Loading

சமுத்திரா – 14:

இருட்டில் கண்களுக்கு ஒன்றும் புலப்படாதலால் இருவரும் கைகளை பிடித்துக்கொண்டு அங்கிருந்த சுவரை பிடித்தபடியே நடந்தனர். அவ்வளவு நேரம் உயிரை கையில் பிடித்துக்கொண்டு ஓடியதால் இருவரும் வியர்வையில் நன்கு குளித்திருந்தனர்.

அவர்கள் இருவரின் கண்களிலும் உயிரின் பயம் நன்கு தெரிந்தது. அவர்கள் இருவரும் வேறு யாருமில்லை, நம் நண்பர்கள் கூட்டத்துடன் கப்பலில் பயணம் செய்த இருமாலுமிகள் ரிச்சார்ட் மற்றும் டேனியல் தான். இவர்களை தேடி கீழே வந்த விக்டரும் இவர்கள் கிடைக்காமல் மேலே சென்றுவிட்டான்.

ரிச்சர்ட், “மார்ட்டின், விக்டர் அப்புறம் நம்ம கூட வந்தவங்க யாரையுமே காணோமே டேனி. நம்ம இடத்துக்கு எப்படி அந்த முதலைகள் வந்தது? அதுவும் நம்ம கண்ணு முன்னாடியே நம்ம அலெக்ஸை..” என்று ஆரம்பித்த ரிச்சார்ட் தொடைக்குழி ஏறி இறங்க நிறுத்தினான். அவனின் கையை பற்றி அருகிலிருந்த படிக்கட்டில் அமரவைத்த டேனியல், தானும் அவனுடன் அமர்ந்தான்.

இரவுணவை முடித்த டேனியல், அலெக்ஸ் மற்றும் ரிச்சார்ட் மூவரும் படுக்கையறைக்கு வந்தனர். அந்நேரம் எதிர்பாராமல் ‘சமுத்திரா’ விளையாட்டினால் அந்த கப்பலிற்குள் வந்த முதலைகள் அவர்களை தாக்கியது. அதில் துரதிஷ்டவசமாக அந்த ராட்சச முதலையிடம் சிக்கிய அலெக்ஸ் தப்பிக்க போராடி உயிரிழந்தார்.

நண்பனை காப்பாற்ற முயன்ற இருவரின் கண்முன்னே அந்த கோர சம்பவம் நிகழ இருவருமே பரிதவித்தனர். அந்நேரம் வேறொரு முதலை அவர்களிடம் வர, அங்கிருந்து தப்பித்து வேறொரு தளத்திற்கு வந்துவிட்டனர். அவர்கள் அவ்வறையை விட்டுச்சென்ற பிறகு தான் அங்கு வந்து பார்த்துவிட்டு மேலே வந்தான் விக்டர்.

அனைத்தையும் நினைத்து கலங்கிய மனத்தை சமன் செய்த டேனியல், “எனக்கும் ஒண்ணுமே புரியல ரிச்சார்ட். கப்பலுக்குள்ள யாரையுமே காணோம். இவ்வளவு நேரம் எரிஞ்சிக்கிட்டு இருந்த விளக்கு எல்லாமே இப்ப மொத்தமா திடீர்னு அணைஞ்சிடுச்சு. இங்க என்ன நடக்குதுன்னு ஒண்ணுமே புரியல..” என இருளில் மூழ்கியிருந்த இடத்தை சுற்றியும் பார்த்துக்கொண்டே கூறினான் டேனியல்.

“நாம இப்ப இரண்டாவது தளத்துல இருக்கோம். எப்படியாவது அப்பர் டெக்(மேல் தளம்) போகலாம். அந்த பிரெண்ட்ஸ் கேங் அங்க இருக்க வாய்ப்பிருக்கு.” என ரிச்சார்ட் சொன்னதும், “முதல்ல நமக்கு வெளிச்சம் வேணும். இந்த இருட்டுல உன்னோட முகம் கூட சரியா தெரியல.. இதுல எங்க ஐந்தாவது தளத்துக்கு போறது? இந்த இருட்டுல நாம மறுபடி அந்த முதலை கிட்ட மாட்டிக்கிட்டா?” என்ற டேனியலின் உடல் பயத்தில் நடுங்கியது.

“மேல இருக்க மாதிரியே இங்க கீழேயும் ஒரு ஜெனரேட்டர் ரூம் இருக்கு. நாம எப்படியாவது அங்க போய் லைட்ஸை ஆன் பண்ணிட்டு மேல போகலாம் டேனி.” என ரிச்சார்ட், நடுங்கி கொண்டிருந்த டேனியலை சமாதான படுத்தினான்.

கடற்கொள்ளையர்களிடம் அகப்பட கூடாது என விளக்கினை அணைத்து வைத்திருந்தனர் நண்பர்கள் கூட்டம். ஆனால், அதை பற்றி அறியாத இவர்கள் இருவரும் இப்பொழுது அதனை உயிர்ப்பிக்க கீழ் தளத்தில் உள்ள ஜெனரேட்டர் அறைக்கு செல்ல தொடங்கினர்.

மேலே, சக்தி பகடையை உருட்டி முடித்தவுடன் வட்டமாக அமர்ந்திருந்த நண்பர்களின் கூட்டத்திடம், “அதான் போட்டாச்சே என்ன வந்திருக்கனு பாருங்க..” என மார்ட்டின் வலியுறுத்தினார்.

“வருகை தருவாள் இந்திரலோகத்து

சுந்தரி!

வினைத்தீர்க்கும் வஞ்சியுமவளே..”

என்று குமிழில் மின்னிய எழுத்துக்களை சக்தியின் கைபேசியில் உள்ள டார்ச் வெளிச்சத்தில் படித்தனர் விலோவும் ப்ரதீப்பும்.

அதனை கேட்டபடியே, “இந்திர லோகத்துல இருந்து அழகி வர போறா போல. ப்ரதீப் உனக்கு ஜாலி தான் டா..” என்று ரங்கா கிண்டலாக சொன்னான். அதற்கு முப்பத்திரெண்டு பற்களையும் காட்டி ஈயென சிரித்த ப்ரதீப், “ஆனா, ஏதோ வினைன்னு வேற போட்டிருக்கே?” என்று முழித்தான்.

“ஆமா டா உனக்கு செய்வினை வைக்க வர போகுது போல. உஷாரா இரு.” என்று விலோ அவனை வாரினாள்.

“அட அப்ரசன்டீங்களா வினைனா, செயல்னு அர்த்தம். அது எதையோ செய்ய வருது போல.” என்ற அமரன் யோசனையுடன் தாடையை தடவினான் “ஹம்க்கும். வேற என்ன? நம்மள தான் வெச்சி செய்ய வருதுன்னு சொல்லு.” என ப்ரதீப் அலுப்புடன் சொன்னான்.

‘யார் வர போகிறார்? எப்படி வர போகிறார்?’ என அனைவரும் அங்குமிங்கும் சுற்றி பார்த்தனர். ஆனால், அந்த கப்பலில் எந்த ஒரு மாற்றமும் அந்த இருளில் அவர்களுக்கு  தென்படவில்லை.

“எனக்கு ஒரு ஐடியா தோணுது..” என்ற விலோ, “நாம எல்லாரும் டக்கு டக்குனு ஒரு ஒருத்தரா மாத்தி மாத்தி போட்டு கேமை முழுசா முடிச்சா எப்படி இருக்கும்?” என அனைவரையும் பார்த்தாள்.

“ஐடியா நல்லா தான் இருக்கு. ஆனா, ஒரே நேரத்துல எல்லாமே கிளம்பிடுச்சின்னா என்ன பண்ணுறது? அந்த நேரம் நாம ஒருத்தருக்கு ஒருத்தர் ஹெல்ப் கூட பண்ண முடியாதே..” என்று ஷிவன்யா சொல்ல, “அதுவும் சரிதான் ஷிவ்.” என விலோ ஒப்புக்கொண்டாள்.

அந்நேரம் அவர்களின் அருகே உள்ள நீச்சல் குளத்தில் இருந்த தண்ணீரில் சலசலப்பு சத்தம் வந்தது. “ரைட்டு. அடுத்தது கிளம்பிடுச்சு!” என ப்ரதீப் கூறியதும் சக்தி அவனின் கைபேசியை நீச்சல் குளத்தின் பக்கம் திருப்பினான். அந்த கைபேசியின் வெளிச்சத்தில் நீச்சல் குளத்தை தான் அனைவரும் கவனித்தனர்.

காற்று சுழற்றியடிக்க அந்த நீச்சல் குளத்தின் மையத்திலிருந்து அப்சரஸ் போன்று ஒரு பெண் மெல்ல மேலே எழும்பினாள். அவளின் மேல்பாதியான உடல் இடுப்புவரை மட்டும் வெளியே வர கீழ்பாதி உடல் தண்ணீரில் இருந்தபடி நீந்தியே நீச்சல்குளத்தின் கரைக்கு வரத்தொடங்கினாள்.

அவளின் அழகில் நண்பர்கள் கூட்டம் மட்டுமில்லாமல் இரு மாலுமிகளும் அவளை மெய்மறந்து பார்த்தனர். பிரம்மா அவளை படைக்கும் பொழுது மிகுந்த சந்தோஷத்தில் இருந்திருப்பார் போல், அந்த ரதியே அந்த கப்பலிற்கு வருகை தந்தது போன்று அழகில் மிளிர்ந்தாள் பாவை. ஊதா நிற உடை கச்சிதமாய் அவளின் உடலோடு பொருந்தியிருக்க அவளின் வளைவு நெளிவுகளை கண்ணுக்கு உறுத்தாதவாறு அழகாக எடுத்துக்காட்டியது.

அந்த இருண்ட வானத்தில் இல்லாத பிறை தான் அவளின் நெற்றியோ என்று சிந்திக்கும் வண்ணம் அமைந்திருந்தது பெண்ணவளின் நூதல். அதற்கு கீழ் நீண்ட கூர் நாசி; அதற்கு கீழ் வசீகரமான சின்ன சிவந்த இதழ்கள் என அனைவரையும் சுண்டியிலுக்கும் அழகுடன் மெல்ல நீச்சல் குளத்தில் இருந்து நீந்தி மேலேறினாள்.

அனைவரும் கண்ணைக்கூட சிமிட்டாமல் அவளின் அசைவுகளை தான் தொடர்ந்து பார்த்துக் கொண்டிருந்தனர். “என்னா பொண்ணு டா! எவ்ளோ அழகா இருக்கா..” என ப்ரதீப் வாயை பிளந்தான். ஆடவர் மட்டுமின்றி பெண்களும் அதிசயித்து தான் அவளை பார்த்தனர்.

மேலேறியவளின் கூந்தல் மயில் தோகைப்போல் அவளின் முதுகில் பரவி படர்ந்தது. அவளின் முகத்தில் இருந்த ஈரம் சொட்டு சொட்டாய் வெண்சங்கு போல் இருந்த கழுத்தில் பயணித்தது. கழுத்தின் கீழ் தாராளமாக அமைந்திருந்த செழுமைகள் என செழித்து காணப்பட்டாள் சுந்தரியவள். அதனை கடந்து இறங்கினால், ‘உடுக்கை போன்ற இடை என்ற அடைமொழிக்கு சொந்தக்காரியாக இருப்பாளோ?’ என்று ஐயம் கொள்ளும் வகை மெலிந்து வலைந்திருந்தது மங்கையவளின் இடை.

அதுவரை அவளின் தலை முதல் இடைவரை ரசித்து பார்த்த கண்கள் இடுப்பின் கீழ்பாகத்தை பார்த்ததும் சற்றே அதிர்ச்சி அடைந்தது.

ஏனெனில், வந்திருந்தவளிற்கு மேல் பாதி உடல் பெண்ணின் தோற்றத்தையும், கீழ் பாதி உடல் செதில்கள் நிறைந்த மீனின் தோற்றத்தையும் பெற்றிருந்தது. ஆக, பாதி மனித உடலும் மீதி மீனின் உடலும் கொண்ட கடற்கன்னி தான் நீச்சல் குளத்தில் இருந்து மேலெழுந்து  அவர்களுக்கு தரிசனம் கொடுத்தாள்.

“கடற்கன்னியை தான் இந்துரலோகத்து சுந்தரினு சொல்லிருக்காங்க போல..” என்ற சக்தி சொன்னான்.

“கடற்கன்னியெல்லாம் உண்மையாவே இருக்காங்களா?” – விலோ.

“இங்க நடக்குற எது உண்மையா இருக்க வாய்ப்பிருக்கு விலோ? இன்னும் கூட இந்த கேம் உண்மைன்னு நம்மளால நம்பவே முடியல தான? அதுல இதுவும் ஒன்னு.” என்ற ஷிவன்யா பார்வையாலே கடற்கன்னியை எடைபோட்டாள்.

“எவ்ளோ அழகா இருக்காங்கல? அப்படியே ஏஞ்சல் மாதிரி..” என ப்ரதீப் மீண்டும் வாயை பிளந்தான். “போதும் வாய மூடு. இல்ல வாய்க்குள்ள ஏதாவது போய்ட போகுது..” என விலோ சொல்ல, “உனக்கு பொறாமை! உன்னைவிட அவ அழகா இருக்கானு..” என ப்ரதீப் சொல்ல அனைவரும் சிரித்தனர்.

ஆளை விழுங்கும் வண்ணம் அமைந்திருந்த கடற்கன்னியின் நீலநிற விழிகளோ வந்ததில் இருந்து ரங்கராஜிடம் மட்டுமே மையம் கொண்டிருந்தது. அதற்கே விலோ அந்த கடற்கன்னியை இப்பொழுது முறைக்க தொடங்கிவிட்டாள்.

“யார் அது கிட்ட போய் பேச போறது? அவங்க வேற எதுக்கு வந்திருக்காங்கனு தெரியலையே..” என்று அனைவரின் முகத்தையும் கேள்வியுடன் பார்த்தாள் ஷிவன்யா.

“வேற யாரு ப்ரதீப் தான்..” – அமரன்.

“டேய் நான் தூரத்துல இருந்தே பார்த்துகிறேன் டா. அது கிட்ட போய் கண்டிப்பா பேசனுமா என்ன?” என பின்வாங்கினான் ப்ரதீப்.

“ஆமா டா. ஏதோ வினைன்னு வேற போட்டிருக்கு. போய் எதுக்கு வந்திருக்குன்னு யாராவது கேட்கணும் தான?” என சக்தி சொல்ல, “அதுக்கு தமிழ் தெரியலன?” என ப்ரதீப் மேலும் சந்தேகம் கேட்க, “நீ சொல்லிக்கொடு..” என்று விலோ அவனின் முதுகில் கைவைத்து தள்ளினாள்.

ப்ரதீப், ரங்காவின் கரத்தையும் பற்றிக்கொண்டே கடற்கன்னியிடம் சென்றான். “ஐயோ! இவனை எதுக்கு அவகிட்ட கூட்டிட்டு போற?” என்று கத்திக்கொண்டே விலோவும் அவர்களின் பின்னே கடற்கன்னியிடம் சென்றாள். சக்தி, ஷிவன்யா மற்றும் அமரனும் அவர்களை தொடர்ந்துச் சென்றனர்.

அவர்களின் வருகையை உணர்ந்தாலும் அந்த நீலவிழி நங்கையவள் ரங்கராஜை தான் குறிப்பாய் பார்த்தாள். காரிருளில் பிரகாசமாக ஒளிர்ந்துக் கொண்டிருந்தவளை பார்த்தபடியே, “இந்தாம்மா பொண்ணு! கடற்கன்னி! ஏஞ்சல்!” என்று அவளை பலப்பெயர்களில் அழைத்த ப்ரதீப், “நீ பார்க்கிறவனுக்கு ஆல்ரெடி ஆள் இருக்கு. இன்னும் மூணு மாசத்துல அவங்க ரெண்டு பேருக்கும் கல்யாணம். அவனை கல்யாணம் பண்ணிக்க போறவ கூட அவனுக்கு பக்கத்துல தான் உன்ன பார்வையாலே எரிச்சிட்டு இருக்கா..” என்றவன் விலோவை பார்த்து சிரித்தான்.

“டேய் வாய மூடுடா. விலோ வேற என்னை முறைக்கிறா..” என ரங்கா சொன்னதும், “நீயெல்லாம் போலீஸ்னு வெளிய சொல்லிகாத..” என்ற ப்ரதீப் மீண்டும் கடற்கன்னியிடம் திரும்பினான்.

அப்பொழுது தான் அந்த கடற்கன்னி அவனை பார்த்து ஸ்நேகமாக சிரித்தாள். ‘ஒருவழியா நம்மள பார்த்தாலே..’ என மனதிற்குள் நினைத்த ப்ரதீப், “ஹாய்!” என ஸ்டைலாக கையை நீட்டினான்.

கடற்கன்னி எதுவும் கூறாமல் அப்படியே பார்த்துக் கொண்டிருந்தது. ‘ஒருவேளை இங்கிலீஷ் தெரியாதோ..’ என யோசித்துக்கொண்டே, “வணக்கம்! வந்தனம்! நமஸ்காரம்!” என மும்மொழிகளிலும் வரவேற்றான்.

“வணக்கம்!” என்று மதுரமான குரலில் கடற்கன்னியும் ப்ரதீப்பிற்கு பதில் மொழிந்தாள். அவளின் பதிலை கேட்ட அனைவருக்கும் மின்சாரம் தாக்கியது போல் இருந்தது.

கடற்கன்னி என்பதே கற்பனையான ஒன்று என நினைத்தவர்களின் முன்னே ஒரு அழகிய கடற்கன்னி வந்து, தமிழில் உரையாடுகிறதை நிச்சயம் அவர்களால் நம்ப முடியவில்லை.

– சமுத்திரா வருவாள்.

Click on a star to rate it!

Rating 5 / 5. Vote count: 3

No votes so far! Be the first to rate this post.

இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
0
+1
4
+1
1
+1
0

உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள்