Loading

இருதயம் 3

விடுதிக்குள் நுழைந்ததும் மெத்தையில் மல்லாக்க விழுந்த பெண்கள் இருவருக்கும் தப்பித்தோம் பிழைத்தோம் எனும் நிலை தான்.

சற்று ஆசுவாசமாக கண் மூடி நடந்த நிகழ்வை புறம் ஒதுக்க முயற்சித்திட… முல்லையின் கண்முன்னே புவியின் முகம் தோன்றி மறைந்தது.

“செம போலீஸ் தீப்ஸ்… லத்தியை வைத்துக்கொண்டு சுத்தி வந்தாரே… கொல மாஸ். காரிலிருந்து இறங்கி வரும் போது ஒரு ஹீரோவை நேரில் பார்த்த ஃபீல். எப்படி ஒரே அடியில் நாலு பேரையும் அலற வைத்தார்?” என்று முல்லை கண்களை மூடியபடி சிலாகித்து சொல்ல,

“நீ பயத்தில் இருந்தன்னு நினைத்தேன். பார்த்தாக்கா, அவரை நல்லா சைட் அடிச்சிருக்க போலவே?” என்ற தீபிகா, முல்லையின் அருகில் ஓடிவந்து அமர்ந்ததும்…

“பார்த்ததும் காதலா?” என கண்ணடித்துக் கேட்டாள்.

உடனடியாக இல்லையென்று மறுத்த முல்லை…

“பிடிச்சிருக்கு தீப்ஸ். அவருக்கு நான் ஃபேன் ஆகிட்டேன். குற்றவாளியை பார்த்ததும் ஓவர் ஆக்ஷன் காட்டாமல், இதுதான் சாக்குன்னு நமக்கும் அட்வைஸ் பண்ணாம, நார்மலா எப்படி நடந்துக்கணுமோ அப்படி நடந்துகிட்டார்” என்ற முல்லையின் முகத்தில் புவி மீதான பிடித்தம் அப்பட்டமாக தெரிந்தது.

“ஃபேன் அப்படின்னா?” தீபிகா சந்தேகமாகக் கேட்டிட…

“ஆக்டர், ஸ்போர்ட்ஸ் பிளேயர்ஸ் இவங்களுக்குத்தான் ஃபேன்ஸ் இருக்கணுமா என்ன? நான் இன்னையிலிருந்து யாழனோட ஃபேன்” என்று இரு கரம் விரித்து கூறிய முல்லை தன்னுடைய அலைப்பேசியை எடுத்து இணையத்தில் எதையோ தட்டினாள்.

“யாழனா? அது யாரு?”

“புவியாழன். அவர் பேர். நேம் பேட்ஜில் நோட் பண்ணேன்” என்ற முல்லை தன்னுடைய தேடுதல் பக்கத்தில் எம்பி குதித்த புவியின் விவரங்களை வார்த்தை வார்த்தையாகப் படித்தாள்.

“ப்பா… த்ரீ இயர்ஸில் நிறைய அச்சீவ் பண்ணியிருக்கார் தீப்ஸ். பெரிய பெரிய கேஸ் டீல் பண்ணியிருக்கார். எல்லாம் சக்ஸஸ் தான். நிறைய இடம் மாற்றலாகியிருக்கார். இப்போ ஐந்து மாதமாகத்தான் சென்னையில் ஏ.எஸ்.பி’யாக இருக்கிறார். இதுக்கு முன்னாடி கன்னியாகுமரியில் இருந்திருக்கிறார்” என்று அவனைப்பற்றிய தகவல்களை படித்துக்கொண்டே தோழிக்கும் சொல்லிக் கொண்டிருந்தாள்.

“அங்க அவர்கிட்ட பெயர் கூட சொல்லவிடாமல் இழுத்துட்டு வந்துட்டு… இங்க அவரைப்பற்றி எல்லாம் தெரிஞ்சிக்கிட்டு இருக்க நீ?” என்ற தீபிகா, “அவரைப்பற்றி நெட்டில் இல்லாத தகவல் ஒன்னு நான் சொல்றேன்” என்றாள்.

“என்னது?” முல்லை ஆர்வமாக ஏறிட,

“ஆகாஷ், அண்ணா தான் இவரு” என்றாள் தீபிகா.

“உனக்கெப்படித் தெரியும்?”

“ஒருநாள் நம்மவூர் ஏஎஸ்பி என் அண்ணாதான்னு சொன்னான். ஆனால் அவரைப்பற்றி டீட்டெயில் எதுவும் சொல்லல. அவர் நம்மை கூட்டிட்டு வந்தப்போ, சீட்டில் வைத்திருந்த அவரோட மொபைல் பிளின்க் ஆச்சு, லாக்ஸ்கிரீனில் அவரோடு ஆகாஷ் இருந்தான். சோ கெஸ் பண்ணேன்” என்ற தீபிகா, “அவருக்கு ஒரு தேன்க்ஸ் கூட சொல்லவிடலடி நீ. நாளைக்கு ஆகாஷ்கிட்ட சொல்லி சொல்லிடணும்” என்றாள்.

“வேண்டாம்” என்று உடனடியாக மறுத்த முல்லை, “இந்த விஷயத்தை இதோட, இப்போ நம்ம ரூமோடு மறந்திடு” என்று அழுத்தமாகக் கூறினாள்.

“ஏன்?”

“சரி போய் நம்ம பிரண்ட்ஸ் எல்லார்கிட்டவும் சொல்லு. தைரியமா போய் பயந்து ஓடி வந்திருக்கீங்கன்னு கலாய்ப்பாங்க. அடுத்து ஆகாஷ்க்கு தெரிந்ததுன்னா, நேரா யாழன் சார்கிட்ட சொல்லிடுவான். அவர் ரொம்ப நேர்மையான ஆஃபீஸர் போல, இதுக்குமேல நாம இப்படி பண்ணிடக்கூடாதுன்னு காலேஜ் வந்து சொல்லிட்டாருன்னா… நீயும் நானும் மூட்டை முடிச்சைக் கட்ட வேண்டியது தான்” என்ற முல்லை இதற்கு மேல் ஒன்றுமில்லையென போர்வையை இழுத்து மூடிக்கொண்டாள்.

“என்னவோ சொல்ற?” என்ற தீபிகாவும் உறங்க ஆயத்தமாகினாள்.

முல்லைக்கு ஏனோ புவியை பார்த்ததும் பிடித்தது. அந்த பிடித்தத்திற்கு என்ன பெயர் என்று அவள் ஆராயவில்லை. பார்த்ததும் ஒரு பூவினை எப்படி ரசிப்போமோ அந்த மனோநிலையில் தான் புவியின் ஆர்பாட்டமில்லா அதிரடியையும், அமைதியான நடவடிக்கைகளையும் ரசித்திட்டாள்.

ஒரு ஈர்ப்பில் அவனைப்பற்றி தெரிந்து கொண்டவளுக்கு… அவனது பணியில் அவன் செய்திட்ட சாதனைகளில் அவனிடத்தில் தானாக மரியாதை வந்திருந்தது அவளுள்.

“இவரை மாதிரி போலீஸ்ங்களும் இருக்கத்தான் செய்றாங்க போல” என்று வாய்விட்டேக் கேட்டுக்கொண்ட முல்லை, தனக்கு அருகில் அரவம் உணர்ந்து போர்வையை விலக்க, மிக அருகில் தீபிகாவின் முகம்.

“அய்யோ… அம்மா.” முல்லை பதறினாள்.

“சரியில்லை… இது சரியில்லை முல்லை. வீரமுத்து நினைப்பு வச்சிக்கோ” என்றாள்.

“ஹேய் கண்டதை யோசிக்காமல் தூங்குடி” என்ற முல்லை, தானும் உறங்கிப்போனாள்.

******

நள்ளிரவு கடந்து வந்த அண்ணனை முறைத்துக் கொண்டிருந்தான் ஆகாஷ்.

தம்பியின் முறைப்பை கண்டு கொள்ளாதவனாக, கேக் செய்வதில் மும்முரமாக ஈடுபட்டிருந்தான் புவி.

“இதுதான் நீங்க சரியா பனிரெண்டு மணிக்கு விஷ் பன்றதா?” என்றான்.

“வரும்போது ஒரு பிரச்சினை ஆஷ்… ரெண்டு பொண்ணுங்களை நாலு பேர் துரத்திட்டு இருந்தானுங்க… அவனுங்களை பாஸ்கரை வரவச்சு ஒப்படைச்சிட்டு, பொண்ணுங்களை அவங்க காலேஜ் ஹாஸ்டல் கிட்ட விட்டு வர லேட்டாகிடுச்சு” என்று விளக்கம் கொடுத்த புவி, “உன் காலேஜ் தான். முஸ்லிம்ஸ். புர்கா போட்டிருந்ததால முகம் பார்க்க முடியல” என்று சொல்லிக்கொண்டே கேக் செய்ய அனைத்துப் பொருட்களையும் கலந்து அவனில் வைத்து வெப்பநிலை சரி செய்து தம்பியிடம் திரும்பினான்.

“ட்வென்டி மினிட்ஸ் ரெடியாகிடும்” என்றான்.

“ரெடியாகிடும் சரி… நல்லா வருமா?” என்ற ஆகாஷ், “லாஸ்ட் டைம் செய்த கேக் நினைவிருக்கா?” எனக் கேட்டு சிரிக்க, புவி அவனை கழுத்தோடு கட்டிக்கொண்டு வளைத்து அவனின் வயிற்றிலே செல்லமாகக் குத்தினான்.

“ஆ.. அம்மா வலிக்குதே” என்று சத்தமின்றி கத்திய ஆகாஷ், “உங்க போலீஸ் அடியை என் உடம்பு தாங்காதுப்பா” என்று போலியாக நடித்ததில் புவி வாய்விட்டு சிரித்தான்.

“நீ சிரிக்கும் போது அழகா இருக்கண்ணா?” என்ற ஆகாஷ் தன் அண்ணனின் கன்னம் கிள்ள, அவனின் உச்சியில் கை வைத்து அழுத்தம் கொடுத்தான் புவி. ஆதுரமாக.

“கேக் ரெடியாவதற்குள் ஐசிங்க்கு தேவையானதை பிரிப்பேர் பண்ணுவோம்” என்ற புவி அதன் வேலைகளை செய்திட, ஆகாஷ் அங்கிருந்த மேடையில் குதித்து அமர்ந்தான்.

கிரீமில் நிறத்தினை கலந்து கொண்டிருந்த புவி திடீரென பக்கென்று சிரிக்க…

ஆகாஷ் காரணம் அறிந்திட வினவினான்.

“என் வயசு பசங்க சமைச்சா… பக்கத்துல பொண்டாட்டி இருப்பாள். இப்போ நீ உட்கார்ந்திருக்க மாதிரி. என் நிலைமை அதுக்கு வழியில்லாம ஒரு வானரம் உட்கார்ந்திருக்கு. எல்லாம் என் நேரம்” என்றவன் ஆகாஷ் கையில் சிக்காது ஓடினான்.

“அண்ணா திஸ் இஸ் டூ மச். உங்களுக்கு கல்யாணம் செய்துக்கணும் அப்படின்னா, அம்மா அப்பாவிடம் நேரடியா சொல்லுங்க. அதைவிட்டு என்னை வானரம்லாம் சொல்லாதீங்க” என்று புவியை பிடித்து கன்னத்தில் கடித்து வைத்தான்.

“என் நேரம் சொன்னப்போ நம்பலையே… இப்போ பாரு, நீ கடிச்சு வைக்கிற இடமாடா இது” என்ற புவியின் பாவனையில் இப்போது சிரிப்பது ஆகாஷின் முறையாயிற்று.

இருவரும் இப்படி கலாட்டாக்கள் நிறைந்த பேச்சினூடே கேக்கினை செய்து முடித்திருந்தனர்.

“பைவ் மினிட்ஸ் ஆஷ். கிச்சனில் நின்றது கசகசன்னு இருக்கு. ஃபிரெஷ் ஆகிட்டு வரேன்” என்ற புவி சொன்னது போல் வர, இருவரும் ஒன்றாக தங்களின் பெற்றோரின் அறைக்கு, செய்த சிறிய அளவிலான கேக்குடன் உள் நுழைந்தனர்.

அங்கு திருவும், அமிர்தமும் பிள்ளைகளின் வரவை எதிர்பார்த்தது போல் அமர்ந்திருக்க…

“தூங்கலையா நீங்க?” எனக்கேட்டான் ஆகாஷ்.

“கிச்சனுக்குள் ரெண்டு திருட்டு பூனைங்க சிரிச்சு பேசுற சத்தம் கேட்டுச்சு. அதான் தூக்கம் வராம உட்கார்ந்திருக்கோம்” என்றார் திரு.

“கண்டுபிடிச்சிட்டிங்களா?” என்ற புவி, இருவருக்கும் முன் கேக்கினை வைத்திட,

“அண்ணா செய்தாங்கம்மா. இந்த டைம் நல்லா வந்திருக்கு” என்று முந்திக்கொண்டுக் கூறினான் ஆகாஷ்.

“சாப்பிட்டியா தங்கம்?” புவியின் கன்னம் வருடி அமிர்தம் கேட்டிட,

“அதெல்லாம் அண்ணா வந்ததும் சாப்பிட வச்சிட்டேன்” என்றான் ஆகாஷ்.

அதன் பின்னர் புவியும், ஆகாஷும் தாய் தந்தைக்கு திருமணநாள் வாழ்த்துகள் சொல்லிட, அமிர்தமும், திருவும் தங்களின் மக்களை ஒன்றாக அணைத்துக்கொண்டனர்.

“செல்ஃபி” என்ற ஆகாஷ் அத்தருணத்தை அலைபேசியில் பதிவு செய்தான்.

அமிர்தம், திரு இணைந்து கேக்கினை வெட்டிட… பிள்ளைகள் இருவரும் கைத்தட்டி ஆர்பரித்தனர்.

நால்வரும் மாற்றி மாற்றி கேக்கினை ஊட்டி அந்நேரத்தை இனிமையாகக் கழித்தனர்.

“நாம ஜெயிச்சோட்டோம் அண்ணா… ஜெயிச்சிட்டோம்.” ஆகாஷ் திடீரென சொல்ல… புரியாது பார்த்தனர் மற்ற மூவரும்.

“பத்து அட்டெம்ட்டுக்கு அப்புறம் இந்த கேக் நல்லா வந்திருக்கே” என்று புவி முறைப்பதை பொருட்படுத்தாது, “நம்ம ஸ்டிச்சிங்க் சென்டர் உள்ளவே ஒரு ஓரமா கேக் ஷாப் ஓபன் பண்ணிடலாம்” என்க… “ம்மா… என்னை கிண்டல் செய்றான்” என்று சிறுவனாக சிணுங்கினான் புவி.

“தம்பி சும்மா உன்னை சீண்டுறான் தங்கம்” என்ற அமிர்தம்… “அண்ணனை ரொம்ப கேலி செய்யாத சின்னக்குட்டி” என்றார்.

“மொக்கு பாப்பா… அம்மாகிட்ட கம்ப்ளைய்ன்ட் பண்ணி, சப்போர்ட்டுக்கு கூட்டிட்டு வராங்க” என்று ஆகாஷ் மீண்டும் கிண்டல் செய்திட… இம்முறை திருவும் அவனுடன் சேர்ந்து சத்தமாக சிரித்தார்.

“அப்பா… யூ டூ” என்றவன், “நாளைக்கே உன்னை புடிச்சு ஜெயிலில் போடுறேன் இரு” என்று விளையாட்டாக தம்பியை மிரட்டினான் புவி.

“போட்டுக்கோங்க… நான் என் அண்ணாவோட இன்ஃபுளூயன்ஸ்ல வெளியில் வந்திடுவனே” என்று அசராது பதில் கொடுத்தான் ஆகாஷ்.

சிறு பிள்ளைத்தனமான அவர்களின் வாக்குவாதத்தை புன்னகையுடன் பார்த்திருந்த அமிர்தம் மற்றும் திரு அந்நாளில் எழும் பழைய வடுக்கள் மறந்து நெஞ்சம் நிறைந்து மகிழ்ந்தனர்.

“ரொம்ப நேரமாகுது. நாளைக்கு உனக்கு இன்டர்னெல் இருக்குல. போய் படு. அப்புறம் காலையில் எழுந்துக்க அடம் பண்ணுவ” என்று ஆகாஷிடம் சொல்லிய திரு, “நீயும் போ புவி. ரொம்ப டயர்டா தெரியுற!” என்றார் பெரிய மகனிடம்.

“இன்னைக்கு உங்களோடவே படுத்துக்கிறேன் ப்பா” என்ற புவி பெற்றோருக்கு நடுவில் பாய்ந்து படுத்துக்கொள்ள… “நானும்… நானும்” என்று ஆகாஷும் தன் அண்ணனின் அருகில் படுத்தான். பிள்ளைகளின் இருபுறமும் அரணாக பெற்றோர்.

அவர்கள் உலகில்… அந்த அழகிய கூட்டுக்குள் நால்வர் மட்டுமே.

உறவுகள் பல இருந்தும்… அவர்களுக்கு அவர்கள் மட்டுமே! அவ்வுறவுகளின் ஏக்கங்களை பிள்ளைகளுக்குக் காட்டிடாது வலம் வருகின்றனர் அமிர்தம் மற்றும் திரு.

தங்களுக்கு பெரும் சொந்தம் உள்ளதென்று கூட புவி மற்றும் ஆகாஷிற்கு தெரியாது. தங்களின் வருத்தம் பேச்சுவாக்கில் வெளிப்பட்டுவிடுமென்று உறவுகளைப்பற்றி இருவருமே இருவரிடமும் சொன்னதில்லை.

ஆனால், தங்களின் பெற்றோர் ஒருவரையொருவர் விரும்பி… உறவுகளை எதிர்த்து திருமணம் செய்து கொண்டவர்கள் என்பது மட்டும் தெரியும். அவர்களுக்குள் எப்படி விருப்பம் மலர்ந்ததென்று அறிந்திருந்த புவிக்கு, அவனது தந்தையை நினைக்கையில் அத்தனை கர்வமாக இருக்கும்.

சொந்தங்களைப் பற்றி தாய் தந்தையே சொல்லிடாதபோது… அவர்களைப்பற்றி தெரிந்துகொள்ள புவி மற்றும் ஆகாஷிற்கு விருப்பமில்லை.

இத்தனை வருடங்களில் அந்த உறவுகளுக்கு தன் பெற்றோரின் நினைவே வந்திருக்காதா? விரும்பி திருமணம் செய்துகொண்டால் ஒதுக்கி வைப்பார்களா? என்கிற தார்மீக கோபமே புவிக்கு அவர்களைப்பற்றி தெரிந்துகொள்ள வேண்டுமென்கிற எண்ணத்தை எட்டிபார்க்கவிட்டதில்லை.

அந்த உறவுகளை எண்ணி தங்களுக்கு காட்டிக்கொள்ளாது இருவரும் வருந்துகின்றனர் என்று தெரியும். ஆனால் அந்த வருத்தத்தை போக்கிட, தன் பெற்றோரை ஒதுக்கிய அந்த உறவுகளை தேடி தானாக செல்ல அவனுக்கு ஏனோ மனமில்லை.

ஆனால் அவன் வெறுக்கும் உறவுகளை அவனவளுக்காக சந்திக்க இருக்கிறான் என்பது அவனே அறியாதது.

********

அதிகாலையே அறையின் கதவு தட்டப்பட, கண்களை தேய்த்துக்கொண்டே வந்து கதவினை திறந்தாள் தீபிகா.

தோழியர் மூவரும் ஆர்வத்தோடு நின்றிருந்தனர்.

“பரவாயில்லையே மாட்டாமல் வந்துட்டிங்க போல” என்று சம்ரின் கேட்டுக்கொண்டே தீபிகாவை தள்ளிக்கொண்டு அறைக்குள் நுழைந்திட…

“எப்படி இருந்துச்சு?” என்று வினவினாள் நதியா?

“அதையேன் கேட்குற?” என்று தீபிகா சலிப்படையா…

“என்ன வில்லங்கத்தை விலைகொடுத்து வாங்கினீங்க?” என்று சரியாக கணித்தாள் மரியம்.

தீபிகா இரவு முல்லை சொல்லிய காரணங்களையெல்லாம் மறந்து இரவு நடந்தவற்றை சொல்ல முயல,

போர்வையை விலக்கிக்கொண்டு வேகமாக எழுந்து அமர்ந்த முல்லை,

“நைட் நாங்க போகவே இல்லையே! போயிருந்தால் தானே என்ன நடந்துச்சுன்னு சொல்ல முடியும்” என்றாள்.

“போகலையா?” மூவரும் ஒரு சேர கேட்டிட, தீபிகா விழித்தாள்.

“ஆமாம்… போகல” என்று கைகளை விரித்த முல்லை, “ஹாஸ்டல் பின்னாடி ஏதும் வழியிருக்கும் நினைத்து போனால், அங்கு சின்ன ஓட்டை கூட இல்லை. சுவரும் அவ்வளவு உயரம். ஏற முடியாமல் திரும்பி வந்துட்டோம்” என்று கோர்வையாக அவர்கள் நம்பும்படி பொய்யுரைத்தாள்.

தீபிகாவும் முல்லையின் பார்வையில் ஆமென்று வேகமாக தலையாட்டிட, தோழியர் எதுவும் கேட்காது நம்பினர்.

“ஏதும் சுவாரஸ்யமா இருக்கும்ன்னு கதை கேட்க வந்தால்… சப்புன்னு முடிஞ்சிப்போச்சு” என்று அலுத்துக்கொண்ட நதியா,

“எழுந்ததே எழுந்துட்டோம் இன்டர்னல் எக்ஸாம்… படிக்கவாவது செய்யலாம்” என்று சொல்ல மூவரும் வெளியேறினர்.

நதியா, சம்ரின், மரியம் மூவரும் பொறியியல் ஐடி துறை. முல்லை, ஆகாஷ், தீபிகா மூவரும் கணினி துறை. இருப்பினும் ஆகாஷ் தவிர்த்து மற்ற ஐவரும் விடுதி வாழ்க்கையால் நல்ல நெருக்கம். அதேபோல் கல்லூரியில் முல்லைக்கு தீபிகாவிற்கு இணையாக ஆகாஷ் நல்ல நட்புடன் இருந்தான்.

“எதுக்கு முல்லை பொய் சொன்ன?”

“உண்மையை சொல்லி மாட்டிக்கவா. அவளுங்க வாய் சும்மா இருக்காது. உளறி வச்சிட்டால், மாட்டுறது நீயும் நானும் தான். நைட் அவ்ளோ சொல்லியும், கேட்டதும் சொல்லப்போற நீ?” என்ற முல்லை தீபிகாவின் தலையிலே நங்கென்று கொட்டினாள்.

“ஆவென்று” அவள் அலற,

தீபிகாவின் வாயினை பொத்திய முல்லை, “ஆகாஷ்கிட்டவும் சொல்லக் கூடாது” என்று எச்சரித்தாள்.

தீபிகாவின் தலை தன்னால் சரியென்று ஆடியது.

அந்நேரம் முல்லையின் அலைப்பேசி ஒலிக்க யாரென்று எடுத்து பார்த்திட ஆகாஷ்.

“தின்க் ஆஃப் த டெவில்” என முணுமுணுத்த முல்லை அழைப்பை ஏற்றிருந்தாள்.

“என்னடா இவ்வளவு காலையில்?”

“என்னவாம்… நீ அதிசயமா தூங்கமால் முதல் காலிலே அட்டெண்ட் பண்ணியிருக்க?”

அவள் கேட்டதற்கு பதில் சொல்லாது எதிர்கேள்வி கேட்டிருந்தான்.

“இப்போதான் எழுந்தேன். நீ எதுக்கு கூப்பிட்ட சொல்லுடா?” எனக் கேட்டாள்.

அவன் பாடத்தில் தலைப்பு ஒன்றை கூறி அதில் சந்தேகம் கேட்டிட…

“ஹேய் டார்லிங் நீ படிக்கிறியாடா?” என்று விழி விரித்து குரல் இழுத்து வினவினாள்.

“ஏய் பக்கி எக்ஸாம். படிக்காம வேறென்ன செய்வாங்க? நீயெல்லாம் படிக்காமலே பர்ஸ்ட் மார்க் எடுக்கிற ஆளு. நானெல்லாம் அப்படியா? எவ்ளோ படிச்சாலும் மார்க் வராது” என்று ஆகாஷ் பொய்யாகக் குறைபட…

“டேய்… டேய்… உருட்டாதடா. போன டைம் நீதான் பர்ஸ்ட் வந்த. இப்போ இப்படி வாய் கூசாமல் உருட்டுற?” என்றவள், “நீ காலேஜ் சீக்கிரம் வந்திடு. நான் குல்முகர் மரத்துகிட்ட வெயிட் பன்றேன்” என்று வைத்துவிட்டாள்.

தீபிகா என்னவென்று கேட்டிட முல்லை காரணம் கூறினாள்.

“எனக்கும் அந்த டவுட் இருக்கு முல்லை” என்று தீபிகா சொல்லிட,

“அப்போ ரெண்டு பேருக்கும் ஒரே டைம் சொல்லிடுறேன்” என்ற முல்லை கொஞ்ச நேரம் புத்தகத்தை புரட்டினாள்.

நேரத்தை பார்த்தவள் கல்லூரி செல்லத் தயாராகி, தீபிகாவையும் கிளம்பிட விரட்டினாள்.

“என்னை விரட்டாமல் அவன் கிளம்பிட்டானா கேளுடி!” என்று அதட்டிய தீபிகா பின்னலிட்டுக் கொண்டிருந்தாள்.

“கரெக்ட்… அப்புறம் அங்கு போய் வெயிட் பண்ணனும்” என்ற முல்லை ஆகாஷிற்கு அழைத்திட… முழு அழைப்பு சென்றும் எடுக்கப்படவில்லை.

“படிச்சிட்டே தூங்கிட்டானா?” என நினைத்தவள் மீண்டும் அழைக்க, அழைப்பு எடுக்கப்பட்டது.

“தூங்கிட்டியாடா? சீக்கிரம் வந்திடு” என்று எடுத்ததும் கூறியவள், “அம்மா, அப்பா வெட்டிங் டே சொன்னியே விஷ் பண்ணிடு. வரும்போது சாப்பாடு கொண்டுவா! தீப்ஸ்க்கும் சேர்த்து” என்றவள் அப்போதுதான் அவன் ஒன்றுமே பேசாது இருப்பதை கவனித்தாள்.

“என்ன டார்லிங் ஒன்னும் பேசமாட்டேங்கிற, லைனில் இருக்கியா?” எனக் கேட்க,

“போன் எடுத்தால், யார் பேசுறாங்கன்னு தெரிஞ்சிக்கிட்டு அப்புறம் பேசனும்” என்று ஒலித்த சிம்ம குரலில் அடித்து பிடித்து அழைப்பை துண்டித்திருந்தாள் முல்லை.

Click on a star to rate it!

Rating 4.9 / 5. Vote count: 51

No votes so far! Be the first to rate this post.

இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
4
+1
50
+1
0
+1
1

உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள் 

3 Comments

  1. ஓ – அப்போ உறவாகிட போறீங்களா?…