
என்னுள் நீ காதலாய்💞
அத்தியாயம் 42
டாக்டர் மேலும் சில அறிவுரைகளை செந்தமிழுக்குச் சொல்லி சிகிச்சையை முடித்ததும், அவருடைய இருக்கைக்குச் சென்றார். புனிதா செந்தமிழ் பேசியதெல்லாம் கேட்டு சத்தமில்லாமல் அழுதார். எல்லா பெண்களும் தங்களுடைய வாழ்க்கையில் நிச்சயம் இந்த மாதிரி காயங்களை கடந்து வந்திருப்பார்கள் தான்.
அப்போது அவர்களுக்கு தாயோ, அவர்களது குடும்பமோ ஆதரவாக இருந்திருக்கும். சில நேரங்களில் காதலனின், கணவனின் அன்பும் காதலும் கூட அவர்கள் அதை மறந்து போக காரணமாக இருந்திருப்பார்கள். அப்படி வாய்ப்பு கிடைக்காமல் போனது செந்தமிழ் வாங்கி வந்த வரம்.
தன் மகளுக்கு நேர்ந்ததை அந்த தாயின் மனதால் தாங்கிக் கொள்ள இயலவில்லை. ‘அவளைப் புரிந்து கொள்ளாமல் நானும் அவளிடம் கோபப்பட்டு, விலகி இருந்து காயப்படுத்தி விட்டேனே’ என நினைத்து குற்ற உணர்ச்சியில் அழுது கொண்டிருந்தார்.
டாக்டர் புனிதாவை அழைக்க கண்களை துடைத்துக் கொண்டவர், அவருக்கு அருகில் சென்று அமர, இளமாறன் அப்போதுதான் அனுமதி கேட்டு உள்ளே வந்தான். “கொஞ்ச நேரம் கழிச்சு அவங்க முழிச்சதும் பெட்டுக்கு கூப்பிட்டு போங்க. இப்போ மனசுல இருக்கிறதை சொன்னதால அவங்களுக்கு மன அழுத்தம் கொஞ்சம் குறைஞ்சிருக்கும். அடுத்தடுத்த கவுன்சிலிங்ல இன்னும் கொஞ்சம் பெட்டர் ஆகிடுவாங்க.
“முடிஞ்ச அளவுக்கு அவங்க கிட்ட சந்தோஷமா பேசுங்க, சந்தோஷமான சூழ்நிலைல அவங்களை வச்சிருங்க. நாளைக்கு வந்து ஃபுல் ரிப்போர்ட் வாங்கிக்கோங்க” என்று டாக்டர் சொல்லிட, இளமாறனும் புனிதாவும் வெளியே சென்றார்கள்.
“புனிதாம்மா.. டாக்டர் அவளை பத்தி வேற என்ன சொன்னாங்க, பயப்படுற மாதிரி அவளுக்கு வேற ஒண்ணும் பிரச்சனை இல்லையே. அவ நான் முதல்ல பேசுனதை எல்லாம் நினைச்சு பயப்படுறாளா?” அவள் இப்படி இருக்க தானும் ஒரு காரணமோ என்ற குற்ற உணர்வில் இளமாறன் கேட்டிட, புனிதா பதிலேதும் பேசாமல் அவன் முகத்தையே பார்த்தார்.
“இளமாறா.. அம்மா சந்தோஷத்துக்காக நீ ஏதாவது பண்ணனும்னு நினைச்சா எப்பவும் செந்தமிழை சந்தோஷமா வச்சுக்கோ. அவளை எதுவும் பேசி காயப்படுத்திடாத. அவளை இந்த வீட்டை விட்டு போக விட்றாத. நான் உன்கிட்ட என் வாழ்க்கை முழுக்க வேற எதுவும் கேட்கமாட்டேன். எனக்கு இது மட்டும் பண்ணு டா” என்றவர், அதற்கு மேல் ஒன்றும் பேசாமல் செந்தமிழை பார்க்கச் சென்றார். இளமாறனோ அப்படியே திகைத்துப் போய் நின்றான்.
இளமாறனிடம் செந்தமிழுக்கு இதுதான் பிரச்சனை என்று அவரால் சொல்ல முடியவில்லை. ‘செந்தமிழ் நினைத்ததை போல அவன் இதை தவறாக புரிந்து கொண்டால் என்ன செய்வது?’ என்ற யோசனை ஒருபக்கம். இன்னொரு பக்கம் அவருக்கும் அதைக் கேட்டதில் இருந்து வெளியே சொல்லத் தெரியாத அதீத மன அழுத்தம்.
இதுநாள் வரை செந்தமிழிடம் அன்பு காட்டியது, அவளுக்கு தேவையான எல்லாம் செய்தது, அவளுக்கு உடல்நிலை சரியில்லாத போது வேண்டுதல் வைத்தது, இப்படி எல்லாவற்றிலும் தன்னுடைய மகனுக்காக மகனுடைய குழந்தைகளுக்காக என்று அவருக்கு கொஞ்சம் சுயநலமும் இருக்க தான் செய்தது.
ஆனால் இப்போது அவளைப் பற்றி முழுமையாகத் தெரிந்து கொண்டவர், அவளை முழு மனதாக தன்னுடைய மகளாகவே நினைத்து, தன்னுடைய மகளுக்காக இளமாறனிடம் இதைக் கேட்டார்.
செந்தமிழ் விழித்ததும் அவளை கைத்தாங்கலாக அவளுடைய அறைக்கு அழைத்துச் சென்றார் புனிதா. இளமாறன் மருந்துகள் வாங்கி வந்து தர, “நான் வீட்டுக்கு போய் சமைச்சு சாப்பாடு கொண்டு வரேன். நீ அவ பக்கத்துல இரு” என்றுவிட்டு சென்றார்.
அவர் சென்றதும் அவளுக்கு அருகில் அமர்ந்தவன், “தமிழ் எழுந்து என்னை பாரு டி” என்று அவள் கன்னத்தை தட்டி எழுப்பிட, நன்றாக கண் விழித்துப் பார்த்தாள். “என்ன டி பண்ணுது? ஏன் இப்படி இருக்க? என்கிட்ட சொல்ல மாட்டியா?” அவளை அணைத்துக் கொண்டே கேட்டான்.
பதிலேதும் பேசாமல் நிமிர்ந்து அவன் முகத்தையே பார்த்தவள், “நான் செத்து போயிட்டா நீங்க எனக்காக அழுவீங்களா?” என்று கேட்க, இளமாறனின் உடலோடு உள்ளமும் அதிர்ந்திட அவளை பார்த்தான். சட்டென அவன் கண்கள் நீரில் நனைய, தன் காதலை அவளுக்கு உணர்த்திட வார்த்தைகளின்றி தவித்தான்.
“தமிழ் நீ செத்துட்டா நானும் உயிரோடவே இருக்க மாட்டேன்” என்று சொன்னவனை லேசான புன்முறுவலுடன் பார்த்தாள். “நீ என்னை நம்பும் போது நான் அந்த நம்பிக்கையை காப்பாத்தல. இப்போ நான் வார்த்தையால என் காதலை உனக்கு சொல்ல முடியல. ஆனா வாழ்ந்து காட்டணும்னு நினைக்கிறேன். நான் உன்னோட காதலை முழுசா உணர்ந்துட்டேன். நீயும் என் மனசுல இருக்கிற காதலை நிச்சயமா உணருவ.
ஃபீல் பண்ணாத தமிழ். உனக்காக நான் எப்பவும் இருப்பேன்” அவள் தலையை வருடியவாறு அவன் சொல்ல, அவன் மார்பிலேயே சாய்ந்து தூங்கிப் போனாள்.
புனிதா சாப்பாடு கொண்டு வந்ததும் செந்தமிழை எழுப்பி சாப்பாடும் மருந்துகளும் கொடுத்தபின் இளமாறன் சாப்பிட்டான்.
“புனிதாம்மா.. இந்த தடவை உங்க மருமக உடம்பு சரியாகனும்னு என்ன வேண்டுதல் வச்சிருக்கீங்க? தீச்சட்டி தூக்க போறீங்களா? இல்ல பூக்குழி இறங்க போறீங்களா?” அவன் கிண்டலாக கேட்க,
“இல்ல இளமாறா.. உனக்கு மொட்டை போட்டு அலகு குத்தி விடுறதா வேண்டிக்கிட்டேன்” சிரித்துக் கொண்டே சொன்னார் புனிதா.
“அய்யோ அம்மா.. அலகு குத்தணுமா? மொட்டை போடணுமா? என் கிட்ட அழகா இருக்கிறதே என் தலைமுடி தான். அதையும் எடுத்துட்டா என்னை பார்க்க சகிக்காது ம்மா. அப்புறம் அங்கங்க பார்க்கிற ரெண்டு பொண்ணுங்க கூட என்னை சைட் அடிக்க மாட்டாங்க” அவன் சீரியஸாக முகத்தை வைத்து பதில் சொல்லிக் கொண்டிருக்க, புனிதா சத்தமாக சிரித்து விட்டார். செந்தமிழோ குலுங்கி குலுங்கி சிரித்திருந்தாள்.
இளமாறன் அவள் சிரிப்பை ரசித்துக் கொண்டிருக்க, அவளோ நீண்ட நேரம் சிரித்தபின் அமைதியானாள். “என்னாச்சு தமிழ்? எதுக்கு சிரிச்ச?” என்று அவன் கேட்க, “உங்களுக்கு மொட்டை போட்டா எப்படி இருக்கும்னு கற்பனை பண்ணி பார்த்தேன். சிரிப்பு வந்திடுச்சு” என்றாள்.
“எல்லாம் உன் புனிதாம்மா குடுக்கிற செல்லம். ரெண்டு பேரும் சேர்ந்து என்னை கிண்டல் பண்றீங்களா?” அவளுக்கு வலிக்காதவாறு அவள் காதைத் திருகினான்.
இரண்டு நாட்கள் ஹாஸ்பிடலில் சிகிச்சை எடுத்தபின் செந்தமிழ் வீடு திரும்பினாள். இன்னும் அவளுக்கு உடல் சோர்வும் மன சோர்வும் இருக்க, வேலைக்குச் செல்லாமல் வீட்டிலே இருந்தாள். இளமாறன் வீட்டில் இருந்தே ஆபீஸ் வேலைகளை பார்த்துக் கொண்டான்.
இரவு மெத்தையில் செந்தமிழ் தூக்கத்தில் இருக்க, அவளுக்கு அருகில் அமர்ந்து லேப் டாப்பில் வேலை செய்து கொண்டிருந்தவன், வேலை முடிந்ததும் அதை எடுத்து அங்கே டேபிளில் வைக்க, அப்போது டேபிளின் மீதிருந்த சைக்கியாட்ரிஸ்ட் டாக்டர் குடுத்த ரிப்போர்ட் கவரை பார்த்தான்.
மகப்பேறு மருத்துவரிடம் ரிப்போர்ட்டை காட்டியவன், அதன் பிறகு அதை கவனிக்கவில்லை. “அப்படி என்ன ரிப்போர்ட் குடுத்திருப்பாங்க?” யோசனையோடு அதை எடுத்து படிக்க ஆரம்பித்தான். செந்தமிழ் டாக்டரிடம் சொன்ன மொத்தத்தையும் ஆங்கிலத்தில் டைப் செய்து ரிப்போர்ட்டாக தந்திருந்தார்கள். அவள் இளமாறன் பற்றி சொன்னதும் கூட அதில் இருந்தது.
பொறுமையாக எல்லாவற்றையும் படித்தவன், கைகள் மட்டுமல்ல உடலும் சேர்ந்து நடுங்கிட, கையில் இருந்த பேப்பர்களை தவற விட்டு அப்படியே உறைந்து போயிருந்தான். யாரோ இதயத்தை அழுத்துவது போல் இருக்க நெஞ்சை பிடித்துக் கொண்டான். உடல் முழுதும் வேர்த்திருக்க மூச்சுக்குத் திணறினான்.
அப்படியே இழுத்து மூச்சு விட்டு தன்னை ஆசுவாசப் படுத்த முயன்றான். அன்று அவள் சூடு பட்டது தெரிந்து மனம் தாங்காமல் அழுதவன், இன்று அவள் அனுபவித்த ஒட்டுமொத்த வலியையும் அவன் உணர, அவனுக்கு உயிர் வரை வலித்தது.
அவர்கள் அவள் உடலை தெரிந்தே காயப்படுத்தினார்கள் என்றால் இளமாறன் தெரிந்தே அவள் மனதை காயப்படுத்தினான். அவன் அவளை பேசிய ஒவ்வொரு வார்த்தைகளும் அவன் இதயத்தை குத்திக் கிழிக்க ஆரம்பித்தன. அவன் கண்களில் நீர் வடிந்து கொண்டிருக்க இதயத்திலோ ரத்தம் வடிந்து கொண்டிருந்தது. ரிப்போர்ட்டாக செந்தமிழ் பற்றி படித்ததற்கே இவ்வளவு கலங்கியவன், அவள் பேசும் போது கேட்டிருந்தால் என்ன ஆகியிருப்பான்?
மெதுவாக எழுந்து அவள் காலடியில் அமர்ந்தவன், அவள் பாதங்களில் முகம் புதைத்து அழுதான். “என்னை மன்னிச்சிடு தமிழ். என்னை மன்னிச்சிடு” செய்த தவறுகளை நினைத்து அவன் கதறிக் கொண்டிருக்க, அவள் விழித்துப் பார்த்தாள்.
“என்னாச்சு இளா?” அவள் காலை இழுக்க முயற்சிக்க, இழுக்க முடியவில்லை. அவள் பாதங்களில் அவன் முத்தங்கள் வைக்க, ‘என்ன திடீர்னு இப்படி வினோதமாக பண்றார்?’ யோசனையுடன் அவனை பார்த்தாள்.
“உங்களுக்கு திடீர்னு என்னாச்சு?” வாய் திறந்து கேட்டே விட்டாள். வேகமாக எழுந்து அவள் கன்னத்தைப் பற்றி இதழை முத்தமிட நெருங்கியவன், சட்டென்று விலகினான். ‘அவளுக்கு நான் தந்த முதல் முத்தம் எப்படி வலித்திருக்கும்?’ என்று யோசிக்கையில் அதை விட அதிகமாகவே வலித்தது அவனுக்கு.
செந்தமிழ் ஒன்றும் புரியாமல் அவனை கேள்வியாகப் பார்த்திருக்க, “லவ் யூ தமிழ்” என்றான். அவள் கண்களில் எந்தவிதமான சலனமுமின்றி இருக்க, அவன் இன்னும் மனம் நொந்து போனான். அவளைப் பெண் பார்க்க சென்ற போது கேட்காமலே காதலை அள்ளி தந்த கண்கள் இப்போது வலி தாங்கி நிற்பது அவனால் மட்டும் தான்.
‘கைகளில் கிடைத்த காதலை தொலைத்து விட்டேனோ?’ என்று பரிதவித்துப் போயிருந்தவனை செந்தமிழ் மெதுவாக அணைத்துக் கொண்டாள். “என்னாச்சு இளா? எதும் பிரச்சனையா?” அவன் கலங்கிய முகத்தைப் பார்த்து அவள் கேட்டிட, அவன் கண்ணீர் அவள் முதுகை நனைத்துக் கொண்டிருந்தது.
“நீ என்னை இன்னும் காதலிக்கிறியா தமிழ்?”
“ஆமா..”
“அப்போ ஏன் எனக்கு லவ் யூ சொல்ல மாட்டேங்கிற?” மனக்குழப்பத்தில் இருந்தவன் அவளிடம் ஏதேதோ கேட்க, செந்தமிழ் சிரித்தாள். அவள் ஒரே ஒரு தடவை அவனிடம் காதலை சொன்னாள். ஆனால் அன்று அவன் போதையில் இருந்தான்.
“லவ் யூ சொன்னா தான் காதலா? எத்தனை தடவை இதே கேள்வியை கேட்பீங்க? நான் உங்களை விரும்புறேன்னு உங்களுக்கே தெரியும். ஆனா முதல்ல லவ் பண்ண மாதிரியே இப்பவும் நான் உங்களை லவ் பண்றேனான்னு கேட்டா இல்லன்னு தான் சொல்லுவேன். முதன்முதல்ல உங்களை பார்த்தப்போ நேசிச்ச அளவு இப்போ உங்களை நேசிக்கல.
“உங்களை பிடிச்சதுக்கு என்ன காரணம்னு எனக்கு தெரியல. இப்போ விலகி இருக்க நினைக்கிறதுக்கும் என்ன காரணம்னு எனக்கு தெரியல. நானே உங்க காதலை உணர்ந்து, ஒருநாள் என்னோட காதலை உங்க கிட்ட சொல்லுவேன். ஆனா அது வரைக்கும் நாம ஒண்ணா இருப்போமான்னு தான் தெரியல” செந்தமிழ் தன் மனதில் இருப்பதைத் தெளிவாய் உரைத்திட்டாள்.

