Loading

அத்தியாயம் 4

“என்னா வாய்ஸ்டா சாமி? சிங்கம் காதுல உருமின மாதிரி.”

ஆகாஷ் என நினைத்து பேசியவளுக்கு புவியின் பேச்சு அசடு வழிய வைத்தது.

“யாரா இருக்கும்?” யோசித்த முல்லை, “போலீசா இருக்குமோ?” என தன்னைத்தானே கேட்டுக்கொள்ள…

“என்ன முல்லை தனியா பேசிட்டு இருக்க?” எனக் கேட்டாள் தீபிகா.

“நத்திங்க்” என்ற முல்லை, “ஆகாஷ்க்கு கால் பண்ணு” என்றாள்.

“நீ பண்ணலையா?”

“எடுக்கல!”

தீபிகா அழைப்பு விடுக்க முயல, ஆகாஷ் முல்லைக்கு அழைத்திருந்தான்.

“இதோ கிளம்பிடுவேன். சாப்பிட்டு இருக்கேன்” என்ற ஆகாஷ், ஸ்ப்பீக்கிரில் தான் உணவு மேசையில் புவிக்கு எதிரே உட்கார்ந்து பேசிக் கொண்டிருந்தான்.

“என்ன ஸ்பெஷல் டார்லிங்?”

“உனக்கு பிடிச்சது தான் டார்லிங்.”

“ஊத்தாப்பமாடா!” முல்லை சப்புக்கொட்டிக் கேட்க, “ம்ம்… செம டேஸ்ட்” என இழுத்தான் ஆகாஷ்.

“வெறுப்பேத்தாமா சீக்கிரம் வாடா” என்று இணைப்பைத் துண்டிக்க முயன்றவள்,

“இதுக்கு முன்னாடி உன் போனில் யாருடா பேசினா?”, என கிசுகிசுப்பாகாக் கேட்டாள்.

முல்லையின் அக்குரலில் புவியின் கை ஒரு நொடி நின்று தன் வேலையை தொடர்ந்தது.

“என்னோட அண்ணா.”

“ஏசிபி…”

புவி தம்பியின் அலைபேசியை மேல் விழிகளால் நோக்கினான்.

“எஸ்.”, ஆகாஷ்.

“ஓகே… ஓகே… சீக்கிரம் வா” என்றவள், “அம்மா, அப்பாக்கு விஷ் பண்ணிடு” என்றிட, “நீயே பண்ணு” என்றான்.

“நானா…?”

“ஹம்… ஸ்ப்பீக்கரில் இருக்கு” என்றான் ஆகாஷ்.

“ஹேப்பி வெட்டிங்க் ஆனிவெர்சரி அங்கிள் அண்ட் ஆண்ட்டி. பிளஸ் மீ” என்று முல்லை குரல் நிறைய உற்சாகத்தோடு வாழ்த்திட,

“நன்றிம்மா. சந்தோஷமா இருக்கணும்” என்று ஒன்றாகக் கூறினர் அமிர்தமும், திருவும்.

“பாய் டா. ஸ்பீடா வராம மெதுவா டிரைவ் பண்ணு” என்று முல்லை வைத்திட, புவியின் பார்வை தம்பியை துளைத்தது.

“க்ளோஸ் ஃபிரண்டா?”

“ஆமாண்ணா. ரொம்ப பிடிக்கும்” என்ற ஆகாஷ், “சரியான அராத்து” என்றான்.

“தெரியுது…” என்று புவி சொல்ல, “நல்ல பொண்ணா தெரியுது. வாழ்த்துலாம் சொல்லியிருக்கு, வீட்டுக்கு கூட்டிட்டு வா சின்னக்குட்டி” என்றார் அமிர்தம்.

“டன்” என்ற ஆகாஷ் உணவினை முடித்துக்கொண்டு எழுந்துவிட்டான்.

“பை காய்ஸ்” என்று கல்லூரி கிளம்பிட, “மொபைல் விட்டுப்போற” என்று புவி அலைபேசியை எடுத்து நீட்டிட, திரையில் ஆகாஷ் உடன் முல்லை, தீப்ஸ் இருக்கும் புகைப்படம் ஒளிர்ந்தது.

ஆகாஷ் அலைபேசியை வாங்கிக்கொண்ட பின்னரும் புவியின் பார்வை அதன் திரையிலே படிந்திருந்தது.

அவனுள் படத்தில் இருக்கும் இரண்டு பெண்களில் தற்போது பேசிய பெண் யாராக இருக்குமென்று யோசனை.

ஏனோ அவனிடம் அக்குரலில் தென்பட்ட, உரிமை, அக்கறை, விளையாட்டு என பலவகை உணர்வு ஏதோ தாக்கத்தை ஏற்படுத்தியிருந்தது.

“உன் ஃபிரண்ட் சாப்பாடு கேட்டாங்க தானே?” என்று புவி சொல்லிட, தலையில் தட்டிக்கொண்ட ஆகாஷ், “மறந்துட்டேன். போனதும் ரெண்டு வானரமும் பேக்கை ஆராயுங்க” என்று அமிர்தம் கொடுத்த உணவடங்கிய டப்பாவை வாங்கி பையில் வைத்துக்கொண்டு சென்றுவிட்டான்.

“ஏதும் இருக்கும்?” திரு மனைவியிடம் ஆராய்வாகக் கேட்க,

அவர் கேட்டது அமிர்ததற்கு புரியவில்லை.

“சான்ஸ் இல்லைப்பா. பிரண்ட்ஸ், அவ்வளவு தான். அப்படியிருந்தால் நம்ம முன்னாடி இவ்வளவு ஓப்பனா பேசியிருக்கமாட்டான்” என்றான் புவி.

“ம்ம்…” என்று திருவும் பள்ளி செல்ல நகர,

“ஈவ்வினிங் ஆஷ் வந்ததும் உங்களை போட்டுக் கொடுத்திடுவேன்” என்றான் புவி.

“அடேய்… ஏன்டா?” என்று மகனின் அருகில் வந்த திரு, “நான் எதோ ஆர்வத்தில் கேட்டேன் டா” என்று புவியின் கன்னம் தடவி ஐஸ் வைத்தவாறு, “சொல்லிடாத புவி… என்னை நம்பலையா கேட்டு ஓடவிட்டுடுவான்” என்றார். சிறு மன்றாடலாய்.

அமிர்தம் சிரித்திட…

“நான் அவனோட சாக்லேட் சாப்பிட்டுட்டேன் போன வீக் மாட்டிவிட்டிங்க தானே! இப்போ இதை நான் சொல்லுவேன்” என்று புவி மேலும் தந்தையிடம் வம்பு செய்தான்.

“நான் வேணும்னா இன்னைக்கு ரெண்டு சாக்லேட் வாங்கித் தரேன் தங்கம்” என்று டீல் பேசினார் திரு.

புவியும் யோசிப்பது போல் பாவனை செய்து, பெரிய மனிதனாக இறங்கி வந்தான்.

“ஓகே நாலா வாங்கி வாங்க” என்றான்.

“அடேய்… நீ போலீஸ்டா. உன்னை பார்த்து பெரிய பெரிய ரவுடிங்களாம் பயப்படுறாங்க. இன்னும் சின்னப்பையன் போல சாக்லேட் கேட்கிற” என்றார் திரு.

“சாக்லேட் சாப்பிட வயசிருக்கா?” எனக் கேட்ட புவி, “அம்மா… அப்பாக்கு பதில் சொல்லுங்க” என்றான்.

“பசங்க ரெண்டு பேரும் நமக்கு எப்பவும் குழந்தைகள் தாங்க” என்றார் அமிர்தம்.

“புரியுது” என்ற திரு, “நீயும், ஆகாஷூம் தான் கண்ணா எங்க உலகமே” என்று மகனின் கன்னம் தட்டிச் சென்றார்.

______________________

“எவ்வளவு நேரம்டா பக்கி” என்ற தீபிகா, ஆகாஷின் பையை பிடுங்கி டப்பாவை எடுத்து உணவு உண்ணத் துவங்கிவிட்டாள்.

“சோறு இருந்தா போதுமே” என்று இருவருக்கும் நடுவில் இடித்துக்கொண்டு அமர்ந்த ஆகாஷ்,

“ஹேப்பி பர்த்டே பக்கி” என்று தீபிகாவை வாழ்த்தினான்.

“தேங்க்ஸ்.” உணவினை வாயில் அதக்கிக்கொண்டு தீபிகா சொல்லிட,

“மெதுவா சாப்பிடு” என்று சொல்லிவிட்டு,

“சீக்கிரம் டவுட் கிளியர் பண்ணு டார்லிங்” என்று புத்தகத்தை வெளியில் எடுத்தான்.

முல்லை அவன் கேட்ட பகுதியை விவரிக்க, கவனித்துக் கொண்டிருந்த ஆகாஷ்,

“நீயே மொக்கிடாத, அவளுக்கும் தான்” என்று மூடியில் தானே எடுத்து வைத்து முல்லைக்கு ஊட்டிவிட்டான்.

முல்லை விவரித்து முடிக்க, அவனும் ஊட்டி முடித்திருந்தான்.

“ஓகேவா?” முல்லை கேட்க,

“இப்போ தான் திருப்தியா இருக்கு” என்று வயிற்றில் தடவினாள் தீபிகா.

“ஹேய் லூசு… அவள் ச்சாப்ட்டர் புரிஞ்சுதா கேட்டாள்” என்று தீபிகாவின் தலையிலே கொட்டினான் ஆகாஷ்.

தீபிகா திருதிருக்க…

“பிரகாசமா தெரியுது” என்றாள் முல்லை.

“என்னது?” தீபிகா கேட்க,

“நீ எக்சாம் எழுதும் லட்சணம்” என்றான் ஆகாஷ்.

தீபிகா சிணுங்கலாகக் காலினை உதற, மணி அடித்தது.

இருவரும் தீபிகாவை இழுத்துக்கொண்டு வகுப்பிற்கு ஓடினர்.

தேர்வு முடிந்து முதலில் வெளிவந்த முல்லை, மற்ற இருவரின் பைகளையும் எடுத்துக்கொண்டு, தாங்கள் எப்போதும் அமரும் குல்முகர் மரத்திற்கு கீழ் வந்து சுற்று மேடையில் அமர்ந்தாள்.

ஆகாஷின் பையில் இருந்த அலைபேசி கிர்ரென்று அதிர்வை ஏற்படுத்தியது.

யாரென்று எடுத்துப் பார்க்க, புவியிடமிருந்து அழைப்பு. நின்றும் விட்டது.

இரவு புவி தோரணையாக நடந்து வந்த காட்சி முல்லையின் கண்ணில் விரிந்தது.

“மாஸானா ஆள் தான்” என்று சொல்லிக் கொண்டாள்.

‘எப்படியும் தேங்க்ஸ் சொல்லிடனும்’ என நினைத்துக் கொண்டாள்.

ஆகாஷ் வந்துவிட இருவரும் தீபிகாவுக்கு காத்திருந்தவாரு இன்னும் பத்து தினங்களில் நடைபெற இருக்கும் அவர்களது கல்லூரி விழாவிற்கு தங்கள் வகுப்பு மாணவர்கள் ஆடவிருக்கும் நடனம் பற்றி பேசிக் கொண்டிருந்தனர்.

“ஸ்டெப்ஸ் எல்லாம் ஓகேடா! கேர்ள்ஸ்க்கு சூஸ் பண்ணியிருக்க காஸ்டியூம் சரியில்லைன்னு தீப்ஸ் புலம்பிட்டு இருந்தாள்” என்றாள் முல்லை.

“அம்மாகிட்ட கேட்டேன். கேர்ள்ஸ் எல்லாம் வந்தா எந்த மாதிரின்னு ஸ்டிச் பண்ணிடலாம் சொன்னாங்க” என்றான் ஆகாஷ்.

தேர்வு நேரம் முழுதாய் முடிந்த பின்னர் தான் தீபிகா அங்கு வந்து சேர்ந்தாள்.

“எப்படி பண்ண?” முல்லையும், ஆகாஷும் ஒன்றாகக் கேட்டனர்.

“பாஸ் மார்க் வரும்!” அசட்டையாகக் கூறினாள் தீபிகா.

“நான் கூட, நீ ஃபுல் மார்க் வாங்கத்தான் மாங்கு மாங்குன்னு எழுதிட்டு இருக்கன்னு தப்பா நினைச்சிட்டேன் தீபி” என்று ஆகாஷ் கிண்டல் செய்தான்.

“இண்டர்னல்ஸ் தானே! பார்த்துக்கலாம் விடுங்க” என்ற தீபி, “இவள் ஒரு போலீசுக்கு தீவிர விசிறி ஆகிட்டாடா” என்று முல்லையை பார்த்து கண்ணடித்தவளாக, ஆகாஷிடம் மாட்டிவிட்டாள்.

“நிஜமாவா டார்லிங்?” ஆகாஷ் ஆச்சரியமாகக் கேட்டிட,

“அவங்க மேல கிரஷ்ஷாம்” என்று ராகம் இழுத்தாள் தீபிகா.

“ஹேய்… யாரது?” என்று ஆகாஷ் வினவ, “உங்க அண்ணா உனக்கு கால் பண்ணார்” என்று தன் கையிலிருந்த அலைபேசியை அவனிடம் கொடுத்தாள்.

“அண்ணாவா? காலேஜ் டைம் பண்ணமாட்டாங்களே…” என ஆகாஷ் தான் அவளிடம் கேட்டதை மறந்தவனாக, புவிக்கு அழைத்தான்.

முல்லை தீபிகாவை பார்வையாலே எரித்தாள்.

ஆகாஷ் சற்று தள்ளிச்செல்ல,

“அறிவிருக்காடி… ஆகாஷ் நம்ம ஃபிரண்ட். அவங்க அண்ணான்னு தெரிந்தால், எப்படி தெரியும் கேட்பான். அப்புறம் நேத்து நடந்தது எல்லாம் சொல்லணும். ஆகாஷ் அது என் பிரண்டுங்கன்னு போய் சொன்னா அவ்ளோ தான்… வீரமுத்து என் படிப்பை காலி பண்ணிப்போடும்” என்றாள்.

“தேவையில்லாம பயப்படுற நீ.” சொல்லிய தீபிகா சிரித்தாள்.

“உனக்கு வீரமுத்து பத்தி சரியா தெரியல” என்ற முல்லை, “அவர் சொல்லை மீறி நடந்துகிட்டாருன்னு, மகனையே இருபத்தி ஏழு வருசமா ஒதுக்கி வச்சிருக்கார்” என்று பெருமூச்சு விட்டாள்.

வேறு சில தோழிகள் வர அவர்களின் பேச்சு தடைப்பட்டது.

“அண்ணா கால் பண்ணியிருக்கீங்க?”

“எக்ஸாம் முடிஞ்சுதா?”

“இப்போ தான்.”

“அம்மா கோவிலுக்கு போகனும் சொன்னாங்க. நேரா வந்திடு” என்று வைத்திட்டான்.

ஆகாஷ் தோழிகளின் அருகில் வர,

அவர்கள் நடனத்திற்கு உண்டான ஆடை குறித்து பேசிக் கொண்டிருந்தனர்.

“என்ன மாநாடு?” ஆகாஷ் கேட்டுக்கொண்டே வர,

“உங்க அம்மாகிட்ட பேசிட்டியா ஆகாஷ். எப்போ வரலாம்?” எனக் கேட்டாள் நித்யா.

“நாளைக்கு சனிக்கிழமை காலேஜ் இல்லை தானே… வாங்க” என்றான்.

“டன்” என்ற ஸ்ருதி, “பாய்ஸ் ட்ரெஸ் ரெடி ஆகிடுச்சா?” எனக் கேட்டாள்.

“டூ, திரி டேசில் ரெடியாகிடும்” என்ற ஆகாஷ், “நான் சீக்கிரம் போகனும் டார்லிங்… பைய், அப்புறம் கால் பண்றேன்” எனக் கிளம்பிவிட்டான்.

___________________________

“நான் வரல. நீ போயிட்டு வா.”

கோவிலுக்குள் வரவில்லை என முல்லை அடம் பிடித்துக் கொண்டிருந்தாள்.

அவளை அழைத்துச்செல்ல தீபிகா போராடிக் கொண்டிருந்தாள்.

“இவ்வளவு தூரம் வந்திட்டு கோவிலுக்குள் வரமாட்டேன்னு சொன்னா என்ன அர்த்தம் வனம்.” தீபிகா கடிந்து கொண்டாள்.

“நான் உனக்கு துணைக்கு வந்தேன். உள்ள எல்லாம் வர முடியாது. நான் நல்லாயிருக்கேன். உள்ள இருக்கவரும் நல்லா இருப்பார். அவ்ளோ தான் என் நம்பிக்கை” என்று கோவில் வாயிலில் நின்றுகொண்டு முல்லை தர்க்கம் செய்ய, போலீஸ் வாகனம் வந்து அவர்கள் அருகில் நின்றது.

“ஏசிபி டி.”

வண்டியிலிருந்து தோரணையாக இறங்கி கம்பீரமாக புவி நடந்துவர, முல்லை அவனை அப்பட்டமாக ரசனை பொங்க ஏறிட்டாள்.

“அடியேய்” என்று முல்லையை உலுக்கிய தீபிகா, “அவர் உள்ள போயிட்டார். நீ உன் சைட்டை நிறுத்து. இங்கே நில்லு. எங்கேயும் போயிடாத. சாமி கும்பிட்டு வந்திடுறேன்” என தீபிகா உள்ளே செல்ல, முல்லை தன் கை பையிலிருந்து சிறு காகிதமும், பேனாவும் எடுத்தாள்.

“பிறந்தநாளுக்கு கோவில் போலாம் கூட்டிட்டு வந்தா இப்படி ஒத்தையா சுத்த விட்டுட்டாளே” என்று புலம்பியபடி, தீபிகா கடவுள் சன்னதிக்கு வர, அங்கு ஆகாஷ் அவனது குடும்பத்தோடு நின்றிருந்தான்.

ஆகாஷை மட்டும் பார்த்த தீபிகா…

“ஹேய் பக்கி” என்று கூவியிருந்தாள்.

கண் மூடி இறைவனை வணங்கிக் கொண்டிருந்த ஆகாஷ் தீபிகாவின் குரலில் பட்டென்று இமை திறந்து சுற்றிப் பார்க்க, அவனுக்கு நேரெதிர் நின்றிருந்தாள்.

“ஹேய் நீயென்ன இங்க?” என்று அவளிடம் கேட்ட பின்னரே தன்னருகில் நின்றிருந்த அண்ணனின் நினைவு வந்து பக்கவாட்டில் திரும்பிப் பார்த்தான்.

“ஃப்ரெண்ட்ண்ணா.” ஆகாஷ் உதட்டினை இழுத்து வைத்துக் கூறினான்.

“தெரியுது” என்ற புவி, “மார்னிங் உனக்கு கால் பண்ண பொண்ணா?” எனக் கேட்டான். ஏனோ புவிக்கு ஒரு ஆர்வம். அவளை தெரிந்துக் கொள்வதில்.

அப்போது தான் புவியை கவனித்த தீபிகா, ‘அச்சோ இவரு ஆகாஷ் அண்ணாவாச்சே. உள்ள வரும்போதே இவனை(ஆகாஷ்) பார்த்ததும் யோசிச்சிருக்கணும்’ என நினைத்தவள் மெல்லத் திரும்பிச் செல்ல முயல,

“சாமி கும்பிடாம போறியேம்மா” என்றார் அமிர்தம்.

“சாரி ஆண்ட்டி. உங்களை கவனிக்கல” என்று திரும்பிய தீபிகா, பெரியவர்கள் இருவருக்கும் திருமண நாள் வாழ்த்துக் கூறினாள்.

இருவரும் புன்னகை முகமாக நன்றி சொல்ல…

“அவளுக்கு இன்னைக்கு பிறந்தநாள் ம்மா” என்றான் ஆகாஷ்.

அமிர்தமும், திருவும் அவளுக்கு வாழ்த்து சொல்ல, புவியும் வாழ்த்தினான்.

புவி வாழ்த்தியதை ஒருவித படபடப்போடு ஏற்றுகொண்டவள் சிரித்து வைத்தாள். அவளுக்கு புவி தன்னை கண்டு கொள்வானோ எனும் அச்சம்.

இறைவனை வணங்கி முடித்து மண்டபத்தில் வந்து அமர்ந்தனர். தீபிகாவால் அவர்களை தவிர்க்க முடியவில்லை.

“டார்லிங் எங்கே?” ஆகாஷ் கேட்க,

“அவள் என்னைக்கு சாமி கும்பிட கோவிலுக்கு வந்திருக்காள். புளியோதரை கொடுக்கிறாங்கன்னு சொன்னா முதல் ஆளா வருவாள்” என்று தீபிகா சொல்லிய பாவனையில் பெரியவர்கள் இருவரும் சிரித்தனர்.

“அவளை எதுக்கு டேமேஜ் பன்ற நீ? நீதான் சோறு கண்ட இடமெல்லாம் சொர்க்கம்ன்னு இருப்ப” என்று தன்னுடைய தோழிக்காக தோழியிடமே துணைக்கு பாய்ந்தான்.

“உன் டார்லிங் நான் ஒண்ணும் சொல்லல. என்னை ஆளை விடு. அவள் வெளியில் வெயிட் பண்ணிட்டு இருக்காள். லேட்டாச்சு கடிச்சு குதறிடுவாள்” என்ற தீபிகா, மற்றவர்களிடமும் சொல்லிக்கொண்டு புறப்பட்டாள்.

அடுத்த சில நிமிடங்களில் இவர்களும் வெளியில் வர, பெண்கள் இருவரும் சென்றிருந்தனர்.

திரு பள்ளியில் ஒருமணி நேரம் பெர்மிஷன் போட்டுவிட்டு வந்திருக்க, நேராக பள்ளிக்கு கிளம்பியிருந்தார்.

ஆகாஷ் அமிர்தத்தை கூட்டிக்கொண்டு தன்னுடைய இரு சக்கர வாகனத்தில் அழைத்துச் செல்ல புவி தனது வண்டியை நோக்கி வந்தான்.

அன்னை, தந்தை திருமண நாளுக்காகக் கோவிலுக்கு வருவதால், காவல்துறை வாகன ஓட்டி இல்லாது தனித்து தான் வந்திருந்தான்.

ஓட்டுநர் இருக்கையில் சென்று புவி அமர, முன்பக்க கண்ணாடிக்கு வெளியில் வைப்பரில் நான்காக மடிக்கப்பட்ட வெள்ளைத்தாள் சொருகி வைக்கப்பட்டிருந்தது.

Click on a star to rate it!

Rating 4.8 / 5. Vote count: 39

No votes so far! Be the first to rate this post.

இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
5
+1
51
+1
0
+1
2

உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள் 

4 Comments

  1. இது தான் முல்லையின் முதல் மடலா?….