
சுதாகரன் பணம் கொடுக்கிறேன் என்றதும் கந்தசாமிக்கு வியப்பு மேலிட்டது. வாங்கி முழுக் கடனையும் அடைத்து விடும் ஆவல் எழுந்தாலும் மகன் என்ன கூறுவானோ என்ற தயக்கம் அவரைப் பேச விடாமல் தடுத்தது.
“அருணு கிட்ட பேசலாம் மாமா ஏன் இத்தனை வெசனப்பட்டு நிக்குதீரு”என்ற சுதாகரன் அருணுக்கு அழைப்பு விடுத்தான்.
“என்ன மாம்ஸே ஃபோனையே காணல.ஊர்லதேன் இருக்கீரா…”என்ற கிண்டலுடன் தான் அருண் பேசவேத் துவங்கினான்.
“நாங்கல்லாம் ஊருக்குள்ளதேன் மச்சான் இருக்கோம் ஒங்களைத்தேன் காணல.ஒரு வேளை அந்த பொட்டிக்குள்ளதேன் வேலை பாக்க பூந்துட்டியோனு நெனைச்சேன் ஆமா எங்க எங்க வீட்டு சிட்டு”என்று அவனை கிண்டல் செய்து விட்டு பிரதன்யாவை கேட்க
“மாமனுக்கு கறிசோறு கிண்டுதா ஒம்ம தங்கச்சி”என்றான் நக்கலாக.
“உண்மைய சொல்லு மச்சான் நீதானே வெள்ளாட்டங்கறிய வெவிச்சுட்டு நிக்குத”என்று சுதாகரன் பதிலுக்கு நக்கல் பேச
“கப்புனு புடிச்சுக்கிட்ட பாரேன்.”என சிரித்தவன் “சொல்லு மாம்ஸே திடுதிப்புனு ஃபோனை போட்டு இருக்கீய என்ன சோலியாம்”என்று கேட்க
“சங்கதி பெருசா இல்லை. மாமேன் என் மருமவனோட வந்தாரு. பேசிக்கிட்டு இருந்தோம். அப்புடியே பேச்சுவாக்குல கொஞ்சம் சில்ர கடன் இருக்குதாமே அதைப் பத்தியும் சொன்னாரு”என்றவன் சற்று தயங்கி “எடத்த வித்தா வர்ற காசு போவ மிச்சத்தை நான் தரவானு கேட்டேன் மச்சான். அவரு ஒனக்கு பயந்துகிட்டு வேணாம்ங்கிறாரு”என்றான்.
“பொதையல் கண்டா வச்சிருக்கியா எனக்கு தாரேன்னு நிக்குத”என்றதும் “நீ வேற மச்சான். சரி சொல்லு பணத்தை குடுத்து விடவா. என்னத்துக்கு தெண்டத்துக்கு வட்டி கட்டணும். நான் சும்மா எல்லாம் தரலை மச்சான். உன்னால முடிஞ்சப்ப திருப்பி குடுத்துடு நா வாங்கிக்கிடுதேன்”என்றான் சுதாகரன்.
கந்தசாமிக்கு மகன் என்ன சொல்வானோ என்ற பதற்றம்.
“அதெல்லாம் வேணாம் மாம்ஸு. இன்னும் ரெண்டு வருஷம் அடைச்சுடுவேன். உன் தங்கச்சியை ராணி மாதிரி பாத்துக்குவேன்” என்றான் அருண்.
“ப்ப்ச் அது எனக்கு தெரியாதா… அதுக்காவ நான் சொல்லல மாப்பு. வட்டியயே எத்தினி வருஷத்துக்கு கெட்டுவ. நீ தடங்கல் சொல்லாத நான் மாமனோட வந்து பணத்தை தந்துட்டு வாரேன்”என்று அருண் கத்த கத்த.,இணைப்பைத் துண்டித்து விட்டான் சுதாகரன்.
மீண்டும் அழைத்தவனிடம் வெங்கடாசலம் பேசி சம்மதிக்க வைத்தார். நீண்ட விவாதத்திற்குப் பிறகு ஒரு ரூபாய் வட்டியில் வாங்கிக் கொள்ள சம்மதித்தான் அருண்.
“ஆனாலும் ஒம்மவனுக்கு புடிவாத கொணம் ஜாஸ்திய்யா”என்ற வெங்கடாசலத்திற்கு அருணின் செயலில் மெச்சுதல் தான்.
பணம் ஒரு மோசமான வரம். அது மனிதர்களை நட்பு கொண்டாட விடவும் செய்யும். பகையை ஏற்படுத்தவும் செய்யும் அதனைக் கையாளும் விதத்தில் தான் மனிதர்கள் நல்லவர்களாகவும் கெட்டவர்களாகவும் சூழ்நிலை கைதிகளாகவும் சித்தரிக்கப்படுகின்றனர். பணம் பத்தும் செய்யும் அல்லவா. நண்பனை பகைவன் ஆக்கும் பகைவரை நண்பன் ஆக்கும்.
பிரதன்யாவிடம் சுதாகரன் பேசியதை அருண் சொல்லி இருக்க அவளோ “நான் முன்னாடியே கேட்டு இருப்பேன் நீங்க சங்கடப்படுவீங்கனு தான் கேட்கலை”என்றாள்.
“ஹ்ம்ம் சங்கடம் னா அது வந்து எக்ஸ்பிரஸ் பண்றதுன்னு தெரியலை தனு. பட் நிச்சயம் மறுத்து இருப்பேன்”என்றான்.
“அதான் தெரியுமே ஆமா மகி என்ன செய்யறானாம் எப்ப வர்றாங்களாம்”என்று கேட்க
“இன்னும் ஒரு வாரம் ஆகும் போல”என்றவனிடம் “அதுவரைக்கும் நாம மட்டும் தானா போர் அடிக்குமே”என்றாள் சலிப்பாக.
“போரா… ஒரு நியூலி மேரிட் பொண்ணு பேசற பேச்சா இது அப்புறம் ஐத்தான் எதுக்கு இருக்கேனாம் போரை திருப்பி அடிச்சுட மாட்டேன்.அருண் பிரசாத் கெத்து என்னாகறது”என்று சிரிக்க
“அதுவும் சரிதான் அறுவை பிரசாத் நீங்க இருக்கும் போது எனக்கு ஏன் போர் அடிக்கப் போகுது”என்றாள் கண்களில் குறும்பு மின்ன.
“அடிங்க கொழுப்பு டி பிரதர் உனக்கு”என்றவன் அவளை துரத்த இருவரும் சிரிப்பும் கேலியுமாக நாட்களை நகர்த்த துவங்கி இருந்தனர்.
************
“ம்மா மருமகள் தான் வந்துட்டாளேன்னு என்னை தண்ணி தெளிச்சு விட்டீங்கள்ள நீங்க ரெண்டு பேரும் என்னை விட்டு ஜாலியா இருக்கீங்களா” என்று வம்பு செய்த யுகாதித்தனை நினைத்து சாரதாவிற்கு அத்தனை சிரிப்பு.
“பொறாமைல பொங்காதடா மகனே. அப்புறம் பெங்களூர் பொங்களூர் ஆகிடப் போகுது.”என்று உரக்கச் சிரித்தவர் “நாளைக்கு காலையில உன் வொஃய்பு அங்கே இருப்பா போதுமா ராஜா”என்றார்.
“பார்றா உங்க மருமகளுக்கு இங்கே வர மனசு வந்திடுச்சா”என்றான் கிண்டல் தொனியில்.
அன்று அவனுக்கு வைத்த செல்லப் பெயரை கண்டு பிடிக்கும்படி கூறிவிட்டு அலுவலகம் சென்றவள் மாலை வரும் வேளையில் சாரதாவிற்கு உடல் நலம் இல்லை என்று கிருஷ்ணன் கூறவும் அன்று மாலையே சென்னை கிளம்பி இருந்தனர். இரண்டு நாட்கள் இருந்த யுகா வேலைப்பளு காரணமாக மீண்டும் பெங்களூர் திரும்பி இருக்க தேஜாவோ சாரதாவிற்கு சரியான பிறகு வருவதாக கூறி விட்டாள்.
கிட்டத்தட்ட இரண்டு வாரங்களுக்கு மேல் ஆகிவிட்டது சாரதா உடல் நலம் தேறி இருந்தும் தேஜா இருந்து விட்டு வருகிறேன் என்றதில் அவனுக்கு சிறு வருத்தம். அதனால் தான் இப்போது அவரிடம் அப்படி பேசினான். தேஜாவினை போகச் சொல்லவும் அவரால் முடியவில்லை. உடல் நலம் தேறி விட்டாலும் முன்பு போல எழுந்து வேலை செய்ய முடியாமல் தடுமாற கிருஷ்ணனுக்கு காலையிலேயே உணவு தயாரித்து தர முடியாமல் தடுமாற தேஜா தான் இருப்பதாக கூறி விட்டாள். அப்போதிலிருந்து தேஜாவின் சமையல் தான் அங்கே. இடையில் சுந்தரி, பிரதன்யா என்று இரண்டொரு முறை வந்து போயினர். மகன் தனியாக சமாளிக்க வேண்டுமே என்ற கவலை இருந்தாலும் அவரது சூழல் தேஜாவை அனுப்பி வைக்க முடியவில்லை. அது யுகாதித்தனுக்கும் புரிந்தது தான். ஆனாலும் சாரதாவை வம்பிழுப்பதில் அத்தனை மகிழ்ச்சி அவனுக்கு.
“அவர் என் கிட்ட இருந்து பார்க்க சொல்லிட்டு உங்களை வம்பு பண்றாரு அத்தை”என்று தேஜா புன்னகைத்தாள்.
“ஹ்ம்ம் எனக்கும் தெரியும் மா.”என்றவர் “மாமாக்கு சர்வீஸ் முடிஞ்சதும் நாங்களும் அங்கே வந்திடறோம் மா. இன்னும் ஒரு வருஷம் தான் அப்புறம் உங்க பிள்ளைகளை வளர்த்துட்டு ஜாலியா இருந்துப்போம் நாங்க”என பேச்சுவாக்கில் தன் எதிர்பார்ப்பையும் கூறினார் சாரதா.
தேஜாவிற்கு உள்ளூர நகைப்பு தான் தோன்றியது. எப்படி எல்லாம் தன் ஆசையை கூறுகிறார் என்ற எண்ணம். அவர் ஆசை கொண்டால் போதுமா. மகனின் மனநிலை மாற அவகாசம் தர வேண்டாமா… யுகனின் மனம் முன்பை விட இப்போது சற்று இலகுவாக இருக்கிறது தான். ஆனால் அது இருவரும் இணைந்து வாழும் அளவிற்கு இருக்கிறதா என்பது தான் கேள்வியே.
எது எப்படியோ இரண்டு வார பிரிவிற்கு பிறகு சந்திக்கப் போகிறாள் அவன் என்ன மனநிலையில் தன்னை எதிர்கொள்வான் என்பது தான் அவளின் மனதிற்குள் ஓடிக் கொண்டிருந்தது.
“நார்மலா வெல்கம் பண்ணுவார். மிஞ்சி மிஞ்சி போனா ஃபோன் ல சொன்ன மாதிரி என் சமையலை மிஸ் பண்ணேன்னுவாரு. தனியா இருக்க போர் அடிச்சதுனு சொல்வார் வேறென்ன சொல்லப் போறாரு”என்று முணுமுணுத்துக் கொண்டே தன் துணிகளை எடுத்து பெட்டியில் அடுக்கினாள்.
அவனுக்கு வாங்கிய சில உடைகளையும் எடுத்து அடுக்கியவள் பிரதன்யாவும் அவளும் ஷாப்பிங் சென்றதில் வாங்கிய வாசனை திரவியம், வயர்லெஸ் ஹெட்போன் ஒன்று, ஒரு ஜோடி ஷூ என எல்லாம் எடுத்து வைத்தாள்.
வரும் போது தன் மகிழுந்தை எடுத்து வருகிறேன் அதில் போகலாம் எனக் கூறியிருந்தான். முதல் முறையாக அவனோடு காரில் பயணிக்கப் போகிறாள் அதுவும் தனியாக அந்த எதிர்பார்ப்பே இன்னும் மனதை உற்சாகத்துடன் வைத்திருந்தது அவளை.
சற்று நேரத்தில் அவனுக்கு கைபேசியில் அழைக்க அவனோ “வேலை இருக்கு அஸ்வி காலையில் கூப்பிடுறேன்”என்று இணைப்பைத் துண்டித்து விட்டான். இவளுக்குத் தான் உறக்கம் பறிபோனது.
“ரெண்டு நிமிஷம் பேசினா என்னவாம் இவருக்கு. ரொம்ப தான் கடமை கண்ணுச்சாமியா இருக்காரு”என்று சலித்துக் கொண்டாள்
இரவை நெட்டித் தள்ளுவதே பெரும்பாடாகி இருக்க அவனின் அறையில் அவனது பொருட்களை ஆராயத் துவங்கி இருந்தாள்.
அலமாரியின் ஒரு மூலையில் பாக்கெட் சைஸில் ஒரு டைரி கிடக்க அதனை எக்கி எடுத்தாள். ஒரு கவரில் பத்திரமாக வைக்கப்பட்டிருந்தது அந்த டைரி. சாவதானமாக அதைப் பிரித்தவள் அந்த டைரியை வெளியே எடுத்தாள்.
அட்டையைப் பிரித்து முதல் தாளைப் பார்க்கும் போதே விழிகள் வியப்பைக் காட்டியது அவளுக்கு.
கவிதைப்பெண்ணின் லயங்கள் என்று முதல் பக்கம் எழுதியிருக்க அடுத்த பக்கத்தை ஆவலுடன் பிரித்தாள்.
நான் எழுதிய முதல் கவிதை அவனுக்கு சொந்தமானது. யுகனின் கவி நான். லயம் தாளத்தின் காலப் பிரமாணத்தை நிர்ணயிக்கும் அம்சம். யுகனின் ஒவ்வொரு நொடியும் என் பிரமாணத்தில் நிர்ணயிக்கப்படுகிறது.
புத்தகப்புழுவின் காதலன் புத்தக வாசனை அறியாதவனாம் அதெப்படி இருக்கலாம். என்னோடு சேர்ந்து புத்தகத்தில் ஊறி வா என்று இழுத்து விட்டேன். இனி அந்த சுகந்தம் அவனையும் நிறைக்கும்
நான் இல்லை என்றால் வாழ மாட்டானாம். என் பித்து பிடித்தவன். நானா அவன் வாழ்க்கை. அவன் வாழ்வில் ஒரு பகுதி நான் அவ்வளவு தான். அது புரியாமல் பிதற்றும் என் தலைவன்.
இன்று என்னை அடித்து விட்டான் என்னவன். பெருமை பொங்கியது எனக்கு. அடித்ததற்கு மகிழ்ச்சியா… ஆமாம் மகிழ்ச்சி தான். பின்னே நான் இல்லாத வெற்றிடத்திலும் நீ வாழ வேண்டும் என்றேனே அடிக்காமல் என்ன செய்வான். நீ எனக்குள் இருக்கும் போது இல்லாமை எங்கிருந்து வரும் என்று மறு கேள்வி கேட்டவனை எவ்வாறு தள்ளி நிற்க.
இப்படி ஒவ்வொரு பக்கங்களும் கவிலயாவின் எழுத்துக்கள் யுகனைப் பற்றியே எழுதப்பட்டிருக்க மலைத்து நின்றாள் தேஜா.
‘இப்படி எல்லாமா காதலித்து தொலைப்பாள் ஒருத்தி. பிறகெப்படி அவன் வேறொரு பெண்ணை நாடுவான். அதற்கும் எழுதி வைத்திருக்கிறாளே… என் சொற்கள் உனக்குள் செய்யும் மாயாஜாலம் அதை யாராலும் தந்து விட முடியாது. நான் இல்லாத நிலையை நீ என்றும் உணர்ந்து விடாதே யுகா.’
கடைசி பக்கங்கள் சிலது வெறுமையாக கிடக்க டைரியின் இறுதி பக்கத்தில் எழுதப்பட்ட வாசகம்.
உனக்காக சில பக்கங்கள் வெறுமையாக விட்டு வைத்தேன். ஏதேனும் இட்டு நிரப்பிக் கொள். ஏனெனில் நம் பிரிவும் விதியில் நிச்சயம் எழுதப்பட்டிருக்கும். அது மரணமா இல்லை மறதியா அதை விதியே நிரப்பட்டும். என் இடத்தில் வேறு நபர் வருவாரா என்ன. யுகனின் விதியில் இணைக்கப்படுமா இந்த கவியும் லயமும் கேள்விக்குறியோடு முடிந்திருந்தது அந்த இறுதி பக்கம்.
விடிய விடிய அந்த டைரியை புரட்டி படித்து உறக்கமின்றி அழுது தீர்த்தவள் யுகாவை சந்திக்கும் நிமிடத்தை எதிர்பார்த்திருந்தாள்.
இருப்பு தராத உணர்வை இந்த பிரிவு தந்திருக்குமா…
…… தொடரும்
இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
3
+1
4
+1
+1

