
என்னுள் நீ காதலாய் 💞
அத்தியாயம் 43
‘அன்று சொன்ன அதே பதிலைத் தான் இன்றும் சொல்கிறாள். அவளுடைய ஆழ்மனதில் நான் உண்டாக்கின காயங்களை என் காதல் சரிசெய்திடவில்லை. அவளுக்காக அவள் காதலுக்காக நான் இன்னும் நிறைய செய்ய வேண்டும்’ என யோசித்தவன், அவள் கன்னங்களை கைகளில் ஏந்தினான்.
“தமிழ் என்னைப் பாரு டி” என்று கூறி அவளைத் தன் முகம் பார்க்கச் செய்தவன், வலியில் சோர்ந்திருந்த அவள் கண்களைப் பார்த்து, “தமிழ்.. நீ சீக்கிரமே என்கிட்ட ஐ லவ் யூ அப்படின்னு சொல்ல தான் போற. நீ என் கூட, உன் புனிதாம்மா கூட, நம்ம பொண்ணு கூட இங்க இருக்க தான் போற. அடுத்தடுத்து நாம இன்னும் நிறைய குழந்தைங்க பெத்துக்க தான் போறோம்.
“நீ ஆசைப்பட்ட மாதிரியே காலேஜ் போய் படிக்க தான் போற. என்னோட கையை எதிர்பார்க்காம ஒரு நல்ல வேலைக்கு போய், உனக்கு தேவையானது எல்லாம் நீயே செஞ்சுக்க தான் போற. அப்போ நான் எது கேட்டாலும் எனக்கும் வாங்கி தருவ தான” மனதில் இருந்த காதலை வார்த்தைகளாக்கி அவளிடம் ஒப்படைத்தான்.
“தமிழ் ஐ லவ் யூ டி!” இளமாறன் செந்தமிழ் கண்களைப் பார்த்துச் சொல்ல, அவன் காதலில் அகமகிழ்ந்து போனவள் இதழ் விரித்து புன்னகைத்தாள். சிரிக்கும் அவள் செவ்விதழை தன் இதழால் ஆக்கிரமித்துக் கொண்டவன் நீண்டதொரு இதழ் முத்தம் தந்தான்.
“தமிழ்.. ஒருத்தரோட வாழ்க்கையில அம்மா, காதலி, தோழி, மகள் இப்படி எத்தனை தேவதைங்க வேணும்னாலும் வரலாம், போகலாம். ஆனா அவனை விட்டு எப்பவும் போகாம இருக்கிற அவனோட உயிர் ஒண்ணு தான். தமிழ் நீ என்னோட உயிர் டி. நீ இல்லனா நான் வெறும் பிணம் தான். என்னோட ஒட்டுமொத்த வாழ்க்கையும் நீ தான்.
“நீ எனக்கு எவ்ளோ காதலை தந்திருக்க தெரியுமா? அதே காதலை நான் உனக்கு காட்டுறேன்” மனம் நிறைந்த காதலோடு அவளை நெருங்கி, அவனுக்குத் தெரிந்த காதல் மொழியால் அவனுடைய காதலை உணரச் செய்தான்.
மென்மையாய் அவளை தீண்டி, அவள் உடலில் வடுவாகி, ஆழ்மனதில் இன்னும் காயங்களாகவே இருக்கும் இடங்களில் எல்லாம் முத்தங்கள் வைத்து அவள் காயங்களை தன் காதலால் ஆற்ற நினைத்தான்.
‘அரைத் தூக்கத்தில் இருந்தவளை காதலிக்கிறாயா என்று கேட்கிறான், ஏதேதோ பேசுகிறான். திடீரென்று முத்தங்கள் தருகிறான்’ என்ற யோசனையில் இருந்தவள், அவன் தந்த முத்தங்களில் தன்னை இழக்க ஆரம்பித்தாள்.
அவன் கூடலை தொடங்கும் போது அவளுக்குள் தோன்றும் சிறு பயமும் நடுக்கமும் அவனுக்கும் தெரியும். ஆனால் அதற்கு பின் இவ்வளவு பயங்கரமான கதை இருக்கும் என்று அவனுக்கு தெரியாது. இந்த விஷயம் தெரிந்த பிறகு இளமாறன் இன்னும் அவளை அதிகமாகக் காதலிக்கிறான்.
‘அவள் மனதில் எவ்வளவு உயர்ந்த இடத்தில் தன்னை வைத்திருக்கிறாள். அவள் எவ்வளவு ஆழமாக தன்னைக் காதலிக்கிறாள்’ எனத் தெரிந்துகொண்டான். எந்த எதிர்பார்ப்புகளும் இன்றி முழுக்க ஆத்மார்த்தமான அவளுடைய காதலை அவன் புரிந்துகொண்டான்.
இளமாறனின் உரிமையான காதலுடன் கூடிய தீண்டலில், ஒவ்வொரு முறையும் செந்தமிழ் மெய் சிலிர்த்துப் போகிறாள். மனதில் வலி, கோபம், கஷ்டம் எது இருந்தாலும் அது அத்தனையும் மறைந்து அவளுக்குள் இருக்கும் அவன் மீதான காதல் அதிகமாகி விடுகிறது. அந்த காதலோடு அவனுக்கு ஒத்துழைப்பு தருகிறாள்.
அந்த நேரங்களில் அவன் தரும் காதலும் மோகமும் மட்டும் தான் அவளுக்கு நினைவில் இருக்கிறது. அவள் இளா வின் தமிழாக மட்டும் தான் இருக்கிறாள்.
அவனுக்கும் தேவை அது தான். ஆனால் எல்லா நேரங்களிலும் அவளுடைய நினைவுகளில், அவனும் அவன் காதலும் மட்டும் தான் இருக்க வேண்டும். அவள் மொத்தமாய் தன் பழைய வாழ்க்கையை மறந்து விட வேண்டும் என்றே அவன் ஆசைப்படுகிறான்.
அந்த இரவில் அறை முழுவதும் அவர்கள் இருவரின் வேக மூச்சொலிகளும், முனகல் சத்தங்களும், காதலும் மட்டும்தான் நிறைந்து போயிருந்தன. மறுநாள் காலை செந்தமிழ் கண் விழித்துப் பார்த்தால் அவள் ஒருக்களித்துப் படுத்திருக்க, அவளுடைய காதல் கணவன் அவள் மார்பில் சாய்ந்து இறுக்கமாக அவளை அணைத்துக் கொண்டு படுத்திருந்தான். அப்போதும் அவள் ஆடையற்ற வயிற்றில் கையை வைத்து குழந்தையையும் அணைத்து கொண்டிருப்பதாய் நினைத்து படுத்திருந்தான்.
மார்பில் கணவன், வயிற்றில் அவனுடைய குழந்தை, செந்தமிழுக்கு மனதில் தோன்றிய மகிழ்ச்சிக்கு அளவே இல்லை. “நைட் எல்லாம் என்னை பாடா படுத்திட்டு இவர் ஏன் டயர்டாகி இப்படி தூங்குறாரு?” என்று மெதுவாக முனகியவள், அவனை மெல்ல விலக்கி படுக்க வைத்தாள்.
அவன் மார்பில் தோளில் அவள் தந்த காதல் அடையாளங்களை பார்த்தவள், இரவு நடந்ததை நினைத்துப் பார்த்து வெட்கத்தில் முகம் சிவந்தாள். இளமாறன் கண் விழித்ததும் பார்த்தது, அவள் முகத்தில் இருந்த வெட்கப் புன்னகையைத்தான்.
எழுந்து அவன் முகம் பார்த்துக் கொண்டிருந்தவளின் பின் கழுத்தில் கை வைத்து இழுத்து, அப்படியே அவள் இதழில் தன் இதழைப் பதித்தான். அவன் இதழ் முத்தத்திலேயே அவள் கரைய ஆரம்பிக்க, வேகமாக அவளுடைய கழுத்திற்கு தாவினான்.
“அய்யோ இளா விடிஞ்சுருச்சு. எனக்கு இடுப்பு வேற வலிக்குது. கொஞ்ச நேரம் ரெஸ்ட் குடுங்களேன். நான் போய் குளிக்கிறேன்” செல்லமாய் அவள் கேட்டிட, சிரித்துக் கொண்டே விலகிப் படுத்தான். அவள் எழுந்து கிச்சனுக்கு சென்று சுடுதண்ணீர் வைத்து, எடுத்து குளித்தபின் மீண்டும் கிச்சனுக்குள் செல்ல அங்கு புனிதா காபி போட்டுக் கொண்டிருந்தார்.
“புனிதாம்மா..” என்று அவர் கழுத்தை கட்டிக் கொண்டவள், அவர் கன்னத்தில் முத்தம் வைத்திட, “என் செல்லக்குட்டி ரொம்ப சந்தோஷமா இருக்கா போல?” அவள் முகத்தில் தெரிந்த மகிழ்ச்சியைப் பார்த்துக் கேட்டார்.
“ஹ்ம்ம்.. ஆமா.. இன்னைக்கு டிபனுக்கு பூரி பண்ணலாமா?” என்று அவள் கேட்க, செந்தமிழ் பழைய மாதிரி பேசுவது அவருக்கும் மகிழ்ச்சியைத் தந்தது.
வீட்டில் எல்லாம் இயல்பு நிலைக்கு திரும்பியிருக்க, இளமாறன், செந்தமிழ், புனிதவதி மூவரின் முகத்தில் சந்தோஷமும் மனதில் நிம்மதியும் குடி கொண்டிருந்தன.
“இளமாறா.. இந்த வாரம் ரேவதியை பொண்ணு கேட்டு அவ வீட்டுக்கு போறோம். இனியன் உன்கிட்ட சொன்னானா?” என்று புனிதா கேட்க, “ஆமாம்மா சொன்னான். நான் உங்க ரெண்டு பேர் கிட்டயும் ஒரு விஷயம் சொல்லணும்” என்றவன் மடியில் இருந்த லேப்டாப்பை முடி வைத்து விட்டு, கேள்வியாய் அவனை பார்த்திருக்கும் அன்னையின் முகத்தையும் மனைவியின் முகத்தையும் பார்த்தான்.
“அம்மா வீடு வாங்கணும்னு சொல்லியிருந்தீங்கள. புரோக்கர் கிட்ட சொல்லியிருக்கேன். கட்டியிருக்க வீடாவே வாங்கிக்கலாம் தான. ஏன்னா பாப்பா பிறந்ததும் நேரா புது வீட்டுக்கு தான் வரணும்” என்றான். “புனிதாவிற்கு கண்கள் கலங்கிட வேகமாக அம்மாவிற்கு அருகில் சென்று அவரை கழுத்தோடு கட்டிக் கொண்டான்.
“என் அம்மா ஆசைப்பட்டா அவங்களுக்காக நான் என்ன வேணும்னாலும் பண்ணுவேன். லவ் யூ புனிதாம்மா” அவர் கன்னத்தில் முத்தம் வைத்து அவன் சொல்லிட, செந்தமிழ் அந்தக் காட்சியை மனம் நெகிழ்ந்து சிரிப்போடு பார்த்திருந்தாள்.
“தமிழ்.. உனக்கு பொறாமையா இருக்கும். இந்தா நீயும் வாங்கிக்கோ” குறும்பாய் சொல்லி அவள் கன்னத்திலும் இளமாறன் முத்தம் வைத்திட, அவள் ஆச்சரியத்தில் விழி விரித்து அப்படியே உறைந்து போனாள்.
“இளமாறா என்ன இது? அம்மா முன்னாடி சேட்டை பண்றியா? புனிதா அவனை முதுகில் அடிக்க, அவன் “அம்மா.. வலிக்குது” என்று கத்திக் கொண்டிருக்க, சுய நினைவுக்கு வந்த செந்தமிழ் வெட்கத்தில் சிரித்தாள்.
“அம்மா.. இனியனுக்கும் நமக்கும் சேர்த்து வீடு பார்க்க சொல்லியிருக்கேன். 3 பெட்ரூம் வீடு, ஒரே மாதிரி பக்கத்து பக்கத்துல இருந்தா பெட்டர்னு சொல்லிட்டேன். அட்வான்ஸ் தர மட்டும் பணம் ரெடி பண்ணி குடுங்க. பேலன்ஸ் அமவுண்ட் நானும் இனியனும் லோன் போட்டுக்கிறோம். கொஞ்ச நாள்ல நான் லோன்ல இருக்க உங்க நகை எல்லாம் மீட்டுத் தந்திடுறேன்” பொறுப்பாக பேசும் மகனைக் கண்டு புனிதா பூரித்துப் போனார்.
‘நிரஞ்சனா பிரச்சனைக்குப் பிறகு இறுக்கமாக எதற்கும் பிடி கொடுக்காமல் ஏனோ தானோவென்று பேசிக் கொண்டிருந்த மகனை, அவன் மனதில் இருக்கும் அழுத்தங்களை எப்படியாவது மாற்ற வேண்டும்’ என்று நினைத்த தாயின் ஆசை அல்லவா நிறைவேறி விட்டது. செந்தமிழின் காதல் அவனை மாற்றி விட்டது. ஆனால் இளமாறனின் காதல் செந்தமிழை மாற்றுமா?
இளமாறனுக்கும் இனியனுக்கும் அவர்கள் வேலை செய்த ஆபீஸில் நோட்டீஸ் பீரியட் முடிந்து விட்டதால், அன்று வேலையின் கடைசி நாள். அதனால் அவர்களுடைய ஆபீஸில் செண்ட்-ஆஃப் பார்ட்டி ஏற்பாடு செய்திருந்தார்கள்.
மாலை ஆபீஸ் முடிந்து வீட்டிற்கு வந்த இளமாறன், “தமிழ்.. இந்தா நாம பார்ட்டிக்கு போகும் போது இதை போட்டுக்கோ. சீக்கிரம் கிளம்பு” என்றவாறு ஒரு பையை அவள் கையில் தந்தபின் குளிக்கச் சென்றான்.
அவள் அதை திறந்து பார்த்தால், லைட் பிஸ்தா நிறத்தில் நெட் துணியில் ஃப்ராக் மாடலில் இருந்த ஒரு சுடிதார் ஜமிக்கி வேலைப்பாடுகள், கற்கள் வேலைப்பாடுகளுடன் டிசைன் செய்திருந்தது.
‘இவர் எதுக்கு என்னை ஆபீஸுக்கு கூப்பிடுறார். நானே வரல அப்படின்னு சொல்லலாம்னு நினைச்சுட்டு இருந்தா, ட்ரெஸ் எடுத்துட்டு வேற வந்திருக்கார்’ என்ற யோசனையில் இருந்தவள், அருகில் இருந்த போன் நோட்டிபிகேஷன் சத்தம் கேட்டு நினைவுக்கு வந்தாள்.
சார்ஜ் போட்டிருந்த இளமாறன் போனில் இருந்து வந்த சத்தம் தான் அது. கூடவே திரையில் மெசேஜ் ஒளிர்ந்தது. ‘நான் நிரஞ்சனா. எனக்கு உன்னை ரொம்ப பிடிக்கும். நீ அழகானவன், திறமைசாலி. உன்னை தெரியாம மிஸ் பண்ணிட்டேன் மாறா. என்கிட்ட பேச மாட்டியா?’ வந்திருந்த மெசேஜை பார்த்தவளுக்கு பக்கென்று இருந்தது.
‘அய்யோ ஆபீஸுக்கு போனா அந்த நிரஞ்சனா வை வேற பார்க்கணுமே. இவர் ஏன் தான் என்னை கூப்பிட்டு போகணும்னு அடம்பிடிக்கிறாரு’ மனதிற்குள் அவள் புலம்பியவாறு இருக்க, குளித்து முடித்து வெளியே வந்து துடைத்துக் கொண்டிருந்தவன், குழப்பமாய் நின்றிருந்தவளை பார்த்தான்.
“என்னாச்சு தமிழ்? கிளம்பு டைம் ஆகுது” என்று அவன் சொல்ல, “இளா நான் வரணுமா? எனக்கு ஒருமாதிரி இருக்கு. அங்க இருக்கவங்க கூட எப்படி பேசணும் பழகணும்னு கூட எனக்குத் தெரியாது” பாவமாய் முகம் வைத்துச் சொன்னாள்.
“பழகிக்கோ.. எத்தனை நாள் இப்படியே இருப்ப. அடுத்து காலேஜ் போகணும், வேலைக்கு போகணும் அப்போ என்ன பண்ணுவ? போய் கிளம்பு” என்று சொன்னவாறு கருப்பு நிற ஜீன்ஸ் அதே லைட் பிஸ்தா நிறத்தில் ஹால்ப் காலர் வைத்த சட்டை அணிந்து சட்டையின் கைகளை மடக்கி விட்டான்.
காதலாய் வருவாள் 💞

