
சபதம் – 23
“யாயும் ஞாயும் யாராகியரோ?
எந்தையும் நுந்தையும் எம்முறைக் கேளிர்?
யானும் நீயும் எவ்வழி அறிதும்?
செம்புலப் பெயல் நீர் போல
அன்புடை நெஞ்சம் தாங்கலின்
ஒருவழி அறிதும் நாம்”
~ குறுந்தொகை
பொருள்:
உன் தாய் என் தாய் யார்? உன் தந்தை என் தந்தைக்கு என்ன உறவு?நாமிருவரும் எந்த வழியில் தொடர்புடையவர்கள்? ஆனால்,
செம்மண்ணில் பெய்யும் மழை நீர் போல
நம் இரு உள்ளங்களும் கலந்து
ஒரே வழியாக இணைந்துவிட்டன. இது ரத்த உறவு அல்ல, இதயம் உருவாக்கிய உறவு — காதல் ❤️
அராவள்ளி மலைத்தொடரின் மேல் நிலவு தாழ்ந்து, அதன் வெண்மையான ஒளி காடெங்கும் வெள்ளித் திரைபோல் பரவியிருந்தது. காற்றில் காட்டு மல்லிகையின் மணமும் ஈரமான மண்ணின் மெதுவான வாசனையும் கலந்திருந்தது. புதர்களுக்குள் இருந்து இரவுப் பூச்சிகள் ‘க்ரீச் க்ரீச்’ என்று இசைப் பாடிக் கொண்டிருந்தன. தூரத்தில் எங்கோ ஒரு தனித்த மயில் இரவின் அமைதியைக் கிழித்தபடி கூவியது.
அரண்மனை இளவரசி யசோதரா மரங்களின் நடுவே குதிரையை லாவகமாக செலுத்திவந்தாள். அவள் தாமரை முகம் முண்டாசாக தலை முடித்து அதன் ஒரு நுனியை முகத்தின் வலப்பக்கம் இருந்து இடப்பக்கமாக இறுக்கமாக இழுத்துக் கட்டப்பட்டிருந்தது. நெற்றிக்கும் நாசிக்கும் இடையில் அவளின் மையிட்ட கூர்மையான கண்கள் மட்டும் இருட்டை கிழித்துக்கொண்டு நாலாபக்கமும் கவனித்தபடி அரவள்ளியின் ராணியாக தெரிந்தாள். இந்தக் காடு அதனின் ஒவ்வொரு வளைவும், ஒவ்வொரு கல்லும், ஒவ்வொரு நிழலும் அவளுக்குத் தெரிந்தவை. நூறு முறை நடந்த பாதை இது. எப்போதும் அவளின் பயணத்தின் இலக்கு சைய்யா பிரக்யா தேவியின் கோவில் வளாகமும் அதனை சுற்றி ஓடும் அந்த ஸ்வர்ண நதியும் தான்.
ஆனால் இன்றிரவு அந்த பாதையின் நடுவில் அவள் நின்றாள். இருட்டு வேளையில் சிறு சலசலப்பு கேட்டுக்கொண்டிருந்தது. யசோதராவின் குதிரை அவளைப்போலவே எதையோ உணர்ந்து கொண்டது போல. அது தனது நடையை நிறுத்தி மர நிழலுக்குள் தன்னையும் எஜமானியையும் மறைத்துக் கொள்ள, சற்று தூரத்தில் குதிரைகளின் குளம்பொலி கேட்க, உடல் விறைத்து நின்ற யசோதரவின் எண்ணம் எல்லாம் அந்த புது அரேபிய குதிரையின் சொந்தக்காரர்கள் யார் என்று கணக்கு போட துவங்கியது.
சற்று நேரம் அந்த இடத்தில் நின்று இருட்டில் செவிகள் கூர்மையடைய, இருட்டுக்கு பழக்கப்பட்ட கூர்விழிகள் எச்சரிக்கையுடன் நோட்டம் விட்டது. குதிரையின் குளம்படி சத்தம் சற்று நேரத்தில் தேய்ந்து மறைய, அதுவரை பிடித்து வைத்திருந்த மூச்சை சீராக்கிக் கொண்டு தன்னவனை காண, “மனு சல்…” என்றபடி குதிரையை செலுத்தினாள்.
சைய்யா பிரக்யா கோவிலை அடைந்தவள் கண்களுக்கு, அந்த இருளோடு இருளாக, அவளின் கண்மைக்கு போட்டியாக நின்ற குதிரையை நெருங்கியவளை கண்டதும், தனது எஜமானை விட அதிகம் குழைந்து முகத்தை அவள் கைகளில் பாசமாக மோதி கொண்டான் வீரின் யஜு.
போரில் தனது தலைவனுக்கு போட்டியாக விறைத்து நிற்கும் யஜு, அடங்கி, குழைந்து கொஞ்சுவது அவளிடம் மட்டும் தான்.
அந்த நேரம், ” காதல் பேச கண்ணாளன் நான் இங்கு காத்திருக்கிறேன் இளவரசி! உங்கள் கொஞ்சல்களை பிறகு தொடருங்கள்” என்றபடி கைகள் முழுதும் அல்லி மலரை ஏந்தி கொண்டு, உடையெல்லாம் நனைந்தபடி வந்து நின்றவனின் கோலம் கண்டவள் நாணமுற்றாள்.
“ஆஹா… முதல் முறையாக இளவரசர் நேரத்திற்கு வர காரணமான என் தோழனை பாராட்டுவது தங்களுக்கு பொறுக்கவில்லையா?” என்றவளின் சிவந்த முகத்தை ஆசையாய் பார்த்தவன், “பட்டமோ பாராட்டோ உங்களிடம் இருந்து எது வந்தாலும் அது அடியேனுக்கன்றி மற்றவருக்கு நான் விட்டுக்கொடுப்பதில்லை” என்றவன் கைகளில் இருந்த வெண்தாமரை மொட்டை இடக்கைக்கு மாற்றியபடி அவள் கைகளை பற்றியவன் மெல்ல அவள் அருகில் நெருங்கி அவள் முகம் மறைத்திருந்த அங்கியை, அந்த காந்தக்கண்களை பார்த்தபடி விளக்கினான்.
அவனின் பார்வை பெண்ணவளை பாடை படுத்த, விலக துடித்தவளை தன் கைகளுக்குள் கொண்டு வந்தான் அந்த பிடிவாதக்காரன். வீரின் உடலோடு ஒட்டியிருந்த உடையின் ஈரம் அவளுக்குள்ளும் கடத்தியவனின் கைகள், அவள் கூந்தலை வருடி அதில் அந்த வெண்தாமரை மொட்டை காதோரம் சூடிவிட்டான்.
அவனின் வேகம் அறிந்தவள் மெல்ல அவனிடமிருந்து விலகி கர்னி மாதா கோவிலில் வேண்டிக்கொண்டவள் உள்ளம் ஒருநிலையில் இல்லை.
பின் அவர்களின் ஆஸ்தான மரமான அந்தப் பழமையான ஆலமரத்தின் கீழ் அவனுடன் அமர்ந்தாள். அதன் வேர்கள் பாம்புகளைப் போல நிலத்தில் சுருண்டு கிடந்தன.அதன் கிளைகள் இயற்கைத் தாழ்வாரமாக விரிந்திருந்தன. விட்டில் பூச்சிகள் அவர்களைச் சுற்றி மிதந்து,அங்கு ஒருவித மென்மையான ஒளித்துளிகளைப் பரப்பி கொண்டிருந்தன.
அந்த இரவில், ஸ்வர்ணி நதிக்கரையின் ஓரம், தேவதை போல் தன்னருகில் அமர்ந்திருந்தவளை பார்க்க பார்க்க அவன் முகம் மென்மையடைந்தது. “ஏன் இந்த தாமதம்,” என்றவன் குரலில் காத்திருப்பின் வலி தெரிந்தது.
அதில் மென் புன்னகையுடன் அவனை ஏறிட்டு பார்த்தவள், “காட்டுக்குள் இன்று அதிக நடமாட்டம் காணப்பட்டது. அது என் சந்தேகத்தைக் கிளப்பிவிட்டது” என்று அவள் சிரிப்புடன் சொன்னாள்.
“அல்லது காடு என் பொறுமையைச் சோதித்து பழி வாங்கி இருக்கலாம்” என்றபடி அவளின் அருகே வந்து, அவள் தலைமுடியில் சிக்கியிருந்த இலைக்கொடியை மெதுவாக நீக்கினான்.
“ம்ம்ஹும் இந்த அரவள்ளி காட்டுக்கு உங்கள் மேல் என்ன கோபமோ?” என்றதும், “பின்னே, யசோதரா என்னும் அரவள்ளியின் அரசியை தினமும் நான் காக்க வைப்பது பொறுக்காமல் இன்று உன்னை என்னிடம் காலதாமதமாக சேர்த்துவிட்டது போல” என்றவன் பார்வை அவளை விட்டு நகரவே இல்லை.
“இந்தக் காட்டுக்கும் தெரியும், யசோதரா உங்களைச் சேர்ந்தவள் என்று” என்றவளின் பார்வை வளைந்து நெளிந்து ஓடும் நதியின் எல்லையை அறிய துடித்ததோ என்னவோ, முகம் சிவக்க அமர்ந்திருந்தவள் பார்வை தன்னவனை நிமிர்ந்தும் காணவில்லை.
அவர்கள் சந்திக்கும் இடம் அராவள்ளியின் ஆழத்தில் மறைந்த ஒரு சிறிய புனிதத் திடல். யாரும் தொட்டிடாதது. யாருக்கும் தெரியாதது. அவர்களுக்கே சொந்தமானது. அருகே ஓடும் ஓடை மெதுவாக முணுமுணுத்தது; இரவின் ஒலிகளுடன் கலந்து. நிலவொளி இலைகளின் வழியே ஜல்லடையிட்டு, அவர்களின் முகங்களில் வெள்ளி நிறத்தைப் பூசியது.
அவளின் பார்வையோடு கலக்கப் போரடியவனின் துடிப்பை உணர்ந்து கொண்ட யசோதரா அவன் விரல்களோடு தன் விரல்களை கோர்த்தபடி, “அரவள்ளி மலைத்தொடர் முழுதும் உணர்ந்த ஒன்று, நான் தங்களவள் என்பது. ஆனால் இப்போதிருக்கும் அரசியல் நிலவரம் என்னை அச்சம் கொள்ள வைக்கிறது இளவரசே” என்றதும் அவளை தன் மார்பில் சாய்த்துக் கொண்டவன், “யசோதரா, நீ வருவதற்கு முன் என் ஒவ்வொரு மணித்துளியும் உன் எண்ணத்திலே களித்தேன். காதலில் காத்திருப்பு கூட சுகம் என்று இன்று தான் உணர்ந்தேன். எதை பற்றியும் நினைத்து மனதை குழப்பிக்கொள்ளாதே. நீ என்னவள். நான் வாக்களிக்கிறேன் யசோ, என் உயிர் இந்த உடலில் இருந்து போகும் நொடி கூட உன்னையன்றி வேறு பெண்ணை சிந்தையிலும் தொடமாட்டேன்” என்றவன் மார்புக்குள் முகத்தை புதைத்து கொண்டாள். வெளி உலகம்,அரசுகள், அரசியல், முகலாய அச்சுறுத்தல்கள், அனைத்தும் மறைந்தன. இங்கு, அவன் கைகளின் வெப்பம், அவள் மூச்சின் மென்மை, அவனளித்த வாக்குறுதி மட்டுமே இருந்தது.
அவன் அவள் முகத்தை இரு கைகளால் ஏந்தி கொண்டவன், “காலம் உள்ளவரை நம் காதல் நிலைக்கும். யசோதராவின் வீர் என்ற பெயர் வரலாற்றில் நிலைத்திருக்கும்” என்றதும் அவள் மெல்ல சிரித்தாள்.
“பெண்ணைக் கொண்டு புகழ் ஏந்திய மன்னன் என்றல்லவா வரலாறு கேலி பேசும்” என்றவளை முத்தமிட்டவன் தோள்களை கைகள் நடுங்க இறுக்கி கொண்டவள் காதுகளில், “ராதே கிருஷ்ணனை வணங்கும் இந்த உலகம் யசோதராவின் வீரையும் நினைவு கொள்ளும்” என்றவனின் வார்த்தைகளில் அரவள்ளி காடு மூச்சை நிறுத்தியது. அந்த கணம், அவர்கள் வாரிசுகள் அல்ல. அரசியல் விளையாட்டின் பொம்மைகள் அல்ல. கடமைகளால் கட்டுப்பட்டவர்கள் அல்ல. அவர்கள் வீர் மற்றும் யசோதரா. விதி தொடமுடியாத இடத்தில் கட்டுண்டு கிடைக்கும் இரண்டு காதல் பறவைகள்.
இருவரும் சந்தித்து கொள்ளும் அந்த இரவு வேளை காற்றாய் கடந்துவிடுகிறது.அவர்கள் கைகளைப் பற்றிக் கொண்டு திரும்பினர். அந்த மரத்தடியை விட்டு செல்ல மனம் வராமல், குதிரை அருகில் சென்ற போது வீர் திடீரென நின்றான்.
“அதை கேட்டாயா?” என்றவனின் இதழசைவில் யசோதரா மெதுவாக தலையசைத்தாள்.
இந்த முறை சத்தம் தெளிவாக கேட்டது. முறியும் கிளைகள், அறிமுகமில்லாத கவசத்தின் உலோக ஒலி.வீரின் கை இடுப்பில் இருந்த தனது வாளை தொட்டு மீண்டது.
“இவர்கள் நம்முடைய வீரர்கள் அல்ல” என்ற யசோதராவின் குரல் தாழ்ந்து ஒலித்தது, “நான் வரும்போது இதைத்தான் உணர்ந்தேன்… யாரோ அராவள்ளிக்குள் நுழைந்திருக்கிறார்கள்” என்றதும் அவர்கள் ஒருவரை ஒருவர் பார்த்துக்கொண்டனர்.
அந்த பார்வை பரிமாற்றத்தில் பயம், குழப்பம், மின்னல் போல ஒருவித அச்சம் சூழ்ந்திருந்தது.
“ரணசூரிடம் சொல்ல வேண்டும்,” என்று வீர் மேலும், “உன் தந்தையிடமும்..” என்றவனை கண்ட யசோதராவின் கண்கள் பயத்தில் துடிக்க, “வீர்… இது?” என்றவளுக்கு அவன் பதில் சொல்லவில்லை. அதற்கு அவசியமுமில்லை. அதனை அவர்கள் இருவரும் அறிந்திருந்தனர்.
அதே நேரத்தில், அதிவார் அரண்மனை..
இரண்டு முகலாய தூதர்கள் அரண்மனை வாயிலுக்குள் நுழைந்தனர். குதிரைகள் வியர்வையில் நனைந்திருந்தன. அதிவார் ராஜ்யத்தின் கொடிகள் இரவுக் காற்றில் பறக்க, அங்கிருந்த காவலர்கள் எச்சரிக்கையுடன் நின்றனர்.
“முகலாய தூதுவன், அரசருக்கு செய்தி கொண்டு வந்திருக்கிறோம்,” என்று உயரமானவன் அறிவித்தான்.
“முகலாய சாம்ராட்டின் ஆணைப்படி, அதிவார் மன்னரைச் சந்திக்க விரும்புகிறோம்.”
காவலர்கள் ஒருவரை ஒருவர் பார்த்தனர். முகலாயர்களின் செய்தி அரிதாகவே வரும்.
ராணா அரண்மனை
அதே நேரத்தில், மற்றொரு முகலாய தூதுவர்கள் ராணா அரண்மனைக்குச் சென்றனர். அவர்களின் முகம் அமைதியாக இருந்தது, ஆனால் கண்களில் குரூர ஒளி இருந்தது.
“ஒரு முன்மொழிவு கொண்டு வந்துள்ளோம்,” என்று அவர்கள் சொன்னார்கள்.
“அராவள்ளியின் எதிர்காலத்தை மாற்றக்கூடிய ஒன்று” என்றதும் அரண்மனைக்குள், தீப்பந்தங்கள் அசைந்தன; காவலர்கள் அவர்களை உள்ளே அழைத்துச் சென்றனர்.
ஒரு புயல் உருவாகிக் கொண்டிருந்தது.
அதிகாலை ஒளி ராணா அரண்மனையின் மணல் நிறச் சுவர்களில் பரவியது. நெடுந்தொங்கும் வழித்தடங்கள் பொன்னிறமாக மாறின. ஊழியர்கள் அமைதியாக நகர்ந்தனர். பித்தளைக் கொள்கலன்கள், விளக்குகள், நீர் குடங்கள். அரண்மனை விழித்துக் கொண்டிருந்தது. ஆனால் காற்றில் ஒரு விசித்திரமான கனத்த தன்மை இருந்தது, அது புயலுக்கு முந்தைய அமைதி.
இளவரசர் ரணசூரன் மேல் முற்றத்தில் நின்று அரவள்ளியை நோக்கிப் பார்த்துக் கொண்டிருந்தார். அவனது கைகள் பின்னால் இணைந்திருந்தன. அவன் உறங்கவில்லை.
அராவள்ளி காட்டில் மறைந்திருந்த மர்மத்தை உணர்ந்தவன் போல் நின்றிருந்தான்.
யசோதரா கடந்த இரவில் தாமதமாக திரும்பியதை தனது அரைச் சாளரத்தில் இருந்து பார்த்து நின்றான். முகலாய தூதுவர்களின் வருகை அறிந்து இளவரசனாக முன் நின்று வரவேற்றவனின் கண்களில் அந்தபுரத்தை நோக்கி ஓடும் யசோதரவின் அசுவம் மனுவை கண்டதும் அவன் மனதில் ஊசி ஒன்று மெல்ல நெருட தொடங்கியது.
முகலாய வருகையும், யசோதராவின் ரகசியத்தாலும் ரணசூரன் அடுத்து எடுக்கும் முடிவு அரவள்ளியை அழிக்கப் போவது அறியாமல் உடல் விறைத்து நின்றான் ரணசூரன்.
ரணசூரன் வந்துவிட்டான்….

