
உயிர் – 12
அவனின் தோளில் தட்டிக் கொடுத்த ஆதவ், “ஓகே, இப்போதைக்கு இந்த விஷயத்தை பத்தி ருக்மணிக்கு எதுவும் தெரிய வேண்டாம். கல்யாணம் அப்போ தெரிஞ்சா போதும். அதுவரைக்கும் சஸ்பென்ஸாவே இருக்கட்டும்” என்றதும் அவனுக்கு சம்மதமாக தலையசைத்தான் அகிலன்.
“ஓகே, அவங்களுக்கு ஏதாவது சாப்பிட வாங்கிட்டு போகலாம். அப்புறம் இவ்வளவு நேரம் நம்ம தனியா என்ன பேசுனோம்னு நினைக்க போறாங்க” என்றவாறு இரண்டு சாண்ட்விச்களை வாங்கிக்கொண்டு அவர்கள் அமர்ந்திருக்கும் டேபிளை அடைந்தனர் அகில் கிருஷ்ணனும், ஆதவ் கிருஷ்ணனும்.
நடக்கும் விஷயத்தை எல்லாம் அகிலனால் சற்றும் நம்பவும் முடியவில்லை. நம்பாமல் இருக்கவும் முடியவில்லை.
உள்ளுக்குள் அத்தனை மகிழ்ச்சி. ஆனந்த கடலில் முக்குளித்துக் கொண்டிருந்தவனுக்கு, வெளியே அதை காண்பிக்காமல் இருக்க வேண்டும் என்பது தான் பெரும் அவஸ்தையாக இருந்தது.
அகிலனின் பார்வையில் தான் எத்தனை மாற்றங்கள்.
சற்று நேரத்திற்கு முன்பு வரை ருக்மணியை ஒரு பார்வை பார்க்க கூட தயங்கியவனோ, இப்பொழுது தாராளமாக முழு உரிமையோடு ஏதோ தனக்கு உரிமை பட்டவளை பார்ப்பதை போல் அத்தனை அழுத்தமாக அவளை பார்த்துக் கொண்டிருந்தான்.
தங்களுக்கு எதிரே வைக்கப்பட்டிருந்த சாண்ட்விச்களிலிருந்து ஒரு துண்டை எடுத்த அனு தன் வாய்க்குள் திணித்தவள், “ஐயோ மாம்ஸ், இதுல பன்னீர் போட்டு இருக்கே அக்காவுக்கு பன்னீர் பிடிக்காது” என்றாள் அகிலனிடம்.
“அதெல்லாம் எனக்கு தெரியும். அது உன் அக்காவுக்கு வாங்கின சாண்ட்விச் கிடையாது. ஆதவ் அண்ணாவுக்கு வாங்கினது” என்றதும் அவளுக்கு வாய்க்குள் திணித்த சாண்ட்விச் தொண்டை குழிக்குள் இறங்காமல் சிக்கிக்கொண்ட உணர்வு.
“அவசரப்பட்டு இந்த பயர் இன்ஜினுடைய சாண்ட்விச்ல கையை வச்சுட்டோமே.. கடிச்சு குதற போறான்” என்று ஜெர்க் ஆகியவள் அவனை சட்டென பார்க்கவும்.
அவனின் முகத்திலோ எந்த ஒரு உணர்வும் தென்படவில்லை.
“ரெண்டு சாண்ட்விச் தான் வாங்கி இருக்கோம். நீயும், ஆதவ் அண்ணாவும் அதை ஷேர் பண்ணிக்கோங்க. நானும், ருக்மணியும் இதை ஷேர் பண்ணிக்கிறோம்” என்றதும்.
இதுவும் ஆதவ்வின் வேலை தான் என்று எண்ணிய ருக்மணியோ ரகசிய புன்னகையோடு எதுவும் கூறாமல் அகிலனுடன் இணைந்து சாப்பிட துவங்கினாள்.
ஆனால், அனுராதாவிற்கு தான் அப்படி இயல்பாய் உண்ண முடியவில்லை.
அவன் எதுவும் கூறவில்லை தான். ஆனால், இவளுக்குள் தான் சிறு தடுமாற்றம். கையில் எடுத்த துண்டையே உண்ண முடியாமல் திணறிக்கொண்டு அமர்ந்திருந்தாள்.
அவளின் நிலை அகிலனுக்கு சிரிப்பாகவும் இருந்தது.
“என்ன பாத்ரூம் சிங்கர் சாப்பிடலையா.. வெறிச்சு வெறிச்சு பார்த்துகிட்டு இருக்க.. எங்களுக்கு வயித்து வலி வந்துட போகுது”.
அவனை முறைத்து பார்த்தவள், “எனக்கு ஃபுல்லாகிடுச்சு”.
“யாருக்கு.. உனக்கு புல்லாகிடுச்சா.. உன்ன பத்தி எனக்கு தெரியாதா.. என் அண்ணாவோட ஷேர் பண்ணி சாப்பிட உனக்கு விருப்பமில்லைனா விருப்பம் இல்லைன்னு முகத்துக்கு நேரா சொல்லிடு” என்று தன் சிரிப்பை பற்களை கடித்து கட்டுப்படுத்தியவாறு அவன் அவளை கேலி பேசவும்.
அவனின் வார்த்தையில் திடுக்கிட்டு விழித்த அனுராதா, “ச்ச.. ச்ச.. அப்படி எல்லாம் இல்ல” என்றாள் மறுப்பு தெரிவிக்கும் விதமாக.
பின்பு, ஆதவ் ஏதேனும் தவறாக நினைத்துக் கொண்டால் என்ன செய்வது என்ற அச்சம் அவளுக்குள் எழுந்தது.
ஒருபுறம், தன் அக்காவும் எங்கே அகிலன் கூறியதைப் போல் நினைத்து வருந்துவாளோ என்று வேறு தோன்றியது.
“அப்போ சாப்பிடு”.
“வீட்டுக்கு வா உனக்கு இருக்கு” என்று அவனைப் பார்த்துக் கொண்டே கருவியவாறு மீண்டும் உண்ண துவங்கினாள்.
ஆதவ் எதுவுமே கூறவில்லை. அவனின் விழிகளும் எந்த ஒரு உணர்வையும் பிரதிபலிக்கவில்லை.
மொழியில்லா காட்டுக்குள் சிக்கிக் கொண்டதை போல் அவளின் விழிச்சிறைக்குள் கைதானவன் அசையாது அமர்ந்திருந்தான்.
சற்று நேரத்தில் அனுவின் செல்பேசி சிணுங்கவும். அதை ஏற்று பேசிவிட்டு அணைப்பை துண்டித்தவள், “அக்கா அம்மா தான் வீட்டுக்கு வர சொல்லி கூப்பிடுறாங்க கிளம்பலாமா”.
“அதுக்குள்ள என்ன அவசரம் அனு.. எல்லாரும் ஒன்னா சேர்ந்து நியூ இயர் செலிப்ரேட் பண்ணிட்டு வீட்டுக்கு போகலாம்” என்ற அகிலனை மெச்சும் பார்வை பார்த்தான் ஆதவ்.
அவனுமே இதைப்பற்றி சற்றும் சிந்திக்கவில்லை.
“அவ்வளவு நேரமா.. வீட்ல என்ன சொல்றது?” என்று பதறினாள் ருக்மணி.
“அதெல்லாம் ஒன்னும் பிரச்சனை இல்ல. அத்தை கிட்ட நான் பேசுறேன். இந்த நியூ இயரை நாலு பேரும் ஒன்னா சேர்ந்து செலிப்ரேட் பண்ணுவோம். இந்த வருஷம் நாலு பேருடைய லைஃப்லையுமே நமக்கு பிடிச்ச மாதிரி சேஞ்சஸ் நடக்கும்னு எனக்கு தோணுது” என்ற ஆதவனின் விழிகள் ஒரு நொடி அனுவையும் தொட்டு மீள.
ஆதவ் அனுவுடன் இணைந்து புத்தாண்டை துவங்க ஆசை கொள்கிறான் என்று எண்ணி ருக்மணியும் ‘சரி’ என்று ஒப்புக் கொண்டாள்.
ருக்மணியும், ஆதவ்வும் ஒன்றாக இணைந்து இந்த புத்தாண்டை கொண்டாட நினைக்கிறார்கள் என்று எண்ணிய அனுவும் சம்மதித்து விட்டாள்.
ஆனாலும், அவளுக்கு சற்று சங்கடமாகவும் இருந்தது. ஏதோ, சிவ பூஜையில் கரடியை போல் நாம் இருக்கிறோமோ என்று.
“அக்கா நீங்க ரெண்டு பேரும் நியூ இயர் செலிப்ரேட் பண்ணுங்களேன். நாங்க இங்க என்ன பண்ண போறோம். நானும், அகில் மாம்ஸீம் அப்படியே வீட்டுக்கு கிளம்புறோமே”.
“அடிப்பாவி! மொத்த பிளானையும் இவ கெடுத்து விட்டுடுவா போலருக்கே. அவளே ஒத்துக்கிட்டாலும், இவ நடுவுல புகுந்து எப்படி குட்டையை குழப்புறா பாரு. அதுலயும் மேடம் மட்டும் கிளம்பாம என்னையும் சேர்த்து இழுத்துட்டு போக பிளான் பண்றாங்க” என்று உள்ளுக்குள் அவளை திட்டியபடி அமர்ந்திருந்தான் அகிலன்.
அவளின் வார்த்தையில் திடுக்கிட்டு விழித்த ருக்மணி ‘இப்பொழுது என்ன செய்வது’ என்பது போல் தன் பார்வையை ஆதவ்வை நோக்கி வீசவும்.
“இவ வேற கொஞ்ச நேரம் சும்மா இருக்க மாட்டா” என்று தன் தலையை கோதி கொண்டே முணுமுணுத்த ஆதவ், “இங்க பாரு, நீயும் அவளோட இருந்தா தான் அவ கொஞ்சம் கம்பர்டபிலா ஃபீல் பண்ணவா. அதோட எங்களுக்கு இன்னும் கல்யாணம் முடியல. அதுவரைக்கும் அப்படி ஒன்னும் எங்களுக்கு ப்ரைவசி தேவைப்படாது. அதோட நீயும் அவளோட இருக்கனா அத்தையும் கொஞ்சம் தைரியமா இருப்பாங்க. நீ ஒன்னும் தனியா எங்களோட இருக்க போறது இல்லையே.. அதான் அகிலும் கூட இருக்கான்ல. அப்புறம் என்ன பிரச்சனை உனக்கு?” என்று முழு நீள வசனமாக கூறி முடித்தான்.
அவளிடம் தான் எத்தனை கண்ணியம் மிக்கவன் என்பதையும் சேர்த்தே வெளிப்படுத்தி இருந்தான்.
இதற்கு மேல் மறுக்க முடியுமா என்ன, “ம்ம்” என்று அவனுக்கு தன் தலையை மட்டும் ஆட்டி வைத்தாள் அனுராதா.
அதன் பிறகு அங்கேயே மதிய உணவை முடித்தவர்கள், ஒரு படத்திற்கு டிக்கெட்டை எடுத்துக் கொண்டு தியேட்டருக்குள் நுழைந்து மேலும் சில மணி நேரங்களை அங்கே நெட்டி தள்ளினர்.
படத்திற்குள் மூழ்கிய அனுவிற்கும் நேரம் போனதே தெரியவில்லை. அந்த மெல்லிய வெளிச்சத்தில் தன் தேவதை பெண்ணை விழி அகலாது தன் பார்வைக்குள் நிரப்பி கொண்டு இருந்தான் ஆதவ்.
அகிலன் தான் அவனின் காதல் கைகூடிய சந்தோஷத்தில் மூச்சு முட்டி மூர்ச்சையாகி கொண்டிருந்தான்.
பாதி படம் செல்லும் வரையிலும் அனைத்தும் நன்றாக தான் போய்க்கொண்டிருந்தது. நடு இருக்கைகள் தான் அவர்களுக்கு கிடைத்திருந்தது.
முதலில் அனுராதா, அவளுக்கு அடுத்ததாக ருக்மணி, அவள் அருகில் ஆதவ், அவனருகில் அகில் என அமர்ந்திருந்தனர்.
இடைவெளி விடவும் பாப்கான் வாங்கி வருவதாக கூறிவிட்டு வெளியே சென்று வந்த ஆண்கள் இருவரும் தங்கள் கையில் பாப்கான்கள் அடங்கிய கவருடன் உள்ளே நுழைய.
ஆதவ் தன் இருக்கையில் அமர செல்லவும், அவனை தடுத்த அகிலன், “அண்ணா நாம ப்ளேஸை சேஞ்ச் பண்ணிக்கலாம்” என்றதும்.
அவனை அடக்கப்பட்ட சிரிப்போடு பார்த்தவன் ஒற்றைப் புருவத்தை மேல் உயர்த்தி ‘அப்படியா’ என்பது போல் ஒரு பார்வை பார்த்தான்.
சட்டென்று அவனை நோக்கி சரிந்த அகிலன், “அண்ணா உங்களுக்காகவும் சேர்த்து தான் சொல்றேன். நான் என்ன சொன்னாலும் ஓகே மட்டும் சொல்லுங்க” என்று விட்டு நிமிர்ந்தவன்.
தன் குரலை செறுமி கொண்டு, “அண்ணா எனக்கு என்னமோ அனு பக்கத்துல உட்கார்ந்திருக்கிற பாய்ஸ் பார்த்தா சந்தேகமா இருக்கு. அடிக்கடி நம்ம அனுவையே திரும்பி திரும்பி பார்க்குறாங்க. அதனால அவள கார்னர்ல உட்கார வைக்கிறது சேஃபா இருக்காது” என்றவனோ ருக்மணியை பார்த்து, “நீ இந்த சேர்ல உட்காரு” என்று ஆதவ் அமர்ந்திருந்த இருக்கையை காட்டவும்.
அவளும் எதற்கோ கூறுகிறான் என்று எண்ணியவள் அவன் கூறியது போலவே நகர்ந்து அமர்ந்தாள்.
அடுத்ததாக அனுராதாவையும் ருக்மணி அமர்ந்த இருக்கையில் அமரச் செய்தவன்.
சட்டென்று ருக்மணிக்கு அருகில் இருந்த இருக்கையில் தான் அமர்ந்து கொண்டு, “அண்ணா நீங்க அனு பக்கத்துல உட்கார்ந்துக்கோங்க. அப்ப தான் இவங்க ரெண்டு பேருக்கும் ப்ரொடக்ஷ்னா இருக்கும்” என்றது தான் தாமதம் அனுவிற்கு கடுப்பின் உச்சம்.
“இந்த மாம்ஸ்க்கு கொஞ்சம் கூட அறிவே இல்ல. அக்காவுக்கும் மாமாவுக்கும் தானே கல்யாணம் நடக்க போகுது. அவங்க ரெண்டு பேரையும் ஒண்ணா உட்கார வைக்காம, நந்தி மாதிரி நடுவுல இவர் போய் இப்படி குட்டையை குழப்புறாரே” என்று எண்ணியவள் அவனை முறைத்து பார்க்கவும்.
அவளின் விழி மொழியை படித்த ஆதவ்விற்கு அப்படி ஒரு புன்னகை.
அவள் மறுக்கும் முன்பே அவள் அருகில் அமர்ந்து விட்டான் ஆதவ்.
வேண்டாம் என்று மறுக்கவும் முடியாமல், சரி என்று ஏற்றுக்கொள்ளவும் முடியாமல் தத்தளித்த அனுராதாவிற்கு அடுத்த பாதி படம் பார்ப்பது பெரும் மலையை பிளக்கும் விஷயமாக தான் இருந்தது.
என்ன தான் ஆதவ்வுடன் சகஜமாக இருக்க வேண்டும் என்று நினைத்தாலும், அவளால் அத்தனை இலகுவில் அதை செயல்படுத்த முடியவில்லை என்பதே நிதர்சனமான உண்மை.
அகிலன் அவள் அருகில் அமர்ந்திருந்தால் கூட சமாளித்து இருப்பாள். இத்தனை தூரம் அதை நினைத்திருக்க மாட்டாள்.
ஆனால், அவள் அருகில் அமர்ந்தது ஆதவ் கிருஷ்ணா ஆயிற்றே.. அதனாலேயே அவளுக்குள் இந்த தடுமாற்றம்.
அவன் சாதாரணமாக தான் இருந்தான். சிறுவயதில் இருந்ததைப் போல் அவன் முகத்தில் எந்த ஒரு பிடித்தமின்மையும் தென்படவில்லை தான்.
மிகவும் சாதாரணமாக தென்பட்டான். அதுவே அவளை சற்று அமைதி படுத்தினாலும், ஏதோ ஒரு சங்கடம் இருந்து கொண்டே தான் இருந்தது.
அது முதல் முறை அவனுடன் சகஜமாக பழகுவதால் கூட இருக்கலாம்.
இனி வாழ்க்கையே இவனோடு தான்.
காலம் முழுக்க காதலில் கரைந்து திளைத்து வாழப் போவதே இவனோடு தான் என்பதை பற்றி எல்லாம் அறியாத பேதையின் மனமோ, இந்த சில மணி பொழுதுகளை கடக்க வழி தெரியாமல் தத்தளித்துக் கொண்டிருந்தது.
தத்தளிக்கும் அவளின் மனதை விரைவில் தன் காதல் பேரலை கொண்டு முக்குளிக்க செய்வானா அவன்..
அவனின் காதல் பேரலைக்குள் அவள் தொலைந்து போவாளா.. அல்லது, பெரும் கற்பாறையாய் கரையாமல் கறை சேர்வாளா..
இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
3
+1
5
+1
+1
1

