Loading

அத்தியாயம் 2

நேரம் இரவு ஏழை கடந்து வெகு வேகமாக ஓடிக்கொண்டிருந்தது.

பறவைகள் யாவும் கூட்டுக்குள் அடங்கிடும் அவ்வேளையிலும் அவ்விடம் மிகுந்த பரபரப்புடன் செயல்பட்டுக் கொண்டிருந்தது.

அவ்விடத்தின் ஒரு பகுதியில் ஒருவனின் அலறலையும் மீறி, அவனது அடியின் சத்தம் காற்றில் கலந்து எதிரொலித்தது.

“சார்… சார்… விட்டுடுங்க. இனி இப்படி பண்ணமாட்டேன்.”

“வலி கம்மியா இருக்கும் போலவே. உன் அலறல் சத்தம் டெசிபெல் பத்தலையே” என்றவன், கீழே சுருண்டு கிடந்தவனின் கையின் மீது தன்னுடைய பூட்ஸ் காலினை வைத்து அழுத்தியதோடு, அவனது நெற்றி கேசம் பற்றி கொத்தாக பிடித்து முகத்தை உயர்த்தி, வாயிலே ஓங்கி குத்தியிருந்தான்.

“இப்போ வலி எப்படியிருக்கு?”

வாயிலும் மூக்கிலும் ரத்தம் வழிய பதில் சொல்ல முடியாது தடுமாறியவனின் கண்கள் நீரை கொட்டியது.

“ம்ம்ம்ம்… கொஞ்சம் வலிக்குது போல! கண்ணுல தண்ணீ வருது” என்றவன், “அடி வாங்கி அனுபவிக்கிற வலியை விட, நீங்க கொடுக்கும் வகை வலி எத்தனை கொடுமை வாய்ந்ததுன்னு எப்போ தான்டா உணருவீங்க?” எனக் கேட்டு, நிதானமாக அவனுக்கு தன்னுடைய போலீஸ் அடியால் மரண வலியை காட்டினான் அவன்.

அடி வாங்குபவனின் ஓலம் அவ்விடம் எங்கும் நிறைந்தது.

அது நகரத்தின் கடற்கரை பகுதியை சார்ந்த காவல் நிலையம். உதவி கண்காணிப்பாளரின் அலுவலகம். அடியின் சத்தமும், குற்றவாளியின் கதறலும் உடலை பதற வைத்தாலும், அங்கிருக்கும் அனைவரும் வேலையிலேயே கண்ணாக இருந்தனர்.

அவனிடம் வேலையென்றால் தயவுதாட்சண்யம் கிடையாது. யாராக இருந்தாலும். கடவுளுக்கு அடுத்து மக்களை பாதுகாக்கும் பொறுப்பு காவலர்களுக்கே உள்ளது என்கிற கர்வமும், நேர்மையும் அவனிடம் அதிகம்.

காவலன் என்பவன் எல்லா நேரமும் கவனமாகவும், முன்னெச்சரிக்கையுடனும் இருக்க வேண்டும் என்பான்.

அவனிடம் பல தனித்துவமான கோட்பாடுகள் உண்டு. குற்றம் செய்த ஒருவன் சட்டத்தின் வழியாகவே தப்பித்துவிடுவான் எனும் நிலை வந்தால் எதைப்பற்றியும் கவலைகொள்ளாது தன் துப்பாக்கிற்கு இரையாக்கிவிடுவான். அந்த வகையில் பல பணியிடை நீக்கம், மாற்றல் என்று மூன்று வருடங்களில் பாதி தமிழகத்தை சுற்றி வந்துவிட்டான்.

அவன் புவியாழன். இருபத்தி ஏழு (நிகழில் இருபத்தி ஒன்பது) வயது. காவலனுக்கு உரிய தோற்றம். காக்கி உடை அணிந்த நேரம் மட்டுமே அவனிடம் குடிகொண்டிருக்கும் கடுமை. மற்ற நேரங்களில் தன் பெற்றோருக்கு ஆசை மகனாக, எப்போதும் சிரிப்புடன் வலம் வரும் இன்றைய நாகரிகத்திற்கு ஏற்ற சராசரி இளைஞன்.

“இன்னைக்கு என்ன கேசு சார். பொளந்து கட்டுறாரு?” இரவு நேர பணிக்கு அப்போது தான் வந்த பெண் காவலர் சுந்தரி வினவிட,

“பள்ளிக்கூடத்துக்கு போற சின்ன பிள்ளைக்கு, பொம்மையை கொடுத்து கடத்த பார்த்திருக்கிறான். பிள்ளை ஷார்ப். கத்த ஆரம்பிச்சிடுச்சு. கூட்டம் கூடி இங்க கொண்டு வந்து ஒப்படைச்சிட்டாங்க. அதான் அடி வெளுத்து வாங்குறார்” என்றார் தலைமை டாணாக்காரர் பாஸ்கர்.

“பொம்பளை பிள்ளைகளுக்கு எப்போ தான் விடிவு வருமோ?” என்று தன்னைப்போல் கூறிய சுந்தரி, பாஸ்கர் கூறியதில் அதிர்ந்தார்.

“என்ன சார் சொல்றீங்க?”

“ஆமாம் சுந்தரி… அவன் கடத்த பார்த்தது ஆண் பிள்ளையை. இப்போலாம் ஆண் பிள்ளைகளையும் இதுக்குன்னு பயன்படுத்துறானுங்க போல” என்றார் கையை விரித்து.

“நானும் படிச்சிருக்கேன். அயல் நாட்டுலதான் இதுபோலன்னு பார்த்தா… இப்போ இங்கையும் ஆரம்பிச்சிட்டானுங்களா?” என்ற சுந்தரி, “ஆணோ, பொண்ணோ நம்ம பிள்ளைகளை நாமதான் பத்திரமாவும், பாதுகாப்பாவும் பார்த்துக்கணும்” என்றிட அவரின் பேச்சினை கேட்டபடி வந்த புவி…

“சுதந்திர நாட்டில் சுதந்திரமா நடமாடக்கூடாது… பொத்தி பொத்தி வச்சிக்கணும் சொல்றீங்களா அக்கா?” எனக் கேட்டான்.

ஒற்றை கேள்வி ஆயிரம் அர்த்தங்கள் பொதிந்திருந்தது.

பாஸ்கர், சுந்தரி பதிலின்றி நிற்க…

“இதுக்கு யாராலும் பதில் சொல்ல முடியாது அங்கிள்” என்ற புவி, “சுந்தரி அக்கா, அவனுக்கு நைட் முழுக்க குடிக்க தண்ணி கூட கொடுக்காதீங்க. காலையில் வந்து பார்த்துக்கிறேன்” எனக்கூறி, இடது கையால் வலது கையிலிருந்த காப்பினை சுழற்றியவனாக தன்னுடைய இருக்கையில் சென்று அமர்ந்தான்.

“நாளை எந்த நியூஸிலும் அந்த குட்டிப்பையன் முகம் வரக்கூடாது அங்கிள். பார்த்துக்கோங்க” என்றவன், தன்னுடைய மேசையில் வீற்றிருந்த கோப்பில் மூழ்கிட அவனது அலைபேசி இசைத்தது.

கடுமையாக இருந்த புவியின் முகம் அலைபேசி திரையில் ஒளிர்ந்த ‘மாம்’ என்ற பெயர் பதிவில் நொடியில் கனிவுக்கு மாறியிருந்தது.

“ம்மா…!”

“இன்னும் வரலையே தங்கம். வர நேரமாகுமா கண்ணு?” என்று அன்பு மீதூறும் குரலில் அமிர்தவள்ளி.

“சென்சிட்டிவ் கேஸ். அதான் இவ்வளவு நேரம் இருக்க வேண்டியதாகிப்போச்சு. ரோந்து போகணும்மா… முடிச்சிட்டு வந்துடுறேன்” என்ற புவி, “அப்பா வந்துட்டாங்களா?” என வினவினான்.

திருமூர்த்தி அரசு மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர். மாணவர்களுக்கான இரண்டு நாள் கல்விச் சுற்றுலாவிற்கு அவரும் செல்ல வேண்டிய சூழல். இன்று திரும்புவதாக இருக்க அவரின் வரவை அறிந்திடக் கேட்டிருந்தான்.

“இப்போ தான் கண்ணு வந்தார். குளிக்க போயிருக்கார்” என்ற அமிர்தம், “ரொம்ப நேரமாச்சே சாமி… வந்து சாப்பிட்டு அப்புறம் ரோந்துக்கு போலாமே” என்றார்.

“வந்துடுறேன் ம்மா. நீங்க சாப்பிட்டு தூங்குங்க. நான் வந்து சாப்பிட்டுக்குவேன்” என்றவன், “வச்சிடுறேன் ம்மா” என்று வைத்திருந்தான்.

அவனின் பேச்சினை கவனித்த பி.சி எலிசா…

“சார், அவர் அம்மாவிடம் பேசும்போது மட்டும் எப்படி மேம் இப்படி சாஃப்ட் ஆகிடுறார்?” என்று சுந்தரியிடம் கேட்டிட,

“அவரு அம்மா பிள்ளையா இருக்கும்” என்ற சுந்தரி, “இப்போ அவரைப்பற்றிய ஆராய்ச்சி உனக்கெதுக்கு?” என்று வேலையில் கவனம் வைத்தாள்.

அன்னையிடம் பேசிவிட்டு வைத்த புவிக்கு, தன் அன்னையை குறித்தே ஆச்சரியம். அவரைப்போல் அமைதியான ஒரு ஜீவனை அவன் தன் வாழ் நாளிலே கண்டதில்லை.

அடிக்கடி அவரை தன் தந்தையுடன் சேர்த்து வம்பிழுத்து கோபப்பட வைத்திட முயற்சித்திருக்கிறான். அதற்கு பலன் இருந்ததே இல்லை.

அமிர்தத்தின் குரலில் எப்போதும் கனிவு குடிக்கொண்டிருக்கும். இத்தனை மென்மையான குரலும் உள்ளதா என்று ஆச்சரியப்படுத்தும். அத்தனை மெதுவாக ஒலிக்கும் அவரது குரல். அதிர்ந்து கூட பேச தெரியாதவரின் ஒட்டு மொத்த உலகமும் அவரின் கணவரும் பிள்ளைகளும் தான். அந்த உலகத்தின் முடிசூடா ராணி அவர். பள்ளி படிப்பைக்கூட முடித்திடாதவர். அதனை எப்போதும் அவர் குறையாக நினைக்க அனுமதித்ததில்லை திரு.

அவருக்கு தையலில் ஆர்வமிருக்கு என்று அறிந்து… திருமணம் முடித்து வந்த சில மாதங்களிலேயே அதற்கான பயிற்சி வகுப்பிற்கு அனுப்பி வைத்து, அவருக்கு வீட்டோடு கடையும் வைத்துக் கொடுத்தார்.

அப்போது அவர்கள் இருந்ததே வாடகை வீட்டில் தான். திரு அப்போது பாடப்பிரிவு ஆசிரியர் மட்டுமே! புவி பிறந்த பின்னர் சேமிப்பை வைத்து நகரத்தின் மையத்தில் இடம் வாங்கியிருக்க… அவன் பத்தாம் வகுப்பு படிக்கும்போது தான் அவ்விடத்தில் வீடுகட்டி குடி புகுந்தனர். வீடு கட்டும் போதே மனைவிக்கு தையல் வேலைக்காக வீட்டு வளாகத்திற்குள்ளே தனியாக இரு அறைகள் வைத்து கட்டினார். இப்போது அமிர்தம் மற்றவர்களுக்கு பயிற்சியும் அளிக்கின்றார். நகரத்தில் அவரின் தையல் நிலையம் மிகவும் பிரபலம்.

திரு தலைமையாசிரியர் என்பதால் எப்போதும் கண்டிப்புடணும் விறைப்பாகவும் இருப்பாரென்று எண்ண வேண்டாம். இந்த வயதிலும் மாணவர்களுடன் தோழமையுடன் பழகும் குணம் கொண்டவர். தன்னுடைய இத்தனை வருட ஆசிரியர் பதவியில் ஒரு மாணவரையும் கடிந்து பேசியோ, அடித்ததோ கிடையாது. அமைதியும், கனிவும் சேர்ந்து உரைத்தால் அடம்பிடிக்கும் மாணவனும் அடங்கி செல்வான் என்பது அவரது கோட்பாடு. இதுநாள் வரை அதை அவர் மீறியதே இல்லை.

அவ்வீட்டில் புவிக்கு மட்டுமே தன் பதவியின் காரணமாக கோபம் வரும்.

புவி குற்றவாளிகளை அடிப்பது, என்கவுண்டர் செய்வது கூடாதென்று திரு பலமுறை சொல்லியும் அவன் இந்த விஷயத்தில் கேட்பதாக இல்லை.

“நீங்க ஸ்டூடன்ஸ் கிட்ட காட்டுற அன்பை நான் குற்றவாளிக்கிட்ட… அதுவும் கொலை, கடத்தல் செய்கிறவனிடம் காட்ட முடியாதுப்பா” என்று முடித்துக்கொள்வான்.

புவிக்கு ஆகாஷ் என்கிற இளையவன் இருக்கின்றான். கல்லூரி இரண்டாம் ஆண்டு படித்துக் கொண்டிருக்கிறான்.

குடும்பத்தில் அவர்கள் மூவருக்கும் இன்றியமைதாவன் புவியாழன். ஆகாஷ் சிறியவனாக இருந்தாலும் அங்கு அவனுக்கும் சேர்த்து அதிக செல்லம் புவி.

புவிக்கு ஒன்றென்றால் குடும்பமே கலையிழந்து விடும்.

‘தன் குடும்பத்தை நினைத்தால் உலகமே மறந்துவிடும்’ என சிந்தை கலைந்தவன் தன்னுடைய தம்பிக்கு அழைத்தான்.

ஆகாஷ் அழைப்பை ஏற்றதும்… “எல்லாம் ரெடி பண்ணிடு ஆஷ்… நான் வந்துடுறேன்” என்றான்.

“கேக் மட்டும் வங்கிட்டு வந்துடுங்கண்ணா” என்றவனிடம், “டேய், இந்நேரத்தில் எங்கடா வாங்குறது. உன்னை காலேஜ் முடித்து போகும்போதே வாங்கிட்டு போயிடுன்னு சொன்னனா இல்லையா?” என்றான். சற்றுக் காட்டமாக.

“அச்சோ அண்ணா… நான் வர நேரம் அம்மா வீட்டில் இருப்பாங்க. கண்டுபிடிச்சிடமாட்டாங்களா?” என்ற ஆகாஷ், “குடும்பம்ன்னு வந்துட்டா போலீஸ் மூளை வேலை செய்யாதாண்ணா?” என்று கேலி செய்தான்.

“உனக்கு மட்டும் ரொம்ப அறிவோ? நேரா நம்ம கடையில் வைத்துவிட்டோ அல்லது வாட்ச்மேன் அண்ணாவிடமோ கொடுத்து பத்திரப்படுத்தியிருக்கலாம்” என்றான் புவி.

“இது எனக்கு தோணவே இல்லைண்ணா. அம் சோ சாரி…” என்ற ஆகாஷ் நேரில் இருந்திருந்தால் புவி வலிக்காது தன் தம்பியின் தலையில் கொட்டியிருப்பான்.

“பிளான் சொதப்பிடுச்சே” என்று ஆகாஷ் வருத்தப்பட… “முகத்தை உம்முன்னு வைத்து நடிக்காதடா. நான் வந்ததும் யோசிப்போம்” என்று வைத்துவிட்டான்.

அப்போதே என்ன செய்வதென்று முடிவும் செய்திட்டான்.

நேரத்தை பார்த்தவன்,

“பார்த்துக்கோங்க” என்று சுந்தரியிடம் சொல்லிவிட்டு ரோந்திற்கு புறப்பட்டான். தன் வாகனத்தை எடுத்துக்கொண்டு தன்னுடைய கட்டுப்பாட்டில் இருக்கும் பாதி நகரத்தை வலம் வரத் தொடங்கியிருந்தான்.

பார்வையில் கூர்மையைத் தேக்கி ஒவ்வொரு இடத்தையும் ஆராய்வாக பார்த்துக்கொண்டே மிதமான வேகத்தில் சென்று கொண்டிருந்த புவி கடற்கரை பகுதியை அடைந்த போதுதான், இரு பெண்களை தடியர்கள் நால்வர் துரத்துவதை கண்டு வண்டியை நிறுத்திட… பதற்றத்தில் கவனிக்காத முல்லை வண்டியின் மீதே விழுந்திருந்தாள்.

தீபிகாவின் உறைவில் வண்டியின் பேனெட் மீது கவிழ்ந்திருந்த முல்லை நிமிர்ந்து நிற்க…

தங்களுக்கு பின்னால் வந்த தடியர்கள் அரண்டு நிற்பதைக் கண்டு வண்டியிலிருந்து இறங்கியவனை திரும்பிப்பார்த்தாள்.

நெடுநெடுவெனத் தோற்றம். மின்கம்ப விளக்கின் வெளிச்சத்தில் அவன் முகம் நன்றாகவே தெரிந்தது. காக்கி உடை தவிர்த்து வந்திருந்தாலும் அவனொரு காவல்துறை அதிகாரி என்பது கண்டுகொள்ள முடியும். பார்வையில் தீட்சண்யம். நடையில் நிமிர்வு.

அவனது வலது பக்க மார்பில் பெயர் பட்டையில் முல்லையின் கண்கள் பதிந்தன.

‘புவியாழன்.’ தனக்குள் சொல்லிக்கொண்டாள். உள்ளுக்குள் சட்டென்று சிலிர்ப்பு ஓடி மறைய என்னவென்று புரியாது தலையை உதறிக்கொண்டாள்.

கையிலிருந்த காப்பினை சுழற்றியவனாக இரு பெண்களுக்கும் முன் வந்து… தங்களை அழுத்தமாக ஏறிட்டு நின்ற புவியை, அடையாளம் கண்டதும் தடியர்களுக்கு உதறல் ஆரம்பித்தது.

அரண்டு நின்றிருந்தவன்களில் ஒருவன்,

“ஓடிடலாம்” என்று சொல்ல…

“உன் தலைக்கு குறி வச்சு… நான் காலுக்குத்தான் குறி வச்சேன், அவன் சட்டுன்னு கீழே குனிந்ததில் குண்டு மண்டையில் பட்டுச்சுன்னு சாதாரணமா உன் கதையை முடிச்சிட்டு போயிட்டே இருப்பாரு” என்றான் மற்றொருவன்.

“பெத்த போலீஸா அண்ணாத்த! நீயே பயந்துக்குன?” மற்றொருவன் வினவிட,

“ஒரு மாசம் பேச முடியாம இருந்தனே… அது சார் ஓங்கி குத்துன ஒரு குத்தாலதான்” என்று அவன் சொல்லியதும் மற்ற மூவருக்கும் கூட பயம் எட்டிப்பார்த்தது.

தீபிகா முல்லையை ஒட்டி நின்று அவளின் கைகளை பிடித்துக் கொண்டாள்.

முல்லையின் கையில் நடுக்கம் தெரிய,

“அதான் போலீஸ் வந்துடுச்சே! அப்புறம் எதுக்கு பயப்படுற?” என தீபிகா கேட்டிட,

“ஸ்டேஷன் கூட்டிட்டு போயி வார்டனுக்கு தெரிஞ்சுது… வூருக்கு நியூஸ் போயிடும். அப்புறம் என் படிப்பு?” என்றால் முல்லை. கவலையாக.

இருவரும் புவிக்கு பின்னால் மெல்லிய முணுமுணுப்போடு பேசியிருந்தாலும், நிசப்தமான வேளையில் அவர்களின் பேச்சு நன்கு கேட்கவே செய்தது.

“அந்தளவுக்கு பயமிருந்திருந்தால் இப்படி அன்’டைம் வெளியில் வந்திருக்கவேக் கூடாது” என்ற புவி வண்டியின் முன் பகுதியில் குதித்து அமர்ந்தான்.

தீபிகா புவியின் அர்த்தமான வார்த்தைகளில், இவை யாவும் தன்னால் தான், தனக்கு இப்படியொரு ஆசை இருப்பதை சொல்லியிருக்கவே கூடாது எனும் நினைவில் முல்லையிடம் “சாரி” என்க அவளோ புவியையே பார்த்திருந்தாள்.

“அங்கவே நின்னு உங்களுக்குள்ள பேசிகிட்டால் என்ன விஷயம்ன்னு எனக்கு எப்படித் தெரியும்? இங்க பக்கம் வரது…” என்றான். நால்வரையும் பார்த்து.

அவர்கள் நால்வரும் நடுங்கியவாறு புவியை நோக்கி மெல்ல அடி வைத்திட…

புவி காவல் நிலையத்துக்கு அழைத்து இரு காவலர்களை வரக்கூறினான்.

முல்லை தன் படிப்பு போச்சு என்று சொல்லியதால் “ஸ்டூடன்ட்ஸா?” என்றான்.

இருவரின் தலையும் ஆமென்றது.

“இந்த நேரத்தில் பாதுகாப்பு இல்லாமல் எதுக்கு வந்தீங்க?” பெண்கள் இருவரிடமும் கேட்டான்.

“அது வந்து சார்…” என்று முல்லை தடுமாற, தீபிகா அனைத்தையும் அவன் கேட்ட பதற்றத்தில் வேகமாக சொல்லி முடித்தாள்.

“காலேஜ் லைஃபில் இதெல்லாம் சகஜம் தான். ஆனால் நம்முடைய பாதுகாப்பு ரொம்ப முக்கியம். இதுவே கடைசியா இருக்கட்டும்” என்று எச்சரித்தான்.

புவிக்கு பர்தாவிற்குள் இருக்கும் இரு பெண்களின் முகமும் சுத்தமாக தெரியவில்லை. ஆனால் முல்லையின் கரு விழிகள் தன்னில் அழுத்தமாக படிந்திருப்பதாக அவனுக்குத் தோன்றியது. அவனை சுண்டியிழுப்பதைப்போல் உணர்ந்து கூர்ந்து கவனிக்க… அவளோ ஒன்றுமில்லை என்பதைப்போல் பார்வையை தழைத்துக் கொண்டாள்.

“நாளை இந்நேரம் வந்திடுவீங்களா?” அமர்ந்திருந்தவன் கீழே குதித்தவனாக வினவிட, சடுதியில் ஓடி வந்து புவியின் முன் நின்றனர்.

“சார்… சார் மன்னிச்சிடுங்க சார். தங்கச்சிங்க ரெண்டு பேரும் தனியா நின்னுட்டு இருந்தாங்க. இந்த நேரத்தில் உதவி பண்ணலாமுன்னு நெருங்கினதுக்கு பயந்து ஓடுச்சுங்க” என்றான் ஒருவன். பயத்தோடு.

“முட்டிப் போடுங்க.” புவியின் குரலிலிருந்த அடர்த்தி அவன் சொன்னதை அவர்களை செய்ய வைத்தது.

“தங்கச்சிங்களா? யாருக்கு?”

நால்வரையும் சுற்றி வந்தவனாக வினவினான்.

மாற்றி மாற்றி நால்வரும் கை காண்பித்துக்கொள்ள… “பயந்து ஓடுறாங்க தெரிஞ்சும் எதுக்கு விரட்டி வந்தீங்க?” என்றான்.

ஒருவனை ஒருவன் பார்த்து முழிக்க…

லத்தியால் நால்வரின் பாதத்திலும் மின்னல் வேகத்தில் அடித்திருந்தான். சுரீரென்ற வலி உச்சி நரம்பிற்குள் ஏறிட…

“மன்னிச்சிடுங்க சார். தெரியாம பண்ணிட்டோம்” என்று ஒருசேர கெஞ்சினர்.

“போன முறை என்கிட்ட வாங்குன அடி பத்தலை போலிருக்கே உனக்கு” என்ற புவி, “நீங்களா திருந்தாமல் உங்களையெல்லாம் திருத்த முடியாது. உங்களுக்கு அடி, அட்வைஸ்லாம் சுத்த வேஸ்ட்” என்றான்.

“பேசாம உங்களில் ஒருத்தனை போட்டுத் தள்ளிடுறேன். அதுக்கு அப்புறமாவது மத்த மூணு பேரும் திருந்துறீங்களா பார்ப்போம்” என்றவன், தன் துப்பாக்கியை அதன் உறையிலிருந்து எடுக்க… தடியர்களுக்கும் மேல் அரண்டனர் பெண்கள் இருவரும்.

“அச்சோ வனம்… பயமா இருக்குடி. போட்டுடுவாரோ?” தீபிகா பயத்தில் முனங்கிட… என்னவென்று புவி பார்த்ததும் வாயினை மூடிக்கொண்டாள்.

இப்போது அவர்களுக்கு தள்ளி முன் நின்றிருந்ததால் தீபிகா என்ன பேசினால் என்பது தெளிவாக அவனுக்கு கேட்கவில்லை.

“யாரை சுடலாம்… உன்னை, உன்னை” என்ற புவி நால்வரின் நெற்றியிலும் மாற்றி மாற்றி துப்பாக்கியினை வைத்திட…

“அச்சோ சார் எங்களை விட்டுடுங்க. இனி எந்த பொண்ணையும் நிமிர்ந்துகூட பார்க்கமாட்டோம்” என்று கதறினர்.

“உங்க பேச்சில் எனக்கு நம்பிக்கையில்லை.”

“சத்தியம் சார். இதுக்கு அப்புறம் எல்லா பொண்ணுங்களும் அக்கா, அம்மா, தங்கச்சி சார்” என்றவர்கள் புவியின் காலில் விழுந்திட, பாஸ்கர் மற்றொரு காவலருடன் வந்து சேர்ந்தார்.

“சார்… சார்… விட்டுடுங்க சார். தெரியாமப் பண்ணிட்டோம்.” வாகனத்தைக் கண்டதும், காவல் நிலையம் அழைத்துச் சென்றிடுவானோ என்று நடுங்கி கெஞ்சினர்.

“கொஞ்ச நாள் உள்ள இருந்திட்டு வாங்க. அப்போவாவது நல்ல முறையில் வாழ நினைக்கிறீங்களா பார்க்கலாம்” என்ற புவி, “ஈவ்டீஸிங் கேஸில் ஃபைல் ரிஜிஸ்டர் பண்ணுங்க அங்கிள்” என்றான். பாஸ்கரிடம்.

நால்வரும் வண்டியில் ஏற்றப்பட…

“சார் அவங்க” என்று முல்லை மற்றும் தீபிகாவை கேட்டார் பாஸ்கர்.

இருவரையும் பார்த்த புவி…

“நான் பார்த்துக்கிறேன்” என்றிட குற்றவாளிகளை ஏற்றிய வண்டி புறப்பட்டிருந்தது.

இரு பெண்களிடமும் புவிக்கு சொல்வதற்கு ஒன்றுமில்லை. இன்றைய அனுபவமே சிறந்த பாடமாகும் என நினைத்தான்.

“எந்த காலேஜ்?” தீபிகா நடந்தவற்றை சொல்லும்போதே கல்லூரி விடுதியில் தங்கியிருப்பதாக சொல்லியிருக்க, கல்லூரியின் பெயரை வினவினான்.

தீபிகா சொல்லிட முனைய… அவளின் கைப்பற்றி தடுத்த முல்லை, “வேண்டாம் சார் நாங்களே போய்க்கிறோம்” என்றாள். இழுத்து வைத்த புன்னகையுடன். அதனை அவளது கண்கள் புவிக்கு காட்டிக்கொடுத்தது.

முல்லையின் விழிமொழி அவனுக்கு புரிந்ததுவோ?

படிப்பிற்கு ஏதும் தடை வந்துவிடுமென பயப்படுகிறாள் என்பதை கண்டுகொண்டான். அவளின் பேச்சினூடே அவன் அறிந்தது தானே.

“இப்போலாம் நல்லவங்களை விட கெட்டவங்க எண்ணிக்கை தான் அதிகம். போற வழியில் இன்னும் இவனுங்களை மாதிரி எத்தனை பேர் இருக்காங்களோ?” என்றான்.

‘மீண்டும் இதேப்போல் ஓர் நிகழ்வா?’ உள்ளே அதிர்ந்த தீபிகா வேகமாக கல்லூரியின் பெயரை சொல்லியதோடு “தப்பா நினைக்கலன்னா நீங்களே டிராப் பண்ணிட முடியுமா சார்?” எனக் கேட்டாள்.

முல்லை தீபிகாவின் காலிலே மிதித்தாள்.

“அய்யோ… அம்மா” என்று தீபிகா அலற, முல்லையின் பயத்திலும், அவளது செயலிலும் புவிக்கு சிரிப்பு வந்தது.

“என்னால உங்க படிப்புக்கு இஷூ , ஆகாது” என்ற புவி “என் வீட்டுக்கு நான் அந்தப்பக்கம் தான் போகணும். வாங்க” என்றதோடு… “இதுவே கடைசியா இருக்கட்டும்” என்று அவர்களின் தவறினை சுட்டிக்காட்டிடவும் செய்தான்.

கல்லூரியை நெருங்கிட…

“சார் இங்கவே நிறுத்துங்க” என்றிருந்தாள் முல்லை. படபடப்போடு. அவளின் கத்தலில் சட்டென்று வண்டியை நிறுத்தியிருந்தான்.

“இங்கெப்படி? கேட் அந்தப்பக்கம் இருக்கே” என்று புவி சொல்ல…

“அப்படி போனால் மாட்டிக்க வேண்டியது தான். வந்த வழியே போறதுதான் எனக்கு ரொம்ப நல்லது” என்றவள் தீபிகாவின் கையை பிடித்து இழுத்தவளாக கீழிறங்கியிருந்தாள்.

“அய்யோ இப்பவும் குரங்கு வேலையா?” என்று தீபிகா அதிர, புவி ஆர்வமானான். இவ்வளவு உயர மதிலைத்தாண்டி எப்படி உள்ளே செல்வார்கள் என்று.

ஏனோ முல்லையின் முகம் பார்த்திடாத போதும்… அவளின் பேச்சு, பதற்றம், செயல் யாவும் புவியிடம் சுவாரஸ்யத்தை ஏற்படுத்தியது. அவனுள் அவள் மீது மெல்லிய சலனம்.

இருவரும் அவன் பக்கம் நன்றி சொல்ல வர, அப்போதுதான் அவர்களிடம் தான் பெயரைக்கூட கேட்கவில்லை என்பது நினைவு வந்தவனாக…

“உங்க பெயர் என்ன?” எனக் கேட்டிருந்தான்.

உள்ளுக்குள் அலார்ட் ஆகிய முல்லை…

‘இங்க விடுற மாதிரி விட்டு நாளைக்கு காலேஜ் வந்து போட்டுக் கொடுத்திடுவாரோ!’ என யோசித்த முல்லை…

நன்றி சொல்ல மறந்தவளாக,

“பெயர் சொல்ல முடியாது சார். நீங்க நாளைக்கு வந்து போட்டுக்கொடுத்திட்டா? சாரி…” என்றவள் அங்கு மதிலோரமிருந்த மரத்தில் சடுதியில் ஏறியிருந்தாள்.

புவியின் புருவம் ஆச்சரியத்தில் உயர்ந்தது.

சடுதியில் இருவரும் மறைந்திருக்க…

“சரியான கேடியா இருப்பாப்போல” என்று வாய்விட்டு சொல்லிக்கொண்ட புவியின் அதரங்கள் நீண்டு விரிந்திருந்தது.

Click on a star to rate it!

Rating 4.9 / 5. Vote count: 48

No votes so far! Be the first to rate this post.

இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
6
+1
52
+1
0
+1
1

உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள் 

2 Comments