
பூகம்பம் – 9
இவளையே பார்த்து நின்றிருந்த ரூபனுக்கு ‘ஏன் அப்படியே நிற்கறாங்க.?’ என்ற குழப்பம் மேலிட, அவளை நோக்கி நடந்தான். சற்று அருகில் சென்றதும் தான் அவள் எதற்கு நிற்கிறாள் என்ற காரணமே புரிய பக்கென்று சிரித்து விட்டான்.
விரல்களால் நெற்றியை தேய்த்து இளநகையை அடக்கிய ரூபனுக்கு அவளை அப்படியே விடவும் மனதில்லை.. சாதாரணமாக அவ்வழியில் வருவது போல் வந்தவன் தொண்டையை கனைத்தவாறு அவளை கடந்து செல்ல, தலை சாய்த்து அவனை கண்ட பெண்மகளுக்கு புன்னகைக்கீற்று அரும்பியது.
அவனின் முதுகை பார்த்தபடி நடந்தவளுக்கு நாய் ஒன்று நின்றதே மறந்திருந்தது.. அவள் எவ்வழியில் ஏரிக்கு வந்திருப்பாள் என்பதை ஊகித்த ரூபன் அவ்வளைவு வந்ததும் நின்று விட்டான் அவளை பாராமல்.!
ஆனால் ஏனோ அவனால் சிரிப்பை அடக்க முடியாமல் போனது.. அவன் எதற்கு சிரிக்கிறான்.? என்று புரியாமல் முகத்தை சுருக்கியவள் “எதுக்கு சிரிக்கறீங்க.?” என்று தன்னை மீறி சத்தமாக கேட்டும் விட்டாள்.
தன்னிடம் பேசி விட்டாள்.. இதோ என் ஆதி என்னிடம் பேசி விட்டாள்.. சிரிப்பு மறைந்து சந்தோச அலை அவனுள் பரவிட, அகம் மகிழ்ந்ததில் முகமும் மலர்ந்து “ஒண்ணுமில்லமா” என்றான் சாந்தம் கலந்த மகிழ்வுடன்.
ஆனால் ஆதிராவால் நம்ப இயலாமல் “நான் நம்ப மாட்டேன்.. என்னமோ இருக்கு.. என்னனு சொல்லுங்க.?” என்றிட, சற்று வளைந்த இதழ் வளைவுடன் “அப்படியாமா.? அதுல எனக்கும் பாதி குடுங்களேன்” என்று கேலி செய்தான் ரூபன்.
இதில் பாவையின் முகம் உம்மென்று மாறி “நம்பிட்டேன் போங்க” என்று இதழை சுழித்து பின்பு “ஆமா நான் யாருனு உங்களுக்கு தெரியுதா.?” என்று கேட்டாள் தன்னை கண்டும் காணாததுமாக நின்றதை ஞாபகப்படுத்தி.!!
‘உன்னைய எப்படி ஆதி மறக்க முடியும்.?’ என்று உள்ளூர நினைத்தவன் வெளியில் “அவ்வளவு சீக்கிரம் மறக்க கூடிய ஆளா நீங்க..” என்று ஒற்றை புருவத்தை மேலேற்றி வினாவுடன் கலந்த பதிலை முன்வைத்தான்.
‘பாருடா என் அபியை.. என் அபி ஆச்சே..!’ என்று மெச்சி கொண்ட ஆதிரா “ம்ம்ம்ம் நான் கிளம்பறேன்.. நிவே அக்கா அப்பவே போன் பண்ணுனாங்க.. ஆனா ஒன்னு நீங்க என்னைய பார்த்து தான் சிரிச்சீங்க.. அது மட்டும் எனக்கு நல்லாவே தெரியுது” என்றாள் நான் உன்னை அறிவேன் என்ற ரீதியில்.!
ஆடவனின் பதிலை எதிர்பார்க்காமல் ஆதிரா நகர, பெண்ணவளையே பார்த்திருந்த ரூபன் என்ன நினைத்தானோ “ஹலோ வீரத்தமிழச்சி.. உங்க வீரத்தை கண்டு நான் வியக்கறேன்..” என்று அவளுக்கு கேட்கும்படி கத்தினான்.
ஆதிராவின் கருமணிகள் அந்நிச்சையாக திகைப்பில் அகன்று “எதே.?” என்ற ரீதியில் அவள் திரும்பிட, அவள் பாவனையில் தன்னை மீறி எழுந்த சிரிப்பலையில் பெண்ணவளை கண்டு கணசிமிட்டி சிரிப்பை சிதற விட்டவன் டாட்டா என்று கையை அசைத்தான்.
முதலிலே திகைப்பில் இருந்த ஆதிரா இப்போது தன் ரசனை பார்வைதனை அவன் மேல் படரவிட்டவள் கன்னங்குழி சிரிப்பில் தன்னை மறந்து நின்றிருந்தாள். “பார்த்து போமா.. எப்பவும் நீங்க எனக்கு ஸ்பெஷல் தான்..” என்று தன் மனதையும் மறைக்காமல் அவளிடம் உரைத்து விட்டான்.
திகைப்பும் அதிர்ச்சியும் கலந்த கலவையில் தத்தளித்து “எனக்கும் தான்.. அதுவும் உங்க ஸ்மைல் எனக்கு ரொம்ப ஸ்பெஷல்..” என்று மனதில் இருப்பதை ஒளிவு மறைவு இல்லாமல் கூறி ஆதிரா கிளம்பறேன் என்று டாட்டா காட்டினாள்.
சில எட்டுக்கள் எடுத்து வைத்தவள் திடீரென்று திரும்பி “பார்த்து போங்க” என்று அவனை போலவே கூறியது மட்டுமில்லாமல் கண்சிமிட்டி புன்னகை மலரை வீசி விட்டும் சென்றாள்.
‘ஆதி’ என்று வாய் வரை வந்த வார்த்தையை விழுங்கிய ரூபன் இது கனவா.? நிஜமா.? என்று இனம்புரியாத இம்சையில் நின்றிருக்க, மீண்டும் திரும்பிய ஆதிரா கணக்கின்றி விழியம்பை அவன்மீது எய்தாள்.
தானாக ரூபனின் இதழ்களும் குறுநகையுடன் விரிந்திட, இருவரின் கருமீன்களும் ஒன்றை ஒன்று தழுவி படபடத்து விடைப்பெற்றது ஏக்கத்துடனே.!!
ஏனடா(டி) உந்தன்
இதயச்சிறையில் எம்மை
விழிவலை கொண்டு
சிறைப்பிடிக்கவே முயல்கிறாய்.!
உந்தன் இதய கூண்டில்
எம்மை அடைக்காமல்
விட்டாலும் நீ
எங்கிருந்தாலும் உன்னை
தேடி சிறகை விரித்து பறந்து
வருவேனடா(டி) எப்போதும்
உனக்கானவளா(னா)ய்
இருப்பதற்காகவே.!!
ஆதிராவுக்கு ஆச்சரியம் என்றால் ரூபனின் நிலையை சொல்லவா வேண்டும்.? என்ன மனநிலையில் இருக்கிறோம் என்றே புரியாமல் கலவையான உணர்வுகளில் மிதந்தவனின் மனது அந்நிலையிலும் எச்சரிக்கை விடுவித்தது இது தவறென்று!
அதன்பின்பு தான் சுயத்திற்கு வந்து ‘சிவா அண்ணாக்கு தெரிஞ்சா என்ன நினைப்பாங்க.? இது தப்புடா’ என்று தன்னை தானே கடிந்து கொண்டான். பனிதுளியாக மனதை நனைத்த பெண்ணவளின் நினைவை ஓரம் கட்டியவனின் மனநிலை முற்றிலும் மாறி இருந்தது.
நேரம் போகாமல் இன்ஸ்டாகிராம் பக்கம் சென்ற ஆதிரா ஒவ்வொரு ஸ்டோரியாக (Instagram story) பார்த்து கொண்டு வர, சிவாவின் ஸ்டோரியை பார்த்ததும் விழி விரித்தவளுக்கு இப்போது தான் புரிந்தது ரூபனின் சிரிப்பிற்கான காரணமே.!!
‘மாம்ஸ்’ என்று கடுங்கோவத்தில் பல்லை கடித்து போனை அணைத்தவள் சிவாவை தேடி சென்றாள்.
ஆதிராவின் சத்தத்தில் “என்ன திரா உன் மாமனை ஏன் இவ்ளோ அவசரமா தேடிட்டு இருக்க?” என்று நிவே கிண்டலடிக்க, “அக்கா மொதல்ல மாமா எங்கனு சொல்லுங்க” என்றாள் கடுப்புடன்.
“கொட்டகைல இருப்பாங்கனு நினைக்கறேன்.. அப்படி எனத்துக்கு அவரை தேடற?” என்ற நிவேதாவின் பேச்சை காதில் வாங்க ஆதிரா தான் அங்கு நிற்கவில்லை.. நேராக கொட்டகைக்கு சென்ற ஆதிரா “மாம்ஸ் உனக்கு வேற வேலையே இல்லயா?” என்று கேட்டாள் சிவாவிடம்.
ஆதிராவின் பேச்சில் தலையும் புரியாமல் காலும் புரியாமல் பே வென்று அவளை பார்த்த சிவா பின்பு “சாணி அள்ளறதும் ஒரு வேலை தான் திரா.. வேணும்னா நீயும் சேர்ந்து அள்ளு வா” என்று எப்போதும் போல் அவளை கலாய்த்தான்.
‘யோவ்’ என்று வாய்வரை வந்த வார்த்தையை விழுங்கி “நேத்து எடுத்த போட்டோவை எதுக்கு நீங்க இன்ஸ்டாகிராம்ல போட்டுருக்கீங்க” என்று தன்னை நிலைப்படுத்தி கொண்டு கேட்டாள் ஆதிரா.
அவள் வினவியதை காதில் வாங்காமல் சாணி கூடையை தூக்கியவாறு சிவாவோ “திரா பேபி ஒரு கை பிடியேன் தூக்க முடில” என்றிட, மாமா என்று கையை உதறிய ஆதிரா “வீரத்தமிழச்சியாமா வீரதமிழ்ச்சி.. என்கிட்ட எந்த வீரத்தை கண்டீங்க?” என்று சத்தமாக முழங்கியவாறு நகர்ந்தாள்.
அவளின் கோவத்தில் வெளிவர துடித்திருந்த சிரிப்புக்கு அணையிட்டு வைத்திருந்த சிவா அவள் நகர்ந்ததும் வாய்விட்டு சிரித்தான்..
நேற்று காளையின் திமிலை பிடித்தவாறு ஆதிராவிடம் போட்டோ ஒன்றை சிவா எடுக்க கூறிட, அவளும் பொறுமையாக தான் எடுத்தாள்.. ஆனால் அவன்தான் அது சரியில்லை இது சரியில்லை என்று ஆதிராவை ஒருவழியாக்கினான்.
போயா மாம்ஸ் என்று நகர போன ஆதிராவை துருவினியும் சிவாவும் நக்கலடித்து அவளின் தன்மானத்தை சீண்டி விட, அதற்காகவே நானும் காளையின் திமிலை பிடிப்பேன் என்று சபதமிட்டு காளையை கெஞ்சி கொஞ்சி அமைதியாக்கி சிவாவை போலவே புகைப்படம் எடுத்துருந்தாள்.
“நானும் எடுப்பேன்.. எங்களுக்கும் வீரம் இருக்கு” என்று இல்லாத சட்டை காலரை தூக்கிவிட்டு கெத்தாக கூறியபடி ஆதிரா நகர, சிவா நின்றிருந்ததால் தான் காளையும் அமைதியாக இருந்தது என்பதை ஆதிராவும் நன்கறிவாள்.
இருந்தும் தன்மானத்தை விட்டு குடுக்காமல் தான் சிவாவிடம் கெத்து காட்டி விட்டு வர, அவளின் குறும்பு தனத்தில் புன்னகைத்து கொண்டான் சிவா.
அந்த போட்டோவை தான் இன்ஸ்டாகிராமில் போட்டதோடு மட்டுமில்லாமல் அதன்கீழ் வீரத்தமிழச்சி என்றும் எழுதி வைத்திருக்க, அதை அப்போதே பார்த்திருந்தான் ரூபனும்.
நாயை கண்டு ஆதிரா பயந்திருந்த போது சட்டென்று இது ஞாபகத்திற்கு வந்ததில் தன்னை மீறி சிரித்து ஆதிராவிடம் மாட்டி கொண்டான்.
‘அய்யோ அய்யோ என் மானமே போய்ருச்சே!! ச்சை இந்த மாமா இப்ப தான் இந்த போட்டோவை போடணுமா? இல்ல நாய் தான் அந்த நேரத்துக்கு வந்து தொலையணுமா?’ என்று பலவாறாக புலம்பினாள் ஆதிரா.
ரூபன் சிரித்ததே ஞாபகத்திற்கு வந்து அவளை ஒருவழியாக்க “அய்யோ சேம் சேம்..’ என்று முகத்தை மூடி கொண்டவளை வெக்கம் ஆக்கிரமித்து கொண்டது.
பின்பு என்ன நினைத்தாளோ இன்ஸ்டாகிராமில் ரூபனின் ஐடியை பாலோ செய்ததோடு நிறுத்தாமல் “என் வீரம் இவ்ளோதான்.. நானே பாவம்” என்று சோக எமோஜியோடு அனுப்பி வைத்தாள்.
“அம்மா, அப்பா எல்லாம் எப்ப கிளம்பறாங்க? போய் ரெண்டு நாளு ஆகுது?” என்று துருவினி கேட்க, மகனுக்கு தலை வாரியவாறு “இன்னும் நிலைமை சரியாகலனு நேத்து அப்பா சொன்னாங்கடா” என்றான் சிவா.
மேலும் அவனே “காப்பாத்த முடியும்னு சொல்லல.. அதுக்குனு சரியாகிட்டாங்கனு சொல்லவும் முடியாதுனு டாக்டர் குழப்பி விடறாங்கனு சொன்னாங்க.. என்ன பண்றதுனு புரியாம அங்க இருக்காங்க.. இவங்க கிளம்புனதும் ஏதாவது ஆகிருச்சுனா மறுபடியும் அங்க ஓடணுமே அதான் நாளைக்கு என்ன நிலைமைனு பார்த்துட்டு கிளம்பலாம்னு இருக்காங்கனு சொன்னாங்கடா” என்று நிலைமையை எடுத்துரைத்தான்.
“ஸ்ஸ்ஸ்ப்பா என்னமோ போங்க மாமா..” – துருவினி
“உனக்கு ஏன் துரு இவ்வளவு சலிப்பு.. திரா கிட்ட கத்துக்கோ..” – நிவேதா
“அக்கா ஏன் என்னைய இழுக்கறீங்க நானே சிவனேனு இருக்கேன்” – ஆதிரா
“அவகிட்டயா? ஏன்கா நான் நல்லா இருக்கறது பிடிக்கலயா?” – துருவினி
இதற்கு மேல் இப்பேச்சை வளர விடாமல் சிவாவோ “நிவே சொல்ல மறந்துட்டேன்.. நம்ம ரூபன் இருக்கான்ல அவங்க பாட்டிக்கும் உடம்பு சரியில்ல.. நான் போய் பார்த்துட்டு வந்தறேன்.. போகலனா ஏன் போகலனு வந்ததும் அப்பா திட்டுவாரு” என்றவன் கிளம்பினான்.
கஸ்தூரியின் மூலம் அவனை பற்றி முதலிலே அறிந்து வைத்திருந்தவளுக்கு அவனின் வருகை எதற்கென்று இப்போது தான் புரிந்தது.
ஆதிரா சென்றதும் ரூபனும் வீட்டிற்கு கிளம்பலாம் என்றுதான் இருந்தான்.. ஆனால் வழியில் அவன் தோழன் ஒருவனை நெடுநாட்களுக்கு பிறகு கண்டதில் அவனுடன் பேசியபடி ஊரை சுற்றி கொண்டிருந்தான்.
அவன் விடைபெற்றதும் தான் அலைப்பேசியை அவன் எடுக்க, ஆதிராவிடம் இருந்து வந்த குறுஞ்செய்தி தான் முதலில் அவனின் கவனத்தை ஈர்த்தது. இது தன் ஆதியா? என்ற ஆனந்தத்தில் அவனால் இன்னும் நம்ப முடியாமல் கண்களை தேய்த்து மீண்டும் பார்த்தான்.
மறந்து விட தான்
நினைக்கிறேன்
மீண்டும் மீண்டும்
ஏனடி உன்
நினைவையே
எனக்குள் புகுத்தவே
முயல்கிறாய்??
பெண்ணவளின் குறுஞ்செய்தியை ஆசையாக வருடி “அச்சோ நான் சும்ம்மா தான் சொன்னேன்மா” என்று பதில்மொழியை அனுப்பினான்.
இவனின் பதிலை காண ஆதிரா தான் ஆன்லைனில் இல்லை.. அவள் தான் காவ்யாவின் உயிரை வாங்கி கொண்டிருந்தாளே போன் அழைப்பில்!
“ப்ச் போதும் நிறுத்துடி.. என்னால முடில” – காவ்யா
“காவு நான் சத்தியமா எதிர்பார்க்கலடி” – ஆதிரா
“என்னத்த?” – காவ்யா
“அதான்..” – ஆதிரா
“என்ன அவன் உன்னைய பார்க்க நீ அவனை பார்க்க கண்ணால ரொமான்ஸ் ஓட்டிட்டு வந்ததையா?” – காவ்யா
“ப்ச் அதையும் தான்..” – ஆதிரா
“அப்பறம் வேற என்னடி?” – காவ்யா
“என்னைய ஸ்பெஷல்னு சொன்னதை தான்” என்ற ஆதிராவுக்கு ஒரே ஆனந்தம்..
“ஸ்ஸ்ஸ்ப்பா நீ எதிர்பார்க்கலனா அப்படியே அதையை மறந்துரு தெய்வமே” – காவ்யா
“அன்னைக்கு நீ என்ன சொன்ன?” – ஆதிரா
“எனத்தடி சொல்லி தொலைஞ்சேன்.?” – காவ்யா
“இவன் என்னைய மறந்துருப்பானு சொன்னீயே? இப்ப பார்த்தீயா என் அபி என்னைய மறக்கல” – ஆதிரா
“என்னது உன் அபியா.? அடியேய் நீ சைட்டு மட்டும் தான் அடிக்கறேனு அமைதியா இருந்தேன்.. வேணாம்டி வீட்டுக்கு தெரிஞ்சா பெரிய பிரச்சனை ஆகிரும்” என்று பயத்துடன் எச்சரித்தாள் காவ்யா.
சிறிது நேரம் ஆதிரா அமைதியை தத்தெடுத்து விட, “திரா இருக்கீயா?” என்று சந்தேகமாக காவ்யா வினவிட, ம்ம்ம்ம் என்ற பதில் மட்டுமே வந்தது ஆதிராவிடம் இருந்து.
அவளின் அமைதி காவ்யாவை என்னவோ செய்ய, “டி அவனை காதலிக்கறீயா?” என்று கேட்டிட, “எஸ்டி ஐ லவ் கிம்” என்று பட்டென்று ஆதிராவும் பதிலளித்தாள்.
நெஞ்சை பிடித்து கொண்ட காவ்யா “ஏய் மெண்டலு எது எதுல விளையாடறதுனு விவஸ்தை வேணாம்.. வேணாம்டி என் இதயம் தாங்காது” என்றாள் கதறலுடன்.
“நீ நம்பறதும் நம்பாததும் உன் விருப்பம் காவு.. எனக்கு அபியை ரொம்ப பிடிச்சுருக்கு” – ஆதிரா
“காவு காவுனு கூப்பிட்டு என்னைய காவு குடுக்கவே நினைச்சுட்டீயா? நீ நடத்து நடத்து” – காவ்யா
“உன்னைய இதுல இழுக்க மாட்டேன் காவு.. நீ பயப்படாத.. எதுவா இருந்தாலும் நானே சமாளிச்சுக்குவேன்” என்ற ஆதிராவின் குரல் வேறுபட்டு வந்தது.
அவளின் வேற்றுமையில் மனம் கசங்கிய காவ்யா “உனக்கு நல்லதை மட்டும் தான் நினைப்பேன் திரா.. உனக்கு அவங்களைய பிடிச்சுருக்குனு தெரிஞ்சதுக்கு அப்பறம் நான் வேணாம்னு சொல்லவா போறேன்.. ம்ம்ம்ம் காதல் வந்தா நட்பு எல்லாம் மறந்துரும்ல.. ஓக்கே மேடம் நீங்க நல்லா இருங்க” என்றாள் கோவத்துடன்.
காவ்யாவின் வருத்தத்தில் ஆதிராவும் மனம் கலங்கி “ஹேய்..” என்று பேச வர, “பாய் ஆதிரா.. என்ஜாய் பண்ணுங்க” என்ற காவ்யா அவளின் பதிலை எதிர்ப்பாராமல் போனை வைத்தும் விட்டாள்.
காவ்யாவின் விலகலில் விழிகள் உவர்நீரை உகுத்திட, அவளுக்கு மறுபடியும் அழைத்தாள்
.. ஆனால் காவ்யா தான் எடுப்பதாக இல்லை.. தன்னை தானே கடிந்து கொண்டவளின் கருமணிகள் ஏக்கமாக மாறியது அழைப்பை எடுத்து தொலையேன்டி.! என்று.!!!
அழகிய பூகம்பம் தொடரும்..
இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
+1
1
+1
+1

