
அத்தியாயம் 6
மதியம் சாப்பிட்டுவிட்டு செல்லலாம் என்று அமிர்தம் மற்றும் ஆகாஷ் அத்தனை வற்புறுத்தியும், தாமதமானால் வீட்டில் திட்டுவார்கள் என்று மற்ற பெண்கள் கிளம்பிவிட்டனர்.
“ஹாஸ்டலுக்கு ஈவ்வினிங் ஆறு மணிக்குள் போனால் போதும் ஆண்ட்டி” என்று ஆகாஷிற்காக முல்லை மற்றும் தீபிகா நின்று கொண்டனர்.
“என்ன இருந்தாலும் நீங்க மூணு பேரும் ஒரு கேங். நாங்க நடுவுல வரல” என்று ஸ்ருதி சொல்லிச் சென்றிருந்தாள். அவளின் பேச்சினை மூவரும் கருத்தில் ஏற்றவில்லை.
ஆகாஷ் இருவரையும் தன்னுடைய அறைக்கு அழைத்துச் சென்றான்.
பெரியவர்கள் என்ன நினைப்பார்களோ என்று முல்லை அறையின் உள்ளே செல்லாது வாயிலிலே தயங்கி நிற்க, உள்ளே சென்றுவிட்ட ஆகாஷூம் தீபிகாவும் முல்லை வெளியிலே நிற்பதை கவனிக்கவில்லை.
எதிரே இருக்கும் தன்னறையிலிருந்து வெளிவந்த புவி, கவனித்து அவளின் தயக்கம் புரிந்து…
“அம்மா, அப்பா எதும் நினைக்கமாட்டாங்க. அவங்களுக்கு அவங்க பையனைப் பற்றி நல்லாத் தெரியும்” என்றான்.
புவியின் குரலில் வேகமாக திரும்பிப் பார்த்தாள் முல்லை.
“அது… அப்படியில்லை” என்று தடுமாறிய முல்லை, “எங்க வீட்டில் நான் ஒரு பையனை கூட்டிட்டு போய் நின்னா இந்நேரம் தொடப்பக்கட்டை பறந்து வந்திருக்கும்” என்றாள்.
முல்லையின் குடும்ப சூழல் அவளின் ஒற்றை வரி பதிலில் புவிக்கு புரிந்திருந்தது.
“அவங்க தான் இங்கில்லையே! ஃபீல் ஃப்ரீ” என்ற புவி…
“உன்னோட நேம் என்ன?” எனக் கேட்டான். அவனது பேச்சு இயல்பாய் ஒருமைக்கு வந்திருந்தது. அதை அவனே உணரவில்லை.
அதனை அவள் உணர்ந்த போதும் ‘தன்னைவிட பெரியவன் ஒருமையில் பேசினால் தவறில்லை’ என்று இலகுவாக ஏற்றுக்கொண்டாள்.
அவன் மீதான அவளின் பிடித்தம் அவளின் இலகு நிலைக்கு காரணமோ?
புவி பெயர் கேட்டதில் தன்னை கண்டு கொண்டானோ என நினைத்தவள், “வனம்” என்று மட்டும் கூறினாள்.
“ஹான்… கம் அகெய்ன்?” புவியிடம் மெல்லிய ஏமாற்றம். ஏனென்று அவனுக்கே தெரியவில்லை.
‘அப்போ ஜாஸ்மின்?’ உள்ளுக்குள் எழும் கேள்வி பதலின்றி தத்தளித்தது.
‘இரு பெண்ணும் ஒன்று தானோ? தன் மனம் ஏன் அன்றைய இரவு பார்த்த பெண்ணையும், நேற்று தன்னிடம் அலைபேசியில் பேசிய இவளையும் அறிந்துகொள்ள இத்தனை தவிக்கிறது?’ மனதின் தவிப்பின் காரணம் அந்த காவலனுக்கு விளங்கவில்லை.
“வனம் மீன்ஸ் ஃபாரஸ்ட்” என்றவள், முழுப்பெயரை வேண்டுமென்று தான் சொல்லவில்லை. அவனாக தன்னைக் கண்டுகொள்ள தன் பெயர் காரணமாக அமைந்திடுமோ என்று.
“முழுப்பெயரே அது தானா?” புவி கேட்ட நேரம், “ஹேய் வனம் உள்ள வா!” என்று தீபிகா அழைக்க, முல்லையும் புவியிடமிருந்து தப்பித்து உள்ளே ஓடிவிட்டாள்.
தீபிகா வனம் என்று அழைக்க அதுதான் பெயரென்று புவியும் நினைத்துக்கொண்டான்.
புவி தன் கையிலிருக்கும் அலைபேசியில் புகைப்படம் எடுத்து வைத்திருந்த காகிதத்தை திறந்து பார்த்தான். அதில் எழுதியிருந்ததும், வரைந்து இருந்ததும் அவனின் இதழை மலரச் செய்தது.
அதிலிருக்கும் இரு முல்லை மலர்களையும் ஒற்றை விரலால் வருடிய புவி, ‘இந்த பூ எதுக்கு? இதோட அர்த்தம் என்ன? மல்லி, மல்லிகா, ஜாஸ்மின்… இதுல உன் பெயர்? நீ போட்டிருந்த ட்ரெஸ் வச்சு பார்க்கும் போது ஜாஸ்மின் தான் தோணுது. உன் கண்ணு என்னவோ பண்ணுது! உன்னோட வாய்ஸ்? உனக்கு சம்மந்தமே இல்லாத பெண்ணிடம் உன்னை தேட வைக்குது’ என தனக்குள் அவளிடம் பேசியவனாக அங்கேயே நின்றிருந்தான்.
“ஹோ” என்ற மூவரின் கூச்சலில் சுயம் மீண்டு அலைபேசியை சட்டைப் பையில் போட்டவன், கீழ் இறங்கி அன்னையை தேடிச் சென்றான்.
அமிர்தம் சமயலறையில் சமைத்துக் கொண்டிருக்க, திரு உதவி செய்து கொண்டிருந்தார்.
“என்னப்பா கிச்சன் ரொமான்ஸா?”
திரு நறுக்கி வைத்திருந்த காரட்டை எடுத்து வாயில் போட்டவனாக அவரின் அருகில் அமர்ந்தான் புவியாழன்.
“சேட்டை… உன் அம்மா ரொமான்ஸ் பண்ணிட்டாலும்” என்று அலுத்துக் கொண்டார் திரு.
அமிர்தம் திரும்பி முறைத்திட,
“பாரு சொன்னனா இல்லையா? இப்படி முறைக்கத்தான் தெரியும்” என்றார்.
புவி கண்கள் ஒளிர சிரித்திட…
“ச்சூ தங்கம் முன்னாடி என்ன பேசுறீங்க” என்று முகத்தில் தோன்றிய நாணத்தை மறைத்து திரும்பிக் கொண்டார்.
அப்போது தண்ணீர் குடிக்க அங்கு வந்த முல்லை மூவரின் பேச்சினையும் ரசித்தவாறு நின்றுவிட்டாள்.
புவி தான் அரவம் உணர்ந்து என்னவென்று கேட்டு, தண்ணீர் எடுத்துக் கொடுத்தான்.
குடித்து முடித்தவள், “நான் கட் பண்ணட்டுமா அங்கிள்” எனக் கேட்டாள்.
“இருக்கட்டும்மா… முடிஞ்சிருச்சு” என்று அவர் மறுக்க, பிடிவாதமாக வாங்கி தான் செய்தாள்.
முல்லை அங்கு வந்து நின்றது முதல் அமிர்தத்தின் பார்வை அவளிடம் தான்.
சமைத்துக் கொண்டிருப்பதை மறந்தே போனார்.
புகையும் வாசனை வர, “ம்மா என்னாச்சு?” என்று புவி எழுந்து சென்று அடுப்பை அணைத்தான்.
முல்லையும், திருவும் பேசிக் கொண்டிருக்க இதனை உணரவில்லை.
“அந்தப்பொண்ணு…”
“என்னம்மா?”
“எதோ நெருக்கமா தோணுது தங்கம்” என்ற அமிர்தம், “எதோ தொடர்பான சொந்தம் மாதிரி மனசுல படுது” என்றார்.
“சொந்தமா?” என்ற புவி, “நமக்கு தான் அப்படி யாரும் இல்லையேம்மா” என்று பேச்சினை மாற்றிவிட்டான்.
“நீங்க போங்க. நான் பார்த்துக்கிறேன்” என்று.
உறவுகளைப் பற்றி எண்ண ஆரம்பித்துவிட்டால் கவலைக்குள் மூழகிவிடுவாரென அவரின் மனதை திசை திருப்பிவிட்டான்.
அமிர்தமும் முல்லையின் அருகில் சென்று அமர்ந்துகொண்டு இருவரின் பேச்சில் கலந்து கொண்டார்.
அடுத்து ஆகாஷும், தீபிகாவும் வர அரட்டை கலைக்கட்டியது. புவியும் சமைத்துக் கொண்டே நடுநடுவே அவர்களின் பேச்சில் கலந்திருந்தான்.
அவ்வீட்டில் அவர்கள் நால்வரை தவிர்த்து புதிதான உறவென்று யாரின் குரலும் ஒலித்தது இல்லை. அந்த கூட்டில் அவர்களுக்கு நடுவில் சொந்தமென்றும் யாரும் வந்ததில்லை. முதல் சொந்தம். இரு பெண்களும் அழகாய் பொருந்தியிருந்தனர்.
அமிர்தத்துக்கு மனதின் ஓரம் மெல்லிய நிறைவு. முல்லையை வாஞ்சையாக பார்த்துக்கொண்டே இருந்தார். அதனை புவியும் கவனித்திருந்தான்.
“லன்ச் ரெடி!” புவி சொல்ல, ஆகாஷ் உடன் சேர்ந்து உணவு மேசையில் அடுக்கி வைத்திட, அமிர்தம் அனைவருக்கும் பரிமாறினார்.
எல்லோரும் சிரித்து பேசியபடி உண்டு முடிக்க, புவி அமிர்தத்தை அமர வைத்து, உணவு எடுத்து வைத்து, அவரிடம் இரண்டு வாய் வாங்கிக் கொண்ட பின்னரே எழுந்து சென்று கை கழுவி வந்தான்.
ஆகாஷிடம் பேச்சிருந்தாலும், அன்னை, மகனை பாராமல் பார்த்துக் கொண்டிருந்த முல்லைக்கு, புவியின் இந்த செயல்கள் எல்லாம் தனக்கானதாக இருக்கக்கூடாதா எனத் தோன்றியது. சிறு ஏக்கம் நெஞ்சோரம் எழுந்தது. அவன் பால் கொண்ட ஈர்ப்பு நெஞ்சத்தை உருக வைத்தது.
புவியின் ஒவ்வொன்றையும் ரசிக்க வைத்தது. தம்பியிடம் காட்டும் அக்கறை அன்பு, தந்தையிடம் நண்பனாக, அன்னையிடம் சில நேரம் குழந்தையாக, சில நேரம் அவருக்கே தாயாக என அவன் காட்டும் பரிமாணங்களை அத்தனை ரசனையாக உள்வாங்கினாள்.
தோழியின் நீண்ட நேர பார்வையை கவனித்து தீபிகா அவளின் இடையில் யாரும் அறியாது இடித்து மீட்டாள்.
“இப்படி அப்பட்டமாவா சைட் அடிப்ப?” தீபிகா கிசுகிசுக்க, “சைட் எல்லாம் இல்லை. குமுதா ஒரு நாளும் என்கிட்ட இப்படி நடந்துகிட்டது இல்லை. அம்மா, மகன் உறவு இங்க எவ்ளோ அழகா இருக்கு” என்ற முல்லை கலங்கிய கண்ணை இமை தட்டி சரி செய்தாள்.
“டார்லிங் என்னாச்சு?” ஆகாஷ் பதறி கேட்டிடா… மற்றவரின் பார்வை முல்லை மீது படிந்தது.
“ஹேய் ஒண்ணுமில்லை. கண்ணு உருத்துற மாதிரி இருந்துச்சு” என்றவள், “கிளம்புறோம் டார்லிங்” என்று எழுந்து கொண்டாள்.
சாப்பிட்டுவிட்டு பக்கம் வந்த அமிர்தம், “இன்னும் கொஞ்ச நேரம் இருக்கலாமே கண்ணு” என்று சொல்ல, “இன்னொரு நாள் வரோம் ஆண்ட்டி. டைம் ஆகுது” என்றாள்.
“எப்படி போவீங்க?” திரு கேட்டார்.
“நான் விட்டுட்டு வரேன் ப்பா!” ஆகாஷ் சொல்லிட, “டூ வில்லரில் டிரிபில்ஸ் போகக் கூடாது ஆஷ்” என புவி கண்டித்திருந்தான்.
“இங்க ஆட்டோ கிடைக்காதே. மெயின் போகணும்” என்று திரு சொல்ல, “நீ போய் ஆட்டோ பிடிச்சு அனுப்பி வச்சிட்டு வா தங்கம்” என்றார் அமிர்தம் புவியிடம்.
வெளியில் காலணிகளை அணியும் போது, முல்லை கொண்ட அசட்டு பாவனை புவியின் இதழின் ஓரம் துடிப்பை ஏற்படுத்தியது. பாத விரல்கள் சிறு நடுக்கத்தோடு அழுத்தம் பெற, அதனை மறைக்க முடியாது காலில் தென்பட்ட ஆட்டம் யாவும் புவியின் கண்களில் ரசனையாய் விழுந்தது.
அவளின் பாதத்திலிருந்து புவியின் பார்வை மெல்ல ஏறி, அவளின் கைகளில் நிலைத்தது. வானவில் வர்ணங்களில், ஃப்ளூயிட் ஓவியங்கள் தீட்டப்பட்டு மழைத்துளி போன்று தங்க நிற புள்ளிகள் வைத்த கண்ணாடி வளையல்கள். பார்க்கவே வண்ணமயமாக மனதிற்கு இதம் தரும் வகையில் இருந்தது.
புவி சன்னமாக முறுவல் கொண்டானே தவிர்த்து வேறெதுவும் கேட்கவில்லை.
“புது டிரெண்டாம்மா?” திரு தான் சிறு சிரிப்போடு கேட்டிருந்தார்.
“அது அவசரத்தில்…” முல்லை பதில் சொல்லும் முன்,
“குழந்தையை கிண்டல் பண்ணாதீங்க” என்று முல்லைக்கு துணை நின்றார் அமிர்தம்.
புவி அமிர்தத்தை கவனித்துக் கொண்டு தான் இருக்கிறான். முல்லையை அவர் பார்க்கும் பார்வையில் அத்தனை கனிவு. கண்களில் விவரிக்க முடியாத அலைப்புறுதல். எதையோ உள்ளுக்குள் வைத்து அவளை நெருங்கும் ஏக்கம். காரணம் பிடிபடவில்லை.
புவி வண்டியில் ஏறிட, பெண்கள் இருவரும் சொல்லிக்கொண்டு புறப்பட்டனர்.
முக்கிய சாலை வரும் வரை முல்லையிடம் பேச்சென்பதே இல்லை.
புவி பொதுவாக அவர்களின் படிப்பு குறித்து கேட்டுக்கொண்டு வர, தீபிகா தான் அனைத்திற்கும் பதில் சொல்லிக்கொண்டு வந்தாள்.
முல்லையின் முகவாட்டத்தை கவனித்த போதும் புவி எதுவும் கேட்டுக் கொள்ளவில்லை.
இறங்கும் இடம் வந்ததும், ஆட்டோ அழைத்து ஏற்றிவிட்ட புவி, “நீ கண் கலங்கின தானே?” என தீபிகா அறியாது வினவினான்.
“நீங்க ரொம்பவே லக்கி” என்று அவன் கேட்டதற்கு மாறாக சொல்லியிருந்தாள்.
ஓட்டுனரும் ஆட்டோவை இயக்கியிருக்க, செல்லும் அவளையேப் பார்த்து நின்றிருந்தான் புவி.
இருவருக்கும் சொல்ல முடியா உணர்வு நெஞ்சத்தை ஆட்கொண்டது.
____________________________
அடுத்தடுத்த நாட்கள் விரைந்து சென்று கல்லூரி விழா நாளும் வந்ததது.
இடைப்பட்ட நாட்களில் முல்லையின் அறை சுவற்றில் புவியின் பல்வேறு செய்திகள் அடங்கிய செய்தித்தாள் துண்டுகள் இடம் பெற்றன.
“இது வெறும் கிரஷ் மாதிரி தெரியல.” தீபிகாவுக்கு சந்தேகம் தான். ஆனால் முல்லை ஒப்புக் கொண்டதில்லை.
“எல்லாம் இன்னும் ரெண்டு வருஷம் படிப்பு முடியும் வரை தான்” என்று தீபிகா சீண்டினாலும், “அதை அப்போ பார்த்துக்கலாம்” என கடந்து விடுவாள் முல்லை. உள்ளுக்குள் புவி மீது ஈர்ப்பைத் தாண்டி ஒன்று முளைத்து விட்டதென அறிவாள். ஆனால் அதனை ஆராய்ந்து முழுமைகொள்ள முனையவில்லை. வீரமுத்து ஆட்சியில் காதலுக்கு இடமில்லை என்பது தெரிந்தும் மனதை வெளிப்படுத்திடுவாளா என்ன?
விழாவிற்கு கல்வி அமைச்சர் வருவதால் பாதுகாப்பு பொருப்பிற்கு புவி தலைமை ஏற்றிருந்தான். இரு தினங்களுக்கு முன் கல்லூரிக்கு வந்தவன், கல்லூரியை சுற்றி வட்டமடித்திருந்தான். எங்கு எந்தளவிற்கு பாதுகாப்பு வளையம் அமைக்க வேண்டும், எத்தனை காவலர் வேண்டுமென அனைத்தையும் அலசிட வந்திருந்தான்.
எல்லாம் பார்வையிட்டு முதல்வரிடம் பேசி முடித்து புவி தன்னுடைய இருசக்கர வாகனத்திடம் வர, அவனைத் தாண்டிகொண்டு இரு பெண்கள் சென்றனர். அதில் சம்ரினும் ஒருத்தி. அவள் புர்கா அணிந்திருக்க… “ஹலோ மிஸ்” என்று அழைத்துவிட்டான். ஒரு ஆர்வத்தில்.
சம்ரின் திரும்பும் நொடி, “சம்மு” என்று முல்லையின் அழைப்பு.
தூரத்தில் முல்லை ஓடி வருவது தெரிந்தது. புவி கண்டுவிட்டான்.
“உன்னை மரியம் தேடிட்டு இருந்தாள்” என்று பக்கம் வந்த முல்லை அப்போது தான் புவியை கவனித்தவளாக, “ஹாய் சார்” என்றாள்.
புவி முல்லையின் கண்களையும், சம்ரினின் கருநிற முழு ஆடையையும் தான் மாற்றி மாற்றி பார்த்தான்.
சம்ரின் முகம் மூடவில்லை. அவளது விழிகளை ஏறிட்டவனுக்கு அன்றைய உணர்வு சிறிதும் இன்றில்லை. ஆனால் முல்லையின் கண்களை சந்திக்கும் போது அவனுள் பெரும் ஆர்ப்பரிப்பு. குழம்பும் மனம் மேலும் மேலும் குழம்பியது.
‘காலேஜில் இந்த ஒரு பொண்ணு மட்டும் தான் பர்தா உடுத்தியிருப்பாளா? எல்லா பெண்ணின் முகத்திலும் அவளை தேடாதே புவி’ என தனக்குத்தானே சொல்லிக் கொண்டு, சம்ரினை செல்லுமாறு கண் காமித்தான்.
“கிளாஸ் இல்லையா? சோலோவா சுத்திட்டு இருக்க?” செல்லாது நின்றிருந்த முல்லையிடம் கேட்டான்.
“ரெண்டு பேரும் டான்ஸ் பிராக்டிஸில் இருக்காங்க. ஃபங்ஷன் முடியுற வரை கிளாஸ் இருக்காது” என்ற முல்லை “அங்கிள், ஆண்ட்டி எப்படியிருக்காங்க?” எனக் கேட்டாள்.
“நல்லயிருக்காங்க” என்ற புவிக்கு, அமிர்தத்தின் அன்றைய பேச்சு மனதில் எழுந்தது.
முல்லை, தீபிகாவை ஆட்டோ ஏற்றி அனுப்பி வைத்துவிட்டு புவி வீட்டிற்கு வர, அமிர்தம் எதையோ யோசித்துக்கொண்டு அமர்ந்திருந்தார்.
“என்னாச்சும்மா? அந்தப் பொண்ணை ஏன் பார்த்துட்டே இருந்தீங்க?” என்று வினவினான்.
“சொன்னா திட்டக்கூடாது” என்ற அமிர்தம் சொல்லும்போது அங்கு வந்த திரு, “அவள் என் அம்மா ஜாடையில் இருக்காள் அதுதான் காரணமா இருக்கும்” என்றார்.
“அப்படியாம்மா?” என்று உற்சாகமாகக் கேட்ட ஆகாஷ், “உங்க ஃபேமிலி டிடெயில்ஸ் சொல்லுங்க டார்லிங் கிட்ட கேட்போம்” என்றான்.
“உலகத்துல ஏழு பேர் ஒரே மாதிரி இருப்பாங்களாமே அப்படியும் இருக்கலாம். நமக்கு சொந்தம் அப்படின்னு யாருமில்லை. இதை இதோடு நிறுத்துங்க” என்று புவி எழுந்து சென்றுவிட்டான். அவ்வீட்டில் புவியின் பேச்சுக்கு அடுத்து வேறு பேச்சில்லையே! வழக்கம் போல் உறவு குறித்த ஏக்கத்தை திருவும், அமிர்தமும் உள்ளுக்குள் மறைத்துக் கொண்டனர்.
அறைக்கு வந்த புவிக்கு, “நீ என் அம்மா சொல்லும் சொந்தமா மட்டும் இருக்கவேக் கூடாதுடி” என சொல்லிக்கொண்டான்.
“என்ன சார் அப்படியே நின்னுட்டிங்க?” முல்லை குரலில் மீண்டவன், “ஓகே பை…” என்று கிளம்பிவிட்டான்.
வீட்டிற்கு வந்த புவி, வண்டியின் உரையில் வைத்திருந்த வழக்கு கோப்பினை எடுத்திட, அதனுடன் சேர்ந்து மடிகப்பட்ட காகிதமும் வந்தது.
‘என்னை பார்த்திருக்கா!’ ஆர்வத்தோடு அதனை திறந்து பார்த்தான்.
“எப்படி சார் இப்படி மாஸா இருக்கீங்க. ரொம்ப பிடிக்குதே!” என்ற வார்த்தைகளோடு இரு முல்லை மலர் படம் வரைந்திருந்தாள்.
அவளின் ரொம்ப பிடிக்குது எனும் வார்த்தை தித்திக்கும் சுவையை நெஞ்சில் தேனாய் பாய்ச்சியது.
‘இது அவளா? இருக்காது. நான் பைக் பக்கதில் வந்த அப்புறம் தான் அவளே வந்தாள். யாரு? இப்படி தேட வைக்கிறாள்?’ ஒரு மனம் புலம்பி தவித்திட, ‘நீ அவளைத் தேடுறியா? எதுக்கு?’ என மற்றொரு மனம் கேள்வி கேட்டது.
இந்த தவிப்புகள் எல்லாம் அவனுக்கு புதிது.
“தேட வைக்கிறாள்.” பின்னந்தலையை கோதி கொடுத்தவன், காகிதத்தில் எழுதியிருந்ததை மீண்டும் ஒருமுறை வாசித்தான். கண்கள் விரிய அதரம் நீண்டு மலர்ந்தது.
“என்னவாம்? முகத்தில் புதுசா ஒளி?” பள்ளி முடித்து நுழைந்த திரு மகனை கண்டு கேட்டிருந்தார்.
திருவின் குரலில் புவி அதிரவோ, தன் முகத்தை மாற்றிகொள்ளவோ இல்லை. மாறாக கையிலிருந்த காகிதத்தை அவரிடம் காண்பித்தான். சில நொடிகள் மட்டுமே! மீண்டும் மடித்து பையில் வைத்துக்கொண்டான்.
“யாருன்னு தெரியல. ஆனா உள்ள என்னவோ பண்றா(ள்)ப்பா. அவள் யாரா இருக்கும்? திரும்ப பார்க்க முடியுமான்னு… இதே நினைப்பா, மனசுக்குள்ள என்னவோ புதுசா இருக்கு” என்றான்.
புவி மேலோட்டமாக சொன்னான். தன் சந்தேகம் எதையும் குறிப்பிடவில்லை.
“நீ ஹெல்ப் பண்ணியிருக்க, தேங்க்ஸ் சொல்லியிருக்கா. திரும்ப உன்னை இன்னைக்கு காலேஜில் பார்த்திருக்கா… கிட்ட வந்து பேசினா அன்னைக்கு நடந்த சம்பவத்தை பிரின்ஸ்பாலிடம் சொல்லிடுவன்னு திரும்ப பேப்பரில் எழுதி வச்சிருக்கலாம். ஃப்ரீயா விடு தங்கம்” என்ற திரு, “கொஞ்ச நாள் அமைதியா இரு. வேறெதுவும் அப்படின்னா உன் மனசே உனக்கு அதை உணர்த்தும்” என்று மகனின் தோளில் கை போட்டவராக உள்ளே அழைத்துச் சென்றார்.
இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
4
+1
51
+1
1
+1
1
உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள்
You must be logged in to post a comment.


Super
Thank You
Beautiful…
நன்றி அக்கா 😍