Loading

அத்தியாயம் 3

 

இல்லத்தை அடைந்தாள் மௌனிகா. வாயிலில் நின்றிருந்த வாகனம் யாரோ வந்திருப்பதை அறிவிப்பு செய்ய, தான் வந்த ஆட்டோவிற்குப் பணத்தைக் கொடுத்துவிட்டுத் திரும்பினாள்.

உடமைகளைக் கையில் பற்றிக் கொண்டு  வீட்டிற்குள் அடியெடுத்து வைத்தவளின் செவியில், “எனக்கு, உங்க பொண்ணு வேணாம்!” என்ற சொற்கள் அனுமதியின்றி வந்து விழுந்தன.

அந்த வார்த்தைகளிற்கு முன்பும் பின்புமான உணர்வுகள் நிகழ்வுகள் என எதையும் அறிய மாட்டாள் பாவை. ஆனால், அதன் பொருள் மட்டும் தெரிந்தது.

சிறிய தந்தையின் மகள் லாவண்யாவை, அவளிற்குப் பார்த்திருந்த மாப்பிள்ளை வேண்டாம் என மறுப்பு தெரிவித்துக் கொண்டு இருந்தான்.

ஏதோ பிரச்சனை என்று புரிந்தது.

‘தான் வரும் நேரத்திலா இப்படி நடக்க வேண்டும்?’ என்று பாவையின் மனம் ஒருவித அசௌகர்யத்தில் தவித்தது.

உள்ளே வைத்த காலைப் பின்னிழுத்துக் கொண்டு, வாயிலை விட்டுச் சற்றுத் தள்ளி நின்றாள்.

“மாப்பிள்ள அவசரப்பட்டு இப்படி முடிவெடுக்கிறது நல்லது இல்ல!” என சேகரன் சமாதானம் செய்ய முயன்றார்.

“அவசரப்பட்டா? இது அவசரத்தால எடுத்த முடிவு இல்ல, அவசியத்துக்காக எடுத்தது.”

“இன்னும் மூனு நாள்ல நிச்சயதார்த்தம். இப்ப வந்து இப்படிச் சொன்னா என்ன அர்த்தம்?” என்று அர்ச்சனாவும் கேட்க, “இன்னும் மேல கொண்டு போயி பிரச்சனை ஆகுறதுக்குப் பதிலா, இந்த உறவை இதோட நிறுத்திக்கிறது நல்லதுனு அர்த்தம்.”

“கல்யாணம் பேசுனது பெரியவங்க தான? இப்ப அவங்க இல்லாம நீங்க மட்டுமா வந்து இப்படிச் சொல்லுறது முறை இல்ல. உங்க குடும்பத்து ஆளுங்க எங்களுக்குத் தர்ற மரியாதை, இதுதானா.?”

“நடக்கப் போற நல்லதைப் பத்திப் பேசத்தான் பெரியவங்க வேணும். அது வேணாம்னு முடிவெடுக்க, சம்பந்தப்பட்ட நான் ஒருத்தனே போதும்.”

“சொந்தக்காரங்களுக்கு எல்லாம் சொல்லியாச்சு மாப்பிள்ள. இப்பப் போயி கல்யாணம் நின்னா, ரெண்டு பக்கத்து ஆளுங்களுக்கும் தான சங்கடம்?” என்று சேகரன் சொல்ல,

“ஒரு நாள் சங்கடத்துக்கு யோசிச்சுக்கிட்டு, வாழ்நாள் முழுசும் சங்கடத்தோட வாழ முடியாது. நீங்க மட்டும்தான் சொந்தக்காரங்களுக்கு சொல்லி இருக்கீங்களா? அப்ப நாங்க.? ஊர்ல இருந்து ஆளுங்க வர ஆரம்பிச்சாட்டாங்க. அவங்களை அழைச்சு நடு வீட்டுல உட்கார வச்சிட்டுத்தான், இப்ப உங்கக்கிட்ட வந்து பேசிக்கிட்டு இருக்கேன். இப்பவே நிறுத்திக்கிட்டா, ஏதோ சரிவர அப்படிங்கிறதோட போகும். இல்லேனா.. மனக்கசப்பும் பகையும் தான் மிஞ்சும்.” எனப் பிடிகொடாமல், தான் எடுத்த முடிவில் உறுதியாய் நின்றான் மாப்பிள்ளையானவன்.

எதுவும் சொல்லிக் கொள்ளாது வீட்டை விட்டு அவன் வெளியேற, உள்ளே அடியெடுத்து வைத்தாள் மௌனிகா.

பாவையின் கண்களில் அதிர்ச்சி தெரிய, ஆடவனின் முகத்திலும் அதனின் எதிரொலி.

தலையைத் திருப்பிக் கொண்டு அவள் அடுத்த அடி எடுத்து வைக்க, வெளியே சென்றான் அவன்.

அனிச்சையாய் மௌனியின் பார்வை வாயிலின் பக்கம் திரும்ப, வாகனத்தை இயக்கியவனின் கண்கள் ஒரு நொடிக்கும் குறைவாய் அவளின் விழிகளைத் தொட்டு கடந்து சென்றது.

“இவன் இஷ்டத்துக்கு இப்படிச் சொல்லீட்டுப் போனா எப்படி? நீங்க சம்பந்திக்கு ஃபோன் போடுங்க!” என்ற சிற்றன்னையின் பேச்சில், அவளின் கவனம் திரும்பியது.

கைப்பேசியில் அழைப்பு விடுத்து செவியோடு வைத்த சேகரன், ஒலிக் கேட்டு திரும்பினார். கணவரோடு இணைந்து அர்ச்சனாவும் பார்த்தார்.

திடீரென மௌனிகாவைக் கண்டதும் ஒருவித அசாதாரணமான அமைதி நிலவ, கைப்பேசியின் டிரிங் ஒலி மட்டும் ஏதோ பேரிரைச்சலாய் கேட்டது.

“ஹலோ..” என மறுபுறம் பாகீரதி, மாப்பிள்ளையின் அன்னை.

கணவனும் மனைவியும் அவரிடம் பேச தயாராகினர்.

“சம்பந்தி அம்மா, நான் சேகரன் பேசுறேன்.”

“சொல்லுங்க அண்ணே. நிச்சய ஏற்பாடு எல்லாம் எப்படிப் போயிட்டு இருக்கு?”

அர்ச்சனா கைப்பேசியை வாங்கி, “என்னம்மா, நீங்களும் உங்க மகனும் விளையாடுறீங்களா?”

“என்ன அண்ணி? எதுவும் பிரச்சனையா? ஏதோ வித்தியாசமா பேசுறீங்க?”

“இப்பதான், உங்க மகன் வந்து என் பொண்ணை வேணாம்னு சொல்லிட்டுப் போறான். நீங்க என்னனா, நிச்சயத்தைப் பத்திக் கேட்குறீங்க?”

அவர் அதிர்ந்து, “அண்ணி என்ன சொல்லுறீங்க? சரண் வந்தானா? பொண்ணை வேணாம்னு சொன்னானா?”

“என்ன ஒன்னும் தெரியாத மாதிரி பேசுறீங்க?”

“இல்ல அண்ணி.. நிஜமாவே எனக்குத் தெரியாது. விசேஷத்துக்கு, என்னோட தங்கச்சி ஊர்ல இருந்து வர்றா. அவளை வீட்டுக்குக் கூட்டிட்டு வர்றதுக்குத் தான் போனான். நீங்க என்னனா திடீர்னு இப்படிச் சொல்லுறீங்க? கொஞ்ச நேரம் பொறுமையா இருங்க. நான் அவன்கிட்ட என்ன ஏதுனு பேசிட்டு, உங்களுக்கு ஃபோன் போடுறேன்!” என அவர் இணைப்பைத் துண்டிக்க, இவர்களின் கைப்பேசி உரையாடலைக் கேட்டபடியே ரெங்கநாயகியின் அறைக்குள் சென்றாள் மௌனிகா.

மணி ஏழை நெருங்கிக் கொண்டிருந்தது.

பெதுவாகவே ஏழரைக்கு மேல்தான் அங்கே இருப்பவர்களிற்கு விடியும். ஏழு மணிக்குப் பணிப் பெண் வந்து தேநீர் தயாரித்து குரல் கொடுத்த பின்னரே, ஒவ்வொருவராய் எழுந்து வருவர்.

ஆனால் இன்று திருமணத்தை நிறுத்துவதற்காக  ஆறரைக்கே வந்து, வீட்டில் வசிப்பவர்களை எழுப்பி விட்டிருந்தான் அவன்.

சேகரனும் அர்ச்சனாவும் ஒருவரை ஒருவர் பார்த்தபடி கைகளைப் பிசைந்து கொண்டு, கலைந்த சிகையும் துயில் மீளாத கண்களுமாய் கூடத்தில் அமர்ந்து இருந்தனர்.

நடந்த எதுவும் தெரியாது, விழுங்கிய மாத்திரைகளின் வீரியத்தால் அறைக்குள் உறங்கிக் கொண்டு இருந்தார் ரெங்கநாயகி. மூத்தவரை எழுப்ப மனமின்றி, உடமைகளை ஒரு ஓரமாய் வைத்துவிட்டு ஓய்வறைக்குச் சென்றாள் மௌனி.

பயணக் களைப்பும், இரவில் சரியாய் உறங்காததும் அவளைச் சோர்வடைய செய்து இருக்க, அது நீங்கும் மட்டும் நீராடித் தயாரானாள்.

வழியினில் கடையில் இருந்து வாங்கி வந்திருந்த தேநீர் பையைப் பிரித்து, காகிதக் கோப்பையில் ஊற்றி அருந்தியவள், அடுத்தநொடி கைப்பேசியைத் துணை சேர்த்துக் கொண்டாள்.

“ரீச்சீடு படி!” என ரஞ்சனிக்குக் குறுஞ்செய்தியைத் தட்டிவிட, சிறிது நேரத்தில் அவளிடம் இருந்து அழைப்பு.

“குட்மார்னிங் ரஞ்சு!” எனப் பேச்சைத் தொடங்க, “மார்னிங் படி.”

“என்ன வெறும் மார்னிங் மட்டும் வருது. ஏன் குட்டா இல்லையா?”

“மௌனி எனக்கு ஒரு விஷயம் சொல்லு.”

“என்னப்பா?”

“சீ பிளாக்ல குடி இருக்க, சந்துருவை உனக்குத் தெரியுமா?”

“யா, ஐ க்நோ. என்ன படி?”

“நேத்து நான் வரும்போது, நம்ம வீட்டு டோர்கிட்ட நின்னுட்டு இருந்தான்பா.”

“வாட்.?” என இவள் திகைக்க, “உன்னைப் பத்திக் கேட்டான்.”

“என்ன கேட்டான்?”

“உன்னோட பேரண்ட்ஸ், எந்த ஊருனு எல்லாம் விசாரிச்சான். லவ் பண்ணுறானாம். உனக்கும் தெரியும்னு ஏதேதோ சொன்னான்.”

மௌனி அமைதி காக்க, “படி.”

“ம்ம்..”

“என்னப்பா?”

சென்னையில் இருந்து கிளம்பும் முன்னர் நடந்த நிகழ்வினைத் தோழியிடம் பகிர்ந்தாள்.

“இவ்வளவு நடந்திருக்கு. நீ என்கிட்ட எதுவுமே சொல்லல?”

“தினமும் டிராவல்ல, ஆஃபிஸ்லனு நிறைய பேரை ஃபேஸ் பண்ணிக்கிட்டு தான் இருக்கேன். ஐ தாட் எ பார்க்கிங் டாக் வுட்நாட் பைட். பட், டிட் நாட் எக்ஸ்பெட் திஸ்.”

“ம்ம்.. கொஞ்சம் ஆர்வக் கோளாறு மாதிரி தெரியிறான். ஆனா, தப்பானவனா தோணல. ஃபேமிலியைப் பத்தி எல்லாம் விசாரிக்கிறான்னா, அவனுக்கு உன்னைக் கல்யாணம் செஞ்சுக்கிற எண்ணம் தான். ஏன், நீ டிரை பண்ணிப் பார்க்கக் கூடாது படி?”

“ரஞ்சு, இன்னைக்கு ஒருநாள் பேசுனதை வச்சு சொல்லுற நீ. ஆனா, நான் ஒன் இயரா கவனிச்சிட்டு இருக்கேன். ஹீ இஸ் நாட் த பர்சன், ஐ எக்ஸ்பெட்டட்.”

“ஹோ.. அப்ப உனக்கு எந்த மாதிரி லைஃப் பார்ட்னர் வேணும்?”

இரயில் நிலையத்தில் பெட்டியைத் தூக்கி உதவியவனின் நினைவு, முன்னறிவிப்பு ஏதுமின்றி ஒருநொடி வந்தது போனது மௌனிக்கு.

“அவனும் டவுன் ஆகாம, என்னையும் டவுன் பண்ணாம இருந்தா போதும். ஆனா, சந்துருவால அது முடியாது. ஆழம் தெரியாம காலை விட்டுட்டு அவஸ்தைப் படுற கேட்டகிரி அவன்.”

“ம்ம்.. உனக்கு இண்ட்ரெஸ்ட் இல்லேனா வேணாம்.”

“ஏன், உனக்கு இண்ட்ரெஸ்ட் இருக்கா?”

“அச்சச்சோ! அதெல்லாம் இல்ல. எங்க வீட்டுல லவ்வுக்குப் பர்மிஷன் கிடையாது. அதெல்லாம் செய்ய மாட்டேன்னு கற்பூரம் ஏத்தாத குறையா பிராமிஸ் பண்ணிக் கொடுத்த பின்னாடி தான், நான் சென்னையில வேலை பார்க்கவே ஒத்துக்கிட்டாங்க. சோ, நோ லவ்.”

மௌனி சிரிக்க, “சரி, உன்னோட சித்தப்பா வீட்டுல வரவேற்பு எல்லாம் எப்படி.?”

காலை நடந்த நிகழ்வு நினைவிற்கு வர, “இட்ஸ் எ பிட் ஆஃப் ஷாக்.”

“என்ன படி? உன்னை வானு கூப்டுட்டாங்களா?”

“நோ. இது வேற விதமான ஷாக். நான் அப்புறம் சொல்லுறேன்.”

“ஓகே. ஆச்சி எப்படி இருக்காங்க?”

“ஃபைன்னு நினைக்கிறேன். தூங்குறாங்க, டிஸ்டப் பண்ண விரும்பல. சோ, தள்ளி வந்து பேசுறேன்.”

“ம்ம். டேக் கேர் படி.”

“சரி..” என்றவள் பேச்சை முடித்துவிட்டு வர, கூடத்தில் சலசலப்பு.

செவியில் கேட்ட குரலை வைத்து லாவண்யாவும்,  அவளின் தங்கை பிரீத்தியும் எழுந்து விட்டனர் என அறிந்தாள்.

மூத்தவளிற்கு நிச்சயம் செய்திருந்த மாப்பிள்ளை வந்ததும், அவன் பேசி சென்றதும் விவாதமாய் மாறிக் கொண்டிருந்தது.

“நேத்து நகைக் கடைக்கு, சரணோட ஃபேமிலிக் கூடதான் போயிட்டு வந்தேன். அவரோட தம்பி தான, வீட்டுல வந்து என்னை டிராப் பண்ணாரு. அதுக்குள்ள என்னவாம்? திடீர்னு எதுக்கு கல்யாணத்தை நிறுத்தச் சொல்லுறாரு.?” என லாவண்யா கேட்க, “அதுதான் எங்களுக்கும் தெரியல!” என்று ஒருசேர உரைத்தனர் சேகரனும் அர்ச்சனாவும்.

“விஷயம் என்னனே சொல்லாம, என்னை வேணாம்னு சொன்னா என்ன அர்த்தம்?”

அவளின் பெற்றோர் அமைதியாய் இருக்க, “அப்பா, உங்களைத்தான் கேட்கிறேன்!” என்றாள் அவள்.

“தெரியாமத்தான நானும் உட்கார்ந்து இருக்கேன்? தெரிஞ்சா, அதை சரி செஞ்சிருக்க மாட்டேனா.? சம்பந்திக்கிட்ட கேட்டேன், அவங்கக்கிட்ட இருந்து இன்னும் பதில் வரல.”

“பதில் வரலனா விட்டுடுவீங்களா? திரும்ப கால் பண்ணி என்னனு கேளுங்க, நான் சரண்கிட்ட பேசுறேன்!” எனக் கைப்பேசியில் இருந்து அழைப்பு விடுத்தாள்.

ஆனால் எதிர்பக்கம் இருந்து பதில் வருவதாய் இல்லை. சேகரனின் முயற்சிக்கும் பிரதிபலிப்பு இல்லாமல் போனது.

குடும்பத்தார் குழப்பத்தில் இருக்க, பத்து நிமிடங்களின் இடைவெளியில் பாகீரதியிடம் இருந்து அழைப்பு வந்தது.

தொடர்பை இணைத்த குடும்பத் தலைவர், “சம்பந்தி அம்மா.?”

“மன்னிச்சுக்கோங்க அண்ணே. நான் சரண்கிட்டப் பேசிப் பார்த்துட்டேன், ஆனா அவன் வேணாம்னு பிடிவாதமா இருக்கான்.”

“தலையும் இல்லாம வாலும் இல்லாம இப்படி மொட்டையா சொன்னா என்ன அர்த்தம்? இதுதான் பொண்ணு வீட்டுக்காரங்களுக்கு நீங்க தர்ற மரியாதையா? படிப்பு வசதினு எல்லாம் இருந்தும் முப்பத்திரண்டு வயசு வரைக்கும் ஏன் உங்க மகனுக்குக் கல்யாணம் ஆகலனு நினைச்சிட்டு இருந்தேன்? ஆனா, இப்பத்தான தெரியிது குணம் இல்ல. வார்த்தை சுத்தம் இல்லனு..” என்று அர்ச்சனா வார்த்தைகளை விட, மறுபுறம் தொடர்பு துண்டிக்கப்பட்டு இருந்தது.

 

Click on a star to rate it!

Rating 4.8 / 5. Vote count: 6

No votes so far! Be the first to rate this post.

இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
3
+1
5
+1
0
+1
0

உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள்