Loading

சபதம் – 31

 

முரசு முழங்கு தானைச்

சேரல்!

விரைந்து செய்கை வேண்டின்,

அருங்கடல் போல,

ஓங்கிய மண்டிலம் முற்றுகை கொண்டு,

இன்னுயிர் அழியாது

வெல்லல் வேண்டும்.

– கோவூர் கிழார்

 

பொருள்:

 

(கோட்டை முற்றுகை & போர் சூழல்) போர் என்பது அழிவுக்காக அல்ல. நியாயமாகவும், கட்டுப்பாட்டுடனும் நடத்தப்பட வேண்டும் என்பதைச் சொல்கிறது. உண்மையான வீரன் எதிரியை அழிப்பவன் அல்ல, அறத்துடன் வெற்றி பெறுபவன் தான் என்பதை உணர்த்தும் பாடல்.

விடிந்தும் விடியாத அதிகாலை வேளை, சுவர்ணக் காடி இரண்டு பெரும் இராச்சியங்களின் படைகளின் அதிர்வால் நடுங்கிக் கொண்டிருந்தது. அராவள்ளி மலைகளின் நடுவே,
குறுகியதும், செங்குத்தான பாதைகளுடன் பெயருக்கு ஏற்றார் போல் ஜொலித்துக் கொண்டிருந்தது.

 

அதை ஒட்டி, மலைகளின் அடிவாரத்தில் ஒரு புறம், அரவள்ளியின் தூண்களான ஒன்றிணைந்த இராணா மற்றும் அதிவார் இராச்சியங்களின் படை நின்றிருந்தது. மற்றொரு புறம், மலைகளை விழுங்கத் தயாராக நின்ற முகலாயப் படை ஒழுங்கும் ஒற்றுமையும் கொண்ட கருங்கடல் விரிந்திருந்தது.

 

இணைந்த படைகளின் இடது சாரத்தில் ராணாபடைகள் நின்றிருந்தன. காலை ஒளியில் மின்னும் வெண்கலமும் இரும்பும் சேர்ந்த ஒரு அசைக்க முடியாத கவசத்தை போல அணிவகுத்து நின்றது.

 

முன்னிலையில் கவசம் அணிந்த பல யானைகள். அவற்றின் தந்தங்களில் எஃகுகளால் ஆன நீண்ட கவசமும், அதன் நெற்றியில் ராணா சின்னங்களும் இருந்தன. யானையின் முதுகில் இரண்டு வில்லாளர்கள் அமர்ந்த ஹவுதா, அவர்களின் முன் யானையை வழிநடத்தும் மஹவுத் இருக்க, அந்த வில்லாளர்கள் பயன்படுத்தக் கூடிய கனரக வில்லும் வேலும் வைக்கும் பட்டையை சுமந்தபடி நின்றிருந்தது. யானைகளின் மூச்சுத் தடத்தில் பூமி அதிர்ந்தது.

 

அவற்றின் பின்னால் இராஜபுத்திர குதிரைப்படை நின்றிருந்தது. சங்கிலி கவசம் போர்த்திய வலிமையான குதிரைகளின் மீது வளைந்த தல்வார்கள், நீண்ட மூங்கில் ஈட்டிகள் மற்றும் வட்ட இரும்புக் கேடயங்களோடு நின்றிருந்தனர்.

 

அதன் பின்னால் ராணாவின் காலாட்படை ஒரே சீராக நின்றிருந்தனர். முன் வரிசையில் ஈட்டியாளர்கள் அவர்களின் பின்னால் வாள்–கேடய வீரர்கள் மற்றும் அரவள்ளி மலைத்தொடர்களில் இருந்த உயர்ந்த பாறைகளின் பின் மறைந்திருந்த வில்லாளர்கள் போருக்குத் தயாராகக் காத்திருந்தனர்.

 

இந்தப் படைகள் அனைத்திற்கும் முன், கருப்பு குதிரையில் ரணசூரன் நின்றிருந்தான். அவனின் கவசம் கருங்கல் போல, வெள்ளிக் கோடுகளால் பொறிக்கப்பட்ட ராணாவின் சின்னங்களால் ஜொலித்துக் கொண்டிருந்தது. ரணசூரனின் கண்களில் கட்டுப்படுத்தப்பட்ட கோபம் எரிந்து கொண்டிருந்தது.

 

அரவள்ளி படையின் வலது புறம்,அதிவாரின் சிவப்பு கொடிகள் பறந்து கொண்டிருந்தது.
அளவில் பெரியதும், வேகத்தில் காற்றுக்கும் இணையான குதிரைப்படை அதிவாரினது.

அதிவார் குதிரைப்படை இடிமுழக்கம் போல ஒரே சீராக முன்னேறியது. அவர்களின் கவசம் இலகுவாக வேகம் மற்றும் அதிரடி தாக்குதலுக்கு உதவக் கூடியதாக இருந்தது.

 

காலாட்படை அவர்களின் பின்னால் வரிசையாக, அகல வாள் வீரர்கள், கேடயத்தாரர்கள்,

எண்ணெய் ஊறிய அம்புகளுடன் தீயம்பை எய்யும் வில்லாளர்கள் என்று அடுக்கடுக்காக நின்றிருந்தனர். சூரியன் பட்டவுடன் அவர்கள் சிவப்புக் கவசம் தீப்பொறிகளைப் போல மின்னியது.

 

வீர் அந்தப் படைகளுக்கு தலைமை தாங்கி, முன்னிலையில் ஈட்டி ஏந்தி தன்னை போன்ற திடகாத்திரமான தனது குதிரையான யஜு மீது அமர்ந்திருந்தான். காற்றுக்கும் தலைவணங்காத ஒரு ஜ்வாலையைப் போல கம்பீரமாக, எதற்கும் அசைந்து கொடுக்காமல் அமர்ந்திருந்தான்.

 

ரணசூரன் புயலாக இருந்தால், வீர் நெருப்பாக இருந்தார். இருவரும் சேர்ந்து அடக்க முடியாத சக்தியாக நின்றிருந்தனர்.

 

(வரலாற்றில் முகலாயர்கள் பெரும் காலாட்படை, குதிரைப்படை, பீரங்கி, யானைப்படை, பல இனத்தவரைக் கொண்ட மான்சப்தாரி அமைப்பு ஆகியவற்றை பயன்படுத்தினர்.)

 

பள்ளத்தாக்கின் மறுபுறம், முகலாயப் படை கருங்கடல் போல விரிந்திருந்தது. அனைத்திற்கும் முன்பாக பீரங்கிகள் வரிசையாக அணிவகுத்திருந்தன. பெரும் வெண்கல பீரங்கிகள்.
பெர்ஷியா, மத்திய ஆசியாவிலிருந்து வந்த நிபுணர்கள் அவற்றை இயக்கினர். அவற்றின் வாய்கள் நேராக சுவர்ணக் கதி நோக்கி நிறுத்தப்பட்டிருந்தது.

 

அவற்றின் பின்னால் முகலாய யானைகள். ராணாவின் யானைகளைவிட உயரமாக, கனமான கவசத்துடன் நின்றிருந்தது. அவற்றின் தந்தங்களில் இரும்பு வாள்களும், ஹவுதாக்களில் துப்பாக்கி வீரர்களும் தாங்கி நின்றது.

 

ஆயிரக்கணக்கான குதிரைகள் கொண்ட முகலாய படையில் துருக்கிய வில்லாளர்கள்,

ஆப்கான் ஈட்டியாளர்கள், பெர்ஷிய துப்பாக்கி வீரர்கள் மற்றும் முகலாய சாம்ராஜ்யத்திற்கு விசுவாசமான ராஜ்புத் மான்சப்தார்கள் அமர்ந்திருந்தனர். அவர்களின் குதிரைகள் அரேபிய வகையைச் சேர்ந்தது, நீண்ட பயணங்களுக்கு வளர்க்கப்பட்டவை ஆகும்.

 

அதற்கு பின்னால் முடிவில்லாமல் விரிந்த காலாட்படை. அதில் துப்பாக்கி வீரர்கள்,

வாள்-கேடய வீரர்கள், ஈட்டியாளர்கள் மற்றும் ஒட்டகத் துப்பாக்கிப் படை நின்றிருந்தது.

அவர்களின் பச்சை, கருப்பு, தங்கக் கொடிகள் கழுகின் இறக்கைகளைப் போல பறந்து விரிந்திருந்தன.

 

இந்த படைகளின் நடுவில், வெள்ளைக் குதிரையில் மிர்சா குதுப், தன் மார்பில் பளிங்கு போல மின்னும் கவசம் பூண்டு, கைகளில் மாணிக்க கற்கள் பதித்த கைப்பிடியுடனான நீண்ட வாளை ஏந்தி அமைதியான புன்னகையுடன் எதிரிப் படையை நோக்கினார்.

 

சுவர்ணக் கதி குறுகிய மலைப்பாதை. பாதுகாப்புக்கு ஏற்றது, தாக்குதலுக்கு அது மரணவாயில்.

இருபுறமும் உயர்ந்த பாறைச் சுவர்கள் நீண்டிருக்கும். தளர்ந்த கற்கள் நிரம்பி இருக்க குதிரைத் தாக்குதலுக்கு ஆபத்தானது. மிகப்பெரிய படைகளின் வேகத்தை தடை செய்யும் அமைப்புடன் கூடியது. இந்த ஸ்வர்ண காடியில் படையின் எண்ணிக்கையை விட வீரத்திற்கே மதிப்பு.

ரணசூரன் தனது வாளை உயர்த்தினார். வீர் தனது ஈட்டியைத் தாழ்த்தினார். அப்பால், குத்புத்தீன் தனது கையை உயர்த்தினார். முரசுகள் நின்றன. காற்று நின்றது. உலகமே மூச்சை நிறுத்தியது போல் இருந்தது.

 

விடியலின் முதல் ஒளிக்கீற்றுகள் பொன்னில் ஊறி, பறக்கும் தூசியை பொன் மூடுபனியாக மாற்றின. காற்றே பதட்டத்தால் கனத்திருந்தது. அதன் சுமையைத் தாங்க முடியாமல் குதிரைகளே நரம்புத் துடிப்புடன் தரையைத் குளம்படிகளால் தட்டின.

 

ஒரு புறம், அரைச்சந்திர வடிவில் நின்ற ராணா மற்றும் அதிவார் படைகள். மற்றொரு புறம்—
கருங்கடல் போல விரிந்த முகலாயப் படைகள். முரசுகள் நின்றன.

 

அமைதி.

 

அதனை தொடர்ந்து

பூம்.

 

ஒரு முகலாயப் பீரங்கி குண்டு, அராவள்ளி மலைகளை இடித்தெறியும் எண்ணத்துடன் ஒலித்தது. சுவர்ணக் காடி போர் தொடங்கியது.

 

முதலில் முன்னேறியது ராணாவின் யானைப்படை. கவசம் போர்த்திய தலைகள் தாழ்த்தப்பட்டு, எஃகு மூடிய தந்தங்கள் சூரியனில் மின்னின. அவற்றின் ஒவ்வொரு அடியிலும் பூமி நடுங்கியது. அவற்றின் பக்கத்தில் ரணசூரன் தனது குதிரையில் வாள் உயர்த்தி, கண்களில் தீப்பொறியுடன் காற்றாக பாய்ந்தான்.

 

அவரின் குரல் போர்க்களத்தில், “வீரர்களே! முன்னேறுங்கள்!” என்றபடி முன்னேறியவனின் தலைமையை ஏற்று பாய்ந்தது ராணாவின் குதிரைப்படை.

 

வலது சாரத்தில் வீர் தனது ஈட்டியை உயர்த்தி, கண்களை இமைக்காமல் முகலாய படையை அளவிட்டவன், “அரவள்ளி வாழ்க! ஜெய் ராஜபுத்திர!” என்ற போர் கோஷத்துடன் தனது குதிரையில் நெருப்பை போல் சுழன்றடித்தான்.

 

ஆயிரம் ஈட்டிகள் ஒரே நேரத்தில் முன்வளைந்தன. அவர்களை தொடர்ந்து வீர், “பாயுங்கள்!” என்றதும் அதிவார் குதிரைப்படை தீப்பொறி போல வெடித்தது. சிவப்பு கொடிகள் பின்னால் நெருப்புத் தழல்களைப் போல பறந்தன.

 

இரு படைகளும் சுவர்ணக் கதி நடுவில் பெரும் சத்தத்துடன் மோதின. யானைகள் முகலாய காலாட்படையை நொறுக்கின, ஈட்டிகள் கேடயங்களில் சிதறின, அம்புகள் மழை போல விழுந்தன, குதிரைகள் கத்தின, எஃகு எஃகுடன் மோதியது. தூசி மேகமாக எழுந்து
போர்க்களத்தை நிழலும் நெருப்பும் கலந்த புயலாக மாற்றியது.

 

அந்த மாபெரும் யுத்தத்தின் மத்தியில் வீரும் ரணசூரனும் ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டனர். அவர்கள் பேசவில்லை. அவர்களுக்கு அது தேவையும் இல்லை. அவர்கள் ஒரே வாளின் இரண்டு பக்கங்கள் போல நகர்ந்தனர்.

 

ஒரு முகலாய ஈட்டியாளர் வீரரை நோக்கி பாய்ந்தான், ரணசூரன் இடைமறித்து, ஒரே அசைவில் அவனை வீழ்த்தினான். அதே போல ஒரு துப்பாக்கி வீரன் ரணசூரனை குறிவைத்தான், வீர் தனது ஈட்டியை எறிந்து, அவன் சுடுவதற்கு முன்பே அவனைத் துளைத்திருந்தான்.

 

அவர்களின் அசைவுகள் பழக்கப்பட்டதாகவும், துல்லியமானதாகவும் இருந்தது. ரணசூரன்
“உன் இடப்பக்கம்!” என்றதும் வீர் சுழன்று, ஒரு வளைந்த வாளை கேடயத்தால் தடுத்துவிட்டு
ஒரே அடி கொண்டு எதிரியை வீழ்த்தினான்.

 

அதே போல வீர், “உன் பின்னால்!” என்றதும் ரணசூரன் தாழ்ந்து, வீரின் வாள் தனது தோளுக்கு மேல் பாய்ந்து பின்புறம் குத்த வந்த வீரனை வெட்டியது.

 

ஒரு கணம். அந்த ஒரு கணம் போர்க்களமே அவர்களைச் சுற்றி நடப்பது போல இருந்தது.

இரண்டு இளவரசர்கள். இரண்டு போர்வீரர்கள். இரண்டு சகோதரர்கள். ஒரே நிழலாக போராடினர்.

 

ஆனால் முகலாயர்கள் முடிவில்லாது முளைத்து வந்து கொண்டே இருந்தனர். அவர்களின் குதிரைப்படை அலை அலைவாக பாய்ந்தது. வில்லாளர்கள், ஈட்டியாளர்கள், துப்பாக்கி வீரர்கள்ஒவ்வொருவரும் சீரான ஒழுங்குடன் போரிட்டனர்.

 

ஒரு பீரங்கி வெடிப்பு, ராணா காலாட்படையை வானில் தூக்கியது. அதனை கண்ட வீர் பற்களைக் கடித்தான்.

 

வீர், “எதிர்பார்த்ததை விட கடுமையாகத் தாக்குகிறார்கள்!” என்றதும் ரணசூரன் எதிரியை தடுத்தபடி, மார்பில் கவசம் மின்ன, “நாம் கடுமையாக போரிடும் ஒவ்வொரு நொடியும் நம்மை உடைக்கவே விரும்புவார்கள். நமக்கு இருப்பது இரண்டே வழி. ஒன்று இவர்களை முன்னேறாமல் தடுப்பது. அல்லது இங்கேயே செத்து மடிய வேண்டும்.” என்று ரணசூரன் சொல்ல வீர் தன்னை உறுதிப்படுத்திக் கொண்டு போரிட்டான்.

 

ஒரு முகலாய யானை ராணா வரிசையை உடைத்து அதிவார் வில்லாளர்களை நோக்கி பாய்ந்தது. வீரின் கண்கள் விரிந்து, “சூரா உன் வலப்புறம்!” என்றதும் திரும்ப முயன்ற ரணசூரனிடம், “யானையை நான் நிறுத்துகிறேன்!” என்றபடி முன்னேற முயன்றான்.

 

ரணசூரன் அவனது கையைப் பிடித்து, “அதன் வேகம் கட்டுப்படுத்த முடியாததாக இருக்கிறது” என்று தடுத்தவனை பார்த்து வீர், “கட்டுப்படுத்த வேண்டாம்..” என்றபடி முன்னே பாய்ந்தவன்,
ஒரு விழுந்த ஈட்டியைப் பிடித்து தனது முழு பலத்தை கொண்டு அதனை எறிந்தான்.

 

ஈட்டி யானையின் கண்ணில் பாய்ந்தது. அது வலிதாளாமல் தனது துதிக்கையை அசைத்து துடிக்க, அந்த தருணத்தைப் பயன்படுத்தி அதிவார் வில்லாளர்கள் அம்பு மழை பொழிந்து
அதனை தரையில் தள்ளினர்.

 

அதை கண்ட ரணசூரன் பெருமையுடன், “தம்பட்டம் அடிப்பது வீரனுக்கு அழகல்ல” என்றதும் வீர் மூச்சை இழுத்தபடி, “அதை நீ சொல்வது ஆச்சர்யமாக உள்ளது” என்றதும் இருவருக்கும் தங்கள் வாலிப காலங்கள் மனதில் வளம் வந்து வதைத்தது.

 

பூமி மீண்டும் அதிர்ந்தது. காற்று புகையால் கனத்தது. சூரியன் தூசி, நெருப்பு பின்னால் மறைந்தது. வீரும் ரணசூரனும் இரத்தத்தில் நனைந்தும், சோர்வடைந்தும், ஆனால் நம்பிக்கை இழக்காதவர்களாக தங்கள் ஆயுதங்களை இறுக்கிப் பிடித்தனர்.

 

ஏனெனில் அவர்கள் அறிந்திருந்தனர்-இது தொடக்கம் மட்டுமே.

 

ரணசூரன் வந்துவிட்டான்…..

 

Click on a star to rate it!

Rating 5 / 5. Vote count: 3

No votes so far! Be the first to rate this post.

இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
0
+1
2
+1
0
+1
0

உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள்