
அத்தியாயம் 1
அதிகாலை நான்கு மணியளவில்…
நூறு அறையென கொண்டுள்ள அக்கல்லூரியின் ஐந்து விடுதி கட்டிடங்களில் இறுதி வருட மாணவர்களுக்கு மட்டுமென ஒதுக்கப்பட்டிருக்கும் மூன்று மாடிகள் கொண்ட இரண்டு கட்டிடங்களில் அமைந்துள்ள அனைத்து அறைகளும் விளக்கு வெளிச்சத்தில் ஒளிர்ந்ததோடு, நடை பாதையிலும், ஆங்காங்கே போடப்பட்டிருக்கும் இருக்கையிலும் யுவதிகள் அமர்ந்தபடியும் உட்கார்ந்த நிலையிலும் கையில் புத்தகம் ஏந்தி அதில் தலை கவிழ்ந்திருந்தனர்.
அது இருபாலருக்கான கல்லூரி. நகரத்தில் மிகவும் பிரபலம். அனைத்து வகையான துறைகளும் தனித்தனி பகுதிகளாக அக்கல்லூரியில் இடம் பெற்றுள்ளது. இருப்பினும் அனைத்து துறைக்கும் விடுதி பொதுவானது. ஆண்கள் விடுதி கல்லூரிக்கு எதிரே வெளியில் அமைந்திருக்க, பெண்கள் விடுதி கல்லூரிக்கு உள்ளவே அமைந்துள்ளது.
இறுதி வருட மாணவ, மாணவிகளுக்கு மட்டும் தனி கட்டிடங்கள். மற்ற வருட மாணவ மாணவிகள் தங்கள் விருப்பப்படி கலந்து மற்றைய விடுதிகளில் தங்கிக்கொள்ளலாம்.
இன்று இறுதி வருட மாணவர்களுக்கு இறுதி நாள். கடைசித் தேர்வு. முந்தைய தினம் மாலை தொடங்கிய அவர்களுக்கான பிரிவு உபச்சார விழா முடியவே நள்ளிரவை கடந்திருக்க, அதிகாலையில் புத்தகமும் கையுமாகத் திரிந்தனர்.
அனைவரும் தேர்வு பயத்தில் பாடங்களை மூளைக்குள் சேர்பித்துக் கொண்டிருக்க… ஒருத்தி மட்டும் எவ்வித பயமோ பதற்றமோ இன்றி போர்வையை இழுத்து மூடி ஆழ்ந்த நித்திரையில் சயனித்திருந்தாள்.
அவளின் அறைத்தோழி தீபிகா நண்பியை எழுப்பிட முயற்சித்த பல முயற்சிகள் யாவும் கஜினி முகமதுவின் படையெடுப்பாய் தகர்க்கப்பட்டது.
களைத்து ஓய்ந்த தீபிகா இனியும் அவளுடன் மல்லுக்கட்ட முடியாதென புத்தகத்தில் மூழ்கிய தருணம் மெல்ல போர்வையை விலக்கி இரு கைகள் உயர்த்தி சோம்பல் முறித்தபடி எழுந்தமர்ந்தாள் வனமுல்லை.
“படிச்சு கரைச்சு குடிச்சிட்டியா தீப்ஸ் டார்லிங்?” என்று கேட்ட முல்லை, “உன்னை சீக்கிரம் எழுப்பிவிட சொன்னனா இல்லையா?” என்றாள்.
அவ்வாறு வினவிய முல்லையை கொலைவெறியோடு அன்பாய் பார்த்த தீபிகா…
“மனுஷியாடி நீ?” என்க,
படுக்கையிலிருந்து இறங்கி நின்ற முல்லை, தான் அணிந்திருந்த பாவாடையை இரு கைகளாலும் பிடித்து சுழற்றியவளாக…
“அதிலென்ன சந்தேகம் தீப்ஸ் உனக்கு?” என்று கேட்டு கண் சிமிட்டிட, தீபிகாவின் பொறுமை எல்லை கடந்தது.
“உங்க ஊரு தேனியில் காலேஜே இல்லைன்னு இங்க வந்து ஏண்டி என் உயிரை எடுக்குற? கும்பகர்ணனாவே இருந்திருந்தாலும் நான் எழுப்பியதுக்கு பதறிக்கிட்டு எழுந்திருச்சிருப்பான். நீ இருக்கியே!” என்றவள் முல்லையின் கழுத்தை நெறிப்பதைப்போல் இரு கைகளையும் கொண்டு சென்ற வேகத்தில் கீழிறக்கி பற்களை கடித்தாள்.
“கடைசி செமஸ்டர். எந்தவொரு பேப்பரும் அரியர் வச்சிடக்கூடாதுன்னு எல்லாரும் மூச்சைப் பிடிச்சு படிச்சிக்கிட்டு இருந்தாக்கா, சாவாதீனமா எழுந்ததும் இல்லாமல் என் உயிரை ஏண்டி வாங்குற?” என்று கடிந்த தீபிகாவின் கத்தலை ஒரு பொருட்டாகவே மதியாது, பேப்பரும் பேனாவுமாக அமர்ந்திருந்தாள் முல்லை.
இவ்வளவு நேரமும் தான் கத்தியது வீணென்று இருக்கையில் பொத்தென்று அமர்ந்த தீபிகா, முல்லையையே பார்த்திருந்தாள்.
“இன்னைக்கும் எழுதணுமா?” எனக் கேட்டாள்.
“இதுதான் லாஸ்ட். இனி நெனச்சாலும் எழுத முடியாது. எங்க வீட்டை பற்றி உனக்குதான் தெரியுமே? என் தாத்தா வீட்டிலிருந்தால், வெளியவே வர முடியாது” என்ற முல்லை, யாருக்கோ கடிதம் எழுதிக் கொண்டிருந்தாள்.
“உனக்கு அவரு மேல் அப்படியென்ன கிரேஸ் முல்லை? அவ அவளும் அறை சுவற்றில் ஆக்டர், கிரிக்கெட்டர், புட்பால் பிளேயர்ஸ் போட்டோன்னு ஒட்டி வச்சிருந்தால்… நீ போலீஸ் போட்டோவை ஒட்டி வச்சிருக்க?” என்றாள் ஆயாசமாக. தீபிகாவின் விழிகள் அவ்வறையின் சுவற்றை சுற்றி சுழன்றது. எங்கும் அவ்வூரின் உதவி கண்காணிப்பாளரின் (ஏசிபி) புகைப்படம்.
கடந்த இரண்டு ஆண்டுகளாக அவனைப்பற்றி செய்தித்தாளில் வந்த செய்தி படங்கள் யாவும் சிறு சிறு துண்டுகளாக ஒட்டப்பட்டிருந்தது.
முல்லைக்கு போலீஸ் மீது பிடித்தமும், நம்பிக்கையும் ஏற்பட்டது அன்றைய ஓர் இரவில் தான்.
பார்த்ததும் அவனது அதிரடியும், ஆளுமையான விழிகளிலும் வார்த்தைகளால் விவரிக்க முடியா பிடித்தம் உண்டானது. அந்த பிடித்தம் சாதாரணமாக நடிகர்களை ஒருவருக்கு பிடிக்குமே அந்தவகை பிடித்தமென்று கொண்டு, அனைத்து கிறுக்குத் தனங்களும் அவளும் செய்ததுண்டு.
அதில் ஒன்று தொழில்நுட்ப வளர்ச்சியில் ஒருவரை அணுக பல வழிகள் இருந்தும் அவள் தேர்ந்தெடுத்தது கடிதத் தொடர்பு.
வாரம் ஒருமுறை அந்த காவலனின் விசிறியாக இரு வரிகளேனும் துண்டு கடிதம் எழுதி அவனை சேரும்படி செய்திடுவாள். அது கடந்த இரண்டு வருடங்களாக தொடர்ந்து கொண்டு தானிருக்கிறது. இன்றையோடு அதற்கு முடிவு வருமென்று முல்லையும் அறிந்தது தான்.
அவளின் குடும்பம் கட்டுப்பாடனது. அங்கு இதனை அவளால் தொடர முடியாது எனும் நிதர்சனம் அவளுக்கே தெரிந்திருக்கும்போது அதனை இலகுவாகவே ஏற்றுக் கொண்டாள். அவ்வாறு அவள் நினைத்துக் கொண்டாள் என்பது சரியாக இருக்கும்.
“போலீஸ் தான் நம் கண்முன் இருக்கும் நிஜ ஹீரோஸ் தீப்ஸ். மறந்துட்டியா? அன்னைக்கு மட்டும் இந்த போலீஸ் வரலன்னா நம்ம நிலையை கொஞ்சம் யோசிச்சுப்பாரு” என்ற முல்லை பழைய நினைவில் மூழ்கினாள்.
அன்று தீபிகாவிற்கு பிறந்தநாள்.
முல்லையின் தோழியர் பட்டாளம் நள்ளிரவு பனிரெண்டு மணி வரை அவளின் அறையில் தான் ஆட்டம் போட்டுக் கொண்டிருந்தனர்.
“ஒரு பன்னு வச்சு என் பிறந்தநாளை முடிச்சிட்டிங்களேடி!” தீபிகா சலித்துக்கொண்டாள்.
“உனக்கு இதுவே அதிகம் தீப்ஸ். போன வாரம் வந்த என் பிறந்தநாளுக்கு, ரெண்டு பிஸ்கட் மேல கேண்டில் வச்சு இதுதான் கேக்குன்னு சொன்னீங்க தானே?” என்றாள் மரியம். குறையாக.
“ஹாஸ்டல் லைஃபில் இதெல்லாம் சகஜம் பேபிஸ்” என்ற முல்லை, “சரி உனக்கு என்ன கிஃப்ட் வேணும் சொல்லு தீப்ஸ்? இந்த வீக் சண்டே, டே அவுட் போகும்போது வாங்கிடலாம்” என்றாள்.
“கிஃப்ட்டெல்லாம் வேணாம்” என்ற தீபிகா, தன்னுடைய நண்பிகள் முகத்தை ஒவ்வொருத்தராக ஏறிட…
“ஹேய் அலார்ட் ஆகிக்கோங்கடி, ஏதோ பெருசா தீட்டப் பார்க்கிறாள்” என்று எச்சரிக்கை செய்தாள் சம்ரின்.
“பட்ஜெட் டைட் தீப்ஸ். குட்டியா கேளு. உன் சைஸுக்கு கேட்டு, இந்த மாசம் கை வச்சிடாத, வீரமுத்து இருபது நாளுக்கு அப்புறம் தான் பணம் அனுப்பும்” என்றாள் முல்லை.
“ஒத்த பைசா செலவாகாது” என்ற தீப்ஸ், சொல்ல வருவதை இழுக்க…
“முதலில் என்னன்னு சொல்லு” என்றாள் நதியா. கடுப்பாக.
“மூன் வாக் பண்ணனும்” என்றாள்.
“அவ்வளவு தானா?” என்று ஒருசேர வினவிய தோழிகள், “மியூசிக் போடுறோம் எழுந்து நட” என்றனர்.
அதற்கு மறுப்பாக தலையசைத்த தீப்ஸ்,
“மூன் வாக்குன்னு நான் சொன்னது, நைட் நிலா வெளிச்சத்தில் வாக் பண்ணனும். அதுவும் பீச் சைட்” என்றாள்.
முல்லையை தவிர அனைவரும் அலறினர்.
“வாடர்னுக்கு தெரிஞ்சுது அவ்வளவுதான். மொத்தமா டிசி கிழிச்சு காலேஜ்ஜை விட்டே தொரத்திடும்” என்று கூறியவர்கள், “இந்த ஆட்டத்துக்கு நாங்க வரல” என்றனர்.
தீபிகாவின் முகம் சுருங்கிப்போனது.
“போயிடலாம்” என்று தீபியின் தோளில் தட்டிய முல்லை சம்ரினிடமிருந்து அவளது புர்காவை வாங்கி அணிந்துகொண்டனர்.
“போறதுன்னு முடிவே பண்ணிட்டிங்களா?” நதியா வினவிட முல்லை ஆமென்று தலையசைத்தாள்.
“எதுக்கும் யோசிச்சிக்கோ முல்லை” என்று மரியம் சொல்லிட,
“காலேஜ் லைஃபில் ஹாஸ்டல் சுவரைத் தாண்டி குதிச்சது இல்லைன்னா… நாளை வரலாறு தப்பா பேசாது! என்று சொல்லி தோழியரின் வாயினை அடைத்துவிட்டாள் முல்லை.
“இதெல்லாம் த்ரில்லா வனம்? மாட்டினால் அவ்வளவுதான்” என்ற சம்ரின், “என் வாப்பாக்கு தெரிஞ்சுது என்னை உப்புக்கண்டம் மாதிரி பொரிச்சிடுவாறு” என்று நதியா மற்றும் மரியமை கூட்டிக்கொண்டு சென்றுவிட்டாள்.
“வார்டனிடம் மாட்டாமல் இருந்தாள் நாளை பார்ப்போம்” என்று சம்ரினின் இழுப்பிற்குச் சென்றாள் மரியம்.
தீபிகாவிற்கு தன்னுடைய ஆசை நிறைவேறப்போகும் உற்சாகம் இருந்தாலும், உள்ளுக்குள் உதறல் பயமெல்லாம் இருக்கத்தான் செய்தது.
“எனக்காக ரிஸ்க் எடுத்து மாட்டிக்கப்போறோம் வனம்.”
“ஷ்ஷ்… அமைதியா வாடி” என்ற முல்லை விடுதியே இருளில் மூழ்கியிருப்பதை உறுதி செய்து கொண்டு மெல்ல அறையை விட்டு வெளியில் வந்தாள்.
“எனக்கு பயமா இருக்கு வனம்.”
அவர்கள் கட்டிடத்தின் தரை தளத்தில் தான் காப்பாளரின் அறை உள்ளது. அதனை கண்டு அச்சத்தில் மொழிந்தாள் தீபிகா.
“காலேஜிலிருந்து பத்து நிமிஷம் நடந்தால் பீச். போனதும் நடந்துட்டு வந்திடலாம்” என்ற முல்லை “விடுதி பகுதியை கடந்துவிட்டோம்” என்க, காவலாளியின் விசில் சத்தம் ஒலித்தது.
“அய்யோ அம்மா நானில்லை” என்று கத்திய தீபிகாவின் வாயினை பொத்தி, புதருக்குள் இழுத்து தங்களை மறைத்து நின்றாள் முல்லை.
“இங்கிருந்து வெளிய போறதே ரொம்ப கஷ்டமா இருக்கும் போலவே வனம். பேசாமல் உள்ளவே போயிடலாமா?” என்று கிசுகிசுப்பான குரலில் கேட்டாள்.
“திரும்பிப் போகும்போது மாட்டிக்கிட்டா என்ன பண்ணுவ? பாதி வந்தாச்சு. மாட்டிக்கிறதா இருந்தால், நினைச்சதை முடிச்சிட்டே மாட்டிப்போம்” என்ற முல்லை கல்லூரி பகுதியின் பின்னால் தீபிகாவை அழைத்து வந்திருந்தாள்.
“காம்பவுண்ட் சுவர் இவ்வளவு பெருசா இருக்கே… எப்புடி ஏறுறது?” தீபிகா மலைப்பாகக் கேட்டாள்.
இடையில் கை குற்றி பார்வையை சூழலவிட்ட முல்லை, நொடியில் சுற்றுச்சுவரை ஒட்டி வளர்ந்திருந்த மரத்தின் மீது ஏறியிருந்தாள்.
“போன ஜென்மத்தில் குரங்கா இருந்திருப்பாப்போலயே” என்று முனங்கிய தீபிகா, “நானெப்படிடி ஏறுறது?” என்று கேட்டாள்.
“என்ன மாதிரிதான். முதலில் மரத்தின் தண்டில் தவ்வி கால் வைத்து பிடி” என்ற முல்லை, தீபிகா அவ்வாறு செய்ததும் ஒரே இழுப்பாக மேலே இழுத்து தான் நின்றிருந்த கிளையில் தீபிகாவை நிற்க வைத்திருந்தாள்.
சடுதியில் என்ன நடந்ததென்று புரியாது தீபிகா நடுங்கிட கிளை ஆடியது. சமநிலை தவறும் போலிருக்க, சுவற்றின் மீது தாவி கால் வைத்து நின்ற முல்லை, தீபிகாவின் கை பிடித்து குதி என்றிட… அவளுக்கு மூச்சே நின்றிடும் போலானது.
முல்லையிடம் ஏன் தன்னுடைய ஆசையை சொன்னோம் என்றானது அவளுக்கு.
“முல்லை வேணாம்டி. வீட்டுக்கு ஒரே பொண்ணுடி நானு. அப்பா அம்மாவை நான்தான் பார்த்துக்கணும். கால் ஒடிஞ்சா அவ்வளவுதான்” என்ற தீபிகாவின் கால்கள் இரண்டும் வெடவெடத்து ஆடியது.
“காலை வளைக்காம நேரா வைத்த மாதிரி குதி. தரையில் தொட்டதும் அழுத்தம் கொடுத்து நில்லு” என்ற முல்லை, சொன்னதை செய்தும் காண்பித்தாள்.
“நானிருக்கேன் பயப்படாமல் குதி தீப்ஸ்.” முல்லை கிசுகிசுப்பான குரலில், கல்லூரி வளாகத்திற்கு வெளியே தரையில் நின்றபடி அழைக்க, நண்பியின் மீதிருந்த நம்பிக்கையில் கண்களை மூடிக்கொண்டு குதித்துவிட்டாள் தீபிகா.
“அவ்வளவுதான்” என்ற முல்லையின் குரலில் இமை திறந்த தீபிகா, தன் கால்களை குனிந்து பார்த்தாள்.
‘ஒன்றுமாகல.’ நெஞ்சில் கை வைத்தவளாக மூச்சினை இழுத்து வெளியேற்றினாள்.
“கொஞ்ச நேரத்துல படுத்திட்டியே வனம்” என்று ஆசுவாசமடைந்த தீபிகா, “மரம் ஏறுறது, சுவரேறி குதிக்கிறதெல்லாம் பழக்கமா?” எனக் கேட்டாள்.
“கிராமத்துல திருட்டு காய் பறிக்க மரம் ஏறி பழக்கம். தாத்தா ரொம்ப ஸ்ட்ரிக்ட் அப்படிங்கிறதால, நைட்ல வெளி கேட் சாவி அவர்கிட்ட தான் இருக்கும். அதனால சுவரேறி குதித்து பழக்கம்” என்று தீபிகாவின் தோளில் கைபோட்டு நடந்தவாறு பதில் வழங்கிய முல்லை கடற்கரை வரும்வரை வாய் ஓயாது பேசிக்கொண்டே வந்தாள்.
வழியில் குல்ஃபி வண்டி நிற்க இருவரும் வாங்கி சுவைத்தபடி கடற்கரை வந்திருந்தனர்.
“எவ்வளவு தூரம் மூன் வாக் பண்ணனுமோ பண்ணு” என்று கடல் அலைகளை பார்த்தவாறு மணல் மேட்டில் அமர்ந்துவிட்டாள் முல்லை.
கிராமத்தில் கிணறு, ஆறு, ஓடையென நீந்தி சலித்தவளுக்கு… கடல் நீரில் இறங்கி விளையாடாது கரை தீண்டி செல்லும் அலைகளை பார்த்து ரசிக்கத்தான் மனம் விரும்பியது.
“சுத்தி யாருமே இல்லை வனம். ஒரே இருட்டா இருக்கு. அதான் கடலை பார்த்தாச்சே! வா ஹாஸ்டலுக்கு போவோம்” என்று சுற்றி அவ்விடத்தை பார்த்தவாறே தீபிகா கூறிட,
“நீ கேட்டதுக்கு பீச் வந்தாச்சு. உன் ஆசைப்படி ரெண்டு முறை அப்படி இப்படின்னு நடந்துட்டு வா தீப்ஸ். கிளம்பலாம்” என்று சொல்லிய முல்லை, தீபிகாவின் முகத்தில் தென்பட்ட பயத்தை கண்டு… எழுந்து அவளின் கரம் கோர்த்து இணைந்து நடந்தாள்.
நிலவு வெளிச்சம். கடல் அலைகளின் ஆர்ப்பரிக்கும் ஓசை. சில்லென்ற காற்று. நடப்பதற்கு அத்தனை இதமாக ஏதுவாக இருந்திட… இருவருமே அக்கணத்தை மிகவும் விரும்பினர்.
தோழிகளான அவர்களுக்கு பேசிட நிறைய இருந்தது. பேசி சிரித்து கடந்தனர் அந்நேரத்தை.
“போதும் வனம் கால் வலிக்குது. இனி ஹாஸ்டலுக்கு வேற நடக்கணும். திரும்பிப்போகலாம்” என்று தீபிகா முட்டியில் கை குற்றி மூச்சு வாங்கியபடி கூற, “சரி வா” என்ற முல்லையும் போதுமென நினைக்க, சாலையை நோக்கி நடந்தனர்.
திடீரென அங்கிருந்த படகு மறைவிலிருந்து ஒரு கரம் தீபிகாவின் கையை பிடித்து இழுக்க அவள் நிலை தடுமாறி மணலில் விழுந்தாள்.
“தீப்ஸ்” என்று அவளை முல்லை தூக்கிட முயல…
“என்னா கண்ணுங்களா… இந்நேரம் கிறாக்கி ஒன்னும் மாட்டலையா?” என்று குரல் கேட்டு இருவரும் விதர்விதித்து போயினர்.
அப்போதுதான் தீபிகா உணர்ந்தாள் தன்னை இழுத்தது அவன் தான் என்று.
அவனருகில் கண்ணாடி குடுவைகள் உருண்டு கொண்டிருக்க…
“குடிச்சிருக்கான்” என்றாள் அதிர்ந்து.
“ஒரு மிதி வச்சு நகருடி” என்று முல்லை சொல்ல… தீபிகா கை ஊன்றி எழ இம்முறை இழுத்து தன் மடியில் விழ வைத்திருந்தான் அவன்.
“டேய் விடுடா” என்று தீபிகா அவனை தள்ளிவிட்டு உருண்டு மண்ணில் விழ, முல்லை நண்பியை தூக்கி நிறுத்தினாள்.
மணலில் முழு போதையில் மல்லாக்க விழுந்து கிடந்தவன்… விசில் அடிக்க நொடியில் நான்கு பேர், பெண்கள் இருவரையும் சூழ்ந்துவிட்டனர்.
முல்லைக்கு ஒருவன் என்ற போதிருந்த… எப்படியும் சமாளித்துவிடலாம் என்கிற திடம், ஹல்க் தோற்றத்தில் மலை மாடுகள் போல் நால்வரை ஒருசேர பார்த்தும் ஆட்டம் கண்டது.
“மூஞ்சியே தெரியல மச்சி… முகத்துல இருக்கிற துணியை உருவு. அப்போதான் வொர்த்தான்னு தெரியும்” என்று ஒருவன் சொன்னதோடு இருவரையும் நெருங்கிட… முல்லை பட்டென்று கீழே குனிந்து மணலை அள்ளி அவனின் முகத்திற்கு நேரே தூவியிருந்தாள்.
கண்களை கசக்கியபடி அவன் தடுமாறிட, அந்த இடுக்கில் தீபிகாவை இழுத்துக்கொண்டு முல்லை ஓடினாள்.
நால்வரும் இருவரை விரட்டிட,
மணலில் அதிகளவு வேகமாக ஓடவும் முடியவில்லை இருவராலும்.
“செருப்பை கழட்டிட்டு ஓடிவா தீப்ஸ்” என்ற முல்லை தோழியின் கையை மட்டும் விடவில்லை.
“எனக்கு இந்த ஆசையே வந்திருக்கக்கூடாது. அதை உன்கிட்ட சொல்லியிருக்கக் கூடாது. இப்படி நீ கூப்பிட்டன்னு நாம கிளம்பி வந்திருக்கவும் கூடாது” என்று தீபிகா அழ…
தடியர்கள் நெருங்கிவிட்டதை உணர்ந்து, தீபிகாவை விடுதி சென்று தேற்றிக்கொள்ளலாமென ஓடுவதிலேயே கண்ணாக இருந்தாள் முல்லை.
“ரோடு வந்திருச்சு தீப்ஸ். கொஞ்சம் வேகமா வா” என்று முல்லை அவளை இன்னும் இழுக்க…
பின்னால் அவர்களை எட்டிவிட்ட ஒருவன் முல்லையின் முதுகு பகுதியில் துணியை பிடித்திருந்தான்.
முல்லை அவனிடம் மாட்டிவிடக் கூடாதென, திமிறி எட்டிப்பாய, தனக்கு முன்னே வந்த நான்கு சக்கர வாகனத்தின் முன் பகுதியில் இடித்து அதன் மீதே சரிந்திருந்தாள்.
முல்லைக்கு பின் நின்றிருந்த தீபிகா, தங்களை துரத்தி வந்த நான்கு தடியர்களையும் முன்னால் நின்ற வாகனத்தையும் அதிர்ச்சியோடு மிரண்டு மாற்றி மாற்றி பார்த்தாள்.
விட்டால் அழுதுவிடுவாள் தீபிகா.
“போச்சு… போச்சு… போலீஸ் டி” என்று வண்டியின் முன்னால் போலீஸ் என்றிருந்ததை பார்த்து முல்லையிடம் தன் பயத்தை அப்பட்டமாகக் காண்பித்தாள்.
ஒரு பெண் வண்டியின் முன்னே ஓடிவருகிறாள் என்றதுமே அவன் வண்டியை நிறுத்தியிருக்க… ஓடி வந்த வேகத்தில் அதன்மீது மோதி விழுந்த முல்லைக்கு அடியென்று எதுவும் படவில்லை.
தீபிகா சொல்லிய பின்னரே விலகி நிமிர்ந்து பார்த்த முல்லைக்கும் அப்போதுதான் அதீத பதற்றம் உண்டானது.
‘ஸ்டேஷன் கூட்டிட்டு போயிடுவாங்களோ?’
‘காலேஜூக்கு விசயம் தெரிஞ்சுதுன்னா அம்புட்டுதேன்!’
‘வீரமுத்து பார்க்குற பார்வைக்கே குமுதா அடவு கட்டி ஆடுமே!’
‘என் படிப்பு…?’
நொடியில் பலவற்றை நினைத்து ஓடிய மனதை இழுத்து பிடித்த முல்லை தங்களுக்கு பின்னால் வந்த தடியர்கள் அரண்டு நிற்பதைக் கண்டு வண்டியிலிருந்து இறங்கியவனை திரும்பிப்பார்த்தாள்.
இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
10
+1
54
+1
+1
4
உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள்
You must be logged in to post a comment.


Super
Thank you
Sprrr entry eagerly waiting for next episode 😊
Thank you
அழகான ஆரம்பம்…
நன்றி அக்கா 😍