
அத்தியாயம் 04
வள்ளியம்மாவை வைத்திருக்கும் அறையை நோக்கி சென்ற பர்விதா முன்பு வந்தான் அஸ்வந்.
“ஹாய் பர்வி.. நம்ம பிளான் பண்ணபடி நாளைக்கு அரப்பு வைக்கிற ஃபங்ஷனுக்கு யல்லோ கலர் தீம்ல எல்லாமே ரெடி பண்ணிட்டேன்.. காலையில ரெண்டு பேரையும் சஸ்பென்சா அந்த இடத்துக்கு கூட்டிட்டு போய், நம்ம பிளான் படி செமையா பண்ணிடலாம்…” என்று உற்சாகமாக அவர்கள் இதற்கு முன்பு போட்ட திட்டத்தை பற்றி கூறிக் கொண்டிருக்க
அவளுக்குத்தான் அவன் பேச்சில் ஒன்ற முடியவில்லை. இந்த திருமணம் முடிந்தால் இனி அபர்ஜித்தின் முகத்தை எந்த தயக்கமும் இன்றி அவளால் பார்க்க முடியுமா? சாதாரணமாக மாமா என்று பேச முடியுமா?
இழுத்து பெருமூச்சை விட்டவள் ‘எல்லாத்தையும் கடந்துதான் வர வேண்டும்.. முடிந்தவரை அபர்ஜித்தை தவிர்ப்பது அக்காவின் வாழ்க்கைக்கு நல்லது..’ என்பதை மனதில் உறுபோட்டுக் கொண்டு வரவழைக்கப்பட்ட புன்னகையுடன்
“சரி அஸ்வந் காலையில பார்க்கலாம்.. பாட்டிக்கு கொஞ்சம் உடம்பு சரியில்ல நான் அவங்கள பார்க்க போறேன்.. நீங்க மற்ற வேலைகள கவனிச்சுக் கொள்ளுங்க…” என்று சொல்லிவிட்டு நகர்ந்தாள்.
வள்ளியம்மாவின் அருகில் வந்து தனக்கு இடப்பக்கம் அமர்ந்தவளை கண்டன பார்வை பார்த்தாள் பார்கவி. அவள் போய் மூன்று மணி நேரம் ஆகிவிட்டது. சேலையில் போனவள் இப்போது சுடிதாரில் வந்திருக்கின்றாள்.
அபர்ஜித்தை சந்தித்தாளா? தனது இக்கட்டான நிலையை கூறினாளா? அபர்ஜித் கோபித்துக் கொண்டாரா? இல்லை தனக்கான கிப்ட்டை தங்கையிடம் கொடுத்தாரா? எதுவும் புரியாமல் அவளது வருகைக்காக காத்துக் கொண்டிருந்தாள்.
ஆனால் பர்விதாவோ காலதாமதமாக வந்து சேர, “ஏன்டி உன்ன என்ன சொல்லி அனுப்பினேன்.. இவ்ளவு நேரம் எங்க போயிருந்த…?” என்று பார்கவி கேட்க, சட்டென்று என்ன சொல்வது என்று புரியாமல் ஒரு கணம் தடுமாறியவள்,
“அது.. அக்கா.. நான் மேல போனேன் அங்க மாமா இல்ல.. ரொம்ப நேரம் வெயிட் பண்ணுனேன் அவர் வரல.. சரி உங்கிட்ட சொல்லலாம்னு கீழே வரும்போது சாரியில ஜூஸ் கொட்டிருச்சு..
…அதான் புடவைய மாத்திட்டு குளிச்சிட்டு வந்தேன்.. வார வழியில அஸ்விந்தயும் சந்திச்சு நாளைய ப்ரோக்ராம் பத்தி டிஸ்கஸ் பண்ணிட்டு வாரேன் அதான் லேட் ஆயிடுச்சு…” என்றாள் நீண்ட விளக்கமாக
பார்கவியோ “என்னடி சொல்ற.. என்ன உடனே வர சொல்லி இருந்தாரு அவர் வரலையா.. சரி என் மொபைல குடு நான் என்னன்னு கேட்கிறேன்…” என்றதும் பர்விதாவுக்கு சற்றே பதட்டம்தான்.
தான் சொன்ன பொய்யை அபர்ஜித்தும் சொல்ல வேண்டுமே. அவன் என்ன சொல்வான் என்று பயமாக இருந்தது. அவன் பார்கவிக்கு உண்மையாக இருக்கின்றேன் என்று நடந்தவற்றை கூறிவிட்டால்…
கண்டிப்பாக பார்கவியால் அதைத் தாங்கிக் கொள்ள முடியாது என்பது அவளுக்கு நிச்சயமாக தெரியும்.
பார்கவியோ ஃபோனை வாங்கி (ஹாய் அபர்ஜித்.. பாட்டிக்கு கொஞ்சம் உடம்பு சரியில்ல நான் அவங்க பக்கத்துல இருக்கேன்.. என்னால வர முடியாது அதால பர்விய மொட்டை மாடிக்கு அனுப்பி வச்சேன்.. ஆனா அவ வந்து பார்த்துட்டு நீங்க வரலன்னு சொல்றா என்ன ஆச்சு…) என்று ஒரு மெசேஜை தட்டிவிட்டாள் .
கட்டிலில் படுத்திருந்த அபர்ஜித்துக்கு ஃபோனில் மெசேஜ் வந்த டோன் கேட்கவும், எழுந்து ஃபோனை பார்த்தான். பார்கவி என்ற பெயர் தொடுதிரையில் மின்னவும், அவனுக்குள் ஆயிரம் பூகம்பம்.
பர்விதா தமக்கையிடம் உண்மையை சொல்லி இருப்பாளோ! என்ற அச்சம் வந்து ஒட்டிக்கொண்டது. நடுங்கும் விரல்களால் மெசேஜை திறந்தான். அதில் பார்கவி அனுப்பியிருந்த மெசேஜை வாசித்தவன்
இத முதலே அனுப்பி இருந்தா இவ்வளவு பெரிய சங்கடம் நேர்ந்து இருக்காதே என்றுதான் நெந்து கொண்டான். உடனே பார்கவிக்கு (என் ப்ரெண்ட் ஒருத்தன் இப்பதான் வந்திருந்தான்.. அவன கூப்பிட நான் போயிட்டேன்.. சாரி இன்ஃபோம் பண்ண மறந்துட்டேன்..) என்று பதில் மெசேஜ்ஜை அனுப்பி விட்டு மறுபடியும் படுத்துக் கொண்டான்
அபர்ஜித் அனுப்பிய மெசேஜை பார்த்த பார்கவி (சரி பரவால்ல.. கல்யாணத்துக்கு பிறகு உங்க கிப்ட்ட தாங்க..) என்று பதில் மெசேஜ் அனுப்பி விட்டு
பர்விதாவிடம் “மாமா வேலையாம்.. அவர் ஃப்ரெண்ட கூப்பிட போயிருந்தாராம்…” என்று சொல்ல அதைக் கேட்ட பின்னரே பர்விதாவுக்கு தொண்டைக் குழியில் வந்து துடித்த இதயம் மறுபடியும் நெஞ்சு குழிக்குள் சென்று இறங்கியது.
அன்று இரவு அபர்ஜித்துக்கும் பர்விதாவிற்க்கும் வேறுவிதமாக தூக்கம் பறிபோனது என்றால், மற்றவர்களுக்கு வள்ளியம்மாவின் உடல்நிலையால் சரியான தூக்கம் இல்லாமல் இருந்தது.
*****
அடுத்த நாள் காலை
அவனையும் அறியாமல் கண்மூடிய அபர்ஜித்தின் காதில் அழுகுரலும் சலசலப்பும் கேட்டது. அந்த சத்தத்தில் எழுந்த அமர்ந்தவன் சற்று பயந்து தான் போனான்.
பர்விதா வீட்டினரிடம் உண்மையை சொல்லிவிட்டாளோ! அதனால் தான் வெளியே அத்தனை ஆர்ப்பாட்டம் நடக்கின்றதோ? என்று தான் தோன்றியது.
தான் நேற்று இரவு செய்த கேவலமான காரியம் எல்லோருக்கும் தெரிய வந்தால் என்ன செய்வது. தாயிடம் என்ன கூறுவான். அவர் முகத்தைதான் ஏறெடுத்து பார்க்க முடியுமா?
அதை விட பார்கவி அவளுக்கு என்ன கூறிவிட முடியும். உன்னை நினைத்து உன் தங்கையை முத்தமிட்டேன் என்றா!. எவ்வளவு கேவலமான செயல். தன்னைத்தானே திட்டிக் கொண்டான்.
வேறு வழியில்லை அவன்தான் இதை எதிர்கொண்டாக வேண்டும். எழுத்து பெருமூச்சு விட்டவன், எதுவாக இருந்தாலும் பார்த்து விடலாம் என்ற தைரியத்தோடு, முகத்தை கழுவிக்கொண்டு வெளியே வந்தான்.
முறைக்கு இந்த நேரத்திற்கு அவனுக்கு நிச்சயதார்த்தத்திற்கான சடங்குகள் நடந்திருக்க வேண்டும். காலையில் அரப்பு வைப்பதாக கூறியிருந்தார்கள். அதற்காகவும் எழுப்பவில்லை.
ஆக இனி திருமணம் நடைபெற போவதில்லையோ! என்று தான் தோன்றியது. காரணம் அவன் செய்த செயலாக தான் இருக்க வேண்டும் என்று ஆணித்தரமாக நம்பிக் கொண்டு வெளியே வந்தவனிடம்,
அஸ்வந் அருகில் ஓடி வந்து “அண்ணா பர்விதாவோட பாட்டி இறந்துட்டாங்க…” என்று தகவல் சொன்னான். அதைக் கேட்டவனுக்கு வருத்தப்படுவதா? இல்லை தன் விடயம் இன்னும் தெரிய வரவில்லை என்று நிம்மதி அடைவதா என்று புரியவில்லை.
இருந்தும் அவனையும் அறியாமல் ஒரு நிம்மதி பெரும் மூச்சை இழுத்து விட்டவன். “எப்போ..?” என்று கேட்க
“நைட்டெல்லாம் ஆள் மாத்தி மாத்தி பாத்துட்டு தான் இருந்திருக்காங்க.. விடியச் சாமம் தூங்கிட்டாங்க போல.. கவனிக்கல.. காலையில எழுந்து பாக்கும்போது அவங்க இல்ல…” என்று சொல்ல “ம்ம்..”என்று கேட்டுக் கொண்டான்.
“பாவம் பர்வி வீட்டுல ரெண்டு விதமான தூக்கத்தோட இருக்காங்க.. அவங்க பாட்டியும் இறந்து, இப்போ கல்யாணமும் நடக்காது.. பார்கவி அண்ணி ரொம்ப உடைச்சி போய் இருக்காங்க.. நீ போய் அவங்க கிட்ட பேசு…” என்று அஸ்வந் சொல்ல
அபர்ஜித் கண்கள் தேடியது என்னவோ பர்விதாவை தான், தமக்கையின் அருகில் இருந்து அவளும் அழுது கொண்டிருந்தாள்.
உண்மையாகவே பார்கவி உடைந்து போயிருந்தாள். பாட்டியின் இழப்பிற்காக வருத்தப்படுவதா? இல்லை நடக்கவிருந்த திருமணம் நின்று போனதற்காக கவலைப்படுவதா தெரியவில்லை.
ஆசை ஆசையாக அவள் எதிர்பார்த்து இருந்த அந்த நன்னாள் வராமலே போனது. இனியும் வர வாய்ப்பு இல்லயோ! என்ற பயமும் அவளுக்குள் சூழ்ந்து கொண்டது. அது அவள் முகத்தில் நன்றாக தெரிந்தது.
ஏனென்றால் நோய் வயப்பட்டு படுத்த படுக்கையாக படுத்திருந்த வள்ளியம்மாவை பற்றி யாரும் யோசிக்கவில்லை. இவளுக்கு அதிர்ஷ்டம் இல்லை… அதனால்தான் திருமணத்திற்கு முதல் நாள் பாட்டி இறந்து விட்டதாகவே கூறினார்கள் உறவினர்கள் என்னும் அதி மேதாவிகள்.
நம் சுற்றம் தான் எதையும் அவர்களுக்கேற்றது போல் வளைத்துக் கொள்ளுமே. இதோ வள்ளியம்மாவின் இழப்பையும் பார்க்கவியின் அதிர்ஷ்டத்தோடு சேர்த்து பேச ஆரம்பித்து விட்டனர்.
அபர்ஜித்தோ “இல்லடா நான் இப்ப பேசுறது சரியா வராது.. அம்மா எங்க…?” என்று கேட்கும் போது அங்கு வந்த செவ்வந்தி “என்னப்பா இப்படி ஆகும்னு எதிர்பார்க்கல.. நீ வருத்தப்படாத என்னைக்கா இருந்தாலும் பார்கவி தான் நம்ம வீட்டு மருமக.. என்ன.. இப்போ நடக்க இருந்த கல்யாணத்த இன்னும் மூணு மாசம் கழிச்சு வச்சுப்போம்…” என்று அவர் மகனுக்கு சமாதானம் சொல்ல,
“அம்மா அதெல்லாம் ஒரு விஷயம் இல்ல.. முதல்ல இது என்னனு பாப்போம்…” என்றவன் வசந்தராஜனை தேடிச் சென்று அவரிடம் பேசி, வள்ளியம்மாவின் உடலை வீட்டிற்கு கொண்டு சென்று, மேற்கொண்டு ஆக வேண்டிய காரியங்கள் செய்வதற்கான ஏற்பாடுகளை செய்ய ஆரம்பித்தான்.
வசந்தராஜனும் அபர்ஜித்திடமும் விஷயத்தை கூறினார். காலையிலேயே விடயம் தெரிந்தவுடன் அவர் கலங்கியது மகளின் வாழ்க்கையை நினைத்துதான். எங்கே ஊரார் பேசுவது போன்று பார்கவியின் அதிர்ஷ்டமின்மை தான் இந்த கல்யாணம் நிற்க காரணம் என்று நினைத்து விடுவார்களோ!.
அபசகுனமாக இறப்பு நடந்த வீட்டில் மேற்கொண்டு கல்யாணத்தை நடத்த வேண்டாம் என்று சொல்லிவிடுவார்களோ என்று பயந்தவர், செவ்வந்தியிடம் தயக்கமாகவே விடயத்தை கூற
அவரோ பெருந்தன்மையாக “இதே கல்யாணம் நடந்து அடுத்த நாள் நடந்திருந்தால் என்ன சொல்லி இருப்போம்… கல்யாணம் நடந்தாலும் நடக்கலன்னாலும் பார்கவி என் வீட்டு மருமக… அபர்ஜித் உங்க வீட்டு மருமகன். அது எப்பவும் மாறாது…
…வயசானவங்க அவங்கள நிம்மதியா அனுப்பி வைப்போம்.. மூணு மாசமோ இல்ல ஆறு மாசமோ கழிச்சு திரும்பவும் கல்யாணத்த வச்சுட்டா போச்சு…” என்று ஆறுதலாக கூறியிருந்தார்.
அபர்ஜித்திடம் விடயத்தை கூற “மாமா இத பத்தி அப்புறம் பேசலாம்…” என்று சொன்னவன் செவ்வந்தியின் கூற்றுப்படியே அந்த வீட்டின் மருமகனாக, ஆண் வாரிசு இல்லாத அந்த வீட்டிற்கு அவனே அனைத்துமாக, ஒரு மகனாக அஸ்வந்துடன் எல்லா வேலைகளையும் பார்த்தான்.
வலியம்மாவின் உடலை மண்டபத்திலிருந்து வீட்டிற்கு கொண்டு வந்ததிலிருந்து, அவரின் இறுதிச்சடங்குக்கான அனைத்து வேலைகளையும் ஓடியாடி பார்த்ததென்னவோ அபர்ஜித்தும் அஸ்வந்தும் தான்.
அடிக்கடி அபர்ஜித்தை பார்க்கும் போதெல்லாம் பார்கவிக்கு துக்கம் தொண்டை அடைக்க, அதிகமாகவே அழுதாள். இன்னும் ஒரு நாள் 24 மணி நேரத்திற்கு இந்த சம்பவம் நடக்காமல் தள்ளிப் போயிருந்தால். அவள் அவனவளாகி இருப்பாளே .
இதோ அவர்கள் குடும்பத்திற்கு அவன் தான் மூத்த மருமகனாக நின்று அனைத்து வேலைகளையும் செய்கின்றான். அபர்ஜித்தை பார்க்க பார்க்க தன்னுடையவன் முழுமையாக தன் உரிமையான பின் இது நடந்திருக்கக் கூடாதா என்று தான் தோன்றியது.
ஏற்கனவே படுத்த படுக்கையாக இருந்தவர் என்பதால், தாமதிக்காமல் வள்ளியம்மாவின் இறுதி ஊர்வலம் நல்ல முறையில் நடந்து முடிந்திருந்தது.
பார்கவி எந்த அளவிற்கு அழுதாளோ அதே அளவிற்கு பர்விதாவும் விம்மி விம்மி அழுதாள். பாட்டியின் மீது இருந்த அன்பா என்று கேட்டால்… பாதி பாட்டின் மீது இருந்த அன்பு… பாதி தனக்கு நடந்த சம்பவம்.
தன் அக்காவின் வாழ்க்கை. இதோ அவள் கண் முன் நடமாடிக் கொண்டிருக்கும் அபர்ஜித். கல்வெட்டில் பொதிந்தது போன்ற அவனுடனான அந்த சம்பவம்.
எல்லாவற்றையும் நினைத்து ஏன் அழுகின்றோம் என்று காரணம் புரியாமல், பாட்டியின் இழப்பை காரணமாக வைத்து அழுதாள். அவளது அழுகையை பார்க்கும்போது அபர்ஜித்திற்கும் வலித்தது.
சிறு பெண் அவளை என்ன செய்து இருக்கின்றான். அவனது முட்டாள்தனமான முடிவும். அவசர புத்தியும் இரு பெண்களின் வாழ்க்கையில் நீங்காத தாக்கத்தை உண்டாக்கியிருந்தது.
அன்றோடு தன்னைத்தானே எத்தனையாவது முறை கடிந்து கொண்டான் என்பது தெரியாது. ஆனாலும் இதை அவன் தான் சரி செய்தாக வேண்டும். என்ன செய்வது? ஏது செய்வது? ஒன்று புரியவில்லை. எப்படியாவது பர்விதாவிடம் பேசி, இதற்கான ஒரு தீர்வை காண வேண்டும். அதற்கான சந்தர்ப்பத்தை எதிர்பார்த்து காத்திருந்தான்.

