
அத்தியாயம் 8
கைப்பேசித் திரையில் புதிதாய் மிளிர்ந்த எண்ணைக் கண்டு சிந்தனையுடன் செவியோடு இணைத்தாள் மௌனிகா.
“ஹலோ..”
மறுபுறம் இருந்து, “நான் பாகீரதி பேசுறேன்.”
“பாகீரதி.? ஸாரி யாருனு தெரியலயே எனக்கு.”
“நீ ம்மா?”
அவரின் தன்மையான பேச்சு அவளைச் சற்று நிதானிக்க வைக்க, “நீங்க யாருனே தெரியாதப்ப, நான் எப்படி என்னைப் பத்திச் சொல்லுவேன்?”
சரணின் சிற்றன்னை சிரித்து, “பரவாயில்ல, பொறுமையா தான் பேசுது.” எனக் குரல் தாழ்த்தி உரைக்க, ஆடவனின் இதழ்களிலுமே காரணம் இன்றி புன்னகை மலர்ந்தது.
“ரெங்கநாயகி அம்மாக்கிட்ட பேசணும். இந்த நம்பர்ல இருந்து தான், காலையில ஃபோன் வந்துச்சு எனக்கு.”
பாவைக்கு யாரென்று புரிந்துவிட, “ஒன் செகண்ட்..” என்றுவிட்டு, கைப்பேசியில் இருந்து அழைத்த எண்ணை ஒருமுறை சரி பார்த்துக் கொண்டாள்.
“ஸாரி.. ஆச்சி, ரெஸ்ட் ரூம் போயிருக்காங்க. அப்புறம் பேசுறீங்களா?”
“இப்ப சொல்லலாமே, நீ யாருனு.”
மெலிதாய்ப் புன்னகைத்தவள், “தெரிஞ்சுக்கிட்டே கேட்கிறீங்களே மேம்?”
“இருந்தாலும் கேட்டு உறுதி படுத்திக்கிறது நல்லது தான?”
“நான் மௌனிகா.”
“சரிம்மா. இது, ரெங்கநாயகி அம்மாவோட நம்பர்னு நினைச்சேன். அதான் இதுக்கே ஃபோன் போட்டேன்.”
“ஆச்சியோட மொபைல் சார்ஜ் இல்லாம ஆஃப் ஆகிடுச்சு. அதுனால என்னோடதுல இருந்து கால் பண்ணோம்.”
“ம்ம்..” என்றவர் அடுத்து எப்படித் தொடங்குவது எனப் புரியாது அமைதியாய் இருந்தார்.
“ஆச்சி வரவும் பேசச் சொல்லுறேன் மேம்.” என அவள் இணைப்பை நிறுத்தச் செல்ல, ‘ஒரு நிமிஷம் ம்மா..” என்று அதற்குத் தடையிட்டார் சரணின் சிற்றன்னை.
குரல் மாற்றத்தை உணர்ந்தவள், “நீங்க?”
“நான் பாகீரதியோட தங்கச்சி ம்மா..”
“சொல்லுங்க.”
“எனக்கு உன்னைப் பத்திக் கொஞ்சம் சொல்லுறியா.?”
அவளிற்குக் காரணம் புரிந்துவிட, ‘ஸாரி, அதுக்கு அவசியம் இல்லனு தோணுது. ஆச்சிக்கு எனக்குச் சீக்கிரம் கல்யாணம் செஞ்சு பார்க்கணும்னு எண்ணம். அதான் பின் விளைவைப் பத்தி யோசிக்காம பட்டுனு கேட்டுட்டாங்க. ஆனா, இது அவ்வளவு ஈஸி இல்ல.
இப்பதான் விருப்பம் இல்லாம, ஒரு உறவுல இருந்து வெளிய வந்திருக்காரு உங்க அக்கா மகன். சட்டுனு இன்னொரு உறவுக்குள்ள போக முடியாது. அதுவும் வேணாம்னு சொன்ன பொண்ணோட அக்காவைக் கொண்டு போய் நிறுத்துனா, தங்கச்சியோட எண்ணம் தான வரும்?
அப்புறம், எனக்கும் இதுல இஷ்டம் இல்லை. என் சிஸ்டரோட இடத்துல என்னால நிச்சயம் பொருந்த முடியாது. பின்னாடி ஃபியூச்சர்ல எப்பவாது இதைப் பத்தி பேச்சு வந்துட்டா, எல்லாருக்குமே வருத்தம் தான் மிஞ்சும். ஃபியூச்சர்ல என்ன? ஆச்சி கேட்ட விஷயம் வெளிய தெரிஞ்சா, இப்பவே காஸிப் பேசத்தான் செய்யிவாங்க.
தப்பு ஆச்சி மேலதான். வயசாகிட்டதால, யோசிக்காம பேசிட்டாங்க. அவங்க சார்பா நான் உங்கக்கிட்ட ஸாரி கேட்டுக்கிறேன்.’ என மறுபுறம் இருப்பவரிற்கு பேச வாய்ப்பு கொடாமல், தனது எண்ணத்தைச் சொல்லி முடித்தாள்.
பெரியவர்களிற்கு அவளின் மறுப்பான பேச்சு சற்று மன வருத்தத்தையே தந்தது. ஆனால், அவர்களிற்கு மாறாக, சரணிற்கு நிம்மதியாய் இருந்தது. அத்தோடு அவளின் மீதான எண்ணத்தை, மரியாதையின் பக்கத்திற்கு திரும்பியது.
பாகீரதி தங்கையிடம், ‘மேலும் பேச வேண்டாம்!’ என்பது போல் தலையசைத்து மறுக்க.. இளையவர் சிந்தனையுடன், “ஊரு, தப்பா பேசும்னு யோசிக்கிறியா ம்மா.?”
“நான் இந்த ஊர்லயே இருக்கிறது இல்லையே? அப்படியே பேசுனாலும், எனக்குக் கவலை இல்ல. சென்னையில இருக்கிற என்னோட காதுக்கு வர வாய்ப்பு இல்ல. வந்தாலும், அதுக்குப் பயப்படுற ஆள், இல்ல நான். உண்மையைச் சொல்லணும்னா, நீங்கதான் இந்த ஊருல இருக்கீங்க. சோ, உங்க ஃபேமிலிதான் இதைப் பத்தி யோசிக்கணும்.”
சகோதரிகள் இருவரும் ஒருவரை ஒருவர் பார்த்துக் கொள்ள, சட்டென்று சிரித்து விட்டான் சரண்.
ஆடவனின் நகைப்பொலி எதிர்புறம் இருந்த அவளிற்கும் கேட்க, காரணம் இன்றி விழிகளிலும் உடலிலும் லேசான பதற்றம்.
“சித்தி, பதில் சொல்லுங்க அந்தப் பொண்ணுக்கு.”
“அவ எங்களைக் கேள்விக் கேட்கிறது, உனக்குச் சந்தோஷமா இருக்கோ?”
“இருக்காதா பின்ன? என்னென்னமோ சொல்லி, என்னோட மனசை மாத்த முயற்சி பண்ணீங்க. அது நடக்காததால, நாங்க சொல்லுறதைக் கேளுனு ஒரே போடா போட்டீங்க. வீட்டுல பெரியவங்க உங்க வார்த்தைக்கு மரியாதைக் கொடுக்கணுமேனு, நானும் வேற வழி இல்லாம அமைதியா இருந்தேன்.
இப்ப, அங்க இருந்து கொஸ்டின் வருது. என்னை ஆஃப் பண்ண மாதிரி, இன்னொரு வீட்டுப் பொண்ணுக்கிட்ட உங்களால பேச முடியுமா?”
‘உனக்கு வில்லனே தேவை இல்லடா. உன் வாயே போதும், வாழ்க்கையைக் கெடுத்துக்க. முப்பத்திரண்டு வயசு ஆகுது. தலையில அங்கங்க நரைமுடி வேற. டூ கே கிட்ஸ்னு சொல்லுவாங்களே.? அந்த கூட்டத்துல முக்கால் வாசி கல்யாணம் கட்டி, குட்டிப் போட்டுடுச்சுக. இந்த காலத்துல பொண்ணு கிடைக்கிறதே கஷ்டம். நாலு வருசமா அலைஞ்சு திரிஞ்சு ஒரு பொண்ணைப் பார்த்துப் பேசி முடிவு பண்ணா, ஏதோ பேசுனானு கல்யாணத்தை நிறுத்திட்டு வந்துருக்க.”
“அதுக்காக, அந்தப் பொண்ணைப் பத்தித் தெரிஞ்ச பின்னாடியும் கல்யாணம் செஞ்சுக்க முடியுமா?’
“ஏன், செஞ்சா என்ன? நீ நல்லவனா இருந்தா, தாலி கட்டி கூட்டிட்டு வந்து நம்ம குடும்பத்துக்குத் தக்கபடி மாத்தி இருக்கணும். அதைச் செய்ய முடியல, உன்னால. உண்மைமையைச் சொல்லு, இஷ்டம் இல்லாம தான் இந்த கல்யாணத்துக்கு சம்மதிச்சியா நீ? அதான் சான்ஸ் கிடைச்சதும், உடனே நிப்பாட்டிட்டியா?”
“முதல்லயே நான் வேணாம்னு தான் சொன்னேன். அம்மாதான், நான் சொன்னதை மீறி பேசி முடிச்சாங்க.”
“பார்த்தியா அக்கா? உண்மை வந்துடுச்சு, அவனோட வாயில இருந்து. அதான் நம்ம கிட்ட ஒரு வார்த்தை கூட சொல்லாம, நேரா அங்க போயிருக்கான்.”
“ப்ச்ச்.. பேச்சை நிப்பாட்டுங்க. அதான் முடிஞ்சுப் போச்சே? ஃபோன்ல அந்தப் பிள்ளைய வச்சுக்கிட்டு, ரெண்டு பேரும் பஞ்சாயத்து பேசிக்கிட்டு இருக்கீங்க!” என அவர்களின் வாதத்திற்கு முற்றுப்புள்ளி வைத்தார் பாகீரதி.
“இப்ப சந்தோஷமா சித்தி, புது ஆளுங்கக்கிட்ட எனக்கு நல்ல மரியாதை வாங்கிக் கொடுத்துட்டீங்க!” என்றுவிட்டு சரண் எழுந்து செல்ல, “நான் சொல்ல வேண்டியதை இவன் சொல்லீட்டுப் போறான்?” என ஒரு பெருமூச்சை விட்டபடி உரைத்தார் அவர்.
எதிர்புறம் கேட்ட உரையாடலில் மௌனியின் இதழ்களில் புன்னகை மலர, “தப்பா நினைச்சுக்காத ம்மா. நீ இருக்கிறதையே மறந்துட்டு அவங்க பாட்டுக்குப் பேசிட்டாங்க. நான் ஃபோனை வைக்கிறேன்!” என்று பாகீரதி கைப்பேசியை அணைத்தார்.
சில நொடிகளின் இடைவெளியில் ஓய்வறையில் இருந்து வெளியே வந்த ரெங்கநாயகி, “என்ன பாப்பா, ஆஃபிஸ்ல இருந்து ஃபோன் போட்டாங்களா.?”
அவள் மறுமொழி உரைக்காது மெலிதான புன்னகையுடன் அவர் அமர்வதற்கு உதவிட, “லீவ் போட்டாக்கூட, விட மாட்டிறாங்க என்ன.?”
“வொர்க் கால் இல்ல ஆச்சி.”
“அப்புறம், ரொம்ப நேரமா பேசிக்கிட்டு இருந்த மாதிரி கேட்டுச்சு எனக்கு?’
“லாவண்யாக்குப் பார்த்த மாப்பிள்ள வீட்டுல இருந்து கால் பண்ணாங்க.”
குழப்பமும் ஆர்வமுமாய் நோக்கியவர், “உனக்கு எதுக்கு ஃபோன் போட்டாங்க?”
“எதுக்காக இப்படி எக்சைட் ஆகுறீங்கனு எனக்கு நல்லாவே தெரியிது. ஆனா அதுக்கு அவசியம் இல்ல, புரிஞ்சிச்சா.? உங்க நம்பர்னு நினைச்சு, கால் பண்ணீட்டாங்க!” என்றவள் நடந்த பேச்சு வார்த்தையை மொழிந்தாள்.
மூத்தவர் முகம் மலர்ந்து, “அட! அப்ப பாகீரதிக்கும் அந்த எண்ணம் இருக்கா.?”
“ஆச்சி!” எனக் கண்டிப்பான குரலில் அவரின் எதிர்பார்ப்பிற்குத் தடை விதித்தவள், “நான், செட் ஆகாதுனு ஏற்கெனவே சொல்லிட்டேன்.”
அவர் பாவமாய், “ஏன் பாப்பா?”
“என்ன, ஏன்னு கேட்குறீங்க? நான்தான் அப்பவே காரணத்தைச் சொல்லிட்டேனே?”
“ஆமா.. பெரிய பொல்லாத காரணம். நீ ஃபோனைப் போடு பாகீரதிக்கு.”
“ஆச்சி, என்ன பேசுறீங்க?”
“சும்மா இரு, நீ. என்னமோ எல்லாம் தெரிஞ்ச பெரிய மனுஷி மாதிரி, நீயே முடிவெடுக்குற? அப்ப, நான் எதுக்கு இருக்கேன்.?’
“நீங்க, எனக்குக் கம்பெனி கொடுக்க இருக்கீங்க!” என இளையவள் ரெங்கநாயகியின் தாடையைப் பற்றிக் கொஞ்ச, ‘பேச்சை மாத்தி ஐஸ் வச்சு ஏமாத்தலாம்னு பார்க்காத. எனக்கு இப்ப ஃபோன் போட்டுத் தர்றியா இல்லையா நீ? இல்லேனா, நான் நேர்ல அவங்க வீட்டுக்குப் போயி என்ன ஏதுனு பேசிக்கிறேன்.”
“நாலு எட்டு கூட முழுசா தடுமாறாம, ஸ்டிக் இல்லாம தானா நடக்க முடியல. இந்த இலட்சணத்துல நீங்க அவங்க வீட்டுக்குப் போகப் போறீங்களா.?”
“நடக்க முடியலேனா என்ன, வாசல் வரைக்கும் தவழ்ந்து போவேன். ஏதாவது ஆட்டோக்காரனை கூப்பிட்டு விலாசத்தைச் சொன்னா, கொண்டு போயி விட்டுட மாட்டானா என்னை?”
“ஆச்சி!” என அவள் பல்லைக் கடிக்க, ‘என் பாப்பாக்காக என்னால முடிஞ்ச எதுவும் செய்வேன் நானு.”
கனத்த மனதும் லேசாய் கலங்கிய கண்களுமாய் அவரை பார்த்தவள், “ஏன் ஆச்சி இப்படிச் செய்யிறீங்க?”
“பத்து வயசுல இருந்தே தனியா இருக்க. இனியும் எவ்வளவு காலத்துக்கு இப்படி இப்ப? அதை மாத்துறதுக்கு இதுவரைக்கும் என்னால எதுவும் செய்ய முடியலயே? இப்ப வாய்ப்பு கிடைச்சிருக்கு, அதான் செஞ்சிடணும்னு நினைக்கிறேன். பாப்பா, ஆச்சி சொல்லுறதை கேளேன். ஃபோன் போட்டு தாயேன்?”
முதியவர் தன்னிடம் கெஞ்சலாய் வினவுவதைக் காண சகியாமல், பாகீரதியின் எண்ணிற்கு அழைத்து ரெங்கநாயகிடம கொடுத்துவிட்டு நகர்ந்தாள்.
மனம் ஒரு நிலையில் இல்லை.
‘ஏன் இப்படி நடக்கிறது?’ என்ற வினா மட்டுமே அவளுள் எழுந்தது. ஆனால் அதற்கு விடைதான் கிட்டவில்லை.
ஒரு ஆழ்ந்த மூச்சை எடுத்துக் கொண்டாள். தனக்கு இருக்கும் ஒரே உறவான ஆச்சியின் சொல்லைக் கேட்பது என்ற முடிவிற்கு வந்தாள். வாழ்வின் கடைசிக் காலத்தில் இருக்கும் அவரிற்கு, தன்னால் இயன்ற மகிழ்ச்சியைத் தரலாம் என உறுதி எடுத்துக் கொண்டாள்.
கைப்பேசியில் பேச்சு வார்த்தை அரை மணி நேரத்திற்கும் மேல் நீடித்தது. மௌனியைப் பற்றிக் கேட்டுத் தெரிந்து கொண்டனர், பாகீரதியும் அவரின் தங்கையும்.
அவள் சென்னையில் பணி செய்வது மட்டுமே, ஒத்துப் போகாமல் இருந்தது.
“பாப்பா, வேலையை விட மாட்டா. அதுதான் அவளுக்கு இவ்வளவு தைரியத்தையும், திடத்தையும், தன்னம்பிக்கையையும் கொடுத்திருக்கு. அதுனால நீங்க அதைச் செய்யச் சொல்லாதீங்க. ஒருவேளை வேலையை விடணும்னா, இந்த பேச்சை இப்பவே நிறுத்திக்கலாம்!” என உறுதியாக உரைத்து விட்டார் ரெங்கநாயகி.
விபரம் சரணின் செவிகளுக்குச் சென்றது.
“வேண்டாம்னு சொன்னதுக்கு அப்புறமும், ஏன்மா இப்படிச் செய்யிறீங்க? வாழ போறவன் நான், என்னோட விருப்பம் முக்கியம் இல்லையா?” என அவன் ஆற்றாமையுடன் வினவ, “பேசிப் பார்க்கலாம்னு நினைச்சோம். ஆனா, சரிவராதுனு தோணுது!’ என்று மௌனியின் வேலையைப் பற்றியும் அவளின் ஆச்சி உரைத்ததையும் அப்படியே மகனிடம் ஒப்புவித்தார் பாகீரதி.

