Loading

என்னுள் நீ காதலாய்💞

அத்தியாயம் 45

பார்ட்டி ஹாலை விட்டு அவர்களோடு வெளியே வந்த இனியனும் ரேவதியும், இளமாறனையும் செந்தமிழையும் அணைத்துக் கொண்டார்கள். “மச்சான் சூப்பர்டா.. எனக்கு இப்போதான் குளுகுளுனு இருக்கு. கேட்ட பாரு ஒரு கேள்வி, அவ ஜென்மத்துக்கும் மறக்க மாட்டா” இனியன் சிரித்தவாறு சொல்லிட,

“ரொம்ப லேட் பண்ணிட்டேன் மச்சான். காதலையும் கோபத்தையும் தெரியாம ஆள் மாத்தி காட்டிட்டேன்” இளமாறன் மனதில் இருந்ததை ஒளிவு மறைவில்லாமல் பகிர்ந்திட, மூன்று பேரும் அதிர்ந்து தான் போனார்கள்.

“மச்சான்.. உனக்கு இப்போவாச்சும் புத்தி வந்ததே” இனியன் நண்பனை கிண்டல் செய்திட, “ஹே.. ரொம்ப பேசாத டா..” இளமாறன் அவனுடைய வயிற்றில் செல்லமாக குத்தினான். நான்கு பேரும் அங்கிருந்து டாக்ஸியில் அவரவர் வீட்டிற்கு கிளம்பினர்.

வீட்டிற்குச் சென்றதும் இளமாறன் உடை மாற்றிக் கொண்டிருக்க, செந்தமிழ், “நீங்க சாப்பிடவே இல்ல. வாங்க. நான் ஏதாச்சும் சமைக்கிறேன்” என்றவள், கிச்சனுக்குச் சென்று அவசரத்திற்கு சாப்பாடும் ரசமும் வைத்து, முட்டையை பொரியல் செய்து அவனுக்கு எடுத்து வந்து பரிமாறினாள்.

“சாரி இளா.. உங்களுக்காக தான் அங்க சாப்பாடு எல்லாம் ரெடி பண்ணியிருந்தாங்க. என்னால தான் பாதியிலேயே வர வேண்டியதா ஆகிடுச்சு” குற்ற உணர்வோடு அவள் சொல்ல, அவன் சாப்பிட்டுக் கொண்டே அவளைப் பார்த்துச் சிரித்தான்.

இளமாறன் அவளுக்கு சாப்பாடு ஊட்டி விட, “வேண்டாம்..” என்று தடுத்தவளை, “சாப்பிடு தமிழ்.. நீ அங்க சரியாவே சாப்பிடல” என்று பிடிவாதமாக அவளுக்கு ஊட்டினான்.

“ரொம்ப நாளா மனசுல ஏதோ உறுத்திட்டே இருந்தது. அவ கேட்டதுக்கு அப்போவே நான் அவளுக்கு இந்த மாதிரி பதில் தந்திருக்கணும். அதை விட்டுட்டு ஒருவேளை நான் அவ சொன்ன மாதிரி தானோ, அப்படின்னு தப்பா நம்ப ஆரம்பிச்சுட்டேன்.

“ஒருவேளை நாம அன்னைக்கு ஒண்ணா இருக்காம போயிருந்தா, நமக்கு குழந்தை உருவாகாம இருந்திருந்தா, அதெல்லாம் உண்மை அப்படின்னு நம்பி நான் காலமெல்லாம் தனியாவே இருந்திருப்பேன்” அவளுக்கு சாப்பாடு ஊட்டியவாறு இளமாறன் பேசிக் கொண்டிருந்தான்.

“எல்லாருக்கும் முதல் குழந்தை ஸ்பெஷல் தான். ஆனா நம்ம பொண்ணு நமக்கு ரொம்ப ஸ்பெஷல். அவ தான் நம்ம மனசுல இருந்த காதலை வெளில கொண்டு வந்திருக்கா. நம்ம மனசுல இருந்த பிரச்சனைகளை சரி பண்ணியிருக்கா. நம்ம ரெண்டு பேர் வாழ்க்கையையே சந்தோஷமா அழகா மாத்தியிருக்கா. அவ நம்ம காதலோட அடையாளம்” கண்களில் சந்தோஷம் மின்ன பேசிக் கொண்டிருந்தவனைப் பார்த்து, மகிழ்ச்சியில் அவளுக்கு வார்த்தைகள் வரவில்லை.

இரவு தூக்கத்தின் இடையே பாத்ரூமுக்கு எழுந்து சென்ற செந்தமிழ், வெளியே வந்தபின் தண்ணீர் குடித்து விட்டு, மெதுவாக மெத்தையில் அமர்ந்தாள். இளமாறன் சாப்பிடும் போது பேசியதை எல்லாம் நினைத்துப் பார்த்துச் சிரித்தாள். குழந்தை அசையும் உணர்வு தோன்ற அவளுடைய வயிற்றில் கையை வைத்து வருடினாள்.

“பட்டு குட்டி.. உங்க அப்பா பத்தி நினைச்சதும் அசையுற. உன்னோட அப்பானா உனக்கு ரொம்ப பிடிக்குமா? ஆமா நான் அவ்வளவு நாள் பேசி நீ அசையல. அன்னைக்கு உன் அப்பா உன்கிட்ட பேசினதும் நீ அசைய ஆரம்பிச்சுட்ட. எனக்கும் என் அப்பானா ரொம்ப பிடிக்கும். ஆனா அவருக்கு தான் என்னை பிடிக்குமானு தெரியல.

“ஆனா உன் அப்பாவுக்கு உன்னை ரொம்ப பிடிக்கும் பட்டு குட்டி. அவர் ரொம்ப நல்லவர். அவரும் புனிதாம்மாவும் உன்னை நல்லா பார்த்துப்பாங்க. உன் அப்பா உன்னை ட்ரெஸ் கடைக்கு கூப்பிட்டு போய் உனக்கு என்ன வேணும்னு கேட்டு அதெல்லாம் வாங்கி தருவார். ஹோட்டலுக்கு கூப்பிட்டு போய் உனக்கு என்ன சாப்பிட வேணும்னு கேட்டு வாங்கி தருவார். உன்னை பத்திரமா, பாதுகாப்பா பார்த்துப்பார்.

“நானும் என் அம்மா மாதிரி உன்னை விட்டுட்டு தான் போகப் போறேன். என்ன தான் இருந்தாலும் உன் அப்பாவை ஏமாத்திட்டு, பழசெல்லாம் மறைச்சுட்டு என்னால அவர் கூட இருக்க முடியும்னு தோணலை” செந்தமிழ் அவள் வயிற்றை மெதுவாக வருடியவாறு பேசிக் கொண்டிருக்க,

அவள் பேசியதை எல்லாம் கண்களை மூடி கேட்டுக் கொண்டிருந்த இளமாறன் எழுந்து, அமர்ந்திருந்தவளை அப்படியே இழுத்து தன் மேல் போட்டுக் கொண்டான். “உனக்கு பழைய இளமாறன் தான் டி கரெக்ட். அந்த மாதிரி உன்னை மிரட்டி சொன்னாத்தான் நீ என் பேச்சை கேட்ப. நான் மாறிடவா” அவளுடைய கழுத்தில் முகம் புதைத்தவாறு பேசினான்.

“பழைய இளமாறனா மாறி என்ன பண்ணப் போறீங்க”

“நீ என் கூட இருக்கணும்னு ஒரு புது ஒப்பந்தம் போட போறேன்?”

“எத்தனை நாளைக்கு?”

“என்னோட வாழ்க்கை முழுக்க, நான் சாகுற வரைக்கும்”

“நான் முடியாதுன்னு சொன்னா என்ன பண்ணுவீங்க?”

“நீ முடியாதுன்னு சொல்லிடுவியா? நான் உன்னை சொல்ல விட்ருவேனா? நீ என்னை விட்டு போயிடுவியா? நான் உன்னை போக விட்ருவேனா டி தமிழ்?” என்று கேட்டவன், அவள் பதில் பேசும்முன் அவள் இதழை தன் இதழால் சிறைப்பிடித்துக் கொண்டான்.

இதழில் முத்தமிட்டு அவள் கழுத்து வளைவிற்குள் புகுந்தவன், அவள் வாசத்தை முகர்ந்து சுவாசமாக்கி, அவள் பெண்மையை ஆட்கொள்ள ஆரம்பித்தான்.

இனிமேல் நமது இதழ்கள் …

இணைந்து சிரிக்கும்

ஓசை கேட்குமே …

நெடுநாள் நிலவும் நிலவின் …

களங்கம் துடைக்க

கைகள் கோர்க்குமே … 

உருவாக்கினாய் 

அதிகாலையை …

ஆகவே நீ என்

வாழ்வின் மோட்சமே … 

எனதுயிரே எனதுயிரே …

எனக்கெனவே நீ கிடைத்தாய் …  

எனதுறவே எனதுறவே …

கடவுளைப் போல் 

நீ முளைத்தாய் !!!

அன்று காலையில் புனிதா, இளமாறன், செந்தமிழ் மூவரும் கிளம்பி தயாராக இருக்க, இனியனும் அங்கே வந்து விட்டான். தேங்காய், பூ, பழம் எனத் தேவையான எல்லாவற்றையும் புனிதா ஏற்கனவே வாங்கி வைத்திருந்தார். ரேவதி வீட்டிற்கு அவளை பெண் கேட்டுச் செல்கின்றனர்.

காதல் திருமணம் தான் என்றாலும் அவர்கள் பெற்றோரிடமும் கேட்டு முறைப்படி திருமணம் செய்ய நினைத்தனர். டாக்ஸி வர அதில் ஏறிக்கொண்டவர்கள், ரேவதி வீட்டிற்கு பயணமானார்கள். காக்கி பேண்ட்டும், நீல நிற டீஷர்ட்டும் அணிந்திருந்த சரவணன், ஏற்கனவே அங்கு வந்து காத்திருந்தான். ரேவதி வீட்டிற்கு முன்பு போலீஸ் காரில் சாய்ந்து நின்றிருந்தான்.

அவர்கள் டாக்ஸியில் வந்து இறங்கியதும், அவர்களுக்கு அருகே வந்தவன், வயலட் கலர் சட்டை, கிரே கலர் பேண்டில் வழக்கம்போல டக் இன் செய்திருந்த இனியனை பார்த்து, “வாடா புது மாப்ள.. என்னடா ஃபார்மலா வந்திருக்க” என்று கேட்டான்.

“நான் எப்பவுமே இப்படிதான் டா. அது சரி நீ என்ன யூனிபார்மோட இருக்க?” இனியனும் எதிர்கேள்வி கேட்க,

“போலீஸ்காரனுக்கு எல்லா டைமும் டியூட்டி இருக்கும்டா. சரி வாங்க உள்ள போகலாம்” சரவணன் சொல்ல, பேசிக் கொண்டே எல்லோரும் ரேவதி வீட்டிற்குள் நுழைந்தனர்.

“வாங்க.. வாங்க..” எல்லோரையும் இன்முகமாக அழைத்த ரேவதி, இனியனை பார்த்ததும் வெட்கத்தில் குனிந்து கொண்டாள். அவளிடம் இருந்த ஒரு நல்ல புடவையை அணிந்து, அளவான ஒப்பனையுடன் இருந்தாள். இவர்களைப் பார்த்த ரேவதியின் அப்பாவிற்கு முகத்தில் ஈயாடவில்லை. “எல்லாரும் வாங்க..” என்று அவர்களை அழைத்தவன், அதிர்ச்சியில் அமைதியாகவே இருந்தான்.

ரேவதி அவள் அப்பாவிடம் இனியன் பெண் கேட்க வருவான் என்று ஏற்கனவே சொல்லியிருந்தாள். ஆனால் இன்று வருவதாக சொல்லவில்லை. “என்ன ஏதோ யோசனையில இருக்கீங்க போல?” ரேவதியின் அப்பா பாண்டியின் குழப்பமான முகத்தைப் பார்த்த சரவணன் கேட்க, “இல்ல என் மகளுக்கும் நல்லது நடக்க போகுதே, அந்த சந்தோஷம் தான்” என்றவாறு இளித்தான்.

ரேவதியின் அம்மா ஈஸ்வரி எழுந்து அமர்ந்திருக்க, மற்றவர்கள் அங்கே கீழே ஒரு பெட்ஷீட்டில் அமர்ந்திருந்தனர். ரேவதி எல்லோருக்கும் காபி கொண்டு வந்து கொடுத்தாள். இனியனின் கண்கள் தன்னவளைத் தான் தழுவிக் கொண்டிருந்தன.

செந்தமிழ் அங்கிருந்த ஒரு பெரிய தட்டை எடுத்து அதில் அவர்கள் வாங்கிச் சென்ற தேங்காய், பழங்கள், வெற்றிலை, பாக்கு, ஸ்வீட் பாக்ஸ், மல்லிகைப்பூ, மஞ்சள், குங்குமத்தை எடுத்து வைத்தாள்.

“இளமாறா.. நீயும் செந்தமிழும் தட்டை எடுத்து ரேவதி அப்பா கிட்ட கொடுங்க” என்று புனிதா சொல்ல, “புனிதாம்மா நீங்களே குடுங்க..” என்றான் இனியன்.

அவர் தயக்கமாய் பார்க்க, “நான் பொண்ணு வீடு.. நீங்கதான் இப்போ மாப்ள வீடு” எனச் சிரித்தவாறு ரேவதிக்கு அருகில் நின்றுகொண்டாள் செந்தமிழ்.

கடவுளை வணங்கியவர், சிரித்துக் கொண்டே தட்டை எடுத்து பாண்டியிடம் தந்திட, “தம்பி நீங்க வாங்குங்க.. ரேவதிக்கு இதுவரைக்கும் நான் ஒரு அப்பாவா இருந்ததில்ல. ரேவதியை காப்பாத்தி அவளை நல்லபடியா பார்த்துக்கிறது நீங்கதான். ஒரு அண்ணனா நீங்க வாங்கிக்கோங்க” என்று பாண்டி சரவணனிடம் சொன்னான்.

அண்ணனாக முழு மனதோடு, மனம் நிறைந்த மகிழ்ச்சியோடு, புனிதாவிடம் இருந்து தாம்பூலத் தட்டை வாங்கினான் சரவணன். ரேவதிக்கு கண்கள் கலங்கிவிட, இனியனும் தன் பெற்றோரை நினைத்துக் கண் கலங்கினான். நண்பனின் மனமறிந்த இளமாறன் அவனைத் தோளோடு அணைத்துக் கொண்டான். இனியன் அவனைத் திரும்பி பார்க்க, ‘அழாதடா.. உனக்கு நாங்க இருக்கோம்’ என்பதுபோல் கண்களை மூடித் திறந்தான்.

அதன் பிறகு இனியனும் ரேவதியும் ஜோடியாக பாண்டி, ஈஸ்வரி, புனிதாவின் காலில் விழுந்து ஆசீர்வாதம் வாங்கினார்கள். சரவணன் தன்னுடைய காலில் விழப் போனவர்களைத் தடுத்து, “ஹே.. என்ன இது.. இப்படிலாம் பண்ணக்கூடாது. சந்தோஷமா இருக்கணும்” என்று ரேவதி கன்னத்தில் தட்டியவன், “மச்சான்.. கால்ல விழுந்து என்னை வயசனாவனா மாத்தனும்னு பார்க்குறியா?” என்று இனியனை அணைத்துக் கொண்டான்.

இனியன் I ❤️ R என்ற இனிஷியல் எழுதிய மோதிரத்தை இருவருக்கும் வாங்கி வந்திருந்தான். மோதிரத்தை எடுத்து இனியன் ரேவதிக்கு போட்டதும், ஆச்சரியத்தில் தன் குண்டு கண்களை இன்னும் பெரியதாக விரித்து அந்த மோதிரத்தையே பார்த்திருந்தாள்.

“என்ன உன் விரலை பார்த்துட்டே இருக்க. எனக்கும் மோதிரத்தை போட்டு விடு குட்டிமா” இனியன் மெல்லிய குரலில் சொல்லி அவன் கையை நீட்ட, நடுங்கியவாறு அவன் கரம் பற்றியவள், மோதிர விரலில் மோதிரத்தை போட்டதும், அவள் கண்களில் அடக்கியிருந்த கண்ணீர் திரண்டு அவன் கையில் விழுந்தது.

அது ஆனந்தக் கண்ணீர் என்று தெரிந்தாலும் அவன் மனம் தாங்காமல், “குட்டிமா.. வேணாம்..” என்று சொல்லிட, நிமிர்ந்து அவன் முகம் பார்த்தாள்.

புன்னகை நிறைந்திருந்த அவன் முகத்தைப் பார்த்தவள், “இனி.. நீ ரொம்ப நல்லவன்” என சொல்லி சிரித்தாள்.

“என்ன மாப்ள சார் எங்க ரேவதியை உங்களுக்குப் பிடிச்சிருக்கா?” செந்தமிழ் குறும்பாகக் கேட்க, “எனக்கு ஓகே தான், ஆனா கண்ணை மட்டும் உருட்டி என்னை பயமுறுத்த வேணாம்னு சொல்லுமா” இனியன் ரேவதியை வம்பிழுத்தான்.

ரேவதி கோபத்தில் அவனை கண்களை உருட்டிப் மிரட்ட, “அய்யோ பயமா இருக்கே.. என்னை காப்பாத்த யாருமே இல்லையா?” அவன் பொய் பயத்துடன் சொல்லிட, ரேவதி சிரித்துவிட்டாள்.

காதலாய் வருவாள்💞 

Click on a star to rate it!

Rating 4.8 / 5. Vote count: 8

No votes so far! Be the first to rate this post.

இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
3
+1
4
+1
0
+1
1

உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள்