Loading

தேடல் 14:

 

உடல் மொத்தமும் நனைந்து, நீர் சொட்டு சொட்டாக கீழே வீழ்ந்துக் கொண்டிருக்க, தலையை அழுந்தப் பிடித்தபடி அமர்ந்திருந்தாள் மிளிர். தலையே வெடித்துவிடும்படி அப்படி ஒரு உயிர் போகும் வலி. அவள் வாய்விட்டு புலம்பியதைக் கூட அவள் அறிவாளா என்றால் சந்தேகமே! ஒட்டுமொத்தமாக உடைந்துப் போயிருந்தாள் அவள். நடக்கும் எதையும் உணரும் மனநிலையில் அவளில்லை. உள்ளம் விவரிக்க முடியாத சுழல் ஒன்றில் சிக்குண்டதைப் போன்ற பிரம்மை.

 

அதி வேகமாக நகரும் புகைப்படங்களைப் போன்று நொடிக்கு நொடி காட்சி மாறிக் கொண்டே இருக்கின்றது அவளின் கண் முன்னால். ஆனால், அத்தனை காட்சிகளிலும் நீக்கமற நிறைந்திருப்பது மகிழினி மட்டுமே. ஒரு நொடி சிறுமியாய் மிளிரின் விரல் பிடித்து நடந்தாள்; மறுநொடி மணல்வீடு கட்டி மகிழ்ந்தாள்; அடுத்த நொடி அவளுடன் சேர்ந்து கடற்கரை மணலில் கிளிஞ்சல்கள் சேகரித்தாள்; பிரிதொரு நொடி அவளுக்கு சைக்கிள் ஓட்ட கற்பித்தாள்; அடுத்த நொடி அதே மிதிவண்டியில் இரட்டை சடையில் பள்ளி சீருடையில் சிரித்தபடியே இவளுடன் பயணம் செய்தாள். இப்படி நொடிக்கு ஒரு காட்சி அவள் கண்முன் மாறிக் கொண்டே இருந்தது.

 

ஒரு ஒழுங்கின்றி மாறி மாறி காட்சிகள் தோன்ற அந்த காட்சிகள் கொடுத்த மன அழுத்தமும் தலைவலியும் அதிகமாவதைப் போன்ற உணர்வு. இனியும் இந்த மரண வலியையும் மன வலியையும் ஒருங்கே தாங்க முடியுமா என்றால் சத்தியமாய் இல்லை என்பதே யாரின் பதிலாகவும் இருக்கும். அந்த வலியை தாங்க திரணியற்றவளாய் அப்படியே மீண்டும் நீரிலேயே மயங்கி சரிந்தாள்.

 

அக்னி அவள் கூறியதிலிருந்து வெளிவர முடியாமல் அவளையேப் பார்த்தபடி இருக்க, மீண்டும் தண்ணீரிலேயே மயங்கி சரிந்தவளை தன்னிச்சையாக தன்புறம் இழுத்து இறுக அணைத்தபடி பிடித்துக் கொண்டான். மயக்கத்தில் இருத்தவளை தன்மீது சாய்த்துக் கொண்டு கன்னம் தட்டி எழுப்ப முயன்றான். அதற்கு துளி பலனும் இல்லாமல் போகவே உண்மையில் பதறிதான் போனான். அவளை ஒரு கையால் பிடித்தபடி கால்களை தொட்டு ஓடிய நீரை ஒரு கையால் அள்ளி அவள் முகத்தில் தெளிக்க, அதற்குமே அவளிடம் எந்த பிரதிபலிப்பும் இல்லை.

 

இதற்கு மேலும் இப்படி இருப்பது நியாமில்லை என்று தோன்ற, வேகமாக அவளை கரத்தில் ஏந்தியபடி எழுந்திருந்தான் அவன். அதற்குள் சிறு கூட்டமே கூடிவிட்டது அங்கே. அதற்குள் அவ்வழியே சென்ற ஆட்டோவை ஒருவர் நிறுத்தியிருக்க, அவசரமாய் மிளிரை தாங்கியபடியே அதில் ஏறிக் கொண்டான் அவன். அவனது கைப்பேசியைப் பார்க்க அது நீரில் மூழ்கியதில் மொத்தமாய் தனது உயிரை விட்டிருந்தது. அந்த ஆட்டோ ஓட்டுனரிடமே போனை வாங்கி தனது காவல் நிலையத்திற்கு தகவல் சொல்லியவன், அதைப்பற்றி விசாரிக்கச் சொன்னான்.

 

“அண்ணா… இங்க பக்கத்துல ஏதாவது ஹாஸ்பிட்டல் இருக்கா…” என்று அக்னி வினவ, அவர் அதே பிரபல மருத்துவ மனையையே கூறினார்.

 

“இல்லண்ணா… வேற எதுவும் ஹாஸ்பிட்டல் இருக்கா பக்கத்துல…” என்று அவன் மீண்டும் வினவ, அவனை விநேதமாக பார்த்தவர், “அதான் தம்பி இந்த ஏரியாவுலேயே நல்ல ஆஸ்பத்திரி… வெளியூர்லருந்து எல்லாம் வந்து பாப்பாங்க… பணம் கூட கம்மிதான் தம்பி…” என அந்த மருத்துவமனையின் சிறப்புகளை விவரித்துக் கொண்டிருக்க, இவன் முகத்திலோ யோசனையில் சாயல்கள்.

 

மருத்துவ மனையில் இருந்து தான் அத்தனை பதற்றத்தோடு ஓடி வந்திருந்தாள் மிளிர். ஆகவே, அங்கே தான் அவளுக்கு ஏதோ நடந்திருக்க வேண்டுமென்று சரியாய் கணித்தான் அவன். மீண்டும் அவளை ஆபத்தில் சிக்க வைக்கும் எண்ணம் துளியும் அவனுக்கில்லை.

 

“அதான் சொல்லறேனே அண்ணா… அந்த ஹாஸ்பிட்டல் வேண்டாம்… பக்கத்துல வேற ஏதாவது ஹாஸ்பிட்டல் இருந்தா போங்க… கொஞ்சம் லேட் ஆனாலும் கூட பரவாயில்லை…” என்றவன் அதற்கு மேல் பேச ஒன்றும் இல்லை என்பதைப் போல் மிளிரின் பக்கம் தன் கவனத்தை திருப்பிவிட, அவரும் இவனை ஒரு மாதிரி பார்த்துவிட்டு சாலையில் கவனத்தை பதித்துவிட்டார்.

 

தன் தோளில் சாய்ந்திருக்கும் மிளிரின் முகத்தை தான் இமைக்காது பார்த்திருந்தான் அவன். மெல்ல கன்னம் தட்டி இடைவிடாது அவளை எழுப்ப முயன்றும் அதற்கு எந்த பயனும் இல்லை. ஆனால், முகம் மட்டும் சுருங்கி வேதனையை பிரதிபலித்தது. அந்த வேதனையின் சாயலாய் புருவங்களும் நெற்றியும் கூட சுழிந்து சுருங்கி வரிவரியாய் கோடுகளை தாங்கி இருந்தது. நாடி துடிப்பை சரிபார்த்ததில் அது நார்மலாக தான் இருந்தது. அதுவே அவனுக்கு கொஞ்சம் ஆறுதல். மற்றபடி அவளின் மயக்கத்தை பார்க்க பார்க்க அவனுள் ஒரு பிரளயமே வெடித்தது. அதிக மன அழுத்ததின் காரணமாக மயக்கம் அடைந்திருக்கலாம் என்று தோன்றினாலும் அதை ஏற்க அவன் மனம் ஒப்பவில்லை. அவளை எழுப்பும் அவனின் முயற்சியும் நின்றபாடில்லை.

 

அடுத்த சிறிது நேரத்தில் வேறொரு மருத்துவமனைக்கு வந்துவிட, அவசரமாய் அவளை கைகளில் அள்ளிக் கொண்டு உள்ளே நுழைந்திருந்தான் அக்னி. துரித கதியில் முதலுதவி கொடுத்து அடுத்தடுத்த பரிசோதனைகள் நடக்க, வேறெந்த சிந்தனையும் இன்றி அவளைவிட்டு இம்மியும் அசையாது நின்றிருந்தான் அவன். மருத்துவர்கள் வெளியே இருக்க சொல்லியும் எந்த பயனுமில்லை. அவனை முன்பே அறிந்தவர்களாதலால் அவனின் பிடிவாதம் தெரிந்து அமைதியாகி விட்டனர்.

 

“சார்… யூ ஆர் பிலீடிங்…” என்று ஒரு செவிலியர் வந்து சொல்லும் வரையுமே அவன் தன்னை கவனிக்கவே இல்லை என்பதே உண்மை. வலது காலின் ஏதோ குத்தி ரத்தம் உறைந்திருந்தது… வண்டியிலிருந்து வேகமாக பாயும்போது ஏதாவது குத்தியிருக்கலாம்… ஆனால் அதையெல்லாம் கவனிக்கும் மனநிலையில் அவனில்லையே! அந்த செவிலியர் வந்து சொல்லியும் அவன் அங்கிருந்து நகர்ந்தான் இல்லை.

 

சில நிமிடங்களுக்கு பிறகு, “கவலைப்பட ஒன்னுமில்லை மிஸ்டர். அக்னிமித்திரன்… அளவுக்கு அதிகமான ஸ்டெரஸ்… கொஞ்ச நாளாவே சரியா தூங்கல போல… இப்போ இந்த ஆக்ஸிடன்ட் ஆகவும் ரொம்ப பயந்து இருக்காங்க… அதனால கொஞ்சம் ரெஸ்ட் எடுத்தா எல்லாம் சரியாகிடும்… மருந்து கொடுத்துருக்கோம்… இன்னும் ஒரு ஐஞ்சு மணி நேரம் நல்லா தூங்குவாங்க… தூங்கி ஏந்திரிக்கட்டும்… சரியாகிடுவாங்க… நீங்க முதல உங்கள பாருங்க…” என்றவர் அவன் தோள்களில் தட்டிக் கொடுத்தபடியே புன்னகையுடன் சென்றுவிட்டார்.

 

“யூ ஆர் சோ ப்ரிட்டி… அதெப்படிங்க… மேக்கப் போடாமலேயே இவ்வளவு அழகா இருக்கீங்க…” என்றான் இனியன் கன்னத்தில் கை வைத்த வண்ணம்.

 

“நீங்க பொய் சொல்லறீங்க… நானென்ன அவ்வளவு அழகாவா இருக்கேன்…” என்றவள் முகத்தில் அப்பட்டமாக வெட்கத்தின் சாயல்.

 

“இல்லையா பின்ன…” என அவன் வியந்து வினவிட, “அப்போ நான் அழகில்லைனு சொல்லறீங்க… அப்படி தானே..!” என்றாள் இன்னொருத்தி இடுப்பில் கைவைத்து அவனை முறைத்தபடி. இருவருமே மிளிரின் கடையில் வேலை செய்பவர்கள்.

 

“அச்சங்சோ… நான் எப்போ அப்படி சொன்னேன்… சக்கரை இனிப்புங்கறதுக்காக கருப்பட்டி இனிப்பில்லனு சொல்ல முடியுமா..? ஸ்வீட்டி ஒரு விதத்துல அழகுனா… இந்த பிளாக் பீயூட்டி அதைவிட அழகு… அதுவும் அந்த கண்ணு… ஹாப்பா… என்ன கொல்லுது…”

 

“அப்போ செத்து தொலைக்க வேண்டியது தானே… ஊர்ல ஆறு குளத்துக்கா பஞ்சம்…” என்றபடியே அங்கே வந்திருந்தாள் சூர்யா.

 

அவனை முறைத்துப் பார்த்தபடியே, “கடையில ஆள் இல்லைனா… இப்படி தான் உக்காந்து கதை அளப்பீங்களா… போங்க… உள்ள போய் வேலைய பாருங்க…” என கொஞ்சம் குரலை உயர்த்தி சொல்லவும், அந்த இரு பெண்களும் வேகமாய் உள்ளே சென்று மறைந்தனர்.

 

“நீ எதுக்கு இங்க வந்த…” இப்போது சூர்யாவின் தீப்பார்வை பாரபட்சமின்றி சாட்சாத் இனியனின் மீது தான்.

 

“என் அக்கா கடை… நான் வருவேன்… இல்ல இங்கையே பாய விரிச்சு போட்டு படுப்பேன்… உனக்கென்ன… அது சரி நீ எதுக்கு என் ஸ்வீட்டியையும் ப்யூட்டியையும் திட்டின… ம்ம்ம்… சொல்லு ஏன் திட்டுன…”

 

“வேலை செய்யாம இருந்தா திட்டாம மடியில தூக்கி வச்சு கொஞ்சுவாங்களா…”

 

“யாருமில்லாத கடையில யாருக்கு சூரி மேடம் டீ ஆத்த சொல்லறீங்க… உங்க கடமை உணர்ச்சிக்கு ஒரு அளவே இல்லையா..?”

 

“இங்க பாரு நீ தேவையில்லாம பேசற… கிளம்பு முதல…”

 

“பொறாமை… நான் அந்த பொண்ணுங்களோட பேசறத பாத்து உனக்கு பொறாமை… அப்படி தானே…”

 

“அப்படி எல்லாம் ஒரு மண்ணும் இல்ல… நீ கிளம்பறீயா முதல…”

 

“ஆமான்… நீ எதுக்கு எப்ப பாத்தாலும் என்ன கிளப்பறதுலையே குறியா இருக்க… என் பேச்சுலையும் அழகுலையும் மயங்கி என்ன லவ் பண்ணிடுவனு பயம் தானே…”

 

“தோடா… தேஞ்ச தேவாங்கு மாதிரி இருந்துட்டு… அழகாமுல்ல…”

 

“பின்ன எதுக்குடி காலையில என்ன அப்படி தேடுன…”

 

“நினைப்புதான் பொழப்ப கெடுக்குமான்… நான் மிளிர் அக்காவ தேடுனேன்…”

 

“அப்போ என் நினைப்பு உன் பொழப்ப கெடுக்குதுனு சொல்லு… அதான் என்ன கிளம்ப சொல்லற… அப்படிதானே…”

 

“நானு… அதுவும் உன்ன நினைச்சுட்டு இருக்கேன்… காமெடி பண்ணாம போய் அரியருக்கு படிங்க தம்பி… போங்க… போங்க…”

 

“ஏய் என்னடி நக்கலா… உன்ன தம்பினு சொல்ல கூடாதுனு சொல்லி இருக்கேன் தானே…”

 

“பின்ன என்ன விட நீ சின்ன பையன்தானே… தம்பினு சொல்லாம… அங்கிள்னா சொல்ல முடியும்… இல்லை தாத்தானு சொல்லவா…”

 

“அத்தானு சொல்லேன்… இல்ல மாமா…. மாம்ஸ்… மாமு… அப்படியும் இல்லனா…” என அவன் அடுத்து என்ன சொல்லாமென யோசனையில் ஆழ்ந்துவிட்டான்.

 

“பச்… இங்க பாருங்க இனியன்… எனக்கு லவ்வெல்லாம் செட் ஆகாது… முக்கியமா புடிக்காது… உன்ன இல்ல யாரையும் லவ் பண்ணற ஐடியா எனக்கு இல்லை… சோ இந்த எண்ணத்தை மூட்ட கட்டி வச்சுட்டு ஒழுங்கா உருப்படற வழிய பாரு…”

 

“அப்ப உன்ன லவ் பண்ணா உருப்படாம போய்டுவேனு சொல்லறீயா பேபி…”

 

“பேபி… ஸ்வீட்டி… பீயூட்டினு ஏதாவது உளறுன பல்ல தட்டி கையில கொடுத்துடுவேன்… என்ன லவ் பண்ணா விளங்காம தான் போய்டுவ… அதனால அந்த எண்ணத்த எல்லாம் மூட்டையா கட்டி தூக்கி போட்டுட்டு… போய் உருப்படற வழிய பாரு… நான் உனக்கு செட் ஆக மாட்டேன்… எனக்கு லவ்வே செட் ஆகாது… புரியுதா..?”

 

“அப்போ கல்யாணம் செட் ஆகும் தானே… நான் உன்ன இப்ப லவ் பண்ணறேன்… நீ என்ன கல்யாணம் பண்ணிட்டு அப்புறம் லவ் பண்ணு… எப்படி ஐடியா…” என சட்டை காலரை தூக்கி விட்டபடி அவன் கண் சிமிட்டி கேட்க,

 

அவனை ஒரு நொடி ஆழ்ந்து பார்த்தவள், “எனக்கு கல்யாணம் ஆகிட்டு இனியன்…” என்றாள் தீவிர குரலில்.

 

“குட் ஜோக்… அடுத்து சொல்லு… கேக்க நல்ல கமெடியா இருக்கு…” என அவன் புன்னகை முகம் மாறாமல் வினவ,

 

“பீ சீரியஸ் இனியா… நான் சொல்லறது உண்மை… நிஜமா எனக்கு கல்யாணம் ஆகிட்டு…” மேலே என்ன சொல்லி இருப்பாளோ, தொலைப்பேசி அழைத்து அவர்கள் பேச்சை தடை செய்தது.

 

“ஒன் மினிட்… உன் கதையை பொறுமையா அப்புறம் கேக்கறேன்…” என்றவன்… “ஹாலோ… ஹாப்பி மார்னிங்… மிளிர் பீயூட்டி பார்லர்… ஹெ கேன் ஐ ஹெல்ப் யூ…” என்றான் ரிசிவரை காதுக்கு கொடுத்து.

 

“நான் அக்னி…” என்றவனிடம் சிறு தயக்கம் இருந்ததோ?

 

“சொல்லுங்க…”

 

“நான் அக்னிமித்திரன்… இன்ஸ்பெக்டர்… எனக்கு மிளிரோட பேரன்ட்ஸ் நம்பர் வேணும்…”

 

“நான் அவங்களோட பிரதர் தான்… நீங்க என்ன விசயமுனு என்கிட்டையே சொல்லலாம்…” என்றவனின் குரலில் அப்பட்டமாய் பதற்றமும் பயமும் தெரிந்தது.

 

“இனியா… நீ… நீதான் பேசறதா…”

 

“ஆமான்… அக்காவுக்கு ஒன்னுமில்லையே…” அக்னி யாரென்ற நினைவு சுத்தமாய் அவனுக்கு இல்லை. அதை ஆராயும் ஆர்வமும் இப்போது அவனுக்கு. அவனின் மொத்த நினைவையும் மிளிர் மட்டுமே ஆக்கிரமித்து இருந்தாள். அவன் பேசுவதைக் கேட்ட சூர்யாவும் பதற்றமாகி இருந்தாள்.

 

“மிளிருக்கு ஒன்னுமில்ல இனியா… அவ ரொம்ப நல்லா இருக்கா… சின்னதா ஒரு ஆக்ஸிடன்ட்… ஆனா அவளுக்கு அடி எதுவும் படல… ரொம்ப ஸ்ட்ரெஸ்ல இருக்கானு சொல்லறாங்க… அதானால மயக்கமாவே இருக்கா… எப்படியும் எழ மதியத்துக்கு மேல ஆகுனு நினைக்கறேன்… அதான் இன்ஃபார்ம் பண்ண போன் பண்ணேன்…” என்று இனியனின் பதற்றம் தணியும் வகையில் ஒரே மூச்சில் சொல்லி முடித்திருந்தான் அக்னி.

 

“நிஜமாவே ஒன்னுமில்லையில்ல… அப்புறம் ஏன் மயக்கமா இருக்கா…” என்றான் இனியன் இன்னும் பதற்றம் குறையாமல்.

 

“நீ இப்படியே போன்ல தான் கேள்விக் கேட்க போறீயா… இல்ல உங்க அக்காவ நேர்ல வந்து பாக்கற ஐடியா எதுவும் இருக்கா…”

 

“இதோ… இதோ… கிளம்பிட்டேன்…” என்றவன் எழுந்துச் செல்ல முயல, முடியவில்லை. கையில் வைத்திருந்தது லேன்லைன் போன் ஆயிற்றே!

 

“ஒரு நிமிஷம் இனியா… மிளிர் சாந்தினி மேம்கிட்ட தானே ட்ரீட்மெண்ட் எடுக்கறா… வரும்போது எல்லாத்தையும் சொல்லி அவங்களையும் கூட்டிட்டு வா…” என்றவன் இடத்தை சொல்லி வைத்துவிட்டான்.

 

சூர்யாவிடம் சொல்ல வேண்டும் என்பதையும் மறந்து அவசரமாய் கிளம்பி இருந்தான் இனியன். அவன் பேசியதைக் கொண்டே மிளிருக்கு ஏதோ என்று உணர்ந்தவள், அவன் சொல்லாமலேயே அவன் பின்னோடு வண்டியில் ஏறி அமர்ந்துவிட்டாள். அதை உணர்ந்தாலும் கருத்தில் பதிக்க முடியவில்லை இனியனால். அடுத்த பதினைந்தாவது நிமிடம் இனியன் மருத்துவ மனைக்கு வந்திருந்தான். அவன் வந்த வேகத்திற்கு விழாமல் இருக்க வேண்டி சூர்யா அவனை இறுக பிடித்திருந்தாள்.

 

இனியன் விசாரித்துக் கொண்டு மிளிர் இருந்த அறைக்கு வர வெளியே அமர்ந்திருந்தான் அக்னி. அவனை பார்த்ததும் உள்ளுக்குள் ஒரு நிம்மதி பரவியதென்னவோ உண்மை. பெயரை மறந்திருந்தாலும், தன் தமக்கையை காப்பாற்றியவனை எங்கனம் மறப்பான் இனியன்.

 

“நீங்களா சார்… நான் வேற யாரோனு நினைச்சுட்டேன்… இப்போ மிளிருக்கு ஒன்னுமில்லை தானே…”

 

“ஒன்னுமில்லை இனியா… ரொம்ப ஸ்ட்ரெஸா இருக்கா… மயகத்துலையும் ஏதோ உளறா… அதான் உன்ன சாந்தினி மேம கூட்டிட்டு வர சொன்னேன்… அவங்க எங்க…” என்று பேசிக் கொண்டே, உள்ளே நுழைந்திருந்தனர் மூவரும்.

 

மிளிருக்கு அடி எதுவுமில்லை. பார்க்க ஆழ்ந்த உறக்கத்தில் இருப்பதைப் போலதான் தோன்றியது. ஆனால், மெல்லியதாய் ஏதேதோ பிதற்றிக் கொண்டிருந்தாள்.

 

“சொல்லி இருக்கேன் சார்… பேசண்ட் பாத்துட்டு இருக்காங்க… முடிச்சுட்டு வந்துடுவாங்க…” என்றபடியே பார்வையால் தமைக்கையை தான் அளந்துக் கொண்டிருந்தான் இனியன்… சூர்யாவை மிளிரின் பக்கத்திலேயே அமர்த்திவிட்டு, இனியனை தனியே அழைத்து வந்தவன், நடந்த அத்தனையும் ஒன்றுவிடாமல் சொல்லி இருந்தான் மிளிர் புலம்பியது உட்பட.

 

அதைக் கேட்டவன் அதிர்ந்த பார்வை பார்த்துக் கொண்டிருக்கும் போதே சாந்தினி அங்கே வந்திருந்தார்.

 

“ஹாய் மிஸ்டர். அக்னிமித்ரன்… ஐ அம் சாந்தினி… சைகார்டிஸ்ட்… மிளிரோட டாக்டர்… மிளிர் எங்க இருக்கா…”

 

“ஹாய் மேம்…” என்றவன் நடந்தவற்றை விவரித்தபடியே அவரை மிளிரின் அறைக்கு அவளை அழைத்துச் சென்றிருந்தான்.

 

அவளை பார்த்தபடியே அருகிலிருந்த ஒரு இருக்கையில் அமர்ந்தவர் அக்னிக்கும் கைக்காட்ட அவனும் இன்னொரு நாற்காலியில் அமர்ந்தான்.

 

“சொல்லுங்க அக்னி… என்னை ஏன் இவ்வளவு சீக்கிரம் வர சொன்னீங்க… இதுல நான் என்ன பண்ண முடியுனு நினைக்கறீங்க…”

 

“ம்ம்ம்… அதை நீங்க தான் சொல்லனும்… நாலு நாளைக்கு முன்னாடிக் கூட மிளிர் உங்கள வந்து பாத்தா தானே… அவளுக்கு என்ன பிரச்சனை… அவ உங்ககிட்ட என்ன கேட்டா… என்ன பேசனீங்கனு… நீங்க தான் சொல்லனும்…”

 

“அவ என்ன பாக்க வந்தானு உங்களுக்கு எப்படி தெரியும்… அவள பாளோ பண்ணுறீங்களா…”

 

“அது பாளோ பண்ணறது இல்ல மேடம்… அவ எங்க போறானு மட்டும் தெரிஞ்சுப்பேன்…”

 

“அதுக்கு பேரு தான் பாளோ பண்ணறது… இப்போ நீங்க சொல்லுங்க மிளிர நீங்க எதுக்கு பாளோ பண்ணறீங்க…” என அவனை ஆழ்ந்துப் பார்த்தபடி கைகளை கட்டிக் கொண்டு சாந்தினி வினவ, என்ன பதில் சொல்வதென்று தெரியாது மவுனமாய் நின்றான் அவன்.

 

“நீங்க அவள லவ் பண்ணறீங்க கரெக்ட்… அத அவகிட்ட சொல்லிட்டீங்களா..?”

 

“ஆமான்… நான் அவள லவ் பண்ணறேன் தான்… ஆனா இன்னும் அவகிட்ட சொல்லலை…” என்றவனை இனியன் சூர்யா இருவருமே அதிர்ந்து பார்த்திருந்தனர். இனியன் இதை கொஞ்சமும் எதிர்பார்க்கவில்லை. இரண்டு முறை தமைக்கயின் உயிரை காத்திருக்கிறான் தான். அதற்காக காதல் வருமா? அதுவும் அந்த விபத்துக்கு பிறகு அக்னியை அவன் பார்த்ததே இல்லையே! பிறகெப்படி?

 

“ஓஓஓ… இத தான் மொதல கேட்டு இருக்கனுமோ..? உங்கள முதல அவளுக்கு தெரியுமா..?”

 

“ம்ம்ம்… ரெண்டு மூணு தடவ பாத்து இருக்கா…”

 

“ஓஓஓ… இரண்டு மூனு தடவ பாத்தாலே லவ் வந்திடுமா மிஸ்டர்…”

 

“அவ தானே என்ன ரெண்டு மூணு தடவை பாத்து இருக்கானு சொன்னேன்… நானில்லையே… கிட்டதட்ட இரண்டு வருஷமா நான் அவள தினமும் பாத்துட்டு தானே இருக்கேன்…”

 

“ஓஓஓ… அப்போ கரெக்டா அவளுக்கு ஆக்ஸிடன்ட் ஆனதிலிருந்து… அப்போ உங்க காதலை அவகிட்ட சொல்லி இருக்கலாமே…”

 

“அத சொல்லற நிலைமையில அவ இல்ல… அவ மனநிலைமையும் உடல் நிலைமையும் என்ன சொல்லவிடல…”

 

“அப்போ உங்களுக்கு மிளிரோட ஹெல்த் கண்டிஷன் நல்லா தெரியும்… எங்க காதல சொல்லி அதனால அவங்களுக்கு மன அழுத்தம் அதிகமாகிடுமோனு நினைச்சு சொல்லமா இருக்கீங்க… கரெக்ட்…”

 

“ம்ம்ம்… இப்போ எதுக்கு என்ன ஐ.எஸ்.ஐ.எஸ் தீவிரவாதியை விசாரிக்கற மாதிரி குறுக்கு விசாரணை பண்ணறீங்க… இங்க நீங்க போலீஸா… இல்ல நான் போலீஸானே மறந்துடும் போல எனக்கு…” என்றான் சற்றே சலித்த குரலில்.

 

அவனின் குரலில் புன்னகை அரும்ப அவனை பார்த்தார் சாந்தினி. “காரணமாதான்… மிளிர பத்தி நல்ல தெரியனுமுனா அவளுக்கு கடந்த காலம் மறந்துட்டுனும் தெரியும் தானே..!”

 

“ம்ம்ம் தெரியும்…”

 

“அப்படி அந்த கடந்த காலத்துல அவளுக்கு ஒரு காதலன் இருந்தா என்ன பண்ணறதா உத்தேசம்…”

 

“கண்டிப்பா வாய்ப்பில்லை…”

 

“எத வச்சு அப்படி சொல்லறீங்க…”

 

“இந்த இரண்டு வருஷத்துல மிளிர தேடி அப்படி யாரும் வரலையே…”

 

“ஒரு வேளை அவங்களுக்கு மிளிருக்கு இப்படி ஆகிட்டுனு தெரியாம இருக்கலாம்… இல்ல மிளிர பத்தி டீடைல்ஸ் தெரியாம இருக்கலாம்… ஆனா மிளிருக்கு தெரியுமே… ஒருவேளை அவளுக்கு அப்படி ஒரு காதலன் இருந்து பழசெல்லாம் நினைவு வந்து… அவன தேடி போகனுமுனு நினைச்சா….”

 

“அப்படி நடக்காது…”

 

“ஏன் அப்படி நடக்காது… எப்படியும் நடக்கலாம் மிஸ்டர் அக்னி… எல்லாத்துக்கும் வாய்ப்பிருக்குல்ல…”

 

“நான் விசாரிச்ச வரைக்கும் மிளிருக்கு அப்படி எந்த காதலனும் இல்ல…”

 

“எல்லார்கிட்டையும் சொல்லிட்டு லவ் பண்ண முடியாது இல்லையா… மே பீ நீங்க விசாரிக்க முடியாத இடத்துல அந்த லவ்வர் இருக்கலாம்… இந்த பேஸ்புக் லவ்… ட்விட்டர் லவ்… இப்படி ஏதாவது இருக்கலாம் இல்ல…”

 

“இப்ப உங்களுக்கு என்ன பிரச்சனை… அவ என் மிளிர்… அவ யாரையும் லவ் பண்ணல… என்னதான் லவ் பண்ணுவா… நான் பண்ண வைப்பேன்…” இப்போது அவனை மீறி கொஞ்சம் சத்தமாகவே சொல்லி இருந்தான் அக்னி.

 

“ஏன் இவ்வளவு டென்ஷன் ஆகறீங்க… கூல் அக்னி…”

 

“நீங்க ஏன் என்ன டென்ஷன் ஆக்கறீங்க… ப்ளீஸ் மிளிருக்கு ஒன்னுமில்லை தானே… அத மட்டும் சொல்லுங்க போதும்…”

 

“நான் உங்கள பாத்துருக்கேன் அக்னி… உங்க கண்ணுல அவ மேல அளவுக்கதிகமான அன்பும் காதலும் தெரியுது… ஒரு வேள அவளுக்கு வேற லவ் இருக்குனா… அத அக்சப்ட் பண்ணிக்கற மனநிலையில் நீங்க இருக்கனும்…”

 

“ஹோ… சிட்… இப்போ அதுக்கு என்ன அவசியம் வந்துச்சு… எதுக்கு இப்படி கேள்விக் கேட்டு என்ன டார்சர் பண்ணறீங்க…”

 

“கண்டிப்பா அவசியம் தான்… ஏன்னா அவ மறுபடியும் எழுந்திருக்கும் போது 90% அவளோட பழைய மெமரி ரெக்கவர் ஆகி இருக்கும்… நடந்த இந்த ஆக்ஸிடன்ட்ல அவளுக்கு பழசெல்லாம் நியாபகம் வர ஆரம்பிச்சுருக்கு… அதனால தான் அவளுக்கு இவ்வளவு மன அழுத்தம்… மயக்கமெல்லாம்…” என்றவர் அவனை பார்க்க, அவன் திரும்பி மிளிரை தான் பார்த்துக் கொண்டிருந்தான்.

 

மிக மிக மெல்லிய குரலில் ஏதோ உளறிக் கொண்டிருந்தவள் இதழ்கள் புன்னகையில் விரிந்திருக்க, புருவங்களோ வலியில் சுருங்கி இருந்தது. அவளின் வலது கரத்தை தன்னுள் அடக்கிக் கொண்டவன், இமைக்காது அவளை தான் பார்த்திருந்தான். “நிச்சயம் அவளுக்கு பழசெல்லாம் நினைவு வர வேண்டும் தான்… அவள் குழப்பங்கலெல்லாம் தீர வேண்டும் தான்… ஆனால் அதற்காக அவளை வேறொருவனுக்கு விட்டுக் கொடுக்க முடியுமா என்றால், சத்தியமாக அதற்கு அவனுக்கு விடை தெரியவில்லை… ஒரு வேளை அவளுக்கு காதலனென்று முன்பே ஒருவன் இருந்தால்…” இந்த நினைவே கசந்தது. சத்தியமாக அப்படி எதுவும் இருக்க கூடாது என்ற வேண்டுதலோடு அவன் மிளிரை பார்த்திருக்க, மற்ற மூவருமே அவனைதான் பார்த்திருந்தனர்.

 

 – தேடல் தொடரும்…

Click on a star to rate it!

Rating 5 / 5. Vote count: 3

No votes so far! Be the first to rate this post.

இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
0
+1
4
+1
0
+1
0

உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள்