
தேடல் 15:
காற்றில் எந்தன் கீதம்…
காணாத ஒன்றை தேடுதே..
அலை போல நினைவாக
சில்லென்று வீசும் மாலை நேரக் காற்றில் எந்தன் கீதம்….
காணாத ஒன்றை தேடுதே..
எங்கெங்கும் இன்பம் அது கோலம் போட…
என்னுள்ள வீணை ஒரு ராகம் பாட…
அன்புள்ள நெஞ்சை காணாதோ…
ஆனந்த ராகம் பாடாதோ…
கண்கள்…. ஏங்கும் …
நெஞ்சை தாபம் மேலும் ஏற்றும் ….
காற்றில் எந்தன்…..
நில்லென்று சொன்னால் மனம் நின்றால் போதும்…
நீங்காத நெஞ்சில் அலை ஓய்ந்தால் போதும்…
மௌனத்தின் ராகம் கேளாதோ…
மௌனத்தின் தாளம் போடாதோ…
வாழும்… காலம் …..
யாவும் எங்கே நெஞ்சம் தேடும் …..
காற்றில் எந்தன்…
இருள் சூழ்ந்த அந்த இடத்தின் அமானுஷ்ய ஏகாந்தத்தை இனிமையாக்கிக் கொண்டிருந்தது இந்த பாடல். மெல்ல இருள் விலக, மின்சார விளக்கு சில முறை கண்சிமிட்டி பளிரென ஒளிர்ந்தது. சட்டென்று பரவிய வெளிச்சத்திலும் கூட துளியும் சலனமின்றி அயர்ந்து உறங்கிக் கொண்டிருந்தாள் அவள். காலின் கட்டைவிரல் முதல் தலை வரை இழுத்து போர்த்தி இருந்தால் எப்படி சலனமிருக்கும்.
இப்போது மின்விசிறியை அணைக்க, அப்போதும் கூட சிறிதும் சலனமில்லை அவளிடம். உச்சபட்ச எரிச்சலில் அந்த பாடலை அணைக்க, படக்கென வழியும் வேர்வை துடைத்தெரிந்தபடி எழுந்தமர்ந்தாள் மிளிர்.
“ஏய் அறிவில்ல உனக்கு… இப்படி நடுராத்திரில டிஸ்டர்ப் பண்ணற… எவ்வளவு அழகான கனவு தெரியுமா..? ச்ச்சே… உன்னால களைஞ்சு போச்சு…”
“அடிச்சேன்… மூஞ்சு மோகரையெல்லாம் பேத்துட்டு போய்டும்… மணி இப்போ என்ன தெரியுமா..? பதினொன்னு…” என்றபடியே இடுப்பில் கை வைத்தபடி மிளிரை முறைத்தாள் மற்றவள்.
“இருக்கட்டுமே… அதுவும் ராத்திரி தானே…” என்றபடியே மீண்டும் உறங்க முயன்றாள் மிளிர்.
அவள் முதுகில் இரண்டு வைத்தவள், “அடியே… இராத்திரி பதினொன்னு இல்ல… இப்போ காலையில பதினொன்னு… சீக்கரம் எழுந்திரி… லேட்டாகுது எனக்கு…” என்றபடியே ஜன்னல்களின் திரைசீலைகளை அகற்றினாள் அவள்.
“ஆமான் அப்படியே… மேடம் போய் தான் சேனல தூக்கி நிறுத்தற மாதிரி… எப்படி இருந்தாலும்… குத்த வச்ச குரங்காட்டாம் ஒரு ஓராம உக்காந்து வேடிக்கை தானே பாக்க போறே… அதுக்கு கொஞ்சம் லேட்டா தான் போனா என்ன..?” என எழுந்து சோம்பல் முறித்தபடியே பின்னோடு அவளைக் கட்டிக் கொண்டு, அவள் தோளிலேயே சாய்ந்து உறங்க முயன்றாள் மிளிர்.
“மிமி… விளையாடாத… எனக்கு லேட் ஆகுது… இன்னைக்கு முக்கியமான ஒருத்தர இன்டர்வியூ பண்ணனும்…” என்றபடியே அவளை தன்னிடமிருந்து விலக்க முயன்றாள் அவள்.
“பச்… மகிம்மா… எவ்வளவு நல்ல கனவு தெரியுமா..? இன்னும் ஐஞ்சு நிமிஷம் நீ லேட்டா வந்து இருந்த என் லவ்வ சொல்லி இருப்பேன்…” என்றபடியே அவள் சொல்லியதை காதில் வாங்காது அவள் தோள் வளைவிலேயே இன்னும் வாகாய் புதைந்துக் கொண்டாள் மிளிர்.
“பகல் கனவு பலிக்காது மேடம்… நீயும் இரண்டு வருஷமா கனவுல தான் காதல சொல்லிட்டு இருக்க… ஆனா உன் ஆள்கிட்ட சொல்லற மாதிரி தெரியலையே…” என்றவள் அவளை தன்னிடமிருந்து தள்ளி நிறுத்தினாள் மகி.
“பச்… நான் என்ன சொல்லவா மாட்டேனு சொல்லறேன்…” என பெருமூச்சை வெளியிட்டு அவள் சொல்ல,
“ஶ்ரீக்கு மட்டும் தெரியனும்… உன் தோல உரிச்சு உப்பு தடவ போறா… படுத்தாதடி என்ன… எனக்கு லேட் ஆகுது… பன்னென்டு மணிக்கு அப்பாய்ண்ட்மெண்ட்… இப்போ கிளம்புனாலே லேட் ஆகிடும்…” என்றபடியே தனது கைப்பையில் வேகவேகமாக தனக்கு தேவையான பொருட்களை எடுத்து வைத்துக் கொண்டிருந்தாள் மகிழினி.
“அப்படி பெருசா யார மேடம் இன்டர்வியூ பண்ண போறீங்க… ஏதாவது வார்ட் கவுன்சிலர்… அப்படி இல்லனா டூப்பு போடறவருக்கு மேக்கப் போடறவரு… அப்படியும் இல்லனா பின்னால கோரஸ் பாடறவங்களுக்கு கூல்ட்ரிங் கொடுக்கறவரு…” என நக்கலாக கூறிக்கொண்டே மிளிர் மகிழினியே பார்க்க, தனது வேலையை விட்டுவிட்டு அவளை முறைக்க ஆரம்பித்திருந்தாள் மகி.
“அம்மா தாயே… அந்த முட்ட கண்ண உருட்டி உருட்டி முழிக்காத… மோகினி பிசாசு பீல் வருது எனக்கு…” என மிளிர் சொல்ல இப்போது மகியின் முறைப்பு அதிகமானது.
“இன்ட்ர்வியூ வரும் போது தெரியும் அவர் எவ்வளவு பெரிய செலப்ரடினு… அப்போ தெரியும் நான் எவ்வளவு பெரிய ஆளுனு… அப்புறம் செய்யற எந்த வேலையும் மட்டம் இல்ல…” என்றபடியே தோள் பையை மட்டியபடியே கிளம்பி விட்டாள் மகிழினி.
“மட்டம்னு யார் சொன்னா… பெரிய பெரிய ஆள இன்டர்வியூ பண்ணா தானே என் செல்லமும் பெரிய ஆளாக முடியுமுனு சொன்னேன்…” என்று செல்லம் கொஞ்சியபடியே பின்னோடு சென்றவளை வாயிலியே நிறுத்தினாள் மகிழினி.
“நைட் ட்ரெஸோட எங்க பின்னாலேயே வர… போய் பிரஸ் ஆகிட்டு சாப்பிட்டு மொதல… டேபிள சாப்பாடு வச்சுருக்கேன்… அப்புறம் மூணு மணிக்கு டிக்கெட் போட்டு இருக்கேன்… ஊருக்கு போக… எல்லாத்தையும் பேக் பண்ணிட்டு ரெடியா இரு… நான் இந்த இன்டர்வியூ முடிச்சுட்டு அவரையும் பாத்துட்டு… வந்தடறேன்… சாப்பிட்டு கிளம்பிடலாம்… சரியா…”
“எந்த அவர மேடம் பாக்க போறீங்க… ஹான்…”
“ம்ம்ம்… என்னவர்… எனக்கு புருஷனா பதிறேற்க போறவர பாக்க போறேன்… போதுமா…”
“தினம் தினம் பாக்கற தானே… ஒரு நாள் பாக்கலைனா என்ன குறைஞ்சா போய்டுவ…”
“அடியே அந்த இண்டர்வியூ ரிப்போர்டையே அவர்கிட்ட தான் சமிட் பண்ணனும்… அத சமிட் பண்ணிட்டு ஓடி வந்துடுவேன் நான்…”
“நீயி… ரிப்போட்ட குடுத்துட்டு ஓடி வந்துடுவா… நம்பிட்டேன் நானும்… நாம கல்யாணம் வரைக்கும் வந்துட்டோமே… நம்ம கூட இருக்கவ கனவுலையே காதல வளக்குறாளே… ஏதாவது ஹெல்ப் பண்ணுவோனு நினைக்கறீயா நீ…”
“அத ஏன் எங்கிட்ட சொல்லற… ஶ்ரீ கிட்ட கேளு… அவ பண்ணுவா ஹல்பு… ஏன்னா அவ மாமாவுக்கு தான நீ ரூட் விடற…”
“ம்ம்ம்… நீ நிஜத்துல கடலை வறு… நான் கனவுல போய் கடலை வறுக்கறேன்…”
“திரும்ப போய் படுத்தனு தெரிஞ்சுது… செறுப்பு பிஞ்சுடும்… ஶ்ரீய பாத்துக்க சொல்லிட்டு தான் போறேன்…”
“எது அந்த நாயையா… அதுவே குப்பற படுத்து தூங்குது… என்ன எங்க பாக்க போகுது…”
“விளையாடாத மிமி… இரண்டு பேரோட திங்ஸையும் நீ தான் பேக் பண்ணனும்… ஒழுங்கா வேலைய பாத்திட்டு கிளம்பி இரு… சரியா… நான் வரேன்…” என்றபடியே அவள் சென்றுவிட, மீண்டும் கட்டில் வந்து சரிந்தவள் விட்ட இடத்திலிருந்து கனவை தொடர முயன்றாள்.
மிளிரும் மகியும் இத்தோடு சென்னை வந்து ஆறு வருடங்கள் ஆகிறது. மகி இங்குள்ள ஊடகவியல் கல்லூரி ஒன்றில் சேர்ந்துவிட, மிளிரும் அடம்பிடித்து இங்குள்ள பொறியியல் கல்லூரியில் சேர்ந்துக் கொண்டாள். இருவரும் ஒன்றையாய் இருக்க வேண்டும் என்பதற்காகவே தனியாய் ஒரு வீடு எடுத்து தங்க, ஆரம்பத்தில் இருவரின் பெற்றோரும் மாறி மாறி துணைக்கு இருந்தனர். கொஞ்ச நாளில், மிளிருடன் பயிலும் இருவரும் மகியுடன் பயிலும் ஒரு பெண்ணும் அந்த அறையை பகிர்ந்துக் கொண்டனர். படிப்பு முடிந்து மகிக்கு சென்னையிலேயே பிரபலமான செய்தி சேனல் ஒன்றில் ரிப்போர்டராக வேலை கிடைத்துவிட, மிளிருக்கும் வாளக நேர்காணலில் மென்பொருள் நிறுவனம் ஒன்றில் வேலை கிடைத்துவிட்டது. அவளின் கல்லூரி தோழிகளுக்கும் அங்கையே வேலை கிடைந்திருந்தது. அதன் பிறகு அந்த நால்வர் மட்டும் அந்த அறையை பகிர்ந்துக் கொண்டனர்.
மிளிர் மீண்டும் கனவில் கால் பதித்த நேரம் முதுகில் சொத்தென்று ஒரு அடி விழ, முதுகை தேய்த்த படியே எழுந்து அமர்ந்தவள், எதிரில் இருந்தவளை பாவமாய் பார்க்க,
“ஏய்… சீக்கரம் சாப்பிடுவியாம்… உனக்கு புடிச்ச பூரி கிழங்கு பண்ணி வச்சுருக்காளாம்… மகி போன் பண்ணா…” என்றபடியே தனக்கு ஒரு தட்டில் பூரிகளை எடுத்து வைத்துக் கொண்டு ஶ்ரீ சாப்பிட அமர்ந்துவிட்டாள்
“சாப்பாட்டு ராமி… இருடீ நானும் வரேன்…” என்றபடியே அவள் தனக்கு கொடுத்ததை அவளிடமே திரும்ப கொடுத்துவிட்டு, குளியலறைக்குள் புகுந்து கொண்டாள் மிளிர்.
அடுத்த சில நிமிடங்களில் தன்னை தூய்மை படுத்திக்கொண்டு வெளியே வந்தவள், “ஆமான் கவி எங்க..?” என்றபடியே அவளுக்கு அருகில் இன்னொரு நாற்காலியை எடுத்துப் போட்டு அமர்ந்தாள். ஶ்ரீயும் கவியும் தான் மிளிருடனே பயின்று இப்போது ஒரே நிறுவனத்தில் பணியிலும் இருப்பவர்கள். அதற்குள் இரண்டு பூரியை உள்ளே தள்ளி இருந்தாள் ஶ்ரீ.
“அவளுக்கு மார்னிங் டூயூட்டி…” என்றபடியே அவள் அடுத்த பூரியே உள்ளே தள்ள,
“அதான் வரேனு சொன்னேன் இல்ல… அதுக்குள்ள என்ன அவசரம் உனக்கு…” என்றபடியே தானுக்கும் எடுத்து வைத்துக் கொண்டு அவள் அருகில் அமர்ந்தாள் மிளிர்.
“சூப்பர் இல்ல… செம டேஸ்டா இருக்கு… மகிக்கு அப்படியே எங்க அம்மா கைப்பக்குவம்…” என்றபடியே மிளிர் ரசித்து உண்ண,
“ரொம்ப பண்ணாதடி… என்னைக்காவது ஒரு நாள் நான் சமைக்கும் போது நீ இப்படி சொல்லி இருக்கீயா..?” என்றாள் ஶ்ரீ போலி கோபம் போல்.
“எல்லார் சமைக்கறதும் என் மகிம்மா சமைக்கற மாதிரி ஆகிடுமா… அவ எனக்காகவே சமைக்க கத்துகிட்டவப்பா…” என்ற மிளிரின் குரலில் மிதமிஞ்சிய பெருமிதம் இருந்தது.
ஆரம்ப காலத்தில் மிளிருக்கு ஹேட்டல் சாப்பாடு ஒத்துக் கொள்ளவில்லை என ஒரு வாரம் கல்லூரியில் விடுப்பு எடுத்துக் கொண்டு வசுவிடம் சமையல் கற்றுக் கொண்டாள் மகி. ஆரம்பத்தில் சமையல் மொத்தமும் மகியுடையதே. மற்ற வேலைகளை நால்வரும் பகிர்ந்துக் கொள்ள, இப்போது மற்றவர்களும் ஓரளவு சமையலுக்கு பழகி இருக்க அடுப்பை எப்படி பற்ற வைப்பது என்றுகூட தெரியாமல் இருப்பது மிளிர் மட்டுமே. “மகி இருக்க பயமேன்…” என தான் ஓடிக் கொண்டிருக்கிறது மிளிரின் காலம். மிளிரே சமைக்கிறேன் என்றாலும் மகி விடமாட்டாள். காயம் பட்டுவிடுமாம்.
“ரொம்ப தான்…” என இப்போது ஶ்ரீ சிலிர்த்துக் கொள்ள, “நீயும் நல்லாதான் சமைக்கற செல்லம்… போதுமா…” என்றபடியே ஶ்ரீயின் கன்னத்தில் மிளிர் முத்தமொன்றை பதிக்க, “ஏய்… சாப்பாடெல்லாம் ஒட்டுது பாரு எரும…” என்றபடியே கன்னத்தை துடைத்துக் கொண்டவளின் முகத்தில் புன்னகை அரும்பி இருந்தது.
“ம்ம்ம்… ஐய்யோ பாவமேனு எல்லாம் யாரும் என் சாப்பாட்ட புகழ வேண்டாம்… என்ன இருந்தாலும் மகி புகழ் பாடலைனா உனக்கு பொழுது விடியுமா..?”
“அதான் விடியாதுனு தெரியுதுல அப்புறம் என்ன..?” என தோளைக் குலுக்கியபடியே, சாப்பாட்டை தொடர்ந்தாள் மிளிர்.
“எல்லாம் சரிதான்… இன்னும் ஒரு வாரத்துல அவளுக்கு கல்யாணம் ஆகிடுமே அப்புறம் என்ன பண்ணுவ…”
“என்ன பண்ணுவேன்… அவ வீட்டோட போய் டேரா போட்டுடுவேன்… மகியும் சீலனும் தனியா தான இருக்காங்க…”
“எப்படி… சிவ பூஜையில கரடி மாதிரியா…” என்றவள் வாய்விட்டு சிரிக்க,
“இல்லைனா உன் மாமாவ கட்டிட்டு நானும் செட்டில் ஆகிடுவேன்… எனக்கென்ன ஆளா இல்ல…” என மிளிர் கண்சிமிட்டி சிரிக்க,
“எதே…” என நெஞ்சில் கை வைத்திருந்தாள் ஶ்ரீ.
“ச்சீசீ… பே… எதுல விளையாடனு இல்ல… வந்துட்டா என் மாமான கல்யாணம் பண்ணிக்க… போடி அங்குட்டு… மை மாம்ஸ் ஒன்லி பார் மீ…” என ஶ்ரீ உரிமை குரல் கொடுக்க,
“அடியே ரொம்ப பண்ணாத நீ… அந்த ஆந்த கண்ணன ரூட் விடறது எனக்கு தெரியாதா… ஒழுங்கா உன் மாம்ஸையும் என்னையும் சேத்து வை… இல்ல உன் லவ்வுக்கு பெரிய ஆட்டோபாம் போட்டு பிரிச்சுட்டுவேன் பாத்துக்க…”
“அடியே எதுக்குடி ஏன் லவ்வுக்கு வேட்டு வைக்கற… இப்போதான் அவனே பயத்த பாக்கேட்டுல ஒழிச்சு வச்சுட்டு கொஞ்சமா நிமிந்து பாத்து சிரிக்கறான்… அது பொறுக்கலையா உனக்கு…”
“நான் என்ன உன்ன லவ் பண்ணாதனா சொல்லறேன்… எனக்கு செட் பண்ணி குடுத்துட்டு உனக்கு செட் பண்ணிக்கனு சொல்லறேன்… அவ்வளவு தான…”
“நாசமா போச்சு… அவன் தான்டி எனக்கு மாமன்… நீ என்னடானா என்ன உனக்கு மாமா வேலை பாக்க சொல்லற…”
“சரிவிடு… உங்க மாம்ஸ் என்ன பண்ணறாரு…”
“ம்ம்ம்… ஊருல எரும மாடு மேய்க்கறான்…”
“அப்போ சரியான வருமானமுனு சொல்லு…”
“கடுப்பேத்தமா அங்குட்டு போய்டு சொல்லிட்டேன்…”
“சரி விடு… இன்னைக்கு உங்க மாம்ஸ் உனக்கு கால் பண்ணலையா…”
“ஏன்டி… உனக்கு கொஞ்சம் கூட மண்டையில மாசாலா இல்லையா… அவனெல்லாம் ஒரு ஆளுனு லவ் பண்ணறேனு சொல்லிட்டு திரியற…”
“உனக்கு பொறாமை… எங்க நாங்க எருமை பண்ண வச்சு அண்ணமலையில வர மாதிரி பெரிய பணக்காரங்களா ஆகிடுவோமுனு…”
“எட்டிட்டு மிதிச்சேன்… குறுக்கெலும்பு உடைஞ்சுடும்… அதெப்படிடி பாக்கம பழகாம ஒருத்தன் மேல லவ் வரும்…”
“ஏன் பாக்கமா… நீ வச்சுருக்க போட்டல தான் நான் பாத்து இருக்கேனே… சில பல தடவைகள் உனக்கு போன் வரும் போது நான் பேசிக் கூட இருக்கேன்…”
“நாசமா போச்சு… நீ எல்லாத்தையும் விளையாட்டா எடுத்துக்கற மிமி… எங்க பேமிலிக்கு லவ்வெல்லாம் செட் ஆகாது…”
“அப்ப நீ மட்டும் பண்ணற… அப்படினா கடைசியா ஆந்த கண்ணன கழட்டி விட்டுடுவியா…”
“அடியே உன்ன கொல்ல போறேன் பாரு… இதுக்கே நான் தலையால தண்ணீ குடிக்கனும்… இதுல உன் லவ்வு வேறையா… எங்க மாமா ரொம்ப ஸ்ரிட்ம்மா… இதுக்கெல்லாம் கொஞ்சம் கூட ஒத்துக்க மாட்டாரு…”
“நீ எனக்கு இன்ட்ரோ மட்டும் குடு பேபி… மத்ததெல்லாம் நான் பாத்துக்கறேன்…”
“எது எனக்கு பாடா கட்டறதையா… போடி இவளே… வந்துட்டா அங்கேயிருந்து… வேற வேலை எதுவும் இல்லம… என் பிபிய ஏத்த…” என நொந்தபடியே ஶ்ரீ சென்றுவிட, மிளிரின் இதழ்கள் தானாய் புன்னகையில் மலர்ந்தது.
எல்லாவற்றிலும் மிளிரின் விளையாட்டு குணமறிந்த ஶ்ரீக்கு இதுவும் விளையாட்டாகவே தோன்றியது. ஆனால், அப்படி இல்லை என்பதே உண்மை. இதுவரை மிளிர் அவனை நேரில் பார்த்ததில்லை தான். புகைபடத்தில் பார்த்திருக்கிறாள். அந்த அவனும் மிளிரை பார்த்ததில்லை. அடிக்கடி ஶ்ரீக்கு போன் செய்வான். அப்படி சிலமுறை அவனுடன் பேசியதுதான். அந்த குரலில் இருந்த ஒரு ஈர்ப்பா குறும்புதனமா குழந்தைதனமா அளவுகடந்த அக்கறையா அன்பா? அல்லது எல்லாமுமேவா? இன்னதென்று வரையறுக்க முடியாத ஏதோ ஒன்று மிளிரை அவன் பக்கம் சாய்த்திருந்தது. நாளாக நாளாக அந்த எண்ணம் வளர்ந்ததே தவிர, குறைவதாய் இல்லை. மிளிரின் கற்பனை காதலனுக்கு நிஜ உருவாய் அவனிருந்தான் என்பதே உண்மை. தன் கணவன் எப்படி இருக்க வேண்டும் என்ற அவளின் எதிர்பார்ப்புகளுக்கு எல்லாம் அவன் கண கச்சிதமாய் பொருந்தினான். அதுவே அவனின் மீதான மிளிரின் பிடிப்பை இன்னும் அதிகமாக்கி இருந்தது.
பேசியபடியே மிளிரும் ஶ்ரீயும் எடுத்து செல்ல வேண்டியதை பேக் செய்ய தொடங்கி இருந்தனர். அந்த வேலையை முடித்து, குளித்து மிளிரும் தயாராகி மகிக்காக காத்திருக்க, இரண்டு மணிக்கு வந்துவிடுவதாக சொன்னவள் மணி மூன்றாகியும் வரவில்லை. கைப்பேசியில் தொடர்புக்கொள்ள முயல, அது அணைக்கபட்டிருந்தது. தவசீலனை கேட்க, இன்னும் அவனை காணவே வரவில்லை என்றான். தவசீலனும் விசாரித்து சொல்வதாக சொல்லி இருக்க, அவனுக்கும் எந்த தகவலும் கிடைக்கவில்லை.
நேரம் வேகமாக ஓடியதே தவிர, மகி வருவதைப் போல தெரியவில்லை. நொடிக்கு நொடி பயமேறிக் கொண்டே போனது மிளிருக்கு. அளவுக்கு அதிகமான பயமும் பதற்றமும் அவளை அடுத்து என்ன என சிந்திப்பதைக் கூட தடை செய்திருந்தது. இப்படி ஆகியிருக்குமோ அப்படி ஆகியிருக்குமோ என்ற தேவையில்லாத எண்ணங்கள் தோன்றி மிளிரை படுத்த, தன்னையறியாமல் கலங்கியவளை சமாதானப்படுத்த முடியாமல் தவித்து நின்றனர் ஶ்ரீயும் கவியும்.
அவர்கள் அறிவார்களே மிளிரின் சகலமும் மகிதானென்று. உண்ண, உறங்க, சிரிக்க, கோபப்பட என அனைத்திற்கும் மிளிருக்கு மகி வேண்டும். இவள் குழந்தையாய் சினுங்கினால் அவள் அதட்டும் தந்தையாவள்; பசியில் வாடினால் அமுதூட்டும் தாயாவாள்; தோல்வியில் துவண்டால் தோள் கொடுக்கும் தோழியாவள்; தவறு செய்யும் வேளையில் கண்டிக்கும் ஆசானாவாள்; ஆபத்தென்றால் சகோதரனாய் துணை நிற்பாள். ஆக மிளிருக்கு மகியின்றி அணுவும் அசையாது. ஒரு கட்டத்திற்கு மேல் தேம்பி தேம்பி அழுதவளை சமாதானப்படுத்த முடியாமல் திணறி நின்றனர் ஶ்ரீயும் கவியும். அவள் வருவதாக சொன்ன நேரத்தை தான்டி இன்னும் நான்கு மணி நேரம் வேகமாக ஓடியிருந்தது.
– தேடல் தொடரும்…

