Loading

நினைவுகள் -24

” சாரி ராது! இங்கே ஸ்வீட் எதுவும் கிடைக்கலை. இந்தா இந்த சாஸ் தான் இப்போதைக்கு ஸ்வீட்.” என்ற அனு, சாஸில் நனைத்த பிரஞ்ச் ஃபிரஸை அவளுக்கு ஊட்டி விட்டு, தன்னுடைய மாமனுக்கு ஊட்டி விட்டாள்.

” ஆனாலும் உன் ஃப்ரெண்ட் இப்படி பண்ணி இருக்க கூடாது அனு.” என்று விஸ்வரூபன் கூற‌…

 அதிர்ந்து விழித்தபடியே, ” என்ன மாமா?” என்றாள் அனன்யா.

” பின்னே என்ன நாலு வருஷமா லவ் பண்ணுறா, இவ்வளவு நாள் சொல்லாமல், இப்போ இந்தியாவுக்கு திரும்பும் போது சொல்லுறா! இங்கே இருக்கும் போது சொல்லியிருந்தா, அடிக்கடி வந்துப் பார்த்திருப்பேன். ஜாலியா வெளியில் போய்ட்டு வந்திருக்கலாம். இப்பப் பாரு ஊருக்கு போகும்போது வந்து சொல்றா. அங்க எப்படி அவளை என்னால மீட் பண்ண முடியும்.” என்று குறை கூறுவது போல் கூறியவன், ராதிகாவைப் பார்த்து கண்ணடித்தான்‌

ராதாகாவோ, அவனை முறைக்க முயன்று, அது முடியாமல் முகம் சிவக்க தலை குனிந்து கொண்டாள்.

 இந்த விளையாட்டையெல்லாம் கவனிக்காத அனன்யா தன் தோழிக்கு வக்காலத்து வாங்கிக் கொண்டிருந்தாள்.

” ராது எது செய்தாலும் ஏதாவது சொல்லிட்டே இருங்க மாமா. காதலைக்கூட அவ தான் முதல்ல சொன்னா. நீங்க ஒன்னும் இல்லை. எப்படியும் இந்தியா போன உடனே எக்ஸாம் எழுதுவதற்காக சென்னைக்கு வருவா. அப்பப் பார்த்து பேசி உங்க காதலை டெவலப் பண்ணிக்கோங்க. இப்போ எனக்கு இன்னொரு பிளேட் ஃப்ரெஞ்ச் ப்ரைஸ் வேணும். உங்களுக்குக் கொடுத்ததால எனக்கு பத்தலை. நான் வாங்கிட்டு வரேன்.” என்றவள் சென்று இருக்க.

இருவரும் ஒருவரை ஒருவர் பார்த்து சிரித்தனர்.

” ராதா டியர். நீ தான் ஃபர்ஸ்ட் காதலை சொன்னீயா? என்ன? நான் தானே முதல்ல சொன்னேன். அது அனுவுக்கு தெரியவில்லையே. நீ நாலு வருஷமா ரோஸ் மட்டும் கொடுத்திருக்க. காதலை வாய் வார்த்தையா சொல்லவே இல்லையே.” என்று கண் சிமிட்டிக் கூறினான்.

“இல்லையே. நான் ஏற்கனவே வாய் வார்த்தையா என் காதலை சொல்லி இருக்கேனே…” என்று மர்ம புன்னகை பூத்தாள் விஸ்வரூபனின் ராதா…

 ” எப்ப சொன்ன ராதா? ” என்று யோசனையுடன் விஸ்வரூபன் வினவ.

” நான் சொல்ல மாட்டேன். நீங்களே கண்டுபிடிங்க…” என்ற ராதிகா, அங்கிருந்து எழுந்து செல்ல முயல…

ஆனால் அவளால் முடியவில்லை, ஏனென்றால் அவளது கைகள் அவனது கையில் அல்லவா சிக்கிக் கொண்டது.

” பதில் சொன்னால் தான் போகலாம். அதுவரைக்கும் இப்படியே இருக்கலாம். எனக்கு நோ அப்ஜெக்ஷன்.” என்றவன், அவளைப் பார்த்து கண் சிமிட்டினான் அந்த கள்வன்.

இன்று…

ராதிகாவின் பெற்றோர் காண வந்தது விஸ்வரூபனைத்தான்…

 வாட்ஸ்அப்பில் வந்ததைப் பார்த்த ராதிகாவின் பெற்றோர், கலங்கித் தவித்தனர்.

 நிச்சயத்தார்த்தம் முடிந்து விட்டது. சீக்கிரமே கல்யாணம் என்று விஸ்வரூபன் கூறிய வீடியோவை அனுப்பியதோடு மட்டுமல்லாமல் கூடவே,‌ ” முதல் மனைவி இறந்து ஒரு வருடம் தான் ஆகிறது. அதற்குள் அடுத்த திருமணத்திற்கு அடி போட்டாயிற்று. கேட்டால் குழந்தையைப் பார்த்துக் கொள்ள என்று விடுவார்கள். பணம் இருந்தால் வந்து விழ பெண்களா இல்லை இந்த நாட்டில்… ” என்று கேவலமாக எழுதியும் அனுப்பி இருந்தான்

அதைப் பார்த்ததும், இரவே தஞ்சாவூரில் இருந்து கிளம்பியவர்கள், ராதிகாவை கூட சந்திக்காமல் நேராக அங்கு வந்து விட்டனர்.

துணைக்கு விக்ரம் கூட வந்திருந்தான். வந்தவன், சுந்தரிக்கு தெரியாமல், ராதிகாவுக்கு பலமுறை முயற்சி செய்து, இப்போ தான் அவளை காண்டாக்ட் செய்ய முடிந்தது.

அதற்குள் சுந்தரி பேசாக் கூடாததை பேசி விட்டாள்.

 ஹாஸ்பிடலுக்கு வந்ததும் ரிசப்ஷனில் கிருஷ்ணனை பற்றி விசாரித்துக் கொண்டிருக்க.

 அப்போது தான் கேண்டீனுக்கு சென்று காஃபி அருந்தலாம் என்று நினைத்த விஸ்வரூபன், கிருஷ்ணனை பார்த்துக்கொள்ள நர்ஸை இருக்க சொல்லி விட்டு, வெளியே வந்து இருந்தான்.

தன் தந்தையைப் பற்றி விசாரிப்பதை, கவனித்து அவர்கள் அருகே சென்றான்.

‘ யார்? இவர்கள்? ‘ என்று மனதிற்குள் நினைத்தவன், அவர்களைப் பார்த்து சினேகமாகப் புன்னகைத்தான்.

” அப்பாவை பார்க்க வந்தீங்களா? வாங்க.” என்று கிருஷ்ணன் இருக்கும் அறைக்கு அழைத்துச் சென்றான்.

உள்ளே சென்றவர்களை அறியாத பார்வைப் பார்த்தார் கிருஷ்ணன்.

‘அப்பாவுக்கும் இவங்க யாரென்று தெரியாதா ‘ என்று யோசனையுடன் அவர்களை ஆராய்ந்தான் விஸ்வரூபன்.

” நான் ராதிகாவோட அம்மா.” என்றாள் சுந்தரி.

“வாங்க சம்பந்தி அம்மா… நானே உங்களைப் பார்க்க வரலாம் என்று இருந்தேன்.” என்றுக் கூறி கிருஷ்ணன் புன்னகைக்க.

” மன்னிச்சுக்கங்க… இதுக்கு நான் ஒருக்காலும் சம்மதிக்க மாட்டேன். நீங்க உங்க ஸ்டேட்டஸுக்கு தகுந்த மாதிரி பொண்ணு பாருங்க. எங்களை விட்டுருங்க.” என்று சுந்தரி கூற.

கிருஷ்ணன் அதிர்ந்து தன் மகனைப் பார்க்க. அவனோ தனக்கும் அங்கு நடக்கும் பேச்சு வார்த்தைக்கும் யாதொரும் சம்பந்தமில்லை என்பது போல் இருந்தான்.

” அது…” என்று கிருஷ்ணன் ஏதோ கூற வருவதற்குள், புயல் போல் ராதிகா நுழைந்தாள். ஒரே நாளில் ஆளே மாறியிருந்தாள்.

இரவு முழுவதும் அனுவை நினைத்து அழுதுக் கரைந்தவள், தூங்கவில்லை.

காலையிலே விக்ரம் அழைத்து தாங்கள் இங்கே வந்திருக்கும் விவரத்தைக் கூற… பதறியடித்துக் கொண்டு ஓடி வந்தாள்.

” அம்மா… என்னம்மா இதெல்லாம்…” என்று ராதிகா தடுக்க…

” நீ சும்மா இரு ராது. என்ன நினைச்சுட்டு இருக்காங்க? அவங்க ஹாஸ்பிடல்ல வேலைப் பார்த்தா என்ன வேண்டுமானாலும் பேசுவாங்களா? உன்னை இரண்டாம் தாரமா கட்டி குடுக்கணும்னு எந்த அவசியமும் இல்லை. அவங்க புள்ளைக்கு ஆயா வேலைப் பார்க்க நீ வேணுமா?” என்று சுந்தரி பொரிய…

” ஏம்மா இப்படி பேசுறீங்க. நிச்சயதார்த்தம் முடிஞ்சிருச்சினு அவங்களே சொல்லிருக்காங்க. இனி கல்யாணம் நடத்தி வைக்கலைனா நமக்குத் தான் சங்கடம்.” என்று கிருஷ்ணன் கூற…

அவருக்கு எதுவும் பதிலளிக்காமல் தன் மகளைத் தான் பார்த்தார் சுந்தரி.

சண்முகமோ‍, மகள் எது செய்தாலும் சரியாகத் தான் இருக்கும் என்று திடமாக நம்பினார்.

” ராது! நிச்சயதார்த்தம் நடந்தது உண்மையா?” என்று சுந்தரி கேட்டார். அவர் இன்னமுமே தன் மகளை நம்பினார்.

‘பேசியது எல்லாம் விஸ்வரூபன் தானே. ஒரு வேளை தன் மகளை மிரட்டிருப்பானோ.’ என்று எண்ணியே இரவோடு இரவாக கிளம்பி வந்திருந்தவர், அந்தக் கேள்வியைக் கேட்டார்.

அந்த கேள்வியில் தன் மகள் தன் அனுமதி இல்லாமல் செய்திருக்க மாட்டாள் என்ற நம்பிக்கை வீற்றிருந்தது.

அவள் என்ன பதில் கூறப் போகிறாள் என்று தெரிந்துக் கொள்ள, அவளையே ஆழ்ந்து பார்த்துக் கொண்டிருந்தான் விஸ்வரூபன். உள்ளுக்குள்ளோ, ‘ ராதிகாவின் அழுதழுது சிவந்து வீங்கியிருந்த முகத்தைப் பார்த்து வருந்தினான்.’

தலை குனிந்து இருந்த ராதிகா “உண்மை தான் எங்களுக்கு முன்பே நிச்சயதார்த்தம் நடந்து விட்டது.” என்றுக் கூறினாள்.

தங்கள் மகளின் வாயில் இருந்து உதிர்த்த வார்த்தைகளை கேட்ட சுந்தரி அதிர்ந்து இருந்தாள். சண்முகம் தான் அவளை ஆதரவாக பிடித்துக் கொண்டிருந்தார்.

ராதிகாவோ, விஸ்வரூபனை நொடிக்கு ஒருமுறை பார்வையிட்டுக் கொண்டே, அயர்வாக அமர்ந்து இருந்த கிருஷ்ணனிடம், ” சாரி சார்… நீங்க எதையும் நினைச்சுக்காதீங்க. ” என்று அழு குரலில் மன்னிப்புக் கேட்டாள்.

 அவளது அழுகைக் குரலை கேட்டதும், இன்னும் இறுகிப் போயிருந்தான் விஸ்வரூபன்.

அந்த சூழ்நிலையை தன் கையில் எடுத்துக்கொண்டார் சண்முகம். ” சார்… இது என்னுடைய நம்பர்… நீங்க வீட்டுக்கு போயிட்டு ஃப்ரீயா இருக்கும் போது கால் பண்ணுங்க… மேற்கொண்டு கல்யாணத்தை பத்தி பேசலாம். நாங்க இன்னைக்கு தஞ்சாவூர் கிளம்பிடுவோம்.” என்றார்.

” சரிங்க சம்பந்தி‌… நான் வீட்ல கலந்துப் பேசிட்டு உங்களுக்கு ஃபோன் பண்ணுறேன்.” என்றார் கிருஷ்ணன். இவ்வளவு நேரம் இருந்த கலக்கம் மறைந்து மீண்டும் உற்சாகமாக இருந்தார்.

சுந்தரி ஒன்றும் கூறாமல் வெளியே சென்று விட, ராதிகாவும் மீண்டும் ஒருமுறை விஸ்வரூபனை பார்த்துவிட்டு கிருஷ்ணனிடம் வந்தவள், ” வரேன் சார்…” என்று கிளம்பி விட்டாள்.

கிருஷ்ணன் தன் மகனிடம் ஒன்றும் கூறாமல் அமைதியாக இருந்தாலும், உள்ளுக்குள் பெருகிய மகிழ்ச்சி முகத்தில் மின்னி மறைந்தது.

” டாட்… இப்பவும் ஒன்னும் பிரச்சினை இல்லை. இந்த கல்யாணத்தை ட்ராப் பண்ணிடலாம்.” என்றான் விஸ்வரூபன்.

” அது அவ்வளவு ஈஸி கிடையாது ரூபன். உங்களுக்கு நிச்சயதார்த்தம் ஆனதா சோஷியல் மீடியாவுல அனோன்ஸ்மெண்ட் பண்ணிட்ட. இனி இதிலிருந்து நீ பின் வாங்க முடியாது. வீட்டுக்கு போய் பேசிக்கலாம்.முதல்ல எந்த மண்டபம் ப்ரீயா இருக்குன்னு கேட்கணும். நல்லா கிராண்டா செய்யணும்.” என்று ஏகப்பட்ட கற்பனைகளைக் கூற…

” ப்ச்‌…” என்று தலையசைத்த விஸ்வரூபன், ” டேட் நல்லா புரிஞ்சுக்கோங்க. என்னோட கல்யாணம் ஏதாவது ஒரு கோவிலில் செய்யுங்க. அப்படியே ரிஜிஸ்டர் பண்ணிடலாம் என்று. அப்புறமா ப்ரெஸ்ஸுக்கு ஒரு அறிவிப்புக் கொடுத்துடுங்க.” என்ற விஸ்வரூபன் வேறு எதையும் பேச விடாமல் வீட்டுக்கு அழைத்துச் சென்றான்.

  அவன் செவிக்குள்ளோ, ” விஷ்வா… நம்ம கல்யாணம் எப்படி நடக்கணும் தெரியுமா?” என்றுக் கூறிய ராதிகாவின் வார்த்தைகள் வந்து மோதியது. தலையை உதறி அதை அலட்சியம் செய்தவன் தனது எண்ணத்தில் உறுதியாக இருந்தான்.

வீட்டிற்கு வந்த கிருஷ்ணன் அதற்குப்பிறகு அமைதியாக இருக்கவில்லை.

 எல்லோரையும் அழைத்து விஸ்வரூபன் திருமணத்திற்கு சம்மதம் சொன்னதைக் கூறியவர், விஸ்வரூபனின் விருப்பத்தையும் கூறினார்.

 அவனது அம்மாவிற்கும், அத்தைக்கும் நல்லபடியாக திருமணம் செய்தாலே போதும் என்றிருக்க, அவனது விருப்பத்திற்கு சரியென தலையசைத்தனர்.

அடுத்த முகூர்த்தத்திலே, அவர்கள் வடபழனி முருகன் கோவிலில் திருமணத்திற்கு ஏற்பாடு செய்யப்பட்டது.

 சண்முகத்திற்கு அழைத்து அடுத்த முகூர்த்தத்திலேயே இருவருக்கும் திருமணம் செய்வதைப் பற்றியும், கோயிலில் ஏற்பாடு செய்ததைப் பற்றியும் கூறினார்.

  அவரும் சரியென தலையாட்டி விட்டு சுந்தரியை சமாதானம் படுத்துவதற்குள், போதும் போதுமென்று ஆகிவிட்டது‌.

” ஏங்க இப்போ நமக்கு இருக்கிறது ஒரே பொண்ணுங்க… அவளுக்கு என்னென்ன செய்யணும்னு ஆசை இருக்குத் தெரியுமா? அவளுக்கு என்ன தலையெழுத்தா, இரண்டாம் தரமாக போறதுக்கு?” என்று புலம்ப…

” ப்ச்… சுந்தரி… இரண்டாம் தாரம் என்று சொன்னதையே சொல்லாத… உன் பொண்ணு அவரைத் தான் விரும்புறா… ரெண்டு பேரும் நமக்குத் தெரியாமலே மோதிரம் மாத்திக்கிட்டாங்க… நாமளே கல்யாணம் பண்ணி வைக்கிறது தான் நமக்கு கவுரவம். புரிஞ்சுக்கோ…” என…

விக்ரமும், ஸ்வேதாவும் சேர்ந்துக் கொண்டு, ” அம்மா… நீங்கள் எங்களுக்கு எப்படி ஆதரவாக இருந்தீங்க? இப்போ ராதிகாவுக்கு என்ற உடனே காதலை எதிர்க்கலாமா?” என்று வினவ.

சுந்தரியோ, ” நான் காதலுக்கு ஒன்றும் எதிரி இல்லையே… என் கிட்ட முன்பே சொல்லி இருக்கலாமே…” என்று புதுசாக ஒரு காரணத்தை கண்டுபிடித்தார்.

 அவர்களுடன் கல்லூரிக்கும், ஹாஸ்பிடலுக்கும் லீவு போட்டுவிட்டு, ஊருக்கு வந்திருந்த ராதிகா, சுந்தரி பேசுவதைக் கேட்டுக் கொண்டு, ஒன்றும் கூறாமல் அமைதியாக இருந்தாள்.

 அவளுக்கு வேண்டியது விஸ்வரூபனோட அவளது திருமணம். அவளுடைய அனுவுடைய குழந்தை, தாய் இல்லாமல் தவிக்கிறது. அதைத் தான் அவளால் தாங்க முடியவில்லை. அவள் தோழியின் குழந்தை, அவளது குழந்தையும் அல்லவா… எவ்வளவு சீக்கிரம் அந்த வீட்டிற்கு செல்கிறோமோ, அவ்வளவுக்கு சந்தோஷம் என்று எண்ணிக் கொண்டிருந்தாள்.

 அவளுடைய அமைதியைப் பார்த்தே அவளது எண்ணத்தைப் புரிந்துக் கொண்ட சுந்தரியும் ஒரு வழியாக சமாதானமாகி அவர்கள் போக்கிற்கு தலையாட்டினாள்.

Click on a star to rate it!

Rating 5 / 5. Vote count: 1

No votes so far! Be the first to rate this post.

இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
0
+1
0
+1
0
+1
0

உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள்