Loading

பூகம்பம் – 14

பெண்ணவளின் விளையாட்டை உணராத ஆண்மகனோ பதறி துடித்து “என்ன ஆதிமா.?” என்று வினவ, ‘ஆதியா.?’ என்று குதூகலித்து “ஐ லவ் பிரியாணி” என்றவள் வெக்க ஸ்மைலிகளை கணக்கின்றி அனுப்பினாள்.

‘அட ஆதிமா’ என்று அவளின் விளையாட்டு தனத்தில் சிரித்து கொண்டவனுக்கு இளங்கீற்று புன்னகை.

“இதுக்கா இந்த அலப்பறை.?” – ரூபன்

“எஸ்.. வேற என்னனு நினைச்சீங்க.?” – ஆதிரா

“அய்யோ நான் எதுவும் நினைக்கலமா..” – ரூபன்

“அது.. அது.. அந்த பயம் இருக்கட்டும்” – ஆதிரா

“பயமா.? அது சரி” – ரூபன்

‘பேசாம ஐ லவ் யூ சொல்லிருக்கலாமோ.?’ என்று தீவிர யோசனையில் ஆதிரா ஆழ்ந்த நேரம் “ரொம்ப நேரமாகிருச்சு தூங்குடா.. குட் நைட்” என்று அவனின் குறுஞ்செய்தி இவளை வந்தடைந்தது.

அவன் கிளம்பறேன் என்றதும் இவளை பதற்றம் கூடாரமிட்டு கொள்ள, தைரியத்தை வரவழைத்து “உங்ககிட்ட ஒண்ணு கேட்கணும்” என்றாள் பதறிய மனதை கட்டுப்படுத்தி கொண்டு.

“கேளுமா” – ரூபன்

“தப்பா நினைச்சுக்க கூடாது” – ஆதிரா

“நான் ஏன்மா தப்பா நினைக்க போறேன்” – ரூபன்

“அப்ப கேட்கட்டுமா.?” – ஆதிரா

“ம்ம்ம்ம் தாராளமா..” – ரூபன்

“பதில் சொல்லுவீங்களா.?” – ஆதிரா

“கண்டிப்பா” – ரூபன்

“பயமா இருக்கே..” என்றதை பார்த்து ‘இவங்க அப்படி என்னதான் கேட்க போறாங்க.?’ என்ற குழப்பத்தில் “எதுக்கு பயம்.? சும்மா சொல்லுமா” என்றான்.

“என்னைய உங்களுக்கு பிடிக்குமா.?” என்று கேட்க நினைத்ததை ஒருவழியாக கேட்டும் விட்டாள். இருந்தும் அவளின் இதயம் பயத்தில் கொதிநிலையின் உச்சத்தில் காணப்பட்டது.

பெண்ணவளின் வினாவில் அதிகபட்ச திகைப்புடன் விழி விரித்த ரூபன் பின்பு “ஆதியை யாருக்காவது பிடிக்காம இருக்குமா.?” என்று பதிலுடன் கலந்த வினாவையும் தொடுத்தான்.

‘இவனுக்கு பிடிக்குமானு கேட்டா மத்தவங்களைய ஏன் இதுல இழுக்கறான்.? அய்யோ ராமா.. இவனுக்கு என் காதலை புரிய வெச்சு.. வீட்டுல சம்மதம் வாங்கி.. நான் எப்ப கல்யாணம் பண்றது.?’ என்று நினைத்தபோது தலையே சுற்றியது.

கடுப்பு மேலோங்க “நான் கேட்டது உங்களுக்கு தான்..” என்றிட, இதழை கடித்து நகைப்பை அடக்கிய ரூபன் “ம்ம்ம்ம்ம் உங்க பேச்சும் சிரிப்பும் எப்பவும் எனக்கு ரொம்ப ஸ்பெஷல் தான்மா” என்றான் உண்மையாக.

இது இரண்டும் தான் அவனை அவள்மேல் பித்து கொள்ள செய்தது. இக்கேள்வியை அவள் எதற்கு கேட்கிறாள் என்று புரிந்தாலும் பெண்ணவளை ஏற்று கொள்ள முரண்டு பிடித்தது ஆடவனின் மனது.

இதற்கு மேல் பேசினால் தன் மனம் வெளிப்பட்டு விடும் என்று பயந்து “குட் நைட்டுமா” என்றவன் அப்போதே அலைப்பேசியையும் அணைத்து விட, அவனின் குறுஞ்செய்தியை வெறித்திருந்த ஆதிராவின் மனநிலை தான் என்னவோ.?

பிடித்தும் பிடிக்காத

நினை ஏனடா.?

மறுக்கும் மனதிடம்

உரைத்து விடு

நான் எப்போதும்

உனக்கானவள்

மட்டுமே என்பதை.!

காதலை கூறாமலே இருவரின் உறவும் நாளொரு மேனியும் பொழுதொரு வண்ணமும் அழகாக வளர்ந்து கொண்டிருக்க, ஒவ்வொரு நிமிடமும் வண்ணமயமாக காட்சியளித்தது இருவருக்கும்.

ரூபனுடனான உறவில் ரஞ்சித் என்று ஒருவன் இருந்ததையே ஆதிரா மறந்திருக்க, இவளின் சந்தோச மனநிலைக்கு முற்றுப்புள்ளி  வைக்கவே வந்து சேர்ந்தான் ரஞ்சித் அவனின் பெற்றோருடன்.

அவர்களின் வரவை எதிர்ப்பார்க்காத ஆதிரா திகைத்து நிற்க, துருவினிக்கும் அதிர்ச்சியே. “ஹே திரா” என்ற நிவேதாவின் உலுக்கலில் தன்னிலைக்கு வந்த ஆதிரா “ஹான்” என்று விழித்தவள் அப்போதுதான் உணர்ந்தாள் நிவேதாவும் சிவாவும் அவர்களுடன் வந்ததையே!

“என்ன திரா அதிர்ச்சியா..?” என்று கேட்ட ரஞ்சித் கண்சிமிட்டி ‘சர்பிரைஸ்’ என்றவாறு சிரிக்க, வலுக்கட்டாயமாக ஆதிராவும் புன்னகைத்து வைத்தாள்.

அதன்பின்பு அங்கிருக்க முடியாமல் தனதறை நோக்கி ஆதிரா விரைந்திட, அதை யாரும் பெரியதாக எடுத்து கொள்ளவும் இல்லை. ஆதிராவின் பெற்றவர்கள் வந்தவர்களை வரவேற்று உபசரித்து பொதுவான விசயங்களை பேசினர்.

ஆதிராவை காணாமல் தேடிய சிவா “திரா எங்கடா?” என்று துருவினியிடம் மெதுவாக வினவ, “அறைல இருப்பா மாமா” என்றவளுக்கும் அவர்களின் வருகை சற்று பதற்றமே.

என்னதான் அன்று ஆதிரா அவளின் காதலை பற்றி மறைத்திருந்தாலும் அவளுடனே பிறந்து வளர்ந்த துருவினிக்கு புரியாமல் போகுமா என்ன..? கத்திரிக்காய் முத்தினால் சந்தைக்கு வந்துதான் ஆகணும் என்று நினைத்து எதுவும் அறியாதவள் போல் அமைதியாக இருந்தாள்.

அவர்கள் என்ன பேசுகிறார்கள் என்று காதை கூர்மையாக்கி அவர்களின் பேச்சை கேட்டவாறு அமர்ந்திருந்த ஆதிராவுக்கு  பலவிதமான யோசனைகள்.

ரூபனின் மீதான காதலை இன்னும் அவனிடமே கூறவில்லை.. அப்படி கூறினாலும் அவனின் பதில் என்னவாக இருக்கும்.? அவன் மறுத்து விட்டால் பெற்றோர்கள் பார்ப்பவனை தன்னால் ஏற்று கொள்ள முடியுமா..? என்ற எண்ணத்தில் தத்தளித்திருந்தாள்.

‘முடியாது முடியவே முடியாது.. எனக்கு என் அபி தான் வேணும்.. கண்டிப்பா அவனை சம்மதிக்க வைப்பேன்’ என்ற உறுதியான முடிவில் அலைப்பேசியை எடுத்தவளுக்கு கைகள் வேறு நடுங்கியது.

கண்களை மூடி தன்னை நிதானப்படுத்த முயன்றாள்.. இருந்தும் காரணமே இன்றி இமைகளில் நீர்துளிகள் துளிர்க்க, “எனக்கு உங்க கையை பிடிச்சுட்டு கடைசி வரைக்கும் உங்க கூடவே இருக்கணும்.. ஐ லவ் யூ” என்று எழுதினாலும் ஏனோ அதை அனுப்ப மனமில்லாமல் போக அழித்தும் விட்டாள்.

“திரா உன்னைய அம்மா கூப்பிட்டாங்க” என்றபடி துருவினி வர, கலங்கிய இமைப்பாவைகளை தங்கைக்கு தெரியாமல் துடைத்து கொண்டு “ம்ம்ம்ம் போலாம்” என்றெழுந்தாள்.

“அவங்க எதுக்கு வந்துருக்காங்கனு தெரியுமா..?” – துருவினி

“எனக்கு எப்படி தெரியும்..” – ஆதிரா

“ரஞ்சித் எதுவும் சொல்லலயா?” – துருவினி

“அவன்கிட்ட நான் எதுக்கு பேசணும்”- ஆதிரா

“சிவா மாமா…” – துருவினி

“ப்ச் என்கிட்ட யாரும் எதுவும் சொல்லலடி..” என்று கடுப்பும் எரிச்சலுமாய் தங்கையிடம் எரிந்து விழுந்தாள் ஆதிரா.

துருவினியும் எதுவும் பேசாமல் அமைதியாகிட, “யாராவது வீட்டுக்கு வந்தா இப்படிதான் பண்ணுவீயாடி?” என்று மகளை அதட்டிய கல்யாணி “கொண்டு போய் அவங்களுக்கு குடு” என்று காப்பி தட்டை ஆதிராவிடம் நீட்டினார்.

முகத்தை தூக்கி வைத்து அன்னையை முறைத்த ஆதிரா “என்னால முடியாது.. நீங்களே போங்க” என்று அசட்டையாக கூறிட, ஆதிராவின் பேச்சில் கடுப்பான கல்யாணி “அடிச்சனா வெய்யு.. போனா போகணும்” என்று சீறினார்.

“என்ன பெரிம்மா என்ன ஆச்சு?” என்றவாறு நிவேதாவும் அங்கு வர, சிரித்து சமாளித்த கல்யாணி “ஒண்ணுமில்லடா” என்றவர் ஆதிராவை கண்களாலே மிரட்டினார் போ என்று!

ஆதிராவின் மனநிலையை அறியாமல் நிவேதாவோ “திரா நம்ம ரஞ்சித்டா.. எதுக்கு தயக்கம்..” என்று கிண்டலடிக்க, ‘ச்சை இந்த அக்கா வேற’ என்று முகத்தை சுருக்கி “நத்திங்” என்றாள் பட்டும்படாமலும்.

வேண்டா வெறுப்பாக அனைவருக்கும் காப்பியை குடுத்த ஆதிரா அங்கிருக்க விரும்பாமல் நகர போக, அவளின் கையை பிடித்து தன்னருகில் அமர வைத்தார் ரஞ்சித்தின் அன்னை லதா.

“என்னமா பண்ற?” என்று ஆரம்பித்த பேச்சு அவளை பற்றிய வினாவில் முடிந்தது. ரஞ்சித்தின் பெற்றோர் கேட்ட வினாவிற்கு பட்டும்படாமலும் மட்டுமே பதிலளித்தவள் மறந்தும் ரஞ்சித்தின் புறம் திரும்ப விரும்பவில்லை.

இதை ரஞ்சித் வெக்கம் என்று நினைத்திருக்க, பெண்ணவளின் மனநிலையோ தன்னவனை தவிர வேறு எவன் வந்தாலும் என் பாவனை இவ்வளவுதான் என்று இருந்தது.

“திராவை கூட்டிட்டு போ துரு” என்று நிவேதா கூறிட, ‘எனக்கு போக தெரியும்’ என்று மனதில் நினைத்த ஆதிரா யாரையும் காணாமல் அறைக்குள் புகுந்தாள்.

அவள் பின்னே வந்த துருவினி இதுதான் நல்ல சமயம் என்றுணர்ந்து “அக்கா” என்றழைக்க, ஆதிராவிடம் இருந்து “ம்ம்ம்” என்ற சத்தம் மட்டும் வந்ததே தவிர தலையை நிமிர்த்தவே இல்லை அவள்.

எதையும் கூறாமல் மனதினுள் வைத்து வருந்துகிறாளே என்ற ஆதங்கத்தில் “ப்ச் இங்க பாருடி” என்று தமக்கையை துருவினி நிமிர்த்திட, கருமணிகளில் தேங்கிய விழிநீருடன் இருந்தவளை கண்டதும் திகைத்து பேசற்று போனாள்.

பின்பு சுயத்திற்கு வந்து “ஹே லூசு அவங்க ஜஸ்ட் ஜாதகம் குடுக்கதான் வந்துருக்காங்க.. முதல்ல ஜாதகம் பொருந்தணும்.. முக்கியமா உனக்கு பிடிக்கணும்.. அதுக்கு அப்பறம் தான் அம்மா, அப்பாவே கல்யாணத்துக்கு சம்மதம் சொல்லுவாங்க.. இதுக்கு எதுக்குடி அழுகற?” என்றாள் ஆறுதலாக.

இதற்கும் எவ்வித எதிர்வினையை தராமல் இருந்தவளை சற்று கடுப்புடன் பார்த்த துருவினி “உனக்கு கல்யாணம் பிடிக்கலயா..? இல்ல மாப்பிள்ளையை பிடிக்கலயா..?” என்று கேள்வியை முன்வைத்தும் வாயை திறக்கமாலே அமர்ந்திருந்தாள் ஆதிரா.

“திரா ஏதாவது சொல்லி தொலையேன்டி..” – துருவினி

“………” – ஆதிரா

“லவ் பண்றீயா..?” – துருவினி

“ம்ம்ம்ம்ம்” – ஆதிரா

“யாரை..?” – துருவினி

“…… ” – ஆதிரா

“ரூபன் ப்ரோவா..?” – துருவினி

“ஆமா ஐ லவ் அபி.. அவனை மட்டும் தான் எனக்கு பிடிச்சுருக்கு அவன் மட்டும் தான் எனக்கு வேணும்” என்று தன்னிலையில் இல்லாமல் புலம்பினாள் ஆதிரா.

எங்கு ரூபன் தனக்கு கிடைக்காமல் போய் விடுவானோ..? என்ற பயம் மட்டுமே ஆதிராவின் மூளையை ஆக்கிரமித்திருக்க, என்ன செய்கின்றோம் என்பதையே மறந்திருந்தாள்.

“ஹே திரா கத்தாதடி கத்தாத.. பொறுமையா இரு” என்று அவளை அடக்கிய துருவினி மெதுவாக வெளியில் எட்டி பார்த்தாள் எங்கு இவள் கத்தியது அவர்களுக்கு கேட்டு விட்டதோ என்ற அச்சத்தில்!

அவர்கள் அனைவரும் சாதாரணமாக பேசி கொண்டிருப்பதை பார்த்து நிம்மதி பெருமூச்சு விட்டு ‘காதல் வந்தா பைத்தியமும் சேர்ந்து வரும் போல’ என்று உள்ளுக்குள் நொந்து ஆதிராவின் அருகில் அமர்ந்தாள்.

“அவங்களும் உன்னைய லவ் பண்றாங்களா..?” – துருவினி

“இல்ல” – ஆதிரா

“என்னடி உளறிட்டு இருக்க? அவங்க உன்னைய லவ் பண்ணலயா..?” – துருவினி

“தெரில” – ஆதிரா

“பைத்தியமே! நீ லூசானது பத்தலனு என்னையும் பைத்தியமாக்க நினைக்கறீயா..? ஒழுங்க புரியற மாதிரி சொல்லு” – துருவினி

பெருமூச்சுடன் ஆதிராவோ “நான் ரூபன் கிட்ட பேசறது உண்மைதான்.. இன்னும் நான் காதலிக்கறதை அவங்ககிட்ட சொல்லல.. அவங்க மனசுல எந்த உறவுல நான் இருக்கேனு இப்ப வரைக்கும் புரில துரு..” என்றாள் கவலையுடன்.

“அடிப்பாவி காதலை சொல்லாமலே காதல் தோல்வி அளவுக்கு பில்டப் பண்ற முதல் ஆளு நீதான்.. பைத்தியமே இப்ப நீ கல்யாணம் வேணாம்னு அப்பாகிட்ட சொன்னா சரினு சொல்லிருவாருனு நினைக்கறீயா?

காரணம் கேட்டா என்னனு சொல்லுவ? இப்ப சொன்னதை சொன்னீனா வெய்யு சிரிச்சுட்டு போய்ருவாரு.. முதல்ல அவங்க பதில் என்னனு கேளு அப்பறம் உக்காந்து லவ் பெயிலியர்னு அழுகு” என்று தலையில் அடித்து கொண்டாள் துருவினி.

மாணிக்கத்திடம் ஜாதகத்தை குடுத்து “சீக்கிரம் நல்ல பதிலை சொல்லுங்க” என்று ரஞ்சித்தின் பெற்றோர் புன்னகை முகமாக கூறிட, “கண்டிப்பாங்க” என்று மாணிக்கமும் மனநிறைவாக சிரித்தார்.

அழகிய பூகம்பம் தொடரும்..

Click on a star to rate it!

Rating 5 / 5. Vote count: 1

No votes so far! Be the first to rate this post.

இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
0
+1
1
+1
0
+1
0

உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள்