
அத்தியாயம் – 24
சந்துவின் சோதனைக்காலம் அத்தோடு முடியவில்லை என்பதை அடுத்து வந்த சில மாதங்களிலே அவ்வீட்டினர் புரிந்து கொண்டனர்.
அவளை எந்நேரமும் யாரவது ஒருவர் மாறி மாறி தூக்கி வைத்துக் கொண்டே இருந்ததால் அவள் நடப்பதே அரிதாகிப் போனது.
அன்று வார விடுமுறை காரணமாக அவர்கள் எப்பொதும் போல் ஊரிற்கு சென்றிருக்க, அங்கு தான் சந்துவின் அந்த மாற்றத்தை கண்டு பிடித்தனர்.
அங்கு வேலை செய்து கொண்டிருந்த பவுனின் முன்று வயது மகள் அங்குமிங்கும் ஓடி விளையாட, சந்துவையும் கலை இறக்கி விட்டு அவளுடன் விளையாட அனுப்பினார்.
அப்போது தான் அதை கவனித்த ஹரிக்கு பக்கென்று இருக்க, கார்த்திக்கை அழைத்து ,”டேய் அந்த பாப்பாக்கும் சந்து வயசு தான ஆனா அவளை மாதிரி சந்து இல்லைல” என கூற,
அவனை நீ என்னா லூசா என்பது போல் பார்த்த கார்த்திக்,”டேய் உனக்கும் எனக்கும் கூட தான் கிட்டத்தட்ட ஒரு வயசு, அதுக்காக நானும் நீயும் ஒன்னாவா இருக்கோம்..எல்லாருக்குமே வேற வேற மூஞ்சி தான் டா கடவுள் கொடுப்பாரு..இல்லைனா எப்படி கண்டுபிடிக்கிறது” என அதிபுத்திசாலித்தனமாக பதிலளித்தான்.
கார்த்திக் முதுகிலே ஒரு போடு போட்ட ஹரி அங்கு அவர்களிருவர் விளையாடுவதையும் சுட்டிக்காட்டி ,”அந்தப் பாப்பா எவ்வளவு வேகமா ஓடுது ஆனா நம்ம சந்து குட்டி கொஞ்சம் சாஞ்சு மெதுவா நடக்குற மாதிரி இல்லை” என தெளிவாக கூற,
அப்போது தான் அவர்களை உற்றுப்பார்த்த கார்த்திக்கிற்கும் அந்த வித்தியாசம் கண்ணில் பட்டது.
இருவரும் பயத்துடன் அதை பெரியவர்களிடம் சொல்ல, அப்போதே அவளைத் தூக்கிக் கொண்டு அவர்கள் மருத்துவமனைக்கு விரைந்தனர்.
அவளை பரிசோதித்த மருத்துவர் , தன் சந்தேகத்தை ஊர்ஜிதப்படுத்திக் கொள்ள எக்ஸ்ரே எடுத்துப் பார்க்க, அதன் ரிசல்ட் வந்ததும் அதை ஆராய்ந்தவர் பின் அவர்கள் தலையில் மெதுவாக ஒரு இடியை இறக்கினார்.
பிறக்கும் போதிலிருந்தே சில குழந்தைகளுக்கு கால் எழும்புகள் வலைந்து காணப்படும்.
அது குழந்தைகள் வளர்ந்து நடக்கத் துவங்கியபின் அதுவாகவே நேராகி விடுவது ஒரு வகை, இன்னொரு வகை குழந்தைகளுக்கு மூன்று வயதிற்கு மேலாகியும் கால் எழும்புகளின் வளர்ச்சி பாதிக்கப்பட்டால் அது வலைந்து இருப்பது மட்டுமல்லாமல் அவர்கள் நடையிலும் அந்த பாதிப்பு வெளிப்படும்.
அதற்கு Blount disease என்று பெயர். கால்கள் வளைந்திருப்பதை Bow legs என்று குறிப்பிடுவர்.
இந்த நோய் பொதுவாக குழந்தைகளுக்கு அதிகம் தோன்றினாலும், இளம் வயதினருக்கும் வயதானவர்களுக்கும் கூட வருவதற்கு வாய்ப்பு உள்ளது.
இந்த நோய் வரக் காரணம் வைட்டமின் டி குறைபாடு அல்லது கால்சியம் பற்றாக்குறை என மருத்துவர்கள் கூறுகின்றனர்.இதனால் எலும்பின் வளர்ச்சிகள் தடைபட்டு போகிறது சதைக்கு உட்பக்கம் இருக்கும் எலும்பு தன் வளர்ச்சியை பாதியில் நிறுத்தும் போது, ஒரு கால் சிறியதாகவும் ஒரு கால் உயரமாகவும் காணப்படும்.
இன்றைய காலத்தைப் போல் அப்போது நவீன மருத்துவம் ஏதும் இல்லாததால் , இதை ஆபரேஷன் செய்தே சரி செய்தனர்.
இப்போது சந்துவிற்கும் அந்த நோய் தான் வந்திருக்கிறது என மருத்துவர் கூற, அவர்களுக்கு இன்னும் எத்தனை கஷ்டத்தைத் தான் இவள் அனுபவிக்க வேண்டுமோ என மனம் வெதும்பி போயினர்.
மதிவாணன் தான் பயத்தில் ,”எவ்ளோ செலவானாலும் பரவாயில்லை டாக்டர் என் பொண்ணோட கால் மட்டும் சரியாக்கி கொடுத்துறங்க” என மருத்துவரிடம் வேண்ட,
அவரைப் பார்த்து புன்னகைத்த மருத்துவர், ” கூல் மதி சார்.. எல்லாம் சரி பண்ணிரலாம்..ஒரு சின்ன ஆபரேஷன் பண்ணா எல்லாம் சரி ஆய்ரும்” என மீண்டும் அவர்களை கலவரப்படுத்தினார்.
“என்னது ஆபரேஷனா??” என அவர்கள் பதற, “ரொம்ப டென்ஷன் ஆகாதீங்க மா..இப்போ பண்ண போறதில்லை.. குழந்தை இப்போ தான நடக்கவே ஆரம்பிச்சிருக்கா.. நடக்கட்டும் ..அதுவும் இல்லாம அவளுக்கு இப்போ தான் மூனு வயசு ஆகுது இப்போவே ஒன்னும் முடிவு பண்ண வேண்டாம்..மேலும் அவ ரொம்ப பலகீனமா இருக்கா…கொஞ்ச வருஷம் போகட்டும் அது வரைக்கும் அவளுக்கு நல்லா ஹெல்தியான சாப்பாடு வகைகள் கொடுத்து பார்த்துக்கோங்க ..நானும் அவளுக்கு சில மருந்துகள் தரேன் அப்பறம் காலுக்கு சில எக்ஸர்சைஸ் சொல்லி தரேன் அதை பண்ணுங்க…ஒரு சில பேருக்கு இதுலயே அதுவா குணமாகலாம் ..இவளுக்கு ஆய்ட்டா பிரச்சனை இல்லை..இல்லைனாலும் பிரச்சனை இல்லை ஒரு சின்ன ஆபரேஷன் பண்ணி சரி பண்ணிரலாம் டோன்ட் வொர்ரி” என நீளமாக அவர்களிடம் பேசி சமாதானப்படுத்தி அனுப்பி வைத்தார்.
அதன் பின் மருத்துவர் சொன்னதை அவர்கள் செய்து அவளை மேலும் கண்ணும் கருத்துமாக பார்த்துக் கொண்டனர்.
அவளுக்கு பள்ளிக்கு போகும் வயதும் வந்துவிட, மருத்துவரும் கண்டிப்பாக அவள் பள்ளி சென்று வரட்டும் என கூறிவிட்டதால் ஹரி, கார்த்திக்,ஸ்ரீ, ஆதிரா படிக்கும் பள்ளியிலே சந்துவையும் சேர்த்தனர்.
ஆம் கார்த்திக் ,ஆதிரா என்னதான் தாமரைக்குளத்தில் தங்கியிருந்தாலும் அவர்களை கோயம்புத்தூரில் ஹரி ஸ்ரீ படிக்கும் பள்ளியிலே சேர்த்து விட்டிருந்தனர்.
தினமும் காரில் பள்ளிக்குச் சென்று வீடு திரும்பி விடுபவர்கள் , பல சமயம் ஹரி ஸ்ரீ வீட்டிலே தங்கியும் கொள்வர்.
ஹரிக்கும் கார்த்திக்கிற்கும் ஒரு வயதே வித்தியாசம் என்பதால் இருவரும் ஒரே வகுப்பில் படித்தனர்.
முதல் நாள் பள்ளிக்கு கிளம்பிய சந்துவை மொத்த குடும்பமுமே ஆயிரத்தெட்டு அறிவுரைகளைக் கூறி கலவரப் படுத்தியது மட்டுமல்லாமல் மற்ற நால்வரிடமும் இவளை பார்த்துக் கொள்ளச் சொல்லி நூறு முறை சொல்லி அனுப்பினர்.
அதுவே சந்துவின் மனதில் திகிலைக் கிளப்பியது.
பள்ளிக்கு வந்த ஐவரும் முதலில் சந்துவின் வகுப்பறைக்குச் சென்று அவளை அங்கே விட்டனர்,
அடுத்து ஸ்ரீயும் ஆதிராவும் தத்தம் வகுப்பறைக்கு நகரப் போக, சந்துவிற்கு அவர்கள் கிளம்புகிறார்கள் என்றதும் பயத்தில் அழுகத் தொடங்கினாள்.
அவள் அழுதால் தான் ஹரிக்கு பொறுக்காதே உடனே அவன் அவளைத் தூக்கி சமாதனம் செய்ய, ஸ்ரீக்கு கோபம் புசு புசுவென வந்தது.
கார்த்திக் அவளைக் கண்டு கொண்டு, ” என்ன ஸ்ரீ குட்டி காலையில இருந்து அப்பத்தா அடுப்பை காணோம்னு தேடிக்கிட்டு இருந்தாங்க..நீ தான் அதை எடுத்து முழுங்கிட்டியோ இப்படி பத்திகிட்டு எரியுது” என கிண்டல் செய்ய,
அவனை முறைத்தவள் ஹரியின் புறம் திரும்பி,”ஹரி மிஸ் வந்துருவாங்க கிளாஸுக்கு போலாம் ” எனக் கூற,
அவளைப் பார்த்த ஹரி ,”சந்து அழுகுறா லட்டு நீயும் ஆதியும் க்ளாஸுக்கு போங்க நாங்க பாப்பாவை அவங்க மிஸ் வந்ததும் விட்டுட்டு வரோம்” என தன்மையாகவே பதிலளித்தான்.
அவனின் பேச்சு அவளுக்குள் மேலும் கோபத்தைத் தூண்டியது ,”அப்போ என்னை விட அவ தான் அவனுக்கு முக்கியமா” என தேவையில்லாமல் குழம்பியவள் ,”இனிமே என் கிட்ட பேசாத ..உன் பேச்சு டூ.. போ” என கூறியவள் அவனை திரும்பியும் பாராமல் தன் வகுப்பறைக்கு ஓடிச் சென்று விட்டாள்.
“ப்ச்” என கார்த்திக் சலித்துக்கொள்ள, “விடுடா அவளால என் கிட்ட பேசாமலாம் இருக்க முடியாது.. இன்டெர்வெல்ல வந்து ஹரி கேன்டீனுக்கு போய் வடை வாங்கி குடுன்னு வந்து நிப்பா பாரு” என குறும்புடன் கூறிய ஹரி, பின் சந்துவின் அழுகையை குறைத்து அவளுக்கு தைரியமளித்து விட்டு அவளின் வகுப்பாசிரியை வந்த பின்னே தான் தன் வகுப்பிற்கு சென்றான்.
சந்து மிகவும் பயந்த சுபாவமுடைய பெண்ணாக மாறியதற்கு முக்கிய காரணம் அவள் குடும்பம். அவர்கள் அவளை தங்கள் பாதுகாப்பிலே பொத்தி பொத்தி வளர்த்தது இப்போது அவளின் மனதையும் மேலும் பலவீனமாக்கியிருந்தது.
அந்த வகுப்பில் இருந்த குழந்தைகளிடம் தானாக சென்று பேச பயந்து கொண்டு அவள் ஒதுங்கியே இருக்க, அதுவே மற்ற குழந்தைகளை அவளிடம் வம்பு வளர்க்க காரணமாகிப் போனது.
மேலும் அவள் ஒரு பக்கம் தாங்கி தாங்கி நடப்பதை வேறு அவர்கள் கண்டு அவளை ‘நொண்டி’ ‘நொண்டி’ என கிண்டலடிக்க, அது அவள் மனதில் ஆழப் பதிந்து போனது.
இதன் விளைவாக அவள் மறுநாளே பள்ளி செல்ல மாட்டேன் என அழ, ஏன் என்று கேட்டவர்களிடம் ஏனோ அந்த ‘நொண்டி’ என்ற வார்த்தையைச் சொல்ல அவள் விரும்பவில்லை.
அது அவள் மனதை வெகுவாக பாதித்திருந்தது, எங்கே அதைச் சொன்னால் இவர்களுக்கும் தன்னை பிடிக்காதோ என சரியாக தவறான காரணத்தை கண்டிபிடித்தவள் ,”போ மாட்டே” என்று மட்டும் அழுக,
ஹரி தான் அவளை கெஞ்சி கூத்தாடி அழைத்து வந்தான்.
அவள் தினமும் பள்ளி சென்று வீடு திரும்பும் போது நான் போக மாட்டேன் என மீண்டும் தன் பல்லவியைத் தொடங்க, அதில் கடுப்பான ஹரி இவளிடம் கெஞ்சினாள் ஒத்து வர மாட்டாள் என நினைத்து ,” இதோ பார் சந்து நீ மட்டும் இனிமேல் ஸ்கூல்க்கு போக மாட்டேன்னு சொன்னா என் கிட்ட பேசவே பேசாத நான் கார்த்திக் கூட பாட்டி வீட்டுக்கு போய்ருவேன்” என அதிரடியாக கூறினான்.
அது அவள் மனதில் கிலியைக் கொடுக்க, தன் அண்ணனை விட்டு பிரிய மனமில்லாமல் தன் துக்கத்தை தன்னுள்ளே புதைத்துக் கொண்டு அந்த கேலி கிண்டல்களை அனுபவிப்பதே பரவாயில்லை என நினைத்த் அன்றிலிருந்து ஒழுங்காக பள்ளி சென்று வந்தாள்.
ஹரி கார்த்திக் அப்போது ஆறாம் வகுப்பு படித்துக் கொண்டிருந்ததால் அவர்களுக்கு வேறு ப்ளாக்கில் வகுப்புகள் நடக்கும், எனவே தான் அவனுக்கு தன் தங்கை படும் துன்பங்கள் தெரியாமலே போயின..
அது தெரிய வந்த போதே அவனின் ஆருயிர் தங்கை மனதைரியத்தை முழுவதும் இழந்து ஒரு கோழை ஆகிப் போயிருப்பாள் என அவனுக்குத் தெரியவில்லை.
அதன் பின் அவர்கள் வீட்டின் கடைசி வாரிசான அஷ்வின் சாருமதியின் பொன் வயிற்றில் இருந்து பூமிக்கு வர, அனைவரும் அவனை கொஞ்சி மகிழ்வதில் தங்கள் பொழுதைக் கழிக்க, சந்துவும் வீட்டிற்கு வரும்போது மட்டும் அந்த மழலையின் அருகில் மட்டும் தன்னுடைய கவலைகளை மறந்து நிம்மதியாக இருப்பாள்.
வருடங்களும் உருண்டோடின, ஆனால் ஹரி, சந்து ஸ்ரீயின் மீது கொண்ட அன்பிலும், சந்துவின் பயத்திலும், ஸ்ரீயின் பொசசிவ்னெஸிலும் சிறிதளவும் மாற்றம் தான் இல்லை.
அப்போது சந்துவிற்கு எட்டு வயது, இன்னும் ஒரு மாதத்தில் ஆபரேஷன் செய்தால் சரியாக இருக்கும் என மருத்துவர் கூறிவிட, அவர்களும் அதற்கேற்றவாறு சந்துவை மனதளவில் தயார்படுத்திக் கொண்டிருந்தனர்.
அன்று ஹரி பிரின்சிபாலை சந்திக்க சந்துவின் அறை வழியாக கடந்து செல்லும் போது தங்கையைப் பார்க்கும் ஆர்வத்தில் அவள் வகுப்பிற்குள் நுழைய,அங்கு கண்ட காட்சியில் அவன் கோபம் எல்லையைக் கடந்தது.
சந்து அமர்ந்து அழுது கொண்டிருக்க, அவளை சுற்றி சில குழந்தைகள் அவளை ,”நொண்டி ” ‘நொண்டி”என கத்தி அவளை கிண்டல் செய்து கொண்டிருக்க, அதில் ஒரு விஷமம் நிறைந்த வாண்டு ஒரு படி மேலே போய்,” நீ எதுக்கு ஸ்கூலுக்குலாம் வர, படம்லாம் பாக்க மாட்டியா உன்னை மாதிரி நொண்டியெல்லாம் பிச்சை தான் எடுக்கனும் இங்க எல்லாம் வரக்கூடாது” என கூற,
ஹரிக்கு வந்த ஆத்திரத்தில் அவன் சிறுவன் என்றும் பாராமல் அவனை அடித்தே விட்டான்.
அதன் பின் அங்கிருந்த எல்லோரையும் பார்த்து ,”என் தங்கச்சியை இனிமேல் யாராவது எதுனாலும் சொன்னீங்க..கொன்றுவேன்” எனக் கூறியவன் அவளை அழைத்துக் கொண்டு வெளியே வந்தான்.
அவனைக் கட்டிக் கொண்டு அழுத சந்துவை பார்க்க பார்க்க அவனால் மன வலியை தாங்க முடியவில்லை,”ஏன் சந்துமா அண்ணா கிட்ட இதெல்லாம் முன்னாடியே சொல்லலை ” எனக் கேட்டாலும் அவள் பதில் கூறாமல் அழுதுகொண்டே இருக்க,
அவனுக்கு தன் மீதே கோபம் வந்தது, என்னை நம்பி இவளை அனுப்பினால் நான் இவளை இப்படி தவிக்க விட்டிருக்கிறேனே என காலம் கடந்து வருந்தி தவித்தான் அந்த தமையன்.
சந்துவின் ஆபரேஷன் நாளும் இனிதே துவங்க,
மொத்த குடும்பமும் அங்கு தான் கூடியிருந்தது. அனைவரும் அவளுக்கு குணமாக வேண்டும் என பிரார்த்தித்துக் கொண்டு இருக்க, ஆபரேஷன் தியேட்டருக்கு அழைத்துச் செல்வதற்கு முன் ஹரியை அழைத்தவள் முதன் முறையாக தன் மனதைத் திறந்து ,” நான் இனிமேல் நொண்டி இல்லைல அண்ணா..அப்போ நான் பிச்சை எடுக்க வேணாமில்லை” என கண்களில் வலியுடன் கேட்டவள் அப்படியே ஆபரேஷன் தியேட்டருக்குள் நுழைய,
ஹரி மட்டுமல்லாது அங்கிருந்த அனைவரும் அவள் கேள்வியில் அப்படியே ஸ்தம்பித்துப் போய் நின்றனர்!!!!!!!!

