Loading

சபதம் – 28

 

நகுதற் பொருட்டன்று நட்டல் மிகுதிக்கண்
மேற்செனறு இடித்தற் பொருட்டு. (குறல் – 784) 

 

பொருள்:

 

நட்புச் செய்து கொள்வது நண்பரோடு சிரித்து மகிழ்வதற்காக மட்டும் அன்று; அவர் மிகுதியாகத் தவறு செய்யும் போது, அவரைக் கடிந்து திருத்துவதற்கே ஆகும்.

-புலியூர்க் கேசிகன் (திருக்குறள் – புதிய உரை)

 

நிலவின் ஒளியில் அரவள்ளி மின்னிக் கொண்டிருக்க, அழகில் இருக்கும் ஆபத்தை அந்தக் காடு மனிதர்களுக்கு விவரித்துக் கொண்டிருந்தது. அந்த இரவு, ராணாவிலும் அதிவாரிலும் இருந்த மக்கள் அனைவரும் அவசரமாக கோட்டைக்குள் அழைத்துவரப்பட்டனர்.

குழந்தைகள் அழுதுகொண்டே வந்தனர், பெண்கள் தங்கள் பொருட்களைச் சுருட்டிக் கொண்டு ஓடினர், முதியவர்கள் ஒருவரை ஒருவர் தாங்கிக் கொண்டனர்.
கோட்டையின் பெரிய வாயில் மெதுவாக மூடப்பட்டபோது, அரவள்ளி முழுவதும் ஒரு கனமான அமைதி இறங்கியது.

 

வீரும் ரணசூரும் காட்டின் எல்லையில் காவலுக்கு நின்றிருந்தனர். அவர்களுடன் தேர்ந்தெடுக்கப்பட்ட போர்வீரர்கள், வில்லாளர்கள், குதிரைப்படை, காவலர்கள் அனைவரும் ஆயுதம் ஏந்திக் காத்திருந்தனர்.

 

நேரம் செல்ல செல்ல காற்று குளிர்ந்து, காடு இருண்டது. தொலைவில் ஓநாய்களின் குரல் ஒலிக்க, அதனை கேட்டிருந்த ரணசூர், “இன்று அவர்கள் வருவார்கள் என்று நினைத்தேன்” என்றான்.

 

அதற்கு பதிலளித்த வீர், ” அவர்கள் நம்மை நிலைகுலைய வைக்க விரும்புகிறார்கள். எதிர்பாராத நேரத்தில் தாக்கினால் நாம் செயல் இழப்போம் என்று நம்புகிறார்கள்” என்றபடி

இருவரும் இருளை நோக்கி பார்த்தனர், முகலர்கள் எப்போது வேண்டுமானாலும் பாய்ந்து வரலாம் என்ற உணர்வுடன்.

 

ஆனால் அந்த இரவு… தாக்குதல் நடக்கவில்லை. காடு அமைதியாக இருந்தது. முகலர்களின் குதிரையின் காலடி சத்தமும் இல்லை. அது ஒரு விசித்திரமான அமைதி. புயல் தன் மூச்சை நிறுத்தியது போன்ற அமைதி.

 

மறுநாள் காலைப்பொழுது, கோட்டையின் உள்ளே மக்கள் இன்னும் பயத்துடன் இருந்தனர்.

குழந்தைகள் விளையாடாமல் தாய்களின் பின்னால் ஒளிந்துகொண்டனர். வீர் ஒவ்வொரு கிராமத்திற்கும் காவலர்களை அனுப்பினார். ரணசூர் குதிரையில் ஏறி எல்லைப் பகுதிகளைச் சுற்றிப் வந்தான்.

முகலர்கள் அன்று மட்டுமல்ல அதன் பின் வந்த நாட்களில் தாக்குதல் நடக்கவில்லை. ஆனால் அவர்கள் மறைந்துவிடவும் இல்லை. அவர்கள் காட்டின் எங்கோ இருந்தனர். இரண்டு ராஜ்யத்தையும் கவனித்துக் கொண்டிருந்தனர். சரியான தருணத்துக்காக காத்திருந்தனர்.

 

அந்த அமைதி ராணாவுக்கும் அதிவாருக்கும் இன்னும் அதிகமான பதட்டத்தை ஏற்படுத்தியது.

 

ராணா அரசரின் தனி அறை மங்கலான விளக்கில் மூழ்கியிருந்தது. சந்தனத்தின் மணம் காற்றில் நீண்டுகொண்டிருந்தது. மேசையின் மேல் ஓலைச் சுருள்கள் சிதறிக் கிடந்தன, அதில் அரவள்ளியின் வரைபடங்கள் பொறிக்கப்பட்டிருந்தன.

 

கதவு மெதுவாக திறந்த சத்தம் கேட்டதும் அரசர் தனது கவனத்தை அதன் பக்கம் திருப்பினார். இளவரசி யசோதரா உள்ளே வந்தாள். அவள் கண்கள் அழுதழுது சிவந்திருந்தன.

 

அதனை கண்ட அரசர், “வா மகளே! இந்த நேரத்தில் தந்தையை தேடி வர காரணம் என்னவோ?” என்று இலகுவாக தொடங்கியவரின் வார்த்தைகளைக் மகளின் நிலை கண்டு, “யசோ? எதற்காக அழுகிறாய், மகளே? என்னவாயிற்று?” என்றார்.

 

தந்தையை பார்த்ததோ, இல்லை அவர் குரலில் இருந்த பரிவோ ஏதோ ஒன்று அவளை நிலை இழக்க வைத்தது. தந்தையின் முன் மண்டியிட்டு அமர்ந்தவளால், விழிகளில் வடிந்த கண்ணீரை தடுக்க முடியவில்லை.

 

தன் காலடியில் யாசகம் கேட்பது போல் அமர்ந்து கண்ணீர் சிந்திக் கொண்டிருக்கும் மகளை அப்படி காண சகிக்காத அரசர் , மகளை தூக்கி அணைத்தபடி அங்கிருந்த படுக்கையில் அமரவைத்து, தனது தோளில் சாய்த்து கொண்டவர், “ஏன் அம்மா இந்த கண்ணீர்? என்னவாயிற்று? என்னிடம் சொல். அனைத்தையும் நான் பார்த்துக் கொள்கிறேன்” என்றார்.

 

அதைக் கேட்ட யசோதராவிற்கு மேலும் கண்ணீர் பொங்க, “அப்பா… நான் தவறிழைத்து விட்டேன். ரணசூரை காயப்படுத்திவிட்டேன்” என்றவள் கண்ணீர் தந்தையின் மேல் அங்கியை நனைத்தது.

 

மகளின் நிலை கண்டு குழம்பியவர், ” என்ன தவறு மகளே? தவறுகள் திருத்தப்பட கூடியதாக இருந்தால், அதனை மேற்கொள்ள தயங்காதே. அதுவும் இல்லாமல் ரணசூர் உனது அண்ணன் தானே அவனிடம் மன்னிப்பு கேட்க தயங்காதே” என்றார் வெகு இலகுவாக.

 

அதனை கேட்டு வேதனையுடன் தந்தையை பார்த்தவள், “தெரியாமல் செய்யும் தவறுக்கு தானே அப்பா மன்னிப்பு கிடைக்கும். தெரிந்து செய்த தவறுக்கு எப்படி நான் மன்னிப்பை வேண்டுவேன்” என்றவளை தேற்ற வலி தெரியாமல் திணறினார் அரசர்.

 

“சரி மகளே, நீ தெரிந்து செய்த தவறு தான் என்ன? என்னிடம் சொல் எதாவது வழி இருக்கிறதா என்று பார்ப்போம்” என்றவரை பயத்துடன் பார்த்த யசோதரா, ஒரு முடிவுடன் அனைத்தையும் சொல்ல தொடங்கினாள்.

 

“நான்… வீரும் நானும்…நாங்கள் ஒருவரை ஒருவர் நேசிக்கிறோம் அப்பா” என்று தலை தாழ்த்திக்கொண்டு சொன்னவள், அவளது தந்தையிடம் எந்த எதிர்வினையும் வராமல் இருப்பதை உணர்ந்து நிமிர்ந்து பார்த்தாள்.

 

அவரின் கண்களில் எப்போதும் இருக்கும் ஒளி சற்றும் குன்றாமல், மேலே சொல் என்பது போல் மகளை பார்த்திருந்து, “உங்களிடம் மறைக்க வேண்டும் என்ற எண்ணம் இல்லை அப்பா. சொல்ல தைரியம் இல்லை” என்றவளின் தலையை வருடியவர், “காதல் என்றால் எங்கிருந்து திருட்டுத்தனம் வருகிறதோ. சரி அதற்கும் உன் அண்ணனுக்கும் enna சம்மந்தம்” என்றவர் சற்று யோசித்து, “இதை நீ சொன்னதும் உன் அண்ணன் கோவம் கொண்டுவிட்டானா? அவரசரக்காரன்…” என்றவர் சிரித்தபடி தலையை இருபுறம் அசைத்தவர் மகளிடம் , “நீ விரும்புவது அவனது தோழன் என்பதை சொல்லி இருந்தாயானால், இன்று இந்த அரண்மனையே அதிரும் வண்ணம் கொண்டாடி இருப்பான்” என்றவரின் சிரிப்பு மகளின் முகத்தில் இருந்த வேதனையில் நின்றது.

கண்களை துடைத்தபடி தொடர்ந்த யசோதரா, “அண்ணாவுக்கு நான் காதலிப்பதை தெரிவிக்கவில்லை. அதனை அவருக்கு யார் தெரியப்படுத்தியது என்பது எனக்கு தெரியாது ஆனால் நானோ வீரோ அதனை அவருக்கு சொல்ல வில்லை” என்றவளின் குரல் தேய்ந்து போய் இருந்தது.

 

“தவறு மகளே! உன் பக்க வாதங்கள் எனக்கு புரிகிறது. அதே போல் உன் அண்ணன் பக்க நியாயங்களும் புரிகிறது. அவன் உயிராய் நினைக்கும் இருவர் வாயில் இருந்து அறிந்திருக்க வேண்டிய இந்த செய்தியை, மற்றவர் மூலம் அறிந்த ரணசூரனுக்கு வலித்திருக்கும் தானே”

 

“தெரிந்து செய்யவில்லை அப்பா. இப்படி நடக்கும் என்று எதிர்பார்க்க வில்லை” என்றவளிடம், “எதிர்பார்த்திருக்க வேண்டும் மகளே. அரண்மனையில் இருட்டுக்கும் காதிருக்கும். ரணசூரன் மனநிலை நீங்கள் இருவரும் அவனை ஏமாற்றிவிட்டதாகவே நினைக்கும். நம்பிய உறவு நம்மை ஏமாற்றும் வலி பெரியது மகளே. அதனால் தான் உன் அண்ணன் இரவெல்லாம் தூங்க முடியாமல் கோட்டை காவலுக்கு செல்கிறான் போல” என்ற அரசர் மெதுவாக பின்னால் சாய்ந்து அவளது வார்த்தைகளை உள்வாங்கினார்.

அரசருக்கு அவர்கள் காதல் முன்னமே தெரியும். அதிலும் மகள் அல்லாமல் மற்றவர் மூலம் அறிந்திருந்தால் அவரும் ரணசூரனை போல் தான் துடித்திருப்பார். அவர் எழுந்து நின்றார், ” இனி உங்கள் காதல் ரகசியமாக இருக்க முடியாது. நாளை எனக்கு தெரிந்த உங்கள் காதலை அதிவாரின் அரசரிடம் இருந்து நான் மறைத்தால் மிகப்பெரிய விபரீதம் நேரும். இரு இளவரசர்கள் சண்டையிட்டால் இரு இராச்சியங்களும் பிளந்து போகும். இது நஞ்சாக மாறுவதற்கு முன் தீர்வு காண வேண்டும்” என்றவர் மகளது தலையில் மெதுவாக கை வைத்தார்.

 

“போ மகளே போய் உறங்க முயற்சி செய். ரணசூரன் உன் தமையன் அவன் கோபம் எத்தனை நாள் இருக்கப்போகிறது. எறும்பு ஊற கல்லும் தேயும். கவலை கொள்ளாதே. அவனுக்கும் யோசிக்க அவகாசம் கொடு” என்றவர் மகளை அனுப்பிவிட்டு அதிவார் அரசருக்கு அவசர செய்தி ஒன்று அனுப்பினார்.

 

மறுநாள் ராணா அரசபை மன்றம் தனிப்பட்ட சந்திப்புக்காக தயார் செய்யப்பட்டது. அங்கு இருந்தவர்கள் வெகு சிலர் மட்டுமே. அதிவார் அரச குடும்பம், ராணா அரச குடும்பம் மற்றும் ஹூன் வம்சத்தின் மூத்தவர் மட்டும் அமர்ந்திருந்தனர்.

 

அந்த மண்டபம் முழுதும் ஒருவகை பதட்டம் நிரம்பியிருந்தது. வீர் உறைந்து நின்றான். குற்ற உணர்வு முகத்தில் நிழல்போல் படிந்திருந்தது. அவனுக்கு எதிரில் ரணசூர் கைகளை மார்பில் கட்டி, யாரையும் நோக்காமல் நின்றிருந்தான்.

 

அமைதியை முதலில் உடைத்தது அதிவார் அரசர், ” ராணா அரசர் எனக்கு அனைத்தையும் விவரித்தார். எங்களுக்கு கோபமில்லை ஆனால் வருத்தம் நிரம்ப உள்ளது” என்றதும் ரணசூரின் கண்கள் சிறிது அதிர்ச்சியுடன் அசைந்தன.

 

அதனை தொடர்ந்து ராணா அரசர் முன் வந்து, “வீரரும் யசோதராவும் ஒருவரை ஒருவர் நேசிக்கிறார்கள் என்றால்… அந்த நேசத்தை நாம் மதிக்க வேண்டும். அவர்களின் திருமணத்தின் மூலம் இரு இராச்சியங்களையும் ஒன்றிணைப்போம்” என்றபடி தனது மகனை ஏறிட்டார்.

 

அதை கேட்ட யசோதரா அதுவரை அடக்கி வைத்திருந்த மூச்சை வெளியிட்டாள். வீர் இரு அரசர்களையும் வணங்கி நிம்மதியடைந்தான் .

 

அடுத்து அனைவரின் பார்வையும் ரணசூரை நோக்கி திரும்பியது. அவன் தன் சகோதரியைப் பார்த்தான், பின்பு வீரை பார்த்தான். யசோதரா ரணசூரின் இதயம் போன்றவள், வீரோ, தனது உடன்பிறவா சகோதரனை போல நேசிக்கும் மனிதன்.

 

நீண்ட, வேதனையான அமைதிக்குப் பிறகு, ரணசூரன் தலையசைத்தபடி, “நான் இதற்கு தடையாக நிற்க மாட்டேன்” என்றவன் குரலில் இருந்தது மகிழ்ச்சி அல்ல. அது ஒப்புதல் கூட அல்ல. அது ஒருவகை ஏற்றுக்கொள்ளுதல்.

 

இரு அரசர்களும் கைகளை பற்றிக் கொண்டு உடன்பாட்டை உறுதிசெய்தனர்.

 

“அதிவாரும் ராணாவும் இனி ஒன்றாக நிற்கும்” என்றவர்களின் எதிர்காலம் பிரகாசமாகத் தோன்றியது.

 

அதே நேரம் தொலைவில் முகலாய ஆளுநரின் கூடாரத்தில் ஒரு உருவம் தான் உளவு பார்த்த இந்த செய்தியை கிசுகிசுத்தான். ஆளுநரின் புன்னகை மெல்லியதாக, “ராணாவும் அதிவாரும் ஒன்றானால்…அரவள்ளியை கைப்பற்ற முடியாது. அவர்கள் திருமண உடன்பாட்டை முறிக்க வேண்டும். இரு இராச்சியங்களையும் உடைக்க வேண்டும்” என்றவாறு துரோகத்தின் முதல் விதைகள் விதைக்கப்பட்டன.

 

ராணா அரண்மனை இன்னும் மாலைச் சந்திப்பின் விளக்குகளால் ஒளிர்ந்துகொண்டிருந்தது.
இரு அரசர்கள் ஒப்பந்தம் செய்திருந்தனர். இரு இராச்சியங்கள் ஒன்றிணைந்திருந்தன.

வீரரும் யசோதராவும் திருமணம் செய்யப் போவதாக விடியல் நேரத்தில் அறிவிக்கப்படவிருந்தது. அரவள்ளியில் நம்பிக்கை மீண்டும் மூச்செடுத்தது. ஆனால் எதிரிகளின் கண்கள் கண்காணிக்கும் நிலத்தில் நம்பிக்கை நீண்ட நாட்கள் நிலைக்காது.

 

காடு இயற்கைக்கு மாறாக அமைதியாக இருந்தது. பழமையான மரங்களின் மீது நிலா தாழ்ந்து தொங்கியபோது, காற்றுக்கூட தன் மூச்சை நிறுத்தியதுபோல் தோன்றியது.
புனித ஆலமரத்தைச் சுற்றி அமைந்த சிறிய கல் வீடுகளுடன் இருந்த ஹூன் வம்சக் குடியிருப்பு அமைதியாகத் தூங்கிக் கொண்டிருந்தது. நிழல்களுக்குள் மரணம் ஏற்கனவே நகர்ந்து கொண்டிருப்பதை அறியாமல்.

ரணசூரன் வந்துவிட்டான்.. 

 

 

 

 

Click on a star to rate it!

Rating 5 / 5. Vote count: 4

No votes so far! Be the first to rate this post.

இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
1
+1
2
+1
0
+1
0

உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள்