
உயிர் – 16
இன்று அனுராதாவின் கல்லூரி இறுதி ஆண்டின் கடைசி பரீட்சை. வழக்கம் போல் ருக்மணி தான் அவளை அழைத்துக்கொண்டு சென்றிருந்தாள்.
“நீ ஏன்க்கா சொன்னாலும் கேட்க மாட்டேங்கிற.. கல்யாண பொண்ணு இப்படி அலையலாமா”.
“அதெல்லாம் ஒன்னும் பிரச்சனை இல்ல. கல்யாணத்துக்கு இன்னும் நிறைய நாள் இருக்கு இல்ல”.
இன்றோடு அனுராதாவின் கல்லூரி படிப்பும் முடிந்து இருந்தது. கேம்பஸிலேயே சென்னையில் இருக்கும் ஒரு நிறுவனத்தில் அவளுக்கு வேலையும் கிடைத்திருந்தது.
இதில் யாருக்கு மகிழ்ச்சியோ இல்லையோ அனுவிற்கு எல்லையற்ற மகிழ்ச்சி. தன் தாயோடு அங்கே சென்று விடலாம் என்று ஏதேதோ கணக்கில் இருந்தாள்.
ருக்மணியின் திருமணத்திற்கு பிறகு வேலைக்கு சேர்ந்தால் போதும் என்று இருக்க. அவளுடன் சேர்ந்து திருமண வேலைகளில் அவளும் உதவி செய்து கொண்டு இருந்தாள்.
நாட்கள் வேகமாய் உருண்டோட. இந்த இடைப்பட்ட நாட்களில் ஆதவ் கேட்கும் கேள்விகளுக்கு பதில் கூறும் அளவிற்கு முன்னேறி இருந்தாள் அனுராதா.
அன்று கீதா இவளுடன் சண்டையிட்டதை பற்றி கோமதியும், அனுராதாவும் வீட்டில் யாரிடமும் கூறவில்லை.
அதே போல் கீதாவும் வெளியில் மூச்சே விடவில்லை. அவரின் கணவருக்கு தெரிந்தாலும் சரி, அம்மாவிற்கு தெரிந்தாலும் சரி இவரை தானே திட்டுவார்கள் என்று எண்ணியவர் அப்படியே மறைத்து விட்டார்.
ஆனாலும், இன்றளவிலும் அனு கீதாவிடம் பேசுவதும் இல்லை. அகிலனுடன் பேசுவதும் இல்லை.
பத்து நாட்களில் திருமணம் என்னும் நிலையில் அனுவுடன் கோவிலுக்கு சென்று இருந்தாள் ருக்மணி. அந்நேரம் அவர்களின் வீட்டிற்கு வந்திருந்த ஆதவ் விசித்ராவிடம் அகிலனுக்கும், ருக்மணிக்கும் நடக்கவிருக்கும் திருமணத்தைப் பற்றி எந்த ஒரு ஒளிவு மறைவும் இன்றி வெளிப்படையாக அனைத்தையும் கூறிவிட்டான்.
அதை கேட்ட விசித்ராவிற்கு முதலில் பேரதிர்ச்சியாக இருந்தாலும், ஆதவ்வின் மனதில் அனுராதா இருக்கும்பொழுது அவர்களுக்கு திருமணம் நடப்பது தான் சரி என்று மனநிறைவோடு சம்மதித்தார்.
அத்தோடு அகிலனும் ஒன்றும் தப்பானவன் கிடையாது. அவனுமே இப்பொழுது ஆதவ்வின் உதவியோடு பிசினஸில் நிறைய முன்னேற்றங்களை கண்டு கொண்டிருக்கிறான்.
அத்தோடு அனுராதாவிற்கும் நல்ல வாழ்க்கை கோமதியின் எண்ணப்படி அமைந்த போலிருக்கும்.
இரு திருமணங்களுமே நல்லதுக்கு தான் என்று எண்ணிக் கொண்டவர். மன நிறைவோடு தன் சம்மதத்தை ஆதவ்விடம் தெரிவித்து இருந்தார்.
இன்னும் இரண்டு நாட்களில் திருமணம். ருக்மணிக்கு ஏனோ மனம் சற்று நெருடலாகவே இருந்தது. இன்றளவிலும் அனுராதாவிடம் ஆதவ் என்றால் எந்த ஒரு பிடித்தமும் இருப்பது போல் தோன்றவில்லை.
ஆதவ் என்றாலே சற்று தள்ளி தான் வைத்து யோசிக்கிறாள். அவனுடனான அவளின் திருமண வாழ்க்கை எப்படி இருக்குமோ என்ற எண்ணம் தோன்ற ஆதவ்விற்கே அழைப்பு விடுத்து இருந்தாள் ருக்மணி.
“சொல்லு ருக்கு”.
“ஆதவ் எனக்கு என்னமோ மனசுக்கு நெருடலாவே இருக்கு. உன்ன கல்யாணம் பண்ண பிறகு அனுவுக்கு செட் ஆகலைனா என்ன பண்றது” என்றவளின் குரலில் அக்கறை மட்டுமே தொணித்தது.
“ஏன் செட் ஆகாது?”.
“அவளுக்கு உன் மேல அந்த அளவுக்கு பிடித்தம் இருக்க மாதிரி தெரியலையே” என்றாள் யோசனையாக.
“முன்ன விட இப்ப என்கிட்ட அவ நல்லா தானே பேசுறா”.
“பேசுறதும் ஒருத்தர் மேல பிடித்தம் ஏற்படுறதும் வேற வேற தான” என்றவளின் குரலில் வருத்தமும், குழப்பமும் மட்டும் தான் மிதமிஞ்சி இருந்தது.
“நீ சொல்றது சரி தான். அக்காவை கல்யாணம் பண்ணிக்க போறவர் மேல எப்படி தங்கச்சிக்கு பிடித்தம் வரும்” என்றதும் தான் தன் புருவம் முடிச்சிட சிந்தித்தாள் ருக்மணி.
“சொல்லு, இப்போ உன் தங்கச்சிக்கு பார்த்திருக்க மாப்பிள்ளையை உனக்கு பிடிக்குமா.. அவர்கிட்ட நல்லா பேசுவ பழகுவ.. ஆனா, அவர் மேல உனக்கு எப்படி பிடித்தம் ஏற்படும். அப்படி தான் அவளும் யோசிக்கிறாளோ என்னவோ”.
“ஆதவ் அனு ஒரு தடவ என்கிட்ட பேசும்பொழுது கல்யாணம் பண்ணிக்கிறதுல விருப்பம் இல்லைன்னு சொன்னா.. ஒருவேளை, உன்ன கல்யாணம் பண்ணி அவளுக்கும் விருப்பம் இல்லாம போயிடுச்சுன்னா. ஏதோ தப்பு பண்ற போலவே எனக்கு தோணுது..” என்று ருக்மணி இழுக்கவும்.
அவளின் வார்த்தையில் இழுத்து பிடித்த பொறுமையோடு தன் தலையை கோதிய ஆதவ் கிருஷ்ணா, “சரி, நான் லைன்ல இருக்கேன். நீ அவளுக்கு கான்ஃபரன்ஸ் போடு”.
“எதுக்கு?”.
“போட்டு நீ அவ கிட்ட பேசு. எனக்கும் அவ மனசுல என்ன இருக்குன்னு தெரிஞ்சுக்கணும்னு தோணுது” என்றதும் அவளுக்கு அழைப்பு விடுத்து விட்டாள்.
முதல் ரங்கிலேயே சட்டென அழைப்பை ஏற்ற அனு, “என்னக்கா சீக்கிரம் சொல்லு..”.
அவளின் குரலே அத்தனை அவசரமாக வெளிவந்திருந்தது.
“என்னடி என்ன அவசரம்?”.
“ஐயோ அக்கா! நான் ஒரு வெப் சீரியஸ் பாத்துட்டு இருக்கேன். அதுல இப்போ தான் முக்கியமான சீனே வந்திருக்கு. இப்படி இடையில போனை போட்டு டிஸ்டர்ப் பண்றியே” என்று அவள் சலித்துக் கொள்ளவும்.
“நானும் முக்கியமான விஷயம் பேச தான் கால் பண்ணேன். அப்படி என்ன அது முக்கியமான சீன்?”.
ஆதவ் என்று ஒருவன் லைனில் இருப்பதையே இருவரும் மறந்துவிட்டு கதைக்க தொடங்கி விட்டனர்.
“அக்கா இப்போ தான் ஹீரோவுக்கும், ஹீரோயினுக்கும் நடுவுல கிஸ்ஸிங் சீன் வந்திருக்கு. அந்த சீனை பாத்து நான் அப்படியே மெல்ட் ஆகிட்டேன்னா பார்த்துக்கோயேன்” என்று அவள் உருகி கரைந்து கிசுகிசுப்பான குரலில் கூறவும்.
லைனில் ஆதவ் இருப்பதை உணர்ந்த ருக்மணி, “அனு..” என்றாள் தன் பற்களை கடித்துக் கொண்டு.
அதையெல்லாம் கேட்கும் நிலையில் இல்லாத அனுவோ, “அந்த சீனை பார்த்த பிறகு தான் எனக்கும் கொசக்சி பசப்புகழ் மாதிரி பெரிய சந்தேகம் வந்துடுச்சு”.
“என்னது கொசக்சி பசப்புகழா.. என்னடி சொல்ற?”.
“அட ஆமாக்கா.. முத்தா குடுத்தா மூக்கும் மூக்கும் இடிச்சுக்காது?” என்றாள் ரகசிய குரலில்.
அவளின் ஒவ்வொரு வார்த்தையும் ஆதவ்வின் காதுகளுக்குள் தேனாய் பாய. அவளின் குரலை ஆழ்ந்து தனக்குள் உள்வாங்கிக் கொண்டு இருந்தான்.
“போதும் அனு ப்ளீஸ்..” என்று அவளை எப்படியாவது நிப்பாட்ட போராடிக் கொண்டிருந்தாள் ருக்மணி.
“உனக்கு இப்படி எல்லாம் சந்தேகம் வந்ததே இல்லையாக்கா.. சரி, உனக்கு தான் கல்யாணம் ஆகப்போகுதுல, கல்யாணம் ஆன உடனே எனக்கு நீ மறக்காம இந்த விஷயத்தை கிளாரிஃபை பண்ணனும்” என்றாள் உத்தரவு போல்.
“அனு போதும்.. அப்புறம் பின்னாடி நீ தான் ரொம்ப பீல் பண்ணுவ” என்றாள் எச்சரிப்பது போல்.
“நான் ஏன் பீல் பண்ண போறேன். பாவம், நீ தான் பயர் இன்ஜினை கல்யாணம் பண்ணிக்கிட்டு ஃபீல் பண்ண போற. சிங்கிள் கிஸ்ஸுக்கே எத்தனை நாள் வெயிட் பண்ண போறியோ” என்று கிண்டல் செய்து நகைத்தாள்.
அவளின் வார்த்தையில் தன் புருவங்கள் மேலுயர குறும்பு புன்னகையோடு கேட்டுக் கொண்டிருந்தான்.
“ஆதவ்வை மாமானும் சொல்லலாம். உனக்கும் அவர் மாமா முறை தான”.
“எனக்கு அகில் மாம்ஸ் மட்டும் போதும். அந்த பயர் இன்ஜினை நீயே வச்சுக்கோ”.
“சரி சரி.. அதையெல்லாம் விடு. உனக்கு கல்யாணம் பண்ணிக்க விருப்பம் தான?”.
“என்னக்கா திடீர்னு போன் போட்டு இப்படி கேக்குற.. கல்யாணம் ஒன்னும் எனக்கு இல்லையே.. உனக்கு தான?” என்றாள் விளையாட்டாய்.
“ஐயோ! நான் என் கல்யாணத்தை பத்தி கேட்கலை டி. உன் கல்யாணத்தை பத்தி கேட்கிறேன்”.
“ஏன் எனக்கு என்ன.. அதெல்லாம் எனக்கு விருப்பம் தான். கல்யாணம் வேண்டாம்னு சொல்லிட்டு நீயே பண்ணிக்கும்பொழுது, நான் பண்ணிக்க மாட்டேனா” என்று அப்பொழுதும் விளையாட்டு போல் பேசினாள்.
“அனு விளையாடாத.. உன்னுடைய நெக்ஸ்ட் பிளான் என்ன?”.
“என்ன பிளான்.. என் அம்மா சொல்ற போல எனக்குன்னு பிறந்த ராஜகுமாரன் எங்க இருக்கான்னு தேடி கண்டுபிடிச்சு அவனை கல்யாணம் பண்ணி மினிமம் நாலஞ்சு குழந்தை குட்டியாவது பெத்து சந்தோஷமா வாழனும்” என்றாள் குரலில் அத்தனை கேலியோடு.
ஆதவ்வின் விழிகள் மேலும் பெரிதாக விரிந்து கொள்ள. அவனின் விழிகளிலோ இப்பொழுது பார்வை ரசனையாக மாறியது.
“இன்னைக்கு இவளுக்கு என்னமோ ஆயிடுச்சு. ஆதவ் லைன்ல இருக்கும் போது எல்லாத்துக்கும் வில்லங்கமான பதிலையே சொல்றா” என்று கிசுகிசுப்பாக அவள் முணுமுணுக்கவும்.
“என்னக்கா சத்தமா சொன்னா தானே எனக்கும் தெரியும்”.
“ஒன்னும் இல்ல, நீ போய் உன்னுடைய முக்கியமான சீரிஸ் பார்க்கிற வேலையை பாரு. தெரியாம உனக்கு இந்த நேரத்துல போன் பண்ணி தப்பு பண்ணிட்டேன்”.
“ஓகே ஓகே பாய்” என்று அவள் அவசரமாக அழைப்பை துண்டிக்கவும்.
ருக்மணிக்கு தான் ஆதவ்விடம் பேச சற்று சங்கடமாகி போனது.
“ஆதவ் அவ ஏதோ விளையாட்டுத்தனமா..”.
“ஓகே” என்றவன் அதற்கு மேல் இதைப்பற்றி அவளிடம் பேச விரும்பவில்லை என்று அந்த பேச்சை அத்தோடு கத்தரித்து விட்டான்.
“அதான் உன் தங்கச்சி வாயாலேயே கேட்டுட்டியே.. இப்போ உனக்கு திருப்தி தான.. கல்யாணம் பண்ணிக்கிறதுல உன் தங்கச்சிக்கு எந்த பிரச்சனையும் இல்லையாம்”.
“ம்ம்.. இப்போ ஓகே தான் ஆதவ்” என்று அழைப்பை துண்டித்த ருக்மணிக்கும் அனுவை நினைத்து சிரிப்பு தான் எழுந்தது.
ஆதவ்வை திருமணம் செய்த பிறகு அவளின் வாழ்க்கை நன்றாக தான் இருக்கும் என்பதில் அவளுக்கு எந்த ஒரு ஐயமும் இல்லை. ஆனாலும், இப்படி விளையாட்டு தனமாக இருக்கிறாளே என்று சிரிப்பாக இருந்தது.
அன்று மாலை போல் ருக்மணிக்கு மருதாணி போட வேண்டி புக் செய்து இருந்த ஆள் வந்துவிட. அனுராதாவிற்கும் அழைத்து இங்கே வருமாறு கூறியிருந்தாள்.
அதன் படி அனுராதாவும் வந்துவிட. அவளுக்கும் மணபெண்களுக்கு போடுவது போல் பெரிய டிசைனாக ருக்மணி தேர்ந்தெடுத்து போட சொல்லிவிட்டாள்.
“அக்கா கல்யாணம் உனக்கா எனக்கா? எனக்கு எதுக்கு பிரைடல் டிசைன் எல்லாம்? எனக்கு சிம்பிளா போட்டாலே போதும்”.
“கொஞ்சம் சும்மா இருடி. எல்லாம் எனக்கு தெரியும்”.
“ஆமா அக்கா சொல்றத கேளு அனு. உன் அக்கா கல்யாணத்துல உன்னையும் அவளுக்கு ஈக்குவலா நிக்க வைக்கணும்னு ஆசைப்படுறா.. அவ ஆசைப்படுற மாதிரி மருதாணி தான போட்டுக்கோ” என்று விசித்ரா வேறு கூறவும். வேறு வழி இன்றி அவளும் போட்டுக் கொண்டாள்.
மறுநாள் அனைவரும் மதியமே மண்டபத்திற்கு சென்று விட்டனர். நிச்சயதார்த்த ஏற்பாடுகள் நடந்து கொண்டிருந்தது.
மணமகன் அறைக்குள் ஆதவ்வுடன் அகிலனும் தயாராகிக் கொண்டிருந்தான். அவனுக்குள் ஒருவித படபடப்பும், தடுமாற்றமுமாகவே இருந்தது.
இன்னும் சற்று நேரத்தில் தான் தான் ருக்மணியை மணக்க போகும் மணமகன் என்பது அவளுக்கு தெரிய வந்துவிடும். அப்பொழுது அவளின் நிலை என்னவாக இருக்கும் என்பதை அறிந்து கொள்ள ஒருபுறம் ஆர்வம் மேலெழுந்தாலும், எங்கே மறுத்து விடுவாளோ என்று மற்றொருபுறம் படபடப்பாகவும் இருந்தது.
*****
கதையை பற்றிய உங்கள் கருத்தையும் சொல்லுங்க டியர்ஸ் 😊
இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
4
+1
8
+1
1
+1
1
உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள்
You must be logged in to post a comment.


அச்சோ, next epi எப்ப வரும்னு ஆர்வம் தாங்கல.. இருவரும் மணமகன் பார்த்து எப்படி react பண்ண போறாங்கன்னு😍.. அருமையான கதை.. அழகான நகர்வு 💐
அச்சோ 😍 மிக்க நன்றி சிஸ் 🥰.. தினமும் எபி வரும் தொடர்ந்து உங்க கருத்தை சொல்லுங்க. நானும் எனர்ஜி ஏத்திக்கிட்டு தினமும் எபி தரேன் 😉👍