Loading

தீபன் தனது தந்தையை அழைத்துக் கொண்டு குருஜியின் கட்டளைப்படி, சுந்தரமூர்த்தி தாத்தா மற்றும் வேலு தாத்தாவின் குடும்பத்தினரை காப்பாற்ற விரைந்து சென்றான்.

“சுவாமி மோகனா இப்போது வெளியே வந்து விட்டாளே, இன்னும் சிறிது நேரத்தில் தனது ஆட்டத்தை தொடங்கி விடுவாள். இப்போது என்ன செய்வது? அவளை முழுவதுமாக அழிக்க வழி கூறுங்கள்? போன பிறவியில் எங்களது உயிரைக் கொடுத்து அவளை அடைத்து வைத்தோம், இப்பிறவியிலாவது என்னவரோடு உளமார வாழ ஆசைப்படுகிறேன், என்னால் அவரோடு இப்பிறவியிலும் வாழவே முடியாதா?”

“மதுரவாணி வருத்தம் கொள்ளாதே, இந்த பிறவியில் நீ இளவரசரோடு இணைந்து நூறு வருடங்களை கடந்து வாழத்தான் போகின்றாய், நீ இப்போதே கொற்றவை அன்னையின் மூலவர் சன்னிதியை நோக்கி செல். அங்கு அன்னையின் சிலைக்கு அடியில் இருக்கும் மந்திர தகடுகளை, அன்னையின் ஆசியோடு எடுத்து வா. அவற்றால் மட்டுமே அந்த மோகனாவின் ஆட்டத்தை அடக்க முடியும். பல வருடங்களாக அடைந்து கிடந்த அவளின் ஆன்மா மிகவும் ஆக்ரோஷமாக இருக்கும். அவளை தடுக்க வேண்டும் என்றால் அந்த மந்திர தகடுகளால் மட்டுமே முடியும், வெற்றி உனக்கே சென்று வா மகளே, நான் உனது வரவுக்காக  மோகினி பள்ளத்திற்கு அருகில் காத்திருக்கின்றேன்.

ஆனால் ஒன்று மகளே, நீ மந்திர தகடுகளை சிலைக்கு அடியில் இருந்து எடுத்த பிறகு, அந்த இடமே இருந்த இடம் தெரியாது மண்ணுக்குள் புதைந்து விடும். அதனால் கவனமாக இரு, இன்றோடு இந்த மோகனாவின் ஆன்மாவிற்கு ஒரு முடிவு கட்டி அந்த காலக்கோடனின் குகையை ஒரே அடியாடியாக மூட வேண்டும், சென்று வா மகளே வெற்றி நிச்சயம்.”

  நிரஞ்சனாவை தேடி ராகுலுடன் கிளம்பிய வேந்தன், நேராகச் சென்றது மாறனுடைய கட்சி அலுவலகத்திற்கு தான், ஏனெனில் ராகுல் கூறியபடி நிரஞ்சனாவை அழைத்துச் சென்றவர்கள் அவனது அண்ணின் பெயரை கூறியதால், அவர்கள் நிச்சயம் கட்சியை சேர்ந்தவர்களாக தான் இருக்கக்கூடும் என்ற சந்தேகத்தின் அடிப்படையில் தான், மாறனுடைய கட்சி ஆபீஸுக்கு ராகுலுடன் சென்றான்.

     உள்ளே நுழைந்ததுமே ராகுல் அவர்களில் ஒருவனை கைக்காட்டி, இவனும் நிரஞ்சனாவை கூட்டிக்  சென்றவர்களில் ஒருவன் என்று கூறியதும், அவனை அந்த இடத்திலேயே அடிவெளுக்க ஆரம்பித்து விட்டான் வேந்தன்.

   தனது கட்சி ஆபீஸிக்குள் புகுந்து தனது  கட்சியை சேர்ந்த ஒருவனை,  வேந்தன் அடித்துக் கொண்டிருப்பதை கண்டு கோபம் கொண்ட மாறன்.

     “வேந்தா நிறுத்து இது ஒன்னும் உன் ஊர் கிடையாது, இது என்னோட கட்சி ஆபீஸ். என்ன தைரியம் இருந்தா என் ஆளை எங்க ஊருக்குள்ளேயே வந்து அடிப்பே? உன்னோட செல்வாக்கு எல்லாம் வேடந்தூரோட வச்சுக்கோ, இங்க வந்து அதை காட்டுற வேலை எல்லாம் வச்சுக்காதே, ஏற்கனவே உன்னால தான் என் தங்கச்சி இந்த ஊரை விட்டு போனா, அதுக்கே உன் மேல நான் கொலை வெறியோட இருக்கேன். வீணா பிரச்சினை பண்ணாம இங்கிருந்து கிளம்பு முதல்ல, அப்புறம் உன் மேல கை வச்சுட்டேன்கிற பழி எனக்கு ஒன்னும் வேண்டாம்.”

   “உன் புத்தி எப்பவுமே இப்படித் தான் சிந்திக்குமா மாறா? கூட இருக்கிறவனே உன் தங்கச்சியை கடத்திட்டு போனது கூட தெரியாம, அவனுங்க கூடவே சேர்ந்து நீ அவளை தேடிட்டு இருந்தா, எப்படி டா உன் தங்கச்சி கிடைப்பா?”

  “என்ன புதுசா கதை விடறே? என்ன… புது டிராமாவா? அதுதான் உனக்கு கல்யாணம் ஆகி அந்த பெட்டி எல்லாம் கை மாறிடுச்சே, அப்புறம் எதுக்காக டிராமா போட்டுட்டு இருக்க?”

   “நாடகம் போடறது எல்லாம் உன்னோட வேலை மாறா, எங்களுக்கு தெரியாதுன்னு நெனச்சியா? பாட்டியை கீழே தள்ளி விட நீயும் உன் தங்கச்சியும் பிளான் பண்ணது முதற்கொண்டு எல்லாமே எனக்கு தெரியும்.”

   அடுத்த வார்த்தை பேச முடியாமல் மௌனமானான் மாறன்.

” உன்னோட சேர்க்க சரியில்ல, அதனால தான் நீ இப்படி வளர்ந்து நிக்கிறே. இதோ இங்க நிக்கிறாரு பாரு இவரு தான் கடைசியா உன் தங்கச்சியை ஆபத்தில் இருந்து காப்பாத்தி, இந்த ஊருக்கு கூட்டிட்டு வந்து இருக்காரு. ஆனா இவரை அடிச்சு போட்டுட்டு, உன் தங்கச்சியை இதோ உன் கூட இருக்கிறான் பாரு, இவனும் இன்னும் சில ஆட்களும் அங்கிருந்து கடத்திட்டு போயிட்டாங்க.”

“என்ன சொல்ற வேந்தா? நீ… நீ பொய்  சொல்ற நான் நம்ப மாட்டேன்.”

“சார் என் பேர் ராகுல் நான் ஒரு கன்ஸ்ட்ரக்ஷன் கம்பெனியில வேலை செய்யறேன், நேத்து நைட் வேலை முடிச்சிட்டு வீட்டுக்கு திரும்பி வரும்போது, காட்டு வழியா ஒரு பொண்ணு ஓடி வர்றதை பார்த்தேன், அவங்களை யாரோ கடத்திட்டு வந்து பூஜை செஞ்சிட்டு இருக்கிறதாகவும், ஊர் திரும்புறதுக்கு அவங்களுக்கு ஹெல்ப் பண்ண சொல்லி கேட்டாங்க.

நான் அவங்க சொன்ன ரூட் படி அங்கிருந்து இந்த ஊருக்கு வந்தேன், ஆனா வந்ததுமே உங்க தங்கச்சியை உங்களோட கட்சியை சேர்ந்த தொண்டர்கள் சிலர் தான், நாங்களே மாறன் அண்ணன் கிட்ட கூட்டிட்டு போறோமுன்னு சொல்லி எங்க வழியை மறிச்சு நின்னாங்க. எனக்கு அவங்களை பார்க்க சந்தேகமா இருந்ததால, நானே அவங்க அண்ணன் கிட்ட விட்டுக்குறேன்னு சொன்னேன். ஆனா அவங்க என்னை அடிச்சு போட்டுட்டு உங்க தங்கச்சியை வலுக்கட்டாயமா இழுத்துட்டு போய்ட்டாங்க.

     அவங்களை தடுக்க நான் எவ்வளவோ முயற்சி செஞ்சேன், என்னையும் அடிச்சு போட்டுட்டு, உங்க தங்கச்சி மூக்குல மயக்க மருந்து வச்சு, அவங்கள மயக்கி தூக்கிட்டு போயிட்டாங்க. இதோ இந்த வளையல் உங்க தங்கையோடது தானே, இவனும் இன்னும் சில ஆளுங்களும் அவங்கள இழுத்துட்டு போகும்போது, அவங்களோட மறுக்கையை நான் புடிச்சிருந்தேன், அப்போ இது என் கையோட வந்துடுச்சு. ப்ளீஸ் சார் நான் சொல்றதை நம்புங்க, உங்க தங்கச்சி இப்போ ஆபத்துல இருக்காங்க.”

  ராகுல் கைகளில் வைத்திருந்த தனது தங்கையின் வளையல்களை அடையாளம் கண்டு கொண்ட மாறன், அடுத்த நிமிடமே வேந்தனின் கைகளால் அடி வாங்கிக் கொண்டிருந்தவனை அடித்து வெளுக்கத் தொடங்கினான்.

   அவன் அடித்த அடியில் அவன் வெள்ளை சட்டை செந்நிறமாக ரத்தம் பூசி கலராக மாறி இருந்தது. அடி தாங்க முடியாமல் அவன் நடந்ததை கூற ஆரம்பித்தான்.

    “ஐயோ அண்ணே அண்ணே அடிக்காதீங்க நான் தலைவர் சொல்லி தான் இதெல்லாம் பண்ணுனேன். தலைவர் கூட ஒரு குருஜி இருப்பாரே, அவர்தான் உங்க தங்கச்சியை எப்படியாவது ஊருக்குள்ள போகாம தடுத்து, காட்டுக்குள்ள இருக்கிற அந்த குகை கிட்ட கொண்டு வர சொன்னாரு. அதனாலதான் அங்க கூட்டிட்டு போனோம். நாங்க இங்க வந்தது கூட மோகினி பள்ளத்துக்கு அந்த பக்கம் இருக்கற காட்டுக்குள்ள ஏதோ பொக்கிஷம் புதைஞ்சு இருக்குதாம், அதை தேடுறதுக்காக தான் எங்களை  அமைச்சர் இங்கே அனுப்பி வச்சாரு.

இங்கே திடீர்ன்னு கோயில்ல சாமி ஆடி காட்டுக்குள்ள போயி தீர்த்தம் எடுத்துகிட்டு வர சொன்னதால, எங்கே எங்களோட குட்டு வெளிப்பட்டு விடுமோன்னு தான், உங்களையும் கூட வச்சுட்டு அதை எப்படியாவது தடுக்கலாமுன்னு அமைச்சர் முடிவு பண்ணாரு, இப்ப கடைசியா உங்க தங்கச்சியை தூக்கிட்டு போனதும் அமைச்சர் சொல்லி தாண்ணே, இது எல்லாத்துக்கும் மூலக்காரணமே அவர் கூட இருக்க அந்த குருஜி தான்.”

   அவன் அடி தாங்காமல்  தனக்கு தெரிந்த அத்தனை உண்மைகளையும் உளறிக் கொட்ட, கேட்டுக் கொண்டிருந்த மாறனுக்கு, தான் எப்படி முட்டாளாக்கப்பட்டிருக்கிறோம் என்று அவமானமாக இருந்தது. அத்தோடு தன்னால் தன் தங்கையும் இப்படி ஒரு ஆபத்தில் மாட்டிக் கொண்டாளே என்று வருந்தியவன், இனி ஒரு நிமிடம் கூட தாமதிக்க கூடாது என்று நினைத்து , தனது நம்பிக்கைக்குரிய விசுவாசிகளிடம் அவனைப் பார்த்துக் கொள்ளுமாறு கூறிவிட்டு, எக்காரணம் கொண்டும் அமைச்சரின் ஆட்கள் இந்த ஊருக்குள் இருக்கக்கூடாது அவர்களை அடித்து துரத்துங்கள் என்றும் உத்தரவிட்டு விட்டு, ராகுல் மற்றும் வேந்தனுடன் மேலூருக்கு அருகில் உள்ள காட்டில் இருக்கும் குகையை நோக்கி செல்ல முனைந்தான்.

அப்போது வேந்தனுக்கு அவனது நண்பன் வெற்றியிடம் இருந்து தொலைபேசி அழைப்பு வர, அதை ஏற்று பேசியவனது முகம் கலவரமானது.

  “வேந்தா நான் முள்ளுக்காட்டுக்கிட்ட இருந்து பேசுறேன், கொஞ்ச நேரத்துக்கு முன்னாடி மதுரா குருந்தங்காட்டுக்குள்ள போறதை பார்த்தேன். அவங்களை பின் தொடர்ந்து போலான்னு நினைக்கும் போது, அமைச்சரும் அப்புறம் அந்த சாமியாரும் நிறைய ஆட்களோட மதுராவை தொடர்ந்து, அந்த காட்டுக்குள்ள நுழையறதை பார்த்தேன்.

கொஞ்சம் கேப் விட்டு அவங்களைத் தான் நான் ஃபாலோ பண்ணி போயிட்டு இருந்தேன். ஆனா என்னால காட்டுக்குள்ளயே நுழைய முடியலே. திடீர்னு மர வரிசை எல்லாம் மாறின மாதிரி இருக்குது, சுத்தி சுத்தி ஒரே இடத்திலேயே வந்துகிட்டு இருக்கேன், நீ சீக்கிரமா இங்கே வா. தங்கச்சி கொற்றவை கோவிலை நோக்கி போற மாதிரி தான் எனக்கு தெரியுது.”

    வெற்றி கூறியதை கேட்ட போது, வேந்தனுக்கு கொற்றவை தேவியின் மூலவர் சன்னிதி தான் நினைவுக்கு வந்தது. அப்படியென்றால் மதுராவிற்க்கு முன் ஜென்ம நினைவுகள் ஞாபகத்திற்கு வந்துவிட்டதா?… அந்த அன்னையை மீறி யாராலும் அவளை நெருங்க முடியாது தான் ஆனால், அந்த காலகோடனை பூஜிக்கும் அந்த சாமியாரும் அங்கு இருக்கின்றானே, அந்த நயவஞ்சகனால் மதுராவிற்கு ஏதாவது ஆபத்து ஏற்பட்டு விட்டால்?… நினைக்கும் போதே வேந்தனுக்கு நெஞ்சம் பதறியது. வெற்றி போனில் பேசிய அனைத்தையும், அருகில் இருந்த ராகுல் மற்றும் மாறன் இருவருமே கேட்டுக் கொண்டு தான் இருந்தனர்.

   “வேந்தா இன்னும் என்ன யோசனை? நீ உடனே போய் உன் பொண்டாட்டியை காப்பாத்து, நான் இப்பவே போலீசுக்கும் மீடியாக்கும் தகவல் கொடுக்கிறேன். அவங்க வந்தா மட்டும் தான் அந்த அமைச்சரையும், ப்ராடு சாமிஜியையும் கையும் களவுமா பிடிக்க முடியும். நீ எதுக்கும் கவலைப்படாம தைரியமா போ, நானும் இவரும் போய் ரஞ்சனியை கூட்டிட்டு வர்றோம்.”

மாறனை ஒருமுறை அணைத்து விடுவித்த வேந்தன், அடுத்த நொடியே அவசரமாக தனது வண்டியை குருந்தங்காட்டை நோக்கி விரட்டினான்.

  குகை நோக்கி வந்து கொண்டிருந்த மோகனாவின் ஆன்மா கைக்கெட்டிய தூரத்தில் மதுரா இருந்தும், அவளை அழிக்க முடியாது போன தனது ஒட்டு மொத்த கோபத்தையும், தன்னை அழைத்தவர்களின் மீது காட்ட உத்வேகத்தோடு வந்து கொண்டிருந்தாள்.

  அவள் வந்து இறங்கியதும் தான், தான் தற்போது இருப்பது காலக்கோடனின் குகை கோயில் என்று புரிந்தது. அங்கே படுக்க வைக்கப்பட்டிருந்த நிரஞ்சனாவை கண்டு குதூகளித்தவள், அவளை நோக்கி செல்ல, நிரஞ்சனாவன் கைகளில் இருந்த கயிறு அவளை உள்ளே வரவிடாமல் தூக்கி வீசியது.

   ஏற்கனவே கடும் கோபத்தில் இருந்தவள் இப்போது நிரஞ்சனாவையும் நெருங்க முடியாமல் போனதால் ஏற்பட்ட கோபத்தை எல்லாம், சுற்றி இருந்த குருஜியின் சிஸ்யர்களின் மீதும், அங்கிருந்த அமைச்சரின் அடியாட்களின் மீதும் காட்டினாள். அவர்களது ரத்தத்தை உறிஞ்சி சக்கையாக தூக்கிப் போட்டவள் மதுராவை வதைக்கும் வெறியுடன் அங்கிருந்து கிளம்பினாள்.

மதுரா குருந்தங்காட்டை நோக்கி அடியெடுத்து வைக்கத் தொடங்கியதுமே, இயற்கை அன்னை வெகு காலத்திற்கு பிறகு வீடு திரும்பும் தமது பிள்ளையை, மெல்லிய தென்றலாக தீண்டி சென்றார்.

  காட்டிற்குள் அவள் கால் எடுத்து வைக்கும் போதே, மதுராவின் கண்கள் கலங்கிவிட்டது. வெகு நாட்களுக்கு பிறகு  தாயை சென்று சேர்ந்த சேய் போல, மனமெங்கும் ஒரு பரவசம் உண்டானது.

அங்கங்கு வளர்ந்திருந்த முட்செடிகள் கூட தானாக விலகி நிற்க, பூ பாதை ஒன்று மதராவிற்காக தானாக உருவானது.

மதுரா கண்களை மூடி முன்ஜென்ம நினைவுகளில் மூழ்கி இருந்த போது, கயவர்களின் கூட்டம் தன்னை பின் தொடர்ந்து வருவதை மனக்கண்ணால் காண முடிந்தது. அவர்களின் பின்னே தன்னை பாதுகாப்பதற்க்காக ஒரு உயிர் அவர்களை பின் தொடர்ந்து வருவதையும் உணர முடிந்தது.

ஒரு மர்மமான புன்னகையோடு அவள் திரும்பி பார்க்க, வெற்றி குருந்தங்காட்டினுள்ளே நுழைய முடியாத படி, அங்கேயே சிக்கி  கொண்டான்.

   குருந்தங்காட்டிற்குள் மதுராவை பின் தொடர்ந்து செல்வதற்கு முன்பாகவே, அமைச்சருக்கும் அவரது ஆட்களுக்கும், சாமியார் ஒரு முத்திரையை அவர்களின் கைகளில் கொடுத்தார்.

“இது எதுக்காக குருஜி?”

“இந்த காடு கொற்றவையோட சாம்ராஜ்யம், இதுக்குள்ள நாம போனா கண் கட்டுவித்தை காட்டி, நம்மள காட்டுக்குள்ள தொலைஞ்சு போக வெச்சிடுவா. அதனால தான் இன்னைக்கு வரைக்கும் உள்ள போன உன்னோட ஆட்களால, அந்த மூலவர் சன்னிதியை கண்டுபிடிக்கவே முடியல, இந்த காலகோடரோட முத்திரை உங்க கிட்ட  இருக்கிற வரை, இந்த மரங்கள் ஆடுற கண்ணாமூச்சி ஆட்டம் உங்களை பாதிக்காது, நாம அந்த காட்டுவாசி பொண்ணை பின் தொடர்ந்து போனா, மூலவர் சன்னதியை கண்டுபிடிக்க முடியும். அதுக்காக தான் இந்த முத்திரையை எல்லாருக்கும்  கொடுத்து இருக்கேன். இத கவனமா கீழே போடாம வெச்சுகுங்க, இது உங்க கையில இருக்கிற வரைக்கும் உங்களுக்கு எந்த ஆபத்தும் நெருங்காது.”

சிறிது தூரம் சென்றதுமே பூமி அதிரும் சத்தத்தை அவர்களால் உணர முடிந்தது. காட்டு மிருகங்களை வழி நடத்தியபடி செம்பா ஆன்மா வடிவில் பிளிரிக் கொண்டே, அவர்களை அடித்து வீசும் முனைப்புடன் முன்னேறி வந்து கொண்டிருந்தது.

சாமியார் அமைச்சரை இழுத்துக் கொண்டு ஒரு மரத்தோடு ஒதுங்கி நின்று, அவர்களைப் பார்த்து மரத்தின் அருகே நிற்குமாறு கூறியும் கூட, அவர்கள் வந்து கொண்டிருக்கும் மிருகங்களை கண்டு அஞ்சி திசைக்கொருவராக சிதறி ஓடினர்.

    அதில் அவர்கள் கைகளில் வைத்திருந்த காலக்கோடரின் முத்திரை தவறி விழுந்தது, அடுத்த நிமிடமே அவர்கள் அனைவருமே அந்த காட்டிற்குள் தொலைந்து போயினர். சாமியார் அவர்களை கவனித்து கொண்டிருந்த நேரத்தில், அவர்களுக்கு அருகே வந்த செம்பாவின் ஆன்மாவை கண்ட அமைச்சர் அங்கிருந்து ஓட்டம் எடுக்க, அவரின் கைகளில் இருந்தும் அந்த முத்திரை நழுவி சென்றது.

ரங்காவை தனதருகில் காணாமல் சுற்றும் முற்றும் தேடிய சாமியார், இனி அவரை தேடுவது வீண் என்பதை உணர்ந்து, எப்படியாவது மந்திர தகடுகளை கைப்பற்ற வேண்டும் என்று, மதுரா சென்ற வழியினை நோக்கி அவரும் நடக்கத் தொடங்கினார்.

மதுரா மூலவர் சன்னிதியை நெருங்கும்போது அந்த குகை பாழடைந்து கற்களால் மூடப்பட்டிருந்தது. முன் ஜென்மத்தில் எவ்வளவு போற்றி பாதுகாக்கப்பட்ட இந்த இடம், இப்படி இருப்பதை கண்டு அவள் கண்களில் நீர் கோர்த்தது. திடீரென்று ஒரு சூறாவளி காற்று போல ஒன்று அவளை நெருங்கி வர, அதை அவள் திரும்பி பார்த்த போது, செம்பா அவளை பார்த்தபடியே ஓடி வந்து கொண்டிருந்தது.

  செம்பாவை நோக்கி ஒடி சென்றவள் அதை அணைத்துக் கொள்ள எண்ணி கைகளை நீட்டிய போது, காற்றில் மட்டுமே கைகளை வீச முடிந்தது.

“செம்பா என்னை மன்னித்துவிடு எனக்காகவே வாழ்ந்த உன்னை, அன்று  காக்க தவறிய பாவியாகி விட்டேன் நான்.”

அது தலையை அங்கும் இங்கும் ஆட்டி, அவளையே சுற்றி சுற்றி வந்தது. தனது சக்தியால் குகையை அடைத்திருந்த பாறைகளை தள்ளி, மதுரா உள்ளே செல்ல அது பாதை அமைத்து கொடுத்தது.

தன்னலமற்ற அதன் செயலை கண்டு மெய் சிலிர்த்தவள், காற்றில் அதை கட்டிக்கொண்ட படியே ஆனந்த கண்ணீர் சிந்தினாள். அவளது கண்ணீர் பட்ட அடுத்த நொடி, செம்பா தங்கமாக ஜொலிக்க தொடங்கியது. சிறிது நேரத்தில் தங்க துகள்களாக அப்படியே காற்றோடு காற்றாக கரைந்து போனது.

  செம்பா முக்தி அடைந்து விட்டதை உணர்ந்தவள், நிறைவாகவே குகையின் உள்ளே சென்றாள்.

   தான் தினமும் பூஜித்து வந்த தேவி, பூஜைகள் எதுவும் இன்றி பாழடைந்த குகைக்குள் நின்று கொண்டிருப்பதை கண்டு, குளத்தில் இருந்த நீரினை தனது சேலையில் நனைத்து அன்னையை சுத்தம் செய்தாள்.குகையில் அங்கங்கு பூத்துக்கிடந்த பூக்களை மாலையாக தொடுத்து அன்னைக்கு இட்டவள், கண்களை மூடி கரங்களை கோர்த்து  வணங்கி நின்றாள்.

” தாயே உன் அருளை நாடி வந்துள்ளேன், கெட்டவைகளை அழித்து நல்லதை நிலை நாட்ட உமது மந்திர தகடு வேண்டும் அன்னையே, அவற்றோடு உமது அருளாசியையும் எங்களுக்கு வழங்கி, இப்புவியை காத்தருள்வாய் தேவி.”

   கொற்றவை தேவியின் கையில் இருந்த திரிசூலம் சிறிது கீழ் இறங்க, அன்னையின் சிலை லேசாக நகர்ந்தது, அதன் அடியில் ஒரு தங்க நிற பெட்டி ஜொலித்துக் கொண்டிருந்தது. அதை எடுத்து அவள் திறந்து பார்த்த போது, அதில் மந்திர தகடுகளோடு அன்னையின் சிறிய சிலை ஒன்று  இருந்தது.

  அவள் கைகளில் இருந்த பெட்டியை சாமியார் தட்டிப் பறிக்க, திடீரென்று குகை ஆட்டம் கண்டது. பெட்டியின் உள்ளிருந்த தேவியின் சிலை செந்நிறமாக மின்னத் தொடங்க, சாமியார் தன் கைகளில் தீப்பற்றியது போல அலரத் தொடங்கினான். சூடு தாங்காமல் அவன் பெட்டியை தூக்கி வீச, அதை பத்திரமாக பிடித்துக் கொண்டாள் மதுரா. கொற்றவை அன்னையின் சிலை கொஞ்சம் கொஞ்சமாக பூமிக்குள் புதையத்  தொடங்கியதும், குளத்தின் நீர்மட்டம் உயரத் தொடங்கியது. குகையின் முன் பகுதியும் முற்றிலுமாக கற்களால் மூடப்பட்டது.

Click on a star to rate it!

Rating 5 / 5. Vote count: 5

No votes so far! Be the first to rate this post.

இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
1
+1
5
+1
0
+1
0

உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள்