
தழல் 12:
காலை ஆறுமணியில் இருந்தே சமையலறையில் பரபரப்பாய் வேலையில் இருந்தவளை புருவம் நெரிபட கேள்வியாய் பார்த்தார் திலகம். கனியின் மாமியார்.
“என்ன கனிம்மா… மணி எட்டாக போகுது… இன்னிக்கு உங்க வீட்டுக்கு போகலையாம்மா..? நேத்து உங்க அக்காவ பொண்ணு பாக்க வரதா அறிவு சொல்லி இருந்தான்… எல்லாம் கூடி வந்துடுச்சாம்மா… நேத்து நீங்க ரொம்ப நேரம் கழிச்சு வந்ததால என்ன ஏதுனு விசாரிச்சுக்க கூட முடியல…” என்றார் கனிவான குரலில்.
அவரின் முதல் கேள்வியை ஒதுக்கி, “வந்து பாத்துட்டு போய் இருக்காங்கத்தை… இன்னும் என்ன ஏதுனு முடிவு பண்ணல…” என்றபடியே கார குழம்புக்கு சின்ன வெங்காயத்தை வதக்கிக் கொண்டிருந்தாள் கனி.
“என்னம்மோ போம்மா… வரிசையா சம்பந்தம் வந்துட்டே தான் இருக்கு… ஆனா ஒன்னுக்கூட உங்க அக்கா பிடி குடுக்கற மாதிரி தெரியலையே… அவ இருப்பு என்னனு அவளுக்கே தெரிஞ்சு இருக்கும் போது நாம சொல்ல என்ன இருக்கு… என்ன இருந்தாலும் புருஷன் புள்ளைங்கனு வாழ ஒரு குடுப்பினை வேணும் இல்ல…” அங்கலாய்பாய் வருத்தம் தோய்ந்த குரலில் அவர் சொல்லிக் கொண்டேப் போக, மலுக்கென்று கண்களில் நீர் நிறைந்து விட்டது கனிக்கு. நிச்சயம் அதே வார்த்தைகளை வேறு யாராவது பேசி இருந்தால் நடப்பதே வேறாய் இருந்திருக்கும். ஆனால் சொன்னது, அவள் இந்த வீட்டிற்கு வந்த நாள் முதலாய் வார்த்தைகளில் கூட கடிந்துக் கொள்ளாத மாமியாராய் இருக்கும் போது அமைதியாய் தான் போக வேண்டியது இருந்தது.
“ம்மா… என்ன பேசறீங்க நீங்க… அவங்கள பத்தி இப்படி எல்லாம் பேசாதீங்கனு எத்தனை தடவ சொல்லறது…” அதை கேட்ட மாத்திரத்தில் அறிவு கடிந்துக் கொள்ள, கனிக்குள் ஒரு ஆசுவாசம்.
“சொல்லணும்னு இல்லப்பா… ஏதோ மனசு கேக்காம சொல்லிட்டேன்… இந்த சம்பந்தமாவது தகைஞ்சுடுமா..? பொண்ண புடிச்சு கேக்கறாங்கனு வேற சொல்லிட்டு போனீயே…” அவரின் அறிந்துக் கொள்ளும் ஆர்வம் அதிக படியாகவே தெரிந்தது.
“தெரியலம்மா… கனி சொன்னது தான்… அவங்க வந்து பாத்துட்டு போயிருக்காங்க… மத்தது இனிமே தான் முடிவு பண்ணனும்…” என்றவன் பார்வை முழுவதும் கனியிடம் தான்.
“ஓஓஓ…” என்றவர் யோசனையாய் நின்றுவிட்டார்.
“குழம்ப தாளிச்சுட்டேன்… கொஞ்சம் பாத்துக்குங்கத்தை… நான் போய் குளிச்சுட்டு வந்துடறேன்…” என்றவள் அவர் பதில் சொல்லும் முன்னமே, அறிவிடம் இருந்த துண்டை வாங்கிக் கொண்டு குளியலறைக்குள் புகுந்திருந்தாள்.
குளித்து முடித்து வேகமாய் கிளம்பி வந்தவள், மகனுக்கும் கணவனுக்கும் காலை உணவைப் பறிமாறியபடியே, “நீங்களும் சூடா சாப்பிடுங்களேன் அத்தை…” என திலகத்தை அழைத்தாள்.
“இருக்கட்டும் கனிம்மா… மாமா வந்ததும் அவரோட சாப்பிட்டுக்கறேன்… ஹாட் பாக்ஸ்லையே வச்சுடு…”
“சரிங்கத்தை… மதியத்துக்கு கார குழம்பும் கீரை கடைசலும் முட்டையும் வச்சுட்டேன்… நீங்க சூடா சாதம் மட்டும் வச்சுக்கறீங்களா…” என்றபடியே தனக்கானதை தட்டில் வைத்துக் கொண்டு சாப்பிட அமர்ந்தவளை விநோதமாய் பார்த்தார் அவர்.
“இத நீ சொல்லணுமா கனிம்மா… நானே பாத்துக்க மாட்டேனா…” என்றவரின் வார்த்தைகளில் இதம் இருந்தது.
உண்டு முடித்து தனக்கும் அறிவுக்கும் உணவை டப்பாக்களில் அடைத்து எடுத்துக் கொண்டவள், திலகத்தை பார்த்து ஒரு நொடி தயங்கி நின்றாள்.
“மாமா வரட்டும்னு வெயிட் ரொம்ப நேரம் பண்ணிட்டு இருக்காதீங்க… சரியான நேரத்துக்கு சாப்பிட்டு சுகர் மாத்திரையும் பி.பி மாத்திரையும் போடுங்க…” என்றபடியே அவருக்கான மாத்திரைகளை எடுத்து உணவுக்கு அருகே மேசை மீது வைத்தவள், “இன்னும் கொஞ்ச நாள் அமுதன அங்க விட முடியாத்தை… நீங்க பாத்துப்பீக்க தானே… எதுவும் சிரமம் இல்லையே…” என்றாள் தயக்கமாய்.
“தங்கமா விட்டுட்டு போம்மா… என் பேரன பாத்துக்கறத தவிர எனக்கென்ன வேலை இருக்காம்… இந்த உடம்பு போட்டு பாடாப் படுத்து… இல்லைனா என் பேரன அங்க கொண்டு உன்ன விட விட்டுடுவேனா…” என்றபடியே அவர் அமுதனை தூக்கிக் கொண்டார் அவர்.
“சரித்தை… நான் வரேன்…” என்றபடியே கிளம்பியவளிடம், “அங்க எதுவும் பிரச்சனை இல்லையே கனிம்மா… கேக்க கூடாதுனு தான் நினைச்சேன்… இருந்தாலும்… உன் முகமே என்னமோ போல இருக்கு… புள்ளைய வேற இங்க விட்டுட்டு போற… அதான் கேக்காம இருக்க முடியல…” என்றார் தயக்கமாய் திலகம்.
“அதெல்லாம் ஒன்னுமில்லத்தை… ஆராவுக்கு லேப்ல கொஞ்சம் வேலை அதிகமாம்… காலையில சீக்கிரமே போய்டறா… அம்மா ஒருத்தவங்களால எல்லா வேலையும் தனியா பண்ணிட்டு அமுதனையும் பாக்க முடியாதுல… அதான் கொஞ்ச நாள் நம்ம வீட்டுல உங்க கூட இருக்கட்டுமுனு கூட்டிட்டு போகல அத்தை.. ” இரவு முழுவதும் யோசித்து ஒத்திகை பார்த்து வைத்திருந்த பதிலை சரளமாய் ஒப்பித்தபடி கிளம்பிவிட்டாள் அவள். அவளைத் தொடர்ந்து அறிவும் சொல்லிக் கொண்டு கிளம்பி இருந்தான்.
❀❀❀❀❀
அடுத்த பத்து நாட்களும் மின்னலென கடந்திருந்தது. அன்று அப்பொழுது தான் வகுப்பை முடித்துக் கொண்டு தனது அலுவலக அறையில் நுழைந்தாள் ஆரா. வழக்கம் போல அவளுக்காய் அன்றும் ஒரு பரிசுப் பொருள் மேசையில் காத்திருந்தது. அதைப் பிரிக்காமலேயே எடுத்து பத்திரப்படுத்தி வைத்தவள் மனதில் அதைப் பற்றிய தாக்கம் பெரிதாய் இல்லை. ஒருவகையில் இது அவள் எதிர்பார்த்ததும் கூட.
அன்றைக்கு பிறகு எல்லா வகையிலும் இந்த பரிசுப் பொருட்களை வைப்பவரை கண்டுபிடிக்க முயன்றுவிட்டாள். ஆளைப் பிடிக்கமுடிவில்லை. சி.சி.டி.வியில் பார்க்கலாம் என்றால் அதுவும் பழுதடைந்திருந்தது. மீண்டும் சரிசெய்து, அந்த நபரைக் கண்டுபிடிக்க முயல, பரிதாபமான படுதோல்வி. தொடர்ந்து அடுத்த இருமுறைகள் பழதாகி ஒருகட்டத்தில் காணமலேயே போயிருந்தது அது. வாசலில் காவலுக்கு இருக்குப்பவர்களும் கண்ணில் விளக்கெண்ணெய் ஊற்றிதான் பார்க்கிறார்கள். ஆனாலும் கண்டுபிடிக்க முடிவில்லை. கருப்பாடு ஒன்று உள்ளேயே ஒழிந்திருந்திருக்கும் போது வெளியில் வலை வீசி என்ன பயன். ஆனால், எல்லாவற்றுக்கும் ஒரு முடிவு என்ற ஒன்று உண்டே! இந்த கண்ணாமூச்சி ஆட்டத்தின் முடிவை நோக்கி வெகு ஆவலுடன் காத்திருந்தாள் அவள்.
அதை எடுத்து வைத்துவிட்டு அடுத்த வேலையைப் பார்க்க முயன்றவளின் கவனம் அதில் பதியவில்லை. வகுப்பில் கூட முழுதாய் கவனம் செலுத்த முடியவில்லை. அவள் மனமெங்கும் நிறைந்திருந்தவள் கனி.. கனி.. கனி மட்டும் தான். இத்தோடு அவள் வீட்டிற்கு வந்து பத்து நாட்கள் ஆகிறது. பர்வதமும் எத்தனையோ சமாதானங்கள் செய்துப் பார்த்துவிட்டார். ம்ம்கூம்… ஒன்றும் வேலைக்கு ஆகவில்லை. இவளுக்கு எப்படியோ? சின்ன மகளையும் பேரனையும் பார்க்காது வெகுவாய் சோர்ந்துப் போய்விட்டார் பர்வதம். இவளிடம் காட்டிக் கொள்ளவில்லை என்றாலும் தாயின் வருத்தத்தை கூட இவளால் நாடிப் பிடிக்க முடியாது. இதோ இன்று வந்து விடுவாள்… நாளை வந்து விடுவாள் என்ற நம்பிக்கை நாளுக்கு நாள் தேய்ந்துக் கொண்டே வருகிறது. ஒருவேளை இவளைப் போய் அழைக்காத வரை வராமலேயே இருந்து விடுவாளோ என்று பயமாக கூட இருக்கிறது. அப்படி தானேன்றால் இலகுவாய் அவளின் வீடு தேடிப் போய் இவளால் அழைத்துவிட முடியும் என்றும் தோன்றவில்லை. அதை நினைத்தாலே மூச்சு முட்டியது இவளுக்கு.
மேசை மீதிருந்த அலைப்பேசி ஒலிக்க, அனிச்சை செயலாய் அதை எடுத்து காதில் ஒற்றினாள்.
“குட் ஆப்டர் நூன் மேம்… உங்கள பாக்க வெற்றினு ஒருத்தர் ரொம்ப நேரமா வெயிட் பண்ணிட்டு இருக்காரு… அனுப்பட்டுமா மேடம்…” என்றாள் எதிர்முனையில் வரவேற்பறை பெண்.
“என்ன விசயமா பாக்கணுமான்..? பசங்க யாருக்காவது அட்மிஷன் போடணுமா..? இல்ல… யாரையாவது கவுண்ஸ்லிங் வர சொல்லி மறந்துட்டேனா… இல்ல வேற எதுவுமா..?” அவள் யோசனையோடு கேட்டுக் கொண்டே செல்ல, எதிர்பக்கம் இருந்தவளுக்கு மெல்லிய அதிர்ச்சி. இத்தனை நீளமாய் ஆரா பேசியதே இல்லை. ஒன்று ‘வா சொல்…’ என்பது பதிலாய் இருக்கும்; இல்லையா, ‘என்ன விசயம்..?’ என இரண்டே வார்த்தையில் கேள்வியாய் இருக்கும். இத்தனை நீண்ட பேச்சே அந்த பெண் வரை ஆராவின் மனநிலையை கடத்தி இருந்தது.
“உங்களுக்கு தெரிஞ்சவருனு சொன்னாரு மேம்… ரொம்ப பர்ஸ்னால பேசணும்னும் சொன்னாரு மேம்…” என்றாள் அப்பெண்.
“பர்ஸ்னல் பேச இதுவா இடம்… இப்ப பாக்க முடியாதுனு சொல்லி அனுப்பிடுங்க…” என்றவள் எதிரிலிருந்தவள் பேச இடமளிக்காது வைத்துவிட்டாள்.
அடுத்த ஐந்தாவது நிமிடம் புது எண்ணிலிருந்து அவளின் கைப்பேசிக்கு அழைப்பு வந்தது. யோசனையாய் அதை எடுத்துக் காதுக்கு கொடுத்தாள் அவள்.
“ஹலோ…”
“நான் வெற்றி பேசறேன் ஆரா…”
“எந்த வெற்றி..?” என்றவளுக்கு சுத்தமாய் அதுவரைக்குமே வெற்றி என்பவன் உண்மைக்குமே நினைவுக்கு வரவில்லை. மற்ற விசயங்கள் அவளின் மூளையை ஆக்கிரமித்து இருக்க அவனின் நினைவு பின்னுக்கு சென்றிருந்தது. அத்தோடு இந்த பத்து நாட்களில் அவனைப் பார்க்கவோ பேசவோ வேண்டிய சூழ்நிலை அமையாதுப் போக அப்படி ஒருவனையே மறைந்திருந்தாள் அவள்.
“வெற்றிச் செல்வன்… லைப்ரரீயன்… உன்ன பொண்ணு பாக்க வந்திருந்தேனே அந்த வெற்றி… இப்ப நியாபகம் வருதா..?” எதிர்பக்கம் கோபத்தில் அவன் வார்த்தைகளை கடித்து துப்பவது தெளிவாகவே புரிந்தது.
“ஓஓஓஓ… நீங்களா..? மறந்துட்டேன்… என்ன விசயம் சொல்லுங்க..?” என்றாள் அப்பொழுதும் சிறு அதிர்ச்சியும் காட்டாது.
“ஆரா… ஆரா…” என்றபடியே பின்னந்தலையில் முடிகளுக்கு இடையே விரல்களை நுழைத்து இறுக்கமாய் பற்றிக் கொண்டவன், “நான் உன்ன பாக்க வெளிய வெயிட் பண்ணிட்டு இருக்கேன்…” என்றவனின் குரலில் கோபம் ஏறிக் கொண்டிருந்தது.
“நான்தான் உங்கள கிளம்ப சொன்னதா நியாபகம்… நீங்க கிளம்பாம வெயிட் பண்ணா நான் என்ன பண்ணறது…”
“ஆரா என்னை டென்ஷன் பண்ணற நீ..?” சின்ன குரலில் வார்த்தைகளை கடித்து துப்பினான் அவன்.
“நான் இன்னும் உங்களுக்கு மரியாதை குடுத்து பேசிட்டு இருக்கதா தான் நியாபகம்… அதே மரியாதைய நானும் எதிர்பாக்கறதுல தப்பில்லைனு நினைக்கறேன்…” என்றவள் சிறு இடைவெளிவிட்டு, “தேவையில்லாம வேலை நேரத்துல என்ன டிஸ்டர்ப் பண்ணாதீங்க… போனை வைங்க…” என்றாள் சிடுசிடுவென்று.
“ப்ளீஸ்… ஆரா… வச்சுடாதீங்க ப்ளீஸ்… ஒரு ஐஞ்சு நிமிஷம்… கடைசி ஐஞ்சு நிமிஷம் மட்டும் எனக்கு குடுங்க… அதுக்கு அப்பறம் உங்கள டிஸ்டர்ப் பண்ணவே மாட்டேன்… ப்ளீஸ் ஆரா… ப்ளீஸ்… பத்து நாளா நீங்க லைப்ரரியும் வரல… வெளிய எங்கையும் சந்திச்சும் பேச முடியல… இப்பவும் பாக்க முடியாதுனு மட்டும் சொல்லீடாதீங்க… ப்ளீஸ் ஆரா…” அவனின் கெஞ்சல் குரலில் இரக்கம் சுரப்பதற்கு பதிலாய் கோபம் தான் கூடிக் கொண்டேப் போனது இவளுக்கு. அதே நேரம் நிச்சயமாய் இவளைப் பார்க்காது கிளம்ப மாட்டான் என்றும் புரிந்தது.
வரவேற்பரைக்கு அழைத்து வெற்றியை அனுப்பும்படி சொன்னவள், இரண்டு தேனீருக்கும் சொல்லி வைத்துவிட்டாள்.
கதவை தட்டுவிட்டு உள்ளே வந்து அமர்ந்தவனை எரிச்சல் மேலிடப் பார்த்துக் கொண்டிருந்தாள் அவள். அவன் பேசப் போகும் நொடிக்காக நேரத்தை நெட்டி தள்ளியபடி இவள் அமர்ந்திருக்க, அவனோ விரல்களை கோர்பதும் பிரிப்பதுமாய் மனதிற்குள்ளேயே பேச வேண்டிய விசயத்தை ஒத்திகைப் பார்த்துக் கொண்டிருந்தான்.
“என்ன விசயம்னு சீக்கரம் சொல்லுங்க…”
“அது வந்து ஆரா…” அவன் எச்சிலை கூட்டி விழுங்கி பேசமுயல, ப்யூன் அனுமதி வாங்கி தேனீரை வைத்துவிட்டு சென்றான்.
“முதல டீய குடிங்க…” என அவன் பக்கம் இருந்த குவளையைக் கண் காட்ட, அமைதியாய் அடுத்து பருக தொடங்கியவன் விரல்கள் குவளையை அத்தனை இறுக்கமாய் பற்றி இருந்தது.
“ரிலாக்ஸ் வெற்றி… என்ன பேசணும் உங்களுக்கு… இன்னும் பேச என்ன இருக்குனு சொன்னீங்கனா இன்னைக்கே பேசி முடிச்சுடலாம்…” என்றாள் அமைதியாய் அவனை ஆழ்ந்துப் பார்த்தபடி.
“எனக்கு வீட்டுல வேற பொண்ணு பாக்கறாங்க…”
“ஓஓஓ… நல்லா விசயம் தானே…” என்றவளை வெடுக்கென நிமிர்ந்துப் பார்த்தான் அவன்.
“என்னால உங்கள தவிர வேற யாரையும் அந்த இடத்துல நினைச்சு பாக்க முடியல ஆரா… ஐ காண்ட்… ப்ளீஸ்… உங்க முடிவ ரீ கன்சிடர் பண்ண முடியாதா..?” அத்தனை ஏக்கம் வழிந்தது அந்த குரலில்.
“முடியாது வெற்றி… என் முடிவ இத்தனை தெளிவா சொன்ன பிறகும் கூட என்ன இப்படி கட்டாய படுத்தறது தப்புனு உங்களுக்கு தோணலையா வெற்றி…” என்றாள் அவனின் ஒவ்வொரு அசைவையும் துளிதுளியாய் அளந்தபடியாய். அதற்கான சின்ன ஒரு குற்றவுணர்வாவது அவனிடம் தெரிகிறதா என்ற தேடல்.
தலையை குனிந்தபடி சிலநொடிகள் அமைதியாய் அமர்ந்திருந்தான் அவன். “என்ன பிடிக்கலங்கறதுக்கு ஏத்துக்கற மாதிரி ஒரே ஒரு காரணமாவது உங்களால சொல்ல முடியுமா ஆரா… காரணமே இல்லாம நிராகரிக்கப் படறதோட வலி உங்களுக்கு புரியவே இல்லையா ஆரா…” என்றவன் கண்களில் நிச்சயம் அதற்கான வலி இருந்தது.
அவள் அதற்கான பதில் சொல்லும் முன், “ஆரா… இன்னைக்கு அனும்மா வர மாட்டாங்களாம்… உன்னையே எல்லாத்தையும் மேனேஜ் பண்ணிக்க சொன்னாங்க…” என்றபடியே ஆர்பாட்டமாய் உள்ளேஎ நுழைந்தான் வேந்தன். புதியவன் ஒருவன் அமர்ந்திருந்தது கூட அவனை நிறுத்தி இருக்கவில்லை.
ராதா, நித்யா என எவரும் அனுமதி கேளாமல் அவளின் அறைக்குள் நுழைந்ததில்லை. ஆனால் அவளின் எந்த விதியும் அவனை கட்டுபடுத்த முடியவில்லை. ஒருமுறை நேரடியாகவே சொல்ல முயன்று, “நான் யார் தெரியுமா..? எங்க சித்தி யார் தெரியுமா..? எங்க அம்மா யார் தெரியுமா… எங்க கொள்ளு தாத்தா யார் தெரியுமா..?” என அவன் கொதித்தெழுந்து பக்கம் பக்கமாய் பேசிய வசனத்தில் இதுப் போன்றவற்றை எல்லாம் அவனோடு பேசுவதையே அடியோடு தவிர்த்திருந்தாள் ஆரா.
வெற்றியின் அருகில் இருந்த நாற்காலியை எடுத்து அவளின் பக்கத்தில் போட்டு அமர்ந்தபடியே, இயல்பாய் அவளின் பக்கமிருந்த தேனீரை எடுத்து பருக தொடங்கி இருந்தான். இது அவனின் அன்றாட செயல் என்பதால் ஆராவும் பெரிதாய் கண்டுக் கொள்ளவில்லை. இந்த பத்து நாட்களும் அவர்களை அறியாமலேயே அவர்களுக்குள் ஒரு நெருக்கத்தை கொண்டு வந்திருந்தது.
அவனின் ஒவ்வொரு செய்கையும் எரிச்சல் மண்டப் பார்த்துக் கொண்டிருந்தான் வெற்றி. அவனின் சட்டை காலரை பற்றி இழுத்து நெறுக்கி தள்ளிவிடும் கோபத்தை உள்ளுக்குள் அடக்கியபடி அமர்ந்திருந்தவன் கண்களில் சிவப்பேற துவங்கி இருந்தது.
“சார் யார் ஆரா… சொல்லவே இல்ல..?” என்றான் வேந்தன் வெற்றியைப் பார்த்தபடி.
“நான் வெற்றிச் செல்வன்… ஆராவோட பியான்சி…” என்றபடியே மரியாதை நிமிர்த்தம் எழுந்து நின்று அவனின் புறம் வலக்கரத்தை நீட்டினான் வெற்றி.
ஒரு சில நொடிகள் அவனை வெறித்துப் பார்த்தவன் கையிலிருந்த தேனீர் குவளையை கீழே வைத்துவிட்டு, எழுந்து நின்றவன், அமர்ந்திருந்த ஆராவனின் தோள்களை சுற்றி கையைப் போட்டு தன்னோடு சேர்த்து அணைத்தபடி, “நான் முத்தமிழ் வேந்தன்… ஆராவோட லவ்வர்…” என்றானேப் பார்க்கலாம். நிமிர்ந்து அவனைப் பார்த்தவளின் கருவிழிகள் இரண்டும் அதிர்ச்சியில் விரிந்திருந்தது. அவனும் அதே நேரம் ஒரு இளமுறுவலோடு அவளைத் தான் பார்த்திருந்தான்.
– பற்றி எரியும்…

