Loading

தேடல் 13:

 

முழுதாக விடியாத அதிகாலை நேரமது. தனது வீட்டின் மாடியில் இருந்து சுற்றிலும் வேடிக்கைப் பார்த்துக் கொண்டிருந்தாள் மிளிர். நகரம் என்ற பட்டியலும் சேர்க்க முடியாத முழுதாய் கிராமம் என்ற வரையறைக்குள்ளும் அடக்க முடியாத நவீன மயமாகிக் கொண்டிருக்கும் கிராமம் அது. அவள் வீட்டு மாடியிலிருந்து பார்த்தால் பாதி ஊருக்கும் மேலேயே தெரியும். அளவுக்கு அதிகமான இடைவெளிகள் விட்டே அவளின் தெருவில் வீடுகள். மொத்தமாய் பத்தோ பன்னிரெண்டோ தான். அதன் கடைக்கோடியில் ஒரு துர்கை ஆலயம். அதன் கோபுரத்தை தான் இமைக்காது பார்த்தபடி நின்றிருந்தாள் மிளிர்.

 

பார்வையை கோபுர கலத்தின் மீது பதித்திருந்தாலும் அவள் கவனம் அதிலில்லை என்பதே உண்மை. எல்லாவற்றையும் தெரிந்துக் கொண்டால் மனம் அமைதிக் கொள்ளும் என நினைத்திருந்தது எல்லாம் தன்னுடைய மடைமை என்றே இப்போது தோன்றியது. மகிழினியின் பெயரே தன்னை பாதித்திருக்க அவள் இறந்துப் போனாள் என்ற செய்தி தன்னை மீறி உள்ளுக்குள் ஏதோ ஒன்றை உடைய செய்கிறது. நெஞ்சை பிசைகிறது. உள்ளுக்குள் அவளை ஆயிரம் துக்கல்களாக உடைந்து சிதைந்துப் போக வைக்கிறது என்பதே உண்மை. ஆனாலும் அதை இனியனிடம் காட்டி அவனை கலவரப் படுத்த விரும்பவில்லை.

 

ஆரம்பத்தில் திரும்பி வந்த பெற்றோரிடமும் ஏதாவது கேட்கலாம் என்று தான் நினைத்திருந்தாள் அவள். ஆனால், வந்தவர்களின் முகத்தை பார்த்ததுமே ஏதோ ஒன்று சரியில்லை என்ற எண்ணம் தோன்றி விட்டது. இதோ இப்போதுக்கூட இரண்டாவது முறையாக கோலத்தை அழித்து மாற்றிப் போட்டுக் கொண்டிருக்கிறார் வசுமதி. ஏனோ அவரால் எந்த வேலைகளிலும் முழு கவனம் பதிக்க முடியவில்லை. நாதரும்கூட இனியனை கடைக்கு அனுப்பிவிட்டு இரண்டு நாட்களாய் வீட்டில்தான் இருக்கின்றார். அவளை எங்கு என்றாலும் அவரே கொண்டு விடுவதும் மீண்டும் அழைத்து வருவதாகவும் இருக்கிறார். ஏனென்று புரியாவிட்டாலும் எதற்கோ அவர்கள் பயப்படுகிறார்கள் என்ற அளவிற்கு மட்டும் புரிந்தது அவளுக்கு. அதனாலே மேலே அவர்களை எதுவும் கேட்டு  கலவரப் படுத்த விரும்பாமல் அப்படியே விட்டுவிட்டாள்.

 

ஆனால் மகிழின் இறப்பு. அதை அவளால் அப்படியே விட்டுவிட முடியவில்லை. அது அவளை உள்ளுக்குள் சில்லு சில்லுலாய் நெறுங்க செய்துக் கொண்டிருந்தது. தன்னால் மகிழை காப்பாற்ற முடியவில்லையென்று ஒரு குற்ற உணர்ச்சி. ஏனோ அவள் முயன்றிருந்தால் மகிழின் இறப்பை தடுத்திருக்கலாம் என்று உள்மனம் ஒன்று அடித்து சொல்கிறது. நெருஞ்சி முள்ளென உள்ளுக்குள் உருத்திக் கொண்டிருக்கும் அந்த எண்ணத்தை என்ன முயன்றும் அவளால் ஒதுக்கி வைக்க முடியவில்லை.

 

கடைசியாக நிச்சயதார்த்த ஆல்பத்தில் பார்த்த அந்த சந்தோஷ முகம் அடிக்கடி கண்முன் தோன்றி ‘என்னை மட்டும் கொன்றுவிட்டு… நீ சந்தோஷமாய் இருக்கிறாய் அல்லவா..!’ என அவளை குற்றம் சாற்றுதைப் போல் தோன்றுகிறது. இருந்தும் எத்தனை முயன்றும் அவளால் பழைய நியாபகங்களை நினைவுக்கு கொண்டு வர முடியவில்லை. அக்கொன்றும் இக்கொன்றுமாய் சில காட்சிகள் தோன்னுகிறது தான். ஆனால் அவை புரிந்தும் புரியாத நிலை.

 

எப்படி யோசித்தும் என்ன செய்வதென்று தெளிவாக தெரியவில்லை. கடைசியாக அவளுக்கு தோன்றிய ஒன்றுதான் மகிழின் இறப்புக்கான காரணத்தையாவது தெரிந்துக் கொள்வோம் என்ற எண்ணம். அதுவும் இனியன் சொல்லிய அந்த வார்த்தைகள், “நிச்சயம் பிழைத்துக் கொள்வாள் என்றவள் எப்படி இறந்துப் போனாள்…” இந்த எண்ணமே மகிழின் இறப்பிற்கான காரணத்தை அவளை தேடச் சொன்னது.

 

அந்த எண்ணம் தோன்றிய அடுத்த நொடி அவள் சென்ற இடம் அவர்களை அனுமதித்திருந்த மருத்துவமனைதான். சென்று விட்டாலுமே எவரிடம் கேட்பது என்று ஒன்னும் விளங்கவில்லை அவளுக்கு. கடைசியாக சுத்தம் செய்யும் பெண்மணி ஒருவரிடம் கேட்டு, அந்த பெண்மணி ஒரு பியூனிடம் அழைத்துச் சென்றிருந்தாள். முதலில் மறுத்தவன் மிளிர் சில ஆயிரங்களை கையில் திணிக்க, விவரங்களை வாங்கிக் கொண்டு நாளை  எடுத்து தருவதாக சொன்னான். கூடவே காலை சீக்கிரமே வந்து வாங்கி செல்லுமாறும் சொல்ல, சரியென்று அவளும் திரும்பி வந்துவிட்டாள். இதோ இன்று மீண்டும் அங்கே செல்ல வேண்டும். ஆனால் நாதரும் உடன் வருவேனென்றால் அங்கே செல்ல தாமதமாகும்… என்ன செய்யலாம் என யோசித்துக் கொண்டிருந்தாள் அவள்.

 

சட்டென்று யோசனை ஒன்று தோன்ற, சூர்யாவிற்கு போன் செய்து உடனே வர சொல்லிவிட்டு தானும் தயாராவதற்காய் சென்றாள். மிளிர் போன் செய்த அடுத்த அரைமணி நேரத்தில் சூர்யாவும் வந்துவிட்டாள்.

 

இப்போது தான் வசுமதி டீ போட பாலை அடுப்பில் ஏற்றி இருந்தார். நாதரோ எழுந்து செய்திதாளை புரட்டியபடி அமர்ந்திருந்தார். ஆனால், அவர் கவனம் அதிலில்லை என பார்க்கும் எவரும் கண்டுக் கொள்ளலாம். சூர்யா வந்து சத்தமிட்டு அழைக்கும் வரைக் கூட அவள் வந்ததை அவர் அறியவில்லை. அவளை இந்த காலை வேலையில் அங்கு கண்டவருக்கு ஆனந்த அதிர்ச்சி தான். பின்னே இத்தனை வருட பழக்கத்தில் இன்றுதானே அவள் முதல் முறையாக அவர்களின் இல்லம் வந்திருக்கிறாள்.

 

“அடடே வாம்மா… வா… வா…  அதிசயமா இருக்கே… வீட்டு பக்கமெல்லாம் வந்திருக்க… உக்காரும்மா…” என அவளை உபசரித்தவர், “வசு… இங்கே வந்து பாறேன்… யாரு வந்து இருக்கானு…” என உள்ளே குரல் கொடுக்கவும் தவறவில்லை.

 

வெளியே வந்த வசுமதியும் அவளை வரவேற்று அமர வைத்துவிட்டு, காபியை கலந்து எடுத்து வந்தார். சூர்யாவுக்கும் நாதருக்கும் கொடுத்தவர் தானும் ஒன்றை எடுத்துக் கொண்டு அவள் அருகிலேயே அமர்ந்து பொதுவாக பேச ஆரம்பித்திருந்தார்.

 

அவர் கேட்கும் கேள்விகளுக்கெல்லாம் பதிலளித்தாலும் அனிச்சையாய் அவள் கண்கள் தன்னை சுற்றி தேட ஆரம்பித்திருந்தது. தானாய் அவள் மனம் இனியனை நாடியதென்னவோ உண்மை. இனியன் அப்படி சொல்லி சென்ற நாட்களாய் அவனின் நினைவு தான். என்ன முயன்றும் அவனின் நினைவை அவளால் தடுக்கவும் முடியவில்லை. அதே சமயம் உவந்து ஏற்கவும் முடியவில்லை. ஏனோ இந்த காதல் கைக்கூடுமென்று அவளுக்கு தோன்றவே இல்லை. அதன் பொருட்டே அந்த ஆசையை வளர்க்கவும் அவளுக்கு விருப்பமில்லை.

 

“என்ன சூர்யா நான் கேட்டுட்டே இருக்கேன்… நீ சுத்தி சுத்தி யார தேடற…” என வசு கேட்கவும் தான் சுதாரித்தாள் அவள்.

 

“அது… அது…” என அவள் தடுமாறவுமே, “வேற யாரு என்னதான்…” என்றபடி அங்கே வந்திருந்தாள் மிளிர். இதுவரை அவளின் தேடலை மறைந்திருந்து கவனித்துவிட்டு தான்.

 

அவளுக்குமே இனியனின் மீது ஒரு ஈடுபாடு இருக்கிறது என என்றோ புரிந்துக் கொண்டாள் மிளிர். பின்னே இன்னும் இனியனைப் பற்றிய குற்றபத்திரிக்கை வாசிக்கவில்லையே அவள். அதிலேயே மிளிருக்கு புரியாதா என்ன?

 

“நீ எங்கடீ கிளம்பிட்ட… இவ்வளவு சீக்கரம்…” என்றபடியே துளசி எழுந்துக் கொள்ள, சூர்யாவுமே இதுவரை சொல்லி இருக்கவில்லை. மிளிர்தான் தான் வந்து சொல்லிக் கொள்வதாய் சொல்லி இருந்தாள்.

 

“அது ஸ்பெஷல் கஸ்டமர் ஒருத்தவங்க… காலையில வீட்டுக்கே வந்து மேக்கப் பண்ண சொன்னாங்க… சூர்யா போறாதா தான் இருந்து… ஆனா அவங்க நான் வந்து பண்ணா நல்லா இருக்குனு ஃபீல் பண்ணறாங்க… அதான்… கிளம்பிட்டேன்…” என்றாள் பெரிய விளக்கமாக.

 

“சரி இரு… நான் காபி எடுத்துட்டு வந்துடறேன்… அதுக்குள்ள அப்பா கிளம்பிடட்டும்…” என்றவர் அடுக்களைக்குள் நுழைய,

 

“அப்பாவ எதுக்கு காலையிலையே கஷ்டபடுத்தனும்…  அதான் சூரிய வர சொன்னேன்… அவ கூடவே நான் போய்டுவேன்… இப்ப லேட் ஆகிட்டு… நாங்க கிளம்பறோம்…” என கண்ணைக் காட்ட, சூர்யாவும் கிளம்பும் விதமாக எழுந்து விட்டாள்.

 

“இருடி… போட்டு வச்சுருக்க காபியை ஊத்திக் குடுக்க எவ்வளவு நேரம் ஆகும்…” என்றவர் பிளாஷ்கில் இருந்ததை ஊற்றிக் கொடுக்க, வேகமாக குடித்து முடித்தவள் கிளம்பியும் விட்டிருந்தாள்.

 

சூர்யாவை அழகுநிலையத்தில் விட்டுவிட்டு, அவளின் ஸ்கூட்டியிலேயே மருத்துவமனைக்கும் வந்திருந்தாள். வந்தவள் நேராக அந்த பியூனிடம் செல்ல,

 

“இங்கையே கொஞ்ச நேரம் வெயிட் பண்ணுங்க மேடம்… எடுத்துட்டு வரேன்…” என உள்ளே சென்றிருந்தான். அவன் உள்ளே சென்றிருந்த நேரம் வேறொருவன் வந்து… “இங்க வச்சு கொடுக்க முடியாது மேடம்… அங்க போய் வெயிட் பண்ணுங்க…” என ஒரு அறையைக் காட்ட, அங்கே சென்றிருந்தாள் இவளும்.

 

அது ஆய்வுகூடம் போல. சுற்றிலும் மருத்துவ உபகரணங்கள் தான்.  முழுதாக ஒரு நிமிடம் கூட கடந்திருக்காது. தீடிரென இரு கரங்கள் பின்னாலிருந்து இவள் கழுத்தை பற்றி நெரிக்க, ஒரு நொடி உலகமே இருண்டு போனது அவளுக்கு. என்ன முயன்றும் அந்த கரங்களை விலக்க முடியவில்லை அவளால். அந்த சில நிமிடங்களிலேயே நுரையீரல் மூச்சுக் காற்றுக்காக ஏங்க ஆரம்பித்திருந்தது.

 

ஒரு கட்டத்தில் தன்னுடைய கூரிய நகங்கள் கொண்டு அந்த கரத்தினில் ரத்தக் காயத்தை ஏற்படுத்த பிடிக் கொஞ்சம் தளர்ந்தது. அதை சரியாக பயன்படுத்தி விலகியவள், ஓட முனைய அதிக பதற்றதாலோ, இல்லை இத்தனை நேர போராட்டத்தாலோ, தடுமாறி கீழே தான் விழுந்திருந்தாள்.

 

அவள் சுதாரித்து எழ முயன்ற நேரம் இப்போது அந்த கரத்திற்கு சொந்தமான உருவம் ஒரு கத்தியை எடுத்துக் கொண்டு அவள் மீது பாய்ந்தது. நிச்சயம் ஆடவன் தான். உடல் முழுவதும் வெள்ளை அங்கி அணிந்து முகத்தையும் மறைத்துக் கொண்டிருந்தான்.

 

நிச்சயம் இறக்கதான் போகிறோம் என தீர்மானமாகிப் போனது அவளுக்கு. இறக்கும் கடைசி நொடி வரை போராடி பார்த்துவிட வேண்டுமென்று உறுதிக் கொண்டாள். அவள் தடுத்து போராடிக் கொண்டிருந்த நேரம். காலால் ஒரு உபகரணத்தை தள்ளி விட, அது சரியாக அவன்மீது சாந்தது. அதிக எடைக் கொண்ட உபகரணம் தான். அதை தன்னிலிருந்து அகற்ற அவன் எடுத்துக் கொண்ட நேரத்தில் வேகமாக அவனிடமிருந்து தப்பித்தவள் ஓட தொடங்கி இருந்தாள்.

 

எங்கே அவன் தன்னை பின்தொடர்வானோ என்ற சந்தேகத்திலேயே எதையும் கவனிக்காமல் அத்தனை வேகமாக ஓடியது. அப்போதுதான் அக்னி மீது இடித்திருந்தாள். அதே பதற்றத்தோடு அவள் வண்டியை எடுக்க, அனிச்சை செயலாய் அதுவும் அவள் இல்லம் நோக்கிதான் சென்றது. அவளின் அந்த பதற்றம் கண்டே அவளை பின்தொடர்ந்து வந்து காப்பாற்றி இருந்தான் அக்னி.

 

நீர் சொட்ட சொட்ட… வாய்காலின் கரையில் அமர்ந்திருந்தவள் நடந்தவற்றை தான் நினைத்து பார்த்துக் கொண்டிருந்தாள். இன்னும் அக்னி நீருக்குள் தான் நின்றிருந்தான். அது கிளை ஆறு ஒன்றிலிருந்து பிரிந்து ஊருக்குள் நீரை சுமந்து செல்லும் வாய்க்கால். கொஞ்சம் பெரியதும் கூட. இப்போது தான் நூறுநாள் பணியில் சுத்தம் செய்திருப்பார்கள் போல. பதினைந்து அடிக்கும் ஆழமாகவே இருந்தது.

 

“ஹாலோ மேடம்… கனவு கண்டு முடிச்சுட்டீங்கனா… என்ன கொஞ்சம் தூக்கி விடலாம் இல்ல… உங்கள தூக்கி பொம்மை மாதிரி நான் உக்கார வச்சுட்டேன்… பாவம் எனக்குதான் கைகுடுத்து காப்பாத்த யாரும் இல்லை…” கிண்டலும் கேலியுமாகவே அவன் சொல்லிக் கொண்டிருந்தாலும், அதை அவள் காதில் கூட வாங்கிக் கொள்ளவில்லை என்பதை கண்டுக் கொண்டான்.

 

தனது கைகளை ஊன்றி எம்பிக் குதித்து அவளுக்கு பக்கத்தில் அமர்ந்தவன் அவளை தான் கூர்த்துக் கவனித்துக் கொண்டிருந்தான். அவள் முகம் முழுவதுமே சிந்தனை ரேகைகள்.

 

“மிளிர்… என்ன பாரு… நீ நல்லா இருக்க தானே… உடம்புக்கு எதாவது பண்ணுதா..? இல்ல எதாவது பிரச்சனையா..?”  என்றதற்கும் அவளிடம் எந்த பதிலுமில்லை.

 

இதே அவள் சாதரணமாக இருந்திருந்தால் இந்நேரம் தொட்டு தூக்கியதற்கே காச்மூச்சென்று கத்தி வைத்திருக்க மாட்டாளா? திரும்பிப் பார்க்க, லாரியை அப்படியே விட்டுவிட்டு அந்த ஓட்டுனர் எப்போதோ தப்பி ஓடி விட்டிருந்தான். அது பிரதான சாலை ஒன்றும் இல்லையென்றாலும் அங்கொன்றும் இங்கொன்றுமாய் இருசக்கர வாகனத்தில் சென்றுக் கொண்டிருந்தவர்கள் இவர்களின் நிலைக் கண்டு கூட்டம் கூட தொடங்கிவிட்டனர்.

 

அவளின் தோளை தொட்டு உழுக்கியவன், “மிளிர் என்ன பாரு… ஆர் யூ ஆல்ரைட்…” என, தன்னிச்சையாய் இத்தனை நேரம் மனதில் உழன்ற கேள்வியை வாய் திறந்தது அவனிடம் கேட்டே விட்டிருந்தாள் அவள்.

 

“யார் அவங்க..? என்ன ஏன் கொல்ல பாக்கறாங்க..? மகியோட இறப்ப விசாரிக்க போனப்ப தான் என்ன கொல்ல ட்ரை பண்ணி இருக்காங்கனா… அதை பத்தி நான் தெரிஞ்சுக்க கூடாதுனு நினைக்கறாங்களா… அப்போ மகி சாவுல ஏதோ மர்மம் இருக்கா..? இல்ல மகியோட சாவே கொலையா..?  இவங்க தான் அவள கொன்னுருப்பாங்களா..? அத நான் தெரிஞ்சுக்க கூடாதுனு நினைக்கறாங்களா..? அதுக்கு தான் என்னையும் கொல்ல பாக்கறாங்களா..?” என தன்னை மறந்தவளாக இவள் யோசனையோடே சொல்லிக் கொண்டே செல்ல, ‘என்ன கொலையா..?’ என அவளை அதிர்ந்து பார்த்திருந்தான் அக்னி.

 

 – தேடல் தொடரும்…

 

Click on a star to rate it!

Rating 5 / 5. Vote count: 3

No votes so far! Be the first to rate this post.

இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
0
+1
3
+1
0
+1
0

உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள்