
ரத்னபுரியில் ரங்கராஜ பூபதியை எதிர்த்து போர் புரிய சென்ற மித்ரனுக்கு அதிகமாக போராட வேண்டி இருந்தது.
ரங்கராஜ பூபதிக்கு பக்கத்து நாட்டு அரசர்களின் படைபலத்தோடு, ராஜ குருவின் மாந்திரீக பலமும் அவனது படைகளில் சேர்ந்திருந்ததால், மித்ரனால் அவர்களை சமாளிக்கவே முடியவில்லை.
கெட்ட சக்திகள் மித்ரனை நெருங்க அஞ்சினாளும், அவனுடைய படைகளை அவைகள் விட்டு வைக்கவில்லை. முடிந்த அளவு அவனும் ரங்கராஜபுரி பூபதியின் படைகளோடு போராடிக் கொண்டிருந்தான்.
நாட்கள் செல்லச் செல்ல மித்ரனின் படைவீரர்களின் எண்ணிக்கை குறைந்து கொண்டே வந்தது.
அமாவாசைக்கு இன்னும் இரண்டு தினங்களே இருந்தது. கொற்றவை தேவியை மனதில் வேண்டிக்கொண்டு, இன்றைய போருக்கும் தனது வீரர்கள் பின் தொடர, ரங்கராஜ பூபதியின் படையோடு மோத போர்க்களம் புகுந்தான் மித்ரன்.
நேற்று தனக்கு தூதுவன் மூலம் அரசர் அனுப்பிய ஓலையை கையில் வைத்துக் கொண்டு, சிந்தனையிலேயே அதை வெறித்துக் கொண்டிருந்தார் ஏந்திழை அம்மையார்.
அந்த ஓலையில் இளவரசருக்கும் அரசரின் தங்கை மகளான ரஞ்சனிக்கும், அமாவாசை முடிந்து வரும் வளர்பிறையில் ஒரு நன்நாளில் திருமணம் நிச்சயக்கப்பட்டிருப்பதால், அதை முன்னிட்டு கொற்றவை தேவி கோயிலில் பூஜை ஏற்பாடு செய்யுமாறு குறிப்பிட்டிருந்தது.
இளவரசருக்கு திருமணமா? அப்படி என்றால் எனது மகளின் கதி? அன்று என் மகளை ஏற்றுக் கொண்டதாக அரசரும் மகாராணியாரும் முனிவரின் முன்பு கூறியது எல்லாம் நடிப்பா?
அன்று அதிகாலை பூஜை முடிந்து திரும்பி வந்த மதுரவாணியிடம், ஏந்திழை அம்மையார் புலம்பிக் கொண்டே இந்த விஷயத்தை கூற, மனதால் நொறுங்கிப் போயிருந்தாலும் தனது அன்னைக்காக வெளிப்படையாக எந்த உணர்ச்சியையும் காட்டாமல்,
“தாயே அரச குடும்பத்தை பற்றி தெரிந்த விஷயம் தானே? ஒருவனுக்கு ஒருத்தி என்ற கோட்பாடு அங்கு செல்லுபடியாகாது? தாங்கள் இதனால் தான் என்னை சிறுவயதிலிருந்தே அவர்களிடம் இருந்துதள்ளி இருக்குமாறு கூறினீர்கள். நான் தங்களது பேச்சை மீறி நடந்ததால் தான் இவ்வளவு பிரச்சனைகள், நடப்பது நடக்கட்டும் நாம் தற்போது கொற்றவை அன்னையை மந்திர கட்டில் இருந்து விடுபதற்கான வழியை மட்டும் பார்ப்போம், இந்த விஷயத்தை இத்தோடு விட்டு விடுங்கள்.”
“ஆனால் மகளே, உனது கதி என்னாவது? உனது வாழ்க்கைக்கு அவர்கள் என்ன பதில் கூறப் போகிறார்கள்?”
“நிச்சயமாக அந்த இளவரசரின் அந்தப்புரத்தில் ஒருத்தியாக நான் இருக்க மாட்டேன். இந்த விஷயத்தை இத்தோடு விட்டு விடுங்கள், நான் இன்று பூஜை முடிந்து குடிலுக்கு வரமாட்டேன், நாளை உச்சி பூஜை முடித்துவிட்டு, அம்மன் குங்குமத்தோடு தான் கோவிலுக்கு வருவேன். தங்கள் அதற்கு முன்பே கொற்றவை தேவி கோயிலை சுத்தப்படுத்தி வையுங்கள், நாளை நமது அன்னை மந்திர கட்டில் இருந்து விடுபட்டு நம்மை வந்து சேரும் பொன்னாள், அதை மட்டும் நினைவில் வைத்து, மற்றவற்றை சிந்தையில் இருந்து ஒதுக்கித் தள்ளுங்கள், நான் வருகிறேன் தாயே.”
மதுரா சற்று தூரம் சென்று திரும்பி பார்த்த போது, ஏந்திழை அம்மையார் அசையாமல் அதே இடத்தில் நின்று கொண்டு, அந்த ஓலையை வெறித்துக் கொண்டிருந்தார். தன்னுடன் நடந்து வந்து கொண்டிருக்கும் செம்பாவை நோக்கி திரும்பியவள்,
“செம்பா குழப்பமான மனநிலையில் இருக்கும் அன்னையை, இங்கு தனியாக விட்டுவிட்டு கோயிலுக்கு செல்ல எனக்கு மனம் வரவில்லை, நீ எனக்காக அவருடன் இருக்கின்றாயா?”
செம்பா சமத்தாக தலையை ஆட்டிக்கொண்டு ஏந்திழை அம்மையாரை நோக்கி சென்றது. போகும் அவனை கண்ணெடுக்காமல் பார்த்துக் கொண்டிருந்த மதுராவிற்கு தெரியவில்லை, இனி அவனை தான் காணவே போவதில்லை என்று, பெருமூச்சோடு கொற்றவை அன்னையை மனதில் வேண்டிக் கொண்டு, மூலவர் சந்திதியை நோக்கி நடந்தால் மதுரா.
ஏந்திழைஅம்மையார் என்னதான் தன்னை தானே சமாதானப்படுத்திக் கொண்டு, கொற்றவை தேவி கோயிலை சுத்தப்படுத்திக் கொண்டிருந்தாலும், அவரது மனதில் இளவரசரின் திருமண அறிவிப்பு நெருஞ்சிமுள்ளாக குத்திக் கொண்டே இருந்தது. அப்படியே யோசித்துக் கொண்டிருப்பதற்கு பதிலாக, நேராக அரசரிடமே இது குறித்து பேசி விடலாம் என்று மகிழபுரியை நோக்கி தனது பயணத்தை தொடங்கினார் ஏந்திழை அம்மையார். செம்பாவும் மதுராவின் கட்டளைப்படி அவரை பின்தொடர்ந்து சென்றது.
மோகனாவும் இதைத்தான் எதிர்பார்த்தாள், ஏந்திழையை எப்படியாவது அந்த குருந்தங்காட்டில் இருந்து வெளியே வர வைத்து விட்டால், பிறகு அவரை எளிதாக தீர்த்து கட்டி விடலாம் என்று தான் இவ்வாறு ஒரு ஓலையை அவருக்கு அனுப்பி இருந்தாள்.
அரச மண்டபத்தில் அரசரும் அமைச்சர் பெருமக்களும் குழுமி இருந்தபோது ஒரு காவலன் வந்து, குருந்தங்காட்டிலிருந்து ஏந்திழை அம்மையார் அரசரை காண வந்திருப்பதாக கூற, அரசரின் உடலில் இருந்த ராட்சசன் உடனே மோகனாவுக்கு தன் மனதில் இந்த தகவலை தெரிவித்தான்.
“அவரை உள்ளே அழைத்து வா.”
“வணக்கம் அரசே.”
“ம்ம்ம்… விஷயம் இன்றி தாங்கள் இவ்வளவு தூரம் வர மாட்டீர்கள், தாங்கள் வந்திருப்பதற்கான காரணம்?”
“அரசே… நான் தங்களுடன் தனியாக விவாதிக்க விரும்புகின்றேன்.”
“பரவாயில்லை ஏந்திழை, இந்த அமைச்சர்கள் அனைவரும் எனது நலம் விரும்பிகளே, தாங்கள் தாராளமாக வந்திருக்கும் காரணத்தை கூறலாம்?”
“அரசே இளவரசருக்கு திருமணம் என்று கேள்விப்பட்டேன்?”
“ஆமாம், என்ன அமைச்சரே? நான் தங்களிடம் இது குறித்து ஒரு ஓலையை ஏந்திழை அம்மையாருக்கு அனுப்பி வைக்கக் கூறினேனே? தாங்கள் அதை செய்யவில்லையா?”
“தங்கள் கட்டளை படியே தூதுவனின் மூலம் அவருக்கு ஓலை அனுப்பிவிட்டோம் மன்னா.”
“ஓலை வந்து சேர்ந்து விட்டது அரசே, ஆனால்?”
” என்ன ஆனால்? எதுவாக இருந்தாலும் தயங்காமல் கூறு ஏந்திழை?”
“அரசே தாங்கள் மறந்து விட்டீர்களா? இளவரசருக்கும் எனது மகளுக்கும் தான் திருமணம் நடந்து முடிந்து விட்டதே.”
“என்ன?…. ஹா ஹா ஹா ஹா, இளவரசருக்கும் காட்டில் வசிக்கும் உனது பெண்ணுக்கும் திருமணம் நடந்து முடிந்து விட்டதா?”
“என்ன அரசே இப்படி பேசுகிறீர்கள்? அன்று குருதேவர் இவர்களின் திருமணத்தைப் பற்றி கூறிய போது, தாங்களும் மகாராணியாரும் எனது மகளுக்கு ஆசி கூறி, அவளை தங்களது மருமகளாக ஏற்றுக் கொண்டீர்களே…?”
“ஏந்திழை என்ன உளறிக் கொண்டிருக்கின்றாய்? இந்த மகிழபுரியின் இளவரசருக்கும், காட்டில் வாழும் சாதாரண காட்டுவாசி பெண்ணுக்கும் திருமணமா? ஆண்டவனுக்கு பூஜை செய்வதால் ,நீ ஆண்டவனாக ஆகிவிட முடியுமா என்ன? உன் மகளை மகிழபுரியின் அரியணையில் அமர வைக்கும் ஆசை வந்துவிட்டதா உனக்கு? வீணாக எனது கோபத்திற்கு ஆளாகாமல் இங்கிருந்து சென்றுவிடு.”
“அரசே என்ன இது? அன்று ஒரு பேச்சு இன்று ஒரு பேச்சு என்று மாறி மாறி பேசுகிறீர்கள்? அன்று குருதேவரின் முன்பு, எனது மகளை தங்களது மருமகளாக மனமார ஏற்றுக் கொள்வதாக கூறினீர்களே? அது எல்லாம் பொய்யா? இதுதான் நாடாளும் அரசருக்கு அழகா?”
மோகனாவின் அறிவுரைப்படி அரசரின் உடலில் இருந்த ராட்சசன், தனது முகத்தை ஏந்திழைக்கு காட்டினான்.
அமைச்சர்கள் தங்களுக்குள் விவாதித்து கொண்டிருக்கும் போதே, ஏந்திழை அம்மையார் கத்த தொடங்கினார்.
“இவன் அரசர் இல்லை, இவன் அரசர் இல்லை, இவன் ஒரு ராட்சசன், இவன் ராட்சசன்.”
“என்ன தைரியம் இருந்தால் அரச சபையை அவமதித்து, அரசரையும் அவமானப்படுத்துவாய்? வீரர்களே இவளை இழுத்துச் செல்லுங்கள், நாளை காலை சூரிய உதயத்தில் இவளை அக்கினி குண்டத்தில் இறக்க வேண்டும், அரச சபையை அவமானப்படுத்தியதற்கு, இதுதான் அவளுக்கு சரியான தண்டனை.
அமைச்சர்களே நான் இவ்வாறு கூறியதில் தங்களுக்கு ஏதேனும் மாற்று கருத்து உண்டா?”
அமைச்சர்கள் அவரை எதிர்த்துப் பேசத் துணிவின்றி அமைதியாக இருக்க,
” அமைச்சர்களே,… எனக்கு ஏனோ நம் நாட்டில் நடக்கும் குழப்பங்களுக்கெல்லாம் காரணம், இந்த ஏந்திழையாகத்தான் இருக்குமோ என்று எண்ண தோன்றுகிறது? உங்களுக்குத் தெரியும் அல்லவா ஏந்திழைக்கு மந்திர தந்திரங்கள் அனைத்தும் தெரியும் என்று.”
“ஆம் அரசே,…ஆனால் எதற்காக அவர் இவ்வாறெல்லாம் செய்யப் போகின்றார்?”
“வேறு எதற்கு? அவளது காட்டுவாசி பெண்ணை மகிழபுரியின் மகாராணியாக்குவதற்கு தான்.”
ஏந்திழை அம்மையாரை இழுத்துச் சென்ற காவல் வீரர்களை, செம்பா பந்தாடியது. அதனை கேள்விப்பட்டு அரண்மனையிலிருந்து வெளிவந்த அரசர், வீரர்களுக்கு கட்டளையிட்டார்.
“வீரர்களே,…அந்த யானையை இரும்புச் சங்கிலியால் பிணையுங்கள், அது அடங்க மறுத்தால், வேல் கம்புகளைக் கொண்டு அதை குத்தி சாகடியுங்கள். இந்த சூனியக்காரியோடு அதுவும் எமலோகம் போகட்டும்.”
வீரர்கள் பலர் வேல் கம்புகளைக் கொண்டு தாக்கிய போதும், ஏந்திழை அம்மையாரை தனக்குள் பொத்தி வைத்துக்கொண்ட செம்பா, ரத்த காயங்களோடும் முடிந்தவரை வீரர்களோடு போராடியது.
ஒரு கட்டத்திற்கு மேல் போராட முடியாமல், ஏந்திழை அம்மையாரின் கண் முன்பே தனது மரணத்தை தழுவியது.
சிவன்மலையில் மேடு பள்ளங்களை கடந்து அகத்தியர் குகையை ஒரு வழியாக மூவரும் கண்டுபிடித்து விட்டனர். ஜோசியர் குகைக்கு வெளியே நிற்க, பிரதீபனும் ரகுநந்தனும் மட்டும் குகையின் வாயிலின் வழியே உள் நுழைந்தனர்.
அவர்கள் குகையின் உள்ளே செல்லும் முன்பே, ஜோசியர் அவர்களிடம் ஏதாவது ஆபத்து ஏற்பட்டால் அவர்களின் கைகளில் உள்ள ருத்ராட்சத்தை, பயன்படுத்துமாறு கூறி அனுப்பினார்.
அவர்கள் குகையின் உள்ளே செல்லும்போது விரிந்த கிடந்த பாதையானது, செல்லச் செல்ல குறுகிய பகுதியாக ஒரு மானிடன் குனிந்தபடியே செல்லும் வழியாக மாறியது. சிறிது நேரம் சென்ற பிறகு மீண்டும் பாதை சாதாரணமாக மாறியது.
அங்கு ஒரு குளத்தின் நடுவே சிவபெருமான் லிங்க வடிவில் அமர்ந்திருந்தார். அவருக்கு கீழே ஒரு பெட்டியில் வாள் வைக்கப்பட்டு இருந்தது
அந்தக் குளத்திற்கு எதிரே நந்தீஸ்வரர் லிங்கத் திருமேனியரை பார்த்தவாறு அமர்ந்திருந்தார். அவருக்கு சற்று தொலைவு தள்ளி, ஒரு பூதக்கணம் சிலை வடிவில், கைகளில் வாள் பிடித்து நின்று கொண்டிருந்தது.
அந்தக் குளம் எங்கும் தாமரை பூக்கள் பூத்து, அந்த குளத்திற்கே அழகு சேர்த்துக் கொண்டிருந்தது.
நந்திக்கும் சிவலிங்கத்துக்கும் இடையே அங்கங்கே கற்கள் பதிக்கப்பட்டு, குளத்தை கடந்து செல்ல வழி செய்யப்பட்டிருந்தது. பிரதீபனும் ரகுநந்தனும் நந்திக்கு அருகில் உள்ள கல்லில் கால் வைத்ததுமே, சற்று தொலைவில் இருந்த பூதக்கணத்தின் சிலை உயிர் பெற்று விட்டது.
அந்த பூதக்கணம் தனது வாளை உயர்த்திக் கொண்டு, இருவரோடும் ஆவேசமாக சண்டையிட துவங்கியது. ரகுநந்தனும் பிரதீபனும் ஒருவருக்கொருவர் சலிக்காமல், அந்த பூதக்கணத்திடமிருந்து தப்பித்துக் கொண்டே வந்தனர்.
“பிரதீபா நான் இந்த பூதக்கணத்தை பார்த்துக்கொள்கிறேன், நீ எப்படியாவது சென்று சிவலிங்கத்திற்கு அடியில் இருக்கும் பெட்டியினை திறந்து, வாளை எடுத்து விடு.”
பிரதீபன் குளத்தின் இடையே இருந்த கற்கலின் மீது காலை வைத்து, சிவ லிங்கத்தை நோக்கிச் சென்றான்,
அவன் பெட்டியை நெருங்கிய போது தான் தெரிந்தது, அந்த பெட்டியை சுற்றி ஒரு நாகப்பாம்பு சுருண்டு படுத்திருந்தை, அதன் தலைப்பகுதி பெட்டிக்கு மேலே தூக்கி நின்று, அவனைத்தான் படம் எடுத்துக் கொண்டிருந்தது.
மண்டியிட்டு கீழே அமர்ந்து சிவலிங்கத்தை நோக்கி கைகூப்பினான் பிரதீபன்.
“சிவபெருமானே கெட்ட சக்திகள் தங்களது ஆட்டத்தை தொடங்கி விட்டன, அவைகளை அடக்கத்தான் இந்த வாள் எங்களுக்கு தேவைப்படுகிறது, வேறு எந்த கெட்ட எண்ணமும் எங்களுக்கு இல்லை, தயை கூர்ந்து எங்களுக்கு பக்க துணையாக இருந்து, கெட்ட சக்திகளை வெற்றிகொள்ள துணை புரியுங்கள் சுவாமி.”
பிரதீபன் தனது கைகளில் இருந்த ருத்ராட்சத்தை, நாகப்பாம்பை நோக்கி நீட்டினான். அதைக் கண்டவுடன் தனது உடலை பெட்டியில் இருந்து நீக்கிவிட்டு அந்த பெட்டியில் இருந்து இறங்கி, சிவலிங்கத்திடம் சென்று அவரை சுற்றிக்கொண்டு தலை மீது படம் எடுத்து நின்றார் நாகராஜன்.
ரகுநந்தன் இன்னும் அந்த பூதக்கணத்தோடு போராடிக் கொண்டுதான் இருந்தான். அவனை நோக்கி திரும்பிய பிரதீபன்,
“ரகுநந்தா உடனே உன்னிடம் இருக்கும் ருத்ராட்சத்தை, அந்த பூதக்கணத்திடம் காட்டு.”
ரகுநந்தன் பிரதீபன் கூறியபடியே செய்ய, அந்த ருத்ராட்சத்தை கண்டதும் அந்த பூதக்கணம், மீண்டும் தனது பழைய இடத்திற்கு சென்று கற்சிலையாக மாறி நின்று விட்டது.
ரகுநந்தனும் பிரதீபனும் லிங்கத் திருமேனியரை சிரம் தாழ்ந்து வணங்கி விட்டு, பெட்டியில் இருந்த வாளை எடுத்துக் கொண்டனர்.
அடுத்த கணமே அந்த பெட்டி மண்ணுக்குள் புதைந்து விட்டது, வீரவாளோடு வெளியில் வந்த இருவரையும் ஜோசியர் பரபரப்புடன் வரவேற்றார்.
பிரதீபனும் ரகுநந்தனும் குகைக்குள் நுழைந்த பிறகு, தனது குரு தேவரை நினைத்து தியானத்தில் ஆழ்ந்தார் ஜோதிடர். அப்போது அவர் கூறிய செய்தியில் அதிர்ந்து போய் தான், இவர்களுக்காக காத்துக் கொண்டிருந்தார்.
“பிரதீபா சற்று நேரத்திற்கு முன்பு எனது குரு தேவரை நினைத்து தியானத்தில் ஈடுபட்டிருந்தேன், அப்போது அவரது குரல் எனக்கு கேட்டது, அவர் உடனடியாக நாம் செய்து முடிக்க வேண்டிய கடமைகளை என்னிடம் கூறினார்.”
“இளவரசர் இப்போது ரத்தினபுரியில், ரங்கராஜ பூபதியை எதிர்த்து போர் புரிந்து கொண்டிருக்கிறார். ரங்கராஜ பூபதியின் படைகளில் பக்கத்து நாட்டு படை வீரர்களோடு கெட்ட சக்திகளின் மந்திர பலமும் சேர்ந்துள்ளதால், அவரால் சமாளிக்க முடியாமல் தடுமாறிக் கொண்டிருக்கின்றாராம், உடனடியாக நம்மை இந்த வாளை எடுத்துக் கொண்டு அங்கு செல்ல வேண்டும் என்று அவர், எனக்கு கட்டளை இட்டு இருக்கிறார். அது மட்டும் இல்லாமல், சிவன் மலைக்கு வெளியே நமக்கான ஆபத்து காத்துக் கொண்டிருப்பதாக அவர் எச்சரிக்கை செய்தார்.”
“அப்படி என்றால் நானும் ரகுநந்தனும் மலைக்கு வெளியில் இருக்கும், அந்த ஆபத்தை பார்த்துக் கொள்கிறோம். தாங்கள் இந்த வீரவாளை எடுத்து சென்று, எப்படியாவது ரத்தினபுரியில் இருக்கும் மித்ரனிடம் சேர்ப்பித்து விடுங்கள், எங்கள் உயிரை விட இந்த வாள் மித்ரனிடம் சேர வேண்டியது மிக முக்கியமானது, இங்குள்ள ஆபத்தை நாங்கள் பார்த்துக் கொள்கிறோம்.”
மலைக்குக் கீழே வந்து அகத்தியரின் சிலைக்கு முன்பு அந்த வீரவாளை வைத்து விட்டு, அவரின் ஆசி பெற்று அதை ஜோசியரிடம் கொடுத்து, அவரை ரத்னபுரிக்கு வேறு வழியாக அனுப்பி விட்டு, பிரதீபனும், ரகுநந்தனும் சிவன் மலையை விட்டு வெளியேறினர்.
ரஞ்சனியின் உருவத்தில் இருந்த மோகனாவிற்கு ஆனந்தமாக இருந்தது, இன்று தனது கனவு நிறைவேற போகிறது, அதன் தொடக்கம் தான் ஏந்திழையின் அழிவு என்று உற்சாகமாக இருந்தாள். அப்போது தான் சிவன் மலையில் இருந்து அவளுக்கு செய்தி வந்தது.
“இன்று என் அனைத்து எதிரிகளையும் ஒழித்துவிட்டு, நிம்மதியாக பூஜையினை செய்யப் போகின்றேன். இனி இந்த உலகமே எனக்கு அடிமை…”
என்று மகிழ்ச்சியில் திளைத்த மோகனா, விடியும் முன்பே சிவன்மலையில் காரியத்தை முடித்து விட்டு வந்து விடலாம் என்று, யட்சினிகளுடன் ரஞ்சனியின் உடலில் இருந்து தனது ஆன்மாவை பிரித்துக் கொண்டு, சிவன் மலையை நோக்கி பயணித்தாள்.
மகிழபுரி மக்களும் குருந்தங்காட்டை சேர்ந்த மக்களும், ஏந்திழை அம்மையாருக்கு ஆதரவாக அரசரை எதிர்த்து, மாளிகையை சூழ்ந்து கொண்டு, அரசருக்கு எதிராக முழக்கங்களை எழுப்பினர்.
ஏந்திழை அம்மையாரை மக்கள் ஒரு குருநாதரை போலவே பார்த்தனர். அவருக்கு ஒரு தவறு இழைக்கப்படும் போது, அதை பார்த்துக்கொண்டு அமைதியாக இருக்க அவர்களால் முடியவில்லை. மக்களின் போராட்டங்கள் தீவிரமானது.
மகாராணியார் எவ்வளவோ முறை அரசரிடம் மன்றாடி விட்டார், இருந்தும் அவரால் ஏந்திழையின் தண்டனையை குறைக்க முடியவில்லை. மகாராணிக்கு என்ன செய்வது என்றே தெரியவில்லை.
தனது உடலில் இருந்து மோகனாவின் ஆன்மா பிரிந்ததை பார்த்துக் கொண்டிருந்த கிளி வடிவில் இருந்த ரஞ்சனி, இதுதான் தக்க சமயம் என்று தனது உடலுக்குள் தனது ஆன்மாவை புகுத்திக் கொண்டு, கிளியின் கழுத்தில் இருந்த ருத்ராட்சத்தை தனது கைகளுக்குள் பாதுகாப்பாக வைத்துக் கொண்டாள்.
உடனே மகாராணியாரிடம் சென்று நடந்தவைகளை விவரமாக எடுத்துக் கூறியவள், அரசரின் உடலில் உள்ள ராட்சசன் பற்றியும் தெரிவித்தால். அரசரின் உடலில் இருந்து அந்த ராட்சசனை விரட்ட வேண்டும் என்றால், அதற்கு ஏந்திழை அம்மையாரின் துணை வேண்டும் என்று, யாரும் அறியாமல் அவரை தேடி, இருவரும் சிறைக்குச் சென்றனர்.
நடந்த அத்தனை விஷயங்களையும் ஏந்திழை அம்மையாரிடம் தெரிவித்த ரஞ்சனி, இன்றைய அமாவாசை பூஜையை பற்றியும் தெரிவித்தாள்.
“முதலில் எப்படியாவது அரசரின் உடலில் உள்ள ராட்சசனை வெளியேற்ற வேண்டும், அவர் மூலமாகத்தான் தங்களது தண்டனையை நிறுத்த முடியும். இன்றைய பூஜையை மோகனா நிறைவு செய்துவிட்டால்,…இனி எந்த சக்தியாலும் அவளை அழிக்கவே முடியாது, தாங்கள்தான் இதற்கு ஏதாவது உபாயம் கூற வேண்டும் தாயே.”
தீவிரமாக சிந்தித்த ஏந்திழை அம்மையாருக்கு, அன்று கொற்றவை தேவி தமக்கு அளித்த அந்த திரிசூலத்தின் ஞாபகம் வந்தது. உடனே அதை எப்படியாவது அரண்மனைக்கு கொண்டு வந்து விட்டால், அரசரின் உடலில் இருக்கும் ராட்சசன் வெளியேறி விடுவான், அத்தோடு மோகனாவினாலும் இங்கு வர முடியாது என்று கூறினார்.
“அதற்குள் மதுரவாணி இன்றைய பூஜையையும் நிறைவு செய்து விடுவாள், கொற்றவை தேவிக்கு குங்கும அபிஷேகம் முடிந்து விட்டால், பிறகு தேவியே அந்த கெட்ட சக்தியை பார்த்துக் கொள்வார்.”
“தாயே அந்த திரிசூலத்தை எங்களால் எடுத்து வர முடியுமா என்று தெரியவில்லையே?”
“அத்தை நான் ஏந்திழை அம்மையாருக்கு பதிலாக, எனது முகத்தை மூடிக்கொண்டு இங்கு சிறையில் இருக்கிறேன், தாங்கள் அவரை எப்படியாவது இந்த சிறையில் இருந்து வெளியே கூட்டிச் சென்று விடுங்கள். அவர் சென்று திரிசூலத்தை எடுத்து வரட்டும்.”
“ஆனால் ரஞ்சனி நீ எப்படி இங்கு இருப்பாய்? ஒருவேளை தண்டனையை நிறைவேற்ற உன்னை அவர்கள் இழுத்துச் சென்று விட்டாள்?”
“என்னை அவர்கள் கண்டுபிடித்து விட்டாலும், நிச்சயமாக என்னை ஒன்றும் செய்ய மாட்டார்கள் அத்தை, ஏனென்றால் எனது உடல் மோகனாவிற்கு தேவைப்படுகிறது, அதனால் என்னைப் பற்றி கவலை கொள்ளாமல், இருவரும் சீக்கிரமாக இங்கிருந்து சென்று விடுங்கள்.”
வெகு நேரமாக மோகனாவை தொடர்பு கொள்ள முடியாமல், அரசரின் உருவத்தில் இருந்த ராட்சசனும் தவித்துக் கொண்டிருந்தான். மக்கள் போராட்டத்தை அடக்கி ஏந்திழையின் தண்டனையை நிறைவேற்றுமாறு வீரர்களுக்கு உத்தரவிட்டான்.
மக்களின் போராட்டத்தால் ஏந்திழை அம்மையாருக்கு நிறைவேற்றப்பட வேண்டிய தண்டனை சற்று தாமதமானது. மக்கள் கூட்டத்தை அடக்குவதற்கே அதிகநேரம் பிடித்தது.
அமைச்சர்களுக்கும் வீரர்களுக்கும் இது பிடிக்கவில்லை என்றாலும், அரசரை எதிர்த்து பேச முடியாமல், அவரின் பேச்சைக் கேட்டு நடந்து கொண்டனர்.
இங்கு இப்படி இருக்க, சிவன்மலை அடிவாரத்தில் ஒரு உயிர் தனது இறுதியாத்திரையை நெருங்கிக் கொண்டிருந்தது.

