Loading

அத்தியாயம் 5

தனக்காக மூவரும் காத்திருக்கின்றனர் என்ற நிலையில் சுற்றுப்புறத்தை கவனிக்காது கோவிலினுள் புவி நுழைந்திருக்க, வாயிலிலே நின்று தீபிகாவுடன் வாதம் செய்து கொண்டிருந்த முல்லையை புவி கவனிக்கவில்லை.

அத்தோடு கவனித்து பார்த்திருந்தாலும், அவனுக்கு முல்லையை அடையாளம் தெரிந்திருக்க வாய்ப்பில்லை. அவள் தான் முன்தினம் புர்காவிற்குள் தன்னை மறைத்துக் கொண்டிருந்தாளே!

ஆதலால் தான் புவிக்கு தீபியையும் அடையாளம் தெரியவில்லை. ஆனால் குரல் பரிட்சயமானதாகவே தோன்றியது.

‘அனுமானத்தில் எதையும் கணிக்கக் கூடாது. அப்பெண்கள் இருவரும் புர்கா அணிந்திருந்தனர்’ என யோசனையை தள்ளி வைத்துவிட்டான்.

ஆனாலும், காலையில் அலைபேசியில் கேட்ட குரலும், இரவு கண்களால் தன்னை தடுமாற வைத்தவளும் ஒன்று என்று அவனுள் ஆழ் மனம் உரைத்துக்கொண்டே இருந்தது.

ஆம் முல்லை புவியை தடுமாற தான் வைத்திருந்தாள்.

இரவு அன்னை, தந்தை திருமண நாளை கேக் வெட்டி கொண்டாடும் வரை ஒன்றும் தெரியவில்லை.

உறக்கத்திற்காக கண்களை மூடிய பின்னர் தான், முகம் முழுக்க கருப்பு துணியால் மூடியிருக்க, வேல் விழிகள் இரண்டும் அவனை கூர்மையாய் துளைத்தது மனதில் குளிராய் குத்தியது.

முல்லை பயம் கொண்டு அவனிடம் தன்னைப்பற்றி எதும் சொல்லாது இருந்தாலும், அவனை ஒரு நிலையில் ரசித்தது என்னவோ உண்மை. அந்தப் பார்வையை புவி அழகாக உள் வாங்கியிருந்தான்.
மனதில் அவள் குறித்து சிறு ஆர்வம் அவனுள்.

‘யாரென்று தெரியாது எப்படி எங்கனம் தேடுவது?’ அலைபாயும் மனதை கட்டுக்குள் வைத்துக்கொண்டான். சில நிமிடங்களில். அவையெல்லாம், காலை ஆகாஷின் அலைபேசியில் முல்லையின் குரலை கேட்கும் வரை தான்.

கேட்டதும் மனதில் சிறு அதிர்வு.

‘அவளாக இருக்குமோ?’
திரையில் பெயரை பார்க்க முனைந்தான்… ஆகாஷ் ‘டார்லிங்’ என சேமித்து வைத்திருந்தான்.

ஆகாஷ் அடிக்கடி அவனிடம் தீபிகா மற்றும் முல்லை குறித்து எல்லாம் பகிர்ந்து கொண்டிருக்கிறான். ஆனால் இதுவரை பெயர் குறிப்பிட்டது இல்லை. சொல்லிய சில நேரங்களில் புவி கருத்தில் ஏற்றியதும் இல்லை. ஆகாஷ் எப்போதும் பக்கி என்று தீபியையும், டார்லிங் என்று முல்லையையும் குறிப்பிட பெயர் மனதில் நினைவு கொண்டதும் இல்லை.

இன்று தான் கவனிக்கிறான். பெயர் தெரியவில்லை என்பதைவிட நினைவில் பதிந்திருக்கவில்லை.
தம்பியிடம் கேட்கலாம். ஆனால் என்றுமில்லாது இன்றென்ன புதிதாய் என அவன் கேட்டுவிட்டால், என்ன பதில் சொல்லுவான்.

அவளுக்கான தன் மனதின் சஞ்சலம் உண்மை என்றால் அவளே தன்னிடம் வருவாளென்று மனதின் ஓரம் தள்ளி வைத்தான்.

நேற்று இரவு புர்காவிற்குள் பார்த்த பெண்ணும், இன்று குரல் வழி தான் அறிந்த பெண்ணும் ஒன்றாக இருக்குமோ என புள்ளி அளவில் மனதில் எழுந்த சந்தேகம், கோவிலில் தீபிகாவின் பேச்சின் மூலம் அவளும் இந்து என தெரிந்த பின்பு காணாமல் போயிருந்தது.

வாகனத்தில் ஏறிய பின்பு தான் வைப்பரில் சொருகி வைக்கப்பட்டிருந்த காகிதத்தை கவனித்தான்.

காற்றிற்கு பறந்து வந்து ஒட்டிக்கொண்டது போலில்லாமல், யாரோ வைத்தது போலிருக்க, இறங்கி சென்று எடுத்து பிரித்துப் பார்த்தான்.

“நேற்று இரவு உதவியதற்கு மிக்க நன்றி ஏஎஸ்பி சார்” என எழுதி, இறுதி வார்த்தைக்கு கீழ் இரு முல்லை மலர்கள் வரையப்பட்டிருந்தது.

படித்ததும் கண்டு கொண்டான் யார் வைத்திருப்பா என்று. சுற்றி பார்வையை சுழலவிட்டான். புர்கா அணிந்து யாரும் தென்படவில்லை.
குறுஞ்சிரிப்புடன் காகிதத்தை சட்டை பைக்குள் வைத்தவனாக சென்றுவிட்டான்.

சாலையில் கவனம் இருந்தாலும், அந்த காகிதத்தில் எழுதி இருந்தது, அவளது குரல் வழி புவியின் செவியை நிறைத்துக்கொண்டே இருந்தது. நிலையாக அவனது உதட்டில் புன்னகை தேங்கி நின்றது.

‘வரைந்து வைத்திருந்த மலருக்கு என்ன அர்த்தமாக இருக்கும்?’ சிந்தித்தவனுக்கு ஒன்றும் பிடிபடவில்லை. சட்டென்று அந்த மலரின் பெயரும் அவனுக்கு நினைவு வரவில்லை.

பார்த்த மாத்திரத்தில் மல்லிகை என்று தோன்றியது அவ்வளவே. மல்லிகையில் பல வகை உள்ளது என்பது தெரியவில்லை.
அவளைப்பற்றி யோசித்துக்கொண்டே காவல் நிலையமும் தன்னைப்போல் வந்து சேர்ந்திருந்தான்.

‘இவ்வளவு நேரமும் நானா யாரென்றே முழுதாக அறிந்திடாத பெண்ணைப் பற்றி நினைத்துக் கொண்டிருந்தோம்?’ தன்னைக் குறித்து தானே ஆச்சரியம் கொண்டான்.

தன் சிந்தையை மீட்டு முழு காவலனாக அலுவலகத்திற்குள் நுழைந்த புவி, முதல் நாள் சிறுவனை கடத்தி தவறாக நடந்துகொள்ள முயற்சித்த ஆட்டோ ஓட்டுநர் வழக்கை நீதிமன்றத்தில் ஆஜர் படுத்த சொல்லி அனுப்பி வைத்தான். அவனும் அன்றைய தினம் அடுத்தடுத்த வழக்கில் தன்னை மூழ்கடித்துக் கொண்டான்.
_______________________

“ஃபர்ஸ்ட் டைம் ஆகாஷ் வீட்டுக்கு போறோம்” என்ற தீபிகா நண்பனின் வீட்டிற்கு முதல் முறை செல்லும் ஆர்வத்தில் உற்சாகமாக தயாராகிக் கொண்டிருந்தாள்.

முல்லை கட்டிலில் கால்களைக் கட்டிக் கொண்டு அமர்ந்திருந்தாள். அவளின் விழிகள் தனது மேசைக்கு மேல் சுவற்றில் ஒட்டியிருந்த புவியின் படத்தை பார்த்திருந்தது.

“இந்த கட்டிங் உனக்கு ஏது?” தலை பின்னலிட்டுக் கொண்டிருந்த தீபிகா தோழியின் பார்வையை வைத்துக் கேட்டாள்.

“மார்னிங் நியூஸ் பேப்பரில் வந்திருந்தது. நல்லாயிருக்குல?” என்ற முல்லை, “போலீஸ் டிரஸில் செம மாஸ் போ. நேத்து கோவில் உள்ள போக காரிலிருந்து இறங்கி வந்தார் பாரு… கொல மாஸ்…” என்று சிலாகித்தாள் முல்லை.

கண்களை சுருக்கி உடலை உதறி புன்னகை சிந்திய அவள் பாவனையில் தீபிகா நண்பியை அதிசயம் போல் பார்த்தாள்.

“ம்ஹும்… முத்திப்போச்சு.” அருகில் படத்தை மறைத்தது போல் குறுக்கே வந்து நின்று சொல்லிய தீபிகாவின் வயிற்றில் வலிக்காது குத்திய முல்லை…

“உனக்கு ஆக்டர் விஜய் பிடிக்கும் தானே? அதனால் தானே அங்க ஒட்டி வச்சிருக்க. அப்புறம் தோனி கூட… நான் ஒரு படம் ஒட்டுனதில் உனக்கு மூக்கு வேர்க்குதா? உனக்கு எப்படியோ அப்படித்தான் இதுவும்” என்றாள். தனக்கும் அப்படித்தான் என்று சொல்லிக் கொண்டாளோ?
முல்லைக்கே தெரியவில்லை. புவியை ஏன் இத்தனை பிடிக்கிறது என்று.

“சரி… சரி… என்னவோ சொல்ற. நானும் நம்புறேன்” என்ற தீபிகா, “வெறும் க்ரஷ் மட்டும் தானே?” என மீண்டும் கேட்டாள்.

“ம்க்கும்… வீரமுத்து இருக்கும் போது அதுக்கெல்லாம் வாய்ப்பில்லை. வீட்டுக்கு போனால் ஆகாஷ் கிட்டவே பேச முடியாது. இதில் நானெல்லாம் லவ் பண்ணிட்டால் அவ்வளவு தான்” என்ற முல்லைக்கு மனதில் சிறு நடுக்கம். ஏனென்று தெரியவில்லை.
ஒருவேளை ஆழ் மனதில் ஏற்பட்டுள்ள புவியின் மீதான ஈர்ப்பின் அதிர்வாகக்கூட இருக்கலாம். சிந்திக்க மறுத்தாள்.

“ம்ம்… வீரமுத்து நினைவிலிருந்தால் போதும்” என்ற தீபிகா, “நான் கிளம்பிட்டேன். வா போகலாம்” என அழைத்தாள்.

“நான் வரல தீப்ஸ். நீ போயிட்டு வா” என்று முல்லை சொல்லிக் கொண்டிருக்கும் போதே தீபிகாவுக்கு நித்யாவிடமிருந்து அழைப்பு வர,
“மத்த கேர்ள்ஸ் எல்லாரும் வந்துட்டாங்க வனம். வா! அடம் பிடிக்காத” என்று முல்லை மறுக்க மறுக்க, அவளின் கரம் பிடித்து இழுத்துச் சென்றாள்.

“ஹேய்… ஹேய்… மொபைல்” என எட்டி எடுத்த முல்லை, “ஹேய் செப்பல் டி லூசு” என்று அவளின் இழுப்புக்கு சென்றவாறே அறையில் கதவுக்கு பின்னால் கிடந்த காலணிகளில் கண்ணில் பட்டதை மாட்டிக்கொண்டு சென்றாள்.

“எதுக்கு தீபிகா இப்படி இழுத்துக்கிட்டு போற?” என்று முல்லை கோபம் கொண்ட பின்னரே அவளின் கையை விட்டிருந்தாள். அதற்குள் விடுதி கட்டிடம் தாண்டி வந்திருந்தனர்.

நடனத்தில் பங்கு பெறும் மற்ற பெண்கள் அங்கு நின்றிருந்தனர்.

“முல்லை நீயும் வரியா?” ஒருத்தி கேட்டிட, “அவள் ஆகாஷ் வீடுன்னு வருவாளா இருக்கும்” என்றாள் மற்றொருத்தி.

“இதுக்குத்தான் நான் வர வேண்டாம் இருந்தேன். கேட்டியா நீ. பிடிச்சு இழுத்து வந்துட்ட. நீயும் நானும் மட்டும் ஒருநாள் தனியா போயிருக்கலாம்” என்றாள் முல்லை. தீபிகாவுக்கு மட்டும் கேட்கும்படி.

“இப்போ என்ன வனம்? நீயில்லாம இந்த ஒன்றரை வருஷத்தில் நான் எங்காவது போயிருக்கேனா?” என்ற தீபிகா, “நீ அவன் வீட்டுக்கு வர யோசிச்சன்னு தெரிஞ்சாலே ஃபீல் பண்ணுவான். பேசாம வா” என்றாள்.

“டைம் ஆகுது கிளம்பலாம். நானெல்லாம் மதியம் வந்திடுவேன் சொல்லிட்டு வந்திருக்கேன். கொஞ்சம் லேட் ஆனாலும் என் அம்மா போன் போட ஆரம்பிச்சிடுவாங்க” என்றாள் ஸ்ருதி.

முல்லை கடுப்புடன் தான் ஆட்டோவில் ஏறினாள்.

“இப்போ என்ன உனக்கு. நீ டான்சில் இல்லை. அங்கு வந்து என்ன பண்ணப்போறேன்னு யோசிக்காதே. அதான் உன் ஆளு இருப்பாரே… நல்லா சைட் அடி” என்றாள் தீபிகா.

அவளை நன்கு முறைத்த முல்லை,

“உன்னோட இம்சைடி” என்று தலையில் கை வைத்து முட்டி ஊன்றி கீழ் பார்க்க…

“போச்சு போச்சு… மானம் போச்சு” என்றாள்.

தீபிகாவுக்கு அந்தப்பக்கம் அமர்ந்திருந்த நித்யா, “என்னாச்சு வனம்?” என எட்டிக் கேட்டாள்.

“ஒன்னுமில்லை நித்யா” என்ற முல்லை, தீபிகாவின் தொடையில் அழுத்தமாக அடித்து வைத்தாள்.

“ஏய்… ஏண்டி?” தீபிகா சத்தமின்றி தேய்த்துக் கொடுத்திட, “என் கால் பாரு லூசு” என்றாள் முல்லை.

என்ன என்று பார்த்த தீபிகாவுக்கு சிரிப்பு பொத்துக்கொண்டு வந்தது.

“எல்லாம் உன்னால… நீ இழுத்துக்கிட்டு வந்த வேகத்துல, மாத்தி போட்டுட்டு வந்திருக்கேன்” எனக் கடுப்புடன் கூறினாள் முல்லை.
இரு ஜோடி காலணிகளில் ஒன்றையொன்று மாற்றி மாற்றி போட்டு வந்திருந்தாள்.

“சாரிடி” என்ற தீபிகா, “இதுவும் நல்லா தான் இருக்கு வனம். புது ட்ரெண்ட் சொல்லிக்கலாம்” என்று கிண்டலாக சிரித்தாள்.

“உன்னை…” முல்லை தீபிகாவின் கழுத்தைப் பிடித்து நெறித்தபடி ஆட்டிட, “உங்க சேட்டையை அங்க வந்தும் வச்சிக்காதிங்க” என்றாள் ஸ்ருதி.

முல்லை வேகமாக முகம் திருப்பிக் கொண்டாள்.

“எல்லாம் உன்னால தீபிகா” என்ற முல்லைக்கு பொடுபொடுவென வந்தது.

ஆகாஷ் இவர்களுக்காக வீட்டு கேட்டிலேயே காத்திருந்தான்.

“ஹேய் நித்யா, ஸ்ருதி வாங்க” என்று தன் வகுப்பு பெண்களை அழைத்தவன், “ஹாய் பக்கீஸ்” என்று தன் தோழிகள் இருவரையும் நெருங்கி தீபிகாவின் தலையில் கொட்டினான்.

“வந்ததும் ஆரம்பிக்காதடா” என்ற தீபிகா, “போலீஸ் உள்ள இருக்காரா?” என முல்லையை பார்த்துக்கொண்டே கேட்டாள்.

“ம்… வீக் எண்ட் முக்கியமான வொர்க் இருந்தா தான் ஆபீஸ் போவங்க” என்ற ஆகாஷ், “இரு… இரு… நீ எதுக்கு அண்ணாவை கேட்கிற?” எனக் கேட்டான்.

“நான் எனக்காக கேட்கல” என்று தீபிகா முல்லையை நோக்கி பார்வையை செலுத்த, “அவளுக்கு அன்னைக்கு கோவிலில் காக்கியில் பார்த்து பயமா இருந்துச்சாம். அதான் கேட்கிறாள். அவங்க இருந்தா இப்படியே எஸ்கேப் ஆகிடலான்னு கேட்கிறாள்” என்று சமாளித்திருந்தாள் முல்லை.

“ஹோ” என்ற ஆகாஷ், “உள்ள வாங்க” என்று அழைத்துச் சென்றான்.

“ஆமா டார்லிங் என்னாச்சு உனக்கு? கடுப்பா இருக்க மாதிரி இருக்கு” என்று ஆகாஷ் முல்லையின் முகம் கவனித்துக் கேட்டான்.

“அதை நான் சொல்றேன்” என்று தீபிகா நடந்ததை சொல்ல, ஆகாஷ் முல்லையின் பாதத்தை பார்த்தான்.

“சில் டா. இதுக்கா இப்படியிருக்க? நம்ம வீடு இது” என்று அவளின் தோளில் கைபோட்டு நடந்தான்.

வாயிலில் அமிர்தம் நின்றிருந்தார்.

அவருக்கு முல்லையை எங்கோ பார்த்த நினைவு போலிருந்தது. எங்கென்று சரியாகத் தெரியவில்லை.

“அம்மா” என்று ஆகாஷ் முல்லையிடம் சொல்ல, முல்லை இதழ் விரித்து புன்னகைத்தாள்.

அமிர்தத்தின் நெற்றி சுருங்கியது. முல்லையை பார்த்த கணம். நெருக்கமானத் தோற்றம். அனுமானிக்க முடியவில்லை.

“வாங்கம்மா” என்று அமிர்தம் அனைவரையும் அழைக்க, “ஷாப் வீட்டு உள்ளவே இருக்கா ஆண்ட்டி?” எனக் கேட்டாள் நித்யா.

“அங்க இருக்கே!” என்ற அமிர்தம் தோட்டத்தின் ஒரு பகுதியை கை காட்டினார்.

வீட்டிற்குள் சென்று அமர்ந்தனர்.

திரு வந்து வாங்கவென்று அழைத்துவிட்டு அறைக்குள் சென்றுவிட்டார்.

அமிர்தம் அனைவருக்கும் பழச்சாறு கொடுக்கக் குடித்து முடித்தனர்.

“வீட்டுக்கு சீக்கிரம் போகணும் ஆண்ட்டி.” ஸ்ருதி சொல்லிட, “வாங்க” என்று தையல் கடை இருக்கும் பகுதிக்கு அழைத்துச் சென்றார். அது கடை என்று சொல்ல முடியாத அளவுக்கு அத்தனை பெரிதாக, அனைத்து வசதிகளுடன் இருந்தது.

ஏற்கனவே தயார் செய்து வைத்த ஆண்கள் உடைக்கு ஏற்றவாறு எந்த வடிவமைப்பில் என்ன மாதிரி உடை வேண்டுமென பேசி தேர்வு செய்திடவே ஒரு மணி நேரம் நகர்ந்திருந்தது.

அடுத்து பெண் பிள்ளைகளுக்கு அளவு எடுக்க வேண்டும் என்பதால் ஆகாஷ் முல்லையை அழைத்துக்கொண்டு வீட்டிற்கு வந்துவிட்டான்.

“இவங்களுக்கு எல்லாம் எடுங்க ஆண்ட்டி. நான் கடைசியா எடுத்துக்கிறேன்” என தீபியும் தன் நண்பர்களுடன் வந்துவிட்டிருந்தாள்.

கூடத்து இருக்கையில் முல்லை தொப்பென்று கால்களை அகட்டி வைத்து தளர்வாக அமர்ந்தாள்.

“சில்லுன்னு எதாவது கொடு டார்லிங்” என முல்லை கேட்க, ஆகாஷ் சமயலறை செல்ல, “ஐஸ்கிரீம் இருக்கா பக்கி” என்றபடி தீபிகா அவன் பின்னால் சென்றாள்.

“இது அநியாயம் ப்பா. போங்க நீங்க. நல்லா ஏமாத்துறீங்க.”

திடீரென கேட்ட குரலில் முல்லை வீட்டைச் சுற்றி பார்த்தாள். குரல் எங்கிருந்து வருகிறதென்று.

“உங்களை போட்டுக் கொடுத்தால் தான் சரி வரும்.”

இம்முறை தனக்கு எதிரிலிருக்கும் அறையைலிருந்து தான் சத்தம் வருகிறது என்று கண்டு கொண்டாள். குரலும் யாருடையதென தெரிந்திருந்தாள்.

“சாரி தங்கம். நினைவில்லை.” இது திருவின் குரலாக இருக்குமென்று கணிப்பு.

“என்ன நின்னுட்டு இருக்க?” முல்லையிடம் ஐஸ்கிரீம்மை நீட்டியபடி ஆகாஷ் கேட்க, அவளின் பார்வை அறையில் படிந்தது.

“அண்ணாவும் அப்பாவும் சண்டை போட்டுக்கிறாங்க!” சாதாரணமாக சொல்லிய ஆகாஷ், இருக்கையில் அமர்ந்து ஐஸ் சுவைத்திட…

“சண்டைன்னு கூலா சொல்ற?” முல்லை அதிர்ந்து கேட்டாள்.

“அந்த சண்டையை நீயே கவனி” என்ற ஆகாஷ், அமரும்படி தன் பக்கத்தில் இருக்கையை தட்டிக் காண்பித்தான்.

தீபிகா ஐஸ்கிரீமோடு ஒன்றி விட்டாள்.

“திஸ் ஈஸ் நாட் குட் ப்பா” என்ற புவி, “நாலு கேட்டதுக்கு ரெண்டு தான் நைட் கொடுத்தீங்க. இன்னும் ரெண்டு எங்க கேட்டதுக்கு, மார்னிங் வாக்கிங் போகும்போது வாங்கிட்டு வந்து தரேன் சொன்னீங்க தானே” என்றான்.

“மறந்துட்டேன் தங்கம்” என்று திரு புவியை கெஞ்சுவது நன்கு கேட்டது.

“ஆஷ் கேட்டா மட்டும் மறக்காம வாங்கிட்டு வர்றீங்க தானே” என புவி முறுக்கிக் கொண்டான்.

“தங்கம் சாரிப்பா. அப்பா இப்போவே போய் வாங்கிட்டு வரேன்” என்று சொல்லிய திரு அறைக்குள்ளிருந்து வேகமாக வெளியில் வந்தார்.

அங்கிருந்த மூவரையும் அவர் கருத்தில் கொள்ளவே இல்லை.

“உன் அண்ணா என்ன கேட்டாங்க?” என்ற முல்லை, “ரொம்ப முக்கியமான பொருளா?” எனக் கேட்டாள்.

“ஆமா” என்று கிரீமை சுவைத்து சப்புக் கொட்டிய ஆகாஷ், “சாக்லேட் வாங்கித் தரன்னு சொல்லிட்டு அப்பா மறந்துட்டாங்க போல” என்றான்.

அவன் சொல்லியதில், கேட்ட தான் என்ன லூசா எனும் விதமாக முல்லை நண்பனை ஏறிட்டாள்.

“ஹேய்.. அம் சீரியஸ் டார்லிங்” என்ற ஆகாஷ், “நம்பு” என்றான்.

“சைல்டிஷ்ஷா இருக்கு” என்று தீபிகா குறுக்கே வர,

“நீங்க சாக்லேட் சாப்பிடமாட்டிங்களா?” எனக் கேட்டுக்கொண்டே புவி வந்து அவர்கள் முன் அமர்ந்தான்.

புவியை கண்டதும் சட்டென்று எழுந்து அட்டென்ஷனில் நின்றிருந்தாள் தீபிகா.

“குட்மார்னிங் சார். நீங்கன்னு தெரியாம சொல்லிட்டேன்” என்றாள்.

அவளது பாவனையில் முல்லையும், ஆகாஷூம் வாய்விட்டு சிரிக்க, புவி வந்த சிரிப்பை இதழோரம் மறைத்தான்.

தங்கள் முன் புவி வந்தமர்ந்த நொடி முதல் அவனையே பார்த்த முல்லை, அவனது சிறு சிறு அசைவையும் உள்ளுக்குள் பொக்கிஷமாக பத்திரப்படுத்தினாள்.

“சிட்… நான் போலீஸ் என்பதெல்லாம் வீட்டுக்கு வெளியில் தான்” என்றான் புவி, தீபிகாவிடம்.

முல்லையின் பார்வையை உணர்ந்த புவி சட்டென்று அவள் பக்கம் திரும்ப, அவள் ஐஸ்ஸில் கண்ணாக இருந்தாள்.

அவன் தான், தான் உணர்ந்த பார்வையில் குழம்பினான்.

முல்லை ஒன்றும் பேசாது அமைதியாக இருக்க… ‘அன்று அலைபேசியில் பேசியது இவளாக இருக்குமோ?’ என்று புவி சிந்தித்தான். தேவையில்லாது பர்தாவிற்குள் ஒளிந்து தெரிந்த விழிகள் வேறு நினைவில் தோன்றி மறைந்தது. உடன் அந்த காகிதம்.

“ரெண்டு பேர் மட்டும் தான் உன் ஃபிரண்ட்ஸா?” புவி கேட்டிட…

“இன்ட்ரோ கொடுக்க மறந்துட்டேன். இதுங்க ரெண்டும் தான் மை பக்கிஸ்” என்று இரு பெண்களின் தோளின் மீதும் கைபோட்டு சொல்லிய ஆகாஷ், “மத்தவங்க ஜஸ்ட் கிளாஸ்மெட்ஸ். அம்மாவோட இருக்காங்க” என்று வெளியில் காண்பித்தான்.

“அண்ட் ஷீ…” என முல்லையை சுட்டியவன், “என்னோட டார்லிங்” என்றான்.

“ஹாய்…”

புவி பார்த்திட மெல்ல மொழிந்தாள்.

புவியிடம் சிறு தலையசைப்பு. புவி முல்லையின் கண்களை ஆழ்ந்து நோக்கிட முயன்றான். அவனது வீச்சில் தடுமாறிய முல்லை இமை தாழ்த்திக்கொள்ள புவியிடம் சலிப்பு.

‘புவி உனக்கு என்னாச்சு மேன்? இப்போ அந்த பர்தாவுக்குள் இருந்த பொண்ணு யாருன்னு தெரிஞ்சு நீயென்ன பண்ணப்போற?’ என தனக்குத்தானே கேட்டுக்கொண்டு புறம் ஒதுக்கினான்.

“நேற்று நீங்க தானே என்கிட்ட பேசினது?”

புவி இதனை கேட்பானென்று முல்லை எதிர்பார்க்கவில்லை.

“ஹான்…” தடுமாறியவளாக, “அது… அது ஆகாஷ் நினைச்சு,” என்று மெல்லிய ஓசையில் முல்லை சொல்லிட, புவியால் குரல் வைத்தும் தீர்மானிக்க முடியவில்லை.

‘புவி ரெண்டு பேரும் ஒண்ணா இருக்கும் ஏன் தின்க் பண்ற? அவள் முஸ்லீம். அந்த காகிதத்திலும் ஜாஸ்மின் வரைந்திருந்ததே! அவளோட நேம் அதுவாகக் கூட இருக்கலாம்’ என ஒரு முடிவுக்கு வந்த புவிக்கு, முல்லையின் பார்வையும், அன்றைய இரவு தான் மிக அருகில் உணர்ந்த பார்வையும் ஒன்றென்றே தோன்றியது.

‘அந்தப்பொண்ணு, பார்வை ரெண்டையும் இப்போவே மறந்திடு. மோஸ்ட்லி மொபைலில் வாய்ஸ் அவளோடது மாதிரி இருந்திருக்கலாம்’ என அத்தோடு தன் எண்ணத்தை முடித்துக் கொண்டான்.

நித்யா வந்து தீபிகாவை அளவெடுக்க அமிர்தம் கூப்பிட்டதாக அழைத்துச் செல்ல, ஆகாஷ் அலைபேசியில் அழைப்பு வந்ததென்று நகர்ந்து சென்றான்.

புவி தனக்குள் உழன்றபடி இருந்தாலும், அவனின் பார்வை முல்லை மீதே நிலைத்திருந்தது. அதனை அவனே அறியவில்லை.

முல்லை தான் அவஸ்தைக்குள்ளானாள்.

முல்லை தீபிகாவின் கை பை தன்னிடம் இருக்க, அதில் அவள் எப்போதும் சாக்லேட் வைத்திருப்பாள் என்பதால், எடுத்து புவியிடம் நீட்டினாள்.

புவி என்ன என்பதைப்போல ஒற்றை புருவம் உயர்த்த,

“நீங்க, அங்கிள் கிட்ட…” என்று அவள் சொல்லும்போது உள்ளே வந்த திரு,

“இந்தாடா… அவ்வளவு தான். டீல் முடிஞ்சிருச்சு. இனி என்கிட்ட கேட்கக்கூடாது” என்று ஐந்தாரு சாக்லேட்டுக்களை புவியின் கையில் வைத்தார்.

“நான் உங்ககிட்ட ரெண்டு தானே கேட்டேன்” என்று புவி சொல்லிட, அவரோ அவனை பாவமாக பார்த்தார்.

‘பயங்கர சேட்டை பிடிச்ச ஆளா இருப்பார் போல!’ முல்லை உள்ளுக்குள் சிரித்துக் கொண்டாள்.

“தங்கம் பிளீஸ் டா. அப்பா பாவம்” அவர் கண்களை சுருக்கி அவனின் கன்னம் பற்றிட…

“ஓகே… பொழச்சிப்போங்க” என்று விட்டுக் கொடுத்திட்டான்.

இருக்கையில், பெரும் கண்டத்திலிருந்து விடுபட்டவராக ஆசுவாசமாக அமர்ந்தார். அப்போதுதான் முல்லையை கவனித்து அசடு வழிந்தார்.

“மானத்தை வாங்கிட்டடா.” திரு மெல்ல புவியிடம் கிசுகிசுக்க, புவி அட்டகாசமாக சிரித்தான்.

அவனது சிரிப்பின் துளியை கொஞ்சமும் மிச்சமின்றி தன்னகம் சேர்பித்தாள் முல்லை.

“ஆகாஷ் ஃபிரண்டாம்மா?”, திரு.

“இல்லை… அவனோட டார்லிங்.”

முல்லைக்கு முன்பு புவி பதில் வழங்கியிருந்தான்.

“உன்னால தான் நான் இவங்கிட்ட மாட்டினேன். எட்டு சாக்லேட் பிடிங்கிட்டான்.” திரு மெல்ல முனக, புவி வந்த சிரிப்பை கட்டுப்படுத்த முடியாது எழுந்து சென்றான்.

செல்வதற்கு முன்பு முல்லை தன் முன்பு வைத்த சாக்லேட்டையும் எடுத்துச் சென்றிருந்தான்.

Click on a star to rate it!

Rating 4.9 / 5. Vote count: 38

No votes so far! Be the first to rate this post.

இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
4
+1
45
+1
3
+1
2

உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள் 

4 Comments

    1. Author

      அவள் ஹிஜாப் போட்டு வந்ததால அப்படி அந்த வகையில் யோசிப்பான் அக்கா.