒவ்வொரு முறையும் இறங்கி ஏறுகிறாள் என்பது புவிக்குத் தெரியவில்லை.
புவிக்கு தலை ஆட்டிய முல்லையும் ஆகாஷ் உடன் மேடையில் நின்று கொண்டாள். அவன் சொல்லி கேட்காவிட்டால் தவறாக எண்ணிக் கொள்வானோ என.
அவர்கள் வகுப்புக்கு முடிய கீழிறங்கிய ஆகாஷ், முல்லையை நோக்கி ஓடி வந்த தீபிகா… “மொத்தமா நீங்க ரெண்டு பேருமே வாங்கிட்டா… நானெல்லாம் என்ன பண்றது?” என்றாள்.
“வாங்கிட்டாலும்” என்று அவளின் தலையில் ஆகாஷ் கொட்ட, தீபிகா முகம் சுருக்கினாள். ஆகாஷ் முல்லையை பார்க்க, இருவருமே தங்கள் கழுத்திலிருந்த பதக்கங்களை கழட்டி ஒன்றாக தீபிகாவின் கழுத்தில் போட்டிருந்தனர்.
“ஹேய் பக்கீஸ்” என்று தீபிகா கண் கலங்க… “லூசு” என்று இருவரும் அவளை இருபுறம் நின்று அணைத்துக் கொண்டனர்.
மூவரையும் பாராது பார்த்து நின்ற புவிக்கு மூவரின் நெருக்கம்… நட்பில் பிணைந்திருந்த அன்பு ஒருவித இதத்தை அளித்தது. அந்த இதம் மேலும் கூடி துவண்டது அவன் கையில் சேர்ந்த காகிதத்தால்.
விழா முடிய அமைச்சர் கிளம்பிய பின்னர், புவி தன் காவலர்களை முடிக்க வேண்டியவற்றை முடித்து கிளம்புமாறு பணித்து திரும்பிட ஒரு பெண் அவன் முன் சென்று நின்றாள்.
“சார்?”
“சொல்லுங்க?” என்ற புவி, “எதும் உதவி செய்யணுமா?” எனக் கேட்டான்.
“இதை அவங்க கொடுக்க சொன்னாங்க” என்று காகிதத்தை புவியிடம் நீட்டிய அப்பெண், “இங்க தான் நின்னுட்டு இருந்தாங்க” என்று தேடிட மாணவ கூட்டத்தில் அவளால் சரியாக எங்கென்று பார்க்க முடியவில்லை.
“யாரு?”
புவி விழா ஆரம்பிப்பதற்கு முன் இங்கு வந்த நொடி முதல் பர்தா அணிந்திருக்கும் ஒவ்வொரு பெண்ணையும், பிறர் அறியாத வகையில் கவனித்து பார்த்தான். யாரும் அன்று இரவு அவன் சந்தித்த பெண்ணாகத் தோன்றவில்லை.
‘எப்படியும் என்னை நீ பார்த்திட்டு இருப்ப தானே!’ நெஞ்சின் ஓரம் ஏனென்று விவரிக்க முடியாத பனியின் குளுமை.
புவிக்கு தெரியும் எப்படியும் இன்று காகிதம் தன் கைக்கு வருமென்று, அதனால் தான், தான் வந்த காவல் வாகனத்திற்கு அருகிலேயே ஓட்டுனரை நிற்க வைத்து விட்டான்.
ஆனால் இப்படி வந்து சேருமென்று புவி நினைக்கவில்லை.
“அவங்க என் பிராஞ்ச் இல்லை. இன்னைக்கு தான் பார்க்கிறேன் சார். எதோ முக்கிய மெசேஜ். கொடுக்க முடியுமா கேட்டாங்க. மறுக்க முடியல” என்ற பெண், புவி சரியென்றதும் சென்றுவிட்டாள்.
காகிதத்தை பிரித்து அதில் என்ன எழுதியிருக்கிறது என்பதை தெரிந்துகொள்ள மனதில் ஆர்வம் கிளர்ந்து எழுந்த போதும்… தன் கண் முன் வர மறுக்கின்றாள் எனும் சிறு கோபத்தில் படிக்காது சட்டை பையில் வைத்துக் கொண்டான்.
படித்ததும் புவியின் முகம் காட்டும் உணர்வினை அவதானிக்க மறைந்து நின்று பார்த்திருந்த முல்லை, அவன் படிக்கவில்லை என்றதும் வாடிய முகத்துடன் அங்கிருந்து நகர்ந்திருந்தாள்.
__________________________
“ஏன் படிக்கல தீப்ஸ்?”
இதோடு நூறு முறைக்கு மேல் கேட்டு தீபிகாவை கடுப்பாக்கிவிட்டாள் முல்லை.
“வீட்டுக்கு போய் படிச்சிருப்பாரா?”
“ஆகாஷ்… இல்லை வேண்டாம். அவருக்கே கால் பண்ணி கேளு.”
“ஏன் திறந்து கூட பாக்கல? வேலையில் இருந்ததால் இருக்குமோ?”
ஒருகட்டத்தில் தீபிகா தன் பொறுமையை இழந்திருந்தாள்.
“இது சரியில்லை வனம். எதோ விளையாட்டா செய்யுற நினைச்சா… இப்போ நீ புலம்புறது, அவரை பார்க்கும் பார்வை எல்லாம் வேற கதை சொல்லுது. வீரமுத்து நினைவிருக்கட்டும்” என்றாள்.
“ச்சூ… அப்படியெல்லாம் ஒன்னுமில்லை. நீயா எதும் நினைக்காத” என்ற முல்லை போர்வையை இழுத்துப் போர்த்தி முகம் வரை மூடிக் கொண்டாள்.
“எனக்கென்னவோ நீ அவரை லவ் பன்றன்னு தோணுது.”
தீபிகா சொல்லிட போர்வையை விலக்கிய முல்லை, “அப்படியெல்லாம் இல்லை தீபி” என்றால். முல்லையின் முகம் காட்டிய வருத்தமே, அவள் பொய் சொல்கிறாள் என்பதை தீபிக்கு காட்டிக் கொடுத்தது.
இருப்பினும் அவளை சங்கடப்படுத்தக் கூடாதென மேற்கொண்டு எதுவும் தீபிகா கேட்கவில்லை.
முல்லையின் குடும்ப சூழல் அறிந்திருக்கும் தீபிகாவுக்கு தோழியை நினைத்து கவலையானது.
“என்ன யோசனை வனம்? தூங்கு” என்ற தீபி முல்லை உறங்கிய பின்னரே தானும் உறங்கினாள்.
_________________________
கல்லூரி விழா வேலை முடித்து இரண்டு நாட்கள் ஆகியிருந்தது.
இன்னும் புவி அந்த காகிதத்தை திறந்து பார்க்கவில்லை. அந்த காகிதத்தை பார்க்கும் போதெல்லாம் என்ன எழுதியிருப்பாள் எனும் ஆர்வம் மேல் எழும்பும். அந்த வார்த்தைகள் நிச்சயம் புன்னகைக்க வைக்கும். இருப்பினும் தன் மனதிற்கு தானே கடிவாளமிட்டுக் கொண்டான்.
மெத்தையில் படுத்திருந்த புவியின் நினைவுகள் எல்லாம் அன்றைய இரவில், சிறிது நேரமே ஆயினும், தன்னை ரசனையாய் உள்வாங்கிய விழிகளிலே படபடத்தது.
‘என்ன எழுதியிருந்தாலும், நிச்சயம் அந்த வார்த்தைகள் தன்னை தடுமாற வைக்கும். இந்த பேரவஸ்தையின் பெயர் சரியாக விளங்காது அதனை படித்து, அவள் நினைவாகவே உழல்வது சரியா?’ என்று தனக்குள்ளே பட்டிமன்றம் நடத்திக் கொண்டிருந்தான்.
ஒரு மனம் திறந்து பார்க்க உந்தி தள்ளியது. மற்றொரு மனமோ நேரில் வரட்டும் பிறகு பார்த்துக் கொள்வோம் என்று புவியின் ஆர்வத்தை, உணர்வை கட்டி வைத்திட முயன்றது.
“அண்ணா இன்னும் தூங்கலையா?” எனக் கேட்டுக்கொண்டே பாதி திறந்திருந்த கதவினை திறந்து கொண்டு ஆகாஷ் வந்தான்.
“வா ஆஷ்… உனக்கென்ன தூக்கம் வரலையா?” எனக் கேட்ட புவி, விடி விளக்கை அணைத்துவிட்டு, மின்விளக்கை ஒளிரச் செய்தான்.
“என்னாச்சு?” எனக் கேட்டு, புவியின் அருகில் அமர்ந்தான் ஆகாஷ்.
“என்னடா சொல்லனும்?”
“டூ டேஸா ரொம்ப சைலண்ட்டா இருக்கீங்க. சாப்பிடும் நேரம் கூட நீங்க ஜாலியா பேசல. என் மேல எதுவும் வருத்தமா?” எனக் கேட்ட தம்பியின் தோளில் கையிட்டு தன்னோடு நெறுக்கிய புவி…
“அப்படிலாம் இல்லையே! ஜஸ்ட் வொர்க் டென்ஷன்” என்றான்.
“நீங்க பயங்கரமான கேஸ் டீல் பண்ணப்போலாம் கூட வீட்டில் ஜாலியா தான் இருப்பீங்க” என்ற ஆகாஷ், “சரியா சாப்பிடக்கூட இல்லை” என்றான்.
புவிக்கு வருத்தமாகிப் போனது. கவனித்து கேட்கும் அளவிற்கு நடந்து கொண்டோமே என்று. மானசீகமாக தன்னையே திட்டிக்கொண்டான்.
‘எல்லாம் அந்த பேப்பர். அதிலிருப்பதை பார்த்து விட்டால் மனதின் உந்துதல் அடங்கி சரியாகிவிடுவோம்’ என நினைத்த புவி, தம்பியை சகஜமாக்கும் பொருட்டு பேச்சை மாற்றினான்.
“உன்னோட பக்கீஸ் எப்படி இருக்காங்க?”
தோழிகளைப் பற்றிக் கேட்டதும் ஆகாஷ் உற்சாகமானான்.
அவர்கள் கல்லூரியில் செய்யும் சேட்டை, கலாட்டாக்கள் என அனைத்தும் கதை கதையாய் கூறினான்.
“எனக்கு ஒரு பொண்ணு புரோபோஸ் பண்ணா அண்ணா” என்ற ஆகாஷ், “இந்த டார்லிங் அவளை முறைத்து பார்த்தே ஓட விட்டாள்” எனக்கூறி சிரித்தான்.
“உனக்கு புரோபோசல் வந்தால் மேடமுக்கு என்ன?” என்ற புவிக்கு, ‘தன் மனம் இரு பெண்களிடம் தடுமாறுகிறதா?’ என தன்னைக் குறித்தே விந்தையாக இருந்தது. இரண்டும் ஒன்றென்று ஏனோ அவனுள் இருக்கும் சிறு குழப்பமும் முல்லை தன்னிடம் இயல்பாய் பேசுவதில் காணாமல் போயிருந்தது.
பக்கம் வரவே யோசித்து காகிதத்தில் பேசிக் கொண்டிருப்பவளும், தன்னை நேரில் காணும் போதெல்லாம் ஆகாஷின் அண்ணன் என்கிற முறையில் நன்றாக பேசும் முல்லையும் ஒன்றென நினைத்து ஆரம்பத்தில் தோன்றிய குழப்பம் வைத்து தற்போதைய நிலையில் எண்ண முடியவில்லை.
“அந்தப்பொண்ணு மேல டார்லிங்கு நல்ல அபிப்ராயம் இல்லை போல” என்ற ஆகாஷ், “எப்படியும் நானே நோ தான் சொல்லியிருப்பேன். அதுக்குள்ள டார்லிங் விரட்டிவிட்டாள்” என்றான்.
புவி கதை கேட்பது போல ம் கொட்டிக் கொண்டிருந்தான்.
“டார்லிங்கு லவ் அப்படினாலே அலர்ஜி. அவளோட பேமிலி ரொம்பவே ஸ்ட்ரிக்ட். லவ் டாபிக் பேசினாலே ஓடிடுவா” என்ற ஆகாஷ், “அவளுக்கு அவங்க தாத்தா மேல பயம் அதிகம்” என்றான்.
ஆகாஷின் பேச்சிலிருந்து அன்று இரவு பார்த்த பெண் தன் மனம் சந்தேகிக்கும் முல்லையாக இருக்க வாய்ப்பில்லை என்று புவி உறுதியாக நம்பிவிட்டான்.
ஆகாஷ் பேசிக்கொண்டு அங்கேயே உறங்கிட, தம்பியை நேராக படுக்க வைத்து அறையின் குளிரை மிதமாக வைத்து போர்வையை போர்த்தி விட்டு எழுந்த புவி, சத்தமில்லாத வார்ட்ரோப் திறந்து அங்கு வைத்திருந்த சிறிய அளவிலான கண்ணாடி குடுவையை கையில் எடுத்தான்.
அதில் தான் அவள் அனுப்பிய மூன்று காகிதங்களும் வைத்திருந்தான்.
படிக்காத ஒன்றை எடுத்த புவி, மெல்ல திறந்து பார்த்தான்.
“செம ஸ்மார்ட்டா இருக்கீங்க. மீசையை ஷார்ப் பண்ணிங்களா?அதுவும் அந்த காக்கிக்கும், முறுக்கு மீசைக்கும்… அள்ளுது போங்க” என்ற வரிகளுக்கு கீழ் இரு முல்லை மலர் படம்.
புவியின் இதழ்கள் குவிந்து மலர்ந்தன. கண்கள் சுருங்கியது சிரிப்பில். புவியின் விரல்கள் தானாக மேலெழும்பி அவனது மீசை நுனியை திருகின.
‘இவ்ளோ நோட் பண்றியா நீ?’ நெஞ்சம் உருகி கரைவதை உணர்ந்தான். தன் மனம் காதல் எனும் எல்லைக்குள் அடி வைத்திட்டது என்பது அக்கணம் உணர்ந்து கொண்டான்.
எப்படி ஏனென்றெல்லாம் தெரியவில்லை. அதனை புவி ஆராயவும் விரும்பவில்லை. ஆனாலும் இது ஈர்ப்பை கடந்தது என்று புரிந்தது.
“இந்த கண்ணாமூச்சி ஆட்டம் எத்தனை நாளுக்கென பார்க்கிறேன். நீயா என் முன்னால் வர வெயிட் பண்றேன்” என சொல்லிக் கொண்டவனுக்கு இதே நிலை இரண்டு வருடங்களுக்கு மேல் தொடரும் என்று தெரியாது போனது.
இரண்டு வருடங்களாக வாரம் ஒருமுறை எப்படியாவது அவளிடமிருந்து காகித விடு தூது வந்துவிடும். எப்படி வந்து வைக்கிறாள் என்பது இதுவரை புவியால் கண்டுபிடிக்க முடியவில்லை.
இதோ இந்த வாரத்தோடு அவளுக்கு கல்லூரி படிப்பு முடிகிறது. சொந்த ஊர் செல்கிறாள் என்பது, முந்தைய காகிதத்தில் அவள் குறிப்பிட்டு தெரிந்து கொண்டிருந்தான்.
அது முதலே அவனுள் மத்தள இடி.
ஒருபுறம் நெஞ்சம் நேசமாக உருகியது. மறுபுறம் உடைந்து சிதறியது.
எப்போதும் அவள் வைக்கும் காகிதத்தில், அவனைப்பற்றி அவளுள் எழும் ரசிப்புக்கு வார்த்தை வடிவம் கொடுத்திருப்பாள். ஒருநாளும் அவளைப்பற்றி எதுவும் சொல்லியது இல்லை.
ஒருமுறை,
“இத்தனை காகித தூதில் என்னுடைய பெயர் மட்டுமாவது கண்டுப்பிடிச்சிடிங்களா ஏஎஸ்பி” என எழுதியிருந்தாள்.
அன்று, அந்த மலரை பற்றிய அனைத்து தவல்களையும் இணையத்தில் தேடி களைத்துப் போனது தான் மிச்சம்.
தன் யூகம் சரியா என கேட்டு அறிவதற்கு கூட அவளை அனுக ஒரு பாதையும் அவனிடம் இல்லையே. எப்படி தெரிந்து கொள்வான்.
இத்தனை கடிதத்திலும் ஒன்றில் கூட அவள் காதல் என்று வெளிப்படையாகக் குறிப்பிட்டது இல்லை. அதுவேறு அவனுக்குள் அழுத்தம் கொடுப்பது போலிருந்தது.
ஒரு கட்டத்தில் புவியே அவளிடமிருந்து வரும் கடிதத்திற்காக காத்திருக்கத் தொடங்கியிருந்தான். அவனது காத்திருப்பெல்லாம் இந்த வாரம் வரும் கடிதத்தோடு முற்று பெற உள்ளது என்பதே நெஞ்சத்தில் வலியை கூட்டுவது போலிருந்தது.
வாரம் ஒன்றென வரும் கடிதம் இந்த வாரம் மட்டும் தினமும் வைக்கப்பட்டிருந்தது.
முதல் நாள்…
“இனி உங்களை நேரில் பார்க்கவே முடியாதா ஏஎஸ்பி சார்?” அவளின் ஏக்கம் அப்பட்டமாக புவி உணர்ந்தான்.
“நீ யாருன்னு சொல்லு தினமும் நாம் சந்திக்கும் வழியை நான் உருவாக்குகிறேன்” என தன்னுடைய பதிலை அவளிடம் சேர்க்கும் வழி தெரியாது தவித்தான்.
இரண்டாம் நாள்…
“ரொம்பவே மிஸ் பண்ணுவேன்.”
புவி அவளிடம் கேட்க நினைப்பதெல்லாம் ஒன்றே தான்.
“நீ யாரு. கண்களை மட்டும் ஒருமுறை காட்டி, ஒவ்வொரு முறையும் ஏன் என் இதயத்தை உடைக்கிறாய்?”
அத்தருணம் அவனுக்கு மனதில் உயிர் வதை அல்லவா?
மூன்றாம் நாள்…
“தன்னைப்போல் உங்களுக்கு கடிதம் எழுதத் தோன்றும் மனதிற்கு தெரியவில்லை… இனி நான் எழுதும் யாவும் உங்களிடம் சேர்ப்பிக்க வாய்ப்பே இல்லை என்று.”
முதல் முறை அக்காவலனின் ஒற்றை கண்ணில் துளிர்த்த நீர் சொட்டாய் அவன் கையில் வைத்திருந்த காகிதத்தில் வரையப்பட்டிருந்த, முல்லை மலர்களில் பட்டுத் தெறித்தன.
யாரென்றே தெரியாத பெண்ணின் மீது கொண்ட நேசம்… எத்தனை ஆழம் தன்னுடைய இதயத்தில் வேர் பிடித்திருக்கிறது என்பதை முழுதாய் உள்வாங்கி உணர்த்திட்ட கண(ன)த்தின் சான்று, அக்காகிதத்தில் விழுந்த அவனது ஒரு துளி கண்ணீர்.
நான்காம் நாள்…
“என்ன எழுதணும் தெரியலையே ஏஎஸ்பி சார். நாளைக்கு மார்னிங் கடைசி எக்ஸாம். மதியம் டிரெயின். மூச்சு முட்டுது யாழன்.”
முதல் முறை அவனது பெயரை குறிப்பிடுகிறாள்.
அதுவும் எப்போதும் எழுதும் வரிகளுக்கு கீழே வலது புறம் மூலையில் வரையப்படும் மலர்கள் இன்று யாழன் எனும் அவனது பெயரோடு ஒட்டி வரையப்பட்டிருந்தது.
காகிதத்தை மார்போடு அழுத்தி வைத்து கண்களை மூடிக் கொண்டான்.
“என் முன்னால் வர எது உன்னை தடுக்குது? காரணம் எதுவா இருந்தாலும் நான் சரி பண்றேன்.” அவனது குரல் காற்றாய் கூட அவளை சேரும் மார்க்கம் அவன் அறியவில்லை.
இரவெல்லாம் புவிக்கு மட்டுமல்ல, முல்லைக்கும் உறக்கம் வரவில்லை.
‘இப்படியே இருந்தால் அவங்க முன்னாடி நான் தான் அதுன்னு போய் நின்னாலும் நின்னுடுவேன். வீரமுத்துவை எதிர்த்து மனதின் விருப்பம் நிறைவேறுவது எல்லாம் சாத்தியம் இல்லாதது. இன்னைக்கு ஒருநாள் அவங்களை பார்க்கும் ஆசையை தள்ளி வச்சிட்டு டிரெயின் ஏறிடு முல்லை.’ தனக்குத்தானே அறிவுறுத்திக் கொண்ட முல்லை மெல்ல போர்வையை விலக்கி விட்டு பார்க்க, தீபிகா தலையில் கொட்டியபடி படித்துக் கொண்டிருந்தாள்.
ஆழ்ந்த மூச்சினை வெளியேற்றி ஆழந்த நித்திரையில் விழுந்த நொடி, தீபிகா உலுக்கி எழுப்பியிருந்தாள்.
“விடிஞ்சிருச்சா?” என்று எழுந்த முல்லை, “படிச்சு கரைச்சு குடிச்சிட்டியா தீப்ஸ்?” எனக் கேட்டாள்.
“கடைசி செமஸ்டர். கடைசி எக்ஸாம். அரியர் வச்சிடக்கூடாதுன்னு எல்லாரும் மூச்சைப் பிடிச்சு படிச்சிக்கிட்டு இருந்தாக்கா, சாவதினமா எழுந்ததும் இல்லாமல் என் உயிரை ஏண்டி வாங்குற?” என்று கடிந்த தீபிகாவின் கத்தலை ஒரு பொருட்டாகவே மதியாது, பேப்பரும் பேனாவுமாக அமர்ந்தாள் முல்லை.
அவள் எழுதப் போகும் இறுதி இரட்டை வரி கடிதம்.
இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
7
+1
59
+1
+1
1
உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள்
You must be logged in to post a comment.


அவனை தவிக்க விட்டு இவளும் தவிக்க போறா🙄🙄🙄🙄🙄
அவனுக்கு அது முல்லைப்பூ தான் தோணலியா 🤔🤔🤔🤔
உண்மை தெரியும் நொடியை விரைவில் எதிர் பார்க்கிறேன்.. இருவரின் தவிப்பும் மனதை கனக்க செய்கிறது
கல்லூரி விழாவில் பரிசு வாங்கும் போது வனமுல்லை என்ற பெயர் ACP கவனிக்கலையா? அப்பவே கண்டுபிடிச்சுடுவார்ன்னு நினைச்சேன்.. அவர் பர்தா போட்ட பொண்ணுன்னே நினைச்சுட்டு கிடைச்ச சான்ஸ் மிஸ் பண்ணிட்டார்..
, super
அவன் பாவம்டி, முல்லை!!!