
என்னுள் நீ காதலாய்💞
அத்தியாயம் 46
“அதெல்லாம் சரி, எங்க பொண்ணுக்கு எவ்ளோ சீர் செய்வீங்க?” ரேவதி தோளில் கை போட்டபடி செந்தமிழ் கேட்க, “பாருடா.. உங்க பொண்ணுக்கு என்ன வேணும்னு கேட்க சொல்லு. எவ்ளோ விலையா இருந்தாலும் எங்க இருந்தாலும் வாங்கிட்டு வர சொல்றேன்” என்றார் புனிதா.
“ரேவதி இதான் உனக்கு கிடைச்ச நல்ல சான்ஸ், என்ன வேணும்னு கேளுடி. புடவை, நகை, உனக்கு பிடிச்ச வேற ஏதாவது கேளு” செந்தமிழ் மெதுவாக அவளிடம் கிசுகிசுக்க, மற்றவர்கள் அவள் என்ன பதில் சொல்வாள் என்று பார்த்திருந்தனர். “எனக்கு வேற எதும் வேணாம்.இனி போதும்” என்று சொன்னவள் வெட்கத்தில் தலையைக் குனிந்து கொண்டாள்.
இத்தனை பேர் மத்தியில் அவள் சொன்ன காதலும், வெட்கத்தில் அவள் முகச் சிவப்பும் ஆணவனுக்கும் வெட்கம் தந்தது. “இனி தான வேணும். இந்தா நீயே வச்சுக்கோ” என்று இளமாறன் இனியனைத் தள்ளி விட, ரேவதியை மோதி நின்றவன் அவள் முகம் பார்த்து சிரிக்க, மற்றவர்களும் அவர்கள் சிரிப்பில் கலந்து கொண்டனர்.
‘என் திட்டத்தை எல்லாம் பாழாக்கி விட்டார்களே’ என நினைத்து இங்கே ஒருத்தனுக்கு பற்றிக் கொண்டு வந்தது. வேற யாரு அது பாண்டியே தான். வேலைக்கு செல்கிறேன் என்று அவன் கிளம்பி சென்றிட, அவர்கள் ஆன்லைனில் உணவு ஆர்டர் செய்து சாப்பிட்டனர்.
ஈஸ்வரியும் புனிதாவும் பேசிக் கொண்டிருக்க, “நேரமாச்சு.. நாங்க கிளம்புறோம்” புனிதா அவரிடம் சொல்லிவிட்டு கிளம்பியபோது, கிச்சனுக்கு அருகே இனியனும் ரேவதியும் நின்று பேசிக் கொண்டிருப்பதைக் கண்டார்.
“குட்டிமா.. உனக்கு இனி போதுமா? வேற எதும் வேணாமா?” இனியன் கேட்க, “ஹ்ம்ம்..” என்று சிரித்தாள். “கல்யாணத்துக்கு அப்புறம் உனக்கு என்னை மொத்தமா தரேன். இப்போ அதுக்கு அட்வான்ஸா ஒரு முத்தம் குடு” என்று இனியன் மெதுவாக அவளுக்கு மட்டும் கேட்கும்படி கொஞ்சிப் பேசிக் கொண்டிருக்க, புனிதா அவர்களை கடந்து வெளியே சென்றதைக் கூட அவர்கள் கவனிக்கவில்லை.
அங்கே வெளியே திண்ணையில் அமர்ந்திருந்த இளமாறன் கையில் இருந்த ரோஜா இதழ்களை மென்மையாக பிய்த்து, செந்தமிழ் மேல் தூவியபடி, காதலைத் தன் கண்களாலேயே சிருங்கார ரசத்தில் பேசிக் கொண்டிருந்தான்.
‘இது வேலைக்கு ஆகாது. இப்போதைக்கு இவங்க கிளம்ப மாட்டாங்க போல, நான் சரவணன் கூட கடைக்குப் போறேன்’ புனிதா மனதிற்குள் புலம்பியவர், சரவணனைத் தேடி அவன் காருக்கு அருகில் செல்ல,
காரின் மேல் சாய்ந்து நின்றிருந்தவன் போனில், “தீபு என்னடா இப்படி கோச்சுக்கிற? எனக்கென்ன ஆசையா உன்னை விட்டுட்டு எல்லா இடத்துக்கும் தனியா போகணும்னு. ரேவதி கல்யாணத்துக்குள்ள எனக்கு சென்னைக்கு டிரான்ஸ்ஃபர் ஆர்டர் கிடைச்சிடும். நான் உன்னை வந்து கூப்பிட்டு வந்துடுவேன். என் செல்லம்ல, என் தங்கம்ல” காவலன் தன் காதல் மனைவியிடம் கெஞ்சிக் கொண்டிருந்தான்.
இவர்களின் அலப்பறைகளை எல்லாம் பார்த்து சிரித்தவாறு அவர் மீண்டும் வீட்டிற்கு திரும்ப, அவரை பார்த்த சரவணன், “அம்மா சொல்லுங்க..” என்றவாறு போனை கட் செய்தான்.
“என்னை கடைல இறக்கி விட்டுடு சரவணா”
“அவனுங்க வீட்டுக்கு கிளம்பலையா ம்மா?”
“அவங்க கிளம்புற மாதிரி தெரியல. நாம போகலாம். நமக்கு வேலை இருக்கு” அவர் கேலியாகச் சிரித்திருக்க, “புனிதாம்மா வீட்டுக்குப் போகலாமா?” கேட்டவாறு அவர்களுக்கு அருகில் வந்தனர் இளமாறனும் செந்தமிழும்.
நால்வரும் இனியன் வருவானா? என ரேவதி வீட்டு வாசலை பார்த்திருக்க, உள்ளே ரேவதியுடன் திருமணத்திற்கான முத்த அச்சாரத்தையும் போட்டவன், உள்ளுக்குள் தோன்றிய வெட்கத்தை மறைத்தவாறு அவர்களை நோக்கிச் சென்றான். அவன் முகத்தை பார்த்தே விஷயம் தெரிந்தவர்கள் உள்ளுக்குள் சிரித்துக் கொண்டனர்.
காரில்.. “என்ன மச்சான்.. கிளம்பவே மனசில்லையா?” இளமாறன் இனியனை சீண்டிட, பதிலேதும் பேசாமல் சிரித்தான்.
“கல்யாணம்னதும் மச்சானுக்கு வெட்கத்தைப் பாரு” இளமாறன் விடாமல் அவனைக் கேலி செய்திட, “தேங்க்ஸ் மச்சான்..” “தேங்க்ஸ் புனிதாம்மா..” “நீங்க இல்லனா இதெல்லாம் நடந்திருக்காது. அப்பா இறந்த பிறகு எனக்கு யாருமில்ல அப்படின்னு தான் நினைச்சுட்டு இருந்தேன். நீங்க எல்லாரும் எனக்காக இருக்கீங்கனு நினைக்கும் போது சந்தோஷமா இருக்கு” நெகிழ்ச்சியில் இனியன் கண் கலங்கினான்.
“நீ ஒண்ணும் பயப்படாத மச்சான். கல்யாண வாழ்க்கை ரொம்ப கஷ்டமால்லாம் இருக்காது” இளமாறன் நண்பனின் மனதை மாற்ற குறும்பாக பேசிட, அங்கே ஒரே சிரிப்பலை தான்.
மறுநாள் காலை.. இளமாறன் வீடு..
“அடியே தமிழ்.. நான் சொன்னா கேட்கவே கூடாதுன்னு நீ முடிவோடு தான் இருக்கியா?” செல்லக் கோபத்துடன் முறைத்து நின்றவனை அலட்சியமாய் பார்த்துவிட்டு ஃபேக்டரிக்கு கிளம்பிக் கொண்டிருந்தாள்.
“புனிதாம்மா.. அவ கிட்ட வேலைக்கு போக வேணாம்னு சொல்லுங்க.. நீங்களும் பேசாம இருக்கீங்க” தாயிடம் முறையிட்டான்.
“உங்க புருஷன் பொண்டாட்டி சண்டைக்குள்ள என்னை இழுக்காதீங்க. நான் சமைச்சு வச்சுட்டேன். கடைக்கு கிளம்புறேன். ரெண்டு பேரும் வேலைக்கு போவீங்களோ? வீட்ல இருப்பீங்களோ? அது உங்க இஷ்டம்” மகனின் புகாரைக் கேட்காமல் புனிதா கடைக்கு கிளம்பினார்.
இளமாறன் செந்தமிழுடன் சேர்ந்து சாப்பிட்டு முடித்ததும், “வேலைக்கு போயிட்டு வந்து அங்க வலிக்குது, இங்க வலிக்குதுனு கத்தட்டும். அப்புறம் இருக்கு” கோபமாக முணுமுணுத்தவாறு ஆபீஸுக்கு கிளம்பிக் கொண்டிருந்தான்.
அவள் உள்ளுக்குள் சிரித்துக் கொண்டாலும், வெளியே உர்ரென்று முகத்தை வைத்திருந்தாள். பொறுமையாக கேட்டால், வேலைக்கு தன்னை அனுப்பமாட்டான் என்பதால் பேசாமல் அமைதியாகக் கிளம்பினாள்.
‘பிரசவத்திற்கு இன்னும் மாதங்கள் இருக்கிறதே, பிரச்சனைகளின் போது கேட்ட உடனே வேலை கொடுத்தார்கள், அதை பாதியிலேயே விட்டு விட வேண்டாமே’ என்பது அவளது எண்ணம்.
‘இத்தனை வருடங்கள் ஓய்வின்றி உழைத்தவள் குழந்தை பிறக்கும் வேளையில் கொஞ்சம் ஓய்வு எடுக்கட்டுமே’ என்பது அவனது எண்ணம். இரண்டுமே சரிதான்.
கிளம்பி வந்தவள் ஹாலில் அமர்ந்திருந்தவனிடம், “என்னை ஃபேக்டரில ட்ராப் பண்ணுங்க” என்று சொல்ல, ஏன் கிளம்புனவளுக்கு பஸ் பிடிச்சு போகத் தெரியாதா? சரிதான் போடி” பல்லைக் கடித்துப் பேசினான்.
‘அய்யோ ரொம்ப கோபமா இருக்கார் போலயே’ தன்னோடு நினைத்தவள், “இளா.. இன்னும் ரெண்டு மாசம் மட்டும் போறேன். அதுக்கப்புறம் வீட்ல இருந்துக்கிறேன். குழந்தை பிறந்த பிறகும் நான் வீட்லயே இருக்கேன், எங்கேயும் போகல. சரியா?” எனக் கெஞ்சுதலாகக் கேட்க,
“அப்போ எப்பவும் இந்த வீட்டை விட்டு போக மாட்ட தான தமிழ்? சரி.. நீ எனக்கு ஐ லவ் யூ சொல்லு. நான் உன்னை ட்ராப் பண்றேன்” கண்களில் காதல் மின்னக் கேட்டான்.
அவள் மனதில் இருப்பது அவளுக்கு தெரியாமலே வார்த்தைகளாக வந்திருக்க, சிரித்தவாறு, “எனக்குத் தோணும் போது தான் சொல்லுவேன்” என்று அவன் கன்னத்தில் முத்தமிட்டு வெளியே சென்றாள்.
அவள் தந்த எதிர்பாராத முத்தத்தில் சிரித்தவன், “நீ நைட் வா உன்னை வச்சுக்கிறேன்” என முணுமுணுத்தவாறு அவளை அழைத்துக் கொண்டு கிளம்பினான்.
மாலை.. இளமாறனும் இனியனும் தங்கள் இணையை அழைக்க ஃபேக்டரிக்கு செல்ல, செந்தமிழ் மட்டும் தான் வந்தாள்.
“செந்தமிழ்.. ரேவதி வரலையா?” இனியன் குழப்பமாய் அவளை பார்த்திட, “அவ வரல.. எதுக்கு லீவ்னு தெரியலையே. உங்களுக்குத் தெரியுமா அண்ணா?” என்று கேட்டாள்.
“காலைல இருந்து அவளோட போன் சுவிட்ச் ஆஃப். இங்க தான் வந்திருப்பான்னு நினைச்சேன்” இனியன் பதட்டமாக சொல்ல,
“விடு டா.. வீட்ல இருக்கும். வாங்க நாம போகலாம்” என்று இளமாறன் அவர்களோடு ரேவதி வீட்டிற்குச் சென்றான்.
வீடு வெளியில் பூட்டியிருக்க, அங்கு ரேவதி சாவி வைக்கும் இடத்தில் சாவியைத் தேடினார்கள். அவள் வெளியே சென்றிருந்தாலும் அவளுடைய அம்மா உள்ளே தானே இருப்பார். அங்கு சாவி ஏதும் இல்லை.
சரவணனுக்கு போன் செய்து தகவலை சொல்லியபின், பூட்டை உடைத்தார்கள். வேகமாக மூவரும் உள்ளே நுழைய, ரேவதியின் அம்மா அங்கு இல்லை. பிரச்சனை எதுவும் நடந்ததற்கான எந்த அறிகுறிகளும் இல்லை.
‘ஒருவேளை ரேவதி அம்மாவோடு ஹாஸ்பிடலுக்கு சென்றிருப்பளோ. நாம் தான் தேவையில்லாமல் பதறுகிறோமோ?’ மூவரும் கலக்கத்தோடு நின்றிருக்க, “அய்யோ..” என்று செந்தமிழ் அலறினாள்.
இனியனும் இளமாறனும் அவளைப் பின்தொடர்ந்து, அவள் பார்த்த திசையில் பார்த்தனர். கிச்சனுக்கு அருகில் ரத்தம் தோய்ந்த கத்தி ஒன்று விழுந்திருக்க, அதைப் பார்த்த மூவரும் திடுக்கிட்டனர்.
“அய்யோ.. ரேவதிக்கு என்னாச்சு தெரியலையே” நடுங்கியவாறு அவள் அழ ஆரம்பிக்க, அவளை தோளோடு அணைத்த இளமாறன், “நீ டென்ஷன் ஆகாத. உனக்கு பீபி ஏறிடும். ரேவதிக்கு ஒண்ணும் ஆகியிருக்காது” என்று ஆறுதல் சொன்னான்.
இனியன் வாய்விட்டு அழவில்லை, அவ்வளவு தான். இறுகிப் போனான். ரேவதியை இழந்து விடுவோமோ என்ற பயம் அவனை மெல்ல சூழ ஆரம்பித்தது. “இளா.. அவ அப்பா மறுபடியும் அவளை ஏதாவது..” செந்தமிழ் அழுகையில் பேசத் தடுமாறினாள்.
அதற்குள் சரவணன் அங்கு ஒரு கான்ஸ்டபிளோடு வந்தான். அந்த கத்தியை எடுத்து பரிசோதனைக்கு கொடுத்தனுப்பிய பின்னர், பாண்டி, ரேவதி செல்போன் எண்களின் லொகேஷன் கண்டுபிடிப்பதற்காக டெக் டீமை அழைத்து பேசினான்.
“இளமாறா.. நீ செந்தமிழை வீட்ல விட்டுட்டு வா” என்று சொன்ன சரவணன், இனியனுடன் சேர்ந்து வீட்டை முழுமையாக பரிசோதித்தான். “நான் போகலை. உங்க கூடவே இருக்கேன்” அழுது அரற்றியவளை, “வயித்துல குழந்தையை வச்சுட்டு உன்னால அலைய முடியாது. நாங்க உன்னையும் பாதுகாக்க முடியாது. சொன்னா கேளு மா” என அண்ணன்கள் அவளை வலுக்கட்டாயமாக வீட்டிற்கு அனுப்பினார்கள்.
வீட்டிற்குள் சென்று புனிதாவை பார்த்ததும் நடந்ததெல்லாம் சொல்லி, மறுபடியும் அழ ஆரம்பித்தாள் செந்தமிழ். “வாயை மூடு, நீ அடி வாங்கப் போற பாரு. முதல்ல வந்து சாப்பிடு” என்று அதட்டி அவளை சாப்பிட வைத்து, மாத்திரைகளும் எடுத்து தந்து, அவளை மார்போடு அணைத்து தூங்க வைத்தான் இளமாறன்.
அவள் தூங்கியதும் மெத்தையில் அவளை படுக்க வைத்தவன், புனிதாவை அவளுக்கு அருகில் படுக்க சொல்லிக் கிளம்பினான்.
ரேவதி வீடு இருந்த தெருவின் அருகில், சிசிடிவி இருந்த ஒரு கடையில் அதன் வீடியோவை செக் செய்தார்கள். நள்ளிரவு ஒரு ஆம்புலன்ஸ் வேன் ஒன்று அந்த தெருவைக் கடந்து சென்றிருக்கிறது. அதில் ஒரு ஆணும், பெண்ணும் அமர்ந்திருப்பது போல் தெரிந்தது. அந்த பெண்ணைப் பார்த்தால் ரேவதி போலத்தான் தெரிந்தது. ஆனால் சரியாகச் சொல்ல முடியவில்லை. வண்டியிலும் நம்பர் பிளேட் இல்லை.
“அந்த நாய் கூடவே இருந்து கழுத்தை அறுத்துட்டான். அவனை வீட்டுக்குள்ள விட்ருக்கவே கூடாது” சரவணன் ஆவேசமாக பேசிக் கொண்டிருக்க, இனியனுக்கு மனம் தாங்கவில்லை. “சரவணா எனக்கு என்னோட குட்டிமா வேணும். எப்படியாச்சும் கண்டுபிடிச்சு குடுடா” இனியன் கண்கலங்கி நின்றிருந்தான். அங்கே வந்த இளமாறன், “கவலைப்படாத மச்சான். நாங்க இருக்கோம்ல. உன் நல்ல மனசுக்கு ரேவதிக்கு ஒண்ணும் ஆகாது” என்று ஆறுதலாக அவனை அணைத்துக் கொண்டான்.
காதலாய் வருவாள் 💞

