
இரண்டு நாள்களுக்குப் பிறகு மாலை தமிழ் பள்ளி முடிந்து வீட்டிற்கு வரும் பொழுது அவளுடன் அகிலாவும் வந்தாள்.
“என்னடி என் கூட வர, வீட்டுக்குப் போலயா? தம்பி இருப்பானே” என்று தமிழ் கேட்க,
“தம்பியைப் பார்த்துக்க அத்தை இருக்காங்க. ஏன்? நான் உன் கூட வீட்டுக்கு வரக் கூடாதா?” என்று கேட்டாள் அகிலா.
“அம்மா சாமி, நான் எப்ப அப்படிச் சொன்னேன்?” என்று தமிழ் சிரித்துக் கொண்டே தனது தோழியிடம் பேசியபடி வீட்டிற்கு வர,
தமிழுடனே அவளது வீட்டுக்கு வந்தாள் அகி.
“என்ன மேடம், என் கூடவே வரீங்க?” என்று சொல்லிச் சிரித்துவிட்டு, “சரி வாம்மா அதுக்கும் ஒரு பஞ்சாயத்துக் கூட்டாத” என்று சிரித்துவிட்டு தமிழ் முன்னாடி செல்ல,
பாக்கியம் தான், “வா அகிலா” என்று அழைத்துவிட்டு “என்னடா, தம்பி இல்லாமல் நீ மட்டும் வந்திருக்க?”
“எந்தத் தம்பியைக் கேக்குறீங்க? உங்க மகனையா? இல்ல பேரப் புள்ளையா?” என்று வம்பு இழுத்தாள்.
“அகி, உனக்கும், உன் தங்கச்சிக்கும் என்னை வம்பு இழுக்கலைன்னா தூக்கம் வராதுடி. என் பேரனை தான் கேட்டேன்.”
“தம்பி ஆட்டோவில் வீட்டுக்குப் போயிட்டான். அத்தை பார்த்துப்பாங்க. நான் ஒரு முக்கியமான வேலையாக இங்கு வந்தேன்” என்றாள்.
“அப்படி என்னடி முக்கியமான வேலை” என்று பாக்கியம் கேட்க,
தமிழ் சமையலறையில் தனது அத்தை போட்டு வைத்திருந்த டீயை இரண்டு கப்புகளுக்கு மாற்றி எடுத்துக் கொண்டு வந்து அகிலாவின் கையில் கொடுக்க,
“அப்படி என்னடி முக்கியமான வேலை?” என்று தமிழும் கேட்க,
“ஏன் வரக்கூடாதா, என்ன? என் அத்தை வீட்டுக்கு நான்” என்றாள்.
“நான் எப்படி சொன்னேன், வரவேணான்னு. என்ன முக்கியமான வேலை என்று தானே கேட்டேன்” என்றாள்.
“சொல்லுவோம், சொல்லுவோம். இப்போ என்ன அவசரம்?” என்று முடித்துக் கொண்டாள்.
அப்பொழுதுதான் வீட்டிற்குள் வந்த ருத்ரன், “என்ன அகி, அதிசயமா இந்தப் பக்கம் வந்திருக்க. எங்க என் மாப்பிள்ளை?” என்று கேட்டான்.
இருக்கறவளை விட்டுட்டு, வந்தவளை விட்டுட்டு, வராதவனையே கேளுங்க எல்லோரும்” என்று வாயைக் கோணித்துக் காண்பித்தாள்.
“என்ன ஸ்கூல் முடிஞ்சு நேரா இந்தப் பக்கம் வந்து இருக்க?”
“ஏன்? வரக்கூடாதா? ஒவ்வொருத்தரும் இதே கேள்வி கேட்டுட்டு இருக்கீங்க?” என்றாள்.
“நீ வா, உன்னை யார் வேணான்னு சொன்னா” என்று அகிலாவைப் பார்த்துக் கண்ணடிக்க,
“இதுக்கு ஒன்னும் குறைச்சல் இல்லை” என்றாள் அகி சிரிப்புடன்.
“வேறு என்னத்துக்குக் குறை செல்லம்?” என்று ருத்ரன் சிரிப்புடன் கேட்க,
“ஏன் மாமா, நான் ஹனிமூன் போகச் சொல்லி ரெண்டு பேருக்கும் டிக்கெட் கொடுத்த ஞாபகம் இருக்கா?” என்ற உடன் இப்பொழுது இருவரும் திருதிருவென முழிக்க,
“கல்யாணம் இருக்கு இல்ல அகி” என்றான்.
“சரோவுக்கு கல்யாணம் முடிந்த பிறகு பாத்துக்கலாம்” என்றான்.
“எது? சரோ கல்யாணம் முடிஞ்சதுக்கு அப்புறம் பார்த்துக் கொள்ளலாமா? நான் உங்க ரெண்டு பேருக்கும் தான் டிக்கெட் ரெடி பண்ணேன். உன் மச்சானுக்கும், தங்கச்சிக்கும் இல்ல, அதை நினைவுல வச்சுக்கோ” என்றவுடன் தமிழ் சிரித்து விட்டாள்.
தமிழைப் பார்த்து முறைத்துவிட்டு ருத்ரனை அகி பார்க்க,
“போலாம் டா, கல்யாண வேலை இருக்கும்போது இதை விட்டுட்டா?” என்று ருத்ரன் கேட்க,
“கல்யாண வேலையைப் பார்க்க இத்தனை பேர் இருக்கோம். சரியா? சித்தப்பா இருக்காங்க, அப்பா இருக்காங்க, அண்ணனும், என் வீட்டுக்காரரும் இருக்காங்க, இன்னும் ஆளுங்க எல்லாம் இருக்கத்தான் செய்கிறாங்க. நீ பார்த்தா தான் எல்லா வேலையும் நடக்கும் என்று கிடையாது. அஞ்சே அஞ்சு நாள் உனக்காக உன் வாழ்க்கைக்காக நேரம் ஒதுக்க முடியாதா மாமா உன்னால” என்று கேட்டவுடன் தமிழைப் பார்த்தான்.
அவள் கண்மூடித் திறந்தவுடன் “சரி அகி, நான் நாளைக்கு நைட்டு கிளம்புறேன். எனக்கு நாளைக்கு கொஞ்சம் வேலை இருக்கு” என்றான்.
“சரி மாமா, அதுக்கு தான் வந்தேன். நேரம் ஆகுது. என்கிட்ட சும்மா விளையாட்டுக்குச் சொன்னேன்னு இரண்டு நாள் கழிச்சு சொல்லாத சரியா? என்னென்ன வேணுமோ சொல்லு, நான் வாங்கிட்டு கூட வந்து தரேன்.”
“ஏன், என்கிட்டக் காசு இல்லையோ?” என்றான் ருத்ரன்.
“காசுக்காகச் சொல்லல, வேலை இருக்குன்னு சொன்னியே, அதுக்காகச் சொன்னேன். ஓவரா பண்ணாத… வாங்கிட்டு வந்து கொடுத்தாலும் காசு வாங்காம விட மாட்டேன். நான் ஒன்னும் அவ்வளவு கொடை வள்ளல் கிடையாது, உங்க மாமா மகள்” என்று சொல்லிவிட்டு, “சரி மாமா வரேன், நேரம் ஆகுது” என்று விட்டுக் கிளம்ப,
“எங்கடி போற? ஒரு வாய் சாப்பிட்டுப் போ…” என்று பாக்கியம் சொல்ல,
“இங்கேயே சாப்பிட்டேனா உங்க அண்ணன் வீட்டில என்னத்தைச் சாப்பிடறது? இங்க வந்துட்டு அங்க போகலனா, உங்க அண்ணி அதுக்கு மூக்குறிஞ்சிட்டு இருக்குமே” என்று சிரிப்புடனே பாக்கியத்திடம் வம்பு இழுத்து விட்டுத் தன் வீடு நோக்கி நடையைக் கட்டினாள் அகிலா.
தன் வீட்டிற்குச் செல்லும் பொழுது சரோ வெளியில் இருக்க, “காட்டுக்குப் போல” என்று கேட்டாள்.
“நான் காட்டுக்குப் போறது இருக்கட்டும். நீ என்ன இந்தப் பக்கம்?” என்றான் சரோ.
“வந்தவளை வானு கூப்பிட முடியல. ஏன் வந்தேன்னு கேள்வி கேக்குற?”.
“அது சரி” என்று தனது தங்கையின் தோளில் கையைப் போட்டுக் கொண்டு சரவணன் வீட்டிற்குள் வர,
“டேய் சரவணா, இந்தாடா உன் தங்கச்சிக்குப் புடிச்ச பருப்பு உருண்டை. கொண்டு போயி குடுத்துட்டு வாடா” என்று சொல்லிக் கொண்டே சமையல் அறையில் இருந்து டிபன் பாக்ஸுடன் வந்த இளவரசி,
தனது மகளைப் பார்த்து விட்டு, “வா அகிலா, உனக்கு தான் கொண்டு போய் கொடுக்கச் சொல்லி உன் அண்ணனிடம் சொல்லிட்டு இருக்கேன். பருப்பு உருண்டை உனக்குப் பிடிக்கும்னு செஞ்சேன்” என்று சொல்ல,
தன் தாயின் கையில் இருக்கும் டிபன் பாக்ஸ் பிடுங்கி அதிலிருந்து இரண்டு உருண்டை எடுத்துத் தன் வாய்க்குள் திணித்தாள் அகிலா.
அவள் தலையில் கொட்டிய சரோ, “பொறுமையா தின்னு” என்றான்.
“இப்படித் தின்னு தின்னு உடம்பு போடாதடி” என்றான்.
“இவன் தின்றது எல்லாம் உடம்புல ஒட்ட மாட்டேங்குது. அதுக்கு நான் என்ன பண்றது?” என்றாள். தன் தலையைத் தடவிக் கொண்டே.
“பிள்ளையைக் கண்ணு வைக்காதடி கம்முனு இருடி கல்யாணத்தேதி வேற வச்சாச்சு” என்றார்.
“அது சரி ஓவராக தான் போற. அப்ப நான் யாரோ?” என்றாள்.
“நீ என் புள்ள தாண்டி” என்று சிரித்தார் இளவரசி.
“ஓவராக ஐஸ் வைக்காதே அரசி, வரவர என்னை நீ கண்டுக்கவே மாட்டேங்குற. உன் வீட்டுக்கு மருமக வரப்போறான்னு” என்றாள்.”
சரவணன் சிரித்துக்கொண்டே தன் தங்கையைப் பார்க்க,
“ஆமாண்டி, எனக்கு என் மருமக தானே இனி எல்லாம். நீ எல்லாம் என்னை பார்த்துட்டுப் போயிடுவியே” என்று இளவரசியும் வாயைக் கோணித்துக் காண்பிக்க,
“எது உன் மருமகள் உன்னைப் பார்த்துப்பாளா?, இல்ல நீ உன் மருமகளைப் பாத்துக்குற மாதிரி நிலமை இருக்கப் போகுது” என்றாள்.
“என்னடா உன் தங்கச்சி பேசுறா, அமைதியா இருக்க?”
“நம்ம அகி தானே பேசிட்டுப் போகட்டும் விடு” என்றான்.
“சரி நேரம் ஆகுது, நான் வரேன்.”
“என்னடி இவ்ளோ தூரம் வந்துட்டுக் கிளம்புற உடனே” என்று கேட்க,
“இல்ல மா, நான் ருத்ரன் மாமாவைப் பார்க்க வந்தேன். அன்னைக்கு ஹனிமூன் போக டிக்கெட் கொடுத்து இருந்தேன்ல, அவங்க ரெண்டு பேரும் அதைப் பத்தி எந்த முடிவும் எடுக்கல.
உன் தங்கச்சி மகளைக் கேட்டா வாய் திறக்கல. அதான் மாமாவைப் பார்த்துப் பேசிட்டுப் போலாம்னு வந்தேன்.”
“என்னடா சொன்னான்?” என்று சரவணன் கேட்க,
“நீ அவர்கிட்ட இதப்பத்திப் பேசிடாத என்னைக் கேளு” என்றாள்.
“அவனும் பிடி கொடுக்க, நானே உன்னைப் பார்த்துப் பேசலாம்னு இருந்தேன். நீயாவே வந்து இருக்க, அவ்வளவுதான்” என்றான் சரோ.
“சரிமா நேரம் ஆகுது” என்று விட்டுக் கிளம்ப,
“இருடி” என்று விட்டு இன்னொரு டிபன் பாக்ஸும், ஒரு பையில் போட்டு எடுத்துக் கொண்டு வந்த இளவரசி கொடுக்க,
“இதுல என்னமா இருக்கு?” என்று கேட்டாள்.
“ரவா லட்டும், இன்னொரு பாக்ஸ்ல கொழுக்கட்டையும் இருக்குடி. என் பேரப்பிள்ளைக்கு புடிக்கும்னு தான், செஞ்சேன்” என்று சிரித்தார் இளவரசி.
“அது சரி, பேரபிள்ளை வந்த பிறகு பெத்த புள்ளை கண்ணுக்குத் தெரியல. என்ன இருந்தாலும் பெத்த புள்ளயை விட பேரப்பிள்ளைதான் ஒசத்தி” என்றவுடன்,
“சொன்னாலும், சொல்லட்டியும் அது தான்டி உண்மை.”
“எப்பயும் என் அண்ணனுக்கு நான் தான் ஒஸ்தி” என்று தனது அண்ணனின் தோளில் கையைப் போட்டுவிட்டு, “சரி நேரம் ஆகுது” என்றாள்.
“சரி வா, நான் உன் கூட வரேன்” என்றான் சரோ.
“ஏன்? வந்த எனக்குப் போக வழி தெரியாதா?” என்று கேட்டாள்.
“உனக்கு வழி தெரியாமலா?” என்று சிரித்துவிட்டுத் தனது தங்கையை வீட்டில் கொண்டு விட்டு விட்டுத் தன் வேலையைப் பார்க்கச் சென்று விட்டான் சரவணன்.
அடுத்து இரண்டு நாள்கள் கழித்து ருத்ரனும், தமிழும் ஹனிமூன் செல்வதற்குத் தேவையான அனைத்துப் பொருட்களையும் எடுத்து வைத்துக் கொண்டிருக்க,
மாலை 6 மணி போல் அகிலா, காயு சிறியவர்கள் அனைவரும் ஒன்று கூடி இருந்தார்கள் ருத்ரன் வீட்டில்.
ருத்ரன் அனைவரையும் பார்த்துச் சிரித்துவிட்டு, “உங்கள் தொல்லை இல்லாமல் அஞ்சு நாள் நிம்மதியா இருப்பேன், என் பொண்டாட்டியோட” என்று சிரித்தான்.
“அதையும் நாங்க பார்க்கத் தானே போறோம். நீ எந்த அளவுக்குச் சந்தோசமா உன் பொண்டாட்டி கூட இருக்கேன்னு” என்று அகியும், காயுவும் ஹைஃபை அடித்துக் கொண்டு சொல்ல,
“அதை உங்களுக்கு நான் படம் போட்டா காட்டுவேன்?” என்று சிரித்தான்.
சரவணன் தனது நண்பனைப் பார்த்து முறைக்க,
“என்ன டா?” என்றான் ருத்ரன்.
“வயசுப் பிள்ளைங்கடா, ஞாபகம் இருக்கா? இல்லையா?” என்றான்.
“உனக்குத்தான் தங்கச்சிங்க, எனக்கு மச்சினிச்சிங்கடா மச்சான்” என்று தனது நண்பனின் தோளில் தட்ட,
“அது சரி” என்று விட்டுத் தமிழைப் பார்க்க,
தமிழ் சிரித்துக் கொண்டு நின்றாள்.
“நீ இப்படி அமைதியா இருந்தேனா, இப்படியே தான் பேசுவான் உன் மாமா, பார்த்துக்கோ தமிழ். உன் வாழ்க்கைக்கு உத்தரவாதம் இல்லை” என்று சொல்லிச் சரவணன் சிரிக்க,
“பாரு, போகும்போதே ஒரு குண்டைத் தூக்கிப் போடுறத. இப்படிப்பட்ட அண்ணன்கள் எல்லாம் கூட வச்சிகிட்டுச் சுத்தனா எங்க இருந்து வாழ்க்கை விளங்கும்?” என்று சிரித்தான் ருத்ரன்.
“என்ன மச்சான் அப்படிச் சொல்லிட்ட, என் தங்கச்சி எங்க என்ன வச்சுட்டுச் சுத்துறா. நீதான் என்ன விடிய விடிய வச்சிகிட்டு சுத்துற” என்றான்.
டென்ஷன் ஆன ருத்ரன், “அவனா நீ…” என்று கேட்க,
தனது நண்பனைத் தள்ளி விட்டு, “நாயே…” என்று அவனது முதுகிலே இரண்டு மூன்று அடிகளைப் பரிசாக வழங்கினான் சரோ.
சிரித்த முகமாகப் பெரியவர்கள், சிறியவர்கள் அனைவரும் ருத்ரன், தமிழ் இருவரையும் ஹனிமூனுக்கு சிம்லா அனுப்பி வைக்க,
அனைவரும் அவர்கள் இருவரையும் அனுப்பி வைத்துவிட்டு அவர்களது வீடு நோக்கிச் சென்று விட்டார்கள்.
மறுநாள் காலை விடியற்காலை போல் இருவரும் சிம்லா சென்று இறங்கினார்கள்.
குளிரின் கதகதப்பில் ருத்ரனை ஒட்டிக் கொண்டே தமிழ் இருக்க,
அவளைப் பார்த்துச் சிரித்த ருத்ரன் அவளது நெற்றியில் இதழ் பதித்துவிட்டு,
“என்ன தமிழ் உன் ஆசை நிறைவேறிடுச்சா?” என்று கேட்டான்.
“இல்ல மாமா, அது நான் உங்ககிட்டச் சொல்லல, என்று என் மேல உங்களுக்குக் கோவமா?” என்று கேட்டாள்.
“உனக்குச் சிம்லா புடிக்கும்னு எனக்குத் தெரியும் தமிழ். ஆனா ஹனிமூன் போற அளவுக்குனு எனக்குத் தெரியாது” என்று சிரித்தான்.
“மாமா…” என்று சிணுங்கிவிட்டு, “நான் இப்போ சொல்லல மாமா. அந்த லூசுகிட்டச் சின்ன வயசுல சொன்னதுதான். இப்போ செஞ்சிருக்கா” என்று சிரித்தாள்.
“அதான் தெரியுமே” என்று ருத்ரனும் சிரித்துவிட்டு அவளது காதில் சமரசம் பேச, அவனது நெஞ்சில் தனது கை முட்டிகள் வைத்து இரண்டு இடி இடித்தவள், “அமைதியாக இரு” என்றாள்.
“சும்மா இருக்கவாடி இங்க வந்திருக்கோம்?” என்று சிரித்தான் ருத்ரன்.
