Loading

 

அத்தியாயம் 4

 

ஜன்னலின் வழியே உள் நுழைந்த பகலவனின் கதிர்களாலும், கூடத்தில் இருந்து கேட்ட பேச்சுக் குரலாலும் மெல்ல இமைகளைப் பிரித்தார் ரெங்கநாயகி.

மூத்தவரின் அசைவை உணர்ந்து மௌனி எழுந்து அவரின் அருகே செல்ல, முதல் நிழல் உருவமாய் தெரிந்தவள் சில நொடிகளின் நகர்வில் முழுமையாய் பார்வையில் விழுந்தாள்.

மூத்த மகன் வயிற்றுப் பெயர்த்தியைக் கண்டவரின் அகமும் முகமும் மலர்ந்திட, “பாப்பா, எப்ப வந்த?” என்றபடியே அவசரமாய் எழுந்தார்.

“ஆச்சி மெதுவா..” என அவரிற்கு உதவியவள், “எப்படி இருக்கு உடம்புக்கு?”

“எனக்கு என்ன பாப்பா? நல்லாதான் இருக்கேன்.|

“எது, இது நல்லா இருக்கிறதா? பெட்ல இருந்த எழுந்திரிக்க ஒருத்தர் ஹெல்ப் பண்ண வேண்டியதா இருக்கு.”

“வயசு ஆகுதுல.?”

அவன் தலை அசைத்துச் சிரிக்க, “நீ வர்றேன்னு சொல்லவே இல்ல.?”

“ஆச்சிக்குக் குட்டியா ஒரு சர்ப்ரைஸ் கொடுப்போம்னு தான்.”

“நான், வர மாட்டனு நினைச்சேன் பாப்பா.”

“எனக்குமே வர்ற எண்ணம் இல்ல ஆச்சி. உங்களுக்காகத்தான். முன்னாடி மாதிரி வெளிய போய் வந்துக்கிட்டு இருந்தீங்கனா கவலைப்பட்டு இருக்க மாட்டேன். வீட்டுக்குள்ளேயே இருக்கிறது, உங்களுக்கும் கஷ்டம் தான? அதான், ஏதோ என்னால முடிஞ்ச அளவுக்குக் கம்பெனி கொடுக்கலாம்னு வந்தேன்.”

அவர் பெயர்த்தியின் கன்னம் வருடி, அவ்விரல்களை இதழ்களில் பதித்துக் கொஞ்சிட, சின்னதாய்ச் சிரித்தாள் மௌனி.

இதற்கிடையில் வெளியில் நடந்த பேச்சுகள், இருவரது கவனத்தையும் கலைத்திட, “நீ வந்ததைப் பத்தியா பேசுறாங்க?” என வினவினார் ரெங்கநாயகி.

பெரியவரைத் தயக்கத்துடன் பார்த்து, மறுத்துத் தலை அசைத்தாள்.

“வேற என்ன? காலையிலயே எதுக்கு இவ்வளவு சத்தம் போட்டுட்டு இருக்கா, உன்னோட சித்திக்காரி. வா, என்னனு போய் பார்ப்போம்!” என்று படுக்கையில் இருந்து இறங்க முற்பட, கைக்கொடுத்து ஆதரவாய் பற்றிக் கொண்டாள் இளையவள்.

பல் தேய்த்து, முகம் கழுவி.. அந்த ஈரத்தை புடவையால் துடைத்துக் கொண்டார்.

கூன் விழத் தொடங்கிய உடலை தன்னால் முடிந்த மட்டும் நிமிர்த்தியபடி, மெல்ல அடி எடுத்து வெளியே வர, மௌனியும் இணைந்து வந்தாள்.

“சேகரா…”

அன்னையின் குரலில் அவர் பக்கம் திரும்பினார், அவ்வீட்டின் இரண்டாம் மகன்.

“அம்மா..” என அருகே செல்ல, “என்ன பேச்சு பலமா இருக்கு.?” என்றபடி மருமகளை நோக்கினார்.

“அது..” எனத் தயங்கிய சேகரன், “லாவண்யாக்குப் பார்த்த மாப்பிள்ள திடீர்னு இந்த கல்யாணம் வேணாம்னு சொல்லிட்டாரு.”

அதிர்ந்த ரெங்கநாயகி, “என்னப்பா சொல்லுற.?”

“ஆமாம் ம்மா..” என்று நடந்த நிகழ்வை உரைத்தார்.

“என்ன காரணமாம்?”

“எதுவும் சொல்லல.” எனக் கவலைத் தோய்ந்த முகத்துடன் இடவலமாய் தலையசைத்தார்.

“அதெப்படி ஒன்னும் சொல்லாம, அவங்க பாட்டுக்கு நிப்பாட்டுவாங்க? இது, முறை இல்ல. நீ ஃபோன் போட்டு பேசு.”

“பேசிட்டேன் ம்மா. பாதியிலயே காலை கட் பண்ணிட்டாங்க!” என்றிட, குழப்பத்துடன் பார்த்தார் ரெங்கநாயகி.

“பாகீரதி இப்படிச் செய்யிவான்னு நான் எதிர்பார்க்கல. கல்யாண பேச்சை ஆரம்பிச்ச நாள்ல இருந்து, இரண்டு பக்கமும் நல்லா தான பழகிக்கிட்டு இருந்தோம்? திடீர்னு என்ன ஆச்சு? சங்கரன் போன பின்னாடி, நம்ம வீட்டுல நடக்குற முதல் விசேஷம் இது. இப்படியா தடங்கல் ஆகணும்?” என வருத்தத்துடன் மொழிந்தவர், குடும்பத்தாரை ஒரு பார்வைப் பார்த்தார்.

முதல் நாள் இரவு வரை திருமண களையோடு இருந்த வீடு, தற்போது துக்கத்தின் சாயலில் காட்சி அளித்தது.

இத்தனை வருடங்களாய் கற்றிருந்த வாழ்க்கைப் பாடம் அவரை அமைதியாய் இருக்க விடாமல் செய்ய, “பாப்பா..” என மூத்த பெயர்த்தியின் புறம் திரும்பினார்.

“என்ன ஆச்சி?”

“உன்னோட ஃபோனை எடுத்துட்டு வா. சேகரா பாகீரதியோட நம்பரை சொல்லு. என்னனு தெளிவா பேசுவோம். கல்யாணம் ஒன்னும் விளையாட்டு காரியம் இல்ல. இப்படி சட்டு சட்டுனு முடிவெடுத்தா, எப்படி காலம் முழுசும் உறவு நீடிக்கும்? இந்த அளவுக்குக் கூடவா, அவங்களுக்குப் பக்குவம் இல்லாம போச்சு?” என்று உரைந்திட, தனது கைப்பேசியில் எண்களை அழுத்தி, அதனை ஒலிபெருக்கிக்கு மாற்றி அனைவரும் கேட்கும் படியாய், கூடத்தில் இருந்து டீபாயின் மீது வைத்தாள் மௌனி.

மூத்தவர் ஒரு இருக்கையில் சென்று அமர, அப்படியே மற்றவர்களும் உட்கார்ந்தனர்.

மறுபுறம் தொடர்பிற்கு வந்த பாகீரதி, “ஹலோ.”

“அம்மா.. நான் ரெங்கநாயகி பேசுறேன்.”

“ரெங்கநாயகி?” என அவர் கேள்வியாய் நிறுத்த, “லாவண்யாவோட ஆச்சி.”

“மன்னிச்சிருங்க அம்மா. உங்க பேரு சட்டுனு நினைவுக்கு வரல.”

“இருக்கட்டும் ம்மா.. சேகரன் என்னென்னமோ சொல்லுறான். என்னம்மா இது.?”

“சரண் முடியவே முடியாதுனு பிடிவாதமா சொல்லிட்டான் ம்மா.”

“ஓ.. இதை ஃபோன்ல பேசுறது சரியா இருக்காது. நேருக்கு நேர் பேசுனா தான், யாரு பக்கம் என்ன குறை, எது தப்புனு தெரியும். என்னால வெளிய வர முடியாதும்மா, உடம்பு ஒத்துழைக்காது. தப்பா நினைக்காம, நீ கொஞ்சம் வந்து போறியா?”

அவருமே, மகன் திருமணத்தை நிறுத்தியதை எண்ணி மனம் கலங்கிதான் இருந்தார்.

‘பேச்சு வார்த்தையில் அதனைச் சரிசெய்ய முடிந்தால், முயற்சித்துப் பார்ப்பதில் என்ன தவறு?’ எனத் தோன்றிட, “சரி வர்றேன் ம்மா..” என்று வாக்கு தந்துவிட்டு மகனைக் காணச் சென்றார்.

படுக்கையில் அமர்த்து கண்முடி, நெற்றியின் மீது கைவைத்து பாதி முகத்தை மறைத்து இருந்தான் ஶ்ரீசரண். பாகீரதி சின்னச்சாமியின் மூத்த மகன்.

“சரண்..”

குரல் வந்த திசையான வாயிலின் பக்கம் திரும்பியவன், “என்னம்மா?”

உள்ளே வந்து அவனின் அருகே அமர்ந்தவர், “நீதான் சொல்லணும் என்னனு.”

அவன் அமைதிக் காக்க, “ரெண்டு நாள்ல நிச்சயத்தை வச்சுக்கிட்டு, திடீர்னு இந்த முடிவு எடுத்தா எப்படி?”

“அம்மா.. வேண்டிய மட்டும் உங்கக்கிட்ட பேசிட்டுதான ரூமுக்கே வந்தேன்?”

“ஆனா, என்ன காரணம்னு சொல்லலையே?”

“சொல்லாம இருக்கிறது தான், எல்லாருக்கும் நல்லது.”

“நல்லதுனு, நீ சொல்லுற. உன்னைப் பெத்தவங்கிற முறையில நான் அதை நம்புறேன். ஏத்துக்கிறேன். ஆனா, எல்லாரும் அப்படியே இருப்பாங்களா? ஒன்னு, எனக்குக் காரணத்தைச் சொல்லு. இல்லேனா, நிறுத்தி வச்ச நிச்சய வேலையைப் பாரு.”

அவன் இயலாமையுடன், “அம்மா.?”

“என்ன செய்யலாம்னு நீதான் சொல்லணும் சரண். பகையாளியா இருந்தாலும், அவங்களுக்கான மரியாதையைக் கொடுக்கிறது தான் நல்ல மனுசத்தனம். காரணத்தைச் சொல்லாம நிராகரிக்கிறது, அவங்க மரியாதையைக் குறைக்கிறதா ஆகாதா? அப்புறம் நம்மளைப் பத்தியும் தான, ஊரு தப்பா பேசும்?”

ஒரு பெருமூச்சை வெளியிட்டவன், “சரிமா நான் சொல்லுறேன்!” என லாவண்யாவை மறுத்ததற்கு, பின் இருக்கும் காரணத்தை உரைத்தான் சரண்.

கலங்கிய கண்களைப் புடவையின் நுனியால் துடைத்துக் கொண்ட பாகீரதி, “சரி, இனி நான் பார்த்துக்கிறேன்!” என்று உரைத்து, ரெங்கநாயகிக்குக் கொடுத்த வாக்கின்படி, அவரைக் காண்பதற்காக கிளம்பினார்.

இளைய மகன் விமலுடன், நாற்பது நிமிட பயணத்தில் சேகரனின் இல்லத்திற்கு வந்து சேர்ந்தார். மகனை வெளியிலேயே இருக்கும்படி உரைத்துவிட்டு, அவர் மட்டுமாய் உள்ளே நுழைத்தார்.

கூடத்தில் தான் இருந்தனர் அனைவரும்.

“வாம்மா..” என்று ரங்கநாயகி, வரவேற்றிட தலையை மட்டும் அசைத்தார். மற்றவர்கள் பேசாது இருக்க, லாவண்யாவோ பார்த்தும் பார்க்காதது போல் கைப்பேசியின் பக்கம் கண்களைத் திருப்பிக் கொண்டாள்.

“டீ குடிம்மா..” என மூத்தவர் உபசரிக்க, “இல்லம்மா வேண்டாம், பேசணும்னு சொன்னிங்களே?” என்று நேரடியாக விஷயத்திற்கு வந்தார்.

“முதல்ல உட்காரும்மா..”

அவர் ‘அமர்வதா வேண்டாமா?’ எனச் சிந்தனையில் இருக்க, மூத்தவரின் அருகே தான் உட்கார்ந்து இருந்த இருக்கையில் இருந்து எழுந்து, பாகீரதிக்கு இடம் கொடுத்துவிட்டு, அங்கிருந்து நகர்ந்து சென்று உணவு மேஜைக்கான இருக்கையில் அமர்ந்தாள் மௌனி.

பெண்ணவளின் நடவடிக்கையில் இயல்பாய் அவளின் மீது பதிந்த அவரின் கண்கள், இறுதி வரை அப்படியே இருந்தது.

அதைக் கவனித்த ரெங்கநாயகி, “என் மூத்த மகன் சங்கரனோட மக. சென்னையில வேலை பார்க்கிறா. விசேஷத்துக்காக வந்திருக்கா.” என்று அறிமுகம் செய்வித்தார்.

தலை அசைத்து இருக்கையில் அமர்ந்தவர், “சொல்லுங்க அம்மா..”

“நீதான்மா சொல்லணும். ஏன் உன்னோட மகன் அப்படிப் பேசிட்டுப் போனான்?”

“வேற என்ன, திமிரு. தான்தான் எல்லாம்கிற தலைக்கணம்!” என உரைத்தாள் லாவண்யா.

“பேச தெரியலேனா, பேசாமலேயே இருக்கிறது தான் நல்லது. பெத்தவ முன்னாடியே, அவ பிள்ளையைப் பத்தி இப்படிச் சொன்னா, எந்த அம்மா தான் பொறுத்துக்குவா? சேகரா!” என்று ரெங்கநாயகி மகனைக் கண்டிக்க, “சும்மா இரு லாவி!” என மகளைக் கட்டுப்படுத்த முயன்றார் அவர்.

“நீ சொல்லுமா..” என்று பாகீரதியிடம் வினவ, “இதுதான்மா காரணம். நேத்து நகைக்கடையில வச்சு, என்னோட பொண்ணைப் பத்தி உங்க பேத்தி எதுவோ சொல்லி இருக்கா. அது, அங்க வேலை பார்க்கிறவங்க காதுல விழுந்திருக்கு. கடை, சரணோட ஃப்ரெண்ட் அருணோடது. காலையில அவனுக்கு விஷயம் போயிருக்கு. அவன்மூலமா என் பிள்ளைக்குத் தெரிய வரவும், நேரா இங்க வந்துட்டான்.”

குடும்பத்தார் அனைவரும் அவளைமா பார்க்க, “நான் எதுவும் தப்பா சொல்லல ப்பா.” என்று அசட்டையாய் பதில் தந்தாள்.

‘பொண்ணு பார்க்க வந்த அன்னைக்கே, லாவண்யாவைப் பத்தி ஓரளவுக்கு நான் புரிஞ்சுக்கிட்டேன் ம்மா. செல்லமா வளர்ந்த பொண்ணு, முன்ன பின்ன இருக்கத்தான் செய்யிவா. வாய்த் துடுக்கா பேசுறது, அப்படி ஒன்னும் தப்பு இல்ல. கல்யாணம் ஆனா, பக்குவம் வந்து மெல்ல தன்னை மாத்திக்குவானு நினைச்சிருந்தேன். ஆனா, நான் நினைச்சது தப்புனு இப்பதான் புரியிது.

என்னோட பொண்ணு ரோகிணியை, உங்க எல்லாருக்குமே தெரியும். அவளைக் குறையா சொன்னா, எப்படி பெத்தவ மனசு ஏத்துக்கும்? இல்ல, ஒரு அண்ணனா சரண்தான் அதுக்கு சம்மதிப்பானா?” என்று அவன் இல்லத்தில் வைத்து உரைத்ததை அப்படியே ஒப்பித்தார்.

“கல்யாணம் நின்னதுக்கு வேற யாரும் காரணம் இல்ல. உன்னோட மகதான் பொறுப்பு. பிள்ளையை நல்ல விதமா வளர்த்து இருக்க அர்ச்சனா!” என மொழிந்த ரெங்கநாயகி, “சங்கடப் படாதம்மா. அவ பேசுனதுக்கு நான் உன்கிட்ட மன்னிப்பு..” என்றவரை மேலும் பேசவிடாது, அருகே வந்து கையைப் பற்றினாள் மௌனி.

“என்ன ஆச்சி.?” என அவள் கண்களில் கலக்கத்துடன் வினவ, “பெரியவங்க நீங்க. பெரிய வார்த்தை எல்லாம் சொல்லாதீங்க அம்மா. அப்ப நான் கிளம்புறேன்!” என்று எழுந்தார் பாகீரதி.

மற்றவர்களின் பக்கம் கண்களைக் கூட திருப்பாது சென்றவரை, “அம்மா, ஒரு நிமிஷம்!” என நிதானிக்க வைத்தார் மூத்தவர்.

சற்றே திரும்பி, “சொல்லுங்க அம்மா..” என்றிட, “மனுசங்களை மதிக்கத் தெரியாம, என் சின்ன பேத்தி கிடைக்க இருந்த நல்ல வாழ்க்கையைக் கை நழுவ விட்டுட்டா. ஆனா, பெரியவ அப்படி இல்ல. என் பாப்பா அமைதியான குணம். தங்கமான மனசு. யாரையும் அனுசரிச்சு நடந்துக்குவா. உன்னோட மகனுக்கு, இந்த வீட்டோட பெரிய பிள்ளையைக் கட்டிக்கிறியா?” என ரெங்கநாயகி கேட்டிட, அனைவரும் அதிர்ச்சியுடன் நோக்கினர்.

 

Click on a star to rate it!

Rating 4.7 / 5. Vote count: 7

No votes so far! Be the first to rate this post.

இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
3
+1
3
+1
0
+1
0

உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள்